Tuesday, March 11, 2014

Dare Me - Megan Abbot

பதாகை தளத்தில் வெளிவந்தது (http://padhaakai.com/2014/03/02/dare-me-megan-abbot/)
----------------------
Ages fourteen to eighteen, a girl needs something to kill all that time, that endless itchy waiting, every hour, every day for something—anything—to begin.”
“There’s something dangerous about the boredom of teenage girls.”
மேகன் ஆபட்டின் (Megan Abbot) ‘Dare Me’ நாவலில் பதின்பருவத்தைப் பற்றி வரும் வரிகள் இவை. அந்தப் பருவத்தின் சிக்கல்கள், எதிர்பாலின ஈர்ப்பு, பாலின குழப்பம், எதையும் (குறிப்பாக, தடை செய்யப்பட்டுள்ளதை) முயற்சி செய்ய/ அறியும் விழைவு, நட்பு வட்டாரத்தால் எப்போதும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் (peer pressure), வாழ்வின் யதார்த்தங்கள் அறிந்திராத காலத்தில் முடிவற்று நீளும் எனத் தோன்றும் இளமை என பலதரப்பட்டவை. சுயத்தை அறியவும் உறுதி செய்ய​வும்​ நாம் நம்மையறியாமல் செய்பவைகளாக இவற்றைக் கொள்ளலாம். அப்படி ‘தன்னையறிதலை’ மையமாக வைத்து, குற்றப்புனைவின் களத்தில் மேகன் ஆபட் இந்த நாவலை எழுதி உள்ளார்.
பெத் (Beth), ஆடி (Addy) இருவரும் குழந்தை பருவத்திலிருந்தே நெருங்கிய தோழிகள். பதின்பருவத்தில் உள்ள இருவரும், தங்கள் பள்ளியின் ‘cheer-leading’ குழுவில் உறுப்பினர்கள். பெத் இயல்பாகவே தலைமைப் பண்பு உள்ளவராகச் சுட்டப்படுகிறார், ‘cheer-leading’ குழுவின் தலைவரும் அவரே. ‘Cheer-leading’ பயிற்சியாளராக கொலட் (Colette) என்பவர் புதிதாக வேலைக்கு சேருவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது.
பயிற்சியாளர்/ ஆசிரியர் என்பவற்றின் வெற்றி அவர் எந்தளவுக்கு தன் துறையில் வல்லவர் என்பதை பொறுத்து இருப்பதில்லை. அவர் எந்தளவுக்கு தன் மாணாக்கரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், தான் சொல்லிக் கொடுக்கும் துறையில் ஈடுபாடு கொள்ள வைக்கிறார் என்பதை பொறுத்துதான் உள்ளது. ‘He has lost his team’, ‘Team has quit on his coach’ போன்றவை ஒரு பயிற்சியாளரின் கொடுங்கனவாகும். இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் தன் மாணாக்கரின் மதிப்பை அவர் பெற வேண்டும். கொலட் வருவதற்கு முன்பிருந்த பயிற்சியாளரை இந்தப் பெண்கள் மதிக்காமல் (‘We girls, we owned her. Especially Beth. Beth Cassidy, our captain’), தங்கள் இஷ்டப்படி இருந்துள்ளார்கள். ஆனால் முதல் நாளே தான் மாறுபட்டவர் என்று கொலட் நிரூபிக்கிறார்.
But standing there, back straight like a drill officer, she’s wielding the roughest gaze of all.
Eyes scanning the staggered line, she’s judging us. She’s judging each and every one. I feel her eyes shred me— my bow legs, or the flyaway hairs sticking to my neck, or the bad fit of my bra, me twisting and itching and never as still as I want to be. As she is.
பெண்கள் அலைபேசிகளைப் பயிற்சியின்போது பயன்படுத்த முடியாதபடி செய்கிறார். அணிக்கு தலைவர் யாரும் தேவை இல்லை என்று அந்தப் பதவியை எடுத்து விடுகிறார். புதிய வகை பயிற்சிகளை அறிமுகப்படுத்தி,’cheer-leading’ என்பது பொழுதைக் கழிக்கும் விஷயமாகக் கருதி அசட்டையாக இருந்த இந்தப் பெண்களை அதில் இன்னும் சிரத்தை கொள்ளச் செய்கிறார். இந்த மாற்றங்களினால் கொலட் குறித்து முதலில் சில தயக்கங்கள் இருந்தாலும், சீக்கிரமே ‘cheer-leading’ குழுவினர், அவரின் ஆளுமையால் ஈர்க்கப்படுகின்றனர் (girl-crush).
