Monday, February 16, 2015

பயணம் - நாவல் -அரவிந்தன்

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2015/02/08/payanam/
--------------------

“உனக்கு நெஜமாவே ஒரு விஷயம் வேணும்னா, அதுல நீ சீரியஸா இருந்தா அது உனக்குக் கிடைக்கும்” என்று ஸ்வாமிஜி ராமநாதனிடம் சொல்வது, அவனுக்கு அவ்வப்போது நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு விஷயத்தின் மீது பற்று கொண்டிருந்தால், எந்த இடர்பாடுகளையும் சந்திக்க முடியும் என்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பையே/ புறக்கணிப்பையே சந்திக்கும் ஒருவனின் பயணம் எப்படி இருக்கும் என்பதை ‘பயணம்’ நாவல் விவரிக்கிறது.
வீட்டிலிருந்து வெளியேறி ஸ்வாமிஜியின் ஆசிரமத்தில் ராமநாதன் சேர்வதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. நாவலின் களம் ஆசிரமமாக இருந்தாலும், ஆன்மிகம் என்றால் தவம்/ இறையை அடைய முயலுதல் என்ற தனி நபர் ஈடேற்றத்தை குறிக்கோளாக கொண்டது, என்ற பொதுவான புரிதலில் இருந்து சற்று விலகுகிறது. மக்களுக்கு சேவை செய்தல், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், சமூகத்தில் சில நல்ல மாற்றங்களை உருவாக்குதல் இவற்றையே ராமநாதன் தன் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறான்.
தன் குறிக்கோளை அடைய, புதிய திட்டங்களைத் தீட்டுவதிலாகட்டும், அவற்றை செயல்படுத்துவதிலாகட்டும், மிகவும் செயலூக்கமுடையவனாக உள்ள ராமநாதனின் ஆளுமை சிலரை எந்தளவுக்கு மிக எளிதாக/ இயல்பாக வசீகரிக்கிறது அதே அளவுக்கு மற்றவரை அவனிடமிருந்து விலக்குகிறது, அவன் செயல்களை எதிர்மறையாக பார்க்க வைக்கிறது என்பதை நாவல் விவரிக்கிறது. ஸ்வாமிஜி அவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், வெகு சீக்கிரத்தில் அவன் அவருக்கு நெருக்கமானவனாக மாறுவதும் சிலருக்கு உறுத்தலாக உள்ளது.
ராமநாதன் சேவை, மக்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்த பல கனவுகள், இலட்சியங்கள் கொண்டவன், அதை மிக விரைவில் நிஜத்தில் நடத்திக் காட்ட துடிப்பவன், எனவே ஆசிரமம் நடக்கச் செய்ய வேண்டிய மாற்றமில்லா தினப்படி வேலைகளையும் தான் செய்ய வேண்டி வருவதும் , ஸ்வாமிஜியும் (கணக்கு வழக்குக்களை சரி பார்ப்பது போன்ற ) அவற்றில் ஈடுபடுவதும் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை.
அவன் செயல்பாடுகளின் வழியாக ஆசிரமம் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கல்களையும் பார்க்கிறோம். மக்களுக்கு உதவுவது என்பதிலும் சில வரையறைகள் உள்ளன, அதிகாரத்தை பகைத்துக் கொள்ளாதவரை மட்டுமே சமூக வரையறைகள் ஆசிரமத்தின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கின்றன, கிராம மக்களுக்கு யோகா கற்றுத்தருதல், கல்வி சார்ந்த உதவிகள் என்றிருக்கும் ஆசிரமம், அங்குள்ள அரசியல் புள்ளிகளை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை, எனவே சாராயம் காய்ச்சுதல், சாதிப் பிரச்சனை இவற்றுக்கு எதிராக ராமநாதன் தலையிடும்போது, அவனுக்கு தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் அவன் செயல்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாவிட்டாலும், புதுமை என்பதை அச்சமூட்டும் விஷயமாக, ஆசிரமத்தின் வரையறைக்கு வெளியில் உள்ளதாக கருதி ஆசிரமவாசிகள் அவனது முயற்சிகளைத் தடுக்கிறார்கள்.
