Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Tuesday, May 3, 2016

உள்ளூரில் ஒற்றன் – தேஜூ கோலின் Every Day is for the Thief சிறுகதை தொகுப்பு - Teju Cole

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/24/teju-cole/)
------------
And there, behind it, marched so long a file
Of people, I would never have believed
That death could have undone so many souls.

என்ற 'இன்ஃபெர்னோவின்' (Inferno)   வரிகளை 'Every day is for the thief' கதைசொல்லி ஒரு திருமண நிகழ்வின்போது நினைவு கூர்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின் தன் தாய் நாடான நைஜீரியாவிற்கு திரும்பியிருக்கும் அவர் அணிவகுத்துச் செல்லும் வரிசையில் காண்பதுஇறந்தவர்களை மட்டுமல்லஉயிரோடிருந்தும் அவர் நினைவுகளிலிருந்து விலகியவர்களையும்தான். தன் கடந்த காலத்தினூடாக ஒரு பயணமும்தன் நாட்டின் நிகழ்காலத்தினூடாக இன்னொரு பயணமுமாக அவர் விவரிக்கும் - எந்தத் வெளிப்படையான தொடர்பும் இல்லாத 27 அத்தியாயங்கள் கொண்ட  - இந்தச் சிறு நூல் 'குறுநாவல்என்று வகைப்படுத்தப்பட்டாலும்நினைவுக் குறிப்புகளாகவும் பார்க்கப்படும் சாத்தியம் உண்டு . இந்த விதத்தில் அசோகமித்திரனின் 'ஒற்றனைஒத்திருப்பதோடுஅந்நூல் வாசகனுள் உருவாக்கும் உணர்வையும்எழுப்பும் கேள்வியையும் இங்கும் எழுப்புகிறது. ஒற்றன் எத்தேச்சையாக தோன்றினான் என்று அ.மி சொல்வதற்கு நேர் மாறாக"I’m very interested in fictional forms that challenge our idea of what fiction is," .... "I think a lot of people will read Every Day Is for the Thief and feel that it’s nonfiction, but that confusion is intentional," என்று இந்நூல் குறித்த ஒரு பேட்டியில் கோல் சொல்கிறார்.

சந்தையில் குழந்தையைத் திருட முயன்றதாகக் கூறிடயரொன்றினுள் திணிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் கண்முன் எரித்துக் கொல்லப்படும் 11 வயது சிறுவன்திருட வருவதற்கு சில நாட்களுக்கு முன் அவ்வீட்டின் நாய்களை விஷம் வைத்து கொல்பவர்கள் (உண்மையில் அது திருட்டு நிகழப்போவதற்கான சமிக்ஞையாக புரிந்து கொள்ளப்படுவது நகைமுரண்தான்),   தாங்கள் நுழைந்த முதல் வீட்டிலிருந்து ஒருவனை அழைத்துக் கொண்டுஅவன் மூலம் அடுத்த வீட்டிலுள்ளவரை கதவைத் திறக்கச் செய்து அங்கும் கொள்ளையடித்துபிறகு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு செல்வதும் - அதிகாரத்திற்கு பயந்த காலம் கடந்து போய் சக குடிமகனையே யார் என்ன செய்வார்கள் என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையின் - மிகைப்படுத்தப்பட்ட உண்மையின் கோர புனைவாக தோன்றும் அதே நேரத்தில்உண்மையில் 11 வயது சிறுவன் எந்த தயக்கமும் இல்லாமல் பல பேர் முன இப்படிக் கொல்லப்படக் கூடுமோ என்ற பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.  இத்தகைய ஒரு குழு மனப்பான்மையின் தீர்ப்பை  Lagos நகரை பின்புலமாக வைத்து புனையப்பட்டுள்ள பென் ஒக்ரியின் (Ben Okri)  'Stars of the new Curfew' தொகுப்பில் உள்ள 'When the lights return' கதையிலும் காண முடிகிறது. இரு நூல்களிலும் நைஜீரியாவின் நிகழ்கால அவலத்தை காண முடிகிறது என்றாலும்,   ஒக்ரியின் தொகுப்பைப் போல -கொடுங்கனவுகளால் நிறைக்கப்பட்டஉண்மையின் சாயல் கொண்ட - புனைவுலகமாக 'Every day is for the thief'யும்  முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 

முதல் பார்வையில்கோபம்/ ஆற்றாமை தவிர்த்த வேறு எந்த உணர்வெழுச்சியும் இல்லாதஅன்றாட நைஜீரிய நாட்களின் துல்லியமான -நூலில் அவர் இணைத்துள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களை ஒத்த - சித்திரத்தை  நூலெங்கும் அவர் அளிப்பதன் மூலம்   புனைவின் சாயலை முடிந்தளவுக்கு குறைப்பது முதல் காரணம். 'ஒற்றனின்காணக்கூடிய புனைவின் அம்சத்தைவிட இதில் குறைவாகவே பார்க்க முடிகிறது என்றே சொல்லலாம். பேருந்தில் பயணிக்கும் கோல், 'Michael Odjante'ன் நூல் ஒன்றை வாசித்தபடி அதில் ஏறும் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் போனாலும்அந்தப் புள்ளியிலிருந்துஅவள் இப்புத்தகத்தை எங்கு வாங்கி இருக்கக்கூடும்நைஜீரியர்களின் வாசிப்புப் பழக்கங்கள் (அல்லது பழக்கமின்மை) குறித்த சிந்தனைகளுக்குச்  செல்கிறார். தன்னையொத்த ரசனை கொண்ட ஒருவரைக் கண்டவுடன் ஏற்படும் இயல்பான ஆர்வத்தில்அவளிடம் பேசுவதற்கான விஷயங்களைதன்னுள்ளேயே (monologue) பேசிக்கொள்கிறார்.   3 பக்கங்களில்நிதானமான  நடையை  கொண்ட இந்த அத்தியாயம்ஒரு சந்திப்பைப் பற்றிய அனுபவக் குறிப்பாக வாசிக்கப்படவே அதிகம் வாய்ப்புள்ளது. 

அருங்காட்சியகத்திற்குச் செல்பவர்அது அரிய கலைப்பொருட்களின் சேகரிப்பாக இல்லாமல்ஏனோ தானோ என்று  அரசின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டிருப்பதையும்அதன் நீட்சியாக வேலை செய்பவர்களின் அசிரத்தையையும் பதிவு செய்கிறார்.  அங்கு அவர் கண்டதாக குறிப்பிடும் ஒரு சில விஷயங்கள் புனைவாகசற்றே மிகைப்படுத்தப்பட்டவையாக - அங்கு வேலை செய்யும் பெண் கோல்லை கண்டு கொள்ளாமல் ஸ்தோத்திர துதியை சொல்லியபடி இருக்கிறார் -  இருக்கக்கூடும்ஆனால் அவர் அத்தியாயம் முழுதும் சுட்டும்எந்த  கலைப்பிரக்ஞையும் இல்லாத ஒரு சூழல்அதற்கு அபுனைவின் தொனியையே தருகிறது. "Why is history uncontested here? There is no sight of the dispute over words, that battle over versions of stories that marks the creative inner life of a society. Where are the contradictory voices?" என்று வேறொரு இடத்தில் கோல் கேள்வி எழுப்புவதை புனைவின் குரலாக அல்லாமல்நிஜத்தின் ஆற்றாமை நிறைந்த குரலாகவே கேட்க முடிகிறது. 

உணர்வுபூர்வமாக அனைத்திலிருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் விலகியே இருக்கும்ஆனால் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் அவதானிப்புக்கள் எனும் தொனி நூலில் விரவி இருப்பதும் அதற்கு  நாட்குறிப்பின் சாயலைத் தருகிறது. விலகியே இருத்தல் என்பதின்  நீட்சியாகநம்பிக்கையின்ஆசுவாசத்தின் சுவடே இல்லாத எதிர்மறை நோக்கு மட்டுமே இந்நூலில் உள்ளதுமுதலாம் உலக நாடுகளில் பல்லாண்டுகள் வசித்து தாய் நாடு திரும்புபவர்களிடம் காணக்கூடிய அதே சலிப்பைத்தான் கோலும் வெளிப்படுத்துகிறார் - அமெரிக்காவில் இருந்து புறப்பட நைஜீரிய தூதரகத்தை அணுகும்போது லஞ்சத்தை எதிர்கொண்டு கோல் துணுக்குறுவதை அமெரிக்காவில் லஞ்சமே இல்லையா என்ற கேள்வியோடு எதிர்கொள்ள முடியும்என்ற மேலெழுந்தவாரியான விமர்சனம் உருவாகுவதும்  சாத்தியமே.  இந்த விமர்சனம் காத்திரமானதா என்பது ஒருபுறம் இருக்கவாசகன் மேலோட்டமாக உணரக்கூடிய  இத்தகைய கசப்பும்கூட,- புனைவு அளிக்கக்கூடிய முப்பரிமாணச் சித்திரம்பன்முகப் பார்வைகள் - இவை இல்லாத,  எதிர்மறை அனுபவங்களின் தொகுப்பாகவே நூலை முன்னிறுத்தக் கூடும். 

வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஏதோ ஒரு பிணக்கு/ காயம் காரணமாகவே அவர் நாட்டை நீங்கினார் என்பதைச் சுட்டும் சில இடங்கள் நூலில் உள்ளன என்பதால்  அவர் வெளியாளாக அனைத்தையும் கவனிப்பது போல் வாசகனுக்குத் தோன்றுவது கோலின் மனநிலை சார்ந்து  இயல்பான ஒன்றே.  அதே போல் "The house of course is unchanged. Memory and the intervening years many of which I have spent in cramped English flats and American apartments, limitations I have endured like a prince in exile.  Now, in the cool interior of this great  house in Africa, proper size is restored."  போன்ற வரிகளில் உள்ள வலியையும்அவர் தன்னெஞ்சிலிருந்து நைஜீரியாவை முற்றிலும் அகற்றவில்லைஅகற்றவும் முடியாது என்பதையும் உணர முடியும். 


நூலின் அபுனைவு தோற்றத்திற்கு அங்கங்கு இணைக்கப்பட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களும் வலு சேர்க்கின்றன. இந்தப்

புகைப்படத்தில் இருப்பவர் தான்  'Michael Odjante'ஐ படித்துக்கொண்டிருந்தவராகவோகலங்கிய


இந்தப் புகைப்படம்புகைமூட்டமாக உள்ள கோலின்  கடந்த காலத்தையும், துலக்கமாக விளங்கிக்கொள்ள முடியாத நைஜீரியாவின் நிகழ் காலத்தையும் சுட்டுவதாகவும்  இருக்கலாம். அவ்வப்போது இடையிடும் இத்தகைய புகைப்படங்களை உணர/ புரிந்து கொள்வதற்காகவாசிப்பை சில கணங்கள்   நிறுத்தி விடுகிறோம். கோல் சொல்வது போல் 'புனைவுஎன்றால் என்ன என்பது குறித்த நம் கருத்தாக்கங்களுக்கு சவால் விடுபவையாக இவை உள்ளன.  

புகைப்பட உத்தியில் மட்டுமின்றி,  திடீர் பயணம்அதனூடான அனுபவங்கள்அதன் விளைவான  சுயபரிசோதனை செய்யும்  தன்னுரைகள் (introspective monologue) போன்றவற்றால் உருவாகும்,  புனைவா/அபுனைவா என பிரித்தறிய இயலாத நூலின் இறுதி வடிவம்என கோலின் எழுத்தின் கட்டமைப்பிலும்நடையிலும்   சீபால்ட்டின்  (Sebald) தாக்கத்தை காண முடிகிறதுசீபால்ட் தன்னை பாதித்தவர்களில் ஒருவர் என்று கோலும் சொல்கிறார்.  குறிப்பாக கோலின் முதல் நூலான 'Open City'ல் இந்த தாக்கத்தை இன்னும் அதிகமாக உணர முடிகிறது. கோலின் எழுத்தே சீபால்ட்டின் தழுவல் எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.  இந்தக் கட்டுரை இந்நூலின் வகைமை குறித்த சாத்தியக்கூறுகளையே மையமாகக் கொண்டுள்ளதால் இந்நூல் பற்றிய விரிவான பார்வையையும் (உண்மையில் அவர் நூல் முழுதும் எதிர்மறை உணர்வோடு , கசப்பை சுமந்தலைபவராநூல் ஒற்றைத்தன்மை கொண்டதா  போன்ற கேள்விகள்)சீபால்ட்/ கோல் இடையேயான  ஒப்புமை/ வேற்றுமையையும்  பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.  



மனச் சோர்வடையச் செய்யும் பெரும்பாலான அனுபவங்களுக்கிடையில் இசை/நாடகத்திற்காக இயங்கும் ஒரு தனியார் சங்கம்(பணக்காரர்களே  சேரக்கூடியதாக அச்சங்கம் இருப்பதில் உள்ள முரணை கோல் உணர்ந்தாலும், இப்படியேனும் கலைக்கு வடிகாலாக ஒரு இடமாவது உள்ளதே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார்)இசைத்தட்டுக்களை நேரடியாக விற்பனை செய்யாமல் அவற்றை பிரதி எடுத்து விற்கும் கடைக்கு மாற்றாக,  சட்டபூர்வமாக இசைத்தட்டுக்களைஇலக்கிய நூல்களை  விற்பனை செய்யும்,  இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும்  கடை போன்ற ஒரு சில விஷயங்களைப் பார்க்கும் போது "The most convincing signs of life  I see in Nigeria connected to the practice of the arts" என்று நூலின் ஒரு அத்தியாயத்தில் கோல் உணர்கிறார்.  அதையே இறுதியில் இந்த நூல் குறித்து நாமும் உணர முடிகிறது.  எரிமலையென கொதித்துருகிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புறச் சித்திரத்தோடுஎரிகுழம்பென அனைத்தையும் எரித்துக்கொண்டிருக்கும் சமூக பொருளாதாரச் சூழலுடனேயான  பயணங்களின் மூலம் உருவாகும் அகச் சித்திரத்தையும் உயிர்ப்புடன் தீட்டியுள்ள கோலின் கலை புனைவா/அபுனைவா என்ற கேள்வியை ஒரு கட்டத்தில் தேவையற்றதாக்கி (moot point)  விடுவதோடு,  புத்தாயிரத்தின் புதுக்குரல்களில் குறிப்பிடத்தக்கவராக அவரை முன்னிறுத்துகிறது. 

Monday, April 25, 2016

புனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/17/ashokamitran-3/)
---------------
நான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்!’ பிறந்தான்.
– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)
கல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.
அ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்? கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.
அதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.
கதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார்? இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.
காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க  பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.
ஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.

Monday, February 22, 2016

சிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/02/14/two-lives/)
-----

'The General In His Labyrinth' நாவலில் நாம் சந்திக்கும் சிமோன் பொலிவர்  (Simon Bolivar), ஒரு கண்டத்தையே ஸ்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்ட அதிநாயகர் அல்ல.   ஒன்றுபட்ட லத்தீன் அமெரிக்கா என்ற கனவு தன்னுடைய   கண் முன்னே கலைவதை தடுக்க முடியாததென்னமெரிக்க கண்டத்தின் சர்வாதிகாரியாக இருக்க விழைந்தவர் என அவர் எதிரிகளால் தூற்றப்படுகிற, அச்சந்தேகம் மக்களிடமும் பரவி 
 தான் விடுவித்த நாடுகள் பெரும்பாலானவற்றில்  சந்தேகத்தோடு பார்க்கப்படுகிற, இத்தனை இக்கட்டிலும் மக்கள்/தன் முன்னாள் தோழர்கள்  தன்னைக் கை விடமாட்டார்கள் என்ற மாயையை இழக்க விரும்பாதமனதளவிலும் உடலளவிலும் உடைந்து போன ஒருவரையே பார்க்கிறோம். அவருக்கு இருந்த இறுதி நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் கலையஐரோப்பாவிற்குச் செல்ல முடிவு செய்கிறார். 
அதீதமாக வாசனைத் திரவியங்களை  உபயோகிப்பதற்காக பணத்தை வாரி இறைத்தவர் என்று அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு புறமிருக்க, தன் பயணத்திற்கு நல்ல குதிரையைக்கூட ஏற்பாடு செய்ய முடியாமல், கோவேறுக் கழுதை ஒன்றே கிடைக்கிறது. அவருடைய தரப்பில் உள்ள ஒருவர் முக்கியஸ்தர், நாட்டைக் காப்பாற்ற இறுதி தியாகத்தைச் செய்யுமாறு வேண்ட,  "I no longer have a country to sacrifice for" - ஒரு கண்டத்தையே மீட்டவன்,  ஒரு காணி நிலத்தைக் கூட  தனக்கென்று/தன்னுடையதென்று கூற முடியாத   - அவல நிலையை  சுட்டும் பதிலோடு - தன்னுடைய இறுதிப் பயணம் என்று அப்போது அறிந்திராமல்  -   பயணத்தை பொலிவர்   தொடங்குகிறார். 


மாபெரும் சாதனைகளைச் செய்வதற்கான உந்து சக்தியை இழந்த ஒருவரை இப்பயணத்தின்போது நாம் பார்க்கிறோம். அவர் நாடு கடத்திய எதிரிகள் தாயகம் திரும்புகிறார்கள்புதிய நாடுகள் அவற்றின் தலைவர்கள் என  ஒன்றிணைந்த தென்னமெரிக்க தேசம் என்ற கனவு அவர் கண் முன்பே கலைந்து,   அவர் விரும்பாத உருக்கொள்கிறது.  சீட்டாட்டத்தில் ஏற்படும் தோல்வியைக்கூட ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை அவருக்கு இப்போது இல்லை. அவர் செல்லுமிடங்களில்மக்கள் அவர் மீது சேறு வீசுகிறார்கள்,  அவருக்கு எதிரான கோஷங்கள் சுவர்களில் எழுதப்படுகின்றன.  இனி எதுவும் செய்ய முடியாது என்ற செயலின்மையும்,  மீண்டும் முதலிலிருந்து புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற அடங்கா விழைவுமாக ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட உணர்வுகள் மாறி மாறி குடி கொள்ளும்  மனதோடு நகரும் அவரின் இறுதி நாட்கள்தனிமையான ஒரு மாலை வேளையில் 

" of his last days and for the first time he saw the truth: the final borrowed bed, the pitiful dressing table whose clouded, patient mirror would not reflect his image again, the chipped porcelain washbasin with the water and towel and soap meant for other hands, the heartless speed of the octogonal clock racing toward the ineluctable appointment at seven minutes past one on his final afternoon of December 17. Then he crossed his arms across his chest and began
to listen to the radiant voices of the slaves singing the six o' clock Salve in the mills, and through the window he saw the diamond of Venus in the sky that was dying forever, the eternal snows,the new vine whose yellow bellflowers he would not see bloom on the following Saturday in the house closed in mouring, the final brilliance of life that would never, through all eternity be repeated again"

என்று உள எழுச்சியையும் துயரையும் ஒரே சேர அளிப்பதோடு முடிகிறது.

மரணத்தின் வலு குறித்து "Death is the greatest leveler" போன்ற சொற்றொடர்கள் எப்போதும் உபயோகத்தில் இருந்துள்ளன. 
"THE glories of our blood and state
         Are shadows, not substantial things;
.....
         Death lays his icy hand on kings:
.....
         And in the dust be equal made
With the poor crooked scythe and spade. "
என்று ஜேம்ஸ் ஷெர்லியின் (James Shirley) 'Death the Leveller' கவிதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளது போல்தன் புகழ்/ அடைந்த வெற்றிகள் அனைத்தும் எந்த பொருளும் இல்லாதவையாக மாறியாருமற்றவராக மரணிக்கிறார் பொலிவர். 

