Wednesday, April 18, 2012

கோலின் டெக்ஸ்டர் - ‘இன்ஸ்பெக்டர் மோர்ஸ்’



சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை. 
சொல்வனத்தில் படிக்க  http://solvanam.com/?p=19543

--------------------
இந்தக் கட்டுரை வரிசையில், சென்ற இதழில் வெளியான கட்டுரையில் நாம் பார்த்த இறுக்கமான குற்றப்புனைவுத் தொடரிலிருந்து மாறுபட்டவை, கோலின் டெக்ஸ்டர் (Colin Dexter) என்பவர் எழுதிய ‘இன்ஸ்பெக்டர் மோர்ஸ்’ (Inspector Morse) தொடர் நாவல்கள். சற்றே ஆசுவாசமளிக்க கூடிய, அதே நேரம் தரமான, அழுத்தமான தொடர் நாவல்கள் இவை.
உலகெங்கிலும் சிறு வயதினர் வாண்டுமாமாவின் கதைகள் போன்ற சாகச/மர்மக் கதைகளான காமிக்ஸ், ஹார்டி பாய்ஸ் (Hardy boys), ஃபேமஸ் பைவ் (Famous five) எனப்படும் புத்தகங்களைப் படித்தபின் குற்றப்புனைவுகளில் நுழையும்போது அவர்கள் முதலில் படிக்கும் புத்தகங்கள் ‘யார் செய்தது அது’ (who dunnit) வகையாகத்தான் அதிகம் இருக்கும். அகதா கிரிஸ்டி, ஆர்தர் கோனன் டொயல் என ஆரம்பித்து இந்த வகைமையில்தான் அதிகம் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் உள்ளனர். குற்றப்புனைவுகளைப் படிக்காதவர்களுக்குக் கூட தெரிந்திருக்கக் கூடிய பெயர்கள் இவை. குற்றப்புனைவுகளின் ஆரம்பம் என்பதே இந்த வகையில்தான் இருக்கிறது. இதில் குற்றத்தின், குற்றவாளியின் உளவியல் பற்றியோ, கதைப் புலத்துக்கு அவசியமான வேறு சமூக அவதானிப்போ அதிகம் இருக்காது. வாசகர் குற்றத்தில் இருந்து விலகிய மனநிலையில் (emotional detachment) இருந்துதான் இந்த வகை நாவல்களைப் படிக்கிறார். நாவலில் நடக்கும் குற்றங்களால் அவர் அதிகம் பாதிப்படைவதில்லை. இந்த நாவல்களின் முக்கிய அம்சம், ஒரு புதிரை உருவாக்கி அதை இறுதியில் அவிழ்ப்பது.
இந்த நாவல்கள் படிக்கும் பலர் தங்களை அறியாமல் மனதளவில், நாவலில் துப்பறிகிறவருடன் தாமும் சேர்ந்து (அல்லது போட்டியாகக் கூட என்று எண்ணலாம்) குற்றவாளியைக் கண்டு பிடிக்கக் களத்தில் இறங்குகின்றனர். நாவலின் இறுதிக்கு முன் இவர்தான் குற்றவாளி என்று முடிவு செய்து அது சரியாக இருந்தால், அவர்களே துப்பறிந்தது போல் மகிழ்கின்றனர். ஒரு ஊடாடு (interactive) புதிர் விளையாட்டு போன்றவைதான் இவ்வகைக் கதைகள், அதுவே இவற்றின் நீடித்த புகழுக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம். கோலின் டெக்ஸ்டரின் நாவல்கள் இந்த வகையில் வந்தாலும், அதிலிருந்து சில மாறுபட்ட குணங்கள் கொண்டவை.
குற்றப்புனைவு நாவல்களுக்காகப் பல விருதுகளும், உலகெங்கும் ஏராளமான வாசகர்களையும் பெற்றிருக்கும் கோலின் டெக்ஸ்டர் தன்னுடைய 43-ஆவது வயதில் எழுத ஆரம்பித்ததே சுவாரசியமான ஒரு தற்செயல் நிகழ்வுதான். தன் வாழ்வில் கோலின் டெக்ஸ்டர் ஒரு பேராசிரியர். இங்கிலாந்தில் பிறந்த அவர், கேம்ப்ரிட்ஜில் உள்ள கிரைஸ்ட் கல்லூரியில் (Christ College)  செவ்விலக்கியங்களில் (Classics) தேர்ச்சி பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்தார். காது கேட்பதில் கோளாறு ஏற்பட்டதால் 1966-இல் அப்பணியிலிருந்து ஒய்வு பெற்று கல்வித் துறையிலேயே காரியதரிசியாக, ஓய்வு பெறும் வரை பணி புரிந்தார். 1973ஆம் ஆண்டில், குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது, மழை காரணமாக எங்கேயும் வெளியே செல்லமுடியாமல், விடுதியிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது பொழுதைப் போக்குவதற்காக, கோலின் டெக்ஸ்டர் எழுத ஆரம்பித்ததுதான் அவருடைய முதல் நாவல். “நாங்கள் ஒரு சிறு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தோம். அது ஒரு சனிக்கிழமை, மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. வெளியே செல்லமுடியாமல் போய்விட்டதே என்று என் பிள்ளைகள் புலம்பிக்கொண்டிருந்தார்கள். நான் செய்வதற்கு ஒரு வேலையுமில்லாமல் உணவுமேஜையில் உட்கார்ந்திருந்தேன். அப்போதுதான் ஒரு துப்பறியும் நாவலுக்கான ஆரம்பப் பத்திகளை எழுத ஆரம்பித்தேன்,” என்று சொல்கிறார் கோலின் டெக்ஸ்டர். அந்த நாவலின் பெயர், ’லாஸ்ட் பஸ் டு உட்ஸ்டாக் ’(Last Bus to Woodstock). மேரி ஷெல்லி என்ற எழுத்தாளரும், தன் ‘Frankenstein’ நாவலை இப்படிப்பட்ட ஒரு மழை காலத்தில், உள்ளேயே அடைபட்டுக் கிடந்ததால், நண்பர்களிடையே ஒரு விளையாட்டு போல் எழுத நேர்ந்ததாக குறிப்பிடுகிறார்.
மொத்தம் பதிமூன்று நாவல்களும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் எழுதி உள்ளார்.இதில் இரண்டு நாவல்களுக்கு குற்றப் புனைவெழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிக் கத்திப் பரிசும் (CWA Silver Dagger), இரண்டு நாவல்களுக்கு அதே சங்கத்தின் தங்கக் கத்திப் பரிசும் (CWA Gold Dagger) பெற்றுள்ளார்.  இது தவிர, சங்கத்தின் வைரக் கத்திப் பரிசை (CWA Diamond Dagger) வாழ்நாள் சாதனையாளர் விருதாகப் பெற்றுள்ளார்.
டெக்ஸ்டர் குறுக்கெழுத்து போட்டிகளில் பங்கேற்பதிலும், அப்புதிர்களை உருவாக்குவதிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஜெரிமி மோர்ஸ் (Sir Jeremy Morse) என்பவரின் குறுக்கெழுத்துப் புதிர்களென்றால் கோலின் டெக்ஸ்டருக்கு மிகவும் பிடிக்கும்.  1975-ஆம் ஆண்டில் வெளியாகிய அந்த முதல் நாவலின், முக்கியமான கதாபாத்திரம் - இன்ஸ்பெக்டர் மோர்ஸ். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ஜெரெமி மோர்ஸின் பாதிப்பில் உருவானதுதான். குறுக்கெழுத்தில் இன்னொரு வல்லவரான திருமதி.டோரொத்தி டைலர் (Mrs.Dorothy Tailor) என்பவரின் புனைபெயரான லூவிஸ் (Lewis) என்பதை இன்னொரு பாத்திரத்திற்கு வைத்தார். கோலின் டெக்ஸ்டரின் பல நாவல்களில், நாவல்களுக்கு நடு நடுவே குறுக்கெழுத்துப் புதிர்களும், வேறு வகையான புதிர்களும் இடம்பெறும். அவற்றில் சிலவற்றை ஜெரெமி மோர்ஸே ‘Esrom’ என்ற புனைபெயரில் (Morse என்பதன் பின்னோக்கிய வடிவம்) எழுதியுள்ளார். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தரப்பட்டிருப்பது போன்ற புதிர்களும் கோலின் டெக்ஸ்டரின் புனைவுகளில் நிறைய இடம்பெறும்; முக்கிய இழைக்குச் சம்பந்தமில்லாத சில சுவாரஸ்யமான சங்கதிகள் தொடர்ந்து வரும். மோர்ஸ் செவ்வியல் (classics) படித்தவர், அதை அதிகமாக வெளிக் காட்டுபவர். அவர் படிக்கும் கடிதத்திலோ, குறிப்பிலோ, நாளிதழிலோ தென்படும் சிறு எழுத்து, இலக்கண, வாக்கியப் பிழைகளைக் கவனித்துக்கொண்டே இருப்பார். என்ன பிழை உள்ளது என்று சில சமயம் குறிப்பிடுவார், சில நேரம் தவறு உள்ளது என்று மட்டும் சொல்லி விட்டுவிடுவார். வாசகன் மண்டை காய்ந்து என்ன தவறு உள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். பிழைகளும் நுணுகி ஆராய்ந்தால்தான் தென்படும் என்றளவுக்கு இருக்கும்.
கோலின் டெக்ஸ்டர் எழுதியிருக்கும் ஒரு குற்றப்புனைவில் கீழுள்ள பத்தியில் ஒரே வார்த்தையில் மூன்று பிழைகள் இருப்பதாகக் கூறுகிறார். கதையில் இது இசைக்கலைஞர் வாக்னரின் (Wagner) விசிறி எழுதுவதாகச் சொல்லப்பட்டிருப்பது ஒரு முக்கியமான தடயம். கூகிளில் தேடாமல் விடையைக் கண்டுபிடிக்க முயற்சியுங்கள்:
Sorry about the inconvenience - very sorry indeed. I just had to have a car and your’s was there. Its had a shampoo and I filled the petrol tank - unleaded, like it says in the handbook. Your little car saved my bacon, that’s the truth, and I’m grateful. Please then do me the honour of accepting the enclosed ticket. I know you enjoy opera. I wasn’t sure what performance to choose but Wagner is king for me, and in my opinion ‘Die Valkuire’ is the greatest thing he ever wrote. Enjoy your evening, and thanks again.
சில இடங்களில் கோலின் டெக்ஸ்டரே கதையிலிருந்து விலகி நம்மிடம் பேசுவார். கதையின் போகிற போக்கில் தீர்வு சொல்லப்படாத குறுக்கெழுத்துப் புதிர்களை விட்டுச் செல்வார்.
ஒரு உதாரணம்:
When, eleven minutes later, he filled in the four blanks left, in _E_S_I_, he knew he should have been quicker in solving that final clue: ‘Gerry-built semi’- is beginning to collapse in such an upheaval
குற்றப்புனைவுகள், துப்பறியும் கதைகள் - கொலை, மர்மம், ரத்தம் இவற்றால் நிரம்பியிருக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் சுவாரசியமான விஷயங்கள் இவை. இப்படி சற்று அசந்தாலும் மையக்கதையிலிருந்து நம்மை திசை திருப்பக்கூடிய விஷயங்களை நாவல் முழுதும் வைத்திருக்கிறார் கோலின் டெக்ஸ்டர்.