இரு ஆல்பா (alpha) நபர்கள் ஒரே இடத்தில் இருப்பது கடினம். எனவே பெத் மட்டும் கொலட்டிடமிருந்து விலகியே இருக்கிறார். தன் அதிகாரம் பறிபோனதை அவரால் ஏற்கவும் முடியவில்லை, அதே நேரம் கொலட்டை நேரடியாக எதிர்க்கவும் முடியவில்லை. ஆனால் கொலட் பெத் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாமல், தன் பாணியில் குழுவை வழிநடத்துவது போல் உள்ளது. அது உண்மையா, அல்லது நமக்கு புலப்படாத, நுட்பமான ஆடு புலி ஆட்டம் இருவருக்கிடையே நடக்கிறதா என்று நினைக்கும்படி சில சம்பவங்கள் நடக்கின்றன. புதிய உறவுகள் நாவலின் முதல் பகுதியில் ஏற்படுகின்றன. குற்றப்புனைவென்று சொல்லுமளவுக்கு நாவலில் இதுவரை எதுவும் நடப்பதில்லை. ஆபட் நாவலிற்கான தளத்தை உறவுச் சிக்கல்களின் மீதே கவனம் செலுத்துவதன் மூலம் அமைக்கிறார். ஆனால் இந்தச் சூழல் இப்படியே இருக்க முடியாது, ஏதோ ஒன்று நடந்தே ஆக வேண்டும், அது கண்டிப்பாக நல்லதாக இருக்காது என்ற அச்சத்துடனேயே இந்தப் பகுதியை கடக்கிறோம்.
பிறகு ஒரு மரணம் நடக்கிறது. முதலில் தற்கொலை போலிருந்தாலும், அதில் ஒரு மர்மம் இருப்பதுபோல் சில விஷயங்களை ஆபட் (பாத்திரங்கள் மூலம்) வெளிப்படுத்துகிறார். முதல் பகுதியில் பார்த்த உறவுச் சிக்கல்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இருக்குமா? நமக்கு தெரிவதில்லை. ஒரு பாத்திரத்தை தன் பக்கம் இழுக்க/ தன் பக்கக்திலிருந்து இழக்காமலிருக்க, உணர்வு ரீதியான ஆட்கொள்ளல் முயற்சிகள் (emotional manipulation) நடக்கின்றன. பாத்திரங்களின் உறவு முடிச்சுகள் அவிழ அவிழ, குற்றம் பற்றிய உண்மையும் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்குகிறது. அதாவது பல பாத்திரங்களுக்கு, நடந்த மரணம் சார்ந்து சில விஷயங்கள் தெரிந்திருக்கிறது (ஆனால் அதன் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை, என்ன நடந்தது என்பதையும் மொத்தமாக யாரும் அறிந்திருப்பதில்லை). முதலில் எதுவும் சொல்லாமல் இருப்பவர்கள், உறவு நிலை மாற/ மாற்ற அதை வெளிப்படுத்துகிறார்கள். விஷயங்கள் நமக்கும் (பாத்திரங்களுக்கும்) தெரிய வர, சம்பவங்கள் வேகம் பிடித்து, குழுவினர் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான ‘cheer-leading’ போட்டிநாளை நோக்கி நகர்ந்து, கொதி நிலையை நாவல் அடைகிறது. போட்டி அன்று நடக்கும் சம்பவங்கள் பலப் பாத்திரங்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டு விடுகின்றன.
நாவலில் இரண்டு இழைகள் உள்ளன, இரண்டிலுமே ஒரு மர்மம் உள்ளது. முதல் பகுதியிலிருந்து வரும் உறவுகளின் dynamics பற்றிய உண்மை என்ன என்பது ஒரு மர்மமென்றால், நாவலின் நடுவில் நடக்கும் மரணம் இன்னொரு மர்மம். இரண்டு மர்மங்களுக்கும் உள்ள தொடர்பை, கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு தெளிவுபடுத்துகிறார் ஆபட். காவல் துறைக்கு நாவலில் அதிக பங்கு இல்லை, பாத்திரங்களின் implosionதான் அனைத்து முடிச்சுகளும் அவிழக் காரணமாக உள்ளது. இங்கு ஒரு விஷயம். முதல் மர்மத்தின் இரு முக்கிய முடிச்சுக்களை, அதாவது ஒரு முக்கிய பாத்திரம் தானே அறிந்திராத/ அறிந்திர விரும்பாமல் இருந்த, குணாதிசயத்தை அறிவது, மற்றும் இரு பாத்திரங்களிக்கிடையே உண்மையில் எப்படிப் பட்ட உறவு உள்ளது என்று தெரிய வருவது, இரண்டையும் வாசகன் ஓரளவுக்கு எளிதாக, நாவலின் இறுதிக்குள் ஊகிக்க முடிகிறாது.