ராமநாதன் ஒரு விதத்தில் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான், அவன் பார்வையில் புதிதாகத் தென்படுவதை புரிந்து கொள்ள, அதன் மூலம் புதிய அனுபவங்களைப் பெற முயல்கிறான். உண்மையில் தன்னுள் அடைபட்டிருக்கும் ஆற்றலுக்கான வடிகாலையே தேடிக்கொண்டிருக்கிறான். அயோத்தி பிரச்சனை குறித்து இந்து இயக்க தலைவருடன் விவாதிக்கவும்/அந்த பிரச்சனையின் உச்சகட்டத்தில் அயோத்திக்கு பயணிக்கவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை நேரில் பார்க்கும் சூழலுக்கும் இந்தத் தேடலே இட்டுச் செல்கிறது. அவனுக்கு அரசியலில் நேரடியான ஆர்வமோ மத ரீதியான இறுகிப்போன கருத்துகளோ இல்லை ஆனால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்கள் கூட்டம் கட்டமைக்கப்படுவதில் உள்ள விபரீதத்தை உணராத வெளியாள் போல ஆர்வத்தோடு மட்டுமே பார்க்கிறான். இங்கு அவன் தேடல் ‘மக்கள் மத்தியில் இயங்குவதற்கான’ விழைவாக உள்ளது.
சக ஆசிரம வாசியான பிரபுவைப் போல, சேவை செய்வது என்ற எண்ணம் மட்டும் இருந்திருந்தால், ஒரு வேளை அவனால் ஆசிரம செயல்பாடுகளுடன் ஒத்துப் போயிருக்கக்கூடும். ஆசிரமத்தில் சேர்ந்து அதன் சேவைகளில் ஈடுபடும் ராமநாதன் ஓரிரு சம்பிராதாயமான விஷயங்களை சற்றே மாற்றிச் செய்யும் போது, எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாகிறான். ஸ்வாமிஜியும் அது குறித்து அவனிடம் பேசுகிறார். தனிநபராக ஒரு செயலில் ஈடுபடுவதற்கும், ஒரு அமைப்பின் அங்கமாக அதைச் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை மைய்யமாக கொண்ட அந்த உரையாடலின் போது தனிநபர் செயல்பாட்டில் உள்ள பலவீனங்களைக் குறிப்பிட்டு, தனி ஆள் என்பவன் அமைப்பிற்குள் ” தொலைய வேண்டாம் கரையணும். நான் அப்டீன்றது நாமா மாறணும். ‘நான்’ல இருக்கற ஒட்டுதல் ‘நாம்’ல இருக்கணும்” என்கிறார். அதற்கு ராமநாதன் “ஒரு ஆள் ரொம்ப ஸ்பெஷல் டேலேன்டோட இருந்தான்னா அவன் இப்படிக் கரைஞ்சிட்டா அவன் ஸ்பெஷல் டேலேன்ட் முழுசா வெளிப்படுமா”” என்று அவரிடம் அவன் கேட்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
தான் தனித்துவம் மிக்கவன் என்று அவன் உறுதியாக எண்ணுவதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக (அவனுக்கு சரி மற்றவர்களுக்கும் சரி)அவன் செயல்பாடுகள் அமைந்தாலும், அந்தத் தனித்தன்மையை எக்காரணம் கொண்டும் இழக்கக் கூடாது என்ற அவனுடைய உறுதியும், அந்தத் தனித்தன்மை காரணமாக பிறரை கட்டுப்படுத்தும் விதிகளுக்கு தான் ஆட்பட வேண்டியதில்லை என்ற அவனின் கருத்தும் பல உரசல்களுக்கு காரணமாகிறது. அவனால் ஒரு அமைப்பின் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் தன்னை அப்படியே ஒப்புக் கொடுக்க முடியவில்லை, ஒரு சிறு மாற்றத்தைக் கூட பலரிடம் கலந்து ஆலோசித்து தான் செயல்படுத்த வேண்டும் என்பதையும், அதற்கு கூட தன்னைப் போன்ற தனித்துவமிக்கவனுக்கு சுதந்திரம் இல்லை என்பதையும் அவனால் ஏற்க முடிவதில்லை. களத்தில் இருக்கும் போது அவ்வப்போது சுய முடிவுகள் எடுப்பது தவிர்க்க முடியாதது என்ற அவனின் பார்வை சரி தான் என்றாலும், ஆசிரமம் போன்ற இறுக்கமான சட்ட திட்டங்கள் உடைய அமைப்பிற்கு பொருந்தாமல் போகிறது.
