Monday, February 23, 2015

நவீன தேவதை கதைகள் சில - பகுதி 1 - Modern Fairy Tales

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2015/02/15/modern-fairy-tales/
---------------------------------------
அரக்கர்களை/ சூனியக்காரிகளை அழித்த பின்னர், நாயகன் இளவரசியை மணம் முடித்து இருவரும் “happily lived ever after” என்பது தேவதைக் கதைகளில் (பெரும்பாலான கதைகளில்கூட) முடிவாக உள்ளது. ஆனால் திரை விழுந்தபின், முப்பது நாள் மோகம் கடந்த பின் அவர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து அப்படியே மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியுமா?
“..for listen I have suffered a lifetime of his doggy stink..” என்று அழகிய இளவரசனாக மாறாத ‘beast’ஐ பற்றி அழகி (beauty) குறை சொல்வதாக ராபர்ட் கூவர் (Robert Coover) , பிரபல தேவதைக் கதையை மாற்றி யோசிக்கிறார். (பதாகையில் வந்த ‘தவளை இளவரசன்‘ கவிதையில், இளவரசன் என்றால் அழகனாகத்தான் இருக்க வேண்டுமா என்ன என்று சுரேஷ் யோசிப்பது நினைவுக்கு வருகிறது)
அழகி குறைபட்டுக்கொள்ளும் பகுதி வரும் கூவரின் “The Door: A Prologue of Sorts’ கதை, ஒரு குறிப்பிட்ட கதையை குவிமையமாகக் கொள்ளாமல், ‘Red Riding Hood’, “Jack and the beanstalk”, “Beauty and the beast” தேவதைக் கதைகளை கலைத்துப் போட்டு, ஒன்றாகக் கலந்து குலுக்கி எடுக்கும்போது வரும் புதிய காட்சிகளைக் காட்டும் பின்நவீனத்துவ சேட்டைகள் நிறைந்ததாக உள்ளது. இதில் ‘Red Riding Hood’ பாட்டியும், மிருகத்தை மணந்த அழகியும் ஒருவரே. “…only my Beast never became a prince..” என்று அவர் தன் பேத்தியிடம் புலம்புகிறார். ஜாக்கும் (Jack) அவன் கொன்ற ராட்சசனும் ஒருவரே என்று எண்ணும்படி கதை உள்ளது, மேலும் அவன் ‘Red Riding Hood’ன் தந்தையுமாக இருக்கிறான். இதன்படி மிருகத்தை மணந்த அழகியின் மகன் என்பதால், அவன் ராட்சதனாகவும் இருப்பது சாத்தியம்தான் அல்லவா?
ராட்சதர்கள், மந்திரக் குள்ளர்கள் (dwarf) குட்டிச்சாத்தான்கள் (elves) , சூனியக்காரிகள், தேவதைகள் வாழும், பல அதிசயங்கள் நிறைந்த அளவுக்கு ஆபத்துக்களும் நிறைந்துள்ள சிறு காடுகள் (woods) தேவதைக் கதைகளின் ஒரு முக்கிய அம்சம். தங்களை சோதனைக்கு உள்ளாக்கும் சூழ்நிலைகளையும், அதிலிருந்து மீளும் வழிகளையும் இந்தச் சிறு காடுகளிலேயே தேவதைக் கதைகளின் முக்கியப் பாத்திரங்கள் கண்டடைகிறார்கள்.
சிறு காடு களமாக உள்ள “Hansel and Gretel” கதையை அடித்தளமாகக் கொண்டுள்ள கூவரின் “The Gingerbread House” கதை, அந்த தேவதைக் கதையை முழுமையாக திருப்பி/ திருத்திச் சொல்லாமல், இரு குழந்தைகளும், தந்தையோடு, சிறு காட்டுக்குள் (woods) பயணிப்பதை மட்டும் விவரிக்கிறது. அவர்களின் பயணத்தின் காட்சிகளோடு, சூனியக்காரி, அவளின் வீடு இவற்றின் காட்சிகளும் கலந்து வர, குழந்தைகள் அவளிடம் மாட்டப் போகிறார்களே என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
“There is, in the forest, even now, a sunny place, with mintdrop trees and cotton candy bushes, an air as fresh and heady as lemonade. Rivulets of honey flow over gumdrop pebbles, and lollypops grow wild as daisies. This is the place of the gingerbread house.”
என்று சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்களையும் வசீகரிக்கக் கூடிய, பார்த்தாலே நாவில் எச்சில் ஊறவைக்கக் கூடிய வீட்டை விவரித்து அதை “Children come here, but, they say, none leave” என்ற அச்சுறுத்தலோடு முடிக்கிறார். தன் வழியில் பறந்து செல்லும் புறாவைப் பிடித்து அதன் இதயத்தைப் பிட்டு எடுத்து கொக்கரிக்கும் சூனியக்காரியின் செயல் பயங்கரமாக இருந்தாலும், “The burnished heart of the dove glitters like a ruby, a polished cherry, a brilliant heart-shaped bloodstone. It beats still. A soft radiant pulsing” என்று காட்சியளிக்கும் இதயத்தை விட்டு நம்மால் கண்களை அகற்ற முடியவில்லை. எனவே அந்த இதயத்தைக் காட்டி சிறுவனை மட்டுமல்ல அவன் தந்தையையும் சூனியக்காரி தன் பின்னால் வரச் செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆந்தைகள் கூப்பாடு போடும், வவ்வால்கள் வசிக்கும் மரத்தினடியில் தனியே விடப்பட்ட குழந்தைகள் இரவைக் கழிக்கிறார்கள். அடுத்த நாள் காட்டுக்குள் இன்னும் உட்சென்று ‘Gingerbread’ வீட்டை அடைந்து,
“They sample the gingerbread weatherboarding with its caramel coating, lick at the meringue on the windowsills,…. the boy climbs upp on the chocolate roof to break off a peppermint-stick chimney, comes sliding down into a rainbarrel full of vanilla pudding….”