குற்ற/ மர்மப் புனைவு என்று பார்க்கும்போது இது நாவலின் பலவீனமாகத் தோன்றலாம். ஆனால் முதலில் சொன்னது போல் நாவலின் மையம் என்பது ‘ தன்னையறிதல்’ என்பதே ஆகும். அதற்கான ஒரு காரணியாகத்தான், மரணம்/ அது தொடர்பான மர்மம் அனைத்தும் உள்ளன. இதுவே பொதுப் புனைவின் கூறுகளும் கொண்ட நாவலாக அணுகப்படும்போது, ஆசிரியர் சில விஷயங்களை நுட்பமாக சொல்லிச் செல்வதை வாசகன் புரிந்து கொள்கிறான் என்று மாறுகிறது (பொதுப் புனைவில் இறுதி கட்டம்வரை புலப்படாத முடிச்சு ஒன்று இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது இல்லையா?).
மேலும் ஆபட் ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் வேண்டுமென்றே உருவா​க்கும் தெளிவற்ற தன்மை காரணமாக நம்முடைய யூகம் தவறாகவும் இருக்கும் என்றும் வாசகனுக்கு தோன்றுவதால் இறுதிவரை ஒரு பரபரப்பு இருந்து கொண்டுதானிருக்கிறது. உதாரணமாக ஆல்பா(alpha) நபர்களாக தோன்றும் பெத்/ கொலட் இருவருக்குள்ளும் உள்ள பலவீனமான (vulnerable) பகுதியையும், எப்போதும் அவர்களைப் பின்தொடர்கின்ற தொண்டர்கள் போல் உள்ள ஆடி போன்றவர்கள் (இவர்களில் ஒருவரை கொலட் ‘Sheep’ என்று வரையறுக்கிறார்), திடீரென வெளிப்படுத்தும், அவர்களிடம் இருக்கும் என நாம் எண்ணியிருக்காத, மனத்திண்மையையும் ஆபட் contrast செய்கிறார். எனவே இந்தப் பாத்திரம் இப்படித்தான் நடந்து கொள்ளும் என்று வாசகன், ஊகிக்க முடிகிறதே தவிர,இறுதி வரும் வரை அதுப் பற்றி உறுதி கொள்ள முடியவில்லை. குறுஞ்செய்திகள் அனுப்புவது பற்றி கொலட்
“You girls, with your phones and your sad little texts,” she says, shaking her head.
“Ten, twelve years ago, it was still folding notes, passing them in class. Just as fucking sad. No, this is sadder.”
என்று பேசும்போது, அவரும் பதின்பருவத்தைக் கடந்துதான் வந்திருக்கிறார் என்பது சுட்டப்படுகிறது, அவருடைய இப்போதைய சமநிலைத்தன்மை நாம் நினைப்பது போல் வலுவானது கிடையாது என்றும் வாசகனுக்கு தோன்றுகிறது.
பதின்பருவத்தில் உள்ள ஆடி தான் நாவலின் கதைசொல்லி என்பதால், நீண்ட பத்திகளோ, கடினமான வார்த்தைகளோ அதிகம் இல்லாமல், நாவலின் உரைநடை பெரும்பாலும் அந்த வயதுக்குரிய பேச்சுவழக்கில் உள்ளது. அலைபேசிவழி குறுஞ்செய்தி பரிமாற்றங்கள், உடல் குறித்த வெறுப்புக்கள் (body image problem) என அந்த வயதினருக்கான இன்றைய காலகட்டத்தின் பிரத்யேக விஷயங்களும் நாவலில் உள்ளன (கொலட் ஒரு பெண்ணிடம் ‘baby-fat’ஐ குறைக்கும்படி சாதாரணமாகச் சொல்ல, அந்தப் பெண், பிலாக்கணம் வைத்து ஓலமிடுகிறார். பயிற்சியில் படும் அவஸ்தை/ அது சார்ந்து பயிற்சியாளரின் கண்டிப்பு/ கிண்டல்கூட அவர்களை அழ வைப்பதில்லை, உடல் குறித்த ஒரு சிறு கருத்து அவர்களை நிலைகுலைய வைக்கிறது).
நாவலில் தர்க்க ரீதியாக இல்லாமல் உள்ள ஒரு விஷயம், பெத்/ஆடி இருவரும் இரவு/ பகல் என்றில்லாமல் நினைத்த மாத்திரத்தில், காரில் பிறரைச் சந்திக்க கிளம்புகிறார்கள். இருவரின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் (பெற்றோர் விவாகரத்து) இருப்பது குறிப்பிடப்பட்டாலும், வீட்டில் கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல் இருப்பார்களா என்று தோன்றாமல் இல்லை.
