Tuesday, December 9, 2014

DAVID MITCHELL – நாவல் வடிவங்கள்/ வகைமைகளைக் கடந்து செல்லும் கதைசொல்லி

பதாகை இதழில் வெளிவந்தது - 
http://padhaakai.com/2014/11/23/david-mitchell-two-novels/
---------------------------------
அறிவியல்/ குற்ற/ அதிபுனைவுகளை ழானர் எழுத்து என்று வகைப்படுத்தி, அவற்றை இலக்கியப் புனைவுகளிடம் இருந்து வேறுபடுத்தக் கூடாது என்றும், எந்தப் புனைவாக இருந்தாலும் அதன் தரம் மட்டுமே அதற்கான இடத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் பேசும் குரல்கள் பல காலமாக இருந்து வந்துள்ளன என்றாலும், இது குறித்த விவாதங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.. Guardian இதழில் இது குறித்து இந்த வருடம் நடந்த தொடர் விவாதங்களின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.
ழானர்- இலக்கிய எழுத்துக்கள் என்ற வேறுபாடு இன்னும் தொடர்ந்தாலும், இலக்கியப் படைப்பாளிகள் என்றழைக்கப்படுபவர்களில் சிலர் ழானர் எழுத்துக்களை சாதகமாகவே பார்க்கிறார்கள். “I lament what I take to be a trend against the genres. It might well be agreed that the best of serious fiction, so to call it, is better than anything any genre can offer. But this best is horribly rare, and a clumsy dissection of the heart is so much worse than boring as to be painful, and most contemporary novels are like spy novels with no spies or crime novels with no crimes, and John D. MacDonald is by any standards a better writer than Saul Bellow, only MacDonald writes thrillers and Bellow is a human-heart chap, so guess who wears the top-grade laurels?” என்கிறார் Kingsley Amis.
இது ஒருபுறமிருக்க, சில எழுத்தாளர்கள் ஒரு ழானரை எடுத்துக் கொண்டு அதன் கூறுகளை அப்படியே பயன்படுத்தாமல், அந்த வகைமையின் எல்லைகளைக் கலைக்கும்/ விரிவாக்கும் புனைவுகளையும் எழுதி வருகிறார்கள். பால் ஆஸ்டரின் (Paul Auster) ‘New York Trilogy’ (மீபொருண்மை தன்மையோடு), மைகல் ஷேபனின் ’ (Micheal Chabon) ‘The Yiddish Policemen’s Union’ (மாற்று வரலாறு) நாவல்கள் குற்றப் புனைவுகளின் Noir கூறுகளைக் கலைத்துப் போட்டன. இத்தகைய படைப்புக்கள் ‘genre benders’ என்றழைக்கப்படுகின்றன. (ஷெர்லாக் ஹோம்ஸ் புனைவுகளுக்கான அஞ்சலியாக, பெயர் குறிப்பிடப்படாத, ஆனால் ஹோம்ஸை நினைவூட்டும் முதியவர் துப்பறியும் ‘The Final Solution’ என்ற குறுநாவலையும் ஷேபன் எழுதி உள்ளார்.) இத்தகைய ‘genre bender’ நாவல்கள் அதிகமும், குற்றப் புனைவை சார்ந்து இருப்பதைக் காணமுடிகிறது. நமக்கு முதலில் அறிமுகமாகும் எழுத்து (மாயாவி, வாண்டு மாமாவின் துப்பறியும் நூல்கள், Hardy Boys என நாம் வசிக்கும் நாட்டைப் பொறுத்து அறிமுகப் படைப்புக்கள் மாறலாம்) பெரும்பாலும் துப்பறியும்/சாகச எழுத்துக்களாகவே இருப்பதால், அதன் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்.
‘இலக்கிய’ எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல் ழானர் எழுத்தாளர்களும் இத்தகைய ‘genre bender’ படைப்புக்களை எழுதுகிறார்கள். Lauren Beukes எழுதிய ‘The Shining Girls’ நாவலில், காலத்தில் பயணம் செய்து (time travel), பல காலகட்டங்களில், கொலைகள் செய்பவன்தான் எதிர்-நாயகன். இவனின் காலப் பயணம் எப்படி சாத்தியமாகிறது என்பதை ஆசிரியர் விரிவாக விளக்காவிட்டாலும், தொடர் கொலைகள் (serial killer) வகைமையை அறிவியல் புனைவில் அதிகம் உபயோகிக்கப்படும் ஒரு tropeஉடன் இணைத்து வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார்.
2004ஆம் ஆண்டு வெளிவந்த ‘Cloud Atlas’ நாவலில், டேவிட் மிட்ஷல் (David Mitchell) ‘Genre Bender’ என்பதை இன்னும் விரிவாக்கினார். நாம் முதலில் பார்த்த நாவல்கள் ஒரு குறிப்பிட்ட வகைமையை எடுத்துக்கொண்டு அவற்றை வேறு முறையில் எழுத முயன்றன. 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகள், நிகழ்காலம் மற்றும் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் நடக்கும் ‘Cloud Atlas’ன் கதைகளோ. பல வகைமைகளில் உள்ளன. “The First Luisa Rey Mystery’ த்ரில்லர் என்றால், “An Orison of Sonmi 451′ Dystopian சூழலை விவரித்து அதில் வெடிக்கக் காத்திருக்கும்/ வெடிக்கும் புரட்சியைப் பதிவு செய்கிறது. “The Ghastly Ordeal of Timothy Cavendish” இலக்கியச் சூழலைக் களனாகக் கொண்ட நகைச்சுவைப் பகுதியாக உள்ளது.
வேறுவேறு காலகட்டங்களில் நடக்கும் இந்த ஆறு கதைகளையும் இணைக்கும்/ இணைப்பது போல் தோற்றமளிக்கும் பொது இழை ஒன்றையும் வைத்திருந்தார் டேவிட். இலக்கியப் படைப்பு என்று வரையறுக்கப்பட்ட ஒன்றில் எந்த ழானரின் கூறுகளும் இருக்கலாம் என்பதை ‘Cloud Atlas’ நாவலில் வெற்றிகரமாக உணர்த்தினார்.
இந்த ஆண்டு வெளியான, 6 பகுதிகளாக பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் அவரின் ‘The Bone Clocks’ நாவலுக்கும், ‘Cloud Atlas’க்கும் வடிவ ஒற்றுமை இருப்பது போல் தோன்றினாலும், இரண்டும் சந்திக்கும் இடங்களைவிட விலகும் இடங்களே அதிகமாக உள்ளன. இந்த இரண்டு நாவல்களின் விமர்சனமாக இல்லாமல் இரண்டின் கட்டமைப்பையும், அவற்றின் ஒற்றுமை/ வேற்றுமைகளையும், அவை வாசகனுக்குத் தரும் அனுபவங்களையும் பார்க்கலாம்.
‘Cloud Atlas’ன் உரைநடையும்/ உள்வடிவமும் அந்தந்தப் பகுதியின் களன்/ காலகட்டம்/ ழானர் சார்ந்து மாறுகிறது. “An Orison of Sonmi 451″ வறண்ட நடையிலும், “Letters from Zedelghem” கடித வடிவிலும், “The Pacific Journal of Adam Ewing” நாட்குறிப்பாகவும் சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில் உலகம் ஒரு பேரழிவை (apocalypse) சந்தித்த பிறகு நடக்கும் “Sloosha’s Crossin’ an’ Ev’rythin’ After” பகுதியின் நடை/ உரையாடல்கள், மொழியை பெரும்பாலும் மறந்து, மீளுருவாக்கம் செய்ய முயல்பவர்கள் பேசுவது போல் உள்ளது. “The First Luisa Rey Mystery’ பகுதி, பரபரப்பாக நடக்கும் சம்பவங்கள், எதிபாராத திருப்புமுனைகள் என த்ரில்லரின் நடையைக் கொண்டுள்ளது.
முரகாமியின் படைப்புக்களில் மர்மம், அதி-புனைவின் கூறுகள இருந்தாலும் அவர் ழானர் என்பதைப் பற்றி self-consciousஆக இருப்பது போலவோ, அவர் அதன் கூறுகளை – அதன் நடை/ கட்டமைப்பு -அப்படியே உபயோகிப்பதைப் பற்றியோ , அதை மீறுவதைப் பற்றியோ கவலைப்படுவது போல் தோன்றுவதில்லை . ழானர் என்பதை முதலில் தேர்வு செய்து எழுதுவது போல் இல்லாமல், அதன் கூறுகள் நாவலின் ஆரம்பப் புள்ளிகளாக இருந்தாலும், நாவலின் போக்கில் தொடர்ந்து வந்தாலும், அவற்றை தான் சொல்ல நினைக்கும் கதைக்கு எப்படி பயன்படுமோ, அந்தளவுக்கே உபயோகிக்கிறார். எனவே ‘Genre Bender’ என்பதை அவர் மிக இயல்பாகச் செய்கிறார் என்று சொல்லலாம். 1Q84ஐ காதல் கதையாகவும் பார்க்கலாம், – சில இடங்களில் திகிலூட்டும்- அதிபுனைவாகவும் பார்க்கலாம். போர்ஹெஸின் கதைகளில் உள்ள துப்பறியும் அம்சம் பற்றியும் இங்கு நினைவு கூரலாம், இவற்றை அவர் genre-bender செய்ய வேண்டும் என்று எண்ணி எழுதினார் என்று கூறுவதற்கில்லை. எட்கர் அலன் போ (Edgar Allan Poe) மற்றும் போர்ஹெஸ் பற்றிய ஒரு கட்டுரை இங்கே
Cloud Atlas, The Bone Clocks நாவல்களுக்கிடையிலும் இந்த வித்தியாசத்தைக் காணலாம். முதலாவதில் வகைமை/அதை மீறுவது குறித்த பிரக்ஞை தெரிகிறது, இரண்டாவதில் கதை சொல்லலுக்கு உதவும் அளவிலேயே மர்மமும்/ அதி-புனைவும் உள்ளன.
காலம் நேர்கோட்டில் செல்லாமல் முன் பின்னாகச் செல்லும் ‘Cloud Atlas’ நாவல் போல் இல்லாமல், 1984ஆம் ஆண்டு வீட்டைவிட்டு ஓடிப் போகும் ஹாலி (Holly) சந்திக்கும் விளங்கிக்கொள்ள முடியாத அனுபவங்களோடு முடியும் ‘The Bone Clocks’ இன் முதல் பகுதி, 90கள், புத்தாயிரத்தின் முதல் தசாப்தம் என நேர்க்கோட்டில் சென்று 2048இல் முடிகிறது. ஹாலி அனைத்துப் பகுதிகளையும் துல்லியமாக இணைக்கும் கண்ணியாக இருந்தாலும், அதற்கான காரணம் ஐந்தாம் பகுதி வரை நமக்குத் தெரிவதில்லை. நாவலின் அனைத்து பகுதிகளும் அவர் பார்வையிலேயே சொல்லப்படாமல், மற்ற பாத்திரங்களின் கோணத்திலும் சொல்லப்படுகின்றன.
சில மர்ம நிகழ்வுகளோடு முடியும் முதல் பகுதி ஹாலி தன்னையறியாமல் எதிலோ சிக்கிக் கொண்டுள்ளார் என்ற உணர்வைத் தருகிறது. திகிலூட்டும் அமானுஷ்யம் நிறைந்த இரண்டாம் பகுதி அதை உறுதிப்படுத்தினாலும், அடுத்தடுத்த பகுதிகளில் ஹாலியின் குடும்ப வாழ்க்கை, நிகழ்கால /அண்மைக்கால/ எதிர்கால இலக்கியச் சூழல் என திசை மாறுவது போல் தோன்றினாலும், ஹாலியின் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களால், அவரைச் சுற்றியிள்ள அமானுஷ்யம் கலந்த மர்மத்தை அவை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. ஐந்தாம் பகுதியில் மர்மம் விடுவிக்கப்பட்டு, அதி-கற்பனைக் கதைகளில் வரும் சாகச நிகழ்வோடு முடிகிறது. 2048ல் நிகழும் இறுதிப் பகுதியில், நாவல் மீண்டும் இன்னொரு வகைமையின் கூறுகளை எடுத்தாள்கிறது.
அடிப்படையில், நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் முடிவே இல்லாத யுத்தத்தில், தங்களுக்கான கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் உள்ளவர்கள், தாங்கள் அறியாமலேயே ஒரு தரப்போடு பிணைக்கப்பட்டவர்கள், பற்றிய மர்ம, அதி-புனைவாக இந்த நாவல் உள்ளது. Cloud Atlas போல் பல வகைமைகள் தனித்தனியாக தெரிவது போல் இல்லாமல், இதன் உரைநடையும்/ உள் கட்டமைப்பும் அதிக மாற்றமில்லாமல் ஒரே பாணியில் உள்ளது.
நாவலின் பெரும்பகுதி வரை அதன் முடிச்சு அவிழா விட்டாலும், ஹாலிதான், நாவலின் சம்பவங்களுக்கான பொது இழை என்பதும் , வேறு பாத்திரங்களின் கோணத்தில் நாவலில் இருந்தாலும், நாவல் அவரைச் சுற்றியே நடக்கிறது என்றும், ஒரே கதையின் பல பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதும் வாசகனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. எனவே இறுதியில் மொத்த நாவலுக்கான முழுமையை நாம் இயல்பாகவே எதிர்பார்க்கிறோம். ஆனால் நாவலின் மர்மங்கள் இறுதியில் அவிழ்க்கப்பட்டாலும், சில விஷயங்கள் தொக்கி நிற்கின்றன.
இந்த எதிர்பார்ப்பை ‘Cloud Atlas’ நாவலுடன் பொருத்திப் பார்க்கலாம். அதன் கட்டமைப்பு அது குறித்த முழுமையை எதிர்பார்க்கச் செய்வதில்லை, ஒவ்வொரு தனிக்கதையிலும், அந்த வகைமையின் கூறுகளை, அது சார்ந்த முழுமையை மட்டுமே எதிர்பார்க்கிறோம். அனைத்துக் கதைகளையும் இணைப்பது என்பது ‘டேவிட்’ நாவலில் பொதித்து வைத்திருக்கும் கண்ணி (birthmark) மட்டுமல்ல, அதைச் சார்ந்த வாசகனின் கற்பனையும்தான் என்பதால், ஆசிரியர் மெனக்கெட்டு அனைத்தையும் இணைக்க/விளக்க வேண்டியதாக இல்லை.
‘The Bone Clocks’ நாவல் முழுதும் ஹாலியின் கோணத்தில் நகர்ந்திருந்தால், மற்ற பாத்திரங்களை ஹாலியின் பயணத்தில் வரும் சக-பிரயாணிகள் மட்டுமே என்று விட்டுவிடலாம், அல்லது  ‘Cloud Atlas’ போல் வெவ்வேறு கதைகளாக இருந்திருந்தால், அந்தக் கதைகளின் எல்லைக்குள் மட்டுமே பாத்திரங்களின் வார்ப்பை புரிந்து கொள்ளலாம். மாறாக, ஒரே பொது இழையோடு நகரும், பல பாத்திரங்களின் கோணத்தில் விரியும் இந்த நாவலில், மென்மையும்/ கடினமும் கலந்த ஹாலியைத் தவிர வேறு எந்தப் பாத்திரமும் அவை அடைந்திருக்கக் கூடிய உயரத்தை எட்டுவதில்லை. நாவலின் இரண்டாம் பகுதியின் முக்கிய பாத்திரமாக வரும் ‘ஹ்யுகோ லாம்ப் (Hugo Lamb)’ ஒரு உதாரணம்.
எந்த அறச் சிக்கலும் இல்லாதவராக முதலில் தோற்றமளிக்கும் ஹ்யுகோ, மெல்ல மெல்ல தன்னுள், இருளின் பால் உள்ள ஈர்ப்பை உணர்வதும், அந்தப் பகுதியின் இறுதியில் தன் வாழ்வை மாற்றியமைக்கப் போகும் தேர்வைச் செய்வதும் (Omen நாவல்களின் இரண்டாம் பகுதியில் தன்னைச் சாத்தானின் குழந்தை என்று அதன் முக்கியப் பாத்திரம் உணர்ந்து கொள்வதைப் போன்ற சூழல். ஹ்யுகோ சாத்தானின் குழந்தை என்றெல்லாம் இந்த நாவலில் இல்லை), திகிலூட்டுபவை, மறக்கவியலாத எதிர்-நாயகனாக இருந்திருக்கக் கூடிய இந்தப் பாத்திரம், நாவலின் அடுத்த பகுதிகளில் அதிக கவனம் பெறாமல் இருந்து விடுகிறது.
ஹ்யுகோ லாம்ப் வரும் பகுதியும், இலக்கிய உலகின் நிகழ்வுகளை/ இலக்கியத் திருவிழாக்களின் அரசியலை மெல்லிய நகைச்சுவையோடு விவரிக்கும் நான்காம் பகுதியும், Cloud Atlasன் ‘Letters from Zedelghem’, ‘The Ghastly Ordeal of Timothy Cavendish’ பகுதிகளை முறையே நினைவூட்டினாலும், அவற்றின் நகலாக இல்லாமல், ஒரு விஷயத்தை முதலில் ஒரு விதத்தில் எழுதி, பிறகு அதை நீட்டித்தோ அல்லது வேறு கோணத்திலோ எழுதுவதை ஒத்துள்ளது. உதாரணமாக, இருவருக்கும் உள்ள அறம் சார்ந்த கவலையின்மை என்ற ஒற்றுமைக்கப்பால், ‘Cloud Atlas’ ல் வரும் Robert Frobisher பாத்திரத்தின் இன்னும் இருண்மையான வடிவமாக ஹ்யுகோவைப் பார்க்கலாம். Robertல் அவ்வப்போது தென்படும் சுயவிமர்சனம், தோல்வி அடையும்போது அதைச் சிரிப்புடன் எதிர்கொள்ளும் தன்மை, இவை அவனைச் சில நேரம் ‘விரும்பத்தக்க போக்கிரியாக’ (வாசகனுக்குத்தான், அவன் சேட்டைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல) காட்டினால், நெருங்கிய நண்பன் என்று தன்னை நம்புபவனையே ஏமாற்றும் ஈவிரக்கமற்றவனாக, தன் பாதையில் யார் வந்தாலும் அழிக்கத் துணிபவனாக உள்ளான் ஹ்யுகோ. அவன் மனதிலும் ஈரம் உண்டு என்பதற்கான ஓரிரு சம்பவங்கள் நடந்தாலும், நாவலின் கட்டமைப்பின் காரணமாக, அது விரிவாக்கப்படவில்லை.
‘Cloud Atlas’ நாவலின் “The Pacific Journal of Adam Ewing” பகுதியின் ஒரு அம்சமாக, பழங்குடியினர் மீது ஐரோப்பியர்கள் செலுத்திய வன்முறை பற்றிய பதிவுகள் வருகின்றன. அவை விரிவாகச் சொல்லப்படாவிட்டாலும், நாவலின் அனைத்து பகுதிகளையும் நாம் தனித்தனியான ஒன்றாகவே பார்ப்பதால், அடுத்த பகுதிகளுக்குச் செல்லும்போது வித்தியாசமாகத் தெரிவதில்லை.
ஆனால், ஹாலியைச் சுற்றியுள்ள மர்மத்தை அறிய முனையும் வாசகன், இன்றைய காலகட்டத்தில், ஈராக்கில் அமெரிக்கா நடத்தும் யுத்தம் பற்றிய சித்தரிப்புகளை ஒரு பாத்திரத்தின் பார்வையில் படித்து, பின்பு வேறு விஷயத்தில் இன்னொரு பாத்திரத்தின் கோணத்தைப் பார்க்க ஆரம்பிக்கும்போது (இரண்டிலும் ஹாலியின் மர்மத்தை நினைவூட்டும் சம்பவங்களோடு), யுத்தச் சித்தரிப்பு பாதியில் விட்டுவிட்டது போல் தோன்றுவதுடன், அவை நாவலுக்கு பயனளிக்காத, டேவிட்டின் அரசியல் சார்பை முன்வைக்கும் பதிவுகளாகவே தோன்றுகிறது.
பாத்திரப் படைப்பிலோ , கதையம்சத்திலோ டேவிட்டின் தோல்வியாக இவற்றைப் பார்க்கவேண்டியதில்லை. நாவலின் கட்டமைப்பு சார்ந்து வாசகனுக்குள் எழும் எதிர்பார்ப்பின் தவிர்க்க முடியாத அம்சம் இது. ‘Cloud Atlas’ ல் வடிவம்/ உரைநடை இவற்றில் சில உத்திகள் செய்துள்ளதால், வாசகனுக்கு அந்தந்தப் பகுதிகளின் முழுமையே முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு பகுதி மற்ற பகுதிகளுடன் எந்தளவுக்கு இணைகிறது என்பதில் அவன் அக்கறை கொள்வதில்லை, ஏனென்றால் ஒவ்வொரு கதையும் இன்னொன்றிலிருந்து முற்றிலும் வேறானது என்று அவன் அறிகிறான். அவற்றை இணைப்பதே கடினம் எனும்போது, அப்படிச் செய்யும் சின்ன விஷயம் (birthmark) கூட வாசகனுக்குப் போதுமானதே.
”The Bone Clocks’ நாவலில் கதைசொல்லலில் சில உத்திகளைச் செய்வது நாவலின் மர்மம்/ சுவாரஸ்யத்திற்கு உதவினாலும், முன்பே பார்த்ததுபோல், இது அடிப்படையில் நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவல்தான். எனவே ஒவ்வொரு பகுதியும் அடுத்த பகுதியை எப்படி முன்னகர்த்துகிறது, பாத்திரங்கள் நாவலின் போக்கில் என்ன பரிணாமம் கொள்கிறார்கள் என்று வழமையான (conventional) நாவலில் எதிர்பார்ப்பதையே இதிலும் வாசகன் எதிர்பார்க்கிறான் (The Bone Clocksஐ தனி நாவலாக மட்டும் பார்க்கவேண்டும் என்பதில்லை. தொடர் நாவல்களாக எழுதப்படுவதற்குரிய சாத்தியங்களை கொண்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டால் ஹாலி தவிர்த்த மற்றப் பாத்திரங்கள் இன்னும் முழுமை அடையக்கூடும்.)
பல வேறுபாடுகள் இருந்தாலும், மொத்தமாக இல்லாமல், தன்னளவில் முழுமையான கதைகள்/ பாத்திரங்கள் கொண்ட ‘Cloud Atlas’ம் சரி, முழு நாவலாக அர்த்தமளிக்கும் ஆனால் முழுமை பெறாத பாத்திரங்கள்/ ஒட்டாத சம்பவங்கள் கொண்ட ‘The Bone Clocks’ம் சரி கதைசொல்லலில் உள்ள நேர்த்தி/ சுவாரஸ்யம் இவற்றில் ஒரே போல் வெற்றி பெறுகின்றன.
“Magic is very hard to get right, magic is highly flammable (which means the same as inflammable)…… But if you get the magic right — and I hope I did, and certainly I did my best — then you get the joy of a double illusion. Writing stories is already an illusion: you make what does not exist, exist. See?”என்கிறார் டேவிட். இங்கு மாயம் என்பதை நாவலில் உள்ள அதி-புனைவு என்பதாக மட்டும் கொள்ளாமல் , அது வாசகனை எந்தளவுக்கு வசியம் செய்கிறது என்றும் பார்த்தால், டேவிட் குறிப்பிடும் double illusionஐ நாம் உணர முடியும்.
உரைநடை மாற்றங்கள்/ காலத்தைக் கலைத்துப் போடுதல்/ பல வகைமைகளை ஒரே நாவலில் எழுதுதல் போன்ற சேட்டைககளைத் தாண்டி, அடிப்படையில், டேவிட் மாயங்களை உருவாக்கும் சிறந்த கதைசொல்லியாக உள்ளார்.