கோலின் டெக்ஸ்டர் கதையை நகர்த்திக்கொண்டு போவதும், குற்றத்தின் மர்மத்தை அவிழ்ப்பதும் கிட்டத்தட்ட ஒரு புதிரைத் தீர்ப்பது போலவே செய்கிறார். இப்படிச் சொல்வது குரூரமாகத் தோன்றக் கூடும். குற்றப்புனைவுகளில் இதுவரை இவரின் படைப்புக்கள்தான் மிகச்சிறந்த வாசிப்பு இன்பத்தை எனக்குத் தந்துள்ளன. குற்றத்தைச் சிறுமைப்படுத்தாத, எளிமைப்படுத்தாத, சுறுசுறுப்பான (crisp) உரைநடை, விசாரிப்பவர்களும் தவறு செய்யும் சூழ்நிலைகள், தர்க்கரீதியான திருப்பங்கள் கொண்ட கதைப்போக்கு இவை கோலின் டெக்ஸ்டரின் நாவல்களின் சிறப்பம்சம். சற்றே அயர்ந்தாலும் கதையின் போக்கை நாம் தவற விட்டு, முடிவு எப்படி எட்டியது என்று நமக்கு புரியாமல் போகக்கூடும். எனவே கவனமான வாசிப்பு தேவை.
இன்ஸ்பெக்டர் மோர்ஸ் நாவல்களின் உள்ளடக்கத்தை நம் வசதிக்காக மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பகுதியில் - பாத்திரங்களின் அறிமுகம், குற்றம் செய்வதைப் பற்றிய திட்டம் தீட்டப்படுவது. இதில் குற்றம் நிகழ்வது அதிகம் விவரிக்கப்படுவதில்லை. அதிக ரத்த விரயம் கிடையாது. திட்டம் தீட்டப்பட்டதன் அடுத்த கட்டமாக உடல் கண்டுபிடிக்கப்படுவது நடக்கிறது.
இரண்டாவது பகுதியில் இன்ஸ்பெக்டர் மோர்ஸ் விசாரணையை ஆரம்பிக்கிறார். அவருக்குப் பொதுவாகப் பேணப்படும் போலீஸ் நடைமுறைகள் மீது அதிக நம்பிக்கை இல்லை. தன் எண்ணப்படி மரபுவழியல்லாத முறைகளில் (unorthodox) ஓட ஆரம்பித்து விடுவார்.
“…. those aspects of detective work that Morse disliked the most: admin, organization, procedures -with as yet little opportunity for him to indulge in the things he told himself he did the best:hypotheses, imaginings the occasional leap into the semi-darkness”
மோர்ஸின் செயல்பாடுகள், எந்தத் தர்க்கமும் இல்லாமல் உள்ளுணர்வு மட்டும் சார்ந்தன என்று சொல்ல முடியாது. மோர்ஸுக்கென்று சில திட்ட வட்டமான எண்ணங்கள் உண்டு, பைத்தியக்காரத்தனம் என்று நமக்குத் தோன்றும் அவருடைய நடைமுறைகளுக்குப் பின்னால் ஒரு முறையான செயல்பாடு இருக்கும். அவை சார்ந்தே அவரின் செயல்பாடுகள் அமையும். உதாரணமாக,
’உடலைக் கண்டு பிடிக்கும் நபரே நாம் முதலில் சந்தேகிக்கும் நபராக இருப்பார். அது எப்போதுமே என்னுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. இந்தக் கொலைகாரர்களுக்கு இருக்கும் மன உளைச்சல் அது- தங்களது பலியாள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்பது.’[1]
இதனால் அவருக்கு சிறந்த அறிவாற்றல் இருந்தாலும், இலக்கு சரியாக இருந்தாலும், மற்றவரை விட வழக்கின் சூட்சுமம் தெரிந்திருந்தாலும் தன் உறுதியான முன்தீர்மானங்களால் மிகத்தவறான பாதையில் செல்வதும் நடக்கும். ‘த வே த்ரூ த உட்ஸ்’ (The Way Through the Woods) நாவலில் வரும் ஒரு வரி இதை சுட்டுகின்றது.
”முன்னாளில் அடிக்கடி மோர்ஸ் மற்றவரை விட ஆறு ஏழு ஃபர்லாங் தூரம் முன்னால் இருந்திருப்பார், ஆனால் தப்பான (ஓட்டப்) பாதையில் தான் இருப்பதைப் பின்னாடிதான் கண்டுபிடிப்பார்.”[2]
மோர்ஸ் தடம்மாறிச் செல்லுவது குறித்த இந்த சித்திரிப்பு, இவ்வகைப் புனைவுகளின் பொது அம்சத்திலிருந்து மாறுபட்டது. ஷெர்லாக் ஹோம்ஸோ, அகதா க்ரிஸ்ட்டியின் பாய்ரோவோ (Poirot) விசாரணையில் தவறான பாதையில் செல்வது மிக அரிது. மோர்ஸின் இலக்கு சரியாக இருந்திருக்கும், பாதைதான் தவறாகப் போயிருக்கும். தன் பாதை தவறென்று புரிந்தவுடன், அசராமல் அடுத்த பாதையில் தன் ஓட்டத்தை ஆரம்பிப்பார். இந்த இரண்டாம் பகுதியில் சாட்சியங்கள் விசாரணை, தடயங்கள் சேகரித்தல் எல்லாம் மோர்ஸின் அப்போதையை எண்ணப்படி நடக்கும்.
மூன்றாம் பகுதியில் இவை அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைக்க, மோர்ஸுக்கு ஒரு பொறி தட்ட, குற்றவாளி கண்டுபிடிக்கப்படுகிறார். இவ்வகைப் புனைவுகளில் சிலவற்றில் வருவது போல், அனைவரையும் ஓரிடத்தில் கூட்டி, ஒவ்வொருவராக சந்தேகத்திலிருந்து நீக்கி, இறுதியில் குற்றவாளியைச் சுட்டுவது, அதை அவர் ஒப்புக்கொள்வது எல்லாம் கிடையாது. தகுந்த சான்றுகளைச் சேகரித்து குற்றவாளியை எதிர்கொண்டு கைது செய்கின்றார்கள். சில நேரம் மோர்ஸே எதிர்பார்க்காத வகையில் வழக்கு முடியும்.
தொடரின் முக்கிய அம்சங்களாக கதாபாத்திரங்கள் உண்மையை மறைத்தல் (dissembling), வாசகருக்கு மட்டும் தெரிந்த உண்மை (open suspense), போலித் தடயங்கள் (red herrings) ஆகியவற்றைக் கூறலாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். உதாரணமாக மோர்ஸ் ஒருவரை விசாரிக்கிறார். அது முடிந்தவுடன் அந்த பாத்திரம் மனதிற்குள், ‘இந்த இன்ஸ்பெக்டர் முட்டாள், கண்டுபிடிக்கவில்லை,’ என்றோ அல்லது ‘மனதிற்குள் சிரித்தார்/பெருமூச்சு விட்டார்,’ என்றோ நினைப்பதாக வரும். அப்பாத்திரங்கள் பொய் சொன்னார்கள் என்று கூற முடியாது, முழு உண்மையைச் சொல்லவில்லை (dissembling) என்று வேண்டுமானால் கூறலாம்.  படிக்கும் நமக்கு இது தெரியும் (open suspense), ஆனால் மோர்ஸ் இதை அறிய மாட்டார். மேலும் அவர்கள் மறைக்க நினைக்கும் விஷயம் எப்படிப்பட்டது, அது விசாரணைக்குச் சம்பந்தம் உள்ளதா(red herring), அவர்கள்தான் குற்றவாளியா என்று வேறு தெரிய வேண்டுமே.
அவர்கள் மறைப்பது -
1. குற்றத்தில் அவர்களுக்குப் பங்கு இருக்கலாம். அவர்களே குற்றவாளியாகக் கூட இருக்கலாம்.
2. குற்றம் செய்தவரை பற்றி அறிந்திருந்து அதை மறைக்க நினைக்கலாம்.
3. இரண்டும் இல்லாமல், குற்றம் சம்பந்தப்பட்ட விஷயமில்லாமல், வேறொன்றை அவர்கள் மறைக்க நினைக்கலாம்.
உதாரணமாக ஒரு மணமான ஆண் கொல்லப்பட்டார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மணமான பெண் அது குறித்து விசாரிக்கப்படுகிறார். அவர் அந்த ஆணுடன் உறவு (affair) கொண்டவராக இருக்கலாம், அல்லது கொலை நடந்த நேரத்தில் வேறொரு ஆணுடன் அவர் இருந்திருக்கலாம். விசாரிக்கப்படுபவர் ஆணாக இருந்தால், இறந்தவர் அவர் மனைவியுடன் உறவு வைத்திருந்திருக்கலாம். இந்த நிலையில் இருவரும் தங்கள் மீது தேவையற்ற சந்தேகம் வராமல் இருக்க, சில உண்மைகள் தெரியாமல் இருக்க மறைக்க பார்ப்பார்கள். குற்றத்திற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் இது மோர்ஸையும், படிக்கும் நம்மையும் தவறான யூகங்களுக்கு இட்டுச் செல்லும். இது வெறும் பரபரப்பு உத்தி அல்ல, மனிதர்களின் மனப்போக்கைச் சார்ந்தது. எவ்வளவோ பேர் தன்னைப் பற்றிய சில விஷயங்கள், அது சட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும், வெளியில் தெரிய வேண்டாம் என்று எண்ணக்கூடும். ஒரு நடு வயதுக்கார மணமான ஆண் தன் தன் கணினியை மற்றவர் உபயோகிப்பதை விரும்பாமல் இருக்கலாம். காரணம் அதில் அவர் போர்னோ படங்கள் வைத்திருக்கலாம். இதில் சட்டம் ஒன்றும் செய்ய முடியாதென்றாலும் (குழந்தைகள் சார்ந்ததாக இல்லாமல் இருந்தால்) அவர் இது வெளியே தெரிவதை விரும்பமாட்டார் அல்லவா?
இவையெல்லாம் இன்ஸ்பெக்டர் மோர்ஸ் நாவல்களின் பொதுவான பண்புகள். ’த வெஞ்ச் ஈஸ் டெட்’ (’The Wench is Dead’) என்ற நாவல் இப்பாணியிலிருந்து சற்றே மாறுபட்டது. இதில் மோர்ஸ் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு ஒரு புத்தகம் கிடைக்கிறது. 1850களில் நடந்த ஒரு மரணம், அதற்கான விசாரணை, அதன் முடிவாக இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டது என ஒரு வழக்கைப் பற்றிய புத்தகம் அது. அதை மோர்ஸ் படித்து, சில சந்தேகங்கள் கொண்டு தன் பாணியில் வழக்கைப் பற்றி இன்னும் தகவல் திரட்டி, அதைப் பற்றிய தன் முடிவுக்கு வர நினைக்கிறார். அதாவது இந்த நாவல் ஒரு புதிரை அவிழ்ப்பதைப் பற்றியது அல்ல, மாறாக விடையுள்ள ஒரு புதிரை இன்னொரு கோணத்தில் பார்த்து, இன்னொரு பாதையில் சென்று அதே விடை கிடைக்கிறதா என்று சோதிப்பது. பொதுவாக குற்றங்கள் பற்றிய அனேக நாவல்கள், ஒரு விடை இல்லாத குற்றத்திற்கு நிகழ்காலத்தில் விடை கண்டுபிடிப்பதாக இருக்கும், இந்த நாவல் அந்த வகையிலும் மாறுபட்டது. இந்த நாவல் ‘CWA Gold Dagger’விருதை வென்றது.