நாவலில் இன்னொரு நெருடல், ‘cheer-leading’ பெண்கள் அனைவரையும் பசலை படர்ந்தவர்களாக சித்தரித்திருப்பது. பதின்பருவத்தில் பாலியல் ஈர்ப்பு என்பது இயல்பானதே என்றாலும், இதில் வரும் சில சம்பவங்கள் cheer-leading’ஐப் பற்றிய stereotypeகளை மீண்டும் வலியுறுத்துவது போலத் தான் உள்ளது. ஒரு கட்டத்தில் பந்தயத்திற்காக ஆண் ஒருவனை தங்கள் பக்கம் ஈர்க்க பள்ளி வளாகத்திலேயே அவர்கள் செய்யும் சில விஷயங்கள், நிஜத்தில் நடக்கக் கூடியதா என்று அமெரிக்க பள்ளிகள் பற்றித் தெரிந்தவர்களே சொல்ல முடியும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதீதமாகத்தான் தோன்றுகிறது. அதே நேரம் நாவலின் மற்ற இடங்களில் குற்றப் புனைவின் சட்டகங்களை ஆபட் மீறிச் செல்வதைப் பார்க்கும்போது, அவர் சித்தரித்திருப்பது இயல்பான ஒன்றே, வெளியிலிருந்து பார்ப்பதனால்தான் stereotype போலத் தோன்றுகிறது என்றும் சொல்லலாம்.
ஒரு குற்றப் புனைவு சுவாரஸ்யமாக, ஓரளவுக்கேனும் தர்க்கத்தோடு அவிழ்க்கப்படும் மர்மத்தை மட்டும் கொண்டிருந்தால் போதும், அந்த வகைமையின் கடமையை அது பூர்த்தி செய்கிறது. ஆனால் அனைத்து எழுத்தாளர்களும் இதை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை, அவர்கள் இந்த எல்லைகளை மீற முயல்கிறார்கள்.
“When a murder is satisfied, it isn’t the beginning of the story; it’s the middle. We shouldn’t forget that fact because murder has ripples. You never go back to being the same. The people that investigate these crimes never go back to being the same as they were before they started the investigation. The people’s whose lives have been affected, the victim’s families, even the murderer themselves are profoundly changed. That’s why murder is still the most interesting crime for us to write about, because it is the only crime where something unique is taken away from the world, something that can’t be replaced.”
என்று Rankin சொல்கிறார். இந்தப் பாரம்பர்யத்தில் வருபவர் மேகன் ஆபட். பதின்பருவத்தில் ஏற்படும் அடையாளச் சிக்கல்கள் எப்படி பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது என்று விரியும் இந்த நாவலின் முடிவில், வாசகனுக்கு ‘adrenaline rush’ஐ விட, ஒரு சிறு நிகழ்வு நடக்காமலிருந்தால், பலவற்றை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில், அது தற்காலிகமான தள்ளிவைப்​பா​கத்தான் இருந்திருக்க முடியுமென்றும், சில விஷயங்கள் எப்படியும் பின்னர் கண்டிப்பாக வெடித்திருக்கும் என்ற ஆயாசமும், எப்போதும் புரிந்து கொள்ள முடியாத மனதின் விசித்திரமும், அது மனிதரை கொண்டு செல்லும் இடத்தைப் பற்றிய எண்ண ஓட்டங்களுமே நம்மிடம் தங்குகின்றன. குற்றப் புனைவு என்பதைத் தாண்டி வேறு விஷயங்களைச் சொல்ல முயன்ற அளவில் இந்த நாவல் குறிப்பிடத்தக்க ஒன்று.

Saturday, March 1, 2014

6174 – க.சுதாகர்

பதாகை தளத்தில் வெளிவந்தது (http://padhaakai.com/2014/02/16/6174-sudhakar/)
-----------------------
திரைத்துறையில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் பல படங்கள் வெளிவருவது போல எழுத்து/ பதிப்புத்துறையிலும் ‘read-alikes’ என்றழைக்கப்படும் புத்தகங்கள் உண்டு. உதாரணமாக சமீபத்தில் ‘Amish Tripathi’யின் ‘Shiva Trilogy’ நாவல்களின் வெற்றிக்குப் பிறகு அதே போல் நம் புராணங்கள்/இதிகாசங்கள் சார்ந்து, அவைஅவற்றில் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தைக் கதைக்களனாய் கொண்டு எழுதப்படும் நாவல்கள் அதிகம் இந்திய ஆங்கிலத்தில் வெளிவருகின்றன (இந்திய vernacular பொது இலக்கியத்தில் இப்படி புராணங்களை/இதிகாசங்களை மறுஉருவாக்கம் செய்வது எப்போதும் இருந்து வந்துள்ளது என்றாலும் இப்போது இந்திய ஆங்கிலத்தில் வருபவை ஒரு புதிய ழானராகவே மாறி உள்ளன).