Monday, November 24, 2014

கார்ல் ஹையசனின் நகைச்சுவைக் குற்றப்புனைவு - Carl Hiaasen

பதாகை இதழில் வெளிவந்தது - 
http://padhaakai.com/2014/11/16/carl-hiaasen/
---------------------------------------------------------------
பதாகையில் மொழிபெயர்க்கப்பட்ட “நகை எனும் மெய்ப்பாடு” என்ற பதிவின் மூல கட்டுரை, இவ்வாறு ஆரம்பிக்கிறது- “When moral or political decisions are at stake, we often make use of catch-phrases drawn from a repertoire of available drama and literature. For we understand that both our actions and how they are perceived depend on how we frame them. Comedy, of all genres, appears to be the one we covertly use all the time without, meanwhile, fully appreciating its ability to portray and explore the intensity and integrity of our interactions with others. “
இயன் ரேங்கின் (Ian Rankin) குற்றப்புனைவுகள் பற்றிப் பேசும்போது “But the best crime fiction today is actually talking to us about the same things big literary novels are talking about. They are talking about moral questions, taking ordinary people and putting them in extraordinary situations, and saying to the reader, “How would you cope in this situation?” என்கிறார். அன்றாட வாழ்வில் “தார்மீகத்தை” கடைபிடிக்க முயலும்போது மனிதனுள் எழும் கேள்விகள், அவன் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசும் இந்த இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே புள்ளியில் இணையும்போது நகைச்சுவைக் குற்றப்புனைவு (comic crime fiction) என்ற வகைமை உருவாகிறது.
தங்கள் திறமையின்மையால் முட்டாள்தனமாக நடந்து கொள்ளும், ஆனால் அதிர்ஷ்டத்தால் வழக்குகளில் உண்மையைக் கண்டுபிடிக்கும் சாம்பு கதைகள், ‘Pink Panther’ பட வரிசை போன்றவற்றுக்கும் , விசாரணை செய்யும் இருவரில் ஒருவர் தீவிரமானவராக இருந்து இன்னொருவர் அவ்வப்போது சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தும் விளையாட்டு ஆசாமி வரும் படைப்புகளுக்கும், இந்த வகைமைக்கும் வித்தியாசம் உள்ளது.
என்ன வித்தியாசம்? கார்ல் ஹையசனின் (Carl Hiaasen) ‘Bad Monkey’ நாவலின் ஆரம்பத்தில் , தேன்நிலவுக்கு வந்துள்ள தம்பதியர், துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்கள். என்ன கொடூரமான நிகழ்வு என எண்ணும்போதே, கார்ல் அதைக் கலைத்துப் போடுகிறார். எப்படி? மேற்கத்திய நாகரீகத்தில் நடுவிரலை மட்டும் எதிராளியிடம் நீட்டுவது (flipping the bird) , அவனை அவமானப்படுத்தும் செயலாகப் பார்க்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட கையின் நடுவிரலும் அதுபோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது சட்டென்று சூழலின் இறுக்கத்தைக் குறைக்கிறது. ‘Gallows/Ghoulish Humor’ மிகுந்திருக்கும் ‘Stuart Macbride’ போன்றோரின் படைப்புகளைச் சட்டென்று இந்த நிகழ்வு நினைவுபடுத்தினாலும், அவற்றுடனும் ஒப்பிட முடியாது. ஒரு விபரீத நிகழ்வை சட்டென்று இலகுவாக்கும் இந்தப் புனைவுகள், அதிக வன்முறையையோ/ ரத்த விரயத்தையோ கொண்டிருப்பதில்லை.
காவல்துறை அதிகாரியான கதாநாயகன்,தன் காதலியின் (வயதான) கணவனின் குதத்தை தூசகற்றும் கருவியின் (vaccum cleaner), குழாயினால் தாக்கியதால், உணவக உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யும் வேலைக்குப் பணிக்கப்படுகிறான். மீண்டும் பழைய பணியில் சேர துண்டிக்கப்பட்ட கை பற்றிய விசாரணையை தனியாக செய்கிறான்.
இப்படி ஒரு கதாநாயகனா? இவர் மட்டுமல்ல. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், ஆண்களைப் பாலியல் வேட்டையாடும் சூனியக்கார மூதாட்டி, துர்க்குணங்கள் கொண்ட குரங்கு, பிணவறையில் உறவு கொள்ள விரும்பும் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவப் பெண் போன்ற ‘oddball’ பாத்திரங்களைக் கொண்டிருக்கிறது இந்த நாவல். இப்படிப்பட்ட பாத்திரங்களினால் மிக எளிதாக குற்றப் புனைவு பற்றிய ‘farce’ஆக மாறி இருக்கக்கூடிய இந்த நாவல், ஒரு கொலை, அதைப் பற்றிய விசாரணை, முடிச்சுகள் அவிழ்தல் என விரிந்து, (பல அதிநகைச்சுவை நிகழ்வுகள் இருந்தாலும்) நாம் படிப்பது குற்றப் புனைவு என்ற உணர்வையே தருகிறது.
கார்லின் “Skinny Dip” நாவல், அதன் நாயகி கப்பலிலிருந்து கீழே விழுவதுடன் (தள்ளப்படுவதுடன்) ஆரம்பிக்கிறது. திடுக்கிடும் சம்பவமான இதை, “I married an asshole…” என்று நம் நாயகி நினைப்பதாகக் கூறி, கார்ல் சம்பவத்தின் பதட்டத்தை சமன் செய்கிறார். (நாயகியின் மன ஓட்டத்தை அறியும் வாசகன், அவர் தப்பிப்பார் என்று உடனே யூகிக்க முடியும்). கணவனால் ஏமாற்றப்பட்ட நாயகி வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் வழமையான கதைதான் என்றாலும், பழிவாங்கும் பாவையாக மாறி கணவனைத் துன்புறுத்த நாயகி தீட்டும் திட்டங்களில் உள்ள நகைச்சுவை, கதை சொல்லப்படும் விதத்தில் இந்த நாவலை வேறுபடுத்துகிறது. கல்லறை சிலுவைகளைத் திருடி தன் வீட்டில் நட்டு வைக்கும் ஆசாமி, அபத்தமான சந்தேகத்தால் மனைவியை கொல்லத் துணியும், தன்னைப் பற்றிய அதீத சுயமதிப்பீடு கொண்ட, ஆனால் உண்மையில் அரைவேக்காடு ஆசாமியான நாயகியின் கணவன், மலைப்பாம்புகளை வளர்க்கும் காவல்துறை அதிகாரி, என இதிலும் விசித்திர பாத்திரங்கள், சம்பவங்கள் இருந்தாலும் “Heaven has no rage like love to hatred turned, Nor hell a fury like a woman scorned” என்ற கூற்றை அப்படியே பிரதிபலிக்கும் நாவல் இது. நாயகிக்கு வஞ்சம் தீர்ப்பதில் உள்ள கோபத்தை, நகைச்சுவை மட்டுப்படுத்துவதில்லை. பதாகை கட்டுரையின் மூலத்தில்  Comedy, on the contrary, begins badly, with a complication, yet ends well, in a resolution of the conflict. This resolution often includes a seemingly bawdy and exuberant celebration of love and life. என்று சொல்லியுள்ளபடி, இரண்டு நாவல்களும் பிரச்சனையுடன் ஆரம்பித்து சுபமாக முடிகின்றன.
சரி, இவற்றில் உள்ள ‘moral or political decisions are at stake’ என்ன? கார்ல் பல ஆண்டுகளாக ‘ப்ளோரிடா’ மாகாணத்தில் சூழியல் மாசுபடுவதைக் குறித்து கட்டுரைகளும்/நாவல்களும் எழுதி வருகிறார் வருகிறார். ப்ளோரிடா மாகாணத்தை களமாகக் கொண்டுள்ள இந்த நாவல்களில் சூழியல் குறித்த அக்கறையின்மை, இயற்கைச் சூறையாடலுக்கு உடன்போகும் லஞ்சலாவண்யங்கள், ஒரு குற்றத்தின் பின்னணியில் பகடியாக விவரிக்கப்படுகின்றன. இதுவரை மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படாத, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகளாக (resort) மாறி வருவது ‘Bad Monkey’ நாவலின் அடிநாதமாக உள்ளது. சூழியல் அழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் “Everglades” என்ற இடம், அதைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள், அவற்றில் மலிந்துள்ள ஊழல் “Skinny Dip” நாவலின் மைய்ய இழை. (நிஜத்திலும் Evergladesன் அழிவை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது)
‘Bad Monkey’யின் நாயகன், உணவகங்களின் தரத்தை ஆய்வு செய்யும்போது அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள் உணவகங்கள் தங்களின் தரம் குறித்து எடுத்துக் கொள்ளும்/ கொள்ளாத அக்கறை பற்றி பற்றிய பகடியாக உள்ளன. (நம் நாயகனுக்கு முன்பாக இந்தப் பதவியில் இருந்தவர் hepatitis நோயால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு, தர ஆய்வுக்காக பல உணவகங்களில் அவர் உண்ட உணவே காரணம் என்று நாயகன் பயப்படுகிறார். எலி/கோழி புழுக்கை, புழுக்கள், கரப்பான் பூச்சி , ஆணுறை என உணவகங்களின் சமையலறையில்/ உணவில் அவர் கண்டுபிடிக்கும்/ பார்க்கும் விஷயங்கள், அவரின் சாப்பிடும் ஆர்வத்தைக் குறைத்து எடை இழக்கச் செய்கிறது). இந்த விஷயங்கள் ‘கருத்து’ சொல்வதாக இல்லை, கதையின் மையமான குற்றத்தை நகர்த்தும் விசைகளாக உள்ளன.
இந்த நாவல்களை இரண்டுவிதமாக விமர்சிக்கலாம். ஒன்று, அழுத்தமான பாத்திரப் படைப்பு இல்லை, விட்டேத்தியான உரைநடை என்று சொல்லலாம். குற்றப்புனைவாகவும் இவை சோபிக்கவில்லை என தூய குற்றப்புனைவு ஆர்வலர்கள் கூற முடியும், அதுவும் உண்மைதான். ‘Bad Monkey’ நாவலின் மர்மத்தை நாவலின் நடுவிலேயே யூகிக்க முடியும். ஆனால் இந்த விமர்சனங்கள் நாவலுக்கு வெளியே நிகழ்பவை , அதாவது ஒரு படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற பொது அளவுகோல் வைத்துப் பார்க்கும்போது இவை நியாயமானவையே.
கார்ல் இந்த நாவல்களில் என்ன செய்ய முயல்கிறார், அதில் அவர் எந்தளவுக்கு வெற்றி அடைகிறார் என்று விமர்சிப்பது இன்னொரு முறை, அதாவது ‘நகைச்சுவை குற்றப் புனைவு’ என்பதை ஏற்றுக்கொண்டால்/ ஏற்றுக்கொள்ள முடிந்தால் செய்யப்படுபவை. அப்படிப் பார்க்கும்போது, இந்த நூல்களின் பலவீனமாக தோன்றுபவைகளில் பல இந்த வகைமையின் கூறுகளாக உள்ளன. உதாரணமாக, “Skinny Dip” நாவலில் மனைவியைக் கொலை செய்ய கணவனைத் தூண்டும் காரணம் மிகவும் முட்டாள்தனமாக உள்ளது, இரண்டு நாவல்களிலும், குழப்பத்தை அதிகரிக்கும் அடுக்கடுக்கான நகைச்சுவை நிகழ்வுகள், பின்னர் சுபமாக முடிவது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இவைதான் நாவலின் கட்டமைப்பை உறுதி செய்கின்றன. “Comedy, in contrast, is capable of resolving its complication through its own means by creating order out of chaos. ” என்பதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். சூழியல் மாசுபாடு குறித்து, நகைச்சுவையைக் குறைத்து இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் அழுத்தமாகப் பதிந்திருக்கக்கூடும் என்பதும் உண்மையே. ஆனால் அது இந்த வகைமையில் முடியாது அல்லவா.
நகைச்சுவையே இந்த நாவல்களைச் செலுத்துகின்றது என்பதால், அதைத் தவிர்த்து நேரடியாக சொல்லப்படுபவை நாவல்களின் மற்ற பகுதிகளோடு ஒட்டாமல் அந்தரத்தில் தொங்குவது போல் உள்ளன. தன்னைக் கொல்ல முயன்ற கணவனைப் பற்றிய, “Skinny Dip” நாவல் நாயகியின் மனநிலை ஓர் உதாரணம். தன் கணவனின் செயல் குறித்து கோபப்படுகிறார், பழிவாங்கவும் முனைகிறார். அதே நேரம், தன் கணவனுக்கு தான் அப்படி என்ன கெடுதல் செய்து விட்டோம் என்றும் இத்தனை நாள் அவன் தன்னிடம் நடித்து வந்தானா, இவ்வளவு காலம் இவனைப் பற்றி புரிந்து கொள்ளாமல் எப்படி இருந்தோம் என கேள்விகள் எழுப்பி தன்னைத்தானே வதைத்துக் கொள்கிறார். கணவனை பழிவாங்குவதோடு தன்னை தன் கணவன் ஏன் கொல்ல முயன்றான் என்று அறிந்து கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார். தன் சுயம் பற்றிய அதிக நம்பிக்கை இல்லாத (insecure) பெண்ணாக சுட்டப்படும் நாயகியின் சுய வெறுப்பு, கழிவிரக்கம் இயல்பானதே, அந்தளவில் கார்ல் வெற்றி பெறுகிறார். ஆனால் அதில் அதிக அழுத்தம் தராததால், முதலிரண்டு முறை, நாயகியின் vulnerabilityயை சுட்டுவதாக உள்ள இந்த மனநிலை, நாவல் முழுதும் நாயகி தன்னை இது குறித்து வருத்திக் கொள்ளும்போது சலிப்பையே தருகிறது. பொதுவாக சொல்ல வேண்டுமானால் நகைச்சுவைத்தளத்தை விட்டு கார்ல் விலகும் போதெல்லாம், நாவல் பலவீனமாக ஆகிறது, இத்தகைய இடங்கள் அதிகம் இல்லை என்பது ஒரு ஆறுதல்.
பெரியவர்களுக்கான 10-15 நாவல்கள், பதின் வயதினருக்கான (young adult) சில நாவல்கள் என நிறைய எழுதி உள்ள கார்ல் ஒரே மோஸ்தரில் எழுதுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது. இவரின் பெரும்பான்மையான படைப்புக்களைப் படித்த பின்புதான் இது பற்றி பேச முடியும். இந்த இரண்டு நாவல்களில் கதை சொல்லல் முறை/ சூழியல் என்ற பொது அம்சங்கள் இருந்தாலும், மற்றபடி அதிக ஒற்றுமை இல்லை.
இந்த வகைமையின் எல்லைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, குதூகலமான கதைசொல்லல்/ நிகழ்வுகள், உற்சாகம் கொப்பளிக்கும் உரைநடை/ உரையாடல்கள் என நகைச்சுவை குற்றப்புனைவின் சாத்தியக்கூறுகளை கார்ல் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

