Monday, January 25, 2016

ஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள்

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2016/01/17/paavannans-stories-consoling-hearts/
----------
வலை‘ சிறுகதை தொகுப்பில் உள்ள ‘காலம்‘ கதையில் குழந்தை மீனுவை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அதட்டும் கதைசொல்லி,   அவள் முகத்தில் சோகம் கவிவதைப் பார்க்கிறார். 10-15 நிமிடங்கள் கழிந்தபின் பார்த்தால் சோகம் எதுவும் இன்றி பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். 
தீ‘ கதையில்,  – உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதகொள்ள விரும்பாத அலுவலக மேலதிகாரிகளின் போக்கினால்மணமான மூன்று ஆண்டுகளில்  30 நாட்களுக்கும் குறைவாகவே மனைவியுடன் நேரம் செலவிட்டிருக்கும் கதைசொல்லி கொதி நிலையில்  உயரதிகாரியை அடித்து விடுகிறார்.
தன் சோகத்தை சில நிமிடங்களில் மறந்து தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக்கொள்ளும் மீனுவின் குழந்தைமை என்ற  புள்ளியில் இருந்துஅந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு,   ‘முதிர்ந்தவர்கள்‘ என்ற அடையாளம் பெற்றாலும் தன்னிலை இழத்தல் என்ற புள்ளியை அடையும் வரையிலான  காலத்தினூடான பயண அனுபவத்தை  இந்தத் தொகுப்பில் உள்ள – சிறார்கள்முதிரா இளைஞர்கள்ஆண்கள்  பாத்திரங்கள் வாயிலாக நாமும் அடைகிறோம்.  
கீழ் மத்திய தரஏழை என்ற பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள் இந்தக் கதைகளின்  பாத்திரங்கள்பல ஆண்டுகளாக அதே ஊரில் நடைபாதையில் துணி விற்கும் ராமசாமியின் மகன் (முத்து‘ சிறுகதை) முத்து தந்தையின் பாணியிலிருந்து விலகிவேறு இடத்தில்வேறு விதமாக  வியாபாரம் செய்ய முயல்கிறான்ராமசாமி அதை முதலில் எதிர்த்தாலும் (மகனை அதற்காக அடிக்கவும் செய்கிறான்),  முத்து தான் கற்பனை செய்திராத அளவிற்கு விற்பனை செய்ததை அறிந்து நெகிழ்ந்துதனக்கு உணவளிக்க வரும் மனைவியிடம் புள்ள சாப்டாம எனக்கெதுக்கடி சாப்பாடு?… சம்பாரிச்ச புள்ளக்கிபோடாம கொஞ்ச வந்துட்ட எங்கிட்ட என்று (செல்லக்)  கோபம் கொஞ்சும் இடத்தில் தகப்பனின் பெருமிதத்தையும்குடும்ப அதிகார அடுக்கில் ஏற்பட்டுள்ள நுட்பமான இடமாற்றத்தையும் உணரலாம்.  முரடனாக முதலில் தோற்றமளிக்கும் ராமசாமி தன் மகன் தன்னைத் தாண்டிச் செல்வதைக் எதிர்கொள்ளும் விதத்தையும் , ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ கதையில் பேரன் தன்னை முந்தி விடுவானோ என்று – மனம் கனிந்திருக்கும் வயதில்– பேரனின் வெற்றி  தன் சுயத்தை இழக்கச் செய்வதாக உணர்ந்து பதற்றமடையும்  மாணிக்கம் தாத்தாவோடு ஒப்பிட்டு  அவற்றின் இடையே உள்ள வித்தியாசத்திற்கான  காரணங்கள் என்னவாக இருக்கும் என்றும் ஆராயலாம்.
மூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்து பெருமிதம் கொள்ளும் கதைசொல்லி (மையம்‘ ) பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படித்தவர்மாவட்ட ஆட்சியர் ஆகும் கனவுகள் கொண்டவர்.  அவர் வகுப்பில்தினமும் வில்வண்டியில் வந்துநடந்து செல்லும் சிறுவர்சிறுமிகளைப் பார்த்து கையசைத்துச் செல்லும்,  
 மாலினியும்  படிக்கிறாள்புத்திசாலி ஏழை மாணவன்பணக்காரப் பெண் என்றவுடன்நட்புகாதல் உருவாவது  என்பதெல்லாம் பாவண்ணனின் உலகில் நடப்பது இல்லைஅத்தகைய வழமையான ஆசுவாசங்களை அவர் வாசகனுக்கு அளிப்பதில்லைஉண்மையில்ஒரு சம்பவம் மூலம் கதைசொல்லிக்கு அவள் மீது வெறுப்பே ஏற்படுகிறதுமாலினியின் குறும்பு இதற்கு அடிததளமிட்டாலும்அவர்களுக்கிடையே உள்ள சமூகபொருளாதார இடைவெளியும்அதற்கேற்றப்படி ஆசிரியர் அந்தச் சம்பவத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதுமே (பெரும் பணக்காரரின்கிராமத்தில் செல்வாக்கானவரின் பெண்என ஆசிரியருக்கும் அதற்கான காரணங்கள் யதார்த்தத்தில் உள்ளன) முக்கிய காரணமாகின்றன.  அவர் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால்இருவரும் ஓரிரு நாட்களில் நடந்ததை மறந்திருப்பார்கள்துளிர் விடுவதற்கு முன்பே ஒரு நட்பு , மாலினியின் 
வண்டிப் பயணத்தில் அவள் கையசைப்புக்கள் பொருட்படுத்தாதபூக்களாய்..” உதிர்ந்திருக்காது.
இந்தப்  பகை  விலகாமல்உச்சகட்டமாகபள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று சான்றிதழ் வாங்கச் செல்லும்போதுஅங்கு வரும் மாலினியின் தந்தை பேசும் பொறாமை ததும்பும் சொற்கள் அவர் மனதில் நீங்கா  வடுவாக  தங்கி விடுகின்றன.   
மேலே படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழலில்கதைசொல்லியின் ஆட்சியர் கனவுகள் கலைகின்றனபெரிய போராட்டத்திற்குப் பின்சிறிய வேலை கிடைத்து தங்கைக்குத் திருமணம்பிறகு தன்னுடைய திருமணம் /குழந்தை என ஒருவாறு வாழ்வில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார்பெரிய பள்ளியில் சேர்த்த பெருமை நீடித்ததா என்றால்அதுவும் இல்லைமகனை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது காரில் செல்லும் சக மாணவி மைதிலியை நோக்கி மகன் கையசைப்பதைப் பார்த்தவுடன் , மாலினியின் நினைவு வந்து மனதைக் கீற  கதை முடிகிறது.
முதற் பார்வையில் இது நெகிழ்ச்சியைத் தூண்ட  வலிந்து திணிக்கப்பட்ட முடிவாகத் தெரியலாம்ஆனால் யதார்த்தம் இது தான். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் கதைசொல்லி தன் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் அடைந்தாலும்மாலினிமைதிலி வசிக்கும் சூழலின் – வில்வண்டியில்காரில் வரும் – மையத்தின் விளிம்பில் தான் இருக்கிறார்சக மாணவியைப் பார்த்து  இப்போது உற்சாகமாக கையசைக்கும் கதைசொல்லியின்   மகனும்தந்தையைப் போலவே ஒரு நாள் இருவருக்குமிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை  உணரலாம்உணரலாமலும் போகலாம்கதைசொல்லியின் பேரன் தலைமுறையில் அவர்களும் மையத்திற்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்தாலும்அன்றும் அவரின் வலி முற்றிலும் நீங்காது என்ற உணர்வும் நெருடிக்கொண்டே இருக்கிறது.
