Saturday, January 3, 2015

Standing In Another Man’s Grave- ரீபஸின் மீள்வருகை

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2014/12/14/ian-rankin/
-----------------------
1987-இல் முதல் ரீபஸ் நாவல் வெளிவந்தபோது, ரீபஸின் வயது நாற்பது. இதனால் 2007-இல் வெளி வந்த எக்ஸிட் ம்யூஸிக் (Exit Music) நாவலின்போது அவருக்கு அறுபது வயதாகி விட, பணி ஒய்வு பெறுகிறார். இந்தத் தொடரும் (இப்போதைக்கு?) முடிவடைகிறது……
ஷுவான் இன்னும் பணியில் இருப்பதால் அவருக்கு வெளியில் இருந்து ரீபஸ் உதவுவதாக நாவல்கள் வெளிவரும் என்னும் நம்பிக்கை உள்ளது. “ரீபஸ் வெளியேயிருந்து ஷுவானுக்கு உதவுவதன் மூலம் இத்தொடரை நகர்த்தப் பல வழிகள் இருக்கின்றன,” என்று ரான்கின் முன்பு ஒரு நேர்காணலில் கூறியது அதற்கு வலு சேர்க்கின்றது.
ஒரு தொடரை முடித்தபின் அதன் முக்கியப் பாத்திரத்தை உயிர்த்தெழச் செய்வதென்பது, இலக்கியத்தில் அவ்வப்போது நடக்கும் ஒன்றுதான். ஹோல்ம்ஸ் (வாசகரின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில்) துவங்கி வாலண்டர் வரை இதற்கு உதாரணங்கள் உள்ளன. அந்த வழியில் இப்போது ரீபஸ்
ரீபஸ் பணி ஓய்வு பெற இருக்கும் இறுதி நாட்களில் நடக்கும் ‘Exit Music‘ நாவலுக்குப் பின் (ரீபஸ் வரும் இறுதி நாவல் இது என்று ரான்கின் அறிவித்திருந்தார்) 5 வருடங்கள் கழித்து‘Standing in Another Man’s Grave‘ நாவலில், ஓர் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் அவரை நாம் மீண்டும் சந்திக்கும்போது, பணி ஓய்வு வாழ்க்கை அவரை எப்படி மாற்றி இருக்கும் (இருக்குமா), மனிதர் இப்போது சற்று கனிந்திருப்பாரா போன்ற கேள்விகளுடன், நீண்டகால நண்பரை ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் சந்திக்கும்போது தோன்றக்கூடிய தயக்கத்துடன் அணுகுகிறோம். இந்தச் சூழலில் இரு சம்பவங்கள் நடக்கின்றன. ரீபஸின் உயரதிகாரி, அவருக்காக தான் அலுவலகத்தில் காத்துக்கொண்டிருப்பதாக குறுஞ்செய்தி அனுப்ப, “What’s the rush” என்று ரீபஸ் பதில் அனுப்புகிறார். இப்படி அவர் செய்யக் காரணம் “.. just to be annoying”. இதைப் படிக்கும்போது மனிதர் பெரிதாக மாறியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை நமக்கு வருகிறது. ரீபஸின் உயரதிகாரி தனக்கு மேல்நிலையில் உள்ளவர்களுக்கு வால் பிடிப்பதைப் பற்றி “It’s called stalking…”, என்று அவரிடமே ரீபஸ் கிண்டலாக சொல்வதும் தெரிய வரும்போது, நம் நம்பிக்கை உறுதிப்படுகிறது..
Exit Music‘ நாவலுக்கும் இந்த நாவலுக்கும் இடையில் வேறு சில நாவல்களை ரான்கின் எழுதி இருந்த நிலையில், இந்த நாவல் குறித்த எதிர்பார்ப்பு மட்டும் வாசகர்களிடம் அது பற்றிய அறிவிப்பிலிருந்தே அதிகமாக இருந்தது. ஏன்? ஒரு நாவலைப் படிக்கும்போது, ஆரம்பத்திலிருந்தே என்ன குற்றம் நடக்கப்போகிறது, எப்போது நடக்கப்போகிறது என அதன் போக்கை கவனிப்பதைவிட, ஒரு பாத்திரத்தின் மீது வாசகன் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? தனி (stand alone) நாவல்களைப் போலில்லாமல், தொடர் (series) நாவல்களில் ஒவ்வொரு நாவலும், மற்றவையுடன் அதிக தொடர்பில்லாமல் இருந்தாலும், அனைத்திலும் முக்கியப் பாத்திரம் ஒன்றாக இருப்பதால், ஒரு தொடரின் வெற்றி, அதன் நாவல்களின் உள்ளடக்கத்திற்கு இணையாக அதன் முக்கியப் பாத்திரத்தின் கையில் உள்ளது. அந்தப் பாத்திரம் எந்தளவுக்கு வாசகனிடம் வரவேற்பைப் பெறுகிறதோ அந்தளவுக்கு அந்தத் தொடரும் வெற்றியடைகிறது.