என்று அவர்கள் உண்டு களிப்பது ஜார்ஜே அமாடோவின் (Jorge Amado) ‘Dona Flor and Her Two Husbands’ நாவலில் வரும் உணவுப் பொருட்களின் விவரணையைப் போல் குதூகலப்படுத்தினாலும், குழந்தைகள் வீட்டிற்குள் நுழையப் போகும்போது “Oh, what a thing is that door! Shining like a ruby, like hard cherry candy, and pulsing softly radiantly. Yes, marvelous, delicious, insuperable!, but beyond: what is that sound of black rags flapping?” என்று இந்தக் கதை முடிவுக்கு வருகையில், குழந்தைகளை உண்ண , நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு காத்திருக்கும் சூனியக்காரியின் நினைவு வந்து நம் குதூகலத்தைக் குலைக்கிறது. குழந்தைகள் என்ன ஆவார்களோ, கூவர் வேறு கதையை இங்கே முடித்து விட்டார்!!
கூவரின் எழுத்து உருவாக்கும், அச்சமூட்டும் அதே நேரம் கண்ணை விலக்க முடியாதபடி ஈர்க்கும் காட்சி பிம்பங்களும், என்னவென்று முழுதாகத் தெரியாவிட்டாலும் ஆபத்து காத்திருக்கிறது என்ற உள்ளுணர்வுடன் பயணிக்கும் குழந்தைகள், மனைவியின் உத்தரவை மீற முடியாத, அதே நேரம் பிள்ளைகளின்மீது பாசம் கொண்ட தந்தையின் மனநிலை, குழந்தைகளின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூனியக்காரி, அவளுடனான குழந்தைகளின் சந்திப்பைப் பற்றிய (வாசகனுக்குள் ஏற்படும்) பயம் கலந்த எதிர்பார்ப்பு இவையே இந்தக் கதையின் சிறப்பம்சம்.
ஏ.எஸ் பயட்டின் (A.S Byatt) ‘Possession’ நாவலில், ஒரு முக்கிய பாத்திரம் எழுதும் தேவதைக் கதைகளை வாசகனும் படிக்கிறான். க்ரிம் சகோதரர்களால் (Brothers Grimm) சேகரிக்கப்பட்ட “The Glass Coffin” என்ற தேவதைக் கதையை தன் பாணியில் (intertextual தன்மையுடன்) பயட்/ நாவலின் பாத்திரம் எழுதுகிறார். மூலக் கதையில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள இந்தக் கதையின் முடிவுதான் வாசகனை யோசிக்க வைக்கும்.
நாயகனான தையல்காரன், மந்திரவாதியைக் கொன்று கண்ணாடி கல்லறைக்குள் உள்ள இளவரசியைக் காப்பற்றி, அவள் நாட்டை மீட்டு அவளை மணமும் முடிக்கிறான். இதுவரை எல்லாம் தேவதைக் கதைகளின் வழமைப்படி நடக்கின்றன, ஆனால் மணம் முடித்தபின், இளவரசி தன் சகோதரனுடன் எப்போதும் வேட்டையில் ஈடுபட்டிருக்க, நம் நாயகன் அவர்களுடன் கலந்து கொள்ளாமல் தன் தையல் வேலையில் மூழ்கி இருக்கிறான். இந்தக் கதையின் ஆரம்பத்தையும், இளவரசி, நான் மணம் முடிக்காமல் எப்போதும் என் சகோதரனுடன் இருக்க விரும்புகிறேன், என்று சொல்வதையும் இத்துடன் இணைத்து நோக்கினால் வாசகனுக்குத் தோன்றுவது என்ன? இங்குதான் பயட் வாசகன் மனதில் ஒரு சந்தேகத்தை விதைத்து கதைக்கு இன்னொரு பரிமாணத்தைத் தருகிறார்.
ஆஞ்செலா கார்டரின் (Angela Carter) ‘The Bloody Chamber’ சிறுகதைத் தொகுதி, மாற்றியெழுதப்பட்ட பல தேவதைக் கதைகளைக் கொண்டது, அதைத் தனிப் பதிவாக பார்க்கலாம். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான, ‘Fireworks: nine profane pieces’ல் நேரடியாக மாற்றி எழுதப்பட்ட தேவதைக் கதைகள் இல்லையென்றாலும், அந்தக் கதைகளின் கூறுகளோடு gothic தன்மையுடைய சில கதைகள் உள்ளன.