Thursday, November 20, 2014

அன்றாட வாழ்வை அச்சுறுத்தும் கணங்கள் – ஹிலாரி மேன்டல் சிறுகதைத் தொகுப்பு - The Assassination of Margaret Thatcher - Hilary Mantel

பதாகை இதழில் வெளிவந்தது - 
http://padhaakai.com/2014/11/09/the-assassination-of-margaret-thatcher/
-----------------------------
Bachman என்ற புனைப்பெயரில் ஸ்டீபன் கிங் எழுதிய ‘Thinner’ நாவல், ஜிப்சி ஒருவனால் தீச்சொல்லிடப்படும் பில்லியின் உடல் எடை இழக்க ஆரம்பிப்பதையும், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களையும், திகில் நாவல்களின் பாணியில் சொல்கிறது. நம்மை எவ்வளவு அச்சுறுத்தினாலும், அனைத்தும் ஆசிரியருக்கும்/ வாசகனுக்கும் உள்ள எழுதப்படாத ஒப்பந்தத்தின் பேரில் நடப்பது என்று உணர்ந்திருப்பதால் (பயமுறுத்துவது ஆசிரியரின் பங்கு – கிளர்ச்சியடைவது வாசகனின் பங்கு) நாவலில் இருந்து நாம் சற்று விலகியே இருக்கிறோம். இங்கு பயம் என்பது கிளர்ச்சியாகவே உள்ளது. நாவல் முடிந்தவுடன், இரவு நம்மை பயமுறுத்தலாம், அன்று தூங்குவது எளிதாக இல்லாமல் போகலாம் ஆனால் நம் அன்றாட வாழ்விற்கு வெகு தொலைவிலேயே நாவல் இருக்கிறது என்ற ஆசுவாசம் அடைகிறோம்.
இந்த ஆசுவாசம் எப்போதும் செல்லுபடியாகுமா? ‘ஹிலரி மேன்டலின்’ ‘The Assassination of Margaret Thatcher’ சிறுகதை தொகுப்பின் ‘The Heart Fails Without Warning’ சிறுகதை, “When she began to lose weight at first, her sister had said, I don’t mind;…” என்று சாதாரணமாகவே ஆரம்பிக்கிறது. “Anorexia” பற்றிய செய்திகள் அதிகம் கவனப்படுத்தப்படும் இந்நாளில், உணவு உட்கொள்ள மறுக்கும் பதின்பருவப் பெண் பற்றிய வழமையான கதை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் “.. was shrinking…” என்று மேன்டல் சொல்லும்போது, இது நாம் முதலில் எண்ணியதைவிட விபரீதமானது என்று புரிகிறது. எடை அதிகமாக இருப்பதாகக் காட்ட, அதிக உடைகளை அணிந்து கொள்வது, எடை பார்க்கும் முன் நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற அப்பெண்ணின் தந்திரங்களை முறியடிக்க அவள் தாய், குறிப்பிட்ட நேரமென்றில்லாமல் திடீர் திடீரென்று எடையைப் பரிசோதிப்பது, என நடக்கும் தாய்-மகள் ஆடுபுலியாட்டம் கிளர்ச்சியூட்டுவதில்லை. அந்தப் பெண் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான குடும்பமே சுருங்கி, எடையிழந்து எலும்புக்கூடாக மாறுவதையும் பார்ப்பது, கதை முடிந்த உடன் சிறிது நேரத்திலேயே நாம் நமது உலகுக்கு திரும்பி விடலாம் என்பது போன்ற எந்த ஆசுவாசத்தையும் அளிப்பதில்லை. கதையின் களன் நமக்கு மிக நெருக்கமான ஒன்றாக, நம் யார் வாழ்விலும் சந்திக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால், அதன் அச்சுறுத்தலை இன்னும் நிஜமானதாக, எப்போதும் நமக்கு அருகிலேயே இருக்கும் ஒன்றாக உணர்வது, எந்த திகில் கதைக்கும் ஈடான அல்லது அதைவிட பயங்கரமான ஒன்றாக இந்தக் கதையை ஆக்குகிறது.
இந்தக் கதை நமக்குக் கடத்தும் உணர்வை இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகளின் பொதுச்சரடாக கொள்ளலாம். யதார்த்தமும்/ கொடுங்கனவுகளும் தொட்டுச் சென்றாலும், இவை யதார்த்த தளத்திலேயே அழுத்தமாக காலூன்றியுள்ளன. உளக்காய்ச்சலால் வெதும்பும் பாத்திரங்கள், ஏதோ விபரீதம் நடக்கக் போகிறது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும், அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் தென்படும் மிகையதார்த்தத்தன்மை (surreal),  இவற்றின் சஞ்சலத்துடன் கதையினூடாக வாசகனின்/ பாத்திரங்களின் பயணம் இந்தக் கதைகளின் உள்ளது.
மேன்டலின் உரைநடையில் உள்ள ஒளிர்வு (luminosity) அதன் சிறப்பம்சம். ‘ஒளிர்வு’ என்பது கதையின் அனைத்து அம்சங்களையும் நிகழ்வுகளின் காரணகாரியங்களையும் விலாவரியாக விளக்குவது அல்ல. உரைநடையில் சிடுக்குகள் இல்லாமல் தான் சொல்ல வருவதை (அவற்றில் பொதிந்துள்ள தெளிவின்மையோடு) துல்லியமாக சொல்வது. இந்த ஒளிர்வு சவுதியில், வீட்டின் அனைத்து சன்னல்களும் எப்போதும் மூடப்பட்டுள்ள இறுக்கம், லண்டனின் ரயில் நிலையங்களில் உள்ள நெரிசல் போன்ற புறச்சூழலுக்குள்ளும், பாத்திரங்களின் அகஉணர்வுகளுக்குள்ளும் சமமாக ஊடுருவி, இரண்டையும் இணைத்து, பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் உருக்கொள்ளச் செய்கிறது.
‘Sorry to Disturb’ கதை, சவுதியில் வசிக்கும் கதைசொல்லி, தொலைபேசியை உபயோகிக்க அனுமதி கேட்கும் அந்நியனை வீட்டினுள் அனுமதிப்பதுடன் ஆரம்பிக்கிறது. நாளின் பெரும்பகுதியை தனிமையில் கழிக்கும் பெண், அவள் சந்திக்கும் ஆண் என்றவுடன் கதையின் போக்கு குறித்து நமக்கு தோன்றும் எதுவும் நடப்பதில்லை. துணையில்லாமல் வெளியில் எங்கும் செல்ல முடியாத, எப்போதும் அடைபட்டிருக்கவேண்டிய சூழல் ,  கதைசொல்லியைச் சுற்றி வீட்டின் சுவர்கள் நெருங்கி வரும் உணர்வோடு, அவர் மனமும் சுருங்கும் claustrophobiaவை அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் உருவாக்குகிறது. வீட்டின் மேஜை நாற்காலிகள் தங்களைத் தாமே வேறு வேறு இடங்களுக்கு நகர்த்திக் கொள்கின்றன என்று கதைசொல்லி சொல்வதை, தன்விருப்பத்தையொட்டி எங்கும் செல்லும் சுதந்திரமற்ற அவருடைய நிலைக்கு பதிலீடாக அவர் வைப்பதாகக் கொள்ளலாம்.
யதார்த்த சூழலை குலைக்கும் கதைகளுக்கு நேர்மாறாக, இறந்து போன தன் தந்தை ரயிலில் செல்வதைக் கதைசொல்லி பார்ப்பதாக  ‘Terminus’ ஆரம்பிக்கிறது. அமானுஷ்ய நிகழ்வுகளை உருவாக்க வலுவான களத்தைக் கொண்டிருந்தாலும், ஆன்மா பற்றியோ, தந்தையுடனான தன் உறவு பற்றியோ (அது பற்றி அவர் வேகமாக கடந்து செல்லும் ஓரிரு இடங்கள் தவிர) கதைசொல்லி சொல்லவில்லை. அவர் தன் தந்தையைத் தேடுவது பற்றி பேசுவதாகவும், இறந்தவர்கள்/ உயிரோடிருப்பவர்கள் பற்றிய அவருடைய எண்ண ஓட்டங்களாகவும், கொந்தளிப்பில்லாத contemplative கதைசொல்லலைக் கொண்டுள்ளது.
‘Sorry to Disturb’ கதையைப் போல் தலைப்புக் கதையிலும் கதைசொல்லி ஒருவனை வீட்டினுள்ளே அனுமதிக்கிறார். ஆனால் குழாய் செப்பனிடுபவர் என்று கதைசொல்லி எண்ணிய அந்த ஆசாமி, கதைசொல்லியின் வீட்டினருகே உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, கதை நடக்கும் அன்று, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ள இங்கிலாந்து பிரதமர்  ‘மார்க்ரெட் தாட்சரைக்’ கொல்ல வந்தவன். அதற்கு தோதான இடமாக கதைசொல்லியின் வீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அவன் பிரதமரை கொன்றானா இல்லையா என்பது குறித்த தெளிவற்றதன்மை கதையின் ஒரு பகுதி என்றால், கதைசொல்லிக்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல்கள், கதைசொல்லி நடந்து கொள்ளும் விதம் இவை, அந்த ஆசாமி கொன்றானா இல்லையா என்ற கேள்விக்கு இணையான முக்கியத்துவம் உடையவை.
எண்பதுகளில் தாட்சர் ஆட்சியின் கீழ் வாழ்ந்து அதை நேரடியாக அனுபவித்தவர்கள், அல்லது அந்தக் காலத்தைக் குறித்து ஆராய்ந்தவர்கள், நம்மைப் போன்ற வெளியாட்கள் தவறவிடக்கூடிய சரடுகளை நெருக்கமாக உணரக்கூடும் (கொல்ல வருபவனின் தாட்சர் வெறுப்பு நமக்கு அவன் பேசுவதன் மூலம் தெரியும் தகவல் அவ்வளவே, அதற்கான காரணிகள், அந்தச் சூழல் இவை நமக்கு அந்நியம்.
தாங்கள் குரூரமாக நடந்து நடந்து கொள்கிறோம் என்பதை உணராத குழந்தைகள் பற்றிய ‘Comma’ கதையாகட்டும், கதைசொல்லி தன் தந்தை, அவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதையும், அது தன் குடும்பத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விலகலோடு கவனிக்கும் ‘Offences Against the Person’ கதையாகட்டும், அவை மோசமானவை அல்ல. நேரடியாக சொல்லப்படாத விஷயங்கள், பாத்திரங்களின் செயல்களுக்கு வெளித்தெரிந்த காரணத்தை விட வேறேதும் உள்நோக்கு உள்ளதா என யூகிக்க வைக்கும், பல அடுக்குகளாக உள்ள மன உணர்வுகள் என இலக்கியக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் முதலில் பார்த்த கதைகளைப் போல், மேன்டலின் எழுத்து பாணியாக உள்ள ஒளிர்மிகு உரைநடையில், தனித்துக் காட்டுவதாக இல்லாமல், இலக்கியக் கூறுகள் சூத்திரமாக மாற்றப்பட்டதைப் போல் வழமையான (generic), கதைகளாக உள்ளன.
இங்கு ‘வழமையான’ என்பது ஒரே களத்தை தங்கள் கதையில் பலர் உபயோகிப்பதை குறிப்பது அல்ல, அதே களத்திற்குள் ஆசிரியர் தன்னை எப்படி தனித்துக் காட்டுகிறார் என்பதைதான் குறிக்கிறது.  சிலர் கதைசொல்லலை முன் பின்னாக கலைத்துப் போடுகிறார்கள், சிலர் வரலாற்றை/ தொன்மத்தை மறுவாசிப்புச் செய்து புதிதாக எழுதுகிறார்கள். மேன்டல் முதலில் பார்த்த கதைகளில் உள்ளது போல் உளக்காய்ச்சலை, அதை வெளிக்கொணரும் உரைநடைப் பாணியை கொண்டுள்ளார். இது இல்லாத கதைகளே வழமையான ஒன்றாக உள்ளன.
உதாரணமாக ஜூனோ டியாஸின் (Junot Diaz) ‘Ysrael’ கதையும் குழந்தைகள் இரக்கமில்லாமல் (அவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை உணராமல்) நடந்து கொள்வதைப் பற்றிய இன்னொரு கதை. ‘Comma’ கதையுடன் அதை ஒப்பிடுவது நோக்கமல்ல, மேலும் இரண்டின் மையம் ஒன்றாக இருந்தாலும், நிகழ்வுகள், உரைநடை பாணி இவற்றில் வேறுபட்டவை இவை. ஆனால் களம் என்பதைக் கணக்கில் கொள்ளாவிட்டாலும், ‘Comma’ தனித்துக் காட்டும் எதுவும் கதையில் இல்லை, குழந்தைகள் செலுத்தும் வன்முறை பற்றிய இன்னொரு கதை அவ்வளவே.
“… there are households with other lives… Different histories lie close; they are curled like winter animals, breathing shallow, pulse undetected.” என்று மேன்டல் இந்தத் தொகுப்பின் ஒரு கதையில் சொல்கிறார். பல்வேறு வாழ்வுகளைக் காட்டும் இந்தத் தொகுப்பில், இரண்டு வகையான கதைகள் உள்ளன. அன்றாட வாழ்வின் சில பக்கங்களைக் காட்டும், புற நிகழ்வுகளே மையமாக உள்ள, ‘Comma’, ‘Harley Street’ போன்ற நேரடித் தன்மையை உடைய சம்பிரதயமான கதைகள் ஒரு வகை. இதற்கு நேர்மாறாக ‘The Assassination of Margaret Thatcher’, ‘The Heart Fails Without Warning’, ‘Sorry to Disturb’ போன்ற, தங்களின் களத்தின் மேற்பரப்பை ஊடுருவிச் செல்லும் கதைகள். இந்தக் களங்கள் நமக்குப் பரிச்சயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாத்திரங்களுக்குள் சுருண்டிருக்கும் அக மிருகத்தின் அனல் மூச்சை, அதன் நாடித்துடிப்பின் படபடப்பை நாம் உணரும்படி செய்கின்றன. பாத்திரங்களின் அகக்கொந்தளிப்பு அன்றாட வாழ்வை பூதாகரமாக மாற்றும் தருணங்களைக் கொண்ட, எளிதில் கடந்து சென்று விட முடியாத இக்கதைகளே தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளாக உள்ளன.