பால்யத்தின் நட்பை ‘பட்டம்‘/’சிலுவை‘ கதைகளில் பார்க்கிறோம். ‘பட்டம்’ கதையில் பள்ளியில் பலரால் கேலிக்குள்ளாக்கப்படும் கதைசொல்லியின் ரட்சகனாக வரும் தியாகராஜன் கதைசொல்லியை ஊக்கப்படுத்திதன்னம்பிக்கை கொள்ள வைக்கிறான்.  சராசரி மதிப்பெண் பெற்றே ஒவ்வொரு வகுப்பாகத் தாண்டிச் செல்லும்கேலி செய்யப்படும் நேரம் தவிர்த்து பிற சமயங்களில் பிறர் கண்களுக்குத் தென்படாதவனாக உலவும்   கதைசொல்லிக்கும்விளையாட்டில் தன்னையே கரைத்துக் கொள்ளும்அனைவரின் கவனத்தையும் இயல்பாக தன்பக்கம் ஈர்க்கும்  தியாகராஜனுக்கும் நட்பு உண்டாக பெரிய முகாந்திரம் ஒன்றும் இல்லை.  சரி/தவறு என்று பார்க்காததாங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பொருட்படுத்தாத பால்யத்தின் நட்பிற்கு அது தேவையும் இல்லைஎனவேதான்தேர்வில் தியாகராஜனுக்கு உதவ முயன்று சிக்கிபிரம்பு முறியுமளவிற்கு கதைசொல்லி அடி வாங்கினாலும்தியாகராஜன் தானே இதற்கு காரணம் என்று கதைசொல்லிக்கு கோபம் வருவதில்லை மாறாக  தன்னால் தான் இருவரும் மாட்டிக்கொண்டோம்  என்று வருந்துகிறான்.  அவர்கள் நட்பில் எந்த விரிசலும் ஏற்படாமல்தேர்வில் கதைசொல்லிதியாகராஜனுக்கு உதவுவதில் வெற்றி பெற்றால்  
பரீட்சை முடிந்தபின் தியாகராஜன் செலவில் திரைப்படம் பார்ப்பதுமற்றும்  உணவு விடுதியில் ‘பிரியாணி‘ உண்பது என்ற தங்களின் முந்தைய முடிவைஇருவரும் மாட்டிக்கொண்டு அடிவாங்கினாலும் மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நட்பு தொடராமல்தியாகராஜன் தற்கொலை செய்துகொள்கிறான். விளையாட்டு மைதானத்தில் கம்பீரமாக வலம் வந்த தியாகராஜனுக்கு தற்கொலை புரிய  தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயம் மட்டுமே காரணமாக இருக்குமா அல்லது ஆப்த நண்பனிடம் கூட சொல்ல முடியாத என்ன சிக்கல் இருந்திருக்கும்?
சிலுவை‘ கதையில்சிலுவையின் தொடர்  காதல் தோல்விகள் பற்றிய விவரணைகள் மெல்லிய நகைச்சுவையோடு இருந்தாலும்நிலையற்ற அலைகழிப்பாக உள்ள அவன் வாழ்வில் மாறாத அம்சம் கதைசொல்லிக்கும் அவனுக்கும் உள்ள நட்பு தான்.  நல்ல  உத்தியோகம் என்ற புருஷ லட்சணம்  இல்லாததால் இரண்டு வருடங்களுக்குப்  பிறகு மனைவியைத் தயங்கித் தயங்கி  நெருங்கி அவமானப்படுத்தப்பட்டுதற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலுவையை இரவில் பார்த்துக்கொள்ள அனைவரும் தயங்கும் நிலையில் கதைசொல்லி மட்டுமே  முன்வருகிறார்இயலாமையின் குற்றவுணர்வை சொல்லும் ‘கரையும் உருவங்கள்‘ கதையில் … அக்கா ஒக்காந்து பத்து வருஷம் ஆச்சு.ஏதாவது ஒன்னு கொறச்சிருக்கேனா?. ஆனாலும் நீ ரோஷக்காரண்டா என்று பாசத்தோடு அக்கா சொல்லும்போது உடன் உடைந்து விடும் சங்கரன் மட்டுமல்லமனைவியின் வெறுப்பின் சூடு பட்டுஅவள் தரப்பிலும் நியாயம் இருப்பதை உணர்ந்ததால் அவள் மீது கோபம் கொள்ளாமல்,   காறித் துப்பற மாதிரிகட்டன பொண்டாட்டியே பேசிட்டப்றம்  நா எதுக்கு வாழனும் சொல்லுடா.” என்று கேவும் சிலுவையின் அகம் கூட இயலாமையின் குற்ற உணர்வில் கரைந்து கொண்டே தான் இருக்கிறது. 
தன்னையோ , தன் நண்பனையோ இந்தக் கதைகளில் வாசகன் காணக்கூடுமென்றாலும் சுய அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் கதைகளாக மட்டும் இவற்றை குறுக்கிக் கொள்ள முடியாது.  இந்த நிகழ்வுகள் எதையும் வாசகன் எதிர்கொள்ளவில்லை என்றாலும்இவற்றினூடாக தொக்கி இருக்கும் , ஒரு கட்டத்தில் வாழ்வை   எதிர்கொள்வதில் உருவாகும் இயலாமையின் கணங்களை  அனைவரும் எப்போதேனும் எதிர்கொண்டிருப்போம். 
அந்த வகையில் கதைகளை ஒவ்வொன்றாக உள்வாங்குவதுஅவற்றின் நிகழ்வுகளை/பாத்திரங்களை விமர்சிப்பது இவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய அம்சத்தை இவை கொண்டிருக்கின்றன. ஒரு பொதுப் பார்வையாய்இந்தக் கதைகளில் பெரும்பாலானவற்றில்   வாழ்வின் போக்கில் இந்தப் பாத்திரங்கள் – அவரவர் சூழல் உருவாக்கும் தடைகளின்தொடக்கூடிய எல்லைகளின்,  தோல்விகளின் துயர் – குறித்து ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வும்சகிப்புத்தன்மையும்அந்நேரத்தில் கிடைக்கும் அரவணைப்பு உண்டாக்கும் மன நெகிழ்வும் வெளிப்படுகின்றன என்று சொல்லலாம்.
வாசகனை  நெகிழச் செய்யும் விதமாக  திணிக்கப்பட்டவை ( emotional manipulation) என  எதுவும்   இக்கதைகளில் இல்லை.   வாசகனைப் போலவே ஒரு பார்வையாளனாக  இந்தப் பாத்திரங்களோடு பயணிக்கும்  பாவண்ணன் , ஒரு கட்டத்தில் 
முத்து பெரிய வியாபாரியாக உயர்வான்கதைசொல்லியின் மகன் ‘மையத்தை‘ அடைவான்  அல்லது சிலுவையின் வாழ்வு முழுதும் இனி துயரம் தான்– போன்றெல்லாம் பாத்திரங்களின் வாழ்வின் அடுத்த கட்ட  பாதையைக்  காட்டாமல்   ‘முடிவு‘ என்று பொதுவாக  வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் கதைகள் முடிக்காமல்பாத்திரங்களுடனான தன்னுடைய  (வாசகனுடைய) பயணத்தை நிறுத்தி விடுகிறார்ஆனால் அப்படிச் செய்வது சடுதியில் முடிந்த உணர்வைத் தராமல்முடிந்து போன ஒரு சிறிய பயணத்தின்  நினைவுகளை அசைபோடச் செய்வதைப் போல்எந்த வலியுறுத்தல்களும் இல்லாமலேயே வாசகனின் உணர்வுகளை தன்னியல்பாகத் திரண்டெழச் செய்கின்றன.  தொடர் மன வாதையில் இந்தப் பாத்திரங்கள்  
இருந்தாலும்முற்றிலும் தோல்வியைஅவநம்பிக்கையை வலியுறுத்தும் கதைகள் அல்ல இவைகடற்கரையில் பொங்கி அழும் சிலுவையை பேச விட்டுவிழுந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தபடி மௌனமாக சிகரெட் பற்றவைக்கும் நண்பனும் , மைதிலியைப் பார்த்து கையசைக்கும் மகனை ஆதூரத்துடன் அணைத்துக்கொள்ளும் தந்தையும்நம் பாரங்களைச் சுமக்க உதவும் இன்னொரு தோள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்கள். 