ஆசிரமத்தில் இல்லாமல், எழுத்து, ஓவியம் போன்ற தனியாக செயல்படவேண்டிய துறைகளிலோ, அல்லது குழுவாக இயங்க வேண்டிய வேறெந்த அலுவலகத்திலோ வேலை செய்திருந்தாலும் அந்த விழைவுடன், அங்கும் இது போலவே எப்போதும் உலகைப் புரட்டிப் போடும் அவசரத்தில் உள்ளவனாக , அந்த இடத்தின் ‘old order’ஐ மாற்றத் துடிப்பவனாக, புதுமைகளை கொண்டு வர முயல்பவனாக இருந்திருப்பான். இதனால் இயல்பாகவே, அங்கு ஏற்கனவே காலூன்றி உள்ளவர்களில் சிலரிடம் இணக்கம் கொண்டும்/மிகுதியாக முரண்பட்டும் இருந்திருப்பான்.
அவனின் இந்தத் தன்மையே தன்னுடைய எந்த செயலையும் தனக்கே நியாயப்படுத்த அவனுக்கு உதவுகிறது. காயத்ரியுடன் அவனுக்கு ஏற்படும் உறவு அப்படிப்பட்ட ஒன்று. ஆசிரமத்தின் சட்டங்களை மீறுவதாக இருந்தாலும், அவன் அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை, அதற்கு அவனுக்கு காரணங்கள் உள்ளன அல்லது அவற்றை அவன் உருவாக்கிக் கொள்கிறான். பெண்கள் மேல் ஏற்படும் சலனம் மட்டுமின்றி, சில நேரங்களில் தனிப்பட்ட உபயோகத்திற்கு கொஞ்சம் ஆசிரமப் பணத்தை எடுப்பதையும் அவன் தன் உழைப்புக்கான ஊதியம் என்றும், அதைக் கொண்டு செழிப்பாக வாழப் போவதில்லை என்றும் நியாயப்படுத்துகிறான், அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. இப்படி ஆசிரமத்தில் தெரிவிக்காமல், முன்னனுமதி பெறாமல், சில காரியங்கள் செய்வதும் அவனுக்கு பிரச்சனைகளை உருவாக்குகிறது, ஆனால் நேரடியாகக் கேட்டால் ஆசிரமவாசிகள் ஏற்கமாட்டார்கள் என்பதையும் புரிந்திருப்பதால் தான் அவன் அப்படி செய்கிறான். எந்தப் பக்கம் சென்றாலும் சிக்கும் சூழலில், அனுமதி கேட்பதை தன் சுயத்திற்கு இழுக்காகக் கருதி தன் எண்ணப்படியே செய்கிறான்.
இதனால் அவன் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியாதவன் அவர்களை மதிக்காதவன் என்றும் கருத முடியாது. முற்றிலும் வேறான இரண்டு மன மனநிலைகள் தொடர்பில் வரும் போது, உருவாகும் இயல்பான முரண்பாடுகளே இவை. ஸ்வாமிஜியுடன் இன்னும் அதிக நாட்கள் அவன் உறவு நீடித்திருந்தால், அவர் அவனை தனக்கேற்றவாறு வடிவமைத்து, இந்த முரண்பாடு பெரிதாகாமல் தடுத்திருக்கக்கூடும். ஏனென்றால் அவர் மட்டுமே அவனை, அவன் ஆற்றலை, அதன் சாதக பாதகங்களை நன்கு உணர்ந்திருக்கிறார். ஒரு வேளை அவனில் பல ஆண்டுகளுக்கு முந்தைய தன்னை அவர் கண்டிருக்கக்கூடும். எனவே விட்டுப் பிடிப்பது என்றே அவன் செயல்பாடுகளை கவனிக்கிறார், அறிவுரை வழங்குகிறார், மனதளவில் அவன் முற்றிலும் நசுங்கி விடாமல் பார்த்துக்கொள்கிறார். (டேலேன்ட் பற்றிய ராமநாதனின் கேள்விக்கு “அதுதான் சேலஞ்ச். ஒவ்வொருத்தரும் தன்னுடைய சுயத்தை இழந்துறாம “நாம்” அப்டீன்ற அடையாளத்துல இணையணும். இதுல இழப்பு இல்ல ..” என்று அவர் பதில் அளிக்கிறார்)
துரதிருஷ்டவசமான சில நிகழ்வுகளால், ஸ்வாமிஜியின் அண்மையை அவன் இழக்க நேரிடுகிறது. எங்கும் நிலை கொள்ள முடியாததாக, அலைச்சல் மிக்க பயணமாக அவன் வாழ்வு மாறுகிறது. ஆசிரம வேலையாக அவன் எங்கு சென்றாலும், எந்த புதிய பாதையில் பயணிக்க முனைந்தாலும், அவனை பின்னிழுக்கவே அனைவரும் முயல்கின்றனர். ஒரே பாணியில் தொடர்ச்சியாக இப்படி பல நிகழ்வுகள் வருவது வாசகனுக்கு சலிப்பூட்டியிருக்கக் கூடிய அபாயமிருந்தாலும், கதைசொல்லலில் ஆசிரியர் அதை பெருமளவில் தவிர்த்து இருக்கிறார்.
நாவலின் கால கட்டம் வெளிப்படையாக சொல்லப்படவில்லை. இதில் வரும் சில அரசியல் உரையாடல்கள், செய்திக் குறிப்புக்கள் மூலம் எண்பதுகளின் மத்தியிலிருந்து தொண்ணூறுகளின் இரண்டாம் பகுதி வரை என்பதாகப் புரிந்து கொள்ளலாம். Macro அளவில் கால மாற்றத்தை உணரும் வாசகன், ராமநாதனின் வாழ்வின் micro level கால மாற்றத்தை ஸ்தூலமாக உணர முடியாதபடி, அவனின் அன்றாட வாழ்வு துரித கதியில் இயங்குவது போல் செல்லும் கதைப்போக்கு ஒரு நெருடல். ராமநாதன் ஒரு இடத்திற்கு போகிறான், சில மாதங்கள் தங்குகிறான், சில விஷயங்கள் செய்ய முயல்கிறான், அதில் தடுக்கப் படுகிறான், பிறகு இன்னொரு இடம் செல்கிறான், அங்கும் இதே போல் நடப்பது என்பதான நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.
உதாரணமாக ஒரு கிராமத்தில், கைவினை பொருட்களை விற்பனை செய்யும் நிலையத்தை தொடங்கி அதன் மூலம் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கிறான். நல்ல விஷயம் தான் , ஆனால் சில மாதங்களாக செய்யப்பட்ட களப்பணியால் உருவான இந்த மாற்றங்கள் ஓரிரு பக்கங்களில் சடுதியில் கடந்து செல்லப்படுவதால், அவனின் செயல்திட்டத்தின் பின்னால் உள்ள உழைப்பு, அதனால் கிராம மக்களுக்கு உண்டான நன்மை, அதை நிறுத்துவதால் அவர்களுக்கு மட்டுமின்றி, ராமநாதனுக்கும் உண்டாகும் மனக்கஷ்டம் வாசகனுக்கு கடத்தப்படுவதில்லை. ஏதோ கிராம நன்மை அடைந்தார்கள்/பாவம் ராமநாதன் என்றளவில் கடந்து செல்வதால், ராமநாதன், பிறரால் மீண்டும் மீண்டும் பின்னுக்கு இழுக்கப்படுவதை, அவனின் கனவுகளுக்கு விலங்கிடப்படுவதை, அவன் தொடர்ந்து துரத்தப்படுவதை சுட்டும் இந்த நிகழ்வுகள், அவற்றால் ராமநாதனுக்கு ஏற்படும் உளக்காய்ச்சலின் அழுத்தத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
ஆசிரமத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனை ஒரு இறுதியான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளுகின்றன. அந்த முடிவும் வாசகன் யூகிக்கக்கூடிய வழமையான ஒன்றே என்பதை – இது ஒன்றும் வாசகனை திடுக்கிட வைக்கும்/வைக்க வேண்டிய மர்மப் புனைவு இல்லை என்பதால் – குறையாகப் பார்க்க வேண்டியதில்லை. சொல்லப்போனால் ராமநாதனின் ஆளுமைக்கு மிகச் சரியான முடிவே அது. தன் தனித்துவம் குறித்த உறுதியான எண்ணமும், குன்றாத செயலூக்கம் கொண்ட அவனால் அதிக காலம் யாருக்கும் கட்டுப்பட்டிருக்க முடியாது. அவன் இயல்பின் படி, தானே புதிய விதிகளை உருவாக்கும், இருக்கும் விதிகளை மாற்றும் உரிமை/அதிகாரம் உள்ள இடத்திலேயே அவனால் இருக்க முடியும். அந்த இடத்தைத் தான் அவன் தனக்கான, தான் இருக்க வேண்டியா இடமாக உணர்வான். அவனின் இந்தத் தீவிர ஆளுமையால் தான் ஆண்களோ/ பெண்களோ, ஒன்று அவன்பால் வெகு சீக்கிரத்தில் ஈர்க்கப்படுகிறார்கள் அல்லது அதை எதிர் கொள்ள முடியாமல் அவனை ஒதுக்குகிறார்கள். அவன் எடுக்கும் முடிவால்,இனி அவனை யாரும் ஒதுக்கவோ, அவன் கனவுகளுக்கு கைவிலங்கிடவோ முடியாது. ‘Sell-out’ ஆகவும் அவன் முடிவைப் பார்க்க முடியும் என்றாலும் அவனளவில், தன் கனவுகளை நிறைவேற்ற/தனித்துவத்தை தக்கவைக்க வேறெந்த முடிவையும் அவன் எடுத்திருக்க முடியாது.