இத்தொடரில் சமூகம் சார்ந்த அவதானிப்புகளோ, காலமாற்றம் குறித்த குறிப்புகளோ கிடையாது. 1975-இல் ஆரம்பித்த இத்தொடரை முழுதும் படிக்கும் போது அது நடக்கும் காலகட்டம் குறித்த எந்த வெளிப்படையான குறிப்பும் கிடைப்பதில்லை. ஆக்ஸ்ஃபர்டில் நடக்கும் இக்கதைகள் அந்த நகர் பற்றிய முழுமையான பார்வையை நமக்கு தருவதில்லை. ஆனால் அந்நகரில் உள்ள பல்வேறு உணவும்,மதுவும் விற்கும் சிறுவிடுதிகளையும் (pub), ஒவ்வொன்றிலும் உள்ள சிறப்பு மது வகைகளையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
சுறுசுறுப்பான நடையும், கூர்ந்த வாசிப்பைத் தேவையாக்கும் கதை நுட்பமும்தான் கோலின் டெக்ஸ்டரின் மிகப்பெரிய பலம். உரைநடையின் மெல்லிய அங்கதம் புன்னகையை வரவழைத்துக்கொண்டே இருக்கும். வாய்விட்டு வெடித்துச் சிரிக்கவைக்கும் அங்கதம் அல்ல. அ.முத்துலிங்கம், அசோகமித்திரன் போன்றாரின் எழுத்தில் கிட்டும் அடங்கிய புன்னகை. மேலதிகமாக மோர்ஸ் குறித்த குறிப்புகளிலும், உரையாடல்களிலும் இவை வெளிப்படும். மதிய நேரத்திலும் மதுவருந்தும் மோர்ஸ் குறித்த ஒரு வரியைப் பாருங்கள்:
“He was still working when just over an hour later Morse returned from his lunchtime ration of calories, taken entirely in liquid form.”
தன் எழுத்து முறை பற்றி டெக்ஸ்டர் இவ்வாறு கூறுகின்றார்.
“I’ve never said anything significant about motive. Some very fine writers, Phyllis James or Ruth Rendell - their primary concern is to look into the abyss of human consciousness. Good for them; but not for me. For me, it’s the twists and turns of the whodunnit.”
ஹென்னிங் மேன்கெல், இயன் ரேங்கின் போன்றவர்களின் நாவல்களுடன் ஒப்பிட்டால் குற்றவாளிகள் மனநிலை, சமூகக்காரணிகள் பற்றி இந்த நாவல்கள் ஆழமாக பேசவில்லை என்றாலும், சற்று அழுத்தமாகவே பாதிக்கப்படுபவர்கள் மீது அந்த சம்பவம் ஏற்படுத்தும் விளைவுகள் பேசப்படுகின்றன. அந்த வகையில் இந்த வகை ’செய்தது யார்?”(‘whodunnit’) என முடிச்சவிழ்க்கும் நாவல்களில் பொதுவாக இருக்கும் ஒருவித உணர்ச்சிப்பற்றின்மை (emotional detachment) இதில் கிடையாது. சமூகத்தின் மையத்தில் உள்ள, மத்திய/உயர் மத்திய தர வர்க்கமே இந்த நாவலில் வரும் பத்திரங்கள். இதில் வரும் குற்றவாளிகள் நம்மைப் போன்று சாதாரண மனிதர்களே. கணவனாக, மனைவியாக, தாயாக, மகனாக சமூகத்தில் இருப்பவர்கள். பணம், பொருள், நெறி தவறிய உறவு (infidelity) போன்ற நம்பிக்கை மோசடிக் குற்றங்கள் அதிகம் நடப்பதற்கான காரணங்களே நாவல்களிலும் உண்டு. அந்த வகையில் இந்த குற்றவாளிகளுடன் நாம் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். உதாரணமாக, சென்ற கட்டுரையில் நாம் பார்த்த வால் மக்டர்மிட் நாவல்களின் வரும் பத்திரங்கள் மிக அழுத்தமாக படைக்கப்பட்டிருந்தாலும், அவ்வகைக் குற்றவாளிகளை நாம் பொதுவில் காண்பது என்பது அரிதுதான். அவர்களைப் பற்றி நாம் படித்திருக்கலாம், ஆனால் அப்படிப்பட்டவரை எனக்கும் நேரடியாகத் தெரியும் என்று நம்மில் பலரால் சொல்ல முடியாது.
இன்ஸ்பெக்டர் மோர்ஸ் தொடரில் உள்ள சுவையான நகைமுரண் என்னவென்றால் டெக்ஸ்டரின் பாத்திரப்படைப்பே நாவல்களின் மையக்கருவிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பிவிடும். அந்த அளவுக்கு மோர்ஸ் இந்த தொடர் முழுவதும் வியாபித்துள்ளார். மோர்ஸ் எப்படிப்பட்ட ஆசாமி? இதை ஒற்றை வரியில் சொல்ல முடியாது. இன்ஸ்பெக்டர் மோர்ஸ் கதாபாத்திரத்தைப் பெரும்பாலும் தன்னையொத்த விருப்பு வெறுப்புகள், குணநலன்கள் கொண்டவராகவே டெக்ஸ்டர் சித்தரித்திருக்கிறார். டெக்ஸ்டரைப் போலவே மோர்ஸும் க்ளாஸிக்ஸ் படித்தவர், குறுக்கெழுத்து ஆர்வலர், வாக்னரின் இசை, ஏ.ஈ. ஹௌஸ்மானின் (A. E. Housman) கவிதைகள் ஆகிய இரண்டின் மீதும் வெறித்தனமான பற்று உள்ளவர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அதே நேரம் உணர்ச்சிப் பெருக்குள்ள  பிரார்த்தனைப் பாடல்களால் (hymns) நெகிழக்கூடியவர். அவருக்குப் பிடித்த ஒரு பாடலிலிருந்து சில வரிகள்:
“I trace the rainbow through the rain,
And feel the promise is not vain,
That morn shall tearless be.”
பேகன் (Pagan- ’பரமபிதா’ மீது நம்பிக்கையற்று, சந்தோஷங்களைத் துரத்துபவர்) என்று மோர்ஸின் உயர் அதிகாரி ஒருமுறை அவரைப் பற்றி குறிப்பிடுகிறார். இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் அவர் ஒரு தற்பெருமையாளர் (egotist), கஞ்சர், சில நேரங்களில் பணியாற்றுபவர்களுடன் தேவையில்லாமல் கடினமாக நடக்கக்கூடியவர். மதுவையே முழுநேர உணவாக எடுத்துக்கொள்ள தயாராக இருப்பவர்.
“I always drink at lunchtime. It helps my imagination.”
“There’s always time for one more pint.”
“Don’t worry. I’m the only person in Oxford who gets more sober the more he drinks.”
“How do you manage that?”
“Years of practice. I don’t recommend it, though.”
அவருடைய சொந்தப் பெயர் (first-name) யாருக்கும் தெரியாதது, [மோர்ஸ் என்பது குடும்பப் பெயர், அல்லது கடைசிப் பெயர்.] அதை மோர்ஸ் விரும்பாததால் வெளியே சொல்வதில்லை. பின்னர் ஒரு நாவலில் அது தெரிய வருகிறது. இது தொடரின் ஒரு சிறிய சுவையான புதிர். கல்விச் செருக்குடையவர் (pedantic). பேச்சு/எழுத்து என எதிலாவது சிறு தவறு நேர்ந்தாலும் இடம், காலம் பார்க்காமல் சுட்டிக்காட்டி இம்சை செய்வார்.
ஒரு உதாரண உரையாடல்:
“According to who, sir?”
“To whom, Lewis - please”
தொடரின் போக்கில் அவர் இளமைக்காலம் பற்றி சில தகவல்கள் புகைமூட்டமாகத் தெரிய வருகின்றன. கல்லூரியிலிருந்து பாதியில் வெளி வந்தது, அதற்குக் காரணமான காதல் தோல்வி எனச் சில சித்திரங்கள் கிடைக்கின்றன. மோர்ஸ் மத்திம வயதுடையவர், அழகர் என்று சொல்லமுடியாது, ஆனால் பெண்களிடம் வசீகரமாகப் (chivalrous and charming) பழகுவார். பெண்களும் அவரின் நடத்தையால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் தீவிரமாக இருக்கும் உறவு முழுமை அடைவதில்லை, சில நேரங்களில் மோர்ஸை மீறிய காரணத்தால் பாதியில் முடிந்து விடுகின்றன. அந்த பெண்களில் ஒருவர் மிக அரிதாக மோர்சுக்கு கடிதங்கள் அனுப்புவதுண்டு, அது மோர்ஸை சற்றே பாதித்தாலும், அவர் அதற்கு பதிலெல்லாம் அனுப்புவதில்லை. ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று நம்மை டெக்ஸ்டர் யூகிக்க விட்டாலும், கடந்தகால நிகழ்வுகளால் காயப்பட்டு, அது மறுபடி நடக்காமல் இருக்க தன்னைச் சுற்றி போட்ட வேலிதான், அவருடைய பல பழக்கங்கள், குணாதிசயங்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.
colin-dexter-mg-1660
அவரது முரண்பாடுள்ள குணத்தை பார்க்க இரு உதாரணங்கள். ஒரு கதையில் மணமான ஆண், தன் காதலியைச் சந்திக்க ஹோட்டெலுக்கு வந்து மாரடைப்பால் இறக்கிறார். இறந்தவரின் மனைவி இது பற்றித் தெரிந்தால் வருந்துவார் என்று அவரது பர்சில் இருக்கும் காதலியின் புகைப்படத்தை மோர்ஸ் கிழித்தெறிகிறார். இறந்தவர் திரும்புவதற்காக பயணச்சீட்டு எடுத்தது போல் அவரே வாங்கி பர்சில் வைக்கிறார். (அதற்கான தொகையை அலுவலகத்தில் கேட்டு வாங்கிவிடுவார் என்பது வேறு விஷயம்). இவ்வளவு நுண்ணுணர்வு கொண்டவராக சில நேரம் இருக்கும் மோர்ஸ், சில சமயம் அது கொஞ்சம் கூட இல்லாமல் தன் கூட பணியாற்றுபவர்கள் மீது கோபத்தை எல்லோர் முன்னாலும் பொழிவார். (பின்னர் அதற்காக வருந்தவும் செய்வார்). சுருக்கமாகச் சொன்னால் முரண்பாடுகளின் உருவமாகவும், எந்த நேரத்தில் எப்படி இருப்பார், பழகுவார் என்று கணிக்க முடியாத மனநிலை உள்ளவருமான மனிதர். மையக்கதாபாத்திரமான மோர்ஸ் இப்படிப்பட்டதொரு சுவாரஸ்யமான ஆளுமையாக இருப்பதால்தான், இப்புத்தகங்களை உலகெங்கிலும் விரும்பிப் படிப்பவர்கள் இருக்கிறார்கள்.
“A lot of people say, ‘I can’t follow the plot, but I like the relationship between Morse and Lewis.’ In that sense, there is a slightly wider dimension.” என்று சொல்கிறார் டெக்ஸ்டர்.
டெக்ஸ்டர் சொல்வது போல, லேவிசுடன்  மோர்ஸின் உறவு, நட்பு இத்தொடரின் இன்னொரு முக்கியமான அம்சம். இதை அறிவுரையாளர், சிஷ்யர் (mentor/pupil) என்றோ, leading man/sidekick என்றோ சொல்லிவிட முடியாது. லூவிஸ் மோர்ஸின் கீழ் பணிபுரிபவராகவும், மோர்ஸ் விசாரணையில் வழிகாட்டுபவராக இருந்தாலும், அதைத் தாண்டி இருவருக்கிடையே ஆழ்ந்த பாசமும், நட்பும், மரியாதையும் உண்டு. மோர்ஸ் தன் கடுமையான சுபாவத்தாலும், லூவிஸ் தன் தயக்கத்தாலும் ஒருவருக்கொருவர் இந்த உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்வதில்லை. லூவிஸ் மோர்ஸ் பற்றி எண்ணும் போது ‘great man’ என்றுதான் குறிப்பிடுகின்றார். மோர்ஸின் கஞ்சத்தனம் (மதுபான விடுதிக்குச் சென்றால் பெரும்பாலும் லூவிஸ்தான் செலவழிக்க வேண்டும்), திடீரென்று மாறும் மனநிலை, சட்டென்று எடுத்தெறிந்து பேசுவது இவற்றால் லூவிஸ்தான் அதிகம் பாதிக்கப்பட்டாலும், சமயங்களில் கோபப்பட்டாலும் அவருடன் வேலை பார்ப்பதைப் பெருமையாக லூவிஸ் கருதுகிறார். இது ஒருபுறம் இருக்க, மோர்ஸால் தன்னைத் தவிர வேறு யாருடனும் சுமூகமாகப் பணியாற்ற முடியாது என்பதும் லூவிஸுக்கு இன்னொரு பெருமையான விஷயம்.