தொடர் நாவல்களின் பலமாகவும் பலவீனமாகவும் ஒரே நேரத்தில் பார்க்கப்படக்கூடுமென்றாலும், மோர்ஸ் (Morse), ரீபஸ் (Rebus) போன்ற சில பாத்திரங்கள் தாங்கள் வரும் நாவல்களின் உள்ளடக்கத்தைத் தாண்டி முக்கியத்துவம் அடைந்துள்ளார்கள். குற்றப்புனைவுகளின் அதி-நாயகர்கள் போல் இருந்தாலும், இவர்கள் அதிநாயகர்களின் குணாதியசங்கள் கொண்டவர்கள் அல்லர் , தங்கள் பலங்களுக்கு நிகரான, தங்களையே அழிக்கக்கூடிய பலவீனங்களையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய பாத்திரங்கள் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறுவது, அதன் ஆசிரியர், பாத்திர வார்ப்பு, அதன் பரிணாம வளர்ச்சி இவற்றில் காட்டும் அக்கறைக்குக் கிடைக்கும் வெற்றி. (இத்தகைய பாத்திரங்களுக்கு மாறான, பலவீனங்கள் வெளிக்கொணரப்படாத ஹோல்ம்ஸ் – திமிர் பிடித்தவர் போன்ற வெகு சில எதிர்மறை குணங்களைத் தவிர-, நவீன பாத்திரங்களான வாலண்டர், மோர்ஸ் இவர்களின் குடிப்பழக்கம் அவர்களை எப்படி பாதிக்கிறது என்பது போன்ற சித்தரிப்புக்களுடன் ஒப்பிடும்போது, வழக்கு ஏதும் இல்லா நேரத்தில் ஹோல்ம்ஸின் சிந்தனைக்கு ஊக்கம் தரக்கூடியதாக உள்ள அவரின் போதைப் பழக்கம்கூட, காவிய வார்ப்பு கொண்டதாகவே உள்ளது,- தூய அதிநாயக பாத்திரம் எனலாம்).
ரீபஸ் மீண்டும் பணியில் சேர்வதற்கு, குற்றப் புனைவுகளில் உள்ள ஒரு tropeஐ ரான்கின் உபயோகித்துள்ளார். ‘cold cases’ எனப்படும், துலக்கப்படாத பல்லாண்டு கால குற்றங்களை விசாரிக்கும் குழுவில் ரீபஸ் சேர்கிறார். 2000ல் காணாமல் போன தன் மகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கும் தாயின் மூலமாக அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
குற்றத்தின் காரணம், அது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை எப்படி மாற்றியமைக்கிறது, முக்கியப் பாத்திரத்தின் வாழ்வியல் மாற்றங்கள், வழமையான தொடர் குற்றப் புனைவுகளிடமிருந்து, ரான்கின், மான்கேல் போன்றோரின் ஆக்கங்களை வேறுபடுத்துகின்றன. இத்தகைய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி, குற்றப் புனைவு எனும் வகைமையை மிக மிக யதார்த்தமாக அணுகுவதால், பரபரப்பு/ கிளர்ச்சி இவற்றைத் தாண்டி, குற்றத்தின் பாதிப்பை/ அதன் காரணிகளை மிக நெருக்கமாக உணரச் செய்து, வாசகனிடம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை இவ்வகை படைப்புக்கள். அதே நேரம் குற்றப் புனைவின் ஆதாரமான மர்மம், துப்பறிதல் இவற்றிலிருந்து, நம் கவனத்தை திசை திருப்பக்கூடியவை. திசை திருப்பல் என்பது இங்கு இந்தப் புனைவுகளின் பலவீனமாகக் குறிப்பிடப்படவில்லை, அவற்றின் நோக்கம் வாசகனைக் கொண்டு செல்லும் இடம் குற்றப் புனைவுகளிடம் இருந்து சற்று தள்ளி இருக்கக் கூடும் என்பதை சுட்டவே. உதாரணமாக ‘Karin Fossum’ன் நாவல்கள். குற்றப் புனைவுகளிலேயே ஒரு உள்-வகைமையாக இவற்றைப் பார்க்கலாம். பாத்திரங்களையோ/ குற்றங்களையோ, குற்றப்புனைவின் அம்சங்களையோ ஒன்றை ஒன்று ஆதிக்கம் செலுத்துவதாக இல்லாமல், இரண்டு இழைகளையும் லாகவமாக கையாளக் கூடியவர்களில் ரான்கினும் ஒருவர்.
