Monday, February 29, 2016

ஓடோன் வோன் ஹார்வத்தின் ‘ஒரு சிறு காதல் கதை’ – ஒரு சிறு குறிப்பு - A Little Love Story by Ödön von Horváth

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/02/18/ajay-note/)
------
‘A Little Love Story’ என்ற தலைப்பு மட்டுமல்ல, “Everything is just as it always was, it seems nothing has changed…”, என்று ஆரம்பிக்கும் முதல் பத்தி, “… Only that summer’s gone…” என்று கோடைப் பருவம் மாறிவிட்டதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்போது, இனி திரும்பி வர இயலாத காலத்தின் ஒரு துளியை மட்டுமல்ல, அந்தக் காலத்தில் உறைந்துப் போயுள்ள, இனி மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லாத காதலைப் பற்றிய கதை இது என்று உணர்த்தி விடுகிறது ((‘Shall I compare thee to a summer’s day?’ என்ற கவிதையில் ஷேக்ஸ்பியர், பருவ நிலையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு காலப்போக்கில் எல்லாம் அழிந்தாலும், “But thy eternal summer shall not fade,” என்று தன் காதலைச் சொல்கிறார். ஆங்கில இலக்கியத்தில் உணர்ச்சி வேகத்தையும் இளமையையும் உணர்த்தும் படிமமாக கோடைப் பருவம் உள்ளது)). அடுத்து, இலையுதிர் காலத்தைப் பற்றிய சிறிய, செறிவான வர்ணனை தொடர்கிறது இங்கு ஏன் இலையுதிர் காலத்தைச் சுட்ட வேண்டும் என்று கதையில் போக்கில் புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.
இப்போது கதைசொல்லியின் ஒரு கோடை கால நினைவோடைக்குள் வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். இதில் திடீரென்று ‘இது பற்றியெல்லாம் உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்?’ என்று கதைசொல்லி/ ஆசிரியர் வாசகனிடம் நேரடியாகக் கேட்கும் சித்து வேலையும் நடக்கிறது. இன்று இத்தகைய உத்திகள் மலிந்து விட்டன. Tristram Shandy போன்ற நாவல்கள் இவற்றை இன்னும் முன்னரே செய்திருந்தாலும், 1900களின் ஆரம்பப் பகுதிகளில் இத்தகைய உத்திகள் இன்னும் வியப்பை உருவாக்கக் கூடியவையாகவே இருந்திருக்கக் கூடும். கதையின் ஓட்டத்திற்கு இது பொருத்தமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.
அடுத்து, கதைசொல்லி தன்னைக் குறித்தும் சொல்கிறார். இப்போது, கதையில் முதல் பத்திகள் அவர் குறித்து உருவாக்கக் கூடிய நெகிழ்வான சித்திரத்திற்கு நேர்மாறாக இருக்கிறார் அவர். பெண்களைப் போகப் பொருளாக, இச்சையின் வடிகாலாக மட்டுமே பார்த்தவனாக (” I wanted every girl I saw, I wanted to possess her”) தான் அந்தக் கோடையின்போது இருந்ததாக சொல்கிறார். தன் காதலி குறித்தும் அவருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை, அவள் செவிடாகவும்/ ஊமையாகவும் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார். அதே நேரம், தான் அப்போது மூர்க்கமான மனிதனாக இருந்தேன் என்பதை இப்போது ஒப்புக் கொள்ளுமளவிற்கு காலம் அவரைக் கனியச் செய்துள்ளது.