‘No!’ thundered Morse. ’I need help - your help, Lewis. For Chrissake get on with it.’
Far from any annoyance, Lewis felt a secret contentment. In only one respect was he unequivocally in a class of his own a police officer, he knew that; for there was only one person with whom the curmudgeonly Morse could ever work with any kind of equanimity - and that was himself, Lewis.
அதே போல் மோர்ஸும் லூவிஸ் மீது பாசம் கொண்டவர், லூவிஸின் நட்பு அவருக்கு முக்கியம். மற்ற எவரின் அபிப்பிராயம் பற்றியும் மோர்சுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஒருமுறை அவர் லூவிஸை (வழக்கம் போல்) தேவையில்லாமல் கடிந்து கொண்டு விட, பிறகு அதற்கு மன்னிப்பு கேட்கிறார். லூவிஸ் அதனால் மகிழ்ச்சி அடைகிறார். அதன்பின் மோர்ஸின் மனநிலையை இவ்வாறு சித்திரிக்கிறார் கோலின் டெக்ஸ்டர்:
After Lewis had gone, Morse felt very much in tune with the universe. Lewis had forgiven him, readily; and he felt a contentment which he, just as much as Lewis, could ill define and partly comprehend.
தன் நேசத்திற்குரிய ஆசிரியர் இன்னொரு சிறுவனைப் புகழ்ந்தால் ஏற்படும் சிறு பொறாமை போன்று மற்ற அதிகாரிகளை மோர்ஸே தன் பணிக்குப் பயன்படுத்தினால், அதை லூவிஸ் அவ்வளவாக விரும்புவதில்லை.
‘Good man - Sergeant Dixon - you know,’ said Morse.
Lewis ignored the tribute.
முத்தாய்ப்பாக, இந்த உறவின் சுருக்கக் குறிப்பாக (encapuslation) ஒரு உரையாடலைப் பார்க்கலாம். மோர்ஸ், லூவிஸிடம் தனக்கு தபால்தலைப் புத்தகம் ஒன்று வாங்குமாறு சொல்கிறார். வழக்கம் போல் மோர்ஸ் தன்னிடம் பணம் இல்லை என்கிறார்.
Morse had been pushing his hands one after the other into the pockets of overcoat, jacket, trousers - seemingly without success.
‘You’ll never believe it, Lewis, but…’
‘I think I will sir. Remember what that fellow Diogenes Small wrote about people’s flights of imagination?’
‘You’ve been soaring up there yourself, you mean?’
‘Not quite,no. All I’m saying is it wouldn’t take a detective to see what you are trying to tell me.’
‘Which is?’
‘You haven’t got any money’.
‘Ah.’
Morse looked down silently at the car mat; and Lewis now smiling happily, opened the driving seat door of the Jaguar, and was soon to be seen walking towards the premises of the sub post-office in Kidlington, Oxon.
இந்த உரையாடலில் சித்திரிக்கப்பட்டிருக்கும், மோர்ஸின் கஞ்சத்தனமும், லூவிஸ் அதனால் தான் பணம் இழக்க வேண்டுமென்றாலும், அதை பொருட்படுத்தாததோடு, விரும்புவதும், இத்தொடரைப் படிப்பவர்களுக்கு நன்கு அறிமுகமான காட்சி. பழகுவதற்கு மிகக்கடினமான ஆசாமியை, லூவிஸுக்கு மட்டுமல்ல நமக்கும் (எல்லா நேரங்களிலும் இல்லாவிட்டாலும் பெரும்பாலும்) நேசத்திற்குரியவராய் மாற்றுவதில் உள்ள டெக்ஸ்டரின் திறமைதான், முன்பே சொன்னது போல் சில சமயம் கதையிலிருந்தும் நம் கவனத்தை திருப்பிவிடுகிறது. தொடரைப் படிக்கும் பொது நாமும் நம்மையறியாமல் வாசக லூவிஸ் ஆகிவிடுகிறோம். மோர்ஸ் மீது சில சமயம் எரிச்சல், கோபம் வந்தாலும் அபாரமாக ஓடிக்கொண்டே இருக்கும் அந்த மூளைத்திறனில், அவ்வப்போது தென்படும் அவரின் இளகிய மனதில் நாம் லயித்துவிடுவதையும் தவிர்க்க முடியவில்லை.
இந்த நாவல்கள் தவிர, இன்ஸ்பெக்டர் மோர்ஸ் மையக்கதாபாத்திரமாக இருக்கும் ஒரே சிறுகதைத் தொகுப்பான ‘Morse’s Greatest Mystery and other stories’ (மோர்ஸ் வரும் கதைகள் தவிர இன்னும் சில கதைகள் இதில் உள்ளன) எனக்கு டெக்ஸ்டர் எழுதியவற்றில் அதிகம் ஈர்க்காத ஒரே நூல். கதைகள் தரமாக இல்லை என்பதெல்லாம் காரணம் இல்லை. ஒரு 10-15 பக்க சிறுகதையில் நான் நாவல்கள் மூலம், என் மனதில் எதிர்பார்த்துப் பழகியிருந்த அளவுக்கு மோர்ஸின் இருப்பு (presence) இல்லை. அதனால் முதல் முறை இந்த நூலை பாதியிலேயே விட்டுவிட்டேன். இரண்டாம் வாசிப்பில்தான் படிக்க முடிந்தது. குற்றப்புனைவுகளில் கதாபாத்திரம் என்ற ஒற்றை அளவுகோல் மட்டும் வைத்தால் ஹென்னிங் மான்கெல்லின் கர்ட் வலாண்டர் (Kurt Wallander), இயன் ரேங்கினின் ரீபஸ் (Rebus), டெக்ஸ்டரின் மோர்ஸ் மூவரையும் தான் எனக்கு நெருக்கமானவர்களாக சொல்வேன். இதில் மோர்ஸ் ஒரு rockstar என்றே எண்ணுகிறேன்.
இவரைத் தவிர ‘இன்ஸ்பெக்டர் மோரிஸ்’ தொடர் நாவல்களில், கவனிக்கக் கூடிய தொடர்பாத்திரமாக வருவது, லூவிஸ் (lewis) மட்டும்தான். மோர்ஸின் உயரதிகாரி ஸ்ட்ரேஞ்ச் (Strange), எல்லா நாவல்களின் வந்தாலும் சில இடங்களிலேயே வருவார். மாக்ஸ் (max) என்ற தடய நோயியலாளர் (Forensic Pathologist) சிறிதளவே வந்தாலும் சுவாரசியமானவர். துப்பறியும் துறை அதிகாரிக்குத் தன்னுடன் பணியாற்றுபவர்கள் தவிர, ஒரு நோயியலாளர் கூடத் தானே அதிகம் பழக வேண்டி வரும். ஒவ்வொரு முறையும் மோர்ஸ் கொலை நடந்திருக்கக்கூடிய நேரத்தைக் கேட்க அதை மாக்ஸ், அதை கறாராகக் (accurate) கூற முடியாது என்று சொல்லி, ஒரு தோராயமான நேரத்தைச் சொல்ல, மோர்ஸ் இதனால் எரிச்சலடைவதும் நாவல்களின் தொடர் நிகழ்வு. மாக்ஸ் பற்றி நமக்கு அதிகம் தெரியாவிட்டாலும், ஒரு விதத்தில் அவரை வேறு துறையில் இருக்கும் இன்னொரு மோர்ஸ் என்று கருதலாம்.
இந்த புனைவுத் தொடர், இங்கிலாந்தில் தொலைக்காட்சித் தொடராக, 1987 முதல் 2000 வரை ஒளிபரப்பானது. அந்நாட்டுத் தொலைக்காட்சி வரலாற்றில் பிரபலமான தொடர்களில் ஒன்றாக இருந்தது. நாவல்களும், வேறு புதிய கதைகளும் இதில் உள்ளன. இதில் நடித்த ஜான் தொ (John Thaw) முன்னேரே சில முக்கியத் தொடர்களில் நடித்திருந்தாலும் இதன் மூலம் பிரபலமடைந்தார். தொடருக்காக இரு முறை  பிரிட்டிஷ் அகதமி ஆஃப் ஃபில்ம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸின் (BAFTA) விருதுகள் பெற்றார்.
பொதுவாக, இக்கட்டுரைத் தொடரில் பார்க்கவிருக்கும் பல எழுத்தாளர்களின் படைப்புக்கள் அந்தந்த நாட்டுத் தொலைக்காட்சிகளில் நீண்ட தொடராக வெளியாகியுள்ளன. அதே போல இந்தியாவில், வங்க மொழியில், ஷரதீந்து பந்தோபாத்யாய (Sharadindu Bandyopadhyay-শরদিন্দু বন্দোপাধ্যায়) என்பவரால் எழுதப்பட்ட ப்யொம்கேஷ் பக்‌ஷி (Byomkesh Bakshi) என்ற முக்கிய பாத்திரத்தைக் கொண்ட துப்பறியும் கதைகளை, பள்ளிக் காலத்தில், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பாசு சாட்டர்ஜியின்(http://en.wikipedia.org/wiki/Basu_Chatterjee) இயக்கத்தில் ஹிந்தியில் தூர்தர்ஷன் தொடராகப் பார்த்துள்ளேன். மிகுந்த பாராட்டைப் பெற்ற இந்த தொடரில் ரஜித் கபூர், K.K. ரைனா ஆகிய இருவரும் மிக சிறப்பாக நடித்திருப்பார்கள். (யூட்யூபில் இந்த தொடரின் வீடியோக்கள் இப்போதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன). தொடரின் ஆரம்ப இசையும் பிரபலமான ஒன்று. ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதிய நடிகர்களை வைத்து தொடராக வந்தது.[3]
தமிழில் எனக்குத் தெரிந்து தமிழ்வாணன், ராஜேஷ்குமார், சுஜாதா (கொலையுதிர் காலம், கணேஷ்-வசந்த் தொடர்) ஆகியோரின் ஓரிரு நாவல்கள் தொடராக வந்துள்ளன. அவையும் அதிக நாட்கள் தொடர்ந்ததாக நினைவில்லை, எடுக்கப்பட்ட முறையும் காரணமாக இருக்கலாம் என்றாலும் நமது மெகா தொடர்களே, இப்படி தனித் தன்மை கொண்ட தொடர்கள் எடுக்கப்படாமல் இருக்க முக்கியமான காரணம் என்று சொல்ல வேண்டும். கணேஷ்/வசந்த் போன்ற மிகவும் பிரபலமான, இன்றும் பலருக்கு ஆதர்சமாக இருக்கும் பாத்திரங்களை வைத்து சரியாக ஒரு தொலைக்காட்சித் தொடரைத் தமிழில் உருவாக்கியிருந்தால் அற்புதமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
நீங்கள் குற்றப் புனைவின் ரசிகரா, அல்லது அதில் நுழைய எண்ணி, கொலை, ரத்தம் என்றிருக்குமே எனத் தயங்கி நிற்பவரா, அல்லது காவல்துறை விசாரணை (police procedural), whodunnit போன்றவற்றைப் படித்து இருந்தாலும் ஒரு மாற்றம் தேடுபவரா, யாராக இருப்பினும், அனைவரும் படிக்கக்கூடிய ஒரு தொடர்தான் இது. படித்துப் பாருங்கள், புரிந்துகொள்ளமுடியாத இந்த ஆசாமி உங்களையும் ஈர்த்துவிடுவார்.
