Monday, March 14, 2016

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2016/03/06/asokamitran-2/
----------
அலுவலங்களில் வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்கும் அன்றாட மாலைப் பொழுதில் அசோகமித்திரனின் 'இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்' சிறுகதை ஆரம்பிக்கிறது. சிக்னல் விழும்போது "... ஏதாவது ஒரு வரிசை வெறி பிடித்தது போலச் சீறி விரையும். " என்று எழுதியிருந்தால் வழக்கமான விவரிப்பாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு "பிரமாண்டமான பஸ்களிலிருந்து சாத்வீகமாகத் தோற்றமளிக்கும் சைக்கிள்கள்வரை  அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின. " என்ற பின்னிணைப்புப் போன்ற வரியை கோர்க்கும்போது - உண்மையில் அனைத்து வாகனங்களும் ஒரே வேகத்தில் செல்வதில்லை எனபதை "...அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின." என்று  வாகனங்களில் குடிகொள்ளும் வெறி வெளிப்படுவதில் உள்ள வேறுபாட்டை - அந்த விவரிப்பு நுட்பம் கொள்கிறது . இத்தகைய சிக்கனமான சித்தரிப்புக்கள் பரபரப்பான அந்தியை உயிர் கொள்ளச் செய்கின்றன.

இந்த பரபரப்பின் ஒரு கண்ணியான சகுந்தலா அலுவலகம் விட்டு வருகிறாள். பேருந்து நிறுத்தம் வரும் அவள் ராஜரத்தினம் அங்கில்லை என்று ஆசுவாசப்படும்  போது அவள் மனமும் ஏதோ பரபரப்பு கொண்டுள்ளது என்பது புரிகிறது. ராஜரத்தினம் அவளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்பவன் ஒன்றும் இல்லை. அவனும் சகுந்தலாவும் காதலர்கள். அப்போது அவனும் அங்கு வர ஒரு 'பொறி' மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஹோட்டலுக்கு சென்று உரையாடுகிறார்கள்.   ராஜரத்தினம் தாங்கள் மணம் புரிவது குறித்து சகுந்தலா தன் வீட்டில் சொல்லிவிட்டாளா எனக் கேட்க, சகுந்தலா உடனே பதில் சொல்வதில்லை.  சகுந்தலாவின் அக்காவிற்கு திருமணமாகாத நிலையில் தன்னால் வீட்டில் இது குறித்து பேச முடியாத சூழலை சகுந்தலா சொல்கிறாள்.  இது இவர்களுக்கிடையே ஏற்கனவே நடந்துள்ள, அடிக்கடி நடக்கும் உரையாடலின் நீட்சி தான் என்று நமக்குப் புரிகிறது. சினம் கொள்ளும் ராஜரத்தினம் அடுத்த திங்களன்று முடிவாகச் சொல்ல வேண்டுமென்று கடுமையாச் சொல்லிவிட்டுச் செல்கிறான்.  ஏன் முதலில் ராஜரத்தினம் இல்லாததால் சகுந்தலா ஆசுவாசமடைந்து பின்பு அவனைக் கண்டு 'பொறி' மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பது இப்போது புரிகிறது. 

சகுந்தலா வீட்டிருக்குச் செல்கிறாள். மீண்டும் பின்மாலை/ முன்னிரவு நேரச் சித்தரிப்புகள், அதனூடே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்து கொள்கிறோம்.  30 வயதாகும் சகுந்தலாவின் அக்கா எஸ்.எஸ்.எல்.சியை  தாண்டாதவள்,  வீட்டின் அனைத்து வேலைகளையும் அவள் தான் பார்த்துக்கொள்கிறாள், அவள் ஏற்று நடத்தாத வீட்டுப் பொறுப்பே கிடையாது . ஆனால் வேலைக்குச் செல்லாத, அதே நேரம் அதை ஈடு செய்யக் கூடிய பெரிய வசதிகள் இல்லாத குடும்பத்துப்  பெண்ணை மணம் புரிய யாரும் இல்லை. இது அக்காவிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை   "இப்போதும் அவள் குளித்து விட்டு வந்தவுடனே அழகாக இருப்பது போலத்தான்  தெரியும். ஆனால் ஐந்து பத்து நிமிடங்களுக்குள் முகத்தைக் களையிழக்கச் செய்யும் சோர்வும் சலிப்பும் மெல்லிய கோடுகளாகவும் சுருக்கங்களாகவும் வந்து விடும்  " என்று அ.மி  விவரிக்கிறார். இங்கு சோர்வும், சலிப்பும் வயது அதிகமாவதால் மட்டுமல்ல அல்ல, ஒரே விதமாக முடியும் தொடர் பெண் பார்க்கும் படலங்கள் உருவாக்குபவை என்று உணர முடிகிறது. 