‘Penetrating to the heart of the forest’, அப்படிப்பட்ட ஒன்று. பல தலைமுறைகளாக வேறு யாருடனும் தொடர்பின்றி, காட்டில் தனித்து வசிக்கும் ஒரு குழுவை, தன் பயணத்தில் எத்தேச்சையாக கண்டு பிடிக்கும் தாயை இழந்த இரு குழந்தைகள் (ஆண்/ பெண்). மற்றும் தந்தை அவர்களுடனேயே தங்குகிறார்கள். பிள்ளைகள் எந்தக் கட்டுப்பாடுமின்றி வளர்கிறார்கள். காட்டின் மத்தியில் ஒரு மரம் உள்ளதென்றும், அதன் கனியை உண்ணக் கூடாது என்றும் அங்குள்ள அனைவரும் சொல்கிறார்கள். குழந்தைகளுக்கோ, காட்டிற்குள் இன்னும் ஊடுருவி அதன் மத்தியை அடைய வேண்டும் என்ற ஆசை, எனவே இருவரும் அதை நோக்கிய பயணத்தில் கிளம்புகிறார்கள். ஆப்பிள் மரம் போல் தோற்றமளிக்கும் மரத்தை அடைகிறார்கள். அதிலுள்ள அனைத்து பழங்களிலும் யாரோ(!!) கடித்து வைத்ததைப் போன்ற தடம் உள்ளது. அப்போது சகோதரியைப் பார்க்கும் சிறுவனுக்கு முதல் முதலாக அவள் உடல் பற்றிய உணர்வு ஏற்படுகிறது. பழத்தை உண்ணும் சிறுமி, அவனுக்கும் ஒரு பழத்தை அளிக்கிறாள். பிறகு “He took the apple; ate;and, after that, they kissed”. என்று இந்தக் கதை முடிகிறது. வனத்தின் மத்தியில் யாரும் நெருங்கக்கூடாத ஒரு மரம், புசிக்கக் கூடாத அதன் கனி, அந்தக் கனிகளில் முன்பு யாரோ கடித்ததைப் போன்ற தடம், குழந்தைகளின் புதியதை அறிதல் குறித்த விழைவு, அதை நோக்கிய பயணம், அதன் முடிவில் அவர்களிடையே உருவாகும் (விலக்கப்பட்ட) பாலியல் விழைவு அனைத்தும், அறிதலின் ஆர்வத்தால் வீழ்ச்சி அடைந்த ஆடம்/ ஈவ் கதையை நினைவூட்டுகிறது.
தன்னை மணம் முடிக்க நினைத்த தந்தையிடம் இருந்து தப்பும் இளவரசி , மாறுவேடத்தில் சில காலம் வாழ, வழக்கம் போல் ஓர் இளவரசன் அவளிடம் மையல் கொண்டு, மணம் முடித்து அனைவரும் சுகமாக வாழும் ‘Donkeyskin’ என்ற தேவதைக் கதையின், அதிகம் பேசப்படாத பகுதியை ஏமி பென்டரின் (Aimee Bender) ‘The Color Master’ சிறுகதை கற்பனை செய்கிறது. மூலக் கதையின்படி தன் தந்தையிடமிருந்து தப்ப, இளவரசி, வானம்/ நிலவின் வண்ணத்தில் இரு ஆடைகளையும் , சூரியனைப் போல பிரகாசமுள்ள மற்றொரு ஆடையையும் கேட்கிறாள். ஏமி அந்த ஆடைகளை தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் கதைசொல்லியின் பார்வையில், அந்த ஆடைகள் தயார் செய்யப்படுவதையும், ஆடைகளில் வண்ணங்களைக் கலப்பது பற்றிய நுணுக்கமான விவரணைகளும், வண்ணத்தை கச்சிதமாகக் கலக்கக்கூடிய ‘color master ‘உடனான அவருடைய உறவையும் பதிவு செய்கிறார். ‘color master’ அரசனின் முடிவை எதிர்த்து, அது நடக்காமலிருக்க, வண்ணங்களைக் கலக்கும்போது கோபத்தையும் கல, அப்போதுதான் இளவரசி தப்ப முடியும் என கதைசொல்லியிடம் கூறுகிறார். முதலில் வண்ணங்களைக் கலக்கும்போது கோபப்பட முடியாத கதைசொல்லி, ‘color master’ன் மறைவுக்குப் பிறகு, மூன்றாவது ஆடையில் வண்ணத்தைக் கலக்கும்போது, அவரை இழந்ததின் கோபத்தோடு செய்கிறார், அதுதான் இளவரசியை தப்ப வைத்ததா? ‘உணவில் அன்பைக் கலந்து உபசரிப்பது ‘ போன்ற சொற்றொடர்களுடன் இதை ஒப்பிட முடிவதோடு, ஒரு செயலைச் செய்யும்போது உள்ள மனநிலையும் அந்தச் செயலின் முடிவை நிர்ணயம் செய்கிறது என்ற நம்பிக்கையையும் இது சுட்டுகிறது.
ஏமி பென்டரின் ‘The Devouring’ கதையில், மானுடப் பெண்ணொருத்தி ராட்சதனை (ogre) மணக்கிறாள். அவர்களின் சோகம் நிறைந்த விசித்தர வாழ்வின் பக்கங்களை ஏமி காட்டுகிறார். அந்தப் பெண் நன்மை செய்ய என்று புரிந்த காரியத்தால், ராட்சதன் அவர்கள் குழந்தைகளையே புசித்து விடும் அவலம் நேர்கிறது. பள்ளியில் மாணவர்களால் கவனிக்கப்படாத பதின் பருவப் பெண்ணின் உணர்வுகள், ராட்சத-மானுடப் மண உறவில், இருவருக்குமிடையில் உள்ள வித்தியாசங்களைத் தாண்டி, அவர்களிடயே உள்ள அன்பு, பிள்ளைகளின் இறப்பால் – ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லாவிட்டாலும் – இருவரும் விலக ஆரம்பிப்பது, மனைவி சில நாட்கள் தனியே வாழ முடிவு செய்வது என வரும் நிகழ்வுகள், நவீன வாழ்வில் ஒரு தம்பதியர் எதிர்கொள்ளக் கூடிய நிகழ்வுகளே (‘A Gate at the Stairs’ நாவலின் வரும்,ஒரு பெரும் இழப்பை சுமந்தலையும் தம்பதியர் நினைவுக்கு வருகிறார்கள்). ஆனால் இது மட்டுமே இந்தக் கதையல்ல.