Monday, January 18, 2016

'Languedoc Trilogy' - Kate Mosse - தனித்துவம் மிக்க ழானர் எழுத்து

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/01/10/languedoc-trilogy-kate-mosse-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%BE/)
-------------------------------------

பல நூற்றாண்டுகளாக மறைந்திருக்கும்/மறைக்கப்பட்டிருக்கும் ரகசியங்கள்அவற்றின் -உலகின் ஆக்கத்திற்கும்/அழிவிற்கும் பயன்படுத்தப் படக்  கூடிய -ஆற்றல்அவ்வாற்றலின்  ஈர்ப்பால் அம்மர்மங்களின் விடைகளைக் கண்டடையத் துடிக்கும் குழுஅவர்களைஎதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் நாயகிகள் என கேட் மாஸின்  (Kate Mosse) 'Languedoc Trilogy' பற்றிய அறிமுகத்தைப் படிக்கும் போது குடிசைத் தொழில் போல் பெருகியுள்ள ‘ancient conspiracy theory’ வகைமை நாவல்களின் இன்னொரு தயாரிப்பு இவை என்றே தோன்றினாலும் இந்த  ழானரில் தனித்தன்மை உடையதாக இந்தத் ட்ரிலஜி உள்ளது. 

பிரான்ஸின் தெற்குப் பகுதியான Languedocல் புதைந்திருப்பதாக சொல்லப்படும் மர்மங்கள்  குறித்து பல ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. இயேசு சிலுவையில் மறித்தப் பின் மேரி மெக்டலின் இங்கு வந்ததாகவும்இயேசுவின் குருதிவழி  அவர் மூலம் தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையால் 'மதத் திரிபு'  கருத்துக்கள் கொண்டவர்கள் (heretics) என்று முத்திரைக் குத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட Catharism என்ற கிருத்துவத்தின் ஒரு பிரிவும்அதைப் பின்பற்றுபவர்களான Cathars  மிகுந்திருந்தப் பகுதி இது. இவர்கள் பெண்மையைப் போற்றியவர்கள்பெண்மத போதகர்களை/பூசாரிகளை ஏற்றுக்கொண்டவர்கள்  என்பதை  மெக்டலின் குறித்த ஹேஷ்யத்தோடு பொருத்திப் பார்த்தால் 
இப்பகுதி பற்றிய யூகங்கள்  பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்று புரிகிறது.  ஆன்ம ஞானம்மரணமில்லா வாழ்வுபொருட்ச்செல்வம் என Catharsகளிடமிருந்த  புதையல் பற்றிய யூகங்களும் பலவாறு உள்ளன.

இந்த நிலவியலைஅதைச் சூழ்ந்துள்ள தொன்மங்களை (legends) ட்ரிலஜியின்  மூன்று நாவல்களான  (அவை வெளிவந்த வரிசையில்) 'Labyrinth', 'Sepulchre' மற்றும் 'Citadel'ன் களமாக கேட் கொண்டுள்ளார். இந்த நாவல்களுக்கு முன் 90களில் 'இலக்கியப் புனைவுகள்எழுதி இருந்தார்  கேட்.  ழானர் எழுத்திற்கு வந்ததைப் பற்றி 
"I realised," she admits, "that I should have listened to myself sooner. My skill is storytelling, not literary fiction."
என்று சொல்கிறார்.  எனிமும் இலக்கிய அம்சத்தை முற்றிலும் அவர் கைவிடவில்லை. "History is written by the victors, the strongest, the most determined. Truth is found most often in the silence, in the quiet places." என்று Labyrinth நாவலில் சொல்லப்படுவது இலக்கியத்தால் எப்போதும் சுட்டப்பட்டு வருவது தான். இந்த ழானர் நாவல்கள் தாங்கள் இயங்கும் களத்தில் தன்மையாலேயே பேசாப் பொருளைப் பற்றி பேச வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்தும்தன் வகைமையின் எல்லைகளாலேயே (வாசகனின் கவனத்தைத் புனைவின் மையத்திலிருந்து திசை  திருப்பாமல் நாவலின் அப்போதைய நிகழ்வுகளுடன் மட்டுமே ஒன்றைச் செய்வது) ,  அவற்றைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. கேட்  இந்த வரையறுக்குள்,  கடவுளின் பெயரால் அழித்தொழிப்பட்டவர்கள் ('Labyrinth'), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ஆதிக்கத்தில் பிரான்ஸ் இருந்தபோதுஎதிர் குரல் கொடுத்தஆனால் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத பெண்களின் பங்கு (Citadel)  (ஜெர்மானிய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் என அங்கீகரிக்கப்படவர்களில் பெண்கள் மிக மிகக் குறைந்த சதவீதமே என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டது குறித்த தொன்மம் "military, national and male” என்று உருவானதை இந்தக் காலகட்டத்தைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ள Robert Gildea குறிப்பிடுகிறார்)  என சில விஷயங்களை   நாவலின் மையத்தை சிதைக்காமல்அதனுடன் இணைத்தே சொல்லிச் செல்வது அவரைத் தனித்துக் காட்டுகிறது. 


பெண் பாத்திரங்களின்  வார்ப்பு இந்த நாவல்களின் முக்கிய அம்சம்.  இந்த வகைமையில் பொதுவாக ஆணே நாயகனாகவும், சாகசங்கள் புரிபவனாகவும், பெண்  அவனுக்கு உதவும் பாத்திரமாகவே இருப்பாள். கேட்டின் மூன்று நாவல்களிலும்  முக்கியப் பாத்திரம் பதின் பருவத்தில் அல்லது அதன் முடிவில் உள்ள பெண்களே. முக்கியப் பாத்திரத்தின் பாலினத்தை மாற்றியமைப்பதை மட்டும் கேட் செய்யவில்லை. பதின் பருவத்திற்குரிய விழைவுகள், சலனங்கள் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும் நாவலின் போக்கில் தங்கள் சுயத்தைக் கண்டடைந்து, நாவலின் ஆண் பாத்திரங்களையும் வழிநடத்துபவர்களாகவும் அவர்கள்  இருக்கிறார்கள். அரச/மத பலம் போன்ற தங்களை மீறிய பெரும் சக்திகளை எதிர்கொள்ளவும் தயங்குவதில்லை இப்பெண்கள்.  ஊழை மீறிச் செல்ல முடியும் என்று நம்புகிறாயா என்ற கேள்விக்கு Labyrinth நாவலின் நாயகி 'ஆலிஸ்
'Otherwise, what's the point? If we are simply walking a path preordained, then all the experiences that make us who we are - love, grief, joy, learning, changing - would count for nothing.'
என்றுரைக்கிறாள். இங்கு இப்பெண்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை விட தங்கள் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தான் முக்கியமானது. ஒரு விதத்தில் இம்மூன்று நாவல்களுமே ஒரு பதின் பருவத்தவள் மனம் முதிவர்தைப் பற்றியது என்றும் புரிந்து கொள்ளலாம். முக்கியப் பாத்திரங்கள் நாவலின் போக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக மட்டுமே இருப்பது போல் இல்லாமல், அவர்களுக்கென்ற காரண காரியங்களை கொண்டவர்களாக,  அவை சார்ந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளே  நாவலின் போக்கைத் தீர்மானிப்பதாக அமைந்துள்ளன.  


 'Languedoc' இன்று  'பிரான்ஸ்' என்று நாம் அறிந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பின் அங்கமாக இருந்தாலும், அது ஒருகாலத்தில் சுதந்திரப் பகுதியாக இருந்து, அப்போதைய பிரான்ஸ் மன்னர்களின்/அரச குடிகளின்  ஆக்கிரமிப்பை எதிர்த்து தோல்வி அடைந்ததும், அதன்  பூர்வ மொழியான Occitan மெல்ல மெல்ல நசிந்ததும் நாவல்களின் பின்னணி சரடாக உள்ளன. (Spain/Catalonia பிரிவினை பிரச்சனையை இத்துடன் பொருத்திப் பார்க்கக் கூடும்ஐரோப்பிய நிலவியல்/வரலாறு/அரசியல் நன்கறிந்த ஒருவர் இன்னும் விரிவாக இதைப் பற்றி பேச முடியும்).  ஜெர்மனி Languedoc பகுதியை உள்ளடக்கிய பிரான்ஸை ஆக்கிரமித்ததை  எதிர்த்தவர்களில் பலரின் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் Languedocஐ கைப்பற்ற வந்தவர்களாக பார்க்கப்பட்டதும் (Labyrinth நாவல்)அவர்களை அப்போது எதிர்த்தவர்களின் சந்ததியர் 1940களில்பிரான்ஸ் என்ற சொல்லின் கீழ் ஒன்றிணைந்து ஜெர்மானியர்களை எதிர்ப்பதிலும் (Citadel நாவல்) உள்ள  நகை முரண் நிலத்திற்கான வல்லாதிக்கப் போர்கள் பல்வேறு பெயர்களில் (மதம்/இனத்தூய்மை) எப்போதும்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதைச்  சுட்டுகிறது.  