 வீட்டிற்கு வரும் சகுந்தலாவிடம்  அவள் அக்கா படுத்திருப்பதாக தலைவலி என அவள் தாய் சொல்கிறார். அவள் மூக்குக்கண்ணாடி அணிய நேரக்கூடும், அதுவும் வரன் தகைய தடையாக இருக்கக்கூடும் என  என சகுந்தலா எண்ணுகிறாள்.  

இப்போது அ.மியின் கதைசொல்லலில் வாசகன் நேரடியாக ஒரு முறை கூடப் பார்க்காத, வீட்டில் மட்டுமல்ல கதையிலும்  ஒரு ஓரத்தில் இருக்கும்  சகுந்தலாவின்  அக்கா அவன் மனதில்  விஸ்வரூபமெடுக்கிறார். சகுந்தலாவின் காதலுக்கு இணையாக -அவள் இன்னும் எத்தனை நாள் அக்காவிற்காக தன் திருமணத்தை தள்ளிப்போடுவாள் -  அவள் அக்காவின் எதிர்கால வாழ்கை குறித்தும் அவன் கவலை கொள்ள ஆரம்பிக்கிறான்.  இதற்கடுத்து வாசகனின் கவனம்  இருவரின் பெற்றோர் மீதும்  திருப்புகிறது. தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்விக்க முடியாதது குறித்த குற்றவுணர்வுடன் அவர்கள் குமைந்து கொண்டிருக்கக்கூடும். . அவர்கள்   சகுந்தலாவின் 
அக்காவை மணம் முடிக்க அதிக முயற்சிகள் எடுக்கவில்லையா, அல்லது அவர்களின் இயலாமையே ஒரு தடையாக இருக்கிறதா  என்பதை வாசகனின் யூகத்திற்கே அ.மி விட்டுவிடுகிறார். 

"இன்று ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும்" என்று நினைத்துக் கொண்டே சகுந்தலா படுக்கும் போது கதை முடிய, அந்த நினைப்பில் உள்ள நம்பிக்கையின்மையை அவள் மட்டுமல்ல வாசகனும் உணர முடிகிறது. சகுந்தலா மட்டுமல்ல, அவள் அக்கா, பெற்றோர் மற்றும்  ராஜரத்தினம் அனைவருக்கும் - இதையே விழையும் நகரின் எண்ணற்ற மனிதர்கள் போல் - அன்றிரவு உறக்கம் அரிதான ஒன்றாகத் தான் இருக்கும். 

தினமும் நாம் பங்குபெறும் காட்சியில் - சகுந்தலாவும் ராஜரத்தினமும் தாங்கள் சந்திக்கும் முதல் நிமிடத்தில் 'என்ன என்ன' என்று பரஸ்பர கேள்விகள்  முடியும் முன் பேருந்து வந்து விட ராஜரத்தினம் இடம் பிடிக்க ஓடும் வழக்கமான நிகழ்வு போன்ற -

 ஆரம்பித்து, அதில் அரை கணத்திற்கு மேல் கவனம் கொள்ளாமல் நாம் கடந்து செல்லும் எண்ணற்ற - பலதரப்பட்ட இக்கட்டில் இருக்கும் - முகங்களில் ஒன்றின் பிரச்சனையாக விரிந்து, அதனூடாக ஒரு குடும்பத்தின்  சித்திரத்தை உருவாக்கும், மூன்று இழைகள் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ள  இக்கதை எளியவர்களின் அன்றாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அ.மியின் இன்னொரு கவனத்திற்குரிய படைப்பு. 

Monday, March 7, 2016

இரு திருமணங்கள் -அசோகமித்திரனின் 'கல்யாணம் முடிந்தவுடன்' மற்றும் 'போட்டோ' கதைகள்

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2016/02/21/asokamithran/
-------
 'சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் சம்பிரமமாக நடத்தும் கல்யாணம்' சசிகலாவுக்கும்,  கிருஷ்ணமூர்த்திக்கும்  இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது ('கல்யாணம் முடிந்தவுடன்') . காதல் திருமணம்தான் என்றாலும் சசிகலாவின் மனதில் அன்று காலை முதலே ஏனோ பல சஞ்சலங்கள். நாள் முழுதும்- பலர் காலில் விழுந்து கொண்டே  இருப்பது,  பந்தியில் சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதில் மற்றவர் எச்சிலை சாப்பிடுவது போன்ற தொடர் சடங்குகள்  அவள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம். 

ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு இதில் எந்த எரிச்சலும், கூச்சமும் இருப்பது போல் தெரியவில்லை, அவன் அனைத்து நிகழ்வுகளிலும் உற்சாகமாக பங்கேற்கிறான். அதுவும்கூட அவளுக்கு சிறிது  எரிச்சலாக இருக்கின்றது. ஆனால்  சசிகலாவின் மனநிலை அவள் பார்வை கோணத்தின் மாற்றமே என அசோகமித்திரன் சுட்டுகிறார், அதை அவளும் அறிந்தே இருக்கிறாள்.  சசியே சொல்வது போல கிருஷ்ணமூர்த்தி எப்போதும் இருப்பது போல்தான் அன்றும் இருக்கின்றான். அவளை எப்போதும் போல் கிள்ளுகிறான். ஆனால் அவளுக்குத்தான் அவன் செய்கை அன்று மட்டும் ஏனோ குறுகச் செய்கிறது.   அவனிடம் பிடித்திருந்த அதே குணங்கள்/ செய்கைகள்  இன்று விகாரமானவையாக அவளுக்குத் தோன்றுகின்றன.  மாலை நேர வரவேற்பின்போது மூர்த்தி ஏதோ சொல்ல அதற்கு சசி பதில் கூற, மூர்த்தி தன் நண்பனிடம் 'சாரி சொன்னது போல் இவ கொஞ்சம் சிடுமூஞ்சிதான்டா' . தன்னைப் பற்றி மூன்றாவது மனிதனிடம் இவன் பேசி இருக்கின்றான் என்று அவள் உச்சகட்ட எரிச்சலும் கோபமும் அடைகிறாள். இறுதியாக கடைசி கட்ட சடங்கிற்கு அவளை அவள் அம்மா அழைக்கும்போது உடைந்து அழத் தொடங்குகிறாள். அத்துடன் இந்த கதை முடிகிறது.

அசோகமித்ரனின் உரைநடை நுட்பங்களை இந்தக் கதையிலும் பார்க்க முடிகிறது. 
 சசியின்  தங்கை, தன் அத்தையிடம், கிரிஷ்ணமூர்த்தியுடன் எப்படி பேசுவது,  '..அவர் இப்பத்தானே அத்திம்பேராயிருக்கார்', என்று சொல்ல, அத்தை 'என்னடீது, இப்பத்தான் அத்திம்பேர், நேத்திக்கு அத்திம்பேர்னு..' என்று சொல்கிறார். அன்றாட இயல்பான சம்பாஷனைதான் என்றாலும் இதை அவதானித்து சரியான இடத்தில் புகுத்துவதில் அ.மி.யின் இயல்பான அங்கதம் மட்டுமல்ல  'என்னடி இது' என்று எழுதி இருக்கக்கூடியதை 'என்னடீது' என்று சொல்வதாக அமைத்திருப்பதில் , பேச்சு வழக்கில் உருவாகும் ஒலியின் - என்னடீது என்பதில் உள்ள நெடில் ஒலியும் கவனிக்கத்தக்கது -  நுண்சித்திரமும் தெரிகிறது.  சசி கிருஷ்ணமூர்த்தியை நலங்குக்கு அழைக்கச் செல்லும்போது  மூர்த்தியின் சகோதரி , அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து  'கூப்பிடறதே நன்னாயில்லையே' என்கிறாள். அவ்வளவுதான்.  அவள் ஒன்றும் கடுமையாக சொல்வது போல் தெரியவில்லை, மூர்த்தி சசியுடன் கிளம்புவதும்   பெரிய விஷயமாவதில்லை. ‘மனைவி பின்னால் ஓடுகிறாயே,’ என இன்னொரு சகோதரி கிண்டல் செய்து சிரிக்க , அதில் முதலில் பேசியவளும் சேர்ந்து கொள்கிறாள்.  இருந்தாலும் ஏற்கனவே பல சஞ்சலங்களில் சிக்கியுள்ள சசிக்கு, தான் புகப் போகும் வீட்டில்/ உறவுகளில்  ஏற்படக்கூடிய சின்ன சின்ன உரசல்களின் ஆரம்பமாக, முதல் சுருக்கம் விழும் இடமாக இது   அக்கணத்தில் தோன்றியிருக்கலாம். அத்தகைய நொய்மையான தருணம் இது.

