Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, May 3, 2016

உள்ளூரில் ஒற்றன் – தேஜூ கோலின் Every Day is for the Thief சிறுகதை தொகுப்பு - Teju Cole

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/24/teju-cole/)
------------
And there, behind it, marched so long a file
Of people, I would never have believed
That death could have undone so many souls.

என்ற 'இன்ஃபெர்னோவின்' (Inferno)   வரிகளை 'Every day is for the thief' கதைசொல்லி ஒரு திருமண நிகழ்வின்போது நினைவு கூர்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின் தன் தாய் நாடான நைஜீரியாவிற்கு திரும்பியிருக்கும் அவர் அணிவகுத்துச் செல்லும் வரிசையில் காண்பது, இறந்தவர்களை மட்டுமல்ல, உயிரோடிருந்தும் அவர் நினைவுகளிலிருந்து விலகியவர்களையும்தான். தன் கடந்த காலத்தினூடாக ஒரு பயணமும், தன் நாட்டின் நிகழ்காலத்தினூடாக இன்னொரு பயணமுமாக அவர் விவரிக்கும் - எந்தத் வெளிப்படையான தொடர்பும் இல்லாத 27 அத்தியாயங்கள் கொண்ட  - இந்தச் சிறு நூல் 'குறுநாவல்' என்று வகைப்படுத்தப்பட்டாலும், நினைவுக் குறிப்புகளாகவும் பார்க்கப்படும் சாத்தியம் உண்டு . இந்த விதத்தில் அசோகமித்திரனின் 'ஒற்றனை' ஒத்திருப்பதோடு, அந்நூல் வாசகனுள் உருவாக்கும் உணர்வையும், எழுப்பும் கேள்வியையும் இங்கும் எழுப்புகிறது. ஒற்றன் எத்தேச்சையாக தோன்றினான் என்று அ.மி சொல்வதற்கு நேர் மாறாக, "I’m very interested in fictional forms that challenge our idea of what fiction is," .... "I think a lot of people will read Every Day Is for the Thief and feel that it’s nonfiction, but that confusion is intentional," என்று இந்நூல் குறித்த ஒரு பேட்டியில் கோல் சொல்கிறார்.

சந்தையில் குழந்தையைத் திருட முயன்றதாகக் கூறி, டயரொன்றினுள் திணிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் கண்முன் எரித்துக் கொல்லப்படும் 11 வயது சிறுவன், திருட வருவதற்கு சில நாட்களுக்கு முன் அவ்வீட்டின் நாய்களை விஷம் வைத்து கொல்பவர்கள் (உண்மையில் அது திருட்டு நிகழப்போவதற்கான சமிக்ஞையாக புரிந்து கொள்ளப்படுவது நகைமுரண்தான்),   தாங்கள் நுழைந்த முதல் வீட்டிலிருந்து ஒருவனை அழைத்துக் கொண்டு, அவன் மூலம் அடுத்த வீட்டிலுள்ளவரை கதவைத் திறக்கச் செய்து அங்கும் கொள்ளையடித்து, பிறகு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு செல்வதும் - அதிகாரத்திற்கு பயந்த காலம் கடந்து போய் சக குடிமகனையே யார் என்ன செய்வார்கள் என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையின் - மிகைப்படுத்தப்பட்ட உண்மையின் கோர புனைவாக தோன்றும் அதே நேரத்தில், உண்மையில் 11 வயது சிறுவன் எந்த தயக்கமும் இல்லாமல் பல பேர் முன இப்படிக் கொல்லப்படக் கூடுமோ என்ற பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.  இத்தகைய ஒரு குழு மனப்பான்மையின் தீர்ப்பை  Lagos நகரை பின்புலமாக வைத்து புனையப்பட்டுள்ள பென் ஒக்ரியின் (Ben Okri)  'Stars of the new Curfew' தொகுப்பில் உள்ள 'When the lights return' கதையிலும் காண முடிகிறது. இரு நூல்களிலும் நைஜீரியாவின் நிகழ்கால அவலத்தை காண முடிகிறது என்றாலும்,   ஒக்ரியின் தொகுப்பைப் போல -கொடுங்கனவுகளால் நிறைக்கப்பட்ட, உண்மையின் சாயல் கொண்ட - புனைவுலகமாக 'Every day is for the thief'யும்  முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 