நிலம்/மதம்/தனிமனித வேட்கை இவற்றின் பொருட்டு காலந்தோறும் நடத்தப்படும் அக்கிரமங்களுக்குச் சாட்சியாக
மூன்று நாவல்களிலும் பொது பாத்திரமாய்/சரடாய் வரும் - தன் தாய் நிலத்தில் நடந்தவற்றை ஆவணப்படுத்த  தன் வாழ்வு முழுதையும் செலவிடும், அதே நேரத்தில் அறியா வயதில் அரும்பிய, நிறைவேறவே முடியாத காதலின் தோல்வியின் துயரோடு, காதலியின் நினைவை  சுமந்தலையும்   -  Sajhe/Audric  என்ற மர்மமான  ஆண் பாத்திரம், வாசகனுக்கு நெருக்கமாக இருப்பதோடு இறவாமை/மிக நீண்ட ஆயுள் போன்றவை வரமா சாபமா என்ற கேள்வியையும் அவன்  மனதில் எழுப்புகிறது. மூன்று நாவல்களிலும், இந்த ஒரு ஆண் பாத்திரம்  தவிர மற்ற அனைத்து ஆண்  பாத்திரங்களும் பெண் பாத்திரங்கள் அளவிற்கு காத்திரமாக வார்க்கப்படவில்லை என்பது ஒரு குறையே. எந்த ழானர் எழுத்திலும் அனைத்துப் பாத்திரங்களுக்கும்  அதிக கவனிப்பைத்  தர  இயலாது தான் என்றாலும்கேட் அத்தளையை இன்னும் தளர்த்த முயன்றிருக்கலாம். குறிப்பாக எதிர்நாயக/நாயகி பாத்திரங்களுக்காக. 


கதைசொல்லலே தனக்கு உகந்து எனக் கூறும் கேட் இம்மூன்று நாவல்களுக்கும் - நாவலின் நிகழ்காலம், அதற்கு முந்தைய கடந்த காலம் என்று  இரண்டு காலகட்டங்களின் நடக்கும் நிகழ்வுகளை அடுத்தடுத்த  அத்தியாங்களில் விவரித்து அவை இணையும் புள்ளி -  என்ற  பாணியை உபயோகித்துள்ளார். இந்த ழானர் எழுத்துக்களில் பொதுவாக இருக்கக்கூடிய பக்கத்திற்குப் பக்க சாகஸ நிகழ்வுகளை எதிர்பார்க்கும் வாசகன்  கதையை அதன் போக்கில் விட்டு மெல்ல அதைச் சார்ந்த பின்னலை உருவாக்கும் கேட்டின் யுத்தியினால் முதலில் ஏமாற்றமடைவான். 700 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும் ஒவ்வொரு நாவலையும் எளிதில் நம்பிக்கை இழக்காமல் தொடரும் வாசகன் ஒரு இடத்தில் ஒரு காலகட்டத்தின் அத்தியாயம் முடிந்து இன்னொரு காலகட்டத்தின் அத்தியாயம் ஆரம்பிக்கும் போது, அதை தாண்டிச் சென்று இப்போது விட்டு விட்டு வந்த காலகட்டத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும்  என தன்னையறியாமல் எண்ண ஆரம்பிக்கும் இடத்தில் கேட் அவனை வென்று விடுகிறார். 

ழானர் எழுத்தின் பலவீனமாக பொது இலக்கிய வாசகன் நினைக்கூடிய, அது அவனிடம் கோரும்  'புனைவினுள் அவநம்பிக்கையை கைவிடுதலை' (suspension of disbelief) இந்த நாவல்களிலும் சற்றுச்   செய்யவேண்டியுள்ளது. ஆனால் அது எழுத்தாளர் கட்டமைக்கும் சம்பவங்களை, அதன் தர்க்கத்தை  எந்தக் கேள்வியும் இன்றி அப்படியே  ஒப்புக்கொள்வது என்பதாக  இல்லை என்பது இந்த ட்ரிலஜியின் நேர்மறையான அம்சம். இதில் வாசகன் செய்ய வேண்டிய மிக முக்கிய சமரசம் ஆன்மாக்கள்/ஆவிகள், அமானுஷ்ய நிகழ்வுகளின் களமாக உள்ள  ட்ரிலஜியின் புனைவுலகை, அதன் மையத்தில் உள்ள  மர்மத்தை, பாத்திரங்களின் ஊழை, அது பல ஆண்டுகளுக்குப் பின்பு வரும் தலைமுறையில் நிறைவை அடைவதை  ஏற்பதே.   அமானுஷ்யம், தற்செயல், ஊழ் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ஒரு தர்க்கம்/எல்லை இருப்பதாக கேட் கட்டமைப்பதால் அதை ஏற்பது ஒன்றும் கடினமான ஒன்றாக இராது. போர்கள், குண்டு வெடிப்புக்கள், கைகலப்புக்கள் போன்றவையும் வெறும் சாகஸ நிகழ்வுகளாக மட்டுமில்லாமல், வாழ்வா/சாவா என்ற உச்சகட்ட போராட்டத்தின்   பதற்றத்தை  உருவாக்குகின்றன. காதல், நம்பிக்கை துரோகம், பொறாமை என வழமையான உணர்வுகளையும் வாசகனுக்கு கேளிக்கை அளிப்பதற்க்கான வெறும் மூலப் பொருட்களாக உபயோகிக்காமல்  இவ்வுணர்வுகளின் பின்னணியில் உள்ள மனதின் பேராசையை, காலந்தோறும் அது ஆடி வரும் அதே (தன் கோரத்தை மறைக்கும் இனிய) நடனம்  உருவாக்கும் அழிவின் சோகத்தையே முன்வைக்கிறார் கேட்.  நன்மைக்கும்  தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் நன்மை தான் வெல்லும் என்பது ழானர் எழுத்தின் விதி. அதை கேட்டும் பின்பற்றுகிறார். ஆனால் இந்தக் களத்தில்  வெற்றி/தோல்வி என்பது தற்காலிகமானது என்றும் நன்மை/தீமைக்கு இடையிலேயான ஆடல் வேறு வேறு பெயர்களில், வேறு வேறு நபர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் அவர் ட்ரிலஜியின் போக்கில் உணர்த்துகிறார். வெற்றிக்கு விலையாக பெரும் இழப்பை நன்மை கொடுக்க வேண்டியுள்ளது. மூன்று நாவல்களின் இறுதியிலும்  வாசகனுக்கு அவன் எதிர்பார்க்கும் ஆசுவாசத்தை அளிக்காமல் அவன் மேல் துயரின் சுமையை இறக்கி, அவனை கையறு நிலையில் விட்டுச் செல்கிறார்.  துன்பவியல் முடிவுகள் வாசகனை அதிகம் நெகிழச் செய்யும் என்பதால் அவர் இப்படி செய்திருக்கக் கூடும் என்று வாதிடலாம் என்றாலும், எப்படியோ இதிலும் அவர் இந்த வகைமையின் வழமையை  மீறுகிறார் என்பதே உண்மை. 
  
இந்த ட்ரிலஜியை இந்த வகைமையின் மற்ற படைப்புக்களுடன் ஒப்பிடுவதை விட  Elizabeth Kostovaன் 'The Historian' நாவலுடன் பொருத்திப் பார்ப்பதே ஏற்றதாக இருக்கும்.  இரண்டும் தொன்மங்களை  
கையாள்கின்றனதாங்கள் இயங்கும் தளத்தை விரிவாக்க முயல்கின்றனகாத்திரமான பெண் பாத்திரங்களைவாசகனை முட்டாளாக கருதாத கதைப் பின்னலைக் கொண்டுள்ளன எனப் பல ஒற்றுமைகள் உள்ளன.   ஒரு வேறுபாடும் உள்ளது. கதைசொல்லல் என்பதில் அதிக கவனம் செலுத்தும் கேட் உரைநடையில் செறிவு என்ற அம்சத்தை இழக்கிறார். எனவே  'நாவலின் முழுமைஎன்ற அடைய முடியாத இலக்கை நோக்கியப் பயணத்தில்  கேட்டை விட Kostova அதிகம் தூரம் பயணிக்கிறார்.  உதாரணமாக Kostova, வாசகன் தன் அகத்தில்  துல்லியமாகக் காணக்கூடியதாகஅதில்  உலவுக்கூடியதாக உருவாகும்,  ருமேனியாவின்  நிலவியலின் சித்திரத்திற்கும் , கேட்டின் தட்டையான நடையில் துல்லியமான உருவெடுக்காத Languedocன் நிலவியலுக்கும் உள்ள வித்தியாசம்.  கோட்டைகள் (castle), மலைப் பிரதேசங்கள்பழங்கால தேவாலையங்கள் உள்ள Languedocன் புறச் சித்திரத்தை உருவாக்கும் கேட்டின் முயற்சி முழுமை பெறாததாகவே உள்ளது. இதை யாருக்கு வெற்றி/தோல்வி என்று பார்ப்பதை விட,  ஒரு ழானரை எந்தளவுக்கு வளைக்க இரு எழுத்தாளர்களும் முயன்றிருக்கிறார்கள் என்பதில் உள்ள வேறுபாடாகக் கருதலாம். 