தொடரைப் படிப்பவர்கள், அனைத்தையும் வெளிவந்த வரிசையில் படிக்கமுடியாவிட்டாலும், முதல் இரண்டு நாவல்களையும் (’Last Bus To Woodstock’, ‘Last Seen Wearing’) இறுதி நாவலையும் (’The Remorseful Day’) மட்டும் வரிசையில் படிப்பது நலம். நாவல்களின் சம்பவங்கள் தொடர்புடையவை இல்லையென்றாலும் இப்படிப் படிப்பது சரியான தொடக்கம், முடிவைத்தரும் என்று நினைக்கின்றேன்.
(தொடரும்)
________________________________________________
பின்குறிப்புகள்:
1. இன்ஸ்பெக்டர் மோர்ஸின் சொற்கள் இவை:
“The person who finds the body is going to be your prime suspect. That’s always been my philosophy. It’s compulsive with these murderers - they want their victim found.”
2. “Often in the past Morse had similarly been six or so furlongs ahead of the field only later to find himself running on the wrong racecourse.”
3. 1967 இல் சத்யஜித் ராய் ப்யோம்கேஷ் பக்‌ஷியைக் கொண்ட ஒரு கதையைப் படமாக எடுத்தார். ’சிரியாகானா’ (மிருகக் காட்சி சாலை) என்ற பெயர் கொண்ட படம் அது. உத்தம் குமார் மையப் பாத்திரமாக நடித்தார். திரைக்கதையை இந்த தொடர் கதைகளை எழுதிய ஷரதீந்து பந்தோபாத்யாயவே எழுதி இருந்தார்.

Tuesday, April 3, 2012

வால் மக்டர்மிட் - மரபை உடைத்த பெண்குரல்


சொல்வனம் இதழில் நான் எழுதும் குற்றபுனைவுகள் பற்றிய தொடரின் இரண்டாம்  கட்டுரை. நன்றி solvanam.com.  கட்டுரையை படிக்க  http://solvanam.com/?p=19301
--------
தீவிரமான குற்றப்புனைவுகளைப் பெண்கள் எழுத முடியுமா? தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ குற்றப்புனைவுகள், புலனாய்வுக்கதைகள் பெண்களால் எழுதப்படுகின்றனவா?
இரண்டாம் கேள்விக்கு பதில் தேடுவது அத்தனை சிரமமான விஷயம் இல்லை. தார்வாடைச் சேர்ந்த ஷஷி தேஷ்பாண்டே (Shashi Deshpande) ஆங்கிலத்தில் எழுதுகிறார். தமிழில் ‘இந்துமதி’ குற்றப்புனைவு சார்ந்து சில படைப்புகளை எழுதி உள்ளார். (மிகப்பழைய குமுதம் இதழ்களின் பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்.) ஆனால், உலகளவில் பல குற்றப்புனைவுகளோடு அறிமுகம் இல்லாத வாசகர்கள், முதல் கேள்விக்கு அவ்வளவு உறுதியாகப் பதில் சொல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். பெண்கள் இவ்வகைப் புனைவில் (genre) அதிகம் ஆர்வம் இல்லாதவர்கள் என்ற எண்ணம் நம் வாசகர்களிடையே பொதுவாக உள்ளது.
ஆனால், உலகெங்கும் நன்கு அறியப்பட்ட அகதா க்ரிஸ்டி, நயோ மார்ஷ் (ngaio marsh) ஆகியோரில் துவங்கி, தன் கணவர் பெர் வாலுவோடு இணைந்து ஐரோப்பாவின் குற்றப்புனைவுகளின் எழுச்சிக்கு வித்திட்ட மய் ஷ்யோவால் (Maj Sjöwall), இன்று பிரபலமாக இருக்கும் கேரின் ஃபோஸம் (Karin Fossum), காரின் ஆல்வ்டியேகென் (Karin Alvtegen), பி.டி. ஜேம்ஸ், ரூத் ரெண்டல், ஸூ க்ராஃப்டன் போன்றார் வரை உலகின் சிறந்த குற்றப்புனைவுகளைப் பெண் எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இன்று குற்றப்புனைவு வாசகர்களிடையே நன்கு அறிமுகமாகியிருக்கும் வால் மக்டர்மிட் (Val Mcdermid).
57 வயதாகும் வால் மக்டர்மிட், இன்று ஸ்காட்லாண்டின் மிக முக்கியமான குற்றப்புனைவு எழுத்தாளர். (இயன் ரேங்கின் இன்னொரு முக்கியமான ஸ்காட்டிய குற்றப்புனைவு எழுத்தாளர்.) நிலக்கரி சுரங்கம் சார்ந்த சிறுநகரில் வளர்ந்த இவர், ஸ்காட்லாண்டின் அரசுப் பள்ளி ஒன்றில் துவங்கிப் படித்து, கல்லூரிப் படிப்பிற்கு ஆக்ஸ்ஃபர்ட் (oxford) சென்ற முதல் பெண்ணாவார். அங்கேதான் பாலுணர்வு குறித்த தன் உணர்வைக் கேள்விக்குள்ளாக்கி, தான் ஒரு தற்பால்விழைவாளர் (lesbian) என்பதைப் புரிந்துகொண்டார். கல்லூரிப்படிப்பை முடித்தபின், மான்செஸ்டர் நகரில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அந்நகரில் வேலை செய்த மொத்தம் 137 பத்திரிகையாளர்களில் இவரையும் சேர்த்து மொத்தம் மூன்றே மூன்று பெண் பத்திரிகையாளர்கள்தான். “அக்காலத்தில் பெண் நிருபர்களின் நிலை அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒரு பெண் பத்திரிகையாளரை நியமிப்பதை ஏதோ ஒப்புக்கு வைத்திருந்தார்கள். அதைத் தாண்டிப் பத்திரிகைத்துறையில் பெண்களுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை.” என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் மக்டர்மிட்.
அதன்பின் நாடகாசிரியராக இருந்து, அப்புறம் முழு நேர நாவலாசிரியர் ஆனார். குற்றப்புனைவுகளில் பொதுவாக ஆண்மை (masculinity) பிரதானமாக இருக்கும். பெண்களால் எழுதப்பட்ட, பெண்கள் முக்கிய பாத்திரங்களாக இருக்கும் குற்றப் புனைவுகளை எடுத்துக்கொண்டால் கூட அவற்றிலும் ஆண்களே பெரும்பாலும் முக்கியப் பாத்திரங்களாக உள்ளனர். (உதாரணம்: Ngaio Marsh, Elizabeth George ஆகிய எழுத்தாளர்களின் நாவல்கள்). அகதா கிறிஸ்டியின் ஹெர்க்யூல் பாய்ரோ (Hercule Poirot), மிஸ் மார்புல் (Miss Marple) பாத்திரத்தை விட அதிகம் புகழ் பெற்றவர்தானே?
குற்றப்புனைவுகளில் பெண் கதாபாத்திரங்களின் ஒரு முக்கிய அம்சம் அந்த பாத்திரங்களின் தாய்மை உணர்வு, அரவணைக்கும் தன்மை. கிறிஸ்டியின் ‘மிஸ் மார்புல்’ (Miss Marple) பாத்திரம், ஏதோ தன் எண்ணங்களில் தொலைந்து போயிருக்கும் அன்புக்குரிய மூதாட்டியின் தோற்றத்தை (lovable bemused old lady) நமக்கும், கதையின் மற்ற பாத்திரங்களுக்கும் அளிக்கும். அலெக்ஸாண்டர் மக்கால் ஸ்மித் (Alexander McCall Smith) எழுதும் ’நம்பர் ஒன் லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ தொடர் நாவல்களில் (’The No. 1 Ladies’ Detective Agency’ Series) வரும் மா ப்ரஷஸ் ராமொட்ஸ்வெ (’Mma Precious Ramotswe’ ) பிறருடன் கனிவாகப் பழகும் பாத்திரம். இவை ’பெண்’ என்றால் சமூகத்திலிருக்கும் எதிர்பார்ப்புகளை ஒட்டிய நடத்தை உள்ள பாத்திரங்கள், பெண்களுக்கான குணங்களைக் கொண்டே துப்புத் துலக்குவதைச் செய்வதாக அமைந்த புனைவுகளாக இருந்தன.
பொதுவாக இவ்வகைப் பெண்கள் காவல்துறையில் வேலை செய்வதாக சித்திரிக்கப்படுவது அரிது. தனியார் துப்பறிவாளராக சில சமயம் இருப்பினும், அவர்களை மீறிய ஏதோ ஒரு காரணத்தால் குற்றத்தை விசாரணை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்ததால் அதில் சம்பந்தப்பட வேண்டியவர்களாக இருப்பர். [அகதா கிரிஸ்டியின் மிஸ் மார்புல் இப்படித் தற்செயலாக துப்புத் துலக்க உதவியவர், பிற்பாடு தம் வாழ்விலிருந்து அதிகம் விலகாமலேயே அந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக அமைந்த பாத்திரம்.] காவல்துறையில் பெண்கள் வேலை செய்யும்போது சந்திக்கவேண்டிய தனிப்பட்ட பிரச்சினைகள் (பாலினப் பாகுபாடு, இரக்கம், அவர்கள் திறமை,செயல்திறன் குறித்த சந்தேகங்கள்) பற்றியெல்லாம் இந்தக் கதைகளில் காட்டப்படுவதில்லை. மேலும் இந்தப் பெண்கள் புலனாய்வு செய்யும் குற்றங்களுக்கும் ஒரு பொதுவான தன்மை இருக்கும். அதாவது பணம்/பொருள்/பழிவாங்குதல் என்ற மேலோட்டமான வகைமைக்குள்தான் குற்றங்கள் இருக்கும். குற்றத்தின் தன்மை, அது விசாரிப்பவர் மீது ஏற்படுத்தும் மன அழுத்தம் பற்றி இவை அதிகம் பேசாதவை.
இவை எல்லாவற்றையும் உடைத்து, வேறு விதமான பெண்களை முக்கியமான கதாபாத்திரங்களாகக் கொண்ட குற்றப்புனைவுகளை எழுதுகிறார் வால் மக்டர்மிட். இவருடைய நாவல்களின் முக்கிய இழைகளாக, சிக்கலான கதாபாத்திரங்கள், அவர்களுக்கு நன்கு செதுக்கப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள், குற்றம் குறித்த கூர்மையான உளவியல் பார்வை, பெண்கள்/ பாலுணர்வில் மாற்று விருப்புகள் கொண்டவர்கள் முக்கியப்படுத்தப்படுவது, மாறி வரும் சமூக நிலைகள் குறித்த அவதானிப்பு போன்றவற்றைச் சொல்லலாம்.
val_mcdermid
பொதுவாகச் சமீப காலம் வரை, பெண்களும், பாலியல் சிறுபான்மையினரும் பொதுவெளியிலும், படைப்புத்துறையிலும் எள்ளலாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக குற்றப்புனைவுகளில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று குரூர மனம் கொண்டவர்களாக, குற்றவாளிகளாக இருப்பார்கள் அல்லது குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஆனால் மக்டர்மிட்டின் படைப்புகளில் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினர், முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுடைய பாலினம், பாலியல் தெரிவுகள் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை. முன்முடிவான வார்ப்புகளை (’stereotype’) இப்படி உடைக்கும் தன் நாவல்கள் பற்றி மக்டர்மிட் கூறுகிறார்:
“நான் இதை வலிந்து செய்வதில்லை. கதையின் போக்கே இவற்றைத் தீர்மானிக்கிறது. புற எதார்த்தங்கள் குறித்து நான் கவனம் கொண்டிருக்கிறேன் - இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி விபரம் தெரிந்தவர்கள் என்னிடம் சொன்னபடி பார்த்தால், தற்பாலுறவை நாடும் வாலிபரான ஒரு ஆண், தொடர் கொலைகாரர் ஒருவரால் கொல்லப்படுவது அதிக சாத்தியம் உள்ள ஒன்று. ஆனால், மனிதர் தவறான முடிவு எடுக்கும்போது என்ன நடக்கிறது என்பதை ஆராய்வது எப்போதுமே சுவாரசியமானது என்று நான் கருதுகிறேன். தற்காலக் குற்றநாவல் எதிர்பார்க்கமுடியாததை ஆய்ந்து பார்ப்பதற்கான களமாகி இருக்கிறது. எப்போதுமே குற்றப்புனைவு என்பதில் எழுத்தாளர்கள் விஷயங்களின் விளிம்பு நிலைகளைக் குடைந்து பார்க்கிறார்கள்.”
