Tuesday, December 13, 2011

வா.மு. கோமு

வா.மு. கோமுவின் மண் பூதம் தொடங்கி கிட்டத்தட்ட அவருடைய அனைத்து புத்தகங்களையும் படித்திருக்கின்றேன். இப்போது ஒட்டுமொத்தமாக அவற்றை மறுவாசிப்பு செய்தேன். அவரைப்பற்றிய பொது பார்வையாக வைக்க படுவது அவருடைய மன தடைகளற்ற மொழி, குறிப்பாக பாலியல் குறித்து. இது உண்மை என்றாலும் அது மட்டுமே அவர் கிடையாது. அவர் புத்தகங்களில் உள்ள இன்னும் சில பரிமாணங்கள் இவ்வகையான பிம்ப கட்டமைப்பால் அடிபட்டு விடுகின்றன. 'மண் பூதம்', 'அழுகாச்சி வருதுங் சாமி' புத்தகங்களில் கதை கருக்கள் முற்றிலும் வேறானவை. 'கள்ளி' நாவலுக்கு பிறகு தான் இந்த பாலியல் குறித்த பிம்பம் அவர் மேல் விழுந்தது. அது கூட மிகை பிம்பங்கள் தான் உள்ளன. பாலியல் பற்றி முன்னரே கூட பலர் எழுதி உள்ளனர். தவிரவும் பாலியல் வர்ணனைகள் என்று அவருடைய ஆக்கங்களில் இருப்பதை விட அதை பற்றிய உரையாடல்கள், குறிப்பாக அவற்றை பற்றி பெண்கள் பேசும் பேசுக்கள் தான் அதிகம் உள்ளன. அவை எந்த வித தடைகளில்லாமல், மிக இயல்பாக உள்ளது தான் அவரை தனித்து காட்டுகின்றது. அவர் கதைகளில் வரும் பெண்கள் மிக மிக சுவாரஸ்யமானவர்கள். தங்கள் உடல் பற்றி, தேவைகள் பற்றி கூச்சம் கொள்ளாமல் அதை கொண்டாட்டமாக எண்ணுபவர்கள். பல ஆண்களை ஒரே நேரத்தில் பின்னால் அலைய வைப்பவர்கள், அதே நேரத்தில் அந்த ஆண்கள் மீது possessiveஆகா இருப்பவர்கள். இப்படி அவர்கள் ஒரு புதிர் தான், கதையில் வரும் பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் நமக்கும் தாம்.

கொங்கு வட்டாரத்தில் உள்ள சாதி வன்கொடுமைகள் பற்றிய குறிப்புகள் நுட்பமாக அவர் கதைகளில் உள்ளது. கொங்கு பகுதியை சேர்ந்த பெருமாள் முருகன் படைப்புகளிலும் இதை காணலாம் என்றாலும் கோமு சற்று வேறு படுகின்றார். பெருமாள் முருகனின் கதைகளில், சாதிய கொடுமை மூஞ்சியில் அறைகின்றார் போல் வரும்.  கோமுவின் கதை மாந்தர்கள் (மாதாரிகள்) ஒரே அடியாக எதிர்ப்பதும் இல்லை, கொடுமைகளை அப்படியே ஏற்றுகொள்வதும் இல்லை.  அவர்கள் குசும்பும், லொள்ளும் மிக்கவர்கள், நேரம் கிடைக்கும் போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தங்கள் எதிர்ப்பை/இருப்பை பதிவு செய்பவர்கள். இருக்கும் வட்டத்தை மீறாமல்/மீறமுடியாமல் அதற்குள்ளேயே முடிந்ததை செய்பவர்கள். (ஒரு கதையில் மாதாரி, கவுண்டர் செய்த கொடுமைக்கு எதிர்வினையாக, அவர் கிணற்றில் குளித்து, மூத்திரம் பெய்து, தோப்பில் மலம் கழித்து, தன எதிர்ப்பை காட்டுகிறார்). இந்த வகையில், கோமு-சோ.தர்மன் படைப்புக்கள் ஒரு வகைமையாகவும் (குசும்பு, நக்கல்), பெருமாள் முருகன்-இமையம் படைப்புக்கள்(இறுக்கமான கதை சொல்லல்) இன்னொரு வகைமையாகவும், காண முடியும். ஒரே களம், நான்கு எழுத்தாளர்கள், இரு வேறு கதை சொல்லல் முறைகள்.

'Political Correctness' துளி கூட கோமுவின் படைப்புகளில் கிடையாது. தனக்கு தோன்றுவதை சொல்வதில் எந்த கூச்சமும், பாசாங்கும் அவரிடம் இல்லை. இசங்கள், எழுத்தாளர்கள் என அவர் பகடி செய்பவை பல. ராணி, தேவி, ராணி காமிக்ஸ் தனக்கு பிடிக்கும் என்று எந்த வித பாவனையும் இல்லாமல் சொல்ல துணிவு வேண்டும். பீடத்தில் இருக்கும் இலக்கியத்தை கீழே இறக்கும் தேவையான செயல் இது. சிறு டவுன்களில் நடக்கும் மாற்றம் நுட்பமாக பல கதைகளில் உள்ளன, குறிப்பாக அலைபேசி வந்த பிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.