"What we leave behind in this life is the memory of who we were and what we did. An imprint, no more.”  என்று இந்த ட்ரிலஜியில் ஒரு பாத்திரம் பேசுகிறார். ஆனால் வரலாற்றில் எளியவர்களின் நினைவுச் சுவடுகள் இடம் பெறுவதில்லை என்பதை நாம் அறிவோம்.  அவற்றை முழு அழிவிலிருந்து மீட்டெடுக்க  "Through the shared stories of our past, we do not die" என்று ஆலிஸ் சொல்வதே சிறந்த  வழியாக உள்ளது. அதைத் தான் Sajhe/Audricம்அவரைக் கருவியாகக் கொண்டு கேட்டும்  இந்த டிரிலஜியில் செய்ய முயல்கிறார்கள். இவை தூய இலக்கிய ஆக்கங்களாக உருவாகாமல் போயிருக்கலாம். ஆனால்  'சுவாரஸ்யம்என்ற - எந்த  ழானர் எழுத்திலும் கட்டாயமாக எதிர்பாக்கப்படும்  - அம்சத்திற்காக அவ்வெழுத்தை மலினப்படுத்தாமல்
அதன் சாத்தியங்களில் புதிய உயரங்களைத் தொட முயலும் இந்த ட்ரிலஜி இந்த வகை எழுத்துக்களை விரும்புவர்கள் மட்டுமின்றிபொது இலக்கிய வாசகர்களும் அணுகக் கூடியதாகவே உள்ளது.

பின்குறிப்பு: 

1. ட்ரிலஜியின் மூன்று நாவல்களும் தனித்தனியாக முழுமைப் பெற்றிருந்தாலும், அவற்றை அவை வெளிவந்த வரிசையில் வாசிப்பதே அவற்றினூடாக உள்ள சிறிய இடைவெளிகளை புரிந்து கொள்ள உதவும். அது முடியாத நிலையில் முதல் நாவலான 'Labyrinth'யேனும் ஆரம்பத்தில் வாசிக்கலாம்.

2. 'Labyrinth'  நாவல் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்துள்ளது.

3.  'Gothic Horror/Thriller' தளத்திலும் இரு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பை எழுதி உள்ளார் கேட்.




Tuesday, January 12, 2016

புலம்பெயர்தலின் பின்னணியில் மானுடம் – Junot Diazன் Drown சிறுகதைத் தொகுப்பு

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2016/01/03/drown/
------------------------
தந்தையில்லாத குடும்பங்கள்ஒருதலைக்காதல்காதல் தோல்விபோதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்அமெரிக்காவின் கெட்டோ (Ghetto)  வாழ்க்கை மாற்றங்களுக்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்யும் குடிபெயர்ந்தோர்தாயகத்தில் (டொமினிகன் ரிபப்ளிக்) அநாதரவாய் விட்டு வரப்பட்ட குடும்பங்கள்  - 1996ல் வெளியான ஜூனோ டியாஸின் ஆச்சரியமளிக்கும் முதல் சிறுகதைத் தொகுப்பான "Drown"ல் உள்ள   கதைகள் பெரும்பாலும் இவற்றைப் பேசுகின்றன.

மக்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்தல் என்பது பொதுவாக இப்படி நிகழ்கிறது: பெரும்பாலும் கணவன் அல்லது சில சமயம் மனைவி முதலில் 'பொன்னுலகுசேர்கின்றனர்அங்கு ஒரு பணியில் சில காலம் இருந்தபின் அவரது குடும்பத்தினர் ஏனையோர் அவரைத் தொடர்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் இப்படி நடப்பதில்லை. குறிப்பாக white-collar அல்லாத  எளியமுறைசாரா வேலைகளுக்காக புலம் பெயர்பவர்களுக்கு நல்வாழ்வு எளிதாக அமைவதில்லை.   'பொன்னுலகுவந்தடையும் வெற்றியின்  களப்பலியாக உறவுகளே உள்ளன. கணவன் காணாமல் போகிறார்,  அல்லது இன்னொரு பெண்ணோடு அமெரிக்காவில் குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறார்
இறுதியில்வேலைப் பளுவில் தன் சுயத்தை இழக்கிறார்புது உறவிலும் ஒட்ட முடியாமல் தன்னையே தொலைக்கிறார். எதுவாகினும்,  அவரது மனைவியோ அம்மாவோ குடும்பப் பொறுப்பைத் தாய்நாட்டில்  தனியாளாய்ச் சுமக்க நேர்கிறது. பிள்ளைகள் தகப்பனில்லாமல் வளர்கிறார்கள். எல்லா இடத்திலும் இருப்பது போல்எப்போதும் பெண்களே அதிக துயருக்குள்ளாகிறார்கள். 

குடும்பத்தில் "இல்லாத அப்பா" இந்தக் கதைகளில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறார்அதே போல் அம்மா அல்லது மனைவி குடும்பச் சுமையை ஏற்பதும் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. தந்தை இல்லாததால் ஏற்படும் பொருளாதார அழுத்தம் மட்டுமல்லஅதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் டியாஸ் விவரிக்கிறார். தந்தை எங்கிருக்கிறார் என்பதை மனைவி அறிந்திருப்பதில்லைஏன் தொடர்பு கொள்ளவில்லை என்ற குழப்பம் நீடிக்கிறதுஅவர் திரும்பி வருவாரா அல்லது காணாமல் போனது போனதுதானா என்ற அச்சுறுத்தும் கவலையோடு வாழ வேண்டியதாகிறது.  சில கதைகளின் குழந்தைகள் இது எதையும் புரிந்து கொள்ளாத பச்சிளம் பாலகர்களாய் இருக்கின்றனர். அப்பா தம்முடன் இல்லாததன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும் தந்தையில்லாமல் வளர்வதால் ஏற்படும் தழும்புகள் அவர்களின் உள்ளத்தில் நிரந்தரமாய் தங்கவே செய்கின்றன. நிதிநிலை மிகவும் மோசமாகும்போதுகுடும்ப  நிலவரம் முன்னேறும்வரை வேறு இடத்தில் இருக்கட்டும் என்று அம்மா தன் குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்புகிறார். குழந்தைகள் மிகவும் சிறு வயதினராய் இருந்தாலும்கூட இதிலுள்ள அவமானத்தை யாரும் சொல்வதற்கான அவசியமில்லாமலே உணர்கின்றனர் - தன்னை  வளர்க்க  முடியாமல் வேறொரு குடும்பத்துக்கு அனுப்பி  வைக்கிறார்கள் என்பது யாரையும் காயப்படுத்தவே செய்யும். தன் குடும்பத்துடன் வசிப்பதில் உள்ள  இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. உறவினர்கள் முழு மனதோடு வரவேற்றாலும்கூட அவர்களோடு ஒட்ட முடியாமல் இருப்பதை குழந்தைகள் தம் விருப்பமின்மைகளால் வெளிப்படுத்துகின்றனர். 

இந்தக் கதைகளில் உள்ள பெண்கள் பலரும் நேரடியாகப் பேசப்படுவதில்லை. மகன்களின் பார்வையினூடாகடியாஸின் குறிப்புணர்த்தல்களைக் கொண்டுதான் நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆண் கதைசொல்லிகளின் கோணத்தில்தான் அவர்களை நாம் காண்கிறோம் என்றாலும் அவர்கள் பரிவுடனேயே அணுகப்படுகிறார்கள். 

இந்தப் பெண்கள் பன்னிரெண்டு மணி நேரம் நீளும் பணிகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பற்ற இடங்களில் வசிப்பதால், உடன் பணிபுரிபவர்களை வீடு வரை துணைக்கு வரும்படி அழைக்கிறார்கள்ஆனால் அவர்களை வீட்டினுள் வரச் சொல்லி அழைப்பதில்லை. தாய்நாட்டில் இருக்கும் இப்பெண்கள்பொதுவாக வெளிநாடு சென்றுவிட்ட தங்கள் கணவன் போல் வேறு உறவை எளிதில்  ஏற்றுக்கொள்வதில்லை.  கடல் கடந்து சென்ற கணவனுடனான  உறவை அவன் இல்லாவிட்டாலும் பேணுவதில் உறுதியாக  உள்ளார்கள். தன் குழந்தைகளால் (வீட்டிற்கு கொண்டு விடும்) இன்னொரு ஆணை முகமறியா/ முகம் மறந்த தந்தையின் இடத்தில் வைத்துப் பார்க்க முடிவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். சில சமயம் தான் திரும்பி வந்து அவர்கள் அனைவைரும் அழைத்துச் செல்வதாக கணவனிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறதுஆனால் அவர் மட்டும் வருவதேயில்லை.அவ்வப்போது கணவன் எழுதும் கடிதம் கிடைக்கும்போது அவன் வருகை குறித்து உருவாகும்  நம்பிக்கைபின் காலம் செல்ல அது மெல்லக் குலைவதுபிறகு இன்னொரு கடிதம்மீண்டும் அதே நச்சுச் சுழற்சி என இவர்களின் வாழ்க்கை நம்பிக்கைக்கும்/அது குறித்த சலிப்பிற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கிறது.  

முன்னொரு காலத்தில் இவர்கள் இப்போதிருப்பதைவிட மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததை உணர்த்தும்இனி மீண்டெழ முடியாத கடந்த காலத்தின் இனிய நினைவுகளாக/சாட்சியங்களாக  மட்டுமே உள்ள  பழைய புகைப்படங்கள் விவரிக்கப்படுகின்றன.  தொழிற்சாலையில் நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் தாய் என்ன செய்வார் என்பதைக் கதைசொல்லி 

"We could never get Mami to do anything after work, even cook dinner, if she didn't first sit a while in her rocking chair. She didn't want to hear about our problems, the scratches we'd put onto our knees, who said what. She sat on the back patio with her eyes closed and let the bugs bite mountains onto her arms and legs."

என்று விவரிப்பது அப்பெண்களின் தாள இயலாத  வேலைப் பளுவைப் பற்றிய மறுக்க முடியாத குற்றச்சாட்டாகும்.

 தகப்பன் இல்லாத குடும்பத்தை தனியொருத்தியாக வழிநடத்த வேண்டியிருப்பதாலும் தன் பணியின் இயல்பினாலும் களைத்துப் போன ஒரு பெண்ணை இங்கு காண்கிறோம். வெளிவேலையின் களைப்பிலிருந்து மீண்டு எழவும்தனக்காகக் காத்திருக்கும் வீட்டு வேலைகளுக்கு ஆயத்தம் செய்து கொள்ளவும் அவளுக்கு தனிமையான சில கணங்கள் -  வாழ்வின் இரக்கமற்ற நிதர்சனங்களிலிருந்து தற்காலிக விடுவிப்பு அளிப்பவை  மட்டுமே இவை- தேவைப்படுகின்றன. தன் வாழ்வைத் தொடர இந்தத் தனிமையும் அதன் மௌனமும் அவளுக்கு ஊட்டமளிப்பதாக இருக்க வேண்டும். அதனால்தான் தான் மட்டும் என்று தனித்திருக்கும் தனக்கேயுரிய தனிமையின் விலைமதிப்பற்ற அந்தக் சிறு கணங்களில் பூச்சிக்கடிகள்கூட தொல்லையாக இல்லாத அளவுக்கு தன் மனதை உள்நோக்கிக் குவித்துக் கொள்கிறாள்.   

மனைவிகுழந்தைகளின் கோணம் ஒரு பக்கமென்றால் தொகுப்பில் உள்ள 'Negocios' கதையில்  ஒரு  தந்தையின் அலைகழிப்புக்கள் நிறைந்த வாழ்க்கையை அவர் மகன் மூலம் அறிகிறோம். முதலில்  நாம் அவர் சிகாகோ வருவதைப் பார்க்கிறோம்ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கிறார். அதன்பின் அவர் அங்கிருந்து நியூ ஜெர்ஸிக்கு பொதுப் போக்குவரத்தில் செல்லக் காசில்லாமல் வழியில் செல்பவர்கள் தம் வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள் என்று கருணையை நம்பிக் கிளம்பி, இறுதியில் பெரும்பாலான தூரத்தை நடந்தே கடக்கிறார். ஓராண்டு காலம் தினமும் 20 மணி நேரம் வேலை செய்வதில் அவர் பூகோள ரீதியாக மட்டுமின்றிமனதளவிலும் கூட  தன் தாயகத்தை விட்டு வெகு தொலைவு வந்து விடுகிறார். வேறொரு பெண்ணை மணம் புரிந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அவர் தன் முதல் குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்யாமல் அப்படியே அனாதரவாய் விட்டுவிடுகிறார். பின்னர் தன் இரண்டாம் குடும்பத்தை விட்டுவிட்டு முதல் குடும்பத்துக்கு திரும்புகிறார்இறுதியில் அவர்களையும் பிரிகிறார். அவரது மகன், (அல்லது கதைசொல்லியைக் கொண்டு டியாஸ்) இவரது செயல்களை ஏற்றுக் கொள்வதுமில்லை,நியாயப்படுத்துவதும் இல்லை. மாறாய் அப்பா ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று புரிந்து கொள்ள மட்டுமே முயற்சி செய்கிறான். தன் வாழ்க்கைச் சூழலின் கடினத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அலைந்து திரிந்தாரா , அல்லது இயல்பாகவே அவர் எங்கும் நிரந்தரமாய் தங்கியிருக்கக்கூடிய சுபாவம் இல்லாதவராகுடியேறிகளுக்கு என்று விதிக்கப்பட்ட வாழ்வு அவரது நிலைகொள்ளாமைக்கு உதவும் பல பாதைகளைத் திறந்து கொடுப்பதாக இருந்தது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா?.


இந்த தொகுப்பில் உள்ள பல கதைகள் இரு தளங்களில் இயங்குகின்றன. முதலாவது, கதையின் மையக்கருப்பொருள். டியாஸ் போகிற போக்கில் தொட்டுக் காட்டுவதொடு நிறுத்திக் கொள்ளும் மற்றொரு கதை இரண்டாம் தளத்தில் இயங்குகிறது. டியாஸ் சொல்லாமல் சொல்லும் இந்தக் கதை கவனமற்ற வாசிப்பில் தவறவிடப்படலாம்..

 'Fiesta, 1980' என்ற கதை இதற்கு ஒரு உதாரணம். மேம்போக்கான வாசிப்பில்தன் அப்பாவின் வேனில் செல்லும்போதெல்லாம் தொடர்ந்து வாந்தி எடுக்கும் கதைசொல்லிஅவனது அத்தை அமெரிக்காவில் குடியேற்றம் பெற்றதைக் கொண்டாட குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றிய கதை என்றுதான் நாம் புரிந்து கொள்வோம். ஆனால் சிதைவின் விளிம்பில் உள்ள ஒரு குடும்பத்தையும் இதனூடே சித்தரிக்கிறார் டியாஸ். தன் அப்பாவின் ஆசைநாயகியைப் பற்றியும் அவளைத் தான் சந்தித்தது  பற்றியும் சொல்கிறார் கதைசொல்லி. ஆனால் அப்பாவின் கள்ளக் காதல் விவகாரம் குறித்து கதைசொல்லியின் அம்மாவுக்குத் தெரிந்திருந்ததா இல்லையா என்பது பற்றி எதுவும் எழுதுவதில்லை டியாஸ்.இருப்பினும்அம்மா அதை அறிந்திருந்தும் தன்  குழந்தைகளுக்காக விருப்பமில்லா மண உறவில் நீடிக்கிறாரா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. கதைசொல்லியும் அவனது சகோதரனும் சிறுவர்களாக இருக்கலாம்.ஆனால் அவர்களுக்கு கள்ளக்காதல் விவகாரம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறதுஅம்மாவிடம் அது பற்றி அப்பாவித்தனமாய் எதுவும் உளறிக்கொட்டி விடாமல் ஜாக்கிரதையாக இருந்து குடும்பத்தை உள்ளபடியே காப்பாற்ற உதவும் அளவுக்கு அவர்களுக்கு முதிர்ச்சியிருக்கிறது. எனவே அவர்களை அறியாப்[பருவத்தினர் என்று சொல்ல முடியாது. புது நாடுபுது உலகம்புது வாழ்க்கை முறை இவர்களை மிக விரைவிலேயே பெரியவர்களாக்கி விடுகிறது.