இதில் இறுதி வரி முக்கியமான ஒன்று, மையத்திலிருந்து விளிம்புக்குச் செல்வதுதான் பொதுவான புனைவுகளில் கூட சிறந்ததாகக் கருதப்படுகிறது அல்லவா? அதைத்தானே இன்னொரு வகையில் குற்றப்புனைவுகள் செய்கின்றன? இந்த வரியை இவருக்கு மட்டுமல்லாமல், இன்று குற்றப்புனைவுகளில் சிறந்த ஆக்கங்கள் படைக்கும் பலருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
மக்டர்மட்டின் ஆக்கங்களை உளவியல் சார்ந்த காவல்துறை விசாரணை (Psychological police procedural) என்று வகைப்படுத்தலாம். அதில் நான்கு விதமான புத்தகங்களை எழுதுகிறார் மக்டர்மட்.
1. லிண்ட்ஸி கோர்டன் (Lindsay Gordon) என்னும் தற்பால் விழைவுள்ள நிருபர் குற்றங்களைப் புலனாய்வு செய்யும் தொடர் நாவல்கள்.
2. கேய்ட் ப்ரான்னிகன் (Kate Brannigan) என்னும் தனியார் துப்பறிவாளர் மையக்கதாபாத்திரமாக இருக்கும் தொடர் நாவல்கள்.
3. டோனி ஹில் (Tony Hill ) என்னும் குணவுரு வரைவாளர் (profiler), மற்றும் கேரொல் ஜோர்டன் (carol Jordan) என்னும் போலீஸ் அதிகாரி இருவரும் சேர்ந்து பணிபுரியும் சம்பவங்கள் கொண்ட தொடர் நாவல்கள்.
4. மேற்சொன்ன மூன்று வகையிலும் அடங்காத தனி (standalone) நாவல்கள்
இவை அனைத்திலும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட, வெவ்வேறு களங்களில் பணியாற்றுகிற முக்கியப் பாத்திரங்கள் இருப்பார்கள்.
இதில் டோனி ஹில் தொடர் மிகவும் பிரபலமான ஒன்று. தொலைக்காட்சியில் தொடராகவும் வருகிறது. (அதற்கான கதைகள் தனி). இத்தொடர்தான் வால் மக்டர்மிடுக்கு ஒரு திருப்பு முனை என்று சொல்லலாம். இதில் வந்த முதலாவது நாவலுக்கே (’The Mermaids Singing ‘) அவர் குற்ற நாவலாசிரியர் சங்கம் (CWA) வழங்கும் ‘கோல்டன் டாக்கர்’ (Golden Dagger) என்ற உயரிய விருதை பெற்றார். இனி, இத்தொடர் பற்றி சிறிது விரிவாகப் பார்க்கலாம்.
குற்றப்புனைவின் எந்தத் தொடரிலுமே, அதில் வரும் பாத்திரங்கள், தொடரின் கதை அளவுக்கு முக்கியமானவை. ஏனென்றால் தொடர்ச்சியாக ஆறு அல்லது ஏழு நாவல்கள் படிக்க வேண்டும் என்றால், அதில் தொடர்ந்து வரும் பாத்திரங்களும் நம்மை ஈர்க்குமளவுக்கு ஆழமாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் பல நாவல்களாகச் செல்லும் நெடுந்தொடரை அலுப்பு தட்டாமல் படிக்கமுடியும். இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாக குற்றப்புனைவுகளில் முதல் வாசிப்பிற்குப் பிறகு, அது எவ்வளவு சிறந்த நாவலாக இருந்தாலும், அதன் முக்கிய அம்சமான புதிர் தன்மை குறைந்து விடும் அல்லவா, அதனால் மறுபடி அதே பாத்திரங்கள் வரும் புனைவைப் படிக்க ஒருவருக்கு விருப்பம் எழவேண்டும் என்றால் அந்தப் பாத்திரங்கள் அவரை ஈர்க்க வேண்டும். அவற்றில் மேன்மேலும் கவனிக்கக் கூடிய அளவுக்கு ஆழமும், பரிமாணங்களும் வேண்டும். ஷெர்லாக் ஹோம்ஸ் எனும் பாத்திரத்தின் ஆளுமைதானே அந்த நாவல்கள்/சிறுகதைகள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் வாசிப்பு/மறுவாசிப்பு செய்யப்படுவதற்கான ஒரு முக்கிய காரணம்? அந்தப் பாத்திரம் நிஜமான மனிதர் என்றே உலகெங்கும் ரசிகர்கள் கருதுவதோடு, அவர் வசித்ததாகக் கருதப்படும் வீடு, அதைச் சுற்றிய தெருக்கள் எல்லாம் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வரும் இடங்களாகி விட்டன. புனைவு அந்த அளவுக்குக்கு நிஜம் போலிருந்திருக்கிறது, பல தலைமுறைகளாக வாசகர்களைக் கவர்கிறது.
டோனி ஹில் தொடரின் பல கதாபாத்திரங்களும் வாசகர்களின் ஈர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளுமளவுக்கு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருப்பவை. இத்தொடரின் மையக் கதாபாத்திரமான டோனி, ஒரு குண உரு வரைவாளர் (Profiler), உளவியல் நிபுணர்.
theretributionbookcoveratlantic
இத்தொடரைப் புரிந்துகொள்வதற்கு, குணவுரு வரைவு என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வது அவசியம். குற்றப் புலனாய்வு என்பது ஆரம்பத்தில் குற்றவாளி விட்டுச்சென்ற தடயங்கள் (material evidence), நேரடி சாட்சியங்கள் (eye witness) மூலம் நடந்தது. பிறகு குற்றங்கள் பற்றிய ஆய்வுகள் மூலம் இதை முன்னே நகர்த்தினார்கள். (எந்த இடங்களில் குற்றம் அதிகம் நடக்கிறது, எவ்வளவு இடைவெளி விட்டு நடக்கிறது போன்ற ஆய்வுகள்). பின்னர் தடயவியல் புலனாய்வு (forensic investigation), அறிவியல் முன்னேற்றங்களால் முக்கியமான, உபயோகமான வழியானது. ஆனால் இவற்றில் குற்றவாளிகளின் மனநிலை பற்றிய ஆராய்ச்சிகள் பொதுவாக நடப்பதில்லை. அந்த வேலையைக் குணவுரு வரைவு செய்கிறது. ஒரு குற்றம் நடக்கிறது, குற்றவாளி யாரென்று தெரியவில்லை, அதிகத் தடயங்களும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். குற்றம் நடந்த முறை, குற்றம் நடந்த இடம், இவற்றை வைத்து, குற்றவாளியின் வயது, அவர் பார்க்கக்கூடிய வேலை, அவருடைய நிறம்/இனம் போன்றன குறித்த சாத்தியங்கள் பற்றி ஒரு பொதுச்சித்திரத்தை, குணவுரு வரைவு என்பது, நடத்தை பகுப்பாய்வு (behavioral analysis) என்ற வழிமுறை மூலம் பெற்று, அதைக் காவல்துறைக்கு அளிக்கிறது.
உதாரணமாக ஒரு கொலையாளி ஒருவரைக் கொன்று அவர் விழியை எடுத்துச் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதைக் குணவுரு வரைவு எப்படி அர்த்தப்படுத்துகிறது? அவர் அந்தக் கண் எப்போதும் மரண நேரத்தில் இருந்த பயத்தோடு தன்னைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு சென்று இருக்கலாம். இது அவர் எப்போதும் மற்றவர் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவராக இருக்கலாம் என்று குணவுரு வரைவு ஒரு கருத்தை முன்வைக்கலாம். இதன் நீட்சியாக, அவர் தனக்குக் கீழ் பல பேர் வேலை பார்க்கும் ஒரு உயர் பதவியில் இருப்பார், தன்னிடம் பணியாற்றுபவர்கள் மீது மிகவும் கண்டிப்பாக இருப்பார் (control freak), வீட்டிலும் தன் குடும்பத்துடன் அப்படித்தான் இருப்பார் என்று குணவுரு வரைவு கூறலாம். (இது ஒரு உதாரணம் மட்டுமே). இதை ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற பாத்திரங்கள், காரின் டயர் தடம், சிகரட் துண்டு போன்றவற்றை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதுடன் ஒப்பிடக்கூடாது. குணவுரு வரைவானது, குற்றவாளி இந்த மாதிரி இருப்பார்/இருக்கலாம் என்றுதான் சொல்கிறது. ஒரு ஆளைச் சுட்டி இவர்தான் குற்றவாளி என்று சொல்வதில்லை. காவல்துறைதான் இதை வைத்து வழக்கை முன்னகர்த்த வேண்டும், அதாவது அந்தக் குற்றம் சார்ந்து விசாரிக்கப்பட்ட ஆட்களில் யார் இந்த சித்திரிப்பை ஒத்து வருகிறார்களோ, அவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தி நிரூபணத்துக்குத் தேவையான தடயம் சேகரிக்க முயல்வது பயன் தருமா என்பதை அவர்கள் யோசிக்க இது உதவும்.
இதில் ஒரு பிரச்சினையும் உண்டு. மேலே பார்த்த உதாரணம், பல பேருக்குப் பொருந்தலாம். ஆனால் அவர்கள் அனைவரையும் குற்றவாளி என்று இதனால் சொல்ல முடியுமா? மேலும் ஒருவர் என்னதான் அறிவுஜீவியாக இருந்தாலும் கூட இன்னொரு மனிதரின் மனதை, அதன் ஆழத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது சாத்தியமில்லை. இதனால் குணவுரு வரைவு ஒரு முழுமையான அறிவியல் கோட்பாடா (exact science) என்று உலகெங்கும் விவாதங்கள் நடக்கின்றன. இந்த முறையின் வெற்றி/தோல்வி பற்றிய புள்ளிவிவரங்கள் மூலமும் இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இதில் பிழைகள் வர வாய்ப்புள்ளதால் காவல் துறையிலேயே இதற்கு எதிர்ப்பும் இருக்கின்றது.
குணவுரு வரைவு பற்றித் தான் எழுதுவதைக் குறித்து மக்டர்மிட் கூறுவதைப் பார்ப்போம். இதுவும் மேலே எழுதி உள்ளதற்கு வலு சேர்கின்றது.
“ஒட்டு மொத்தமாக, குணவுரு வரைவு என்பது இயல்பான அறிவு மட்டுமல்ல. நிகழ்தகவுகளின் (probabilities) பங்களிப்பும் அதில் உள்ளது. சிலநேரம் புள்ளியியல் முறைப்படி நோக்கி, அத்தனை சாத்தியமாகத் தெரியாததால் குற்றவாளியை நோக்கிச் செல்லும் வாய்ப்புகளை முதல் கட்டத்தில் கருதவில்லை என்று டோனி ஒத்துக் கொள்வார். நான் சந்தித்துள்ள குண உரு வரைவாளர்கள் தங்கள் வேலையை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்கள். எத்தனையோ விஷயங்கள் இவர்களின் முடிவுகளை நம்பி இருக்கின்றன என்பதால் இந்த வேலை அத்தனை கடினமானது.நான் படுக்கச் செல்லும்போது, யாருடைய இறப்பும் என்னால் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் குண உரு வரைவாளராக இருந்தால், எப்போதுமே பாதாள விளிம்பில் இருப்பது போலவே உணர்வீர்கள், மேலும் என்னென்னவோ பிழைகள் நேரக்கூடும் என்று தோன்றும். அசல் வாழ்வில் இந்த வேலையைச் செய்கிற குண உரு வரைவாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. சில நேரம் செய்தியில் தொடர்-கொலை பற்றி ஏதும் இருக்கையில், என்னைத் தொலைபேசியில் கூப்பிடுவார்கள், ஏதும் குண உருவாக்கம் என்னிடம் இருந்து கிட்டுமா என்று கேட்பார்கள். அவர்களுக்கு உண்மைக்கும், புனைவுக்கும் உள்ள வித்தியாசம் புரிவதில்லை என்று நினைக்கின்றேன். என்ன வித்தியாசமென்றால் என்னால் தகவல்களைக் கதைக்குத் தகுந்தவாறு பொருத்திக் கொள்ள முடியும்.”