Tuesday, November 11, 2014

The Circle - Dave Eggers

பதாகை இதழில் வெளிவந்தது - 
http://padhaakai.com/2014/11/02/the-circle-by-dave-eggers/
---------------------------------------
“MY GOD, MAE thought. It’s heaven” என்ற வரியுடன் டேவ் எக்கர்ஸின் (Dave Eggers) ‘The Circle’ நாவல் ஆரம்பிக்கிறது. சொர்க்கம் என்று மே குறிப்பிடுவது, தான் அன்று வேலையில் சேரப்போகும் சர்க்கிள் (Circle) என்ற தொழில்நுட்ப/ சமூக வலைதள நிறுவனத்தின் வளாகத்தை பார்த்துத்தான். தான் பிறந்த சிறு நகரில், சவால்கள் இல்லாத, தனக்குப் பிடிக்காத வேலையில் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த மே, சர்க்கிளில் உயர் பதவியில் இருக்கும் ஆனி என்ற தோழியின் உதவியில் அங்கு வேலைக்கு சேர வந்துள்ளார். (மேவின் திறமைதான் காரணம் என்றே ஆனி சொல்கிறார்). ஊழியர்களுக்கான விளையாட்டரங்கம், வசதியான ஓய்வறைகள், பலவகை உணவுகள் இலவசமாக கிடைப்பது, இதையெல்லாம் விட சமூகத்தில் மிகப் பெரிய (நல்ல) தாக்கத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்ய வாய்ப்பு, இவை மே சொர்க்கமென்று நினைக்கத் தூண்டுகிறது. அப்படி என்ன ‘சர்க்கிள்’ சாதித்து விட்டது?
கல்லூரிப் படிப்பை பாதியில் விட்ட டய் (Ty) என்ற மாணவன் ‘TruYou’ (Unified Operating System) என்ற சேவையை வடிவமைக்கிறான். ஒரே ஒரு பயனர் அடையாளத்தைக் கொண்டு பல சேவைகளைப் பெறக்கூடிய இதில் நீங்கள் சேர வேண்டுமென்றால் உங்களைப் பற்றிய உண்மையான தகவல்களைத் தர வேண்டும். ஒரே பயனர் அடையாளம் என்பதைவிட, உண்மையான அடையாளம் என்பது இதன் சிறப்பம்சமாகிறது. இணையத்தின் மிகவும் பலமான (அல்லது பலவீனமான) அம்சமான அனாமதேய இருப்பை இது ஒழித்து விடுகிறது, தான் இணையத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு வரிக்கும் பதிவு செய்பவர் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகிறது, இணைய உரையாடல்கள் நாகரீகமாக நடக்க ஆரம்பிக்கின்றன. “The trolls, who had more or less overtaken the internet, were driven back into the darkness.” என்கிறார் எக்கர்ஸ்.
என்ன கட்டுப்பாடுகள் வந்தாலும் இவற்றையெல்லாம் (trollingஐ ஒழிப்பது) சாத்தியமா என்று தோன்றினாலும், நாவலின் போக்கிற்கு அடித்தளம் அமைப்பதால் இதை ஏற்றுக்கொள்வோம். நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படும் சர்க்கிள் கூகிள், பேஸ்புக் போன்றவற்றை தன்னுள் கிரகித்துக்கொண்டு , இணையத்தில் கிட்டத்தட்ட ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் மே அங்கு வேலையில் சேருகிறார். எனவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வேலையில் சேர்ந்த அன்று “Who else but utopians could make utopia?” என்று மே எண்ணுவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் நாவலின் முதல் வரியிலேயே, பெரும் கனவுகளுடன் வரும் இளம் பெண், அந்தக் கனவுகள்/ மதிப்பீடுகளின் வீழ்ச்சியை எதிர்கொள்வது, அந்த அனுபவம் அவளை எப்படி மாற்றுகிறது என நாவலின் போக்கு இருக்கும் என்று வாசகனால் யூகிக்க முடிகிறது.
(நாவலில் வரும் தொழில்நுட்பம் பற்றிய குறிப்புக்கள், வளாகங்கள் குறித்த வர்ணனைகள் பேஸ்புக், குறிப்பாக கூகிள் நிறுவனங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால் எக்கர்ஸ் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மனதில் கொண்டு நாவலை எழுதவில்லை என்றும் நாவலுக்காக அந்நிறுவனங்கள் பற்றிய புத்தகங்களைப் படித்ததோ /அதன் வளாகங்களுக்கு சென்றதோ /அதன் ஊழியர்களிடம் பேசியதோ கிடையாது என்கிறார்)
சர்க்கிளின் நோக்கம் நல்லதுதானே என்று தோன்றலாம், அதன் செயல்பாடுகளும் அவ்வாறுதான் முதலில் இருக்கின்றன. மூன்று பகுதிகளாக உள்ள இந்த நாவலின் முதல் பகுதியில், சர்க்கிளின் செயல்பாடுகள் குறித்த சஞ்சலத்தை, எக்கர்ஸ் நம்முள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். குழந்தைகளின் பாதுகாப்பிற்காகஅவர்கள் இருப்பிடத்தை எந்நேரமும் கண்காணிக்க உதவும் சிப் (chip) , 18 வயது வரை மட்டுமே அவர்களின் உடலில் பொதிக்கப்படும் உதவக்கூடும் என்றால், எங்கும் மிக எளிதாக பொறுத்தப்படக்கூடிய, அந்த இடத்தில் நடப்பவற்றை வீடியோவாக பார்க்க உதவும் கருவி, தெருக்களில் நடக்கக்கூடிய குற்றங்களை, ஏன் சில நேரங்களில் அரசு அத்துமீறல்களைக்கூட கண்காணிக்கவும் உதவலாம் என்று சொல்லப்படுகிறது. வார இறுதியில் நாம் செல்ல நினைத்துள்ள கடற்கரை அல்லது மலை வாசஸ்தலத்தின் தற்போதையை வானிலையை அறிந்து கொள்ளக்கூட இவை உதவலாம்.
தனியார் நிறுவனங்கள், கடைகள் போன்றவை இத்தகைய கருவிகளை தங்கள் பாதுகாப்பிற்காக இப்போதே வைத்துள்ளன. அரசாங்கமும் இதை பேருந்து/ ரயில் நிலையங்களில் உபயோகிக்கிறது. என்ன, இவை நுகர்வுப் பொருட்க்ளாக இன்னும் மாறவில்லை. சகாய விலையில் Circle அறிமுகப்படுத்தும் இந்தக் கருவி சந்தைப்படுத்தப்பட்டால் அந்நிறுவனம் சொல்வது போல் முற்றிலும் நன்மை மட்டும்தான் நிகழுமா. மலிவாகக் கிடைக்கும் இந்தக் கருவியை வைத்து கீழ்த்தரமான பல செயல்களையும் செய்யமுடியும்.
கடற்கரையில் ஒருவர் இளைப்பாறுவதை ஏன் இன்னொருவர் (அவருடைய நோக்கம் கண்காணிப்பதாக இல்லாமல் வானிலையை அறிந்துகொள்வதாகவே இருந்தாலும் ) பார்க்க வேண்டும், அவரின் கருவியில் ஏன் தனிமையை நாடி வந்தவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இது அந்தத் தொழில்நுட்பத்தின் பிரச்சனை அல்ல, அதை உபயோகிப்பவரின் மனவிகாரம் என்று குறைத்து மதிப்பிட முடியாது. அந்நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்யும் ஒருவன், உடன்வேலை செய்யும் பெண்ணுடன் தான் உடலுறவு கொள்வதை வீடியோவில் பதிவு செய்கிறான். அப்பெண் அதை அழிக்கச் சொல்லும்போது, “.. you know technically neither one of us owns that video anymore. I couldn’t delete it if I tried. It’s like news. You don’t own the news, even if happens to you. You don’t own history. It’s part of the collective record now,”
என்று கூறுகிறான்.
இரண்டு விஷயங்கள் இதில் உள்ளன. தொழில் நுட்பத்தில் கில்லாடியான ஒருவனால்கூட அதை அழிக்க முடியாது என்பது ஒன்று. இன்னொன்று ஒரு அந்தரங்க நிகழ்வை ‘செய்தியாக’ மாற்றும் மனநிலை. இந்த இரண்டாவதே நமக்கு அதிக கவலை அளிக்கக்கூடியது. இதை மனவிகாரம் என்று சொல்லி கடந்து விட முடியாது, அப்படியென்றால் அதை அவன் தான் மட்டுமே காணக்கூடிய கருவியை உபயோகித்து பதிவு செய்திருப்பான்.
எதையும் செய்தியாக, உலகுக்கு பகிரத்தகுந்த ஒன்றாக மாற்றியதில் Circleஇன் பங்கும் உள்ளது. தான் செய்தை அதனால்தான் அவன், ” No one’s watched the video. It’s just a part of the archive. It’s one of ten thousand clips that go up every day here at the Circle alone. One of a billion worldwide, every day.” என்று தான் செய்ததை நியாயப்படுத்த முடிகிறது. ஆம், இந்தக் கருவியில் பதிவு செய்தது மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் எந்தக் கருவியையோ/ மென்பொருளையோ நீங்கள் ஒருமுறை உபயோகித்தால்கூட அவை Circleஇன் சேவையகங்களிலும் (servers) பிரதி எடுக்கப்பட்டு சாகாவரம் பெற்றுவிடுகின்றன.
நமக்கு இது ஒன்றும் முற்றிலும் புதிதல்ல.இன்றுகூட இணையத்தில் ஒரு முறை நடந்த செயலின் கால்தடத்தை (digital footprint) அழிப்பது எளிதல்ல. இன்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் நம் இணைய செயல்பாடுகளை பதிவு செய்து அது சார்ந்த சிபாரிசுகளை நமக்குத் தருகின்றன. இன்றும் பாலியல் ரீதியான வீடியோக்கள் வெளி வருவது பற்றி செய்திகளைப் படிக்கிறோம். அவற்றில் ஒருவகை திட்டமிட்டு செய்யப்படுபவை, இத்தகைய இழி செயல்கள் எக்காலத்திலும் இருக்கும். இன்னொரு வகை, தொழில்நுட்பம் பற்றி அரைகுறையாகத் தெரிந்து கொண்டு உபயோகித்து, அதில் செய்யும் தவறுகளால், அவர்கள் விரும்பாவிட்டாலும் வெளியாகுகின்றன.
தெரிந்தவர்/ தெரியாதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவருடனும் பகிரக் கூடியது/ வேண்டியது இது என்று பகிரப்படுபவை மிகக் குறைவே. இந்த மனநிலை நாவலில் உருவாவது, நம் அடுத்த கட்ட பரிணாமமாக இருக்கக் கூடும். அந்த மனநிலையை அனைவரிடமும் உருவாக்குவதே Circle செய்யும் மிகப் பெரிய தீங்காக இருக்கிறது.
அதே போல் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதற்கும் 24 மணிநேர கண்காணிப்பு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அது மட்டுமல்ல, இந்தச் சிப்பை கல்விக் கூடங்களுடன் இணைத்து, மாணவர்களின் மதிப்பெண்கள், வீட்டுப்பாடம் பற்றிய செய்திகள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யும் அடுத்த கட்ட தொழிநுட்பத்தையும் Circle யோசிக்கிறது. இதன்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்போடு, அவர்களின் படிப்பைப் பற்றிய ஒவ்வொரு செய்தியையும் அறிந்து கொள்ள முடியும். இப்போது நிலவுவதைவிட அதிக கட்டுப்பாடோடு, தங்கள் பிள்ளைகளை பால்யத்திலிருந்தே உயர்கல்விக்குத் தயார் செய்ய முடியும்.
பிள்ளைகளின் மனநிலை? அது குறித்து என்ன, பெற்றோர் இந்த இணைப்பை வரவேற்கின்றார்கள், அது போதுமே Circleக்கு. மற்ற விஷயங்களைப் போல இதிலும் ஒரு சூட்சமம் உள்ளது. 18 வயதுக்குப் பின் இந்தச் சிப்புகள் உடலிலிருந்து எடுக்கப்பட்டாலும், தகவல்கள் அனைத்தும் அந்நிறுவனத்தின் மேகக் கணினி சேவையகங்களில் இருக்குமல்லவா. எனவே 18 வயதுக்குப் பின், சிப்புக்களை எடுத்தாலும் அவர்கள் அந்நிறுவனத்தின் பார்வையிலிருந்து விலகுவது கடினம்தான், அவர்களை எளிதில் Circleஇன் உறுப்பினராக மாற்றலாம். நாளைய உறுப்பினர்களுக்கான விதையாகவே இன்றைய சிப்புகள் உள்ளன.
அந்நிறுவனம் செய்யும் (செய்வதாகச் சொல்லும்) ஒரு சில நன்மைகளுக்காக, எந்தளவுக்கு ஒருவர் தன் சுயத்தை/அந்தரங்கத்தை இழக்க வேண்டும், அப்படி இழக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
நாவலின் போக்கு மேவின் கோணத்தில் விரிந்தாலும், நாம் எக்கர்ஸ் காண்பதை மட்டுமே தொடர்கிறோம், நாம் கேட்பது அவர் நமக்குச் சொல்வதை மட்டுமே. மையப் பாத்திரமான மேவை நம்மால் ரத்தமும் சதையுமான மனுஷியாக உணர முடிவதில்லை. எதையும் கேள்விக்குட்படுத்தாத வெகுளித்தனம் உள்ளவராகவும் மேவின் பாத்திரப்படைப்பு இல்லை- அவ்வாறு இருந்திருந்தால் நாவலின் சம்பவங்களுக்கு அவரின் எதிர்வினைகள் பொருத்தமாக இருந்திருக்கக்கூடும். சர்க்கிள் பற்றிய வியப்பு இருந்தாலும், தனித்துவம் உள்ளவராகவே மே அறிமுகமாகிறார் (அதுவே அவரை தன் முந்தைய வேலையை வெறுக்கச் செய்கிறது), ஆனால் இந்த வேலைக்குச் சேர்ந்தபின், மிக இயல்பாகவே சர்க்கிளின் மந்தையாடுகளுள் ஒன்றாக மாறிவிடுகிறார். சில கேள்விகள் அவருள் எழுந்தாலும், மிக எளிதாக அவற்றைத் தாண்டிச் செல்கிறார் (அதாவது எக்கர்ஸ் அவ்வாறு அவரைச் செய்ய வைக்கிறார்). அவரை அவ்வப்போது சந்திக்கும் ஒரு மர்ம மனிதன்பால் (அவன் சர்க்கிளில் வேலை செய்பவனா அல்லது அதை வேவு பார்க்க வந்தவனா என்று தெரிவதில்லை) ஈர்க்கப்படுகிறார், மதிய உணவு நேரத்தைக் குறைத்துக் கொள்வது, பிறகு வேலை நேரத்தைத் தாண்டியும் உழைப்பது, ஓரிரு நாட்கள் சர்க்கிள் வளாகத்தில் உள்ள ஓய்வறைகளில் இரவைக் கழிப்பது என்று ஆரம்பித்து, பின்பு அதுவே நிரந்தர வசிப்பிடமாக மாறுமளவிற்கு சர்க்கிள் அவரை ஆக்கிரமிக்கிறது.