பாதி சாப்பிட்டப்பின், மீண்டும் முழுதாகும் ‘கேக்’ ஒன்று அவர்களிடம் இருக்கிறது. தம்பதியர் பிரிந்து பிறகு இணைகிறார்கள். காலம் செல்கிறது, இருவரும் மரணிக்கிறார்கள். பறவைகள்/ மிருகங்களும் காலப்போக்கில் இறக்கின்றன. அனைத்தையும் உண்டு தீர்க்கும் காலத்தால், மந்திர கேக்கை ஒன்றும் செய்ய முடியவில்லை. தம்பதியருக்குப் பிறகு பறவைகள் /மிருகங்கள் அந்த கேக்கை உண்ணுகின்றன. அது வேறு வேறு உருவம் கொள்கிறது, ஒளியாக மாறுகிறது. “The darkness, circling around the light, devouring the light. But the cake kept refilling, as we know. This is the spell of the cake. And the darkness, eating light, and again light, and again light, lifted. என்று முடியும் இந்தக் கதை, மாயம் (magic) என்பது எந்தக் காலத்திலும் தவிர்க்கப்பட/ ஒதுக்கப்பட முடியாத, எப்போதும் ஈர்த்துக்கொண்டே இருக்கும் ஒன்று என்று சொல்வதாகப் புரிந்து கொள்ளலாம் (மாய எதார்த்தம் எனப்படும் இலக்கியப் பாணிகளும், தேவதைக் கதைகளை மாற்றி/ புதிதாக எழுதும் இத்தகைய படைப்புகளும் இன்றும் வெளி வந்து கொண்டிருக்கின்றன அல்லவா).
தேவதை கதைகளுக்கான பொது அம்சங்களை கலைத்து போடும் இந்தக் கதைகள் ஒரு வகையில், அந்தக் கதைகளின் மூலத்தை நோக்கியே சொல்கின்றன என்றும் சொல்லலாம். க்ரிம் சகோதரர்கள் தாங்கள் முதல்முதலில் தொகுத்த தேவதைக் கதைகளை, அடுத்தடுத்த பதிப்புக்களில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாற்றினார்கள் என்றும், அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு கிருத்துவக் கூறுகளை புகுத்தினார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். க்ரிம் சகோதரர்கள் தொகுத்தக் கதைகளின் முதல் பதிப்பு, முதல்முறையாக, Jack Zipes என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு “The Original Folk and Fairy Tales of the Brothers Grimm: The Complete First Edition” என்ற பெயரில் சென்ற ஆண்டு வெளிவந்தது. (Snow Whiteஐ கொல்லத் துடிப்பவள் அவளைத் பெற்றத் தாயே, – மாற்றாந்தாய் அல்ல என்பது இந்த நூலில் நமக்கு கிடைக்கும் புதிய செய்திகளில் ஒன்று. பெற்ற தாயே, தன் மகளின் அழகின்மீது பொறமைக் கொள்வது, போட்டியாக எண்ணுவது என்பது நாம் இது வரை இந்தக் கதையை பார்த்த விதத்தை மாற்றுகிறது.)
பழங்கால அரபு இலக்கியத்திலிருந்து 18 தேவதைக் கதைகள் தொகுக்கப்பட்டு “Tales of the Marvellous and News of the Strange’ என்ற பெயரில் வெளிவந்த நூல் அதன் பாலியல் (erotic) கூறுகளுக்காக “..medieval Fifty Shades of Grey” என்றும் குறிப்பிடப்பட்டது . Fifty Shades of Grey எனும்போது குழந்தைகளை இந்த நூலுக்கான வாசகராக கொள்ள முடியுமா என்பது ஒரு புறம் இருக்க, தேவதைக் கதைகள் என்பவை, அதன் மூலவடிவத்தில், உண்மையில் குழந்தைகளுக்கானவையா என்றும் ஒரு கேள்வி எழுகிறது. ‘1001 அராபிய இரவுகள்’ மூலக் கதைகளில் உள்ள பாலியல் (erotic) கூறுகள் பற்றியும் பல கட்டுரைகள் வந்துள்ளன (அதன் ஆரம்பமே பாலியல் விதிமீறல்தான் அல்லவா?).
‘Little Red Riding Hood’ போன்ற வெளிப்பார்வைக்கு எளிய கதைகளாக தோற்றமளிப்பவை பற்றியும், அவற்றில் உட்பொதிந்துள்ள பாலியல் கூறுகள் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கவை. Donkeyskin தேவதைக் கதையில் தந்தை தன் மகளை மணந்து கொள்ள – இறந்த தன் மனைவி தன்னைப் போன்ற அழகானப் பெண்ணையே அரசர் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னதால் தான் அவர் தன் மகளை மணக்க முயல்கிறார் என்பதையும் – நினைப்பதும், இளவரசி தப்பித்து, இளவரசனை மணந்து, தந்தையும் வேறொரு பெண்ணை மணக்க , இறுதியில் அனைவரும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், இந்தக் கதையை செலுத்தும் விசை, (தந்தையின் விபரீத ஆசை) சற்று யோசித்தால் கதையின் மாயங்களைத் தாண்டி துணுக்குறச் செய்யக் கூடியது, மனைவியைப் போன்றே அழகாக உள்ள மகளை அவர் மன முடிக்க எண்ணுவது உளவியல் ரீதியாக ஆராயத்தக்கது .