சுருக்கமாகச் சொன்னால் கிடைக்கும் தகவல்கள் மூலம் குற்றவாளியின் மனவெளிக்குள் நுழைய முயன்று, அதில் அவரைப் பற்றிய ஊகங்களைக் கொண்டு அவை எதார்த்தத்தில் ஒரு மனிதரிடம் எப்படித் தோற்றம் கொள்ளும் என்று சுட்டல்களைக் காவல்துறைக்குத் தருகிறது குணவுரு வரைவு. அதுவரை தெளிவு ஏதும் கிட்டாது, மசமசப்பான நிலையில் சிக்கியிருந்த புலனாய்வுக்கு ஒரு திசையைச் சுட்டுவது, அல்லது சாத்தியக்கூறு அதிகமான கோணங்களைத் தருவது குணவுரு வரைவு.
குணவுரு வரைவைக் கொண்ட கதை உள்ள தொலைக்காட்சித் தொடர்களும் இப்போது வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது ’க்ரிமினல் மைண்ட்ஸ்’(’Criminal Minds’ ) என்னும் அமெரிக்கத் தொடர். இத்தொடரில் குணவுரு வரைவு ஆய்வு மூலமே முழுக்குற்றமும் புலனாய்வு செய்யப்படும். மக்டர்மட்டின் டோனி-ஹில் தொடரின் முக்கியப் பாத்திரமான டோனி, இங்கு முன்பே சொன்னது போல இப்படிப்பட்ட குணவரைவு நிபுணர். கூடவே உளவியல் நிபுணராகவும் செயல்பட்டு, மனநிலை பாதித்தவர்களுக்குச் சிகிச்சையும் செய்வதன் மூலம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் புரிந்துகொள்ள முயல்கிறார்.
மக்டர்மிட் அவரைப் பாலுறவில் குறைபாடு (’sexual dysfunction’) உள்ளவராகப் படைத்தது குற்றப்புனைவுகளின் ஆண்மை மையத்தன்மைக்குக் கவனிக்கத்தக்க ஒரு மாற்று. டோனி மற்றவர்களுடன் அதிகம் நெருங்கிப் பழகக் கூச்சப்படுபவர், அதற்கு அவருடைய சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணம் என்று தொடரின் முதல் நாவல்களில் கோடி காட்டப்படும். அவர் தந்தை, தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே பிரிந்து சென்றவர். தாயும் டோனியிடம் பாசமாக இல்லை. டோனி தாய்/தந்தை இருவர் பற்றியும் பேசவே விரும்பாதவர் என்றும் நமக்குத் தெரிய வருகின்றது. சமீபத்திய நாவல்களில் காட்டப்படும் டோனியின் தாய் கதாபாத்திரம் மூலம் டோனியின் துயரம் மிகுந்த கடந்த கால வாழ்க்கை பற்றிய புதிய சித்திரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. மொத்தத்தில் டோனி வதைபடும் ஆன்மா (tortured soul), தன் மனவலிகளைத் தன் வேலையின் மூலம், பிறருக்கு உதவுவதன் மூலம் மறக்க முயல்பவர். இப்படி ஒரு சிக்கலான பாத்திரத்தின் மூலம் ஒரு தொடரை நகர்த்துவது எளிதல்ல. (ஸ்டீய்க் லார்ஷொனின் ‘ஸலாண்டர்’ நினைவுக்கு வருகிறார்.)
டோனி, கேரொல் ஜோர்டன் (carol jordon) என்ற துப்பறிவாளரான, பெண் போலிஸ் அதிகாரியுடன் பணிபுரிகிறார். கேரொல் ஜோர்டன் இத்தொடரின் இன்னொரு முக்கியமான பாத்திரம். இவர் ஒரு குழுவின் தலைவர், செயலூக்கமிக்க திறமையான அதிகாரி. அக்குழுவின் பணி வன்முறை மிக்க குற்றங்களை விசாரிப்பது. ஜோர்டனின் பாத்திரமும் நன்கு வார்க்கப்பட்ட ஒன்று. அவருக்கும் டோனிக்கும் உள்ள உறவு இத்தொடரின் போக்கில் இயல்பாக மாற்றம் கொள்கின்றது. முதலில் அவர் குணவுரு வரைவு மீது அதிகம் மதிப்பு வைத்திருப்பதில்லை. பிறகு டோனியின் செயல் திறன், வேலைத் தீவிரம், அறிவுக் கூர்மை, தவறுகள் தன்னிடமும் இருக்கக் கூடும் என்பதை உடனடியாக ஏற்கும் தாராளத் தன்மை, பெண் போலிஸ் என்று ஒதுக்காமல் தன்னிடம் கருத்துகளைப் பகிர்ந்து சர்ச்சிக்கும் சமநோக்கு, மாற்றுக் கருத்துகளை அவற்றின் பொருத்தம் கருதிப் பார்த்து சீர்தூக்கி, உதவுமானால் ஏற்கும் அறிவுச் சீர்மை ஆகியவற்றைக் கருதி மனமாற்றம் கொள்கிறார். ஒரு வழக்கு விசாரணையில் மேலதிகாரிகளின் கவனமின்மையால் பாலியல் தாக்குதலுக்கு ( sexual assault ) உள்ளாகிறார். அதிலிருந்து மீள டோனி உதவுகிறார். இருந்தும் அதன் பக்க விளைவாக கரோல் அதிகமாகக் குடிக்க ஆரம்பிக்கிறார் (வேலை செய்வதற்கு பாதகமில்லாமல்). இருவருடையே உள்ள உறவு இதனால் பலப்படுகிறது. டோனியின் ’குறைபாடு’ பற்றி அறிந்தவர் ஜோர்டன் மட்டுமே. இருவருடையே நட்பு, பாசம் என்பதையும் தாண்டி வெளிப்படையாகப் பேசப்படாத பிணைப்பு உள்ளது. இருவரும் தங்களுக்குள்ளே சுமக்கும் கசப்பான நினைவுகளின் தொடர்ந்த பளு காரணமாக அப்பிணைப்பைக் கவனித்து அது எங்கு இட்டுச் செல்லும் என்பதை அறியத் தயங்குகிறார்கள்.
இவர்களிடையே உள்ள உறவு பற்றி, உறவின் மாற்றம்,வளர்ச்சி பற்றியும் மக்டர்மிட் கூறுவது:
“அவர்களின் உறவு முழுமை பெறாததால் தான் வாசகர்களைத் தூண்டி இழுக்கிறது என்று நினைக்கிறேன். நாவலைத் தாண்டியும் அதற்குத் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. இத் தொடரில் ஒரு புது நாவலைப் படிக்க ஆரம்பிக்கும்போது, அவர்கள் நாவல்களுக்கிடையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கற்பனை செய்யமுடியும். ‘த மெர்மெய்ட்ஸ் ஸிங்கிங்’(’The Mermaids Singing’- ’மச்சக்கன்னிகள் பாடுகையில்’) முதலில் ஒரு தனி நாவலாகவே எண்ணி எழுதப்பட்டது. ஒரு தொடரை எழுதும்போது அதில் வரும் பாத்திரங்களுக்கு நாம் அளித்துள்ள குணங்கள், அனுபவங்கள் ஆகியவற்றால் எப்போதும் கட்டுப்படுத்தப் படுகின்றோம். ஒரு புது டோனி ஹில் நாவல் பற்றி நான் திட்டமிடும் போது, அவருடைய முந்தைய வாழ்வு, அவர் என்னென்ன செய்யக் கூடியவர் என்பனவற்றால் அது கட்டுப்படுத்தப்படுகிறது. தனி நாவல் எழுதும்போது, ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்!’ என்பது போன்ற விவரங்கள் எதாலும் நான் கட்டுப்படுத்தப்படுவதில்லை.
த மெர்மெய்ட்ஸ் ஸிங்கிங் நாவலில் டோனி பாலுறவில் செயல்திறன் இழந்தவர் என்பது கதையின் போக்கில் கிட்டும் ஒரு தகவல், அது கதை நன்கு செயல்பட அவசியமானது. டோனி, ஜோர்டன் உறவு, இருவருக்கிடையே உள்ள இன்னும் எந்தத் தீர்வையும் காணாத பாலுறவு ஈர்ப்பு மட்டுமே அல்ல; உடலுறவை நாடும் உறவாக அது மாறுவது பற்றி டோனி எச்சரிக்கையாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணால் குணப்படுத்தப்படும் ஆண் என்ற ஒரு கருத்து, அது என்னதான் பழைய உத்தியாக இருந்த போதும், அதுவும் இதில் உள்ளது. கேரொல் அப்படி ஒரு பெண்ணாக இருந்து டோனியைக் குணப்படுத்த விரும்புகிறார். டோனியின் அருவருப்பூட்டும் தாய் வனெஸ்ஸாவைப் போல சில விஷயங்கள் எப்போதும் மனக் கோடியில் இருக்கின்றன. அவள் யார், எப்படிப்பட்டவள் என்பது குறித்த ஒரு துவக்கநிலைக் கோட்டுரு என் மனதில் இருந்தது. நான் ஏதோ பாத்திரங்களுக்கு நம்மை மீறிய வாழ்க்கை இருப்பதாகச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நமக்கு ஏதும் தொடர்பில்லாத, தெரியாத ஒன்றை நம்மால் உருவாக்க முடியாது- ஆனால் பாத்திரங்களுடன் நேரம் செலவிட்டு உழைக்கும் போது, வியப்பூட்டும் சாத்தியங்கள் நம் முன் எழும்.”
இவர்களின் குழுவில் உள்ளவர்களுக்கும் தனி கிளைக்கதைகள், குணாதிசயங்கள் உண்டு. ஒருவர் மனிதர்களை விட, கணினியுடன் வேலைசெய்வதையே விரும்புவார். அவருக்கு யாருடைய அந்தரங்கமும் புனிதம் கிடையாது, ஒருவரைப் பற்றி எந்த விவரம் இணையத்தில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமும், திறமையும் உள்ளவர். இதுபோல் இன்னொருவர், முன்னேறுவதில் பேராவலுள்ள ஆசாமி. அதற்காகத் தன் குழுவின் திட்டத்தை, குழுத்தலைவரைக் கூட மீறிச் செல்லக்கூடியவர்.