குழந்தைகள் விளையாட்டு போல் வன்முறையில் ஈடுபடுவது இரு கதைகளில் வெளிப்படுகிறது. இரண்டிலும் ஒரு சிறுவன் இருக்கிறான்அவனது முகம் குழந்தைப் பருவத்தில் ஒரு பன்றியால் அவலட்சணப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது- அதனால் அவன் எப்போதும் ஒரு முகமூடி அணிந்திருக்கிறான். பிற சிறுவர்கள் அவன் மீது கற்களை எறிந்தும் சீண்டிப் பார்த்தும் அவனது முகமூடியைக் கழட்டப் பார்த்தும் வதைக்கிறார்கள்- பொதுவாக அவர்களுக்கு அவன் வேடிக்கைப் பொருள்அவர்களுக்கான பொழுதுபோக்கு. சிறுவர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள் என்பதை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நினைவுபடுத்தும் கதைகள் இவை. 

'புலம் பெயர்ந்தவர்களைப்பற்றிய கதைகள் என்றவுடன்  தாய் நாடு புலம் பெயர்ந்த நாடுகலாச்சாரம்அ-கலாச்சாரம்அமெரிக்கர்கள் ஒழுக்கமற்றவர்கள்  போன்ற எளிய (உ.ம்  நம் வெகு ஜன இதழ்களில் காணக் கூடியகுறிப்பாக அமெரிக்கா பற்றிய கதைகள் ) குறுக்கல்களை டியாஸ் செய்வதில்லை. ஆம்இப்பாத்திரங்கள்   தங்கள் தாய் நாடு குறித்து ஏங்குகிறார்கள்அது இயல்பான ஒன்றே. அதே நேரம் அங்குள்ள சூழலையும்எதனால் தாங்கள் இந்நாட்டிற்கு வந்தோம்  என்பதையும் அவர்கள் மறப்பதில்லை. தாய் நாடு குறித்த விதந்தோதல்கள் இக்கதைகளில் இல்லைநேரடியாகச் சொல்லாவிட்டாலும் டொமினிகாவின் அரசமைப்பை/ பொருளியல் சூழலைஇவர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கான காரணிகளைச் சுட்டும் சித்திரத்தை சில கதைகளில் டியாஸ் தருகிறார். 


'Drown' கதை டொமினிகாவின் சமூக/பொருளியல் சித்திரத்தை அளிக்கும் அதே நேரத்தில்இன்னொரு தளத்தில்  
எது நடந்தாலும்,   ஒரு சில (பொருத்தமற்ற) சமூக விழுமியங்களுக்கு - அவற்றுக்கு ஒப்பாவிட்டாலும் -  உட்பட்டு இருக்கும் அதே வேளையில்,   வேறு சில சமூக விழுமியங்களை  எந்த முரண்பாட்டையும் உணராமல்   எளிதாக மீறுவதையும்  பேசுகிறது.  
இதன் கதைசொல்லி போதை மருந்து விற்கும் சிலல்றை வியாபாரிஅடுத்த கணம்/நாள் பற்றிய பெரிய கவலைகள் எதுவும் இன்றிஇக்கணத்தில் வாழ்பவன். அவனது நண்பன் பீடோவுக்குதான் தன் வாழ்க்கை குறித்து திட்டங்களும் இலட்சியங்களும் இருக்கின்றன. அவன் தற்பால் விழைவு கொண்டவன்.  கதைசொல்லியும் அப்படிப்பட்டவனாகவோ அல்லது இருபால் விழைவு கொண்டவனாகவோஅல்லது இது குறித்த வெறும் ஆர்வம் கொண்டவனாகவோ மட்டும் இருக்கலாம். பீடோவின் சமிக்ஞைகளை அவன் நிராகரிப்பதில்லை.  ஆனால் லத்தின் அமெரிக்காவுக்கே உரிய பேராண்மைக் கலாசாரம் (machismo), அவன் தன் உணர்வுகளை பூசி மெழுகவும் இருவரின் நட்புறவில் விலகல் உருவாகவும் காரணமாகிறது. போதை மருந்து பழக்கம்அதை விற்பது இவை  குறித்து எந்த தயக்கமும் இல்லாத கதைசொல்லி தற்பாலினன் ஒருவனின் நண்பனாகக காணப்படுவது/சுட்டப்படுவது  தன பேராண்மை குறித்து மற்றவர்கள் சந்தேகம் கொள்ளச் செய்யும் என்று  கவலைப்படுவது ஒரு முரண்நகைதான். இருவரில் பீடோதான் நல்ல வாழ்க்கை வாழப் போகிறான்ஆதர்ச குடிமகனாக இருக்கப் போகிறான். கதைசொல்லியின் வாழ்க்கை அவனைச் சிறைக்கோ அல்லது படுகொலைக்கோ கொண்டு செல்லப் போகிறது என்பதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை - பீடோவின் வாழ்வுமுறையோடு ஒப்பிடும்போது பேராண்மை கொண்ட ஒருவனாக  பார்க்கப்படுவதுதான் அவனது சமூக விழுமியங்களுடன் ஒத்துப் போவதாக இருக்கிறது. உலகொழுக்கு இவ்வாறே உள்ளது.


'Aurora' என்ற கதையும்   மனமுறிவு/ஒருதலைக்காதல்,  காதல்வயப்பட்டவர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொள்வது என  - போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவனால் சொல்லப்படும் - அக உணர்வுகளின்  பதிவாக ஒரு புறமிருக்க   அந்நாட்டில் போதையின் பிடியில் சீரழியும் இளைஞர்களின் சித்திரமாகவும் உள்ளது .  கதைசொல்லியின்  கிறக்கத்தில் மூடிய கண்களினுள் தெரியும்அவன்  வாழ்வின் உடைந்தவண்டல் நிகழ்வுகளையும், காட்சிகளையும் அதே  மங்கலான வெளிச்சத்தில் பயணம் செய்து காணும் வாசகன், அப்பயணம் கதைசொல்லியினுள் உருவாக்கிய/உருவாக்கும் அதே உணர்வுகளையும் தானும் உணர்கிறான்.


சிதிலமடைந்த பண்ணை வீடுகள் (haciendas), அடைத்துக்கொண்ட கழிவறைகள்எங்கும் வாந்திவாசல் அறையில்கூட மலம் என்று கழியும் வாழ்வைப் பார்க்கிறோம்- கதைசொல்லிக்கு ஆரோராவுடன் காதலும் வெறுப்பும் கலந்த உறவு இருக்கிறது. இருண்ட பண்ணை வீட்டிற்குள் தட்டுத் தடுமாறி அலைவதைக்  குறித்து I go from room to room, hand out in front of me, wishing that maybe just this once I'll feel her soft face on the other side of my fingers instead of some fucking plaster wall" என்று கதைசொல்லி குறிப்பிடுவது  அவனும் அரோராவும் நடைபிணங்கள் (Zombie) போல் வாழும் அன்றாட வாழ்வின் தடுமாற்றப் பாதையை முழுமையாய் விவரிப்பதாகவும்கூட இருக்கலாம். நல்லது ஏதேனும் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அவர்களின் பாதை சுய அழிவுக்கே கொண்டு செல்கிறது. சொல்லிக்கொள்ள எதுவும் நல்லதாக இல்லாத ஒரு தேசத்தை நோக்கிய குற்றச்சாட்டாகவும் இந்தக் கதை இருக்கிறது. இந்தத் தொகுப்பின்  கதைமாந்தர்கள் ஏன் எப்படிப்பட்ட ஆபத்துகளையும் எதிர்கொண்டு புலம்பெயர விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. எது நடந்தாலும்  சரிதம்மைச் சிறைப்படுத்தும்சிறுமைப்படுத்தும்  நரகத்திலிருந்து வெளியேற விரும்புகிறார்கள் இவர்கள். அமெரிக்க வாழ்வில் அவர்களது எதிர்பார்ப்புகள் பொய்ப்பது வேறு விஷயம்.