டான் ப்ரௌனின் ‘டா வின்சி கோட்’ நாவலின் வெற்றிக்குக் பிறகு அதுபோலவே பல நாவல்கள் வெளிவந்து, அவை ‘ancient conspiracy theory’ நாவல்கள் என்றும் வகைபடுத்தப்பட்டு ஒரு குடிசைத் தொழில் போலவே ஆயின. இந்த வகை நாவல்கள் முன்பே வந்து கொண்டிருந்தன என்றாலும் ப்ரௌனின் வெற்றிக்குப் பிறகே அதிகமாக கவனத்துக்கு வந்தன (ப்ரௌனின் pet theoryஆன ‘Illuminati குறித்து ‘The Illuminatus! Trilogy’ எழுபதுகளில் வெளிவந்தன. Ecoவின் இன்ன வகைமை என்று வரையறுக்க முடியாத ‘Foucault’s Pendulum’ நாவலில் conspiracy theoryக்கள் பகடி செய்யப் படுகின்றன).
‘Ashwin Sanghi’ எழுதிய ‘The rozabal line’ நாவலை, இந்தியரால்/இந்தியாவை களமாகக் கொண்டு எழுதப்பட்ட conspiracy theory நாவல்களில் முதலில் வந்தவைகளுள் ஒன்றாகக் கொள்ளலாம். இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், சில நாவல்கள் ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டு ஒன்று முதலில் வெளிவந்ததால், பின்னதை read-alike என்று முத்திரை குத்துவதும் நடந்துள்ளது (Javier Sierraவின் அபாரமான ‘The Secret Supper’ நாவல் ‘டா வின்சி கோட்’ வெளிவந்த பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதால் இதே போல் முத்திரை குத்தப்பட்டது).
நான் படித்தவரை 6174 நாவல் ancient conspiracy theory ழானரில் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்று சொல்லலாம் (சென்ற வருடம் ‘கர்ணனின் கவசம்’ என்று தமிழ் வாரப் பத்திரிகையில் ஒரு தொடர் வெளிவந்தது). இந்த நாவல் ‘அறிவியல் புனைவாகவே’ அதிகம் குறிப்பிடப்படுகிறது. ஆனால் நாவலின் பல அம்சங்கள் ancient conspiracy theory ழானரை ஒத்திருக்கின்றது. நானும் இந்த நாவலை அப்படியே அணுகுகிறேன்.
இந்த ழானரின் விதிகளில் ஒன்று, ஒரு புராதன சமூகம் மிக உயர்ந்த நிலையில், வலுவாக இருந்து பின்னர் வீழ்ந்ததாகவும் அவர்களின் முக்கிய ரகசியம் ஒன்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் இருக்க, அதை நிகழ்காலத்தில் ஒரு கும்பல் தேடுவது போலவும், நாவலின் முக்கிய இழை இருக்க வேண்டும். இந்த நாவலிலும் அப்படி உள்ளது. தமிழ் சமூகத்தின் ஆழ்மனதில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் ‘லெமூரிய கண்டம்’ பற்றிய கருத்தாக்கங்கள்தான் நாவலின் முக்கிய இழை. இந்தச் சமூகத்தினர் ஏதோ காரணத்தினால் பூமியை விட்டுச் செல்ல (எங்கே என்பது பூடகமாக உள்ளது). அவர்களின் சக்தி பீடம் பூமியில் தங்கி விடுகிறது. அந்த சக்தி பீடத்தால் நிகழ்காலத்தில் நடக்க கூடிய அழிவையும், அந்த அழிவை உருவாக்க/தடுக்கவும் பலக் குழுக்கள் முயல்வதே நாவலின் பிற சம்பவங்கள்.
இந்த வகைமையின் இன்னொரு விதி ஒரு ஆண்/பெண் கூட்டணிதான் முக்கிய பாத்திரங்களாக இருக்க வேண்டும், அவர்களே இந்த மர்மங்களைத் துலக்க வேண்டும். அதேபோல் இங்கும் ஆனந்த்/ ஜானகி இருவரும் தாங்கள் அறியாமலேயே ஒரு ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்ள, லெமூரியர்களின் சக்தி பீடத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அவர்களின் தேடுதல் பயணம் காஞ்சிபுரம், லோனார் ஏரி (மகாராஷ்டிரா), கொனார்க், மயன்மார் என்று பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.