இத்தொடரில் குணவுரு வரைவு முக்கியப் பங்கு வகிப்பதால், குற்றவாளிகளும் அதற்கேற்ப இருண்மையான மனநிலை உடையவர்கள். வன்முறை அவர்களுக்கு ஒரு வடிகால். இதில் சிலர் மனப் பிறழ்ச்சியால், தாங்கள் செய்வதை விரும்பாமலும், அதே நேரம் அதை நிறுத்தி விட முடியாமலும் இருப்பவர்கள். சிலர் தங்கள் வக்கிரத்திற்கு வடிகால் தேடி விபரீதமான செயல்களில் ஈடுபடுவர்கள். இதனால் இந்த நாவல்களில் குற்றங்கள் சற்றே பயங்கர வன்முறையாக (graphic violence) இருக்கும் . இதனால் பக்கத்திற்கு பக்கம் ரத்தம், கொலை இருக்கும் என எண்ண வேண்டாம். குற்றம் நிகழும் முறை, அதற்கான மனநிலைக் காரணிகள், அதன் பாதிப்பு (impact) - இவை சற்று பயங்கரமாக இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நாவலின் முக்கிய இழைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிறிய சம்பவத்தை பார்க்கலாம். டோனி மனநோய் சிகிச்சை மையத்தில் வசிக்கும் ஒருவருக்கு உளவியல் சிகிச்சை செய்கிறார். நோயாளி ‘பேய் பிடித்த கை’ (alien hand/possessed hand) என்ற நோய்க்குறியால் (syndrome) அவதிப்படுபவர். அதாவது தன் கையை ஏதோ ஒரு சக்தி செலுத்துவதாக எண்ணி, அது தன் மனைவி, மக்களைக் கொலை செய்யக் கூறியதாக நினைத்து அவர்களைக் கொன்றவர், இப்போது பச்சாதாபத்தால் (remorse) உருகுபவர். இந்நிகழ்வு மையக்கதையோடு நேரடியாக சம்பந்தப்படவில்லையென்றாலும் இதைப் படிக்கும்போது வாசகருக்கு ஏற்படும் அதிர்ச்சி, மனதின் சமநிலையை சற்றே குலைக்கக்கூடும். இதைத்தான் பயங்கர வன்முறை (Graphic violence ) என்று குறிப்பிட்டேன்.
மக்டர்மிட் சமூக நிகழ்வுகள், மாற்றங்கள் சார்ந்தும் தன் கதைகளை அமைப்பார். ‘ஒரு சமூகம் தனக்குத் தக்க குற்றவாளிகளையே அடைகிறது.’ (A society gets the criminals it deserves.) இது இவரின் நாவலில் வரும் ஒரு வரி. அதாவது குற்றம் செய்பவன் வானத்தில் இருந்து குதித்தவன் அல்ல, அவனும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம், சமூக நிலைகள், அவை தனிமனிதன் மீது செலுத்தும் அழுத்தங்கள் ஆகியன குற்றங்களுக்குக் காரணிகள் என்கிறார் மக்டர்மிட். இது குற்றங்களை நியாயப்படுத்தும் வாதமல்ல, மாறாகக் குற்றவாளியை தண்டிப்பதோடு நின்று விடாமல், குற்றத்தின் வேரை அறிந்து, அக்காரணங்களால் மேன்மேலும் குற்றங்கள் எழாமல் தடுக்க முயல்வதன் அவசியத்தைச் சுட்டுவது.
உதாரணமாக 2005-இல் லண்டனில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களைக் குறித்த ஆங்கிலேயரின் பார்வை மாறி, அவர்களைத் தீவிரவாதிகளாகப் பார்ப்பது, அதை அந்நாட்டில் பிறந்து, வளர்ந்து, தங்களை இங்கிலாந்தவராகவே நினைத்து வரும் முஸ்லிம் இளைஞர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஒரு நாவலின் முக்கிய இழை.
இன்றைய பல ’பரபரப்பு’ நாவல்களில், முன்பு ரஷ்யர்கள் இருந்த இடத்தில், முஸ்லிம்கள் ’தயார் நிலை’ வில்லன்களாக இருக்கிறார்கள். காட்டாக, ப்ராட் தோர் (Brad Thor) எழுதும் நாவல்கள். வெறும் பரபரப்புப் புனைவு (Pulp Fiction) என்று இவற்றை விட்டு விட முடியாது. ஏனென்றால் இந்த வகை நாவல்கள்தான் அதிகம் படிக்கப்படுகின்றன. ஒரு பொது பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் சக்தி கொண்டவையாக இருக்கின்றன. தொண்ணூறுகளின் தொடக்கம் வரை ரஷ்யர்கள் பற்றிய பொதுக் கருத்து எப்படி இருந்தது? அதற்கு அந்தக் காலத்திய பரபரப்புக் கதைகள் ஒரு முக்கிய காரணம் என்று அந்தக் காலத்திய சூழ்நிலை மற்றும் கதைகளை படித்தவர்கள் உணர்வார்கள். ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள், கோலின் ஃபோர்ப்ஸ் (Colin Forbes) எழுதிய நாவல்களில் வரும் ரஷ்யர்கள் இறுக்கமான முகம்/மனம் கொண்ட, எந்த உணர்ச்சியும், கருணையும் இல்லாத, மேற்கை அழிப்பதையே லட்சியமாகக் கொண்டவர்கள்தானே? இதனால் மக்டர்மிட் தரும் மாற்றுப் பார்வைகள் மிக முக்கியம். .
இன்று சமூக வலைத்தளங்கள் பெருகி, முகம் தெரியாத, ஆணா, பெண்ணா என எதுவுமே தெரியாதவர்களுடன் நட்பு கொண்டு, மிக அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் காலம். வெறும் வலை வழி நட்பை மட்டுமே நம்பி, ஒருவரைச் சந்திக்க, நீண்ட தூரம் செல்லக் கூடத் தயாராக இருக்கிறார்கள் சிலர். இது வேறு சிலருடைய மன விகாரங்களுக்கு வசதியாகிறது. இளம்பெண்கள் எவ்வாறு சமூகவலைத்தளங்கள் மூலமாகச் சில வக்கிர மனிதர்களுக்குப் பலியாகிறார்கள் என்பது இன்னொரு நாவலின் இழை.
சமூகம் சார்ந்த அவதானிப்பு இருந்தாலும், நிஜ வாழ்க்கைக் குற்றங்களை அப்படியே இவர் எழுதுவதில்லை. வெறும் பரபரப்புக்குக்கென நடப்பு நிகழ்வுகளை நாவலில் வைக்காமல், உண்மையான அக்கறை சார்ந்து நடப்புகளின் பொதுக்கூறுகளை மட்டும் புனைவுக்காக எடுத்துக்கொள்கிறார். இதற்கு அவர் கூறும் காரணம் அவருடைய நுட்பமான இயைவுணர்வைக் காட்டுகிறது:
“பொதுவாக நான் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளிடமிருந்து மிக விலகியே நிற்கிறேன். ஒரு வெளியாளாக என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும் என்று நாம் எண்ணலாம், ஆனால் செய்வதறியாமல் மற்றவர்கள் துயரத்தை நாம் மதிக்கத் தவறி விடலாம், அதனால் எண்ணியதற்கு மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை நாம் கடுமையாக்கக் கூடும். சில நேரம் மிக விபரீதமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன- நாம் ஒன்றை எழுத, அது நிஜமாக நடந்து, தலைப்புச் செய்தியாகி விடுகிறது. வாழ்க்கை, கலையை நகல் செய்துவிடுகிறது. அதிலிருந்து விலகி நிற்கவேண்டும், புத்தகத்தில் அது திடுமெனச் சரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”
இத்தொடர் இன்னும் முடியவில்லை. ஒவ்வொரு பாத்திரத்தின் வளர்ச்சியை, மாற்றத்தை எளிதில் உணர்ந்து உள்வாங்க, நாவல்கள் வெளிவந்த, வெளிவரும் காலவரிசையில் படிப்பதுதான் சிறந்தது.
வால் மக்டர்மிட்டின் தனி (standalone) நாவல்கள் உளவியல் குற்றப்புனைவு (pyschological crime) என்ற வகைமையில் வருபவை. காவல்துறை புலனாய்வு, குணவுரு வரைவு என எதுவும் இதில் கிடையாது. தூரத்து எதிரொலி (The Distant Echo) என்ற நாவலின் ஆரம்பத்தில், நான்கு கல்லூரி மாணவர்கள் மிக அதிகமாகக் குடித்துவிட்டு தங்கள் விடுதி திரும்பும்போது தங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் பிணத்தின் மேல் தடுக்கி விழுகிறார்கள். ரத்தம் அவர்கள் மேலெல்லாம் படிய, அவர்கள் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது. ஆனால் போதிய ஆதாரம் கிடைப்பதில்லை. அனைவரும் ஒரு விருந்துக் கலப்பில் பலரோடு இருந்ததால், ஒவ்வொருவரும் என்ன செய்தனர் என்று நால்வருக்கும் தெரிவதில்லை. சிலருக்கு இடைநேரங்களில் வெளியே போக வாய்ப்புமிருக்கிறது, சிலர் போகவும் செய்திருக்கிறார்கள். அதனால் ஒருவர் மேல் மற்றவர் சந்தேகம் கொள்கின்றனர். அவர்கள் நட்பில் இதனால் ஒரு விலகல் ஏற்படுகிறது. கல்லூரிக்குப் பின் தத்தம் வழியில் செல்கின்றனர். நால்வர் வாழ்விலும் இந்த சம்பவத்தின் நிழல் படிந்து, ஒரு இருள் விளிம்பில் நின்று இவர்களை வாழ்க்கை பூராவும் அச்சுறுத்திய வண்ணம் இருக்கிறது. போலிசாரும் இவர்கள் மீதுள்ள சந்தேகத்தை விலக்காமல் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து, நால்வரில் முதலில் ஒருவர், பின் இன்னொருவரும் கொல்லப்பட, மற்ற இருவரும் தங்களைக் காத்துக்கொள்ள அந்தப் பெண்ணை யார் கொலைசெய்தது என்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒரு தற்செயல் குற்றச் சம்பவம், அதில் எதேச்சையாக இடறி விழுபவர்களின் வாழ்வுகளில் ஏற்படும் பெரும் மாற்றங்கள், போலிஸின் எதிர்வினைகள், இறந்த பெண்ணின் உறவினர்களின் நீண்ட நாள் ஆங்காரம், அதனால் தற்செயலாகச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏற்படும் மன அழுத்தம், பின்னர் அந்த அழுத்தம் ஒரு கொதி நிலைக்கு சென்று முடிவது என்று கதை நகர்கின்றது.
கட்டுரையின் ஆரம்பத்தில் பெண்கள் குற்றப்புனைவுகளை எழுதுவதைக் குறித்து பொதுவாக வாசகரிடையே இருக்கும் ஐயங்களைக் குறிப்பிட்டேன். ஆனால் அதன் இன்னொரு எல்லையாக, சக ஸ்காட்லாண்டிய குற்றப்புனைவு எழுத்தாளரான இயன் ரேங்கின், பெண்கள்தான் அதீத வன்முறை மிக்க நாவல்கள் அதிகம் எழுதுகிறார்கள் என்று ஒருமுறை கூற, அது குறித்து ரேங்கினுக்கும், மக்டர்மிட்டுக்குமிடையே விவாதம் ஏற்பட்டது. எனினும், இருவரும் இன்றளவும் ஒருவர் மீது மற்றொருவர் மதிப்பு வைத்துள்ளவர்கள்.
“இன்று குற்றப்புனைவுகள், வன்முறை இவற்றைக் குறித்து பெண் எழுத்தாளர்களிடம் பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்வி, வன்முறைகளைச் சித்திரிக்கும்போது ஒரு பெண்ணாக எப்படி உணர்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். எனக்கு இந்தக் கேள்வியே முட்டாள்தனமாகத் தெரிகிறது. வன்முறைகளில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். அப்படியென்றால் அவர்களுக்குத்தானே வலியும், துயரமும் நன்கு தெரியும்?” என்று ஒரு பேட்டியில் கேட்கிறார் மக்டர்மிட்.
குற்றப் புனைவுகளில்/பொதுப்புனைவுகளில் பெரும்பாலும் விளிம்பு நிலையில் (marginalized) இருக்கும் பாத்திரங்களை, காத்திரமானவர்களாக, முக்கியமானவர்களாகத் தன் நாவல்களில் உருவாக்கி, குற்றப் புனைவுகளின் எல்லைகளைச் சற்றாவது விரிவுபடுத்திய, தரமான பல புனைவுகளைத் தந்தவர் என்றளவில் மக்டர்மிட் மிக முக்கியமான எழுத்தாளரே.