ஒரு நாள் அவர் காதலி, தயக்கத்துடன், நீ ஏன் என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய், என்று கேட்கிறார். இதை அவர் கழிவிரக்கத்துடனோ, அவனிடமிருந்து தன்னைக் குறித்த புகழ்ச்சியை சுற்றி வளைத்து வரவழைக்கவோ கேட்கவில்லை என்பதையும், அவள் நுண்ணுணர்வு உள்ளவர் என்பதையும் ” You don’t love me at all, …” என்று அவர் தொடர்ந்து பேசுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கும் நம் கதைசொல்லி மிக மட்டமான பதிலையே சொல்கிறான். அவன் குணாதிசயமே இதுதான் என்றாலும், தன் உள்ளத்தை அவள் ஊடுருவிப் பார்க்கிறாள் என்பதும், அதில் (அவளைக் குறித்து அவன் எண்ணுவது) காண்பதைக் குறித்து அவள் அதிகம் வருத்தமடைவது போல் தெரியவில்லை என்பதும் கதைசொல்லியின் அகங்காரத்தைச் சீண்டி அவனை அப்படியொரு இழிவான எதிர்வினைக்குத் தூண்டியிருக்கக் கூடும்.
இப்போதும் அவன் காதலி தன்னிலை இழப்பதில்லை. “You poor thing” என்று கூறி அவனை மென்மையாக முத்தமிட்டு அவனை விட்டு நீங்குகிறாள். அவள் செய்கையில் காதலோ, வருத்தமோ தெரிவதில்லை. இவன் வாழ்வு முழுதும் அலைக்கழிந்து கொண்டே இருப்பான் என்பது அவளுக்கு புலப்பட அது குறித்த பரிதாப உணர்வோடேயே அவள் செல்கிறாள்.
”On Chesil Beach’ நாவலில், வேறொரு சூழ்நிலையில், ஆனால் ஒரு விதத்தில் இக்கதையின் பாத்திரங்களைப் போல் அதே கொதிநிலையில் உள்ள தம்பதியரின் வாழ்வு எப்படி “This is how the entire course of a life can be changed: by doing nothing-.” முற்றிலும் மாறுகிறது என்று சொல்லப்படுகிறது. நம் கதைசொல்லி, ஒன்றுமே செய்யாமல் இல்லை, அவள் விலகிச் செல்லும்போது பத்தடி தொடர்ந்து செல்பவன், அதற்குப் பின் திரும்பி விடுகிறான். இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருந்தால் அவன் வாழ்வு மாறி இருக்கக் கூடும், ஆனால் முதலில் மனதளவில் எடுத்து வைக்க வேண்டிய காலடியே முடியாமல் போகும் போது, அவன் நின்று விடுகிறான்.
இதுவரை, சிற்சில நுட்பங்கள் இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது வழமையான கதையாக இருந்தது, “Only ten paces. But for that brief interval of time, this tiny love blazed heartfelt and intense, filled with splendor like a fairy tale,” என்று முடியும்போது இன்னொரு தளத்தை எட்டுகிறது. இப்போது கதையின் ஆரம்பத்தில் அவன், திரும்ப வர முடியாத கோடையை நினைத்துப் பார்ப்பதற்கு அர்த்தம் கிடைக்கிறது.
கோடையில் அக்காதல் வெந்தழிந்தபின் அவன் பல வசந்தங்களைப் (உறவுகளிலும்) பார்த்திருப்பான். இப்போது காலநிலை மட்டுமல்ல அவன் வாழ்வும், இலையுதிர் காலத்தில் இருக்கக் கூடும் (கோடையில் இளமை வேகம் என்றால் இலையுதிர் காலம் மனமுதிர்ச்சியை சுட்டும் படிமம் என்று கருதலாம்).. அதனாலேயே அகங்காரம் உதிர்ந்து, தன் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருந்ததை வெளிக்கொணர்ந்து அதை நோக்கும் முதிர்ச்சியை, கனிவை அவன் அடைந்திருக்கக்கூடும். தன் காதல் குறித்து “..Not a love like Romeo and Juliet, that lasts beyond the grave.” என்று இப்போது என்ன சொன்னாலும் உண்மையில் அக்கோடையில் தீ பற்றிய அவன் உள்ளமும் சரி காதலும் சரி பிறகெப்போதும் அணையவேயில்லை என்பதும் கதைசொல்லியைப் பொருத்தவரையிலேனும் (இவர்கள் பிரிந்த பிறகு அப்பெண் குறித்து கதையில் வேறு எதுவும் சொல்லப்படாததால்) எப்போதும் தன் கோடைக் காதலின் தழல் அவனைச் சுட்டெரித்துக் கொண்டே இருக்கும் என்றும் புரிகிறது.

