Saturday, August 6, 2011

உடையார் - தேடி வந்த இம்சை


நான் பாலகுமாரன் எழுத்துக்கள் மிக குறைவாகவே படித்துள்ளேன். பத்திரிக்கைகளில் வந்த சில தொடர்கள்/கட்டுரைகள் தான். அவர் எழுத்தில் ஆர்வமிருக்கவில்லை. அவரை பற்றி நேர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், ஒரு பக்கம் அவரை மிகவும் போற்றுபவர்களும் இருப்பதை பார்த்துள்ளேன்/படித்துள்ளேன். அவர் என் வாழ்கை நெறிப்படுத்தினார், அவர் அறிவுரை எழுத்துக்கள் என்னை மாற்றின என்றும் கேட்டிருக்கிறேன், இது எனக்கு கிலி கொடுத்தது, பொதுவாக இந்த மாதிரி எழுத்துக்கள் எனக்கு ஒவ்வாதவை.   தெரிந்தவர் ஒருவர் 'உடையார்' நாவல் பற்றி மிகவும் சிலாகித்தார் சில மாதங்களாக, அந்த காலத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார், மிக சிறந்த நாவல், இத்யாதி இத்யாதி. அவரே இந்த நாவலின் முதல் பாகத்தை இந்த வாரம் கொண்டு வந்து கொடுத்தார். வேறொன்றை படித்துக்கொண்டிருந்த நான் ஏனோ இதை படிக்க ஆரம்பித்தேன். விதி வலியது வேறன்ன சொல்ல.

இந்த நாவலில் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதை பற்றி சொல்வதாக பாலகுமாரன் கூறுகிறார். சரி, அது மிக பெரிய கோவில், கட்டிடக்கலையின் ஒரு பெரிய வீச்சு, உழைப்பு எல்லாம் சரி தான், ஆனால் முதல் பகுதி முழுவதும் சாதாரண குடிமக்கள் இதை பற்றி என்ன நினைக்கின்றார்கள், அவர்கள் இதை எப்படி எதிர் கொண்டார்கள் என்பது பற்றி எல்லாம் எங்கும் இல்லை. மக்கள் அரசனை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள், உயிரை தருவோம் என்கிறார்கள், சோழம், சோழம் என்று கத்துகிறார்கள் அவ்வளவு தான். மற்ற படி இப்படி பட்ட ஒரு முயற்சியால் வரி அதிகரிக்குமே அதனால் வாழ்க்கை சுமை அதிகமாகுமே என்பதை பற்றி ஒன்றும் இல்லை. இதே களனை 'சோலை சுந்தரபெருமாள்' போன்றவர் எடுத்திருந்தால் நாவல் எப்படி வந்திருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. குருதிப்புனல் நாவலுக்கும், சுண்டரபெருமாள்ளின் 'செந்நெல்' நாவலுக்கும் உள்ள வித்தியாசம் தான் இதிலும் இருக்கும். அடுத்த பகுதிகளின் இவை வரக்கூடும் எனலாம், இருந்தாலும் இந்த பகுதியை வைத்து பார்க்கும் போது அதற்கு வாய்ப்பு மிக குறைவே. ஏனென்றால் ராஜா ராஜன் கிட்டத்தட்ட மண்ணுலகில் வாழும் கடவுளாகவே காட்டப்படுகிறார். அவரை எதிர்பவர்கள், இல்லை, இல்லை  வேறு கருத்து கொண்டவர்கள் கூட தீயவர்கள் போல் தான் கட்டப்படுகிறார்கள். இதில் குடிமக்களின் குரல் ஒலிக்கும் என்று நம்புவது அபத்தம் தான்.

சில நேரங்களில் இது 'இந்திரா சௌந்தரராஜன்' எழுதியதோ என்று எண்ணுமளவுக்கு, பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை கதையில் வருகின்றன. அரசனை கொல்ல இவை நடத்தப்படுகின்றன. இதை முற்றிலும் ஒதுக்க முடியாது, சில நாட்கள் முன்பு வரை கூட கர்நாடகாவில் இரு முன்னாள் முதல்வர்கள், செய்வினை போன்றவற்றை பற்றி பேசிக்கொள்ளவில்லையா என்ன? கதையில் சூனியம் பலிப்பது, ஆவி வருவது கூட பிரச்சனை அல்ல. இப்படிப்பட்ட கதை களனில், ஒரு காலகட்டத்தை, அந்த கால மக்களின் வாழ்வை பதிவு செய்யும் கதை என்று சொல்லும் போது இவை எல்லாம் சுத்தமாக ஒட்டவில்லை. பாலகுமாரன் சொல்வதை பார்த்தால், மக்கள் மிக சுபிட்சமாக இருந்தார்கள், அவர்களுக்கு சோழர் காலத்தில் எந்த கவலையும் இல்லை என்று தான் தோன்றுகிறது. (ஆ.சிவசுப்ரமணியன், பொ.வேல்சாமி  மன்னிப்பார்களாக). இதில் 'அகண்ட பரதம்' முழுக்க சோழர் கொடி பறக்கவேண்டும், அடிமை முறை பற்றிய எந்த வித கூச்சமும் இல்லாமல் கூறுவது, பெண்கள் கணவனுக்காக உண்ணாமல்/ தூங்காமல் இருந்தால் நாடு சுபிட்சமாக இருக்கும் போன்றவை வேறு உள்ளன. இன்னொன்று, காவல் படையினர், மக்கள் 4-5 பேராக ஒன்றாக தெருவில் நின்றால்  விரட்டி விடுவார்களம். அவ்வளவு ஜனநாயகம் அந்த காலத்தில்.. 4-5 என்பது கும்பல் என்று அப்போது இருந்திருக்க வேண்டும். இதை அந்த காலத்தின் நடைமுறை என்று ஒரே அடியாக சொல்ல முடியாது, ஏனென்றால் இவை பாலகுமாரன் நேரடியாக நம்மிடம் சொல்பவை. கதை மாந்தர் பேசும்போது தான் அவர்கள் வழியாக பாலகுமாரன் பேசுகிறார் என்றால், நடு நடுவே பல பத்திகள் நேரடியாகவே நம்மை நோக்கி அவர் பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார்.

சரி, இதில் ஒன்றுமே இல்லையா என்றால், தனிப்பட்ட முறையில் இந்த நாவல் எனக்கு கல்கியின் புதினங்களை விட தேவலாம் என்று பட்டது. வேவு பார்ப்பது, அதுவும் ஒரு பெரிய நாட்டில் யார் ஒற்றர், யார் யாரை வேவு பார்க்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கும் நிலைமையை பாலகுமாரன் நன்று விவரிக்கிறார்.

காவல் கோட்டம் நாவலில், மதுரை நகரில் புதிய கொத்தளங்கள், மதில்கள் எழுப்பப்பட்டதை பற்றி ஒரு சிறு பகுதி வரும். அந்த 40-50 பக்கங்கள் தந்த ஒரு பார்வையை 450 பக்கம் கொண்ட இந்த முதல் பாகம் தரவில்லை. இதற்கு மேல் பாலகுமாரன் புத்தகங்கள் மேலும் படிப்பேன் என்று தோன்றவில்லை. ஒவ்வரு மனுசனுக்கும் ஒரு பீலிங், எனக்கு வந்ததோ சலிப்பும், எரிச்சலும் தான், என்ன செய்ய, இரண்டு நாட்கள் வீண். இதை படிக்க Pychon நாவலை பாதியில் விட்ட எனக்கு இது தேவை தான். From the sublime to the ridiculous . Need a dose of Pynchon to get going again.

No comments:

Post a Comment