பதிவில் குறிப்பிடப்பட்ட கதைகள் வெளிவந்த நூல்கள்
The Gingerbread House, The Door: A Prologue of Sorts கதைகள் — Robert Coover – Pricksongs & Descants – சிறுகதை தொகுப்பு
The Color Master, The Devouring கதைகள் – Aimee Bender – The Color Master -சிறுகதை தொகுப்பு
Penetrating to the heart of the forest- Angela Carter – Fireworks: nine profane pieces சிறுகதை தொகுப்பு அல்லது Burning the Boats என்ற அவருடைய மொத்தக் கதைகளின் தொகுப்பு
The Glass Coffin – A.S. Byatt – Possession – நாவல்
(தொடரும்)

Monday, February 16, 2015

பயணம் - நாவல் -அரவிந்தன்

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2015/02/08/payanam/
--------------------

“உனக்கு நெஜமாவே ஒரு விஷயம் வேணும்னா, அதுல நீ சீரியஸா இருந்தா அது உனக்குக் கிடைக்கும்” என்று ஸ்வாமிஜி ராமநாதனிடம் சொல்வது, அவனுக்கு அவ்வப்போது நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு விஷயத்தின் மீது பற்று கொண்டிருந்தால், எந்த இடர்பாடுகளையும் சந்திக்க முடியும் என்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பையே/ புறக்கணிப்பையே சந்திக்கும் ஒருவனின் பயணம் எப்படி இருக்கும் என்பதை ‘பயணம்’ நாவல் விவரிக்கிறது.
வீட்டிலிருந்து வெளியேறி ஸ்வாமிஜியின் ஆசிரமத்தில் ராமநாதன் சேர்வதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. நாவலின் களம் ஆசிரமமாக இருந்தாலும், ஆன்மிகம் என்றால் தவம்/ இறையை அடைய முயலுதல் என்ற தனி நபர் ஈடேற்றத்தை குறிக்கோளாக கொண்டது, என்ற பொதுவான புரிதலில் இருந்து சற்று விலகுகிறது. மக்களுக்கு சேவை செய்தல், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், சமூகத்தில் சில நல்ல மாற்றங்களை உருவாக்குதல் இவற்றையே ராமநாதன் தன் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறான்.
தன் குறிக்கோளை அடைய, புதிய திட்டங்களைத் தீட்டுவதிலாகட்டும், அவற்றை செயல்படுத்துவதிலாகட்டும், மிகவும் செயலூக்கமுடையவனாக உள்ள ராமநாதனின் ஆளுமை சிலரை எந்தளவுக்கு மிக எளிதாக/ இயல்பாக வசீகரிக்கிறது அதே அளவுக்கு மற்றவரை அவனிடமிருந்து விலக்குகிறது, அவன் செயல்களை எதிர்மறையாக பார்க்க வைக்கிறது என்பதை நாவல் விவரிக்கிறது. ஸ்வாமிஜி அவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், வெகு சீக்கிரத்தில் அவன் அவருக்கு நெருக்கமானவனாக மாறுவதும் சிலருக்கு உறுத்தலாக உள்ளது.
ராமநாதன் சேவை, மக்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்த பல கனவுகள், இலட்சியங்கள் கொண்டவன், அதை மிக விரைவில் நிஜத்தில் நடத்திக் காட்ட துடிப்பவன், எனவே ஆசிரமம் நடக்கச் செய்ய வேண்டிய மாற்றமில்லா தினப்படி வேலைகளையும் தான் செய்ய வேண்டி வருவதும் , ஸ்வாமிஜியும் (கணக்கு வழக்குக்களை சரி பார்ப்பது போன்ற ) அவற்றில் ஈடுபடுவதும் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை.
அவன் செயல்பாடுகளின் வழியாக ஆசிரமம் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கல்களையும் பார்க்கிறோம். மக்களுக்கு உதவுவது என்பதிலும் சில வரையறைகள் உள்ளன, அதிகாரத்தை பகைத்துக் கொள்ளாதவரை மட்டுமே சமூக வரையறைகள் ஆசிரமத்தின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கின்றன, கிராம மக்களுக்கு யோகா கற்றுத்தருதல், கல்வி சார்ந்த உதவிகள் என்றிருக்கும் ஆசிரமம், அங்குள்ள அரசியல் புள்ளிகளை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை, எனவே சாராயம் காய்ச்சுதல், சாதிப் பிரச்சனை இவற்றுக்கு எதிராக ராமநாதன் தலையிடும்போது, அவனுக்கு தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் அவன் செயல்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாவிட்டாலும், புதுமை என்பதை அச்சமூட்டும் விஷயமாக, ஆசிரமத்தின் வரையறைக்கு வெளியில் உள்ளதாக கருதி ஆசிரமவாசிகள் அவனது முயற்சிகளைத் தடுக்கிறார்கள்.
ராமநாதன் ஒரு விதத்தில் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான், அவன் பார்வையில் புதிதாகத் தென்படுவதை புரிந்து கொள்ள, அதன் மூலம் புதிய அனுபவங்களைப் பெற முயல்கிறான். உண்மையில் தன்னுள் அடைபட்டிருக்கும் ஆற்றலுக்கான வடிகாலையே தேடிக்கொண்டிருக்கிறான். அயோத்தி பிரச்சனை குறித்து இந்து இயக்க தலைவருடன் விவாதிக்கவும்/அந்த பிரச்சனையின் உச்சகட்டத்தில் அயோத்திக்கு பயணிக்கவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை நேரில் பார்க்கும் சூழலுக்கும் இந்தத் தேடலே இட்டுச் செல்கிறது. அவனுக்கு அரசியலில் நேரடியான ஆர்வமோ மத ரீதியான இறுகிப்போன கருத்துகளோ இல்லை ஆனால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்கள் கூட்டம் கட்டமைக்கப்படுவதில் உள்ள விபரீதத்தை உணராத வெளியாள் போல ஆர்வத்தோடு மட்டுமே பார்க்கிறான். இங்கு அவன் தேடல் ‘மக்கள் மத்தியில் இயங்குவதற்கான’ விழைவாக உள்ளது.