வாழ்க்கையின் முக்கியமான நாட்களில் ஒன்றான திருமண தினம், அதுவும் காதல் திருமணம்  ஏன் சசிக்கு இப்படி முடிந்தது? இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியா? இல்லை என்று அவளே உணர்கிறாள். சடங்குகள்கூட முழு காரணமாக இருந்திருக்காது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணை மணக்கிறான், அதுவும் அவன் காதலித்தவள், எனவே அவன் வெற்றிக் களிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சசியோ ஒரு குடும்பத்துடன் புதிய உறவை இன்று ஆரம்பிக்கிறாள். அதுவும் காதல் திருமணம் எனும்போது , அதை இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று வாசகனுக்கு தெரியவில்லை என்பதால், திருமணத்திற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன், இரு குடும்பங்களுக்கிடையே   நடந்திருக்கக்கூடிய வாக்குவாதங்கள்,  பரிமாறிக் கொண்டிருக்கக் கூடிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள்  வாசகன் நினைக்கக்கூடும். அப்படி நிகழ்ந்திருந்தால்,  புது உலகத்திற்குள் பயணப்பட இருக்கும் சசிக்கே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய சவால் உள்ளது. அந்த பதட்டமே அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.  இவை எதுவுமே கூட காரணமாக இல்லாமல், ஒரு முக்கியமான, மிகவும் எதிர்பார்த்த  விஷயம், எண்ணியபடியே நடந்தாலும், அது நடந்தவுடன் சூழும் -இதற்காகவா இந்தப் பாடு, பிடிவாதம், ஏன் இதைச் செய்தோம்-  என்ற வெறுமைகூட சசியின் திருமண நாளின் இனிமையை குலைத்திருக்கலாம். 

காதல் திருமண நிகழ்வு இப்படி இருக்க, 'போட்டோ' கதையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமண நிகழ்வில், மணமகன்/ மணப்பெண் இருவரும்  எந்தத் தயக்கமும் இல்லாமல்  இயல்பாகவே இருக்கிறார்கள். மணமகனின் தோழர்கள் தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட, மணமகள் எளிதில் சம்மதிக்கிறாள். ("சற்று முன்தான் உடமையாகிவிட்டவனின் முதல் கோரிக்கையை மறுக்க அவளுக்கு மனமில்லை" - இதில் உடமையாகிவிட்டவனின் என்பதில் ஏதேனும் நுட்பத்தை அ.மி வைத்துள்ளாரா என்பதை வாசகன் தான் முடிவு செய்ய வேண்டும்). கதையின் முதல் பகுதி, அவர்கள் புகைப்படம் எடுக்க தயாராவதில் செல்கிறது. மணப்பெண் உடை மாற்றி வர, அப்போது தான் தங்கள் தோற்றத்தைப் பற்றிய உணர்வு வந்து அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்வது, தலைமுடியை கோதி விட்டுக் கொள்வது என தோற்றத்தை மேம்படுத்த முயல்வதை அ.மி சுட்டுகிறார். ஒரு நிகழ்வை அதன் பின்னுள்ள உணர்வுகளோடு துல்லியமாக விவரிக்க இத்தகைய நுண்ணிய செயல்களையும் குறிப்பிடுவது உதவும் அல்லவா?. 

தாமு என்ற நண்பனின் நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்க நினைக்கிறார்கள். அப்புகைப்படத்தில் தாமுவும் இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும், அதை எப்படி செயலாக்குவது என தெரியாமல் இருக்க,  மணமகள் தங்கள் திருமணத்தில் புகைப்படம் எடுத்தவரையே இதையும் எடுக்கச் சொல்லலாம் என்கிறாள். மனைவியின் முதல் யோசனைக்கு செயலிழந்து நிற்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்ற மணமகனும் அவரை புகைப்படம் எடுக்க அழைக்கிறான். மணமகள் சுவாதீனமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கிறாள். அதே நேரம், ".. தன் கணவனின் நண்பர்கள் முன்னால் தான் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டு விட்டோம் என்று தோன்றியிருக்கும்"   என்று ஏன் அ.மி சொல்லவேண்டும்?. அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு  உள்ள வேறுபாட்டை, அதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றே, வேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த - பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால், அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா?. புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி  நிற்கும் போது,  மணமகளின் மறுபக்கம் இருப்பவன்  மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்படவேண்டியது (அது இயல்பான செயலே), அதை ஏன் அ.மி  குறிப்பிட வேண்டும்?. 'போட்டோ' என்று பெயரிடப்பட்டுள்ள கதையில்  நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவா? அந்தத் துல்லியத்தை இத்தகைய நுண்ணிய சித்தரிப்புக்கள் சாத்தியமாக்குகின்றன.

ஆனால் இந்தக் கதை, புதுமணத் தம்பதியரைப் பற்றியது அல்ல என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது புரிய வருகிறது. புகைப்படக் கலைஞர் தாமுவின் நிழற்படக் கருவியைக் கொண்டு புகைப்படமெடுக்க முயல, தாமு அவர் அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சாதாரண விஷயம்தான், ஆனால் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுகிறது.   புகைப்படக் கலைஞரின் அகம் சீண்டப்பட்டுவிட்டது என்பதை உணரும் தாமு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசினாலும், அச்சூழலில் சூழலில் அதுவரை இல்லாத இயல்பற்ற (awkward) நிலை  உருவாகி விடுவதை  உணர முடிகிறது. வெளிப்படையாகத் தெரிய வரும் பகையைக்   கூட எதிர் கொண்டோ அல்லது சமரசமோ செய்து விடலாம்.  ஆனால் மனக்கோணலின் முதல் கட்டத்தை, அதுவும் ஒரு குழுவாக இருக்கும்போது, இருவருக்கிடையே திடீரென்று  உருவாகும் சங்கட நிலையை,  எதிர்கொள்வதோ, கண்டுகொள்ளாதது போல் கடந்து செல்வதோ எளிதான ஒன்றல்ல. இதை அ.மி வெளிப்படையாகச் சொல்லாமல், தாமு சாதாரணமாகப் பேசியபின் புகைப்பட கலைஞர் மனம் கோணுவதை உணர்ந்தவன் போல் அவர் அருகில் செல்வது, புகைப்பட கலைஞர் நிழற்படக் கருவியை தாமுவிடம் திருப்பிக் கொடுப்பது , அவன் அவருடையக் நிழற்படக் கருவியை (தன்னுடையதுடன் ஒப்பிடுகையில்) உயர்த்திச் சொல்லி அவரை சகஜமாக்க முயல்வது, அவர் சிரிக்காமல் மீண்டும் நிழற்படக் கருவியை வாங்கிக்கொள்வது  என சில செயல்களின் மூலமாகவே புறச்சூழலில் மட்டுமல்ல பாத்திரங்களின் அகத்திலும் - நாம் உணராமலேயே மாறும் காற்றின் போக்கைப்  போல் -  ஏற்பட்டுள்ள இயல்பற்றத் தன்மையை வாசகனுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார். தாமுவின் நிழற்படக் கருவியில் அனைவர் முகத்திலும் நிழல் விழ, இறுதியில் புகைப்பட கலைஞரின் கருவியில் புகைப்படம் எடுப்பதாக முடிவு  செய்யப்படுகிறது. அதற்கான படச் சுருள் வாங்கி வருவதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது. இறுதியில் படம் எடுக்கப்பட்டு அனைவரும் பொம்மை போல் அதில் தெரிய, கதை முடிகிறது. இங்கு ஏன் முகம் பொம்மை போல் தெரிவதாக சொல்லப்படவேண்டும். புகைப்படக் கலைஞர் சரியாகப் படமெடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கக் கூடும். ஆனால் மிகச் சாதாரண நிகழ்வான புகைப்படம் எடுத்தல் யாரும் எதிர்பாராத விதமாக தர்மசங்கடமான சூழலை உருவாக்க, புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் முற்றிலும் அழிந்து  அந்தச் சூழலை கடந்து சென்றால் போதும் என்றே அனைவரும் விரும்பியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரின் அகத்திலும் இருந்த இறுக்கம் நிழற்படத்திலும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை. 

சசியின் திருமண நாளின் நினைவுகள் மாறா வடுவாக உருவெடுக்கலாம் என்றாலும், குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராமல், திருமண தினத்தன்று தான் அடைந்திருந்த மனநிலையை அவள் மறந்து விடவே சாத்தியங்கள் அதிகம். எப்போதேனும் அந்நாள் நினைவிற்கு வந்தால், தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்தும் , தன் தேவையற்ற அச்சத்தைக்  குறித்தும், தன்னையே எள்ளி நகையாடி அந்நாளை அவள் கடந்து செல்வாள். அதே போல் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் புதுமணத் தம்பதியர் நினைவிலிருந்து விரைவில் நீங்கலாம். ஆனால் அப்புகைப்படத்தில் தன் நிழற்படக் கருவியை அணைத்தப்படி இருக்கும் தாமுவிற்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சூழலின் மகிழ்சியற்றத் தன்மை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.   முதல் பார்வைக்கு வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே தோற்றமளிக்கும் இந்த இரண்டு  கதைகளிலும் கூட வாசகன் பெற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்களை அசோகமித்திரன் பொதித்துள்ளார்.