இவை அனைத்தையும் ஒரு விலகலுடன்தான் நாம் கவனிக்கிறோம். சர்க்கிள் குறித்து நம்முள் எழும் கேள்விகள், மேவின் கோணத்தில் எழாமல், எக்கர்ஸின் கோணத்தில் எழுவதை நாம் உணர்கிறோம். அவர் உருவாக்கி வைத்துள்ள கற்பனைகளில் விரிசல் விழுவதை, அவர் விழுமியங்கள் கேள்விக்குள்ளாவதை நாம் உணர்வதில்லை.
எனவே சர்க்கிளின் செயல்பாடுகள் நம்மை துணுக்குற வைத்தாலும் இந்த நாவல் (குறிப்பாக இதன் முதல் பகுதி) இணையம்/ சமூக வலைதளங்களின் தாக்கம், இவற்றால் அந்தரங்கம் பாதிக்கப்படுவது, இதையெல்லாம் பற்றி எக்கர்ஸின் அறிக்கையைப் போல் உள்ளதே நாவலின் பலவீனமாக இருக்கிறது.
ஒருங்கிணைந்த பயனர் முகவரி என்ற ஒற்றை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது, கிளைகள் பரப்பி இணைய உலகை ஆக்கிரமித்து, பிறகு அதன் வாயிலாக மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும்/ கட்டுப்படுத்தும்/ கட்டுப்படுத்த விரும்பும் (அது மக்களின் நன்மைக்காகவே என்ற முழக்கத்துடன்) ஒன்றாக மாறியது/ மாறிக்கொண்டிருப்பதின் பின்னணி என்ன, சர்க்கிளை செலுத்துபவர்கள் யார்? TruYouவை உருவாக்கிய டை, பிறகு அவன் இணைத்துக் கொண்ட பெய்லி, டாம் மூவரும் ‘Three Wise Men’ என்றும் ‘Gang of 40′ என்று அந்நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவும் அழைக்கப்படுகின்றனர். டை மற்றவர்களுடன் அதிகம் பழகாத, தொழில்நுட்ப மேதாவி(geek/ nerd), பெய்லி சர்க்கிளின் நோக்கத்தில்/செயல்பாடுகளில் முழு நம்பிக்கை உடையவர், டாம் சர்க்கிளின் தயாரிப்புக்களை சந்தைப்படுத்துபவர் என்ற அளவிலேயே நாவல் நின்று விடுகிறது.
புலி வால் சவாரி போல் இவர்கள், தாங்கள் ஆரம்பித்ததை நிறுத்த/ மாற்ற முடியாமல், அதன் போக்கில் செல்கிறார்களா, அல்லது அளப்பரிய செல்வம்/ கிடைக்கும் புகழ் தான் இவர்களைச் செலுத்தும் விசையா அல்லது வேறு ஏதேனும் கெடுநோக்கு (உலகையே கட்டுப்படுத்த வேண்டும் என்பது போல் ) உள்ளதா என்று நாவலில் எங்கும் சுட்டப்படுவதில்லை. எக்கர்ஸுக்கு Circleஇன் செயல்பாடுகளின் விளைவுகளே முக்கியம், அதன் நோக்கம் அல்ல என்று நமக்குத் தெரிந்தாலும், அது குறித்து பேசப்பட்டிருந்தால் நாவலை வாசகன் இன்னொரு கோணத்திலும் அணுகியிருக்க முடியும்.
(இதை எக்கர்ஸின் ‘A Heartbreaking Work of Staggering Genius’ என்ற quasi-memoirஉடன் இணைத்துப் பார்க்கலாம். Circle போல் நேரடியான கதைசொல்லல் இல்லாமல், வடிவ/ உரைநடை உத்திகளில் அதிக சித்து வேலைகள் உள்ள, ஆசிரியர் நிறைய இடங்களில் நேரடியாக நம்மிடம் பேசும் self-reflexive தன்மை உடைய நாவலாக இருந்தாலும், பாத்திரங்களின் உணர்வுகள் அவர்களுடையதாகவே தோன்றுகின்றன. வேறு களத்தில் இயங்கும் ‘Circle’ நாவலும், அத்தகைய பாத்திரங்களை உருவாக்குவதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருக்கிறது என்றாலும், எக்கர்ஸ் அதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை)
முதல் பகுதியின் முடிவில் ஒரு ‘set-piece’ சம்பவம் நடக்கிறது. அதன் விளைவாக மே சர்க்கிளில் ஒரு முக்கிய பொறுப்பிற்கு வருகிறார். புதிய திட்டங்கள் உருவாகின்றன. “SECRETS ARE LIES; SHARING IS CARING; PRIVACY IS THEFT ” என்ற கோஷத்தை மே உருவாக்குகிறார். அவருக்கு சர்க்கிளின் செயல்பாடுகள் குறித்து முன்பிருந்த ஒன்றிரண்டு கேள்விகளும் மறைந்து, அதன் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சர்க்கிளின் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படுபவர்களில் ஒருவருடனான சந்திப்பிலேயே நடப்பதும் ,மேவினுள் இயல்பாக நடக்கும் மாற்றம் அல்ல, அதை வலிந்து உருவாக்கும் எக்கர்ஸின் கைங்கர்யம்தான். கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் உத்தியாக இதுவே உள்ளது, மேலும் இதனால் பாத்திரங்கள் முன்பை விட நம்மிடம் இன்னும் கொஞ்சம் நெருங்குகிறார்கள்.
மேவின் உயர்வு ஆனி- மே உறவில் விரிசல்களை உருவாக்குகிறது (அல்லது அப்படி மே உணர்கிறார்). தன் பெற்றோருக்கு நன்மை செய்யவே விரும்பினாலும், தன் செயல்களால், அவர்கள் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் தனிமையை பலவந்தமாகக் குலைக்கிறர். குற்றவாளிகளைத் தேட உதவும் என சொல்லப்படும் சர்க்கிளின் புதிய ஒரு மென்பொருள், மக்கள் முன் நடத்தப்படும் சோதனை முயற்சியிலேயே குழு ‘vigilante’ மனப்பான்மையை, trollingஇன் பிரதிபிம்ப பரிமாணத்தை உருவாக்கி ஒரு மரணத்திற்கே காரணமாகி விடுகிறது. இவ்வளவு நடந்தும், சர்க்கிளின் கொள்கைகளில் எள்ளளவும் சந்தேகம் இல்லாதவராக, தான் செல்ல ஆரம்பித்துள்ள பயணம் மனிதகுலத்தின் நன்மைக்கே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராக மாறிவிடுகிறார் மே.
“We must all have the right to disappear” என்று நாவலில் ஒருவர் கூறுகிறார். Circleஇல் நீங்கள் ஒருமுறை நுழைந்து விட்டால் அது சாத்தியமில்லை. எனவே அதில் நுழைய விரும்பாதவர்கள் உள்ளனர். அவர்களும் நுழையாதவரை, சர்க்கிள் என்ற பெயர் இருந்தாலும், அந்நிறுவனம் முழுமை அடையப்போவதில்லை.
அந்த முழுமைக்காக, இன்னும் தனித்திருப்பவர்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வர, அரசாங்கம்- தனியார் என்ற வேறுபாடுகளைக் களைய, வட்டத்தை முழுமை செய்ய ஒரு திட்டம் தீட்டப்படுகிறது. ஊழியர்கள் சந்திக்கும் ஒரே ஒரு கூட்டத்திலேயே இத்தகைய திட்டம் உருவாகுமா, அப்படியே உருவாகினாலும் நடைமுறையில் அது சாத்தியமா, அரசு அதை ஒப்புக்கொள்ளுமா போன்ற கேள்விகளைவிட, நன்மையின் முகமூடி அணிந்து வரும், அனைவரையும் விழுங்கக்கூடிய, “..right to disappear”ஐ ஒழிக்கக்கூடிய அந்தத் திட்டத்தின் வீச்சு நம்மை பீதியடையச் செய்யும்.
இறுதிப் பகுதியில் ஒரு பாத்திரம் மூலம் ஒரு பெரிய திருப்பம் வருகிறது. அத்தகைய திருப்பம் வரக்கூடும் என்று யூகிக்கும் வகையிலும், அப்படி முதலிலேயே யூகிக்க முடியாவிட்டாலும், நாவலின் முந்தைய நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை ஓடவிட்டால், அதற்கான அடித்தளத்தை நாவல் முழுதும், சில நிகழ்வுகள் வழியாக எக்கர்ஸ் லாவகமாக அமைத்துச் சென்றுள்ளது தெரியும்.
வாசகனுக்கு யூகிக்க எந்த வாய்ப்பும் கொடுக்காமல், இறுதியில் அவன் மீது திணிக்கப்படும் திருப்பமாக இல்லாமல், தன் எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையில், துப்புக்களை முன்கூட்டியே தந்து, அந்த திருப்பத்தை உருவாக்குவது பாரட்டப்படவேண்டியது என்றாலும்,
திருப்பம் ஏற்படுவதற்கான காரணங்கள் காத்திரமாக இல்லை, ஓரிரு பத்திகளில் எக்கர்ஸ் அதை கடந்து சென்று விடுகிறார். இதற்கும் எக்கர்ஸ், விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே காரணம்.
புதிய திட்டம் குறித்து நாவலின் இறுதி கட்டத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் மே, அப்போது என்ன செய்வார் என்பதையும் நாம் யூகிக்க முடியும், அவ்வாறே நடக்கிறது.
அந்த திட்டமாவது முழுமையை கொடுத்ததா என்றால் இல்லை. அனைவரின் புறச்செயல்பாடுகளையும் இணைத்து வட்டத்துக்குள் கொண்டு வந்து விடலாம், ஆனால் அவர்கள் மனதை? அதையும் இணைக்கும்வரை வட்டம் முழுமையாகாது அல்லவா. மனதின் எண்ணங்களையும் கண்டறிய வேண்டும், அவையும் பகிரப்பட வேண்டும் என்ற மேவின் விபரீத யோசனையோடு நாவல் முடிகிறது.
முதல் வரியிலிருந்தே யூகிக்கப்படக்கூடிய கதையோட்டம், தனக்கென்ற சுயம் இல்லாமல் நாவலாசிரியரின் விருப்பத்திற்கேற்ப செலுத்தப்படும் பாத்திரங்கள், நடக்கும் சம்பவங்கள் என செல்லும் இந்த நாவலை ஏன் நாம் கவனிக்க வேண்டும்?
சர்க்கிளின் செயல்பாடுகளை ஏற்காத, ஒரு காலத்தில் மே விரும்பிய மெர்செர் “You look at pictures of Nepal, push a smile button and you think that’s the same as going there,” என்று ஒரு இடத்தில் சொல்கிறார். தன்னைப் பற்றிய ஒரு கருத்து கணிப்பில் (‘Is Mae Holland awesome or what?’) வாக்களித்த 12000 பேர்களில் 97% சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தாலும், மே தனக்கு ஆதரவளிக்காத 3% சதவீதம் பற்றியே எண்ணுகிறார். அவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல், அவர்கள் யாரென்று கண்டுபிடிக்கிறார். பிறகு அவர்கள் தன்னை விரும்ப, தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார். தங்கள் நிலைப்பாடுகளில் இரு துருவங்களில் உள்ள இவர்கள் சொல்வதும் செய்வதும், இந்த நாவல் மே பற்றியோ அல்லது ஒரு நிறுவனம் உலகையாள முயல்வது பற்றியோ மட்டுமே அல்ல என்று சுட்டுகிறது.
இந்த நாவலை வாசிக்கும்/ வாசிக்காத, இணையத்தில்/ சமூக வலைதளங்களின் வட்டத்திற்குள் தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் அனைவருமே இந்த நாவலில் நேரடியாக வராத, ஆனால் அதன் முக்கிய பாத்திரங்கள்தான். நாவலை செலுத்தும் விசையே அவர்கள்தான். இந்த நாவலில் வருவது போல் நாளை வட்டம் முழுமை அடைந்தால், அதற்கு அவர்கள்தான் முக்கிய காரணமாக இருப்பார்கள். தங்களை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்ற அவர்களின் ஆசைகள், அதற்காக எதையும் செய்யத் துணியும் ஆர்வம், அதே நேரம் கொஞ்சமும் எதிர்மறை கருத்துக்களைச் சந்திக்க இயலாத மனநிலை, அது உருவாக்கும் சஞ்சலங்கள்/ பயங்கள் இவற்றின் மீதுதான் சர்க்கிள் போன்ற நிறுவனங்கள் எழுகின்றன. (“Cities, like dreams, are made of desires and fears, even if the thread of their discourse is secret, their rules are absurd, their perspectives deceitful, and everything conceals something else” என்ற கல்வீனோவின் கூற்றில் Cities என்பதை Internet அல்லது Social media என்று மாற்றினாலும் பொருத்தமாகவே இருக்கும்.)
எதிர்காலத்தில் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ளபடி நடந்தால் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்ட நாவல் என்று சொல்லப்படும். அப்படி நடக்காவிட்டாலும் என்ன, ஒரு காலகட்டத்தின் zeitgeistஐ, அது எங்கு சென்று முடியும்/ சென்று முடிந்திருக்கக்கூடும் என்பதைச் சுட்டிய வகையிலும் இது குறிப்பிடத்தக்க நாவலாகிறது.