இந்த நாவலின் சிறப்பம்சம் வாசகரை முட்டாளாக, என்ன எழுதினாலும் வாசிப்பவர்கள் என்று எண்ணாமல், சம்பவங்கள் பெரும்பாலும் கோர்வையாகவும்/ தர்க்கரீதியாகவும் அமைந்திருப்பது. இது அனைத்து நாவல்கள்/ சிறுகதைகளிலும் இருக்க வேண்டிய ஒன்றுதானே, இதிலென்ன சிறப்பம்சம் என்று தோன்றலாம். இந்த வகைமையில் மேற்கில் Best Seller நாவல்கள் எழுதும் ‘Brad Meltzer’, Andy McDermott, Chris Kuzneski , இந்தியாவில் ‘The Shadow Throne’ (Aroon Raman) போன்ற, ஒரு சுவாரஸ்ய முடிச்சை மட்டும் வைத்துக் கொண்டு பக்கங்களை நிரப்பி blurbகள் (’1000/2000 year old secret’, ‘ancient cult’, ‘revelation that will change the course of history’, ‘race against time’ போன்றவற்றை பெரும்பாலான புத்தகங்களில் பார்க்கலாம், ஆனால் கடைசி பக்கங்களில் உப்பு சப்பில்லாத ரகசியத்தைத் திணித்து நாவலை முடித்து விடுவார்கள்) மூலம் வெற்றியடைய நினைக்கும் கொடுமையான நாவல்கள்/ எழுத்தாளர்களைவிட பல மடங்கு இந்த நாவல் மேலானது.
இந்த நாவலிலும் ஒரு பழங்கால ரகசியம், அதனால் ஏற்படக் கூடிய பேரழிவு, மற்றவர்களை முந்தி ரகசியத்தைக் கண்டுபிடித்து அழிவைத் தடுக்க வேண்டுமென்ற தேடல், எல்லாம் இருந்தாலும் அவற்றை எப்படி நாவலுக்குள் பொருத்துகிறார் என்பதில்தான் வித்தியாசம் உள்ளது. நாவலின் முக்கிய முடிச்சு குறித்த தகவல்கள் அதன் முதல் பகுதியிலேயே கொடுக்கப்பட்டு, பிறகு அதற்கான தேடலாக நாவலின் மற்ற பகுதிகள் உள்ளன. லோனார் ஏரி, பிரமிட், 6174 எண் என விரியும் கதைக் களத்தில், அறிவியல் உண்மைகளை, இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தரவுகளை ஓரளவுக்குப் பொருத்தி அதன் மேல் கதைக்குத் தேவையான தன் கற்பனையை அமைக்கிறார். ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, புனைவில் ஆசிரியர் செய்ய வேண்டிய யூகத்தை (‘leap into the dark’) அதற்கான நியாயத்துடன் (justification) தர முயல்கிறார்.
ஆனால் இது புனைவுதான் என்பதை மறந்து விடக் கூடாது. சில இடங்களில் ஆசிரியர் தன் அனுமானங்களைச் சொல்ல தெரிந்த தகவல்களை வளைக்கலாம். நாவலில் ஒரு இடத்தில் Blavatsky சொன்னதாக ஒரு தகவலைச் சொல்லி, தன் பக்கத்தை ஒருவர் நிறுவ முயல்கிறார். Blavatskyஇன் நம்பகத்தன்மை பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, அவரின் கூற்றுக்களை நிறுவப்பட்ட சான்றுகளாக கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. எனினும் இது புனைவென்பதால் வாசகரும் இவற்றை ஆசிரியரின் artistic license என்று எடுத்துக் கொண்டு ஓரளவுக்கு ‘suspension of disbelief’உடன் இருப்பது நல்லது.
லோனாரில் கோயிலின் அடியில் உள்ள சுரங்கத்துள் செல்லும் இடம், பழந்தமிழ் பாடல்களில் உள்ள துப்புகளைக் கண்டுபிடிக்கும் விதம் என நாவலில் பல இடங்களில் பரபரப்பிற்கும் , சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை (பாடல்களில் உள்ள விஷயங்களை decode செய்யும் இடங்கள், டான் பிரௌனை நினைவூட்டலாம், ஆனால் இந்த trope ழானரின் பொதுக் கூறு, பிரௌனுக்கு முன்பே பல ஆக்கங்களில் உள்ள ஒன்று.) இரு பாத்திரங்கள் ‘நான் லெமூரியன்’ என்று சொல்லும் இடம் வாசகருக்கு சிலிர்ப்பை உண்டாக்கும். போலி துப்புகள் (red herrings) அங்கங்கு தூவப்பட்டு ஆனந்த்/ஜானகி மட்டுமின்றி வாசகரையும் யார் எந்தப் பக்கம் என்று குழப்புகின்றன. வாசகனின் உழைப்பை, கவனத்தை ஒருமுகப்படுத்திப் படிப்பதை கோரும் நாவல் இது. அசட்டையாக இருந்தால் எளிதில் சில விஷயங்கள் நழுவி பிறகு நம்மை குழப்பலாம். உதாரணமாக நாவலின் ஆரம்பத்தில் சம்பவங்கள் நேர்கோட்டில் இல்லாமல், முன் பின்னாகவும், சில நேரம் இரு வேறு இடங்களில் ஒரு நேரத்தில் (parallel events) நடப்பவையாகவும் உள்ளதால், என்ன, எங்கே நடக்கிறது என்பதைக் கூர்ந்து படிக்க வேண்டும்.