ஜான் வில்லியம்ஸ் (John Williams ) எழுதிய  ஸ்டோனர் ('Stoner') நாவலின் மைய பாத்திரம்இலக்கிய உலகில் நிறைய இடங்களில் உதிர்க்கப்படும் 'எளியவர்கள்/ சாதாரணர்கள்என்ற பதத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி என்பதை ஸ்டோனரின் மரணத்தைப் பற்றிய "Stoner's colleagues, who held him in particular esteem when he was alive, speak of him rarely now; to the older ones, his name is reminder of the end that awaits them all, and to the younger ones it is merely a sound that evokes no sense of the past..." குறிப்போடு நாவல் ஆரம்பிப்பதிலிருந்தே உணர முடிகிறது. ஆம்இது ஒரு 'சாதாரணனின்வாழ்வையும் மரணத்தையும் பற்றிய நாவல். 

மாபெரும் சாதனைகள் செய்த - நிஜத்தில் வாழ்ந்த - ஓர் ஆளுமையின் (உண்மைகள் கலந்த) புனைவுச் சித்திரமும்முற்றிலும் புனைவுப் பாத்திரமான - பொலிவரின் வாழ்க்கைக்கு முற்றிலும் நேர் மாறான வாழ்வை வாழ்ந்தவாழும் போதும்  சரிமரணத்திலும் சரி எந்த பெரிய சலனத்தையும் உருவாக்காத – ஸ்டோனரின் ஆளுமைச்  (அல்லது ஆளுமையின்மையின்) சித்திரமும் எந்தத் தொடர்பும் இல்லாதவை போல் முதற்பார்வையில் தோன்றுவதால்இவற்றை ஒரே கட்டுரையில் அணுக வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழலாம். ஆனால் ஸ்டோனரை  மீள்பார்வை செய்வதுஅவரது வாழ்வின் அர்த்தம் குறித்த இன்னொரு கோணத்தை  தருவது மட்டுமின்றி,  இறப்பு எப்படி தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை சமன் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல்இவர்களைப் போல் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பவர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கின்றது என்ற இன்னொரு கோணத்தையும்  உணர்த்துகிறது.

ஸ்டோனரின் வாழ்க்கை குறித்து  நாவலின் போக்கில் தெரிந்து கொள்கிறோம். வேளாண் கல்வி படிப்பதற்காக கல்லூரியில் சேரும் ஸ்டோனர்ஆங்கில இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு கல்லூரி பேராசியர் ஆகிறான். காதலில் விழுந்து விட்டோம் என்று எண்ணி,  -  துரித கதியில் திருமணம் செய்துபெரிதும் துன்பத்தையே தரும்மகளே தந்தையிடம் இருந்து விலகிச் செல்லும்   - இல்வாழ்க்கையில் இணைந்து கொள்கிறான். கல்லூரியில் செல்வாக்கு மிக்க இன்னொரு பேராசிரியருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு அவ்வாசிரியர் மனதில் ஸ்டோனர் பால்  பெரும் பகையை உருவாக்கஆசிரியப் பணியிலும் பலச் சங்கடங்களை அவன்  சந்திக்க நேர்கிறது.  

ஸ்டோனர் மட்டுமே நல்லவன்மற்ற அனைவரும் தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்களே என்ற விமர்சனம் வாசகன் மனதில் எழலாம் (எழுந்து கொண்டும் இருக்கின்றது).  ஸ்டோனரின் கோணத்திலேயே முழு நாவலும் நகர்வதால் அப்படிப்பட்ட உணர்வு  நாவலில் தோன்றுவது  தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்றாலும்சற்று கூர்ந்து கவனித்தால் வில்லியம்ஸ் யாரையும் கொடியவர்களாக சித்தரிக்காமல்மனப் பொருத்தம் இல்லாத இருவர் தொடர்பில் வரும்போது ஏற்படும் மனக்கோணல் எத்தகைய வஞ்சத்தை உருவாக்கும் என்பதை மட்டுமே சொல்ல வருகிறார்  என்பது புரியும்.  மற்றவர்கள் கோணத்தில் எழுதப்படும்போது (அல்லது வாசகனே அப்படி யோசிக்கும்போது)  ஸ்டோனர் தரப்பில் உள்ள சில பிரச்சனைகள்  - மனைவியின் மனநிலைக்கு நேர்மாறாக,  பெரிய லட்சியங்கள் இன்றி அவர் இருப்பதே இல்வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்பிடிவாதத்தோடு ஒரு நிலையில் இருந்துஆனால் ஒரு கட்டத்தில் ஆயாசத்தோடு அதை விட்டுவிடுவதுஎதையும் இறுதி வரைக்கும் கொண்டு செல்ல இயலாத மனநிலை  -    இருக்கக்கூடும் என்று தெரிய வரலாம்.  ஸ்டோனரின் வாழ்வில் ஒரு பெண் வருகிறாள். அவர் மனதிற்கு மிக மிக அணுக்கமாக இருக்கும் அந்த உறவையும் அவர் முறித்துக் கொள்ள வேண்டியதாகிறது. மத்திய வயது ஆணின் நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை, அவருக்கு ஏற்படும்  இல்லறத்தைத் தாண்டிய காதல் என்ற வழமையான ஒன்றுதான் என்றாலும் அக்காதல் உருவாவதை மட்டுமின்றிஅது முறிவதையும் கண்ணியத்தோடு விவரிக்கிறார். அக்கண்ணியம் அவ்வுறவு குறித்த காத்திரமான/ தூய்மையான  பிம்பத்தை உருவாக்கி, - இலக்கியத்தில் இத்தகைய உறவுகள் குறித்த பரிச்சயம் இருந்தாலும் - வாசகனை அகம் நெகிழச் செய்கிறது.

இதெல்லாம் நடந்தது/ இவற்றை ஸ்டோனர் அடைந்தார் என்பதாக இல்லாமல்இவையெல்லாம் நடக்கவில்லை/ இவற்றையெல்லாம் அவர் இழந்தார் என்பதாக மட்டுமே ஸ்டோனரின் வாழ்கை விரிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அவர் மிகவும் விரும்பும் ஆசிரியப் பணியைச் செய்வதிலும் இடறி விழுந்துஅவர் விருப்பத்திற்கு மாறாக பணி மூப்பிற்கு தள்ளப்படுகிறார்.
இதிலும் அவர்  தோல்வியையே சந்திக்கிறார்.  நோயால் பீடிக்கப்படும் அவர்,    அந்திமக் கணங்களில்,  தான் மிகவும் விரும்பிய இலக்கியத்தின் (புத்தகங்களின்) அருகாமையில்அவற்றைப் பார்த்துக்கொண்டேஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது அவர் உயிர் பிரிகிறது. 

 மிக எளிய அறையில்இன்னொருவரின் மஞ்சத்தில் படுத்தபடிஅதிக பொருட்கள் இல்லாத அணிமேஜையைகலங்கிய முகக்கண்ணாடியைப் பார்த்தப்படி மரணிக்கும் பொலிவரைவிட தான் விரும்பிய சூழலில் மரணிக்கும் - நிராசையின் நிழலிலேயே வாழ்நாளை கழித்த - ஸ்டோனரின் அந்திமக் கணங்கள் சற்றே ஆசுவாசமளிப்பவையாக இருந்திருக்கக் கூடும் என்பது ஒரு நகை முரண் தான். 


மரணத்தைப் பற்றிய ஷெர்லியின் கவிதை 
"Only the actions of the just 
Smell sweet and blossom in their dust. "
என்று முடிகிறது. பொலிவரின் செயல்கள் குறித்து அவை  நியாயமா இல்லையா என்று வாதிட முடியும் என்றாலும்அவற்றின் செயற்கரியத் தன்மையைஅவர் ஒரு வரலாற்று நாயகர் என்பதை யாரும் மறுக்கவியலாது. அவருடைய அந்திமக் கணங்கள் நிராகரிப்பின் வலியில்தனிமையின் பிடியில் கழிந்திருக்கலாம். ஆனால் "the final brilliance of life that would never, through all eternity be repeated again" என்று அந்நாவல் முடியும்போது அனைத்தையும் சரி செய்து ,அவர் புகழ் (அவர் செயல்கள் குறித்த விமர்சனங்களோடு) என்றும் நீடித்திருக்கும் என்பதை வாசகனுக்கு உணர்த்துகிறது. 

ஆனால் ஸ்டோனரின் நிலை? அந்திம நேரத்தில் "What did you expect"   என்று தன் வாழ்க்கை குறித்து  அவர் மீண்டும் மீண்டும் தன்னையே கேட்டுக்கொள்வது வாசகனை மனமுடையச் செய்கிறது. யாரும் பார்க்காமலே மொட்டவிழ்ந்துயாரும் முகராமலே மணம் வீசி, யாருக்கும் இழப்பதற்கு இல்லாமல் உதிரும் பூ போன்ற வாழ்க்கையை மட்டுமே அவர் வாழ்ந்திருக்கிறாராஎந்த அர்த்தமும் அதற்கு இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் நாவலின் மீள் பார்வை செய்தால்முதலில் வாசகன் உணரக்கூடிய வாழ்க்கை சார்ந்த ஆயாசத்தையும்/ அவநம்பிக்கையையும் தாண்டி உண்மையில் எழுச்சிமிக்க  வாழ்க்கை அனுபவத்தையேஅத்தகைய  ஒரு வாழ்வையே ஸ்டோனர் வாழ்ந்திருக்கிறார் என்று வாசகன் உணர முடியும். 

ஸ்டோனர்  வாழ்வில் இரு சம்பவங்கள் இது குறித்த சிலத்  தெளிவுகளைத் தரக்கூடும். வேளாண்மை படிக்க வந்துள்ள ஸ்டோனரைநீ ஆசிரியராகப் போகிறாய் என்று அவருடைய ஆசிரியர் சொல்கிறார். அதுவரை அப்படி எண்ணிக்கூட பார்த்திராத ஸ்டோனர் புரியாமல் ஆசிரியரை நோக்க "It's love, Mr.Stoner,' Sloane said cheerfully. 'You are in love. It's as simple as that.'"   என்று சொல்கிறார். இன்னொரு நிகழ்வு.  தன் காதலை முறித்துக் கொள்வதைப் பற்றி ஸ்டோனர் பேசும் போது,   நாம் மற்றவர்களுக்கு பயந்தோஇதனால் நாம் சந்திக்கக் கூடிய இன்னல்களைத் தவிர்க்கவோ இதைச் செய்யப்போவதில்லை என்று சொல்லி "It is simply the destruction of ourselves, of what we do" என்பதால் காதலைத் துறக்கிறோம் என்று முடிக்கிறார்.

ஸ்டோனர் அனைத்திலும் தோல்வி அடைந்திருக்கலாம். சில விஷயங்களில் மாற்று கோணத்தை பார்க்க இயலாதவராக,
மனத்திடம் இல்லாதவராக இருந்திருக்கலாம்ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு நிகழ்வுகள் வாசகனுக்குச் சுட்டுவது என்னஅவருடைய முதற் பெருங்காதலான இலக்கியத்தை/ கற்பித்தலை அவர் எப்போதும் கைவிடவில்லை. "I want to thank you all for letting me teach" என்றே தன் மேல் திணிக்கப்பட்ட  பணி நிறைவு விழாவின் போது சொல்கிறார்.  காதலைத் துறக்கும்போது "..what we do" என்று அவர் குறிப்பிடுவதுதங்களைக் குறித்து அவர்களே கட்டமைத்துள்ள பிம்பத்தை மட்டுமின்றிஇலக்கியத்தை /கற்பித்தலையும் சுட்டுகிறது என்று உணரலாம்.   அதற்கேற்பதான் வகுத்துக் கொண்ட விழுமியங்களையும் (அவை மற்றவர்களின் கோணத்தில் தவறானவையாக - தன் காதலை முறிக்க அவர் சொல்லும்  காரணத்தைப் போல-  தேவையற்றவையாக இருக்கலாம்)ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் (இறுதி வரை தன் மனைவியிடம் இருந்து அவர் பிரிவதில்லைதன்னை ஒதுக்கிய மகள் இக்கட்டில் சிக்கும் போது அவள் தரப்பையே எடுக்க விழைகிறார்-   கைவிடாமல்அவற்றுக்கு  நியாயம் செய்யவே எப்போதும் முயல்கிறார். எதையும் வென்றிலன் எனும் போதும் அவரும் பொலிவரைப் போல் ஒரு நாயகரே.



Monday, February 15, 2016

நடை பிணங்களும் நாகரீகக் கோமாளியும்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/02/07/zombies-and-the-modern-jester-ajay-r/)
-------------
எங்குஎப்போது போர் நடந்தாலும்யுத்தம் சில வருடங்கள் நீடிக்கும் நிலையில்ஒரு  கட்டத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர்களோடு கல்லூரி படிப்பை அப்போதுதான் முடித்தவர்கள்இளைஞர்கள்நடுத்தர வயதினர் (ஒரு 40 வயது வரை) என பலதரப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.  யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு பயிற்சியும் அதிகம் அளிக்கப்பபடுவதில்லைகுறிப்பாக மன ரீதியாக அவர்களைத் தயார் செய்வதில்லை. போரின் பயங்கரத்திற்கு ஒருவரை பயிற்சியால் மன ரீதியாக முற்றிலும் தயார் செய்து விட முடியாது என்பது உண்மை. இருந்தும் அப்போதைய அவசரத்தில் அத்தியாவசிய பயிற்சியைத் தாண்டி எந்த புரிதலையும் அளிக்காமல் மந்தை மந்தையாக அவர்கள் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்இவர்கள் எந்தத் தரப்பாக இருந்தாலும்தங்கள் தரப்பில்  போர் உயர்ந்த விழுமியங்களுக்காக நடத்தப்படுகிறதுஅதற்காக பலியாவது பெரும் பேறு என்ற எளிய மனநிலைக்கு தள்ளப்பட்ட சூழலில் போரை எதிர்கொள்கிறார்கள்.  அங்கு அவர்கள் மயக்கங்கள் கலைகின்றன. 

இப்படி  தேசியம்அறம் போன்ற விழுமியங்களினால் ஈர்க்கப்பட்டு இராணுவத்தில் சேர்ந்து/ சேர்க்கப்பட்டுபோரின் உண்மை முகத்தைமனிதத்தின் மரணத்தைப்  பார்த்து சிறிது சிறிதாக உள்ளம் சிதையும்,   'All Quiet on the Western Front'  நாவலின்   மைய பாத்திரமான பால் (Paul Bäumer) முதல் போருக்குப் பின்னான வாழ்க்கையைப் பேசும் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான 'Redeployment' வரை இத்தகைய பல பாத்திரங்கள் (பெரும்பாலும் 20களில், 30களின் ஆரம்பத்தில் உள்ள இளைஞர்கள்)   உள்ளன.  இவற்றின் இறுக்கமான தொனிக்கு நேர்மாறாகதங்களை பிறழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளும் நிகழ்வுகளை அவல நகைச்சுவையோடு எதிர்கொள்ளும் பாத்திரங்கள் (யோஸாரியன்/ Yossarian), மூலம் போர் குறித்த விமர்சனங்களை முன்வைக்கும்   Catch-22 போன்ற நாவல்களும் உள்ளன. 

 நாவலின் கட்டமைப்பிலும்பாத்திரங்கள் போருக்கு எதிர்வினை புரியும் விதத்திலும்  பெரும் வேறுபாடு இருந்தாலும்பாலும் சரியோஸாரியனும் சரி தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளால் நடைபிணமாக மாறி  தங்கள் நாட்களை கடத்தும் இடத்தில் ஒன்றிணைகிறார்கள்.  Czech மொழியின் நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று போற்றப்படும்முதல் உலகப் போரின் பின்னணியில்போர் விமர்சன புனைவுகளின் மிக ஆரம்ப கட்டத்தில் ஹசேகால்  (Jaroslav Hašek)  எழுதப்பட்டதுமான  ,-  நான்கு தொகுதிகள் கொண்டமுற்று பெறாத - 'The Good Soldier Švejk' நாவலின் மைய பாத்திரம்   சிப்பாய்  ஷ்வேக் (Švejk) இவர்களிடமிருந்து மாறுபடுகிறான்.   

போர் குறித்த அறம் சார்ந்த கற்பிதங்கள்  எதுவும் அவனுக்கு கிடையாது. அதே போல்தன்னிலை குறித்து வருந்தி சித்தம் குலைபவனும் இல்லை அவன்.  போரில் ஈடுபடுவதை/ஈடுபடுத்தப்படுவதைத்    தவிர்க்க வேண்டும் அவன்  லட்சியம். 700 பக்கங்களுக்கு மேல் நீளும் இந்நாவல் முழுதும் அவன் செய்வதும் அதையே.  ஆனால் அதற்காகநடைபிணமாக மாறாமல்
தன் மேல் திணிக்கப்பட்ட போரில் உயிரையும்/ சித்தத்தையும் இழக்காமல் இருக்கபோர்க்களத்தையே  நாடக அரங்காக மாற்றி அதில் நாகரீகக் கோமாளியைப் போல் தன் கூத்தை நிகழ்த்துகிறான். ஆனால்  அவன்  மகிழ்விக்க நினைப்பது தன் மேலதிகாரிகளை அல்ல என்பதை  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என நாவலின் ஒரு  சம்பவம் மூலம் உணரலாம்.  ஷ்வேக்  ஒரு இடைவெளிக்குப் பிறகு தனது மேலதிகாரியைப் சந்திக்கிறான். மேலதிகாரி அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து விழிகளை மூடி,  செயலற்றுப் போகிறார். முன்பு ஷ்வேக் போர்க்களத்தில் அவர் உயிரைக் காப்பாற்றியதை எண்ணுகிறாராஇருவருக்குமிடையில் நெருங்கிய நட்புள்ளதா என்றெல்லாம் யோசிக்க  ஒன்றுமில்லை. காசிக்கு சென்றும் பாவம் தொலையாத கதையாகஒரு வழியாகத் தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த தன் பணியாளன் மீண்டும் வந்ததைக் கண்டு ஏற்பட்ட  பீதியும்அதிர்ச்சியும்  மட்டுமே அவருடைய அத்தகைய எதிர்வினைக்கான காரணம்.

அப்பாவியாகத் தோற்றமளிக்கும் முகத்தில்கனிவு ததும்பும் விழிகளுடன் இருப்பது  அவன் அணிந்திருக்கும் முகமூடியா அல்லது அவனது குணாதிசயமே முட்டாள்தனமாக நடந்து கொள்வதா என உறுதியாக சொல்லமுடியாத அவன் மேலதிகாரிகள் அவனை பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதென்று தாண்டிச் செல்லவும் முடியாமல்இறுதியில் அவனிடமிருந்து அவர்களே தப்பிச் செல்ல முயல்கிறார்கள்.  கீழே உள்ள இரு சித்திரங்கள் அதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.




சிப்பாய் என்றில்லைஎந்தவொரு  பணியாளனும் தன் மேலதிகாரி இப்படித்தான் தன்னிடம்  எதிர்வினை புரிய வேண்டும் என விரும்பக் கூடியதை  நிகழ்த்திக் காட்டும் பாத்திரமாக  ஷ்வேக் இருப்பது மற்ற 'போர் விமர்சனநாவல்களின்  முக்கியப் பாத்திரங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.  இன்னொரு வேறுபாடும் முக்கியமானது.   பாலும் சரியோஸாரியனும் சரி போரினால் தான் இத்தகைய  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்அமைதி நிலவும் ஒரு குடிமைச் சமூகத்தில் அவர்கள்தங்கள் சூழலுடன் பொருந்தியுள்ள பொறுப்பான  குடிமகன்களாக இருந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையும்அது நிகழவில்லையே என்ற ஏக்கமும் வாசகனுக்குள் தோன்றுகிறது. ஆனால்  ஷ்வேக் குறித்து அப்படி எந்த கற்பிதங்களும் நமக்கு ஏற்படுவதில்லை. எந்த சூழலிலும் அவன் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாதஅச்சூழலின் சமநிலையைக் குலைக்கும்  அராஜகவாதியாகவே (anarchist)  இருந்திருப்பான் என்றே நாவலின் போக்கிலிருந்து உணர முடிகிறது. கட்டற்ற வாழ்கை வாழ்ந்த நாவலின் ஆசிரியர்  ஹசேகின் ஆளுமை இப்பாத்திரத்தில் தெரிகிறது.   

1921ல் எழுத ஆரம்பிக்கப்பட்டு 1923ல் ஹசேகின் மரணத்தால் முற்று பெறாத இந்நாவலின் தாக்கத்தை Catch-22ல் காண முடிகிறது. ஹெல்லரும் இந்நாவலே தன்னை Catch-22 எழுத தூண்டியதாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது.   போர்க்கால இராணுவ  தந்திரங்கள் குறித்து அதிகம் தெரிந்திருக்காமல்,
தன் கீழ் பணியாற்றும் வீரர்கள் குறித்து எந்த கவலையும் கொள்ளாமல்தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவ்வீரர்களை களப்பலியாக கொடுக்கும் தளபதிகள்/ மேலதிகாரிகள்இராணுவ முகாம்களில் உள்ள  உணவகத்தில்/ உணவுப் பொருட்கள் காப்பகத்தில் நடக்கும் ஊழல்கள்அதீத ஆர்வத்தில் உள்ள சில இளம் சிப்பாய்கள்எங்கும் பரவியுள்ள அபத்தச் சூழல் என இரண்டு நாவல்களுக்கும் பொது அம்சங்கள் நிறைய உண்டென்றாலும் அவை வேறுபடும் இடங்களிலேயே முக்கியத்துவமும்தனித்துவமும் பெறுகின்றன.



 'All Quiet on the Western Front'ம், 'Catch-22'ம் அதன் முக்கியப் பாத்திரங்களின் இருத்தலியல் சிக்கல்களை முன்வைத்தே போர் குறித்த எதிர்மறை  கருத்துக்கள் சுட்டப்படுகின்றன. போரின் புவி அரசியல் (geopolitics) சூழல் போன்றவை சுட்டப்படுவதில்லை. 
எந்த இருத்தலியல் சிக்கல்களும் இல்லாத  ஷ்வேக்கின் விமர்சனத்தில் இருந்து  யாரும் தப்புவதில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய  எந்தத் தகுதியும் இல்லாத, வாய் ஜாலத்தை மட்டுமே நம்பும் இராணுவ உயரதிகாரிகள் குறித்த மிக மோசமான சித்தரிப்பே நாவல் முழுதும் உள்ளது. போதையின் பிடியில் உள்ள அதிகாரி ஒருவரின் சித்திரத்தில்  




சீருடையில் குத்தப்பட்டுள்ள பல பதக்கங்களுக்குக்ம் , முறுக்கிய மீசைக்கும் முற்றிலும் முரண்பாடாக உள்ள அவரது நிலை, இராணுவத்தின் ஆடை/உடல் பாராமரிப்பு சார்ந்த கட்டுப்பாடுகளை பகடி செய்வதாகவும் உள்ளது. . 

ஜெர்மானியர்கள்செர்பியர்கள்ஆஸ்திரியர்கள்ஹங்கேரியர்கள்,  இவர்களோடு  தன் சொந்த நாட்டு மக்களும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சச்சரவுகளைஒரு இனத்தவர் மேட்டிமைத்தன்மையோடு மற்ற நாட்டினர்  குறித்து கொண்டுள்ள (தவறான) இழிவான அபிப்ராயங்களை   நுட்பமான பகடிகளாக நாவலில் சுட்டிச் செல்கிறார் . பல சாம்ராஜ்யங்கள் சிதைந்துபுதிய அரசுகள் உருவான முதல் உலகப்  போரின் பின்னணியில் பார்க்கும் போது,  இப்பகடிகள் முக்கியத்துவம் - ஒரு நாடு ஏன் ஒரு குறிப்பிட்ட தரப்பை எடுத்தது என்பதை புரிந்து கொள்ள - பெறுகின்றன.  போரை தீரச்செயலாக பார்க்கும்வீரர்களுக்கு உணவு முதலிய உதவிகளை வழங்கும் முதிய சீமாட்டிகளும் - முதிய சீமாட்டி ஒருவரை விலை மகள் என்று எண்ணி சிப்பாய் ஒருவன் அதிருப்தி கொள்கிறான் -ஆஸ்திரிய அரசரும் கூட    பகடி செய்யப்படுகிறார்கள்.  20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூடஅரசர் கடவுளின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டுஅவரது அதிகாரம் தெய்வத்தின் மூலம் அளிக்கப்பட்டதாக (Divine Right) கருதப்பட்ட/ ஏற்றுக்கொள்ளப்பட்ட  -மக்களாட்சி என்ற கருத்தாக்கம்  இன்னும் பலமாக வேரூன்றாத - காலத்தில்இது ஒரு முக்கியமான கலகக் குரல்.  

கிருத்துவ மதமும் இவரிடம் சிக்குகிறது. வீரர்களின் மரணம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர்களை (மரணத்திற்காக) வாழ்த்தி,வழியனுப்பும் போதகர்கள்சொகுசான வாழ்வை  அனுபவிக்கும்,  நடைமுறை யதார்த்தம் குறித்து கொஞ்சமும் அறிந்திராதவர்களாகசூதாடிகளாககுடிகாரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். 


கட்டற்ற பித்து நிலையில் இயங்கும் நாவலென்றாலும்,  அப்பித்து நிலையின் உருவாக்கத்தின் பின்னால்  ஒரு முறைமை Catch-22ல் உள்ளது. சித்தம் பேதலித்த நிலை என்ற ஒரே விஷயத்தை நாவல் முழுதும் நுட்பமான வேறுபாடுகளுடன் முன்வைக்கும் ஹெல்லர் 
 நாவலின் விரவியுள்ள அபத்தத்தின் கீழுள்ள துயரத்தை/ கூர்மையான விமர்சனத்தை வாசகன் உணரச்செய்கிறார் .  "Frankly, I'd like to see the government get out of war altogether and leave the whole field to private industry." என்று  அந்நாவலின்  மிலோ (Milo Minderbinder)   கூறுவது அபத்தமாக தோன்றினாலும்போர் வர்த்தகமாக மாறுவதை சுட்டுகிறது. இன்று Blackwater போன்ற நிறுவனங்கள் சட்டத்தை நீங்கள் சரி செய்து கொடுங்கள்மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போர்த்தொழிலில் இறங்கிவிட்டன . "You're inches away from death every time you go on a mission. How much older can you be at your age?என்று கூறப்படும் தர்க்கத்தில் உண்மையும்அபத்தமும்துயரும்  ஒரு சேர தெரிகின்றன அல்லவா. 

'The Good Soldier Švejk' நாவலில் மிகப் பெரிய பலமான, 'ஷ்வேக்கின்யாரையும்/ எதையும் துச்சமென கருதும் போக்கே  (irreverent anarchy),  அதே அலட்சியம் நாவலின் கட்டமைப்பிலும் தெரியும் போது அதன் பலவீனமாகவும் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.     தன் மேலதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளும் ஷ்வேக்அதிலிருந்து தப்பிக்க கடந்த காலத்தில் நடந்ததாக சொல்லி ஒரு நிகழ்வை/ கதையை விவரிக்கிறான். அக்கதையில் குழம்பி மேலதிகாரிகள்விட்டால் போதும் என்று  ஷ்வேக்கை தண்டிப்பதில்லை. ஷ்வேக்கின் தந்திரத்தை உணர்த்தும் இவ்வுத்தி ஓரிருமுறை  சுவாரஸ்யமாக இருந்தாலும்தொடர்ந்து பல முறை எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாணியில் விவரிக்கப்படுவதுசலிப்பை ஏற்படுத்தக்கூடியது. 

எல்லாவற்றையும் கலைத்துப்  போடும் ஹசேக்அவற்றினுள் பொதிந்திருக்கும் இன்னொரு அடுக்கை வாசகனுக்கு சுட்டுவதில் 
கவனம் கொள்வதில்லை. ஒன்றைக் கலைத்துப் போட்டபின்அடுத்த கலகத்திற்கு தயாராகி விடுகிறார். யுத்த களத்திற்கு ரயிலில் செல்லும் ஒரு சிப்பாய் தவறிரயில் நிலையத்தில் உள்ள  கூர்முனைகள் கொண்ட கம்பிகளில் விழுந்து இறக்கிறான். கோர மரணம்.  அவன் சடலத்தை என்ன செய்வது என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்கஒரு சிப்பாய் மிகுந்த கடமை உணர்ச்சியோடு அதைக் காவல் காக்கிறான்.  நாவலின் போக்கில்இச்சம்பவத்தில் உள்ள அபத்தத்தை உணரும் வாசகன், அதில் பொதிந்துள்ள    துயரை - இத்தகைய பல நிகழ்வுகள்  நாவலில் உள்ளன -  உள்வாங்குவதற்குள்அடுத்த அபத்த நிகழ்வு அவனுக்காக காத்திருக்கிறது. 

Catch-22வைப் போலவே இந்நாவலிலும்  கேலிச் சித்திரமாக  (caricature) தோற்றமளிக்கும் -எப்போதும் தீராப் பசியில் இருக்கும்மேலதிகாரிகளின் உணவைக் கூட உண்டு விடும்  சிப்பாய்அமானுஷ்யத்தில்  ஈடுபாடுள்ள சமையல்காரர்  (occultist), அவரின் தத்துவங்கள்  (Form is non-being and non-being is form) - பாத்திரங்கள் இருந்தாலும், இவர்கள், அந்நாவலின் பாத்திரங்கள் போல் உயிர் கொள்வதில்லை. 

நாவலின் விரவி இருக்கும் அலட்சிய பாவம் மற்றும் இத்தகைய பாத்திர வார்ப்புக்கள் நாவலுக்கு சித்திரக்கதையின் (comics) தோற்றத்தைத்   தருவதால்,  ஒரு கட்டத்தில் 'Catch-22'ஐ விட   'Sad Sack' சித்திரத் தொடர்இந்நாவலுக்கு  நெருக்கமாக உள்ளதோ என  வாசகன் எண்ண  ஆரம்பிக்கிறான்.  

 இது இரு நாவல்களுக்குமிடையே தரம் குறித்த ஒப்பீடு அல்லஅதை இப்படி எளிமைப்படுத்தவும் இயலாது.  ஒரு பிரதியின் தாக்கத்தால் எழுதப்பட்ட மற்றொன்று தன் தனித்தன்மையை  எப்படி தகவமைத்துக் கொண்டு , சில இடங்களின் தன் மூல உந்துதலையே தாண்டிச் செல்கிறதுஅதே நேரம் மூலப் பிரதி எப்படி/ எதனால் தன் முக்கியத்துவத்தை/ தனித்தன்மையை இழக்காமல் உள்ளது  என்பதற்கான உதாரணமாக 'The Good Soldier Švejk'/ 'Catch-22' நாவல்களைப் பார்க்கலாம். 

  'All Quiet on the Western Front'  நாவலின் இறுதியில் பால் இறக்கிறான். 'Catch-22' நாவலின் இறுதியில் யோஸாரியன் தப்பிச் சென்றாலும், அவனுடைய பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வு குறித்த அச்சம் வாசகனுக்கு ஏற்படுகிறது. அதற்கேற்றார் போல் இந்நாவலின் தொடர்ச்சியான 'Closing Time'லும் அவன் போர்க்கால பாதிப்பிலிருந்து முற்றிலும் மீளவில்லை என்று தெரிந்து கொள்கிறோம். 'The Good Soldier Švejk' நாவல் முற்று பெறாவிட்டாலும்,  போரின் இறுதியில்  ஷ்வேக் எந்த பாதிப்பும் இல்லாமல் மீள்வான் என்பது குறித்து வாசகனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்லஅவன் வயது காரணமாக இரண்டாம் உலகப் போரில் அவன் ஈடுபட இயலாது என்று தெரிந்தாலும்ஒரு சூழலில் அதிலும் அவன் ஈடுபட நேர்ந்தால்மீண்டும் அப்போர்க்களத்தை நாடக மேடையாக்கி அதில் தன் கூத்தை அவன் அரங்கேற்றி வெற்றி பெறுவான் என்றே வாசகன் நம்புவான். ஒரு சாதாரணன், அரசு எந்திரத்திற்கு எதிராக - வளைவது போல் நடித்து -  வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும்  ஷ்வேக் Czech இலக்கியத்தின் மிகப் பிரபலமான, அம்மக்களுக்கு நெருக்கமான பாத்திரமாக, அவர்களை பிரதிபலிக்கும் ஒருவனாக இன்றும் கருதப்படுவதில்  எந்த வியப்புமில்லை. இப்புனைவுப் பாத்திரங்கள் ஒரு புறமிருக்கஇன்றும் உலகின் பலப்  போர்க்களங்களின் இப்படி நடைபிணங்களாகவோ , நாகரீகக் கோமாளிகளாகவோ எதிர்வினை புரிந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் நம்  பரிவுக்குரியவர்களே.     

பின்குறிப்பு: 
'The Good Soldier Švejk' நாவலுக்குபல மொழிபெயர்ப்புக்கள் உள்ள நிலையில் 'Cecil Parrot'ன் மொழிபெயர்ப்பு, எந்த சுருக்குதலும் இல்லாத  மூலப் பிரதிக்கு நெருங்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்நாவலை மொழிபெயர்ப்பதில் அவர் சந்தித்த சவால்கள், அதை அவர் எதிர்கொண்ட விதம், தவிர்க்க இயலாத சமரசங்கள், இவற்றைக்  குறித்து அவர் தன் அறிமுகத்தில் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோர் அனைவரும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

நான்கு தொகுதிகளுக்கும் 'Jospeh Lada' வரைந்துள்ள சித்திரங்கள், நாவலின் அடிநாதத்தோடு இயைந்து அதற்கு வலுசேர்க்கின்றன.