எப்படியோ புலம் பெயரும் இவர்களுக்கு அமெரிக்காவில் கிடைக்கும் வாழ்க்கையை  'Edison, New Jersey' என்ற கதையில்  பார்க்கிறோம்.  புலம் பெயர்ந்த  கதைசொல்லிவாங்கியவர்களின் வீட்டில் மேஜைகளை பொருத்தும்முதுகொடிக்கும் வேலை செய்பவர். வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்குப்  இரண்டு மூன்று முறை சென்றாலும்யாரும் கதவைத் திறப்பதில்லை. வீட்டினுள் ஒரு கறுப்பினப் பெண் இருக்கிறாள் என்றும் அவள் பணிப்பெண்ணாக இருக்கக் கூடும் என்பதும் மட்டும் தெரிகிறது. இறுதியில் அவர்களை  உள்ளே அனுமதிக்கும் அப்பெண்அங்கிருந்து வெளியேற விரும்புவதாகக் கூறுகிறாள்தன் முதலாளி குறித்து வசைச் சொல் ஒன்றை  வீசுகிறாள். அவளும் கதைசொல்லியின் நாட்டைச் சேர்ந்தவளே. மேஜையை பொருத்தி முடித்த பின் கதைசொல்லி அவளை வேறொரு இடத்தில் இறக்கி விடுகிறார். அவள் குறித்து அவருக்கு சந்தேகமாகவே உள்ளது. அதற்கேற்ப ஓரிரு வாரங்களில் அவள் மீண்டும் அந்த வீட்டிற்கே வந்து விட்டாள் என்பதை தெரிந்து கொள்கிறார். அவள் எதற்காக கதவைத் திறக்கக் கூட அச்சப்பட  வேண்டும்அது அச்சமா அல்லது பிறரைப் பார்க்கக் கூட பிடிக்காத மனநிலையா. எதுவாகினும் அதற்குப் பின்னால் உள்ள காரணம் துயரமானதாகத் தான் இருக்கக் கூடும். மீண்டும் அவள் அந்த  வீட்டிற்கு  திரும்பி வந்ததும் பலக் கேள்விகளை  எழுப்புகிறது. அமெரிக்க எனும் மாய உலகு தன்னுள் உள்ள அனைத்து கசப்புக்களைத் தாண்டியும் இவர்களை மீண்டும் மீண்டும் ஈர்க்கிறதா அல்லது தங்கள் தேசத்தின் துயர்களை விட இங்குள்ள துயர்களை எதிர்கொள்வது ஒப்பீட்டளவில்  எளிது என்ற எண்ணமாஎனில் இவர்களுடைய  சூழல் அங்கு எத்தனை துயர் மிக்கதாய் இருந்திருக்க வேண்டும்.


கருப்பொருள் காரணமாக இந்தக் கதைகள் ஒரே களத்தில் பயணித்தாலும்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் புதியதாய்தனித்துவம் கொண்டதாய்  மாறும் ரசவாதத்தை
பாத்திரங்களுக்கிடையே  உள்ள நுட்பமான வேறுப்பாடுகளும் ,  டியாஸின் எழுத்து நடையும் நிகழ்த்துகின்றன.  அவரின் உரைநடை  ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஒரு பாடலாய் ஒலிக்கிறது. அதன் தாளகதிக்கு ஒரு இசைத்தன்மை உண்டு. டொமினிகன் ரிபப்ளிக்கின் வெயிலையும் புழுதியையும் விவரிப்பதாகட்டும்அதன் குறுகிய கெட்டோக்களைச் (Ghetto) சித்தரிப்பதாகட்டும்அதன் காப்பி தோட்டங்கள்கடல் ("the surf exploding into the air like a cloud of shredded silver") என்று கரிபியன் உயிர் பெறுகிறது. போதையின் பிடியில் இருக்கும் கதைமாந்தர்களின் பகுதிகளும் கலங்கலான தன்மை கொண்டிருக்கின்றன.  கதைகளில் அதிக அளவில் ஸ்பானிஷ் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதும் அதன் இசைத் தன்மைக்கு உதவுகிறது. மிகச் சுலபமாகஎந்த பிரயத்தனமும் இல்லாமல் இதை எல்லாம் செய்கிறார் டிசாஸ். தனக்கென தனித்துவக் குரலை முதல் நூலின் கதைகளிலேயே  அவர் கண்டடைந்து  ஆச்சரியமான ஒன்று. 

இவற்றை புலம் பெயர் கதைகள்டொமினிகா நாட்டினவர் பற்றியவை என்று மட்டும் குறுக்குவது சரியான ஒன்றாக இராது. புலம் பெயர் அல்லாத வேறு காரணங்களால் சிறு வயதிலேயே தந்தை இல்லாத குடும்பமாக, மற்ற  உறவுக்கார குடும்பங்களை அண்டி இருக்க வேண்டிய நிலையில் உள்ள பெண்களை/சிறுவர்களை, அவர்களின் மன விகாசங்களை  யுவனின்/அமியின் உலகிலும்கணவன்/காதலன் வருவான் என்று 'நடனத்துக்குப் பின்காத்திருக்கும் லாராவையும்சில்வியாவையும்  நாம் அறிவோம்.  ஒரு பெரும் இழப்பின் சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் இந்தியத் தம்பதியரைப் பற்றிய ஜூம்பா லஹிரியின் (Jhumpa Lahiri) 'A Temporary Matter' கதையை இந்திய புலம் பெயர்ந்தவர்களின் கதை என்று மட்டும் குறுக்க முடியுமா என்ன. ஒரு நாட்டின், அதன் மக்களின்  பிரத்யேகச் சமூக/பொருளாதாரச் சூழல், அவர்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் என தனித்துவம் கொண்டதாக இருப்பதோடு  மானுடத்தின் உலகளாவிய வாதையை பேசுவதால், இக்கதைகளை வாசகன் இதுவரை அறிந்திராத, புதிதான ஒன்றாக உணரும் அதே நேரத்தில் அவற்றின் உணர்வுச் சரடுகளுடன் தன்னை  இயல்பாக பிணைத்துக்கொள்ளுமளவிற்கு அணுக்கமாகவும் உணர்கிறான்.

பின்குறிப்பு:
இந்த முதல் தொகுப்பிற்குப் பின் ஒரு நாவல் மற்றும் இன்னொரு சிறுகதைத் தொகுப்பை டியாஸ் வெளியிட்டுள்ளார். Drown தொகுப்போடு இணைந்தும் விலகியும் செல்லும் இந்த இரு நூல்களும்
புலம் பெயர்ந்தவர்கள் பற்றி பேசுவதுடன் உலகளாவிய தன்மை கொண்டுள்ளன. 

 'The Brief Wondrous Life of Oscar Wao' நாவல், பெண்ணின் நேசத்திற்காக ஏங்கும் - எத்தனைப் பெண்களை கவர்கிறார்களோ அதற்க்கேற்ப்ப மதிக்கப்படுவர் என்ற லத்தீன் அமெரிக்க ஆண்களின் பேராண்மை (machismo) கலாச்சாரத்தைப் (அல்லது அப்படி பொதுப்பரப்பில் உருவாகியுள்ள தோற்றத்தைப்) பற்றிய பகடியாகவும் கொள்ளத்தக்க -  மிகவும் பருமனான  Oscar Waoவின்  மென்னுணர்வுகள் பற்றிய நாவலாக இருப்பதோடு, Dominica அதன் சர்வாதிகாரி  'Rafael Trujillo'ன் ஆட்சியின் கீழ்  நசுக்கப்பட்ட விதத்தின் இலக்கிய சாட்சியமாகவும் உள்ளது. (அதே காலகட்டத்தைப் பற்றி பேசும் Mario Vargas Llosaவின் 'The Feast of the Goat'  நாவலையும் இத்துடன் இணைத்து வாசிக்கலாம்). இந்நாவல் அடிக்குறிப்புகளை உபயோகித்துள்ள  முறையில் , David Foster Wallaceஐ நினைவு படுத்துவதும்   சுவாரஸ்யமான ஒன்று. அத்துடன் வடிவ உத்திகளில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவர் விழைவையும் உணர்த்துகிறது. 

அவருடைய அண்மைய சிறுகதை தொகுப்பான 'This Is How You Lose Her'  ஆண்-பெண் உறவில் நேர்மையைப் பேண முயலுதல், அதில் பெரும்பாலும் தோல்வி அடைதல்,  தாய்-மகன்/சகோதர  உறவு , இவற்றின் உள்ளூடாக பொதுவாக எந்த உறவைப் பேணுவதிலும் உள்ள சிக்கல்கள் /சிரமங்கள் குறித்த கேள்விகளை/சிந்தனைகளை புலம் பெயர்ந்தவர்களின் பிண்ணனியில்  எழுப்புகிறது.