Monday, February 22, 2016

சிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/02/14/two-lives/)
-----

'The General In His Labyrinth' நாவலில் நாம் சந்திக்கும் சிமோன் பொலிவர்  (Simon Bolivar), ஒரு கண்டத்தையே ஸ்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்ட அதிநாயகர் அல்ல.   ஒன்றுபட்ட லத்தீன் அமெரிக்கா என்ற கனவு தன்னுடைய   கண் முன்னே கலைவதை தடுக்க முடியாததென்னமெரிக்க கண்டத்தின் சர்வாதிகாரியாக இருக்க விழைந்தவர் என அவர் எதிரிகளால் தூற்றப்படுகிற, அச்சந்தேகம் மக்களிடமும் பரவி 
 தான் விடுவித்த நாடுகள் பெரும்பாலானவற்றில்  சந்தேகத்தோடு பார்க்கப்படுகிற, இத்தனை இக்கட்டிலும் மக்கள்/தன் முன்னாள் தோழர்கள்  தன்னைக் கை விடமாட்டார்கள் என்ற மாயையை இழக்க விரும்பாதமனதளவிலும் உடலளவிலும் உடைந்து போன ஒருவரையே பார்க்கிறோம். அவருக்கு இருந்த இறுதி நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் கலையஐரோப்பாவிற்குச் செல்ல முடிவு செய்கிறார். 
அதீதமாக வாசனைத் திரவியங்களை  உபயோகிப்பதற்காக பணத்தை வாரி இறைத்தவர் என்று அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு புறமிருக்க, தன் பயணத்திற்கு நல்ல குதிரையைக்கூட ஏற்பாடு செய்ய முடியாமல், கோவேறுக் கழுதை ஒன்றே கிடைக்கிறது. அவருடைய தரப்பில் உள்ள ஒருவர் முக்கியஸ்தர், நாட்டைக் காப்பாற்ற இறுதி தியாகத்தைச் செய்யுமாறு வேண்ட,  "I no longer have a country to sacrifice for" - ஒரு கண்டத்தையே மீட்டவன்,  ஒரு காணி நிலத்தைக் கூட  தனக்கென்று/தன்னுடையதென்று கூற முடியாத   - அவல நிலையை  சுட்டும் பதிலோடு - தன்னுடைய இறுதிப் பயணம் என்று அப்போது அறிந்திராமல்  -   பயணத்தை பொலிவர்   தொடங்குகிறார். 


மாபெரும் சாதனைகளைச் செய்வதற்கான உந்து சக்தியை இழந்த ஒருவரை இப்பயணத்தின்போது நாம் பார்க்கிறோம். அவர் நாடு கடத்திய எதிரிகள் தாயகம் திரும்புகிறார்கள்புதிய நாடுகள் அவற்றின் தலைவர்கள் என  ஒன்றிணைந்த தென்னமெரிக்க தேசம் என்ற கனவு அவர் கண் முன்பே கலைந்து,   அவர் விரும்பாத உருக்கொள்கிறது.  சீட்டாட்டத்தில் ஏற்படும் தோல்வியைக்கூட ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை அவருக்கு இப்போது இல்லை. அவர் செல்லுமிடங்களில்மக்கள் அவர் மீது சேறு வீசுகிறார்கள்,  அவருக்கு எதிரான கோஷங்கள் சுவர்களில் எழுதப்படுகின்றன.  இனி எதுவும் செய்ய முடியாது என்ற செயலின்மையும்,  மீண்டும் முதலிலிருந்து புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற அடங்கா விழைவுமாக ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட உணர்வுகள் மாறி மாறி குடி கொள்ளும்  மனதோடு நகரும் அவரின் இறுதி நாட்கள்தனிமையான ஒரு மாலை வேளையில் 

" of his last days and for the first time he saw the truth: the final borrowed bed, the pitiful dressing table whose clouded, patient mirror would not reflect his image again, the chipped porcelain washbasin with the water and towel and soap meant for other hands, the heartless speed of the octogonal clock racing toward the ineluctable appointment at seven minutes past one on his final afternoon of December 17. Then he crossed his arms across his chest and began
to listen to the radiant voices of the slaves singing the six o' clock Salve in the mills, and through the window he saw the diamond of Venus in the sky that was dying forever, the eternal snows,the new vine whose yellow bellflowers he would not see bloom on the following Saturday in the house closed in mouring, the final brilliance of life that would never, through all eternity be repeated again"

என்று உள எழுச்சியையும் துயரையும் ஒரே சேர அளிப்பதோடு முடிகிறது.

மரணத்தின் வலு குறித்து "Death is the greatest leveler" போன்ற சொற்றொடர்கள் எப்போதும் உபயோகத்தில் இருந்துள்ளன. 
"THE glories of our blood and state
         Are shadows, not substantial things;
.....
         Death lays his icy hand on kings:
.....
         And in the dust be equal made
With the poor crooked scythe and spade. "
என்று ஜேம்ஸ் ஷெர்லியின் (James Shirley) 'Death the Leveller' கவிதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளது போல்தன் புகழ்/ அடைந்த வெற்றிகள் அனைத்தும் எந்த பொருளும் இல்லாதவையாக மாறியாருமற்றவராக மரணிக்கிறார் பொலிவர். 