ரீபஸின் தனிப்பட்ட வாழ்க்கை, மற்றவர்களுடன் அவருடைய உறவு/ உறவின்மை இவற்றோடு அவர் விசாரிக்கும் வழக்கு மிக இயல்பாக இணைந்துள்ளது. ரீபஸ் விசாரணைக்காக காரில் செல்லும் ஒரு நீண்ட பயணம் அவர் தனிவாழ்வோடு எப்படி இணைகிறது என்பதற்கு ஓர் உதாரணம். காவல்துறை நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் அவரால் ஒத்துப்போக முடியாவிட்டாலும், தொடர்ந்து விசாரணை செய்து மறைக்கப்பட்ட/ மற்ற காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத சில விஷயங்களை ரீபஸ் கண்டுபிடிக்கிறார்.
ரான்கினின் இன்னொரு தொடர் நாவல் வரிசையான ‘Malcolm Fox ‘ நாவல்களின் முக்கியப் பாத்திரம் பாக்ஸ், இந்த நாவலிலும் வருகிறார். இரு அதிநாயகர்களின் புகழை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஒரே படைப்பில் இணைப்பதைப் போல் இல்லாமல், அவர்களின் வேலை சார்ந்து இருவரும் சந்திக்க நேரிடுகிறது. எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் இருவரின் உறவின் முதல் அத்தியாயத்தை இந்த நாவலில் பார்க்கிறோம், வரும் நாவல்களில் அது இன்னும் வளர்த்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. சியோபனுடனான ரீபஸின் உறவின் மாற்றங்களையும் நாம் காண முடிகிறது, இதுவும் அடுத்து வரப்போகிற நாவல்களில் விரிவாக பேசப்படலாம்.
ஒரு கட்டத்தில் நாவல் முழு குற்றப் புனைவின் உருவைப் பெறுகிறது. திடுக்கிட வைக்கும் சில கண்டுபிடிப்புக்கள், பரபரப்பான சம்பவங்கள் என நாவல் நகர ஆரம்பிக்கிறது. இறுதிப் பகுதியை நாவலின் பலவீனம் என்று சொல்லலாம். நாவலின் மைய இழையோடு முதலிலிருந்தே தொடர்ந்து வரும் ஒரு கிளைக்கதையின் போக்கை வெகு எளிதில் வாசகன் யூகிக்கலாம். இரண்டு இழைகளையும் அவசர கதியில் இணைத்து முடிக்கிறார் ரான்கின். ரீபஸுக்கு ஒரு புது எதிரி உருவாகிறார் (இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை, அவருக்கு எதிரிகள் உருவாகாவிட்டால்தான் அதிசயம்).
குற்றப் புனைவின் பொது வாசகனாக, ரான்கின்/ ரீபஸ் canonன் மிகச் சிறந்த நாவல்/ நாவல்களில் ஒன்று என்று கூற முடியாவிட்டாலும், சில குறைகளைக் கொண்ட, பெரும்பாலும் நேர்த்தியாக பின்னப்பட்ட நாவலாக இதை அணுகலாம்.
ஆனால் ரீபஸின் நெடுங்கால வாசகனுக்கு நாவலின் உள்ளடக்கத்தை விடவும், அவரின் மறுவருகையே முக்கியம். அதிகாரத்திற்கு/ அதிகாரிகளுக்கு மரியாதை தராத, உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாத/ விரும்பாத (ஒரு இடத்தில் சியோபனிடம் சற்றே முரட்டுத்தனமாக நடந்து கொண்டுவிட்டு, வருந்தி, அவரைத் தொலைபேசியில் அழைத்தபின்பு எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து விடுகிறார்), வழக்கில் ஒரு சிறு துப்பு கிடைத்தாலும், தன் வேலைக்கான பாதுகாப்பைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ கவலைப்படாமல் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறுவது, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருப்பது, சுய-அழிப்பின் (self-destruction) விளிம்பில் ஊசலாடுவது, அதை விரும்பவும் செய்கிறாரோ என்று வாசகனை எண்ணச் செய்வது என இவர் நாம் முன்பு அறிந்திருந்த ரீபஸாகவே இருப்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தப் பத்தியில் ஓரிடத்தில் சொன்னது போல, கதையின் உள்ளடக்கத்தைத் தாண்டி ரீபஸ் உயர்ந்து நிற்கிறார்.
(சியோபனுக்கு இந்த நாவலில் அதிக பங்கில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமளித்தாலும், அது நாவலின் வாசிப்பிற்கு இடையூறாக இல்லை, நாம் நன்கு அறிந்த இன்னொரு பாத்திரம் அதிகம் கவனப்படுத்தப்படவில்லை என்ற சிறிய ஆதங்கம் மட்டுமே அது. இதையும் ரீபஸின் மறுவருகை குறித்த வாசக எதிர்பார்ப்புடன் இணைத்துப் பார்க்கலாம்) அந்த விதத்தில் ரீபஸுடனான மிகவும் மன நிறைவான சந்திப்பாக ‘Standing in Another Man’s Grave‘ உள்ளது.
பின்குறிப்பு:
இந்த நாவலுக்குப் பின் ரீபஸ் வரும் ஒரு நாவலும்/ சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment