Monday, November 30, 2015

நவீன தேவதைக் கதைகள் 2 – ஆஞ்செலா கார்டரின் ‘THE BLOODY CHAMBER’ சிறுகதைத் தொகுப்பின் நவ யுக தேவதைகள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/11/15/angela-carter/)
-------------------
இளவரசியால் முத்தமிடப்பட்ட தவளையும் (‘Frog Prince‘ கதையின் மூலப் பிரதியில் இளவரசி தவளையை தூக்கி எறிவதாக வருகிறது), அழகியின் கண்ணீரில் நனையும்Beastம் ராஜகுமாரனாக தங்கள் நிஜ உருவைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளை தேவதைக் கதைகளில் நாம் அடிக்கடி காண முடிகிறது. பிறகு ராஜகுமாரன் இளவரசியை/ ஏழைப்பெண்ணை மணந்து கொள்ள, அனைவரும் சந்தோஷமாக வாழ்வதாக முடியும் கதைகளில், இளவரசியோ ஏழையோ பொதுவாக பெண்தான் தன் கனவுகளை அடைவதாக, அவளே அதிர்ஷ்டசாலி என்ற கற்பிதம், வெகுஜனப் பிரக்ஞையில் உள்ளது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? இளவரசி முத்தமிடாமலோ/ தூக்கி எறியாமலோ, அல்லது Beauty கண்ணீர் சிந்தாமலோ இருந்திருந்தால், ராஜகுமாரர்களுக்கு விமோசனமே கிடைத்திருக்காது அல்லவா? எனில், இந்தக் கதைகளில் அதிக நன்மை அடைந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள் யார் என்ற கேள்வி எழுகிறது. ஆண்/ பெண் இருவருமே நன்மை அடைகிறார்கள் என்றும், ஆணுக்குச் சமமான, அவர்களுக்கு மீட்சியளிக்கும் சக்தியாக, பெண்ணும் இருக்கிறாள் என்றும் சொல்வதே சரியானதாக இருக்கும். இத்தகைய காக்கும்/ அழிக்கும் சக்தி பெற்ற பெண்களை ஆஞ்செலா கார்டரின் ‘The Bloody Chamber‘ சிறுகதைத் தொகுப்பின் சிலக் கதைகளில் பார்க்கிறோம்.
Beauty and the Beast‘ கதையின் மறு ஆக்கமான ‘The Courtship of Mr Lyon‘ கதையில், அழகி தன் தந்தை செய்த தவறுக்காக பீஸ்ட்டின் இருப்பிடத்தில் வசிக்க வேண்டியுள்ளது. அவள் அது குறித்து முதலில் அச்சுறுவது இயல்பான ஒன்று. ஆனால் ‘பீஸ்ட்’, அவள் மடியில் தலை புதைத்து கைகளை முத்தமிட்டபின் வெட்கி ஓடுவது, தன் தந்தை வீட்டிற்கு அவள் திரும்பும்போது அவள் கண்களைச் சந்திக்க இயலாமல் பாதங்களில் தலையைப் புதைத்துக் கொள்வது என அவன் அழகி மீது கொண்டுள்ள உணர்வை வழிபாடு என்றே சொல்லலாம். (as if he himself were in awe of a young girl). “Do not think she had no will of her own; only, she was possessed by a sense of obligation to an unusual degree and, besides, she would gladly have gone to the ends of the earth for her father, whom she loved dearly.” என்ற உணர்வோடு அங்கு வசிக்கும் அழகியை விட, பீஸ்ட்டே தப்பிக்க முடியாத/ விரும்பாத சூழலில் இருப்பவனாகத் தெரிகிறான்.
தேவதைக் கதைகளின் மறு ஆக்கமாக இல்லாதிருந்தாலும், அந்த வகைமையின் சிலக் கூறுகளைக் கொண்ட ‘The Lady of the House of Love’ மற்றும் ‘Wolf-Alice‘ கதைகளிலும் ஆணை காப்பாற்றும் பெண்மையைக் காண்கிறோம். முதல் கதையில், இளைஞர்களை உண்டு பசியாறும் இரத்தக் காட்டேரியான (vampire) சீமாட்டியின்/ Countess) மாளிகைக்கு ராணுவத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவன் வருகிறான். தன் வாழ்க்கை முறையை வெறுக்கும் அந்தச் சீமாட்டி தனக்கு விதிக்கப்பட்டதைத் தாண்டி செல்ல இயலாமலும் இருக்கிறாள். இளைஞன் அவள் மீது (அவள் காட்டேரி என்று அறியாமல்) கரிசனம் கொள்கிறான். அவனை பள்ளியறைக்கு அழைத்துச் செல்லும் சீமாட்டிக்கு விரலில் காயம் ஏற்பட்டு உதிரம் வெளிவர, இளைஞன் அதை முதலில் கைக்குட்டையால் துடைத்தும் பிறகு விரலை உறிஞ்சியும் / முத்தமிட்டும் அவளைத் தேற்ற, அவனது\ களங்கமின்மை, இறுதியில் சீமாட்டி அவனைக் கொல்லாமல், தன்னைத் தானே அழித்துக்கொள்ளச் செய்கிறது. இளைஞன் கன்னித்தன்மையை இழக்காதவன் என்பதால், ‘கன்னிமை’ பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு என்பது ஆணுக்கும் பொருந்தலாம் என்று ஆஞ்செலா சுட்டுகிறார் என்றும் கருதலாம்.