சக ஆசிரம வாசியான பிரபுவைப் போல, சேவை செய்வது என்ற எண்ணம் மட்டும் இருந்திருந்தால், ஒரு வேளை அவனால் ஆசிரம செயல்பாடுகளுடன் ஒத்துப் போயிருக்கக்கூடும். ஆசிரமத்தில் சேர்ந்து அதன் சேவைகளில் ஈடுபடும் ராமநாதன் ஓரிரு சம்பிராதாயமான விஷயங்களை சற்றே மாற்றிச் செய்யும் போது, எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாகிறான். ஸ்வாமிஜியும் அது குறித்து அவனிடம் பேசுகிறார். தனிநபராக ஒரு செயலில் ஈடுபடுவதற்கும், ஒரு அமைப்பின் அங்கமாக அதைச் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை மைய்யமாக கொண்ட அந்த உரையாடலின் போது தனிநபர் செயல்பாட்டில் உள்ள பலவீனங்களைக் குறிப்பிட்டு, தனி ஆள் என்பவன் அமைப்பிற்குள் ” தொலைய வேண்டாம் கரையணும். நான் அப்டீன்றது நாமா மாறணும். ‘நான்’ல இருக்கற ஒட்டுதல் ‘நாம்’ல இருக்கணும்” என்கிறார். அதற்கு ராமநாதன் “ஒரு ஆள் ரொம்ப ஸ்பெஷல் டேலேன்டோட இருந்தான்னா அவன் இப்படிக் கரைஞ்சிட்டா அவன் ஸ்பெஷல் டேலேன்ட் முழுசா வெளிப்படுமா”” என்று அவரிடம் அவன் கேட்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
தான் தனித்துவம் மிக்கவன் என்று அவன் உறுதியாக எண்ணுவதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக (அவனுக்கு சரி மற்றவர்களுக்கும் சரி)அவன் செயல்பாடுகள் அமைந்தாலும், அந்தத் தனித்தன்மையை எக்காரணம் கொண்டும் இழக்கக் கூடாது என்ற அவனுடைய உறுதியும், அந்தத் தனித்தன்மை காரணமாக பிறரை கட்டுப்படுத்தும் விதிகளுக்கு தான் ஆட்பட வேண்டியதில்லை என்ற அவனின் கருத்தும் பல உரசல்களுக்கு காரணமாகிறது. அவனால் ஒரு அமைப்பின் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் தன்னை அப்படியே ஒப்புக் கொடுக்க முடியவில்லை, ஒரு சிறு மாற்றத்தைக் கூட பலரிடம் கலந்து ஆலோசித்து தான் செயல்படுத்த வேண்டும் என்பதையும், அதற்கு கூட தன்னைப் போன்ற தனித்துவமிக்கவனுக்கு சுதந்திரம் இல்லை என்பதையும் அவனால் ஏற்க முடிவதில்லை. களத்தில் இருக்கும் போது அவ்வப்போது சுய முடிவுகள் எடுப்பது தவிர்க்க முடியாதது என்ற அவனின் பார்வை சரி தான் என்றாலும், ஆசிரமம் போன்ற இறுக்கமான சட்ட திட்டங்கள் உடைய அமைப்பிற்கு பொருந்தாமல் போகிறது.
ஆசிரமத்தில் இல்லாமல், எழுத்து, ஓவியம் போன்ற தனியாக செயல்படவேண்டிய துறைகளிலோ, அல்லது குழுவாக இயங்க வேண்டிய வேறெந்த அலுவலகத்திலோ வேலை செய்திருந்தாலும் அந்த விழைவுடன், அங்கும் இது போலவே எப்போதும் உலகைப் புரட்டிப் போடும் அவசரத்தில் உள்ளவனாக , அந்த இடத்தின் ‘old order’ஐ மாற்றத் துடிப்பவனாக, புதுமைகளை கொண்டு வர முயல்பவனாக இருந்திருப்பான். இதனால் இயல்பாகவே, அங்கு ஏற்கனவே காலூன்றி உள்ளவர்களில் சிலரிடம் இணக்கம் கொண்டும்/மிகுதியாக முரண்பட்டும் இருந்திருப்பான்.
அவனின் இந்தத் தன்மையே தன்னுடைய எந்த செயலையும் தனக்கே நியாயப்படுத்த அவனுக்கு உதவுகிறது. காயத்ரியுடன் அவனுக்கு ஏற்படும் உறவு அப்படிப்பட்ட ஒன்று. ஆசிரமத்தின் சட்டங்களை மீறுவதாக இருந்தாலும், அவன் அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை, அதற்கு அவனுக்கு காரணங்கள் உள்ளன அல்லது அவற்றை அவன் உருவாக்கிக் கொள்கிறான். பெண்கள் மேல் ஏற்படும் சலனம் மட்டுமின்றி, சில நேரங்களில் தனிப்பட்ட உபயோகத்திற்கு கொஞ்சம் ஆசிரமப் பணத்தை எடுப்பதையும் அவன் தன் உழைப்புக்கான ஊதியம் என்றும், அதைக் கொண்டு செழிப்பாக வாழப் போவதில்லை என்றும் நியாயப்படுத்துகிறான், அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. இப்படி ஆசிரமத்தில் தெரிவிக்காமல், முன்னனுமதி பெறாமல், சில காரியங்கள் செய்வதும் அவனுக்கு பிரச்சனைகளை உருவாக்குகிறது, ஆனால் நேரடியாகக் கேட்டால் ஆசிரமவாசிகள் ஏற்கமாட்டார்கள் என்பதையும் புரிந்திருப்பதால் தான் அவன் அப்படி செய்கிறான். எந்தப் பக்கம் சென்றாலும் சிக்கும் சூழலில், அனுமதி கேட்பதை தன் சுயத்திற்கு இழுக்காகக் கருதி தன் எண்ணப்படியே செய்கிறான்.