Friday, October 31, 2014

The Retribution - Val Mcdermid

Jacko Vance, who has been haunting Toni Hill even though he has been behind bars for years is planning his escape as 'The Retribution' begins. 

Jacko escapes, Jacko does several shockingly evil things, the novel ends, that's it. Mcdermid's novels have been of a consistently high quality, with well fleshed out characters,  tightly built events, a slow build up to a explosive climax. But in this novel, Mcdermid seems to let it run all over the place, the apparent ease in which Jacko does what he does is as shocking if not more than what he actually does. The novel reads more like a generic, mindless slasher novel than the closely knit dark/brooding ones we associate with her. 

The unspoken things between Tony and Carol is one of the main USP's of this series, but Mcdermid is treading the line where it can become a case of flogging a horse to its death. All this, 'will they/wont they' speculation could lead to reader exhaustion beyond a point. Flashes of the Mcdermid that we know are there, a couple of events that remind us that Mcdermid doesn't play to the gallery, doesn't shy away from things that can unsettle the reader and that this novel is just an aberration in an otherwise high quality series.Wednesday, October 29, 2014

மேவாரின் பட்டத்தரசன்: மீராவின் கணவன்: கண்ணனின் பகைவன் - Kiran Nagarkar - Cuckold

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2014/10/12/cuckold/
----------
மேவார் ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு, மகாராஜ் குமார் என்று பட்டம் சூட்டி அழைக்கப்படும் இளவரசருக்கு, ஒரு பெரிய சிக்கல். அவர் மனைவி தான் இன்னொருவருக்குச் சொந்தமானவர் என்கிறார். மகாராஜ் குமாரால் யார் அந்த ஆசாமி என்று கண்டுபிடிக்க முடியவில்லை, அப்படி ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை. சரி, ஏதாவது தீய அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கும், பேயோட்டலாம் என்று பார்க்கும்போது. “You can exorcise the devil. But how do you rid yourself of a God!” என்ற கேள்வி எழுகிறது. ஆம் இளவரசி தன் மனதில் வரிந்திருப்பது கண்ணனை.
ராஜஸ்தானிய இளவரசி கண்ணன் மீது கொண்ட பிரேமை என்று படிக்கும்போது, ‘மீரா பாய்’ நினைவுக்கு வருகிறார் அல்லவா. அவரைப் பற்றிய தொல்கதைகள் பரவியுள்ள அளவிற்கு அவர் கணவர் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அப்படியே தெரிந்ததும் தன் மனைவியின் பக்தியை புரிந்து கொள்ளாத கல் மனிதராக என அவ்வளவு சிறப்பாக இருக்காது. அவரின் கோணத்தை கிரண் நகர்கர் (Kiran Nagarkar), தன்னுடைய ‘Cuckold’ நாவலில் தர முயன்றுள்ளார். ஆனால் இந்த நாவல் மகாராஜ் குமார் குடும்ப வாழ்க்கை, தனிமனித உறவுகள் என்று மட்டும் பேசுவதாக இல்லாமல், விரிவான வரலாற்றுப் பார்வையையும் முன்வைக்கிறது. மேவார் ராஜ்ஜியத்தில் நடக்கும் அரசியல் சதிகள், மேவார் குஜராத்/ டெல்லி ராஜ்ஜியங்களுடன் நடத்தும் போர்கள், பாபரின் வருகை என பதினைந்தாம் நூற்றாண்டு வடமேற்கு இந்தியாவின் சித்திரத்தையும் அளிக்கிறது.
நமக்கு முதலில் அறிமுகமாகும் மகாராஜ் குமார், மேவார் ராஜ்ஜியத்தைக் காக்கும் வலிமை உடையவரா என எண்ணும்படி கொஞ்சம் பலவீனவராக தோன்றுகிறார். அது தவறான புரிதல் என சீக்கிரம் உணர்கிறோம். மேவாரின் பொருளாதாரம், சித்தோர் நகரின் கழிவு நீர் வெளியேற்ற அமைப்பைச் சீர் செய்யுதல், போர்க்கால வியூகங்கள்/ தந்திரங்கள்/ ஆயுதத் தளவாடங்களை நவீன காலத்திற்க்கேற்ப மேம்படுத்தல் என நவீனமான ஆசாமியாக உள்ளார். தன் மனைவியின் மனங்கவர்ந்த கண்ணனை அவர் வெறுத்தாலும், சில விஷயங்களில் அவரை வழிகாட்டியாக கொள்கிறார். போரை கடைசி வரை தவிர்க்க முயல்கிறார், வேறு வழியில்லாமல் போரிட நேர்ந்தால், அதில் தோல்வி வரும் எனத் தெரிந்தால் பின்வாங்க வெட்கப்படுவதில்லை. அதே நேரம், வெற்றி பெற எந்தத் தந்திரத்தைக் கையாளவும் அஞ்சுவதில்லை.
மகாராஜ் குமாரின் தந்தை ராணா சங்காவின் மனைவிகளுள் மிகவும் பிரியத்துக்குரியவரான கர்மாவதி, தன் மகன் விக்ரமாதித்தியனை வாரிசாக்க முயல்கிறார். எனவே, அரச குலப்பெண்ணான தன் மனைவி கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு, ஆடல்/பாடலில் ஈடுபடுவதைக்கூட (கண்ணனின் பக்தியில்தான் என்றாலும்) கட்டுப்படுத்த முடியாதவர் என்ற பிம்பத்தை அவர்கள் உருவாக்குகின்றனர். மகராஜ் குமாரின் மனைவியின் ஆடல்/ பாடலைக் காண்பதால், மக்களும் இதே போல் எண்ணுகிறார்கள். இதற்கு கர்மாவதியின் சூழ்ச்சி மட்டுமல்ல, தன் மனைவியைக்கூட கட்டுப்படுத்த முடியாதவன் ஒரு ராஜபுத்திர வீரனா, அரசாள தகுதி உள்ளவனா என சந்தேகம் மக்கள் மனத்திலும் எழுவதற்கு எந்த காலகட்டத்திலும் கணவன்/ மனைவி உறவு குறித்து பொதுவாக நிலவும் மனநிலையும் ஒரு காரணம். இத்தகைய பேச்சுக்களை இன்றும் கேட்க முடியும.
அரியணைக்காக இத்தகைய சதி வேலைகள் மேவார் அரச வம்சத்தில் சகோதரர்களிடையே எப்போதும் நடக்கும் ஒன்று என்பதை, அந்த ராஜ்ஜியத்தின் வரலாற்றில் நடந்துள்ள போட்டி, ரத்த விரயம் பற்றி சொல்லும் தகவல்கள் நாவலில் உள்ளன. ராணா சங்காவே தன் அரியணையைக் காக்க, தன் மகன்கள் மோதிக் கொள்வதை ஊக்குவிப்பவர் போல, சில நேரம் நடந்து கொள்கிறார். ஒரே நேரம் ஒருவரை உயர்த்துவது, இன்னொரு நேரம் மற்ற மகன், ஆனால் இருவரில் யார் பக்கமும் இறுதியாக சாயாமல், இரு மகன்களையும் தன் மனநிலை குறித்த குழப்பத்தில் வைத்திருக்கிறார். கர்மாவதியின் தூண்டுதல் இதற்கு ஒரு காரணமென்றாலும், இப்படி தங்களுக்குள் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதுவரை தன் பதவி பாதுகாப்பானது என அவர் நினைத்திருக்கலாம். தன் குல வரலாற்றை அறிந்தவரல்லவா. ராணா- சங்காவே மற்ற சகோதரர்களின் கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்தே அரியணை ஏறுகிறார். அவரது பாட்டன் ராணா கும்பா தன் மகனாலேயே கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஊகங்களும் நாவலில் உள்ளன.
அரியணைக்காக எதையும் செய்யத் துணிபவர்களை, அவர்கள் செய்த கீழ்மைகளை மறந்து அரசர்களாக ஏற்றுக் கொள்ளும் மக்கள் ஒரு புறமிருக்க, போரில் இறப்பதையே வாழ்வின் சாதனையாகக் கருதுவது இன்னொரு புறம் இருப்பது நகைமுரண்தான். தன் மகன்களையே நம்பாத அரசர்களையும் பார்க்கிறோம். இப்படி காலாவதியாகி விட்ட, பாசாங்குத்தனம் கொண்ட கருத்துக்களில் உள்ள அபத்தங்கள் நாவல் முழுதும் நேரடியாக இல்லாமல், நுட்பமாக பொதிந்துள்ள பகடியாக வருகின்றன.
மகாராஜ் குமார் வாழ்ந்த காலகட்டமான 15ஆம் நூற்றாண்டு உள்நாட்டு யுத்தங்களால் மட்டுமின்றி, பாபரின் படையெடுப்பாலும் முக்கியத்துவம் பெறுகிறது. பாபர் நேரடி பாத்திரமாக நாவலில் வருவதில்லை. ஒற்றன் மூலம்,அவர் எழுதும் நினைவு/ நாட்குறிப்புக்களின் பிரதி மகாராஜ் குமாருக்கு கிடைக்க அதன் மூலமே அவருக்கும்/ நமக்கும் பாபர் பற்றி தெரிய வருகிறது.
பதின் வயதிலிருந்தே போரில் ஈடுபட ஆரம்பித்து, வெற்றிகளுக்கு நிகராகக் தோல்விகளையும் சந்தித்த, ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மிக விரைவில் மீண்டெழும் மன வலிமையே முதலில் மகாராஜ் குமாரை, பாபர் மீது கவனம் செலுத்தத் தூண்டுகிறது. செல்வத்திற்காக படையெடுத்து, பின் தன் நாட்டிற்கே திரும்பி விடும் எண்ணமில்லாமல் ஒரு புதிய சாம்ராஜ்யத்தை அமைக்கும் பாபரின் கனவு பற்றியும் தெரிய வருகிறது. அதற்குத் தேவையான அனைத்து தந்திரோபாயங்களையும் அவர் கையாள்கிறார்.
டிமுரின் படையெடுப்பு கொள்ளையடிப்பதாகவே இருந்து அவர் தில்லியை அதிக நாட்கள் ஆட்சி செய்யவில்லை என்றாலும், டிமுரின் வம்சாவளி தான் என்பதை தில்லியை ஆட்சி செய்ய தனக்குள்ள உரிமையாக வைக்கிறார். அவரின் முதல் பெரும் எதிரி இன்னோர் இஸ்லாமியரான லோடி என்றாலும், காபிர்களுக்கு எதிரான, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்க தான் செய்யும் யுத்தமாகவும் இதை முன்வைக்கிறார். அதற்காக கோயில்களை இடிப்பது போன்ற செயல்களும் நடத்தப்படுகின்றன. அதே நேரம் , பீரங்கிகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் உபயோகித்து ராணுவத்தை நவீனப்படுத்தவும் செய்கிறார். ஒரே நேரத்தில் நவீனமாகவும், வைதீகமாகவும் எந்த சஞ்சலமும் இல்லாமல் அவரால் இருக்க முடிந்திருக்கிறது. சாம்ராஜ்யக் கனவில், அதன் வெற்றிக்காக எதையும் செய்யத் துணியும் எந்த ஒரு நபரிடமும் இருக்கும் பொதுக்குணங்கள் இவரிடமும் உள்ளன.
இந்தக் குறிப்புகள் குமாருக்கும், பாபருக்கும் இடையே உள்ள ஒற்றுமை/ வேற்றுமைகளையும் காட்டுகின்றன. இருவரும் நவீனத்துவத்தை நாடுபவர்கள், தங்கள் நாடு, பக்கத்து நாடு என்றில்லாமல் அதைவிட பெரியதாக கற்பனை செய்யக் கூடியவர்கள் என்பன போன்றவை ஒற்றுமையென்றால், பாபரிடம் இருந்த ஒற்றை நோக்கு மகாராஜ் குமாரிடம் இல்லை என்பதை நாம் உணரலாம்.
பாபரால் ஏற்படக்கூடிய ஆபத்தை குமார் உணர்ந்தாலும், மற்றவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. “God brought it right!” என்ற வரி அடிக்கடி பாபரின் குறிப்புக்களில் தென்படுவது குமாரை துணுக்குற செய்கிறது. அவருக்கும் கடவுளுக்குமான உறவை “.. my relationship with God is distant, formal and more a matter of protocol and faith” என்று சொல்லும் மகாராஜ் குமார், “The diarist on the other hand has an extraordinary faith , the kind of compelling faith that can almost bend and coerce God to rise to his expectations.” என்று பாபர் பற்றிக் குறிப்பிடுகிறார். (கான்வா யுத்தத்தில் பாபர் மது அருந்த மாட்டேன் என்று செய்த சத்தியம் படைவீரர்களை எழுச்சி பெறச் செய்ததை பற்றியும் நமக்குத் தெரியும்)
“If Mewar is to grow and expand, one of our major tasks will have to do with making Muslims feel secure in a Hindu kingdom. They must have as much of a stake in Mewar’s future as the Jains or Hindus. How, I keep wondering do we ensure a dichotomy whereby God and faith remain at home and the state takes first priority in public life” என இன்றளவும் மதம்-அரசு குறித்து நடக்கும் விவாதங்களைப் பற்றி மகாராஜ் குமார் யோசிக்கிறார். ராணா சங்கா, மகாராஜ் குமாரிடம் ஒரு முறை “You are a prophet who’s come before his time. An early bird waking up people just little after the hour of midnight” என்று சொல்வது பொருத்தமாகத்தான் உள்ளது.