ழானர் பிக்க்ஷன் என்பதால் பொது இலக்கியத்தில் உள்ளது போல், ஆழமான பாத்திர வார்ப்பு, உரைநடையில் நுண்ணிய கவனம் போன்றவை அந்த அளவுக்கு முக்கியமில்லை. இவை கதையின் இழையை நோக்கி நாவலை நகர்த்த உதவுபவை மட்டுமே, அந்தளவிற்கே அதன் பயன்பாடும் இருக்கும். ஆனாலும் இந்த நாவலில் சில நெருடல்கள் உள்ளன. லெமுரியர்கள் ஏன் பூமியை விட்டகன்றார்கள், அவர்களின் அம்சம் இன்னும் கொஞ்சமேனும் பூமியில் உள்ளதா, சக்தி பீடத்தை தேடும் கும்பல்கள் யாரால் செலுத்தப்படுபவை போன்றவை தெளிவாக்கப்படவில்லை. சில விஷயங்களை பூடகமாக விட்டுவிடுவதென்பது ஒன்று, பக்க நெருக்கடியாலோ, நாவலை முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தாலோ விட்டுவிடுவதென்பது வேறு. ஆனால் இதைச் சரி செய்யவும் ஒரு வாய்ப்புள்ளது, அதை இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்.
ஒருவரை ஒருவர் சகிக்க முடியாத இருவர், கூட்டணி அமைக்க வேண்டிய சூழ்நிலையில் ஏற்படும் சங்கடங்கள்/ சச்சரவுகள், தங்கள் வேறுபாடுகளை முற்றிலும் நீக்காவிட்டாலும் கதையின் போக்கில் ஒருவரை ஒருவர் கொஞ்சம் கனிவாக பார்க்க ஆரம்பிப்பது என்பது பல நாவல்கள்/ திரைப்படங்களில் உள்ள trope. இதை இந்த நாவலிலும் காண்கிறோம். ஆனந்த்/ ஜானகி இருவரும் நாவலில் முதலில் சந்தித்த பின், ஒருவரிடம் ஒருவர் கசப்புடன் இருக்கிறார்கள், அதற்கு அவர்களின் கடந்த காலத்தில் ஒரு காரணம் இருக்கலாம் என்று பூடகமாகச் சொல்லப்படுகிறது. பின் ஆனந்த்/ ஜானகி இருவருக்குமே தாங்கள் ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று பிறகு தெரிய வருகிறது. அதன் பின்னும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் அவ்வப்போது கசப்போடு பேசிக் கொள்வதெல்லாம் இந்த trope யை கதைக்குள் வலிந்து திணிக்கச் செய்யும் முயற்சியாகவே உள்ளது.
பாத்திரங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே தமிழில் மாற்றும் இடங்கள் நெருடலாக உள்ளன. ஒரு இடத்திற்குச் செல்ல மாட்டு வண்டி மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், ஜானகி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் ‘மறந்துரு’ என்று சொல்கிறார். ‘Forget it’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது அப்படியே மொழி பெயர்க்கப்பட்டு ஒட்டாமல் உள்ளது. அதை ஆங்கிலத்திலே விட்டிருக்கலாம். இன்னொரு இடத்தில் ஒரு பாத்திரம் கேள்வி கேட்டு, ‘ஆம், இல்லை’ என்று அந்த உரையாடலை முடிக்கிறது. ‘Yes or No’ என்று ஒரு கேள்வியை ஆங்கிலத்தில் முடிப்பது அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இவை பெரிய குறைகள் இல்லை என்றாலும், நாவல் இந்த ழானரில் அடைந்திருக்கக்கூடிய உச்சபட்ச சாத்தியக் கூறுகளை அடைய விடாமல் தடுக்கின்றன. ஆனால் நாவலின் முடிவு ஒரு sequel (அல்லது series) ஆகத் தொடரும்படி உள்ளது. இந்த நாவலில் ஆசிரியரின் உழைப்பையும், சிரத்தையையும் பார்க்கும்போது, அப்படி அடுத்த பகுதிகள் வந்தால், இதில் விடை சொல்லப்படாத கேள்விகளுக்கான விடைகளையும், பாத்திர வார்ப்பில், உரைநடையில் இன்னும் செறிவையும் நாம் எதிர்ப்பார்க்கலாம்.