இதனால் அவன் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியாதவன் அவர்களை மதிக்காதவன் என்றும் கருத முடியாது. முற்றிலும் வேறான இரண்டு மன மனநிலைகள் தொடர்பில் வரும் போது, உருவாகும் இயல்பான முரண்பாடுகளே இவை. ஸ்வாமிஜியுடன் இன்னும் அதிக நாட்கள் அவன் உறவு நீடித்திருந்தால், அவர் அவனை தனக்கேற்றவாறு வடிவமைத்து, இந்த முரண்பாடு பெரிதாகாமல் தடுத்திருக்கக்கூடும். ஏனென்றால் அவர் மட்டுமே அவனை, அவன் ஆற்றலை, அதன் சாதக பாதகங்களை நன்கு உணர்ந்திருக்கிறார். ஒரு வேளை அவனில் பல ஆண்டுகளுக்கு முந்தைய தன்னை அவர் கண்டிருக்கக்கூடும். எனவே விட்டுப் பிடிப்பது என்றே அவன் செயல்பாடுகளை கவனிக்கிறார், அறிவுரை வழங்குகிறார், மனதளவில் அவன் முற்றிலும் நசுங்கி விடாமல் பார்த்துக்கொள்கிறார். (டேலேன்ட் பற்றிய ராமநாதனின் கேள்விக்கு “அதுதான் சேலஞ்ச். ஒவ்வொருத்தரும் தன்னுடைய சுயத்தை இழந்துறாம “நாம்” அப்டீன்ற அடையாளத்துல இணையணும். இதுல இழப்பு இல்ல ..” என்று அவர் பதில் அளிக்கிறார்)
துரதிருஷ்டவசமான சில நிகழ்வுகளால், ஸ்வாமிஜியின் அண்மையை அவன் இழக்க நேரிடுகிறது. எங்கும் நிலை கொள்ள முடியாததாக, அலைச்சல் மிக்க பயணமாக அவன் வாழ்வு மாறுகிறது. ஆசிரம வேலையாக அவன் எங்கு சென்றாலும், எந்த புதிய பாதையில் பயணிக்க முனைந்தாலும், அவனை பின்னிழுக்கவே அனைவரும் முயல்கின்றனர். ஒரே பாணியில் தொடர்ச்சியாக இப்படி பல நிகழ்வுகள் வருவது வாசகனுக்கு சலிப்பூட்டியிருக்கக் கூடிய அபாயமிருந்தாலும், கதைசொல்லலில் ஆசிரியர் அதை பெருமளவில் தவிர்த்து இருக்கிறார்.
நாவலின் கால கட்டம் வெளிப்படையாக சொல்லப்படவில்லை. இதில் வரும் சில அரசியல் உரையாடல்கள், செய்திக் குறிப்புக்கள் மூலம் எண்பதுகளின் மத்தியிலிருந்து தொண்ணூறுகளின் இரண்டாம் பகுதி வரை என்பதாகப் புரிந்து கொள்ளலாம். Macro அளவில் கால மாற்றத்தை உணரும் வாசகன், ராமநாதனின் வாழ்வின் micro level கால மாற்றத்தை ஸ்தூலமாக உணர முடியாதபடி, அவனின் அன்றாட வாழ்வு துரித கதியில் இயங்குவது போல் செல்லும் கதைப்போக்கு ஒரு நெருடல். ராமநாதன் ஒரு இடத்திற்கு போகிறான், சில மாதங்கள் தங்குகிறான், சில விஷயங்கள் செய்ய முயல்கிறான், அதில் தடுக்கப் படுகிறான், பிறகு இன்னொரு இடம் செல்கிறான், அங்கும் இதே போல் நடப்பது என்பதான நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.
உதாரணமாக ஒரு கிராமத்தில், கைவினை பொருட்களை விற்பனை செய்யும் நிலையத்தை தொடங்கி அதன் மூலம் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கிறான். நல்ல விஷயம் தான் , ஆனால் சில மாதங்களாக செய்யப்பட்ட களப்பணியால் உருவான இந்த மாற்றங்கள் ஓரிரு பக்கங்களில் சடுதியில் கடந்து செல்லப்படுவதால், அவனின் செயல்திட்டத்தின் பின்னால் உள்ள உழைப்பு, அதனால் கிராம மக்களுக்கு உண்டான நன்மை, அதை நிறுத்துவதால் அவர்களுக்கு மட்டுமின்றி, ராமநாதனுக்கும் உண்டாகும் மனக்கஷ்டம் வாசகனுக்கு கடத்தப்படுவதில்லை. ஏதோ கிராம நன்மை அடைந்தார்கள்/பாவம் ராமநாதன் என்றளவில் கடந்து செல்வதால், ராமநாதன், பிறரால் மீண்டும் மீண்டும் பின்னுக்கு இழுக்கப்படுவதை, அவனின் கனவுகளுக்கு விலங்கிடப்படுவதை, அவன் தொடர்ந்து துரத்தப்படுவதை சுட்டும் இந்த நிகழ்வுகள், அவற்றால் ராமநாதனுக்கு ஏற்படும் உளக்காய்ச்சலின் அழுத்தத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