ஆணால் அணைக்கப்படுவது வரை ஒன்றுமறியாதவர்களாக/ உணராதவர்களாக இல்லாமல் அவர்களுக்குள் இயல்பாகத் தோன்றும் பாலியல் விழைவுகள், அது ஏற்படுத்தும் ஆர்வம் – அவற்றால் ஆபத்து ஏற்பட்டாலும், அதைக் கடந்தால் அடையக் கூடிய பரவசம் குறித்த எதிர்பார்ப்பு – குறித்தும் பதின் பருவம் அல்லது அதன் வாசலில் நிற்கும் இந்தக் கதைகளின் சிறுமிகள்/ யுவதிகள் தெளிவாக உள்ளார்கள். தேவதைக் கதைகளில் இதற்கு இடமிருக்கக் கூடும் என நாம் எண்ணிக் கூட பார்த்திராத, ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையே உருவாகி அவர்களைச் சுற்றிப் படர்ந்து மூச்சடைக்க வைக்கும் ‘sexual tension’ இந்தக் கதைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்று தன் இருப்பை, பாத்திரங்களுக்கும் வாசகனுக்கும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
Red Riding Hood கதையை மறு ஆக்கம் செய்யும் ‘The Company of Wolves‘ல் வரும் சிறுமிக்கு/ பதின்பருவத்தின் வாசலில் இருப்பவளுக்கு, இளைஞன் உருவத்தில் வருவது ‘ஓநாய்’ தான் என்று தெரிந்து விடுகிறது. காட்டிற்குள் வேறு பாதையில் அழைத்துச் செல்வதாக அவன் கூறுவது ஆபத்தில் முடியும் என்றாலும், அவனுடன் செல்கிறாள். அவள் பாட்டியின் வீட்டிற்கு யார் முதலில் செல்கிறார்கள் என்ற பந்தயத்தை முன்வைத்து, தோற்றால் என்ன தருவாய் என அவன் கேட்க, அவன் என்ன கேட்பான் என்று தெரியாத அப்பாவி போல் என்ன வேண்டும் என்று கேட்கும் (அவன் முத்தம் வேண்டுகிறான்) சிறுமி வேண்டுமென்றே பந்தயத்தில் தோற்கிறாள். அவளுக்கு முன் பாட்டி வீட்டிற்கு சென்று அவரைப் புசித்து காத்திருக்கும் இளைஞனைக் கண்டு பயம் கொள்ளாமல் (she knew she was nobody’s meat) அவனை அணைத்துக் கொள்கிறாள். நடுநிசியில் அவன் கைகளுக்கிடையில் அச்சிறுமி உறங்குவதோடு முடியும் கதை எழுப்பும் கேள்விகளும், அதற்கான விடைகளும் பல. “between the paws of the tender wolf” அவள் உறங்குவது அவனை அவள் அடக்கி விட்டால் என்பதைக் குறிக்கிறதா?. ”nobody’s meat‘ என்பதை இங்கு இணைத்துப் பார்க்கலாம்.
Beauty and the Beast‘/ The Courtship of Mr Lyon கதைகளின் இன்னொரு மறு ஆக்கமான ‘The Tiger Bride‘ கதையிலும் ஆபத்தும் பரவசமும் முயங்குவதைப் பார்க்கிறோம். அருகில் வரும் சிங்க மணமகன், ‘He will lick the skin off me!’ என்று தெரிந்திருந்தும் அதை அனுமதித்து And each stroke of his tongue ripped off skin after successive skin, all the skins of a life in the world, and left behind a nascent patina of shining hairs. My earrings turned back to water and trickled down my shoulders; I shrugged the drops off my beautiful fur“, என்று முடியும் ‘The Tiger’s Bride‘ கதையிலும் சரி, ”The Bloody Chamber‘ புது மணப்பெண் ஆடிகள் சூழ்ந்த அறையில், கணவன் தன்னை நோக்கி வர, (பல) கணவன்(கள் நெருங்குவதாக கற்பனை செய்வதும், அவன் செயல்களை “He in his London tailoring; she, bare as a lamb chop. Most pornographic of all confrontations.” என்று (அவன் குறித்த சில சந்தேகங்களையும்) உணர்ந்தாலும், அதை எதிர்நோக்கும் ஆவலிலும் சரி, தங்களின் பாலியல் விழைவு தரக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அதைக் கம்பீரமாகக் கொண்டாடும் பெண்ணையே பார்க்கிறோம்.
Erl-king’ என்ற நாட்டுப்புற/ தேவதைக் கதையான ‘The Erl-King‘ல் காட்டில் வாழும் – இளம் பெண்களை வசீகரித்து பறவைகளாக மாற்றும் – அமானுஷ்யப் பிறவியுடன் தெரிந்தே சேர்கிறாள். ஆனால் தன் சுயத்தை இழக்க விரும்பாமல் அவனை இறுதியில் கொன்றும் விடுகிறாள்.
ஒரு எளிய நிகழ்வை விவரிக்கும் வாக்கியத்தில் கூட, அதன் ஒரு வார்த்தையை, அது உணர்த்துவதை, உபயோகிக்கப்பட்டிருக்கும் விதத்தை எளிதில் கடந்து விடச் செய்யும் ஆஞ்செலாவின் அடர்த்தியான உரைநடை கவனமான வாசிப்பைக் கோருவது . ‘The Lady of the House of Love‘ கதையில் சீமாட்டியின் கிராமத்தை விவரிக்கும் போது “A cat prowls in a weedy garden; he grins and spits, arches his back, bounces away from an intangible on four fear-stiffened legs.” என்று ஆஞ்செலா எழுதுகிறார். இதில் intangible என்று ‘உணர/ விளக்க முடியாத’ என்ற அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைக்கு பதில் unknown, invisible போன்ற வார்த்தைகளைப் பொருத்தி அதே வாக்கியத்தைப் படித்தால் வரும் உணர்வு கண்டிப்பாக வேறு தான். ‘intangible’ என்பது கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.
சிங்க மணமகன் கதைசொல்லியை நெருங்கும் “A tremendous throbbing, as of the engine that makes the earth turn, filled the little room; he had begun to purr. The sweet thunder of this purr shook the old walls, made the shutters batter the windows until they burst apart and let in the white light of the snowy moon. Tiles came crashing down from the roof; I heard them fall into the courtyard far below. The reverberations of his purring rocked the foundations of the house, the walls began to dance. I thought: ‘It will all fall, everything will disintegrate‘, இறுதிக் காட்சியில்tremendous throbbing‘,’ everything will disintegrate‘ போன்றப் பதங்கள் வரப்போகும் ஆபத்தை சுட்டுவதாக மட்டும் தோன்றினாலும் , ‘The Bloody Chamber‘ கதையிலும் புது – அதுவரை பாலுறவு கொள்ளாத – மணப்பெண் தன் கணவனுடன் இரயிலில் அவன் கோட்டைக்குச் செல்லும் போது, தனித்தனியே படுத்திருக்க, அவள் உணர்வுகளோடு, அங்கும் இரயிலின் துடிப்பு/ throbbing குறிப்பிடப்படும்போது, இந்த இயந்திர/அக்றிணை இயக்கங்களையும் கதைசொல்லி பெண்ணின் பாலியல் விழைவுகளின் பிரதிபலிப்பாகவும் கொள்ளலாம் இல்லையா.
The Lady of the House of Love‘ கதையில், இளைஞன் விழிக்கும் போது அவன் சீமாட்டியுடன் வந்த பள்ளியறை பற்றி The shutters, the curtains, even the long-sealed windows of the horrid bedroom were all opened up and light and air streamed in; now you could see how tawdry it all was, how thin and cheap the satin, the catafalque not ebony at all but black-painted paper stretched on struts of wood, as in the theatre. The wind had blown droves of petals from the roses outside into the room and this crimson residue swirled fragrantly about the floor, என்று ஆஞ்செலா விவரிக்கிறார். வெளிச்சம் வீசும் அறை என்பது பொதுவாக மகிழ்வான மனநிலையோடு பொருந்தக்கூடியது. ஆனால் வெளிச்சத்தில் இரத்தக் காட்டேரிகள் அழிந்து விடுவார்கள் என்ற தொன்மத்தின் படி, சீமாட்டியோ தன் உயிருக்கு ஆபத்து அளிக்கக்கூடியது என்பதால் வெளிச்சத்தை முற்றிலும் தவிர்க்கிறார். எனில் வெளிச்சம் உள்நுழைந்தது எப்படி, சீமாட்டி ஏன் அறையில் இல்லை? எதுவும் சொல்லப்படாமலேயே நமக்குப் புரிகிறது. சீமாட்டி இளைஞனுக்கு ஊறு விளைவிக்க விரும்பாமல், தன்னை அழித்துக் கொள்ளும் விதமாக வெளிச்சத்தை உள்ளே அனுமதித்திருப்பார். இப்போது வெளிச்சம் புத்துணர்வூட்டுவதாக இல்லாமல், துயரத்தின்/சீமாட்டியின் காதலின் (கரிசனத்தின்) சுமையைக் கொண்டதாக மாறுகிறது.
தேவதைக் கதைகளை மறு ஆக்கம் செய்யும் போது, அதை பழங்காலத்திலேயே அமைப்பதோ அல்லது நவீன காலத்தில் அமைப்பதோ நடக்கிறது. இந்தக் கதைகளின் காலகட்டம் பொதுவாக 18ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 19ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி என சில கதைகளில் யூகிக்க முடிந்தாலும், முன்பொரு காலத்தில் நடந்தவை என்றோ, தற்காலத்தில் நடப்பவை (கார், இரயில் பற்றிய குறிப்புகள் ஓரிரு கதைகளில் உள்ளன ) என்றோ ஆஞ்செலா வெளிப்படையாக சொல்வதில்லை என்பதால் இவற்றில் காலம் குறித்த துல்லியமான ‘பிரக்ஞை’ இல்லை. அதே நேரம், ‘The Bloody Chamber’ கதையில் வருவது போல் ஒரு கோட்டையை (castle)
Sea; sand; a sky that melts into the sea–a landscape of misty pastels with a look about it of being continuously on the point of melting
And, ah! his castle. The faery solitude of the place; with its turrets of misty blue,
………….his castle that lay on the very bosom of the sea with seabirds mewing about its attics,
……, evanescent departures of the ocean, cut off by the tide from land for half a day …
that castle, at home neither on the land nor on the water, a mysterious, amphibious place, contravening the materiality of both earth and the waves, with the melancholy of a mermaiden who perches on her rock and waits, endlessly, for a lover who had drowned far away, long ago. That lovely, sad, sea-siren of a place!
என்று விவரித்து கதைகளின் புறச் சூழலை அவர் உருவாக்கும் போது, காலம் குறித்த பிரக்ஞை முக்கியமானதாகத் தோன்றுவதில்லை. எளிதில் பிரித்தறிய முடியாதப்படி பழங்காலமும்- நிகழ்காலமும் தொட்டுச் செல்லும் வினோத காலத்திற்குள் வாசகன் எளிதில் நுழைவதோடு, இயல்பாக தன்னை அதில் பொருத்திக் கொள்ள முடிகிறது.
ஓரிரு படிமங்கள் பல கதைகளில் எடுத்தாளப்பட்டுள்ளன. நாவால் தோலை/ உடலை வருடுவது/ சுவைப்பது அப்படிப்பட்ட ஒன்று. ‘Wolf-Alice’ கதையில் காயமடைந்த ட்யூக்கின் (Duke) உடலை நாவால் வருடி ஆற்றுப்படுத்தினால், ‘The Tiger Bride‘ கதையில் அது காமத்தில் உச்சகட்டமாக உள்ளது. பெண்ணின் மடி மீது ஆண்/ மிருகம் தலைவைப்பது காதலின்/ சரணடைவதின், இணைவின் அடையாளமாக சில கதைகளின் இருந்தால் (The Courtship of Mr LyonThe Company of Wolves), ‘The Erl-King‘ கதையில், கதைசொல்லி தன்னை மயக்கி பறவையாக மாற்ற நினைப்பவனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல வழி செய்கிறது.
ஆடிகளில் விழாத பிம்பங்களோடு, ஆடிகளை நிறைத்துப் பெருகும் பிம்பங்களும் இந்தக் கதைகளில் உள்ளன. ‘Wolf-Alice‘ கதையில் வரும் பதின்பருவப் பெண் ஆடியில் தன் பிம்பத்தைப் பார்த்து முதலில் திடுக்கிடுவதையும் , அப்பிம்பத்தைத் தன் தோழியாக பிறகு எண்ணுவதையும், கதையின் தலைப்போடு ஒப்பிட்டுப் பார்ப்பது சில புரிதல்களைத் தரக்கூடியது.
அடர் சிவப்பு ரோஜாக்கள், அவற்றின் முள் பதிந்து வெண்பனியில் சிந்தும் உதிரம், வாடிய செடிகளுக்கிடையே பூத்திருக்கும் ஒற்றை வெள்ளை ரோஜா, காற்றில் எங்கும் நிறைந்திருக்கும் -மனதை மயக்கும் – ரோஜாக்களின் நறுமணம் என ரோஜாக்கள் பல கதைகளில் (தன்னை அழித்துக்கொள்ளும் சீமாட்டி இளைஞனுக்கு விட்டுச் செல்வதும் ஒரு ரோஜா மலர் தான்) குறிப்பிடப்படுவது, தேவதைக் கதைகளில் பல இடங்களில் தென்படும் ரோஜாக்களுக்கு ஆஞ்செலா செலுத்தும் அஞ்சலி என்பதோடு அவை பாரம்பர்ய தேவதைக் கதைகளின் உணர்வு நிலையை இந்த நவீன கதைகளிலும் உருவாக்குகின்றன.