முதல் பார்வையில், கோபம்/ ஆற்றாமை தவிர்த்த வேறு எந்த உணர்வெழுச்சியும் இல்லாத, அன்றாட நைஜீரிய நாட்களின் துல்லியமான -நூலில் அவர் இணைத்துள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களை ஒத்த - சித்திரத்தை  நூலெங்கும் அவர் அளிப்பதன் மூலம்   புனைவின் சாயலை முடிந்தளவுக்கு குறைப்பது முதல் காரணம். 'ஒற்றனின்' காணக்கூடிய புனைவின் அம்சத்தைவிட இதில் குறைவாகவே பார்க்க முடிகிறது என்றே சொல்லலாம். பேருந்தில் பயணிக்கும் கோல், 'Michael Odjante'ன் நூல் ஒன்றை வாசித்தபடி அதில் ஏறும் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் போனாலும், அந்தப் புள்ளியிலிருந்து, அவள் இப்புத்தகத்தை எங்கு வாங்கி இருக்கக்கூடும், நைஜீரியர்களின் வாசிப்புப் பழக்கங்கள் (அல்லது பழக்கமின்மை) குறித்த சிந்தனைகளுக்குச்  செல்கிறார். தன்னையொத்த ரசனை கொண்ட ஒருவரைக் கண்டவுடன் ஏற்படும் இயல்பான ஆர்வத்தில், அவளிடம் பேசுவதற்கான விஷயங்களை, தன்னுள்ளேயே (monologue) பேசிக்கொள்கிறார்.   3 பக்கங்களில், நிதானமான  நடையை  கொண்ட இந்த அத்தியாயம், ஒரு சந்திப்பைப் பற்றிய அனுபவக் குறிப்பாக வாசிக்கப்படவே அதிகம் வாய்ப்புள்ளது. 

அருங்காட்சியகத்திற்குச் செல்பவர், அது அரிய கலைப்பொருட்களின் சேகரிப்பாக இல்லாமல், ஏனோ தானோ என்று  அரசின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டிருப்பதையும், அதன் நீட்சியாக வேலை செய்பவர்களின் அசிரத்தையையும் பதிவு செய்கிறார்.  அங்கு அவர் கண்டதாக குறிப்பிடும் ஒரு சில விஷயங்கள் புனைவாக, சற்றே மிகைப்படுத்தப்பட்டவையாக - அங்கு வேலை செய்யும் பெண் கோல்லை கண்டு கொள்ளாமல் ஸ்தோத்திர துதியை சொல்லியபடி இருக்கிறார் -  இருக்கக்கூடும், ஆனால் அவர் அத்தியாயம் முழுதும் சுட்டும், எந்த  கலைப்பிரக்ஞையும் இல்லாத ஒரு சூழல், அதற்கு அபுனைவின் தொனியையே தருகிறது. "Why is history uncontested here? There is no sight of the dispute over words, that battle over versions of stories that marks the creative inner life of a society. Where are the contradictory voices?" என்று வேறொரு இடத்தில் கோல் கேள்வி எழுப்புவதை புனைவின் குரலாக அல்லாமல், நிஜத்தின் ஆற்றாமை நிறைந்த குரலாகவே கேட்க முடிகிறது. 

உணர்வுபூர்வமாக அனைத்திலிருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் விலகியே இருக்கும், ஆனால் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் அவதானிப்புக்கள் எனும் தொனி நூலில் விரவி இருப்பதும் அதற்கு  நாட்குறிப்பின் சாயலைத் தருகிறது. விலகியே இருத்தல் என்பதின்  நீட்சியாக, நம்பிக்கையின், ஆசுவாசத்தின் சுவடே இல்லாத எதிர்மறை நோக்கு மட்டுமே இந்நூலில் உள்ளது, முதலாம் உலக நாடுகளில் பல்லாண்டுகள் வசித்து தாய் நாடு திரும்புபவர்களிடம் காணக்கூடிய அதே சலிப்பைத்தான் கோலும் வெளிப்படுத்துகிறார் - அமெரிக்காவில் இருந்து புறப்பட நைஜீரிய தூதரகத்தை அணுகும்போது லஞ்சத்தை எதிர்கொண்டு கோல் துணுக்குறுவதை அமெரிக்காவில் லஞ்சமே இல்லையா என்ற கேள்வியோடு எதிர்கொள்ள முடியும்- என்ற மேலெழுந்தவாரியான விமர்சனம் உருவாகுவதும்  சாத்தியமே.  இந்த விமர்சனம் காத்திரமானதா என்பது ஒருபுறம் இருக்க, வாசகன் மேலோட்டமாக உணரக்கூடிய  இத்தகைய கசப்பும்கூட,- புனைவு அளிக்கக்கூடிய முப்பரிமாணச் சித்திரம், பன்முகப் பார்வைகள் - இவை இல்லாத,  எதிர்மறை அனுபவங்களின் தொகுப்பாகவே நூலை முன்னிறுத்தக் கூடும். 

வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஏதோ ஒரு பிணக்கு/ காயம் காரணமாகவே அவர் நாட்டை நீங்கினார் என்பதைச் சுட்டும் சில இடங்கள் நூலில் உள்ளன என்பதால்  அவர் வெளியாளாக அனைத்தையும் கவனிப்பது போல் வாசகனுக்குத் தோன்றுவது கோலின் மனநிலை சார்ந்து  இயல்பான ஒன்றே.  அதே போல் "The house of course is unchanged. Memory and the intervening years many of which I have spent in cramped English flats and American apartments, limitations I have endured like a prince in exile.  Now, in the cool interior of this great  house in Africa, proper size is restored."  போன்ற வரிகளில் உள்ள வலியையும், அவர் தன்னெஞ்சிலிருந்து நைஜீரியாவை முற்றிலும் அகற்றவில்லை, அகற்றவும் முடியாது என்பதையும் உணர முடியும். 


நூலின் அபுனைவு தோற்றத்திற்கு அங்கங்கு இணைக்கப்பட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களும் வலு சேர்க்கின்றன. இந்தப்

புகைப்படத்தில் இருப்பவர் தான்  'Michael Odjante'ஐ படித்துக்கொண்டிருந்தவராகவோ, கலங்கிய


இந்தப் புகைப்படம், புகைமூட்டமாக உள்ள கோலின்  கடந்த காலத்தையும், துலக்கமாக விளங்கிக்கொள்ள முடியாத நைஜீரியாவின் நிகழ் காலத்தையும் சுட்டுவதாகவும்  இருக்கலாம். அவ்வப்போது இடையிடும் இத்தகைய புகைப்படங்களை உணர/ புரிந்து கொள்வதற்காக, வாசிப்பை சில கணங்கள்   நிறுத்தி விடுகிறோம். கோல் சொல்வது போல் 'புனைவு' என்றால் என்ன என்பது குறித்த நம் கருத்தாக்கங்களுக்கு சவால் விடுபவையாக இவை உள்ளன.  

புகைப்பட உத்தியில் மட்டுமின்றி,  திடீர் பயணம், அதனூடான அனுபவங்கள், அதன் விளைவான  சுயபரிசோதனை செய்யும்  தன்னுரைகள் (introspective monologue) போன்றவற்றால் உருவாகும்,  புனைவா/அபுனைவா என பிரித்தறிய இயலாத நூலின் இறுதி வடிவம், என கோலின் எழுத்தின் கட்டமைப்பிலும், நடையிலும்   சீபால்ட்டின்  (Sebald) தாக்கத்தை காண முடிகிறது, சீபால்ட் தன்னை பாதித்தவர்களில் ஒருவர் என்று கோலும் சொல்கிறார்.  குறிப்பாக கோலின் முதல் நூலான 'Open City'ல் இந்த தாக்கத்தை இன்னும் அதிகமாக உணர முடிகிறது. கோலின் எழுத்தே சீபால்ட்டின் தழுவல் எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.  இந்தக் கட்டுரை இந்நூலின் வகைமை குறித்த சாத்தியக்கூறுகளையே மையமாகக் கொண்டுள்ளதால் இந்நூல் பற்றிய விரிவான பார்வையையும் (உண்மையில் அவர் நூல் முழுதும் எதிர்மறை உணர்வோடு , கசப்பை சுமந்தலைபவரா, நூல் ஒற்றைத்தன்மை கொண்டதா  போன்ற கேள்விகள்), சீபால்ட்/ கோல் இடையேயான  ஒப்புமை/ வேற்றுமையையும்  பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.  



மனச் சோர்வடையச் செய்யும் பெரும்பாலான அனுபவங்களுக்கிடையில்,  இசை/நாடகத்திற்காக இயங்கும் ஒரு தனியார் சங்கம்(பணக்காரர்களே  சேரக்கூடியதாக அச்சங்கம் இருப்பதில் உள்ள முரணை கோல் உணர்ந்தாலும், இப்படியேனும் கலைக்கு வடிகாலாக ஒரு இடமாவது உள்ளதே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார்), இசைத்தட்டுக்களை நேரடியாக விற்பனை செய்யாமல் அவற்றை பிரதி எடுத்து விற்கும் கடைக்கு மாற்றாக,  சட்டபூர்வமாக இசைத்தட்டுக்களை, இலக்கிய நூல்களை  விற்பனை செய்யும்,  இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும்  கடை போன்ற ஒரு சில விஷயங்களைப் பார்க்கும் போது "The most convincing signs of life  I see in Nigeria connected to the practice of the arts" என்று நூலின் ஒரு அத்தியாயத்தில் கோல் உணர்கிறார்.  அதையே இறுதியில் இந்த நூல் குறித்து நாமும் உணர முடிகிறது.  எரிமலையென கொதித்துருகிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புறச் சித்திரத்தோடு, எரிகுழம்பென அனைத்தையும் எரித்துக்கொண்டிருக்கும் சமூக பொருளாதாரச் சூழலுடனேயான  பயணங்களின் மூலம் உருவாகும் அகச் சித்திரத்தையும் உயிர்ப்புடன் தீட்டியுள்ள கோலின் கலை புனைவா/அபுனைவா என்ற கேள்வியை ஒரு கட்டத்தில் தேவையற்றதாக்கி (moot point)  விடுவதோடு,  புத்தாயிரத்தின் புதுக்குரல்களில் குறிப்பிடத்தக்கவராக அவரை முன்னிறுத்துகிறது. 

Monday, April 25, 2016

புனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/17/ashokamitran-3/)
---------------
நான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்!’ பிறந்தான்.
– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)
கல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.
அ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்? கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.
அதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.
கதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார்? இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.
‘காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க  பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.
ஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.