இவை ஒரு புறம் இருந்தாலும், இரு முனையிலும் கூரான கத்தி போல், அவருடைய பலங்களே சில சமயம் எதிர்மறையாக செயல்படுகின்றன, குறிப்பாக அவருடைய சமீபத்திய ஆக்கங்களில் இதை காண முடிகின்றது. 'சந்தாமணியும் பிற கதை கதைகளும்' எடுத்துக்கொள்வோம். இதில் முதல் பகுதி 'பழனிச்சாமி' பள்ளியில்,  காதல் வயப்பட்டு, அதில் தோல்வி அடைவதோடு முடிகிறது. இதில் அந்த வயதில் ஏற்பதும் உடற் கவர்ச்சியைவிட, அவனுடைய 'உணர்ச்சி குவியலான' மனநிலை தான் முன்னிறுத்தப்படுகின்றது. இரண்டாம் பகுதி இதற்கு நேர்மாறாக, அவன் 'total emotional detachment', என்ற நிலையில் இருக்கின்றான், உடல் தான் பிரதானம் என்று கதை மாறுகின்றது. இந்த 'contrast' மிக முக்கியம், ஆனால் அது எப்படி சொல்லப்படுகின்றது? பெண்கள், பெண்கள், மேலும் பெண்கள் தான் இந்த பகுதியில்.  பழனிச்சாமியோடு உடல்கள் பற்றி, உறவு பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். ஒழுக்கவியல் பார்வையிலோ, பெண்ணிய பார்வையிலோ இல்லாமல், சாதாரண வாசகன் என்ற நிலையில் இருந்து படித்தாலும் இந்த பகுதி முழுக்க சதை பிண்டங்களால் இறைந்து கிடக்கின்றது போல் தோன்றும். பெண்கள் இப்படி எல்லாம் பேசுவார்களா என்றெல்லாம் கேட்கவில்லை, இப்படி இந்த பகுதி முழுக்க ஒரே வகை எழுத்து விரவி கிடக்க எந்த முகாந்திரமும் இல்லை. பக்கங்களை நிரப்பும் செயலாக தான் இருக்கின்றது.  தன்னுடைய புத்தகங்களில் பாலியல் சார்ந்த விவரிப்புக்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்பார்கள், அந்த எதிர்பார்ப்பைவிட அதிகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது போல் உள்ளது. Victim of his own image. சலிப்பை விட ஒவ்வாமையை தான் இது ஏற்படுத்துகின்றது.

அதே போல் பகடி ஒரு சில இடங்களில், தனி மனித தாக்குதலாக மாறுகிறது. 'நாவலல்ல கொண்டாட்டம்' புத்தகத்தில் உள்ள 'பெண் கவிஞர்கள்' பற்றிய அத்தியாயம் ஒரு சான்று. பல பெண் கவிஞர்களின் கலவையாக ஒரு பாத்திரத்தை உருவாக்கி, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த விமர்சனங்கள் தேவையில்லாதவை. They are in bad taste. இன்னும் சில கதைகளில் போகிற போக்கில் பெண் கவிஞர்கள் பற்றி சில தாக்குதல் இருக்கின்றன. பாலியல் தொழிலாளி ஒருவர் அதை விரும்பி செய்வதாக ஒரு கதையில் உள்ளது. ஜமீலாவின் புத்தகம் படித்து அதை வேறு மாதிரி சொல்ல முயன்றதாக கோமு குறிப்பிடுகின்றார். More than being politically incorrect, such writing ends up leaving a bad after taste.  ஒரு தனித்த   எழுத்து முறை வசப்பட்ட பின் அதையே திரும்ப திரும்ப சொல்வது is working it to death. குறிப்பாக 'நாவலல்ல கொண்டாட்டம்'. கோமு தனது தனிப்பட்ட பாணி என்ற நிலையிலிருந்து, தன்னுடைய பழைய ஆக்கங்களை , பிரதிபலிக்கும்/நகலெடுப்பது என்ற நிலை நோக்கி செல்கிறார் அவருடைய சமீபத்திய  ஆக்கங்களில்.

கோமு கண்டிப்பாக படிக்க வேண்டிய எழுத்தாளர். இதுவரை வரை அவரை படிக்காதவர்களுக்கு என்னுடைய பரிந்துரை 'கள்ளி', 'மண் பூதம்', 'அழுகாச்சி வருதுங் சாமி', 'ஒரு பிற்பகல் மரணம்'.

No comments:

Post a Comment