பாபர் லோடியை வென்று தில்லியைக் கைப்பற்றிய பிறகும் பாபரின் அபாயத்தை உணராத நிலைதான் நீடிக்கிறது. பாபர், பீரங்கிகள் போன்ற (அன்றைய) நவீன கண்டுபிடிப்புகளை உபயோகிப்பதின் முக்கியத்துவத்தையும் மகாராஜ் குமாரே உணர்கிறார். அவரும் பீரங்கிகள் வாங்க முயற்சித்தாலும், அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றன. இப்படி தங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டு, பாபரைக் குறைவாக மதிப்பிட்டு அவரை எதிர்கொள்ளும் ‘கான்வா போரில்’ (Battle of Khanwa, 1527), ராஜபுத்திர அணியினர் தோல்வி அடைவதுடன் நாவல் முடிகிறது. (மூன்றாம் பானிபட் (1761) யுத்ததிற்கான முன்னேற்பாடுகளிலும், இரு புறமிருந்த படைகளின் எண்ணிக்கை வித்தியாசத்திலும் என கிட்டத்தட்ட இதே சூழலில் நடந்த போரின் முடிவையும் கொண்டு, வரலாற்றிலிருந்து இந்திய மன்னர்கள் அதிகம் கற்றுக் கொள்ளவில்லை என்பதாக புரிந்து கொள்ளலாமா?)
இத்தனை நுட்பமாக திட்டமிடும் பாபர் , கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக, தன் குறிப்புகள் எதிரிக்கு அனுப்பப்படுவதை அறிந்திராமல் இருப்பாரா என்ற கேள்வி எழலாம். நகர்கர் தன் பின்னுரையில் நாவலில் உள்ள சரித்திர உண்மைகள் பற்றிப் பேசி விட்டு “As for the rest, storytellers are liars. We all know that.” என்று முடிக்கிறார். பாபரை நாவலின் ஒரு பாத்திரமாக நேரடியாகக் காட்டாமல், அவரின் நாட்குறிப்பு மூலமே நமக்கு ஒரு சித்திரத்தை அளித்து, அதை குமார் மகராஜ் பாத்திரத்துடன் இணைத்துப் பார்க்கச் செய்வதை நகர்கரின் இலக்கிய உத்தியாக எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
இத்தனை பிரச்சினைகளோடு தன் குடும்ப வாழ்வையும், அதன் பிரச்சனைகளையும் மகாராஜ் குமார் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர் மனைவி முதலில் மேவாரில் எள்ளி நகையாடப் படுகிறார். குஜராத் ராஜ்ஜியத்திற்கு எதிரான போரில், முதலில் பின்வாங்கும் மகாராஜ் குமார், பிறகு தந்திரத்தால் மிகப் பெரிய வெற்றிப் பெறுகிறார். ஆனால் மேவார் ராணுவ தளபதிகள், மேவாரின் மக்கள் இதை முழு மனதுடன் ஏற்பதில்லை, மேவாரின் பெருமையை அவர் கெடுத்து விட்டதாக எண்ணுகிறார்கள், அவரைத் தூற்றுகிறார்கள், அவர் பெறும் வெற்றிகளை மலினப்படுத்துகிறார்கள். இதிலும் ஒரு நகைமுரணைப் பார்க்கலாம், அரியணைக்கான சதிகளைப் பொறுத்துக் கொள்பவர்கள், போரைப் பொறுத்த வரை, வெற்றி என்பதை விட, வீரத்தை வெளிக்காட்டுதல், வீர மரணம், தியாகம், இவற்றால் கிடைக்கும் (இறந்தப் பின்) புகழ், இவற்றையே அதிகம் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. பாபர் பெற்ற வெற்றிக்கு இவர்களின் இந்த மனநிலையும் ஒரு முக்கியக் காரணம்.
அதே நேரம் யுத்தம் நடந்த ஓராண்டு காலத்தில், அவர் மனைவி குறித்த பார்வை பொதுமக்களிடையே மாறி விடுகிறது. மகாராஜ் குமார் ஓராண்டுக்குப்பின் திரும்பும்போது மீரா பாய் ‘Little Saint’ என்று மக்களால் வணங்கப்படுகிறார். ஓராண்டில் இந்த மாற்றம் எப்படி நடந்தது என்று நகர்கர் வெளிப்படையாக சொல்வதில்லை, சுட்டுவதுமில்லை. ‘Little Saint’இன் பக்தியை இந்தக் காலகட்டத்தில் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்றாலும் இது நாவலின் பலவீனமாகவே உள்ளது.
நாம் அறிந்துள்ள மீரா பாய்க்கும், ‘Little Saint’க்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. கண்ணன் மேல் அதீத பக்தி இருந்தாலும், எப்போதும் வான் மேகங்களிலேயே அவர் பறப்பதில்லை. நாம் பார்க்கும், ‘Little Saint’ சீட்டாட்டத்தில் ஏமாற்றுபவர், மாட்டிக்கொண்டாலும் அதை ஒப்புக்கொள்ளாதவர், அரசியல் போக்கை தெரிந்து வைத்திருப்பவர் என பன்முகம் கொண்டவராக இருக்கிறார். மகாராஜ் குமார் இரண்டாவது மணம் புரிந்து கொண்டதும், சற்றே பொறமை கொள்கிறாரோ என்றும் நம்மை எண்ணச் செய்கிறார்.
மகாராஜ் குமார், ஏன நீலச் சாயம் பூசி, கண்ணன் போல் உடையணிந்து அந்தப்புரத்திற்குப் போகிறார், அப்படியாவது ‘Little Saint’ இன் அன்பை பெற முயல்கிறாரா? ‘Little Saint’ அவரை கண்ணனாக ஏற்றுக் கொள்கிறார், சில நேரம் கொஞ்சுகிறார்,சில நேரம் சிணுங்கல் ,சில நேரம் கோபம் (கண்ணன் மீது மட்டுமல்ல, ராதை மீதும்தான், இவர்கள் மீது மட்டுமின்றி கண்ணனின் மற்ற அனைத்து காதலிகளையும் திட்டுகிறார்). அதே நேரம் ஒரு முறை, ராசலீலாவின் பாதிப்பில் மகாராஜ் குமார்/ கண்ணனைப் பெண் உடை அணியச் செய்கிறார், இந்தச் சல்லாபங்கள் , வந்துள்ளது கண்ணன் என்று நம்பித்தான் நடக்கிறதா , அல்லது ‘Little Saint’ , வந்துள்ளது தன் கணவன்தான் என்று அறிந்தும் அறியாதது போல் நடிக்கிறாரா?
‘Little Saint’ ஒரு புதிர் என்றால், மகாராஜ் குமாரால் ஏன் அவரை ஒதுக்க முடியவில்லை. இப்படி அவரை வசப்படுத்த எதையும் செய்ய நினைக்கும் மகாராஜ் குமார் (பெண் உடைகளை அணிவது வெளியே தெரிந்தால் அது தன் எதிரிகளுக்கு இன்னும் வலுசேர்க்கும் என்று புரிந்தாலும்) ஒன்றும் ஏகபத்தினி விரதனும் கிடையாது. தன்னுடைய செவிலித்தாயுடன் (கௌசல்யா), திருமணத்திற்கு முன்பே தான் வைத்திருந்த உறவைத் தொடர்கிறார். தன் தங்கை போலத் தோற்றமளிக்கும் சிறு பெண்ணிடம் (லீலாவதி) அவருக்கு உள்ள உறவை எந்த வகையில் சேர்ப்பது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம். அவளை அவர் தவிர்ப்பது, அவள் தங்கை போல் இருக்கிறாள் என்பதாலா அல்லது அவளின் தாத்தா மேவார் அரசுக்கு கடனுதவி அளிக்குமளவுக்கு வலிமை உள்ளவர் என்பதாலா? கொஞ்சம் பிசகினாலும் அருவருப்பான ஒன்றாக ஆகி இருக்கக்கூடிய இந்த உறவுகளை நகர்கர் நுட்பமாக கையாள்கிறார்.
இந்த இரு உறவுகளைப் பார்த்து அவரிடம் ‘Little Saint’மீது காதல் இல்லை , தன்னை ஒருத்தி நிராகரிப்பதா என்ற அகங்காரம் மட்டும்தான் உள்ளது என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் நாவலின் இறுதியில், மிக மோசமான சூழலில் அவர் முன்னே பல தேர்வுகள் இருந்தும் “But there is only one woman for me. it is not Leelawati and it is not Kausalya. It is my wife..”. என்று அவர் ஏன் சொல்ல வேண்டும். காதல், அகங்காரம் இவற்றை விடவும் ஏதோ ஒன்று அவரை இறுதிவரை ‘Little Saint’உடன் பிணைத்துள்ளது.
கௌசல்யாவின் மகன் மங்களுடன் (Mangal) இவருக்கு உள்ள உறவும் நுட்பமானது. மங்கள் தன் தாய்க்கும் , தன் (சிறுவயது) நண்பனுக்கும் இடையே உள்ள உறவை அறிந்திருப்பான் என்று யூகிக்கலாம். (அவன் உளவுத்துறையைச் சார்ந்தவன்). அதற்கேற்றார்போல் அவனுக்கும் அவன் தாய்க்கும் உள்ள உறவு, கொஞ்சம் விட்டேத்தியான ஒன்றாகவே காண்பிக்கப்படுகிறது (தாயின் கள்ள உறவுதான் காரணமா?). ஆனால் ஒரு இடத்திலும் அந்த உறவை தான் அறிந்துள்ளதாக அவன் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
அவனுக்குத் இது தெரிந்திருந்தும், இறுதி வரை குமார் மகாராஜுக்கு விசுவாசமாக, மேவாரின் அரசு ஊழியர்களில், ஏன் தன் குடும்ப உறுப்பினர்களிலேயேகூட மகாராஜ் குமார் எந்த பயமும் இல்லாமல் எப்போதும் நம்பக் கூடியவனாக மங்கள் இறுதி வரை இருந்தானா? அவர் அவனை சில நேரம் தேவையில்லாமல் கடிந்து கொண்டு, தன் எரிச்சலுக்கு வடிகாலாக பயன்படுத்துவதையும் மங்கள் பொறுத்துக் கொள்கிறான். சிறு வயது நட்பு காரணமா அல்லது தனிப்பட்ட உணர்வுகளை அனுமதிக்காத கடமை உணர்வா?
தன் மனைவி கண்ணன் மீது கொண்டுள்ள காதலால், “Two mortal enemies. Correction. One mortal and the other divine and immortal” என தனிப்பட்ட முறையில் கண்ணனுடனான உறவை குமார் மகராஜ் முறித்து, அவரை எதிரியாகப் பார்த்தாலும், பட்டத்து இளவரசனாக ஜன்மாஷ்டமி விழாவின்போது அரச குடும்பத்தின் சார்பாக கண்ணன் கோவிலுக்கு செல்ல வேண்டிய மரபை கடைபிடிக்க வேண்டியுள்ளது- “I was overtaken by such a strong wave of loathing, I wanted to strangle him till the last breath had gone out of him and then snap his neck…. I didn’t want to see his face again, not be anywhere in his vicinity for the rest of my life” என்று பொருமினாலும் மரபுகளுக்காக எதிரியை சகித்துக் கொள்ள வேண்டிய நிலை.
ஆனால், கண்ணனுடனான மகாராஜ் குமாரின் உறவு, வெறுப்பைத் தாண்டி இன்னும் பல அடுக்குகள் கொண்டது. சிறு வயதில் ராமர், சிவன், கிருஷ்ணர் என பல கதாநாயகர்கள் அவருக்கு இருந்தாலும் வயதாக, வயதாக கண்ணனையே தனக்கு நெருக்கமாக உணர்கிறார் குமார் மகராஜ். சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளும், தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைக் கொள்ளாத, தன்னைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க நினைக்காத கண்ணனை வாழ்வியல் குருவாக எண்ணுகிறார். தன் மனைவி கண்ணனை விரும்புகிறாள் என்று தெரிந்ததும், குமார் மகராஜின் மனநிலையில் கண்ணன் குறித்த கசப்பு உருவாகிறது. கண்ணனுக்கு பல காதலிகள் இருந்தும் பெண்கள் ஏன் மேலும் மேலும் அவன் மேல் மையல் கொள்கிறார்கள் என்று யோசிக்கிறார், “The truth is perhaps simpler than that: women love a philanderer”.
நாவலின் உரைநடை பற்றி: “Fallopian Tubes”, ‘Stag parties”, போன்ற வார்த்தைகள், “Cat got your tongue” போன்ற சொற்றொடர்கள் அந்த காலத்திற்கு ஒட்டாமல் இருப்பதாக தோன்றலாம் . (சில இடங்களில் ‘kotwal’ போன்ற அந்தக் கட்டத்திற்கு ஒப்பும் பதங்களையும் உபயோகிக்கிறார்). சரித்திர நாவலுக்கு ஒட்டாமல் இருக்கும் உரைநடை என்று சொல்லலாமென்றால் அதையும் நகர்கர் எதிர்பார்த்து தன் முன்னுரையில் “One of the premises underlying this novel is that an easy colloquial currency of the language will make the concerns of the ….. and the others as real as anything we ourselves are caught in:… The idea was to use contemporary idiom so long as the concepts we use today were available in the sixteenth century…. என்கிறார். அதன்படியே உரைநடையும் அமைந்துள்ளது.
இதை சரித்திர நாவல் என்றோ, அரசியல் நாவல் என்றோ, குறிப்பிட்ட சரித்திர நபர் பற்றியதென்றோ தனித்து சொல்ல முடியாது. ராஜஸ்தான் என்றவுடன் ‘வண்ணங்கள்’தான் நினைவுக்கு வரும். பெண்கள் அணியும் உடைகளின்/ ராணுவ வீரர்களின் உடைகளின் வண்ணங்கள், அங்குள்ள கோவில்களின் வண்ணங்கள் இவற்றோடு காதல், துரோகம், பொறமை, வெறுப்பு, கீழ்மை, பாலியல் இச்சை என மனதின் பல வண்ணங்களை இந்த நாவல் நமக்கு காட்டுகிறது.
‘Cuckold’ என்ற வார்த்தை, வேறொருவனுடன் உறவு வைத்திருக்கும் பெண்ணின் கணவனைக் குறிப்பிடுகிறது. ஆம், மகாராஜ் குமாரின் மனைவி இன்னொருவரை மனதால் வரிந்துள்ளார். அது மட்டுமல்ல, முடியாட்சி விதிகள்படி, அரியணை மகாராஜ் குமாருக்கே உரியது என்றாலும், அவர் அதற்கு தகுதி உடையவர், போர்களில் வெற்றி தேடித் தந்தவர் என்றாலும், அவர் தந்தை அதைத் தர தயங்குகிறார், தன் பிரியத்திருக்குரிய மனைவியின் மகனை சில நேரம் முன்னிறுத்துகிறார். மகாராஜ் குமார் போரில் பெறும் வெற்றிகளின் பலனை அனுபவித்தாலும், தளபதிகளும்/ மக்களும் அவரை ஏற்பதில்லை, இன்னொரு இளவரசரை விரும்புகிறார்கள் (இதில் அந்த இளவரசரின் தூண்டுதல் இருந்தாலும்). தனி வாழ்க்கையில் மட்டுமின்றி, அரசியல் வாழ்விலும் ‘Cuckold’ஆகத் தான் இவர் இருக்கிறார்.
பின்குறிப்பு:
மீரா பாய் நாவல் முழுதும், ‘wife’, ‘Green eyes’ ‘Little Saint’ என்றே அழைக்கப்படுகிறார். மீரா என்று எங்கும் சொல்லப்படுவதில்லை.அவர் கணவரும், ‘ மகாராஜ் குமார்’ என்ற பட்டப் பெயராலேயே அழைக்கப் படுகிறார்.
எனவே இந்தப் பதிவிலும் அவர்கள் அவ்வாறே (ஓரிரு இடங்கள் தவிர்த்து) குறிப்பிடப்படுகிறார்கள்.

புத்தாயிரத்தின் குரல்கள் – நெல் ப்ராய்டென்பர்கர்

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2014/10/05/bekk-freudenberger/
-----------
நெல் ப்ராய்டென்பர்கரின் (Nell Freudenberger) முதல் சிறுகதை தொகுப்பான ‘Lucky Girls’இன் தலைப்புக் கதையில் அருண் என்ற மணமானவருடன் உறவு வைத்திருந்த அமெரிக்க கதைசொல்லி அருணின் மறைவுக்குப் பிறகு அவரின் தாய் திருமதி. சாவ்லாவையும் அவர் மனைவி லக்ஷ்மியையும் சந்திக்கிறார். இந்தச் சந்திப்புக்கள் வெளிப்படையான கசப்புக்கள் நிறைந்தவையாகவோ, கதைசொல்லியை பழிப்பது என்றெல்லாமோ இல்லை. சொல்லப்போனால் கதைசொல்லி இந்தச் சந்திப்புக்களில் சற்று தயக்கத்தோடிருருக்க, அதற்கு மாறாக திருமதி. சாவ்லாவும், லக்ஷ்மியும் திடமாக தோன்றுகிறார்கள். அவர்களுக்கு கதைசொல்லி மீது எந்தக் கசப்பும் இல்லையா? அருணின் இறுதி நாட்களின்போது அவனுடன் தான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லும் கதைசொல்லியிடம், You didn’t belong there… Nobody would have known what you were, என்று ஏன் திருமதி. சாவ்லா கூறுகிறார். கதைசொல்லி, லக்ஷ்மி செய்த ஒரு உதவிக்கு நன்றி சொல்லும்போது I have my sons.., and you have no one.” என்று சாதாரணமாக சொல்வது போல் சொல்கிறார்.
இந்த இரு சம்பவங்களும் கதைசொல்லி மீதான அவர்களின் உள்ளார்ந்த வெறுப்பை காட்டுவது போலவும், குற்றம் சாட்டும் தொனியில்லாத நேரடித் தன்மையால் யதார்த்தமான ஒன்றாகவும் தோன்றுகின்றன. வாசகனுக்குத் தோன்றும் இந்த நிச்சயமற்ற/ கேள்விகளும் உணர்வுகளும் இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளிலும் ஒரு பொது அம்சமாக உள்ளன. கதையின் சம்பவங்களும்/ பாத்திரங்களும் நடவடிக்கைகளும் தெளிவாக இருந்தாலும், அவற்றின் நோக்கம் நமக்குச் சரிவர பிடிபடுவதில்லை/ நாம் பார்க்க- உணரத் தவறவிடுகிற ஏதோ ஒன்று இந்தச் சம்பவங்களில் உள்ளது என்று தோன்றுகிறது. டவரின் (Wells Tower) கதைகள், வெடிக்கும் கொதி நிலையோடு முடியும் சம்பவங்களுடன், அந்த இடத்திற்கு வந்த பாதையைத் தேட வாசகனைத் தூண்டினால், நெல் தன் பாத்திரங்களின் வாழ்க்கையின் சில பக்கங்களில்/ அத்தியாயங்களைக் காட்டி, அந்த வாழ்வின் முன் பின்னாக வாசகனைச் செல்லத் தூண்டுகிறார்.
ஐந்து நெடுங்கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் களன் இந்திய அல்லது வேறு ஆசிய நாடுகளாக உள்ளன. இதற்கு இந்தத் தொகுப்பு பற்றிய blurbகளிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை இந்திய/ஆசிய நாடுகளில் அமெரிக்கர்களின் வாழ்வைப் பற்றிய பதிவுகள் மட்டுமல்ல. இவர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டை விரும்பாமல் தாய்நாட்டிற்கு ஏங்குபவர்கள் அல்லர். இவை இந்திய/ ஆசிய மக்களைப் பற்றிய அமெரிக்க கண்கள் வழியான பதிவுகள் அல்ல. பெற்றோருடனான உறவுகள், சிறு வயதில் தாய்/ தந்தை இருவரில் யாராவது ஒருவர் குடும்பத்தை விட்டு நீங்குவது மனதில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள், என இந்தப் பாத்திரங்களை அலைக்கழிப்பது அகம் சார்ந்த விஷயங்களே.
பல்வேறு உணர்வு நிலைகளின் தொகுப்பே இந்தத் தொகுப்பு என்று கூறலாம். இவற்றின் களம் எந்த நாடாகவும் இருக்கலாம். நெல் இந்தியா, தாய்லாந்து, லாவோஸ் போன்ற ஆசிய நாடுகளில் பயணித்திருக்கிறார், பாங்காக்கில் சில காலம் ஆங்கில ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். இவை தன் கதைகளுக்கு இத்தகைய களன்களை தேர்வு செய்ய காரணமாக இருந்திருக்கலாம். டெல்லி, பாங்காக் நகரங்களைப் பற்றிய சில சித்திரங்கள் நமக்குக் கிடைத்தாலும் இந்தக் களங்களே ஒரு பாத்திரமாக, கதையின் முக்கிய அங்கமாக மாறுவதில்லை. இவற்றின் பின்புலத்தில் (அமெரிக்க) பாத்திரங்களின் செயல்பாடுகள்/ மனவோட்டங்கள் இவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, The Orphan கதையில், குடும்பச் சந்திப்பின்போது ஆலிஸ் கண்களின் வழி பாங்காக் நகர காட்சிகள் சிலவற்றை பார்க்கிறோம், ஆனால் குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள உறவே (அல்லது உறவின்மையே) அதன் காரண காரியங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. ‘Lucky Girls’இல் டில்லிக்கு வரும் அமெரிக்க கதை சொல்லி, தான் உறவு வைத்திருந்த அருணின் தாயை/ மனைவியை சந்திப்பதே முக்கியத்துவம் பெறுகிறது. எனவே கதைகளின் முடிவில் நாம் எடுத்துச் செல்வது இவர்களின் உணர்வுகளையேயன்றி அவர்கள் வசிக்கும் நகரத்தின் வாசனைகளையோ, வண்ணங்களையோ அல்ல.
‘Outside the Eastern Gate’ கதையில் கதைசொல்லி Alzheimer நோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் தன் தந்தையைப் பார்க்க வருகிறார். நிகழ்காலத்தோடு, 60களில் நடந்த சம்பவங்களும் நமக்குத் தெரிய வருகின்றன. கதைசொல்லியின் தாய் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுட்டப்படுகிறது. முன் பின்னாகச் செல்லும் இந்தக் கதையில் நெல் நமக்கு முழு ஓவியத்தைக் காட்டாமல் அதன் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறார். இங்கு இந்தியா என்ற களனுக்கு அதிக வேலையில்லை. “Travelling is for people who don’t know how to be happy”, என்று இந்தத் தொகுப்பில் ஒரு பாத்திரம் சொல்கிறது. மன அலைக்கழிப்புக்களுடன் இருக்கும் இந்தப் பாத்திரங்கள் அதற்கான தீர்வைத் தேடும் பயணத்தில் வந்தடைந்த இடம் என வேண்டுமானால் இந்திய/ ஆசிய நாடுகளைச் சொல்லலாம்.
The Orphan’ கதையில் ஆலிஸ்/ ஜெப் என்ற விவாகரத்து பெற்றுள்ள மத்திய வயது தம்பதியர் தங்கள் முடிவை தங்கள் பிள்ளைகளிடம் அறிவிக்க (மகன்/ மகள்) தாய்லாந்து செல்கிறார்கள். நால்வரும் உணவருந்த உட்காரும் நொடியிலிருந்தே இந்தக் குடும்பத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று உணர்கிறோம். பிரச்சனை என்பதைவிட இவர்களுக்கிடையே ஏதோ சங்கடம் (awkwardness) இருப்பதை நெல், ஒருவரை ஒருவர் மேலும் சங்கடப்படுத்தக் கூடாது என்று அதற்கேற்றார் போல் நடக்கும்/ நடத்தப்படும் உரையாடல்கள் மூலம் சுட்டுகிறார். ஒரு கட்டத்தில் ஆலிஸ் “She laughs, but she’s glad that she’s not the only one who can’t talk to their children” என்று நினைக்கிறார். இவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கவில்லை, ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி தொலைதூரம் சென்று விட்டனர். இத்தகைய குடும்பத்தை எங்கும் பார்க்கலாம் அல்லவா. இங்கு பிள்ளைகளுக்கு தாய்லாந்து ஒரு சரணாலயமாக உள்ளது. ஆனால் யார் எங்கிருந்தாலும், அவர்கள் தங்களை அனாதைகளாகவே உணர்கிறார்கள்.
அமெரிக்கர்கள் மற்ற நாடுகளைப் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது மிகச் சில இடங்களில் கதையின் போக்கோடு ஒட்டியே வருகிறது. ‘ஆலிஸ்’ (The Orphan), மேர்சீடீஸ் காரை பாங்காக் நகரத்தில் பார்த்தவுடன் “The only other car in the parking lot is a teal Mercedes-Benz, which seems out of place in a Third World Country. She knows better than to comment on this…” என்று நினைக்கிறாள். மூன்றாம் உலக நாடுகளைக் கற்காலத்தில் உள்ளவையாக உருவகித்துள்ள அமெரிக்க மனம், ஆனால் அது குறித்து அவருக்குள்ள குற்ற உணர்வு இரண்டும் இதில் வெளிப்படுகிறது. இதற்கு மாறான ஒன்றை ‘Outside the Eastern Gate’ கதையில் பார்க்கிறோம். விவியன் என்பவர் பல்லாண்டுகளாக இந்தியாவில் வசிப்பவர். கதைசொல்லியை அழைத்துக் கொண்டு செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள -
Vivian slammed on the breaks. “Fucking Biharis”
“It’s gotten worse,” I said, about the traffic.
“It gets worse every year,”, Vivian said. “You have no idea”,
என்ற உரையாடல் நடக்கிறது. விவியன் சொல்வதை இன/ நிறவெறி என்று சொல்லிவிட முடியுமா? இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்து விட்டு, இப்படி வசைபொழிவது இவரின் இயலபாகி விட்டிருக்கலாம், இந்த வசையை (அல்லது அதைப் போல்) நாமும் சொல்லி இருப்போம் அல்லவா. அமெரிக்காவில் இருந்திருந்தாலும் இப்படிப்பட்ட வசையை விவியன் உபயோகித்திருப்பார், என்ன பிஹாரிகளுக்குப் பதில் வேறொருவர் அவ்வளவுதான். பிஹாரி என்ற வசையையே அவர் இந்தியர்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
‘The Tutor’ கதையில், இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க இளம் பெண்ணிற்கு தனியாக பயிற்சி அளிப்பவராக வரும் சுபின் (Zubin) 90களின் ஆரம்பத்தில் (கணிணிப் புரட்சிக்குச் சற்றே முந்தைய காலம்) இந்தியர்களிடம் அமெரிக்கா செல்ல இருந்த விழைவின் பிரதிநிதி. மற்ற கதைகளுக்கு மாறாக, இதில் ஓர் இந்தியர் அமெரிக்கா சென்று அங்கு தன் வாழ்வை அமைத்துக்கொள்ள பிரயத்தனம் செய்கிறார். இங்கும் இந்தியாவில் விட்டுவிட்டு வந்த காதலோ, இந்தியா குறித்த வெளிப்படையான ஏக்கமோ எதுவும் இல்லை, முற்றிலும் புதிய, நிறைய வித்தியாசங்கள் உள்ள இடத்தில் பொருந்திக் கொள்ள முயற்சிப்பதே சொல்லப்படுகிறது.
“Letter from the Last Bastion” மற்ற கதைகளிடமிருந்து அதன் களன்/ கதை சொல்லும் முறை இரண்டிலும் மாறுபட்டது. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்துள்ள பெயர் குறிப்பிடப்படாத பெண், அதில் சேர்வதற்கான தகுதித் தேர்வின் ஒரு பகுதியாக கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில் ஹென்றி என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், அதை அவர் தன் நாவல்களில் விவரித்துள்ள விதத்தையும் ஒப்பிடுகிறார், அவற்றுக்கிடையே உள்ள வித்தியாசத்தை/ வேறுபாட்டை நாம் அறிகிறோம். புனைவில் நிஜத்தின் பங்கு என்ன, ஆசிரியன் தன் புனைவில் எந்த அளவுக்கு உள்ளான் போன்ற கேள்விகளாக விரியும் இந்த நெடுங்கதை, பின்னர் அந்தப் பெண்ணிடம் மையம் கொள்கிறது. யார் அவர், ஹென்றி குறித்து அவருக்கு எப்படி இந்த விஷயங்கள் தெரியும் (அவை உண்மையாக இருந்தால்) போன்ற கேள்விகள் எழுகின்றன. மற்ற கதைகளில் இல்லாத ‘கதையின் முடிவு’ என்ற வழமைக்கு பொருந்திப் போவதாக உள்ள இறுதிப் பகுதி தர்க்கரீதியாக பொருந்தினாலும், மற்றக் கதைகளின் பாணியிலிருந்து வேறுபட்டுள்ளது.
டவரின் (Wells Tower), கதை சொல்லல்/ உரையாடல்கள், கோபத்தின் கொப்பளிப்பாக இருந்தால், நெல் நிச்சலனமான, ஆனால் பல ரகசியங்களைக் கொண்ட ஆழமான கதைசொல்லலை/ உரையாடல்களைத் தருகிறார். இதிலும் உணர்வுகளின் கொந்தளிப்பு உள்ளது, அதை வெளிக்கொணரும் விதம் மட்டுமே சற்றுத் தணிந்துள்ளது.
‘Outside the Eastern Gate’ கதையில் கதைசொல்லி சிறுமியாக இருக்கும்போது, ஏதோ துக்கம் மேலிட அழ ஆரம்பிக்கிறார், அதற்கான காரணம் அவருக்கே தெரிவதில்லை. அவர் தாய் அதைப் பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்க
“I don’t know what it is,” I sobbed. I can’t stop.”
“Oh God”, my mother said……………………..”
“You too”, she said.”Not you too”,
என்று உரையாடிக் கொள்கிறார்கள். கடைசி வரி ஒரு அத்தியாயத்தில் சொல்லக்கூடியதைச் சொல்லி விடுகிறது. அந்தத் தாய் மன அழுத்தம் கொண்டவர் என முன்பே சுட்டப்படுகிறது. கடைசி வரி மகளும் மன அழுத்தத்தால் பீடிக்கப்படலாம் என்ற அவரின் துயரை விடவும், தன் மனம் சிதைவதை, அதைத் தடுக்க முடியாது என்று அவர் உணர்ந்திருக்கக்கூடும் என்பதைச் சுட்டுகிறது. தடுக்கவே முடியாத கடுந்துயரத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற புரிதலோடு வாழ்வது எத்தனை கொடியது.
இறுக்கமான கதைசொல்லலில் சில இடங்களில் நடைமுறை வாழ்வின் அபத்தங்களும் வருகின்றன. மேண்டி (The Orphan) ஆலிஸை தொலைபேசியில் அழைத்து தன்னை ஒருவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறுகிறார். அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்
“…. You have to go to the hospital. Is there a hospital there?”
“Is there a hospital? Mom, I’m in Bangkok – maybe you’ve heard of it? Is there a hospital?”
…..
“Then you can go there. Get in a cab and go there”. She refrains from asking whether they have cabs.
“I don’t usually take cabs here, Mom”
என்று சட்டென்று அபத்தத் தளத்திற்கு செல்கிறது. நடந்த சம்பவத்தை விட்டுவிட்டு அல்ப விஷயங்களுக்காக இருவரும் விவாதிக்கிறார்கள்.
நெல் தன் கதைசொல்லல்/ பாத்திரங்கள் மீது மிக இறுக்கமான கட்டுப்பாடு வைத்திருக்கிறார். அது அவரின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது என்றாலும், சற்று நெகிழ்வாக இருந்திருந்தால், பாத்திரங்களை சுதந்திரமாக உலவ விட்டு அவர்களின் பாதையை அவர்களே தேர்வு செய்ய விட்டிருந்தால் இந்தக் கதைகளில் இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
“… people were all different things at the same time. They were like onions under fine layers of skin; you didn’t ever peel away a last layer, because the layers were what they were”
என்று ஒரு பாத்திரம் யோசிப்பது, இந்தத் தொகுதியைத் தொகுத்துக் கொள்ள உதவும். ஆயிரம் பக்க நாவலோ, நெடுங்கதையோ/ சிறுகதையோ மனதின் அடி ஆழத்திற்கு செல்ல முடியாதுதான். அதற்கேற்றார்போல் படிமனதின் சில அறைகளை மட்டும் நெல் நமக்கு இந்தக் தொகுதியில் திறந்து காட்டுகிறார்.
2003இல் இந்தத் தொகுப்பு வெளிவந்த போது நெல்லுக்கு 28 வயதுதான், அதற்க்கு முன்பே ‘நியூ யோர்கர்’ பத்திரிகையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக சுட்டப்பட்டார். இவையெல்லாம், இந்தத் தொகுப்பின் உள்ளடக்கத்தை தவிர்த்து, வேறு விமர்சனங்களை (பதிப்புத் துறை பற்றிய/ எழுத்தாளர்களின் இளமை/ அழகு பதிப்பிக்கப்பட காரணமாக இருப்பது, அவர்களின் புகைப்படங்கள் அதிகம் பிரசுரிக்கப்படுவது என) உருவாக்கின. Zadie Smith போன்றோரும் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். அவரின் ஒரு எதிர்வினை இங்கே http://www.dailymail.co.uk/news/article-2428601/Im-beautiful-author-Zadie-Smith-condemns-ridiculous-obsession-looks.html.
இத்தகைய விமர்சனங்களுக்கு பதிலாக இவர்களின் அடுத்தப் படைப்புக்களும் அவற்றின் தரமும்தான் இருக்க முடியும் அல்லவா. இந்தத் தொகுப்பிற்குப் பின் இரண்டு நாவல்களை நெல் எழுதியுள்ளார், அவை குறிப்பிடத்தக்க கவனிப்பும் பெற்றுள்ளன. இந்த நாவல்களும் கிழக்கும் மேற்கும் சந்திப்பதை களங்களாகக் கொண்டுள்ளன.