நாவல் ராமநாதனின் பயணம் என்பதால், மற்றப் பாத்திரங்கள் அவன் தன் பயணத்தில் சந்திக்கும் சக-பயணிகளாக, அவனுடன் அவர்கள் கொள்ளும் உறவு சார்ந்தே, அந்த காலகட்டத்தின் போது மட்டுமே வாசகனுக்கு தெரியவருகிறார்கள். நாவலின் கட்டமைப்பில் இது இயல்பான ஒன்றுதான் என்றாலும் சில விஷயங்கள் கருப்பு/ வெள்ளையாக மாற வழி வகுக்கிறது. உதாரணமாக மற்ற ஆசிரமவாசிகள் ராமநாதனை எதிர்கொள்ளும் விதம். அவர்களில் பலர் கட்டுப்பெட்டியானவர்கள், பழகிய பாதையை கொஞ்சம் கூட மாற்ற விரும்பாதவர்கள், புதுமையைக் கண்டு அச்சம்/அவநம்பிக்கை கொள்பவர்கள் என்பதெல்லாம் உண்மைதான் என்றாலும், சில விஷயங்களில் அவர்களின் பார்வை அவர்களின் கருத்துக்களுக்கு இன்னொரு புரிதலைக் கொடுக்கக் கூடும். ஆசிரமத்தின் ஆரம்ப நோக்கங்களைத் தாண்டி அது கொள்ளும் புதிய தோற்றம் அப்படிப்பட்ட ஒன்று. அந்த மாற்றங்கள் ராமநாதனுக்கு ஏற்புடையதாக இல்லை, ஆசிரமத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஸ்வாமிஜியின் கொள்கைகளை விற்று விட்டதாக அவன் எண்ணுகிறான், அது அவன் பார்வையில் சரியும் கூட. ஆனால் ஆசிரமவாசிகளைக் கேட்டால் நவீன சூழலுக்கு ஏற்றார் போல் மாற வேண்டியது தவிர்க்க முடியாது என்று சொல்லக் கூடும். நாம் அதிகமும் ராமநாதனின் பார்வையிலே நிகழ்வுகளை பார்ப்பதால், மற்றவர்களின் கோணத்தை பார்ப்பதற்கான விரிவான இடம், அல்லது அதை யூகிப்பதற்கான இடைவெளி நாவலின் கட்டமைப்பில் இல்லை.
பிரபு மட்டுமே இதை மீறி ஓரளவுக்கு காத்திரமான இன்னொரு பாத்திரமாக உள்ளான். அவனுடைய பின்புலம், விழைவுகள் பற்றி சில விஷயங்களை ஆசிரியர் சுட்டிச் சென்றாலும், அவை விரிவாக வளர்த்தெடுக்கப்படவில்லை. ஸ்வாமிஜியின் ஆளுமையும் கதையின் போக்கின் படி ஓரிடத்தில் தேங்குவதாக அமைவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
தளைகளை வெறுக்கும், எப்போதும் அலைச்சலில் இருக்கும் ராமநாதன், தான் செல்ல வேண்டிய இடத்தை அடைவதும், (அல்லது தான் அடைந்த/தள்ளப்பட்ட இடத்தை ஏற்றுக்கொள்வதும்), எப்போதும் கீழ்படிந்து பிறரால் வகுக்கப்பட்ட பாதையில் செல்லும் பிரபு, பின்னர் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், தடம் மாறி, தன் இலக்கைத் தேடி அலைவுறுவதும், ஒவ்வொருவரின் பயணத்திலும் உள்ள தனித்தன்மையை, அதன் விசித்திரத்தை, நிச்சயமற்றத்தன்மையை உணர்த்துகிறது . பிரபுவின் பயணத்தின் எதிர்காலம் குறித்து வாசகனுக்குள் நாவலின் முடிவில் எழும் கேள்வி இன்னொரு நாவலாக/ பயணமாக விரியவும் கூடும்.

No comments:

Post a Comment