ஆசிரமத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனை ஒரு இறுதியான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளுகின்றன. அந்த முடிவும் வாசகன் யூகிக்கக்கூடிய வழமையான ஒன்றே என்பதை – இது ஒன்றும் வாசகனை திடுக்கிட வைக்கும்/வைக்க வேண்டிய மர்மப் புனைவு இல்லை என்பதால் – குறையாகப் பார்க்க வேண்டியதில்லை. சொல்லப்போனால் ராமநாதனின் ஆளுமைக்கு மிகச் சரியான முடிவே அது. தன் தனித்துவம் குறித்த உறுதியான எண்ணமும், குன்றாத செயலூக்கம் கொண்ட அவனால் அதிக காலம் யாருக்கும் கட்டுப்பட்டிருக்க முடியாது. அவன் இயல்பின் படி, தானே புதிய விதிகளை உருவாக்கும், இருக்கும் விதிகளை மாற்றும் உரிமை/அதிகாரம் உள்ள இடத்திலேயே அவனால் இருக்க முடியும். அந்த இடத்தைத் தான் அவன் தனக்கான, தான் இருக்க வேண்டியா இடமாக உணர்வான். அவனின் இந்தத் தீவிர ஆளுமையால் தான் ஆண்களோ/ பெண்களோ, ஒன்று அவன்பால் வெகு சீக்கிரத்தில் ஈர்க்கப்படுகிறார்கள் அல்லது அதை எதிர் கொள்ள முடியாமல் அவனை ஒதுக்குகிறார்கள். அவன் எடுக்கும் முடிவால்,இனி அவனை யாரும் ஒதுக்கவோ, அவன் கனவுகளுக்கு கைவிலங்கிடவோ முடியாது. ‘Sell-out’ ஆகவும் அவன் முடிவைப் பார்க்க முடியும் என்றாலும் அவனளவில், தன் கனவுகளை நிறைவேற்ற/தனித்துவத்தை தக்கவைக்க வேறெந்த முடிவையும் அவன் எடுத்திருக்க முடியாது.
நாவல் ராமநாதனின் பயணம் என்பதால், மற்றப் பாத்திரங்கள் அவன் தன் பயணத்தில் சந்திக்கும் சக-பயணிகளாக, அவனுடன் அவர்கள் கொள்ளும் உறவு சார்ந்தே, அந்த காலகட்டத்தின் போது மட்டுமே வாசகனுக்கு தெரியவருகிறார்கள். நாவலின் கட்டமைப்பில் இது இயல்பான ஒன்றுதான் என்றாலும் சில விஷயங்கள் கருப்பு/ வெள்ளையாக மாற வழி வகுக்கிறது. உதாரணமாக மற்ற ஆசிரமவாசிகள் ராமநாதனை எதிர்கொள்ளும் விதம். அவர்களில் பலர் கட்டுப்பெட்டியானவர்கள், பழகிய பாதையை கொஞ்சம் கூட மாற்ற விரும்பாதவர்கள், புதுமையைக் கண்டு அச்சம்/அவநம்பிக்கை கொள்பவர்கள் என்பதெல்லாம் உண்மைதான் என்றாலும், சில விஷயங்களில் அவர்களின் பார்வை அவர்களின் கருத்துக்களுக்கு இன்னொரு புரிதலைக் கொடுக்கக் கூடும். ஆசிரமத்தின் ஆரம்ப நோக்கங்களைத் தாண்டி அது கொள்ளும் புதிய தோற்றம் அப்படிப்பட்ட ஒன்று. அந்த மாற்றங்கள் ராமநாதனுக்கு ஏற்புடையதாக இல்லை, ஆசிரமத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஸ்வாமிஜியின் கொள்கைகளை விற்று விட்டதாக அவன் எண்ணுகிறான், அது அவன் பார்வையில் சரியும் கூட. ஆனால் ஆசிரமவாசிகளைக் கேட்டால் நவீன சூழலுக்கு ஏற்றார் போல் மாற வேண்டியது தவிர்க்க முடியாது என்று சொல்லக் கூடும். நாம் அதிகமும் ராமநாதனின் பார்வையிலே நிகழ்வுகளை பார்ப்பதால், மற்றவர்களின் கோணத்தை பார்ப்பதற்கான விரிவான இடம், அல்லது அதை யூகிப்பதற்கான இடைவெளி நாவலின் கட்டமைப்பில் இல்லை.
பிரபு மட்டுமே இதை மீறி ஓரளவுக்கு காத்திரமான இன்னொரு பாத்திரமாக உள்ளான். அவனுடைய பின்புலம், விழைவுகள் பற்றி சில விஷயங்களை ஆசிரியர் சுட்டிச் சென்றாலும், அவை விரிவாக வளர்த்தெடுக்கப்படவில்லை. ஸ்வாமிஜியின் ஆளுமையும் கதையின் போக்கின் படி ஓரிடத்தில் தேங்குவதாக அமைவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
தளைகளை வெறுக்கும், எப்போதும் அலைச்சலில் இருக்கும் ராமநாதன், தான் செல்ல வேண்டிய இடத்தை அடைவதும், (அல்லது தான் அடைந்த/தள்ளப்பட்ட இடத்தை ஏற்றுக்கொள்வதும்), எப்போதும் கீழ்படிந்து பிறரால் வகுக்கப்பட்ட பாதையில் செல்லும் பிரபு, பின்னர் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், தடம் மாறி, தன் இலக்கைத் தேடி அலைவுறுவதும், ஒவ்வொருவரின் பயணத்திலும் உள்ள தனித்தன்மையை, அதன் விசித்திரத்தை, நிச்சயமற்றத்தன்மையை உணர்த்துகிறது . பிரபுவின் பயணத்தின் எதிர்காலம் குறித்து வாசகனுக்குள் நாவலின் முடிவில் எழும் கேள்வி இன்னொரு நாவலாக/ பயணமாக விரியவும் கூடும்.