தமிழில் இந்த மாதிரி நாவல் வந்ததில்லை என்று இதைப் பற்றிய குறிப்புக்களில் படிக்க முடிகிறது (நானும் குறிப்பிட்டுள்ளேன்). அது உண்மையே என்றாலும், ஒரு விதத்தில் இதன் முக்கியத்துவத்தை குறைக்கவும் செய்கிறது. தமிழ் என்றில்லை, இந்திய ஆங்கிலம் மற்றும் மேற்கில் இந்த வகைமையில் வரும் பல குப்பைகளின் மத்தியில் இது குறிப்பிடத்தகுந்த நாவலே.
இந்த ழானரில்/அதைச் சார்ந்து மேற்கில் வந்துள்ள சில குறிப்பிடத்தக்க நாவல்கள் கீழே. இவற்றின் பொதுக் கூறு, இந்த ழானரின் தனித்தன்மையை இழக்காமல், பொதுப் இலக்கியத்திற்கும் இந்த வகைமைக்கும் இடையே உள்ள எல்லைகளை நெகிழச் செய்ய முயல்வதே.
என் வாசிப்பை வைத்தே இவற்றை கொடுத்திருப்பதால் சில விடுபடல்கள் கண்டிப்பாக இருக்கும். கடந்த 4-5 ஆண்டுகளாக இந்த வகைமையில் அதிகம் படிக்காததால் சமீபத்திய நாவல்கள் இருக்காது. மேலும் பொதுவாகவே மேற்கில் இந்த ழானர் தன் உச்சத்தை அடைந்து இப்போது plateau ஆனது போல் உள்ளது. இந்திய ஆங்கில/ தமிழில்/ பிற மொழிகளில் இனி இந்த வகைமையில் நாவல்கள் அதிகம் வரும் போல் தோன்றுகிறது, குறிப்பாக இந்திய ஆங்கிலத்தில்.
‘The Secret Supper’ – Javier Sierra. டா வின்சி கோட் நாவலின் களம் போலவே தோன்றினாலும், இன்னும் புத்திசாலித்தனமான, erudite ஆக்கம்.
‘The Rule Of Four’ – Ian Caldwell and Dustin Thomason என்று இருவர் இணைந்து எழுதியது. ‘Hypnerotomachia Poliphili’ என்ற உண்மை புத்தகத்தை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள ரகசியங்கள் என்று செல்லும் இந்த நாவலை ‘Bildungsroman’ வகை நாவலாகவும் வகைப்படுத்தலாம். இந்த இருவரில் Dustin Thomason 12.21 என்ற நாவலை தனியே எழுதினார். ‘The Rule Of Four’ போல் தனித்துவ கூறுகளோ, இறுக்கமான கட்டமைப்போ, சுவாரஸ்யமோ இல்லாமல் ஒரு assembly line product போல் இந்த நாவல் இருப்பது ஏமாற்றமே.
The Historian – Elizabeth Kostova – இதை ancient conspiracy theory என்று சொல்ல முடியாது. ஆனால் பழங்காலத் தொன்மமொன்றை (Dracula) நிகழ் காலத்துடன் இணைத்து ஒரு மர்மப் புனைவை தந்துள்ளதால் இதைச் சேர்த்துள்ளேன்.
The Dante Club – Matthew Pearl – அமெரிக்க உள்நாட்டுப் போரின் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். Danteyin ‘Divine Comedy’யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் ‘Longfellow’ போன்ற நிஜ மனிதர்கள் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். Divine Comedy நூலுக்கும், நாவலில் நடக்கும் சம்பவங்களுக்கும் உள்ள ஒற்றுமை நாவலின் முக்கிய இழை. கறாராகப் பார்த்தால் இந்த நாவலையும் இந்த ழானரில் சேர்க்க முடியாது. எனினும் ஒரு புத்தகம், அதிலுள்ள வரிகளை decode செய்வது என்று செல்வதால், இதன் கூறுகள் கொஞ்சம் உள்ளன.
Labyrinth – Kate Mosse. வாட்டிகனால் அழித்தொழிக்கப்பட்ட ‘Cathar’ என்ற குழுவினர், அவர்களிடம் இருந்த ரகசியம் என்று விரியும் நாவல். இதன் வெற்றிக்குப் பிறகு அடுத்த நாவல்களை இதைப் பிரதி எடுப்பது போல் இவர் எழுதுவது ஒரு சோகம்.