பல முறை பார்த்துப் பழகிய ஓவியத்தை புதிய கோணத்தில் பார்க்கும் போது அதுவரை கவனிக்கத் தவறியவை தென்படுவது போல, ஏற்கனவே அறிந்திருந்தக் கதைகளைப் பற்றிய – பெண்மை/ பெண்மையின் பாலியல் விழைவு ஆணை அரவணைக்கும் அதே நேரம் அச்சுறுத்தும் ஆற்றலும் கொண்டது – என்ற கோணத்தை (இதில் ஆணும் பெண் போலவே விருப்பு/ பயம் என்ற இரட்டை நிலையில் உள்ளான்) , தேவதைக் கதைகளின் இயல்பான கனவுத் தன்மையை காவு கொடுக்காத உரைநடையோடு, நவீன தேவதைகள் ஆளும் உலகை உருவாக்குவதால் இந்தத் தொகுதி இத்தகைய மறு ஆக்க கதைகளில் தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது.
பின்குறிப்பு:
மூலப் பிரதியில் செய்யப்பட்ட மாற்றங்களால் சற்றே நீர்த்துப் போன தேவதைக் கதைகளின் பிரதிகளே அதிகம் படிக்கப்படுகின்றன. (Frog Prince கதை ஒரு உதாரணம்).Grimm சகோதரர்களின் தொகுக்கப்பட்ட தேவதைக் மூல கதைகளுக்கு அணுக்கமானவை என்று இரு தொகுப்புக்கள் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.
The Complete Grimm’s Fairy Tales – Pantheon Edition.
Jack Zipes தொகுத்து சென்ற ஆண்டு வெளிவந்த The Original Folk and Fairy Tales of the Brothers Grimm:The Complete First Edition, இதுவரை வெளிவந்தவற்றுள், மூலத் தொகுப்பை சிதைக்காத, அதற்கு மிக நெருக்கமான தொகுப்பாக கருதப்படுகிறது.
Related Link(s)
http://wordsbeyondborders.blogspot.com/2015/02/1-modern-fairy-tales.html

Monday, November 16, 2015

Ian McEwan – On Chesil Beach

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/11/04/on-chesil-beach/)
---------------
திருமணம் முடித்த கையோடு தேனிலவு கொண்டாட கடலோர விடுதிக்கு வந்திருக்கும் இளம் தம்பதியரான எட்வர்ட் (Edward)/ ப்ளாரன்ஸ் (Florence) இரவு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
தேனிலவு அறையின் நிசப்தம், உணவைப் பரிமாறும் இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருப்பதால் தரையில் உண்டாகும் கீச்சிடும் சப்தம், அந்த இளைஞர்கள் எதாவது நமுட்டுச் சிரிப்பை உதிர்க்கிறார்களா என்ற எட்வர்ட்டின் கவனித்தல், உணவிற்குப் பின் கடற்கரைக்கு நடை செல்ல வேண்டும் என்ற அப்போதைய திட்டம் முதல், அவர்கள் மண வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் – இசைத்துறையில் ப்ளாரன்ஸ் செய்ய வேண்டியவை, எட்வர்ட்டின் பணி, இருவரின் நண்பர்கள் – என்பது வரை போதையேற்றுகிற பல கனவுகளை அவர்கள் – “heaped up before them in the misty future” – கொண்டுள்ளார்கள்.
ஆனால் அனைத்தையும் விட அவர்கள் இருக்கும் அறையிலிருந்து, அவர்கள் பார்வையின் ஓரத்தில் தெரியும் மென்மையான, தூய வெள்ளை நிறத்திலான விரிப்பைக் கொண்ட படுக்கை தான் அவர்களை மனதை முழுதும் ஆக்கிரமித்து, அவர்கள் வருங்காலத்தை மூடுபனியால் போர்த்திருக்கிறது. திருமண தினத்தின் உற்சாகத்தை சற்றே வடியச் செய்யும், அன்றைய இரவைக் குறித்த இயல்பான பதற்றம் அல்ல இது என்பதும், அவர்கள் நுழைய உள்ள மூடுபனியில் ஒருவரை ஒருவர் தவற விட்டு, பாதை மாறி, வருங்காலத்தை இழக்கக் கூடும் என்பதும் விரைவில் வாசகனுக்கு சில விவரிப்புக்கள் மூலம் புரியவருகிறது (Sex with Edward could not be the summation of her joy, but was the price she must pay for it, என்று ப்ளாரன்ஸ் எண்ணுகிறாள்)
திரும்பி வர முடியாத புள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கும் இந்தத் தம்பதியர் வாழ்வின் ஓர் இரவை, அவ்விரவின் சம்பவங்களோடு, கடந்த காலத்தையும் மெக்கீவன் கலக்கிறார். இது ஒரு சிறு/நெடுங்கதையாக முடித்திருக்கக் கூடியதை நாவலாக நீட்டிப்பதற்கு செய்யும் யுத்தி மட்டுமே அல்ல.
1960களின் ஆரம்பத்தில், உலக அரங்கில் இங்கிலாந்து தன் இடத்தை இழந்து கொண்டிருப்பதை, அப்பேரரசின் சூரியன் அஸ்தமனமாகத் தொடங்குவதை நம்ப/ புரிந்து கொள்ள முடியாமல் கவனித்துக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகப் போரில் போரிட்ட மத்திய வயதுடைவர்கள், இவர்களுக்கு நேர்மாறாக அப்போது குழந்தைகளாக இருந்து இப்போது 20களில் இருப்பவர்களின் அணுசக்தி எதிர்ப்பு போன்ற கொள்கைகள் (இங்கிலாந்தைப் பொருத்தவரை) ஒரு யுகத்தின் முடிவிற்கு) சாட்சியாக இருக்கிறாகள்.
ப்ளாரன்ஸ் /எட்வர்ட்டின் சந்திப்பு, குடும்பப் பின்னணி, இருவருக்குமிடையே உள்ள வித்தியாசங்கள் ( ப்ளாரன்ஸ் மேற்கத்திய செவ்வியல் இசை பயின்றவர்/ நிகழ்த்துபவர், எட்வர்ட் ‘ராக்’ இசை கேட்பவர்) போன்றவற்றின் சித்தரிப்புக்கள் அவர்கள் தங்கள் திருமண இரவன்று வந்தடைந்துள்ள இடத்திற்கான பாதையை விளக்குகிறது.
60களின் ஆரம்பம் என்பதால் பாலியல் குறித்த உரையாடல்கள் சாத்தியம் இல்லை என்று ஒற்றைப்படையாக இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாது. இது குறித்த உரையாடல்கள் எப்போதுமே எளிமையானவை அல்ல இல்லையா? மனதில் உள்ளதை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள்/ எதிர்பார்ப்புக்கள் தம்பதியரிடையே பிரச்சனைக்கு காரணமாகிறது. ப்ளாரன்ஸ் நான்கு பேர் கொண்ட மேற்கத்திய செவ்வியல் இசையை நிகழ்த்தும் குழுவின் அறிவிக்கப்படாத தலைவியாக இருக்கிறாள், அந்த ஆளுமை அவளுக்கு இயல்பாக உள்ளது. அதை கவனிக்கும் எட்வர்ட்டால், அத்தகைய ஆளுமை உடைய பெண் பாலுறவு குறித்த வெறுப்பு கொண்டிருப்பாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், இருவரும் நெருங்கும் கணங்களில் அவளின் தயக்கத்தை/ விலகலை நாணமாகவே கருதி, திருமணத்திற்குப் பின் சரியாகி விடும் என்று நம்புகிறான். இறுதி வரை, இத்தகையத் தவறானப் புரிதல்கள் நீடிக்கின்றன. திருமண இரவன்று அவளை முத்தமிடும் போது, ப்ளாரன்ஸ் குமட்டல் ஒலி எழுப்ப அப்போதும் கூட அதை அவளின் எழுச்சியின் வெளிப்பாடாகவே தவறாகப் புரிந்து கொள்கிறான்.
இருவரின் கூச்ச உணர்வோடு, திருமணம்/ உடலுறவு, பாலிய இயங்குவியல் குறித்த சமூக கற்பிதங்களும் அவர்களைத் தங்கள் தயக்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதிலிருந்து தடுக்கின்றன. திருமணத்திற்குப் பின் ஆணுக்கு உரியதான பெண் உடல் என்று பதிந்துள்ளதால், இறுதி வரை ப்ளாரன்ஸ் தன்னிடம் ஏதோ பெரிய குறைபாடு உள்ளதென்றும், அனைத்துமே தன்னுடைய தவறு தான் என்றுமே எண்ணுகிறாள். அதுவே அது குறித்து பேச மேலும் தடையாக உள்ளது. திருமண நிச்சயத்திற்குப் பின்னான, திருமணம் வரையிலான பல மாத இடைவெளியில், உடல் சார்ந்த நெருக்கத்தை ப்ளாரன்ஸ் தவிர்ப்பது அவனைத் துன்புறுத்தினாலும், அதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் பொறுத்துக் கொள்ளுமளவுக்கு அவனுள் நேசம் உள்ளது. உடலுக்கு உரியவன் என்று சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும், அதற்கான தகுதி தன்னிடம் உள்ளதா என்ற (இயல்பான) சந்தேகமும் எட்வர்ட்டை ப்ளாரன்ஸ்ஸின் தயக்கத்தை அப்போதைக்கு கடந்து செல்ல வைக்கிறது, அதுவே இறுதியில் வினையாகி விடுகிறது.
நேரடியாக சொல்லாவிட்டாலும், ப்ளாரன்ஸ் சிறுவயதில் மிக நெருங்கிய உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதுவே அவளின் வெறுப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்பதற்கான சில மங்கலான தடயங்களை நாவலெங்கும் மெக்கீவன் விட்டுச் செல்கிறார். ப்ளாரன்ஸ்ஸின் உணர்வுகளோடு இது சரியாகப் பொருந்தினாலும், அவள் பாத்திரத்திற்கு மேலும் அழுத்தம் கூட்ட திணிக்கப்பட்ட தகவலாகவும் இது உள்ளது. யூகமாகக் கூட எதையும் சுட்டாமல் பாலியல் குறித்த தேவையற்ற கற்பிதங்கள் கொண்ட வெகுளிப் (sexually naive) பெண்ணாக மட்டுமே அவரைச் சித்தரித்து – நாவலின் ஓர் இடத்தில், புதுமணப் பெண்களுக்கான கையேடு ஒன்றைப் வாசிக்கும் ப்ளாரன்ஸ் அதில் வரும் ‘penetration’ என்ற வார்த்தையை கத்தியால் பிளக்கப்படும் வலியாக உருவகிக்கிறார்- இருந்தால் அப்பாத்திரத்திற்கு வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கக் கூடும்.
சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை என்றோ அதன் விளைவுகள் வாழ்க்கை முழுதும் அவர்களைத் தொடர்வதில்லை வாட்டுவதில்லை என்றோ இங்கு சொல்ல வரவில்லை, அப்படி எந்த துயர நிகழ்வையும் எதிர்கொள்ளாத எத்தனையோ பேருக்கும் உள்ள பாலியல் குறித்த குழப்பங்களை முன்வைத்து இந்தப் பாத்திரத்தை உருவாக்கி இருக்கலாம். இரண்டிற்குமே சாத்தியங்களை நாவலில் வைத்துள்ளதால் தான் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெளிவாக சொல்லாமல் வாசகனின் யூகத்திற்கு மெக்கீவன் விட்டிருக்கலாம். ப்ளாரன்ஸ்ஸின் பால்யம் குறித்த நினைவுகளுமே தவறான புரிதல்களால் உருவாகி இருக்கலாம் என்ற மூன்றாம் கோணத்தையும் கருத்தில் கொள்ளலாம். David Foster Wallanceன் ‘Signifying Nothing’ சிறுகதையை இங்கு அதன் கதைசொல்லியின் மைய உணர்வுக்காக ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு வேளை இந்தக் கதைசொல்லி தன் நினைவுகளை எதிர்கொண்ட விதத்தில் ப்ளாரன்ஸும் செய்திருந்தால்?
நாவல் முழுவதும் இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என வேறு பாதைகளை இந்தப் பாத்திரங்கள் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய பலச் சந்தர்ப்பங்கள் உள்ளன என்றாலும் பெரும்பாலும் எதுவும் செய்யாமல், மெக்கீவன் சொல்வது போல்,- This is how the entire course of a life can be changed: by doing nothing– வீணடிக்கிறார்கள். நகை முரணாக திருமண இரவன்று, திட்டமிட்டப்படி கடற்கரைக்குச் செல்லாமல், தன் வெறுப்பை வெல்ல ப்ளாரன்ஸ் தான் அருவருக்கும் ஒன்றை நோக்கி எடுத்துவைக்கும் அடி ஒன்றே, அதுவரை அவர்களிடையே இருந்த திரையை கிழிக்கிறது. ஒரு கோணத்தில் அந்நிகழ்வு தேவையானது தான் என்றாலும், வெளிக்கொணர்ந்த சூழல் பொருத்தமாக இல்லாததால் நெருக்கடியை உருவாக்குகிறது
நாவல் முழுதும் எந்தப் பூச்சுக்ளுமற்ற உரைநடையை கையாண்டிருக்கும் மெக்கீவன், தம்பதியரின் முதல் உடலுறவு முயற்சியையும், அவ்வாறே சில வரிகளில் நேரடியாகச் சொல்கிறார். ஆனால் பதட்டத்தில் ப்ளாரன்ஸ் உடலெங்கும் எட்வர்ட்டின் விந்து சிதறி உறைய ஆரம்பிக்க, தீயை அள்ளிக் கொட்டியது போல் ப்ளாரன்ஸ் தன் ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த வெறுப்பின் வெளிப்பாடாக செய்யும் செயல், (ப்ளாரன்ஸ் மீது தவறில்லை என்றாலும்) எட்வர்ட் மனதில் ஆறா வடுவை உருவாக்குகிறது.
அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணரும் எட்வர்ட், தன்னையே எரித்துக்கொள்ளும் கோபமும் (அவனுக்குள் சில சமயம் உருவாகும் இத்தகைய அதீதக் கோபத்தைப் பற்றியக் குறிப்புக்களை முன்பே நாவலில் மெக்கீவன் தந்துவிடுகிறார்) , அதை அணைக்க முயலும் காதலுமாக அறையை விட்டு நீங்கி கடற்கரைக்குச் சென்றுள்ள ப்ளாரன்ஸ்ஸைத் தேடிச் செல்கிறான். தவறு தன் மீது தான் என்றே இப்போதும் எண்ணும் ப்ளாரன்ஸ் தற்காப்புக்காக, எட்வர்ட் மீது முதல்முறையாக மனதில் குற்றம் சுமத்துகிறாள்.வெறுப்பு/ நேசம் என்ற இரு துருவ உணர்ச்சிகளின் பிடியில் இருக்கும் இருவரின் உரையாடல் எதை சாதித்திருக்கக் கூடும்? தங்கள் உறவைக் காப்பதாக எண்ணி ப்ளாரன்ஸ் சொல்லும் ஒரு ஆலோசனை அவர்கள் வாழ்க்கை பாதையை முற்றிலும் மாற்றிப் போடுகிறது. “All she had needed was the certainty of his love, and his reassurance that there was no hurry when a lifetime lay ahead of them,” என்று ஏங்கும் ப்ளாரன்ஸ்ஸை எட்வர்ட் எப்படி மீட்டிருக்கக் கூடும்?
நாவலின் ஆரம்பத்தில், அவர்களின் திருமணம் குறித்து சொல்லும் போது எட்வர்ட்டின் தாய் “… had not significantly misbehaved, or completely forgotten the purpose of the occasion,” என்று சொல்லப்படுவது புதிராக உள்ளது. அவ்வப்போது வரும் எட்வர்ட் குடும்பம் குறித்த சித்தரிப்புக்களும் இந்தப் புதிரை அதிகமாக்குகின்றன. எட்வர்டுக்கு ஐந்து வயதும் அவன் இரட்டை சகோதரிகள் கைக்குழந்தைகளாகவும் இருக்கும் போது, அவன் தாய்க்கு ஏற்படும் விபத்தால் மூளை பாதிப்படைகிறது. கலங்கலான உணர்வுகள்/ நினைவுகள் மட்டுமே உள்ள அவரை கவனித்துக் கொள்வதோடு, மூன்று குழந்தைகளையும் எட்வர்ட்டின் தந்தை வளர்க்கிறார். தாய் வித்தியாசமானவர் என்று உணர்ந்தாலும், என்னவென்று சரியாகத் தெரியாத எட்வர்ட்டிடம் (eccentric என்றே அவரும் சரி மற்றவர்களும் சரி நினைத்துக்கொள்கிறார்கள்) அவனுக்கு 14 வயதானப் போது அவன் தந்தை அந்த விபத்தைப் பற்றிக் கூறி “What I’ve said changes nothing, absolutely nothing,..” என்று முடிக்கிறார். அப்போது கூட தாயை அவன் அணுகும் கோணத்தில் எதுவும் மாற்றமிருக்க கூடாது என செய்வது செய்வது அவர் மனைவி மேல் உள்ள காதல் மற்றும் திருமண உறவு குறித்து தனக்குள்ள கடமை என அவர் உணரச் செய்யும் பொறுமை. எட்வர்ட் மற்றும் ப்ளாரன்ஸ்ஸிடையே ஆழ்ந்த நேசம் உள்ளது என்பதற்கான அத்தாட்சிகள் நாவல் முழுதும் உள்ளன. பொறுமையும் ஓரளவுக்கு உள்ளது என்பதை நாவலில் காண்கிறோம். ஆனால் கொந்தளிப்பான நேரத்தில் அதை அணைக்கும் பொறுமை?
அந்தப் பொறுமை மட்டுமிருந்திருந்தால் அவர்கள் காதல் எந்தப் பிரச்சனையையும் எதிர்கொண்டு வென்றிருக்கக் கூடும். ஆனால் கணித சூத்திரம் போல் வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்தால் அந்தியில், கடற்கரையில் சரிந்த மரத்தின் மீது தனிமையில் சாய்ந்திருக்கும், பிறகு விவாதம் முற்றி, சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்து, நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையில்
… certain in her distress that she was about to lose him, she had never loved him more, or more hopelessly, and that the sound of his voice would have been a deliverance, and she would have turned back….
என்று பெருங்காதலோடு, தன்னை ஆற்றுப்படுத்தும் ஒரு இன்சொல்லுக்காக ஏங்கி அந்தக் காதலை விட்டுப் பிரிந்த நேசத்திற்குரிய இளம் பெண்ணிற்கும் , அவள் விலகிச் செல்லச் செல்ல சிறு புள்ளியாகி, அந்தியின் ஒளியோடு கலப்பதை எதுவும் செய்யாமல்/செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்க்குரிய இளைஞனுக்கும்
இலக்கியத்தில் ஏது இடம்?