ஜான் வில்லியம்ஸ் (John Williams ) எழுதிய  ஸ்டோனர் ('Stoner') நாவலின் மைய பாத்திரம்இலக்கிய உலகில் நிறைய இடங்களில் உதிர்க்கப்படும் 'எளியவர்கள்/ சாதாரணர்கள்என்ற பதத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி என்பதை ஸ்டோனரின் மரணத்தைப் பற்றிய "Stoner's colleagues, who held him in particular esteem when he was alive, speak of him rarely now; to the older ones, his name is reminder of the end that awaits them all, and to the younger ones it is merely a sound that evokes no sense of the past..." குறிப்போடு நாவல் ஆரம்பிப்பதிலிருந்தே உணர முடிகிறது. ஆம்இது ஒரு 'சாதாரணனின்வாழ்வையும் மரணத்தையும் பற்றிய நாவல். 

மாபெரும் சாதனைகள் செய்த - நிஜத்தில் வாழ்ந்த - ஓர் ஆளுமையின் (உண்மைகள் கலந்த) புனைவுச் சித்திரமும்முற்றிலும் புனைவுப் பாத்திரமான - பொலிவரின் வாழ்க்கைக்கு முற்றிலும் நேர் மாறான வாழ்வை வாழ்ந்தவாழும் போதும்  சரிமரணத்திலும் சரி எந்த பெரிய சலனத்தையும் உருவாக்காத – ஸ்டோனரின் ஆளுமைச்  (அல்லது ஆளுமையின்மையின்) சித்திரமும் எந்தத் தொடர்பும் இல்லாதவை போல் முதற்பார்வையில் தோன்றுவதால்இவற்றை ஒரே கட்டுரையில் அணுக வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழலாம். ஆனால் ஸ்டோனரை  மீள்பார்வை செய்வதுஅவரது வாழ்வின் அர்த்தம் குறித்த இன்னொரு கோணத்தை  தருவது மட்டுமின்றி,  இறப்பு எப்படி தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை சமன் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல்இவர்களைப் போல் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பவர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கின்றது என்ற இன்னொரு கோணத்தையும்  உணர்த்துகிறது.

ஸ்டோனரின் வாழ்க்கை குறித்து  நாவலின் போக்கில் தெரிந்து கொள்கிறோம். வேளாண் கல்வி படிப்பதற்காக கல்லூரியில் சேரும் ஸ்டோனர்ஆங்கில இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு கல்லூரி பேராசியர் ஆகிறான். காதலில் விழுந்து விட்டோம் என்று எண்ணி,  -  துரித கதியில் திருமணம் செய்துபெரிதும் துன்பத்தையே தரும்மகளே தந்தையிடம் இருந்து விலகிச் செல்லும்   - இல்வாழ்க்கையில் இணைந்து கொள்கிறான். கல்லூரியில் செல்வாக்கு மிக்க இன்னொரு பேராசிரியருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு அவ்வாசிரியர் மனதில் ஸ்டோனர் பால்  பெரும் பகையை உருவாக்கஆசிரியப் பணியிலும் பலச் சங்கடங்களை அவன்  சந்திக்க நேர்கிறது.  

ஸ்டோனர் மட்டுமே நல்லவன்மற்ற அனைவரும் தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்களே என்ற விமர்சனம் வாசகன் மனதில் எழலாம் (எழுந்து கொண்டும் இருக்கின்றது).  ஸ்டோனரின் கோணத்திலேயே முழு நாவலும் நகர்வதால் அப்படிப்பட்ட உணர்வு  நாவலில் தோன்றுவது  தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்றாலும்சற்று கூர்ந்து கவனித்தால் வில்லியம்ஸ் யாரையும் கொடியவர்களாக சித்தரிக்காமல்மனப் பொருத்தம் இல்லாத இருவர் தொடர்பில் வரும்போது ஏற்படும் மனக்கோணல் எத்தகைய வஞ்சத்தை உருவாக்கும் என்பதை மட்டுமே சொல்ல வருகிறார்  என்பது புரியும்.  மற்றவர்கள் கோணத்தில் எழுதப்படும்போது (அல்லது வாசகனே அப்படி யோசிக்கும்போது)  ஸ்டோனர் தரப்பில் உள்ள சில பிரச்சனைகள்  - மனைவியின் மனநிலைக்கு நேர்மாறாக,  பெரிய லட்சியங்கள் இன்றி அவர் இருப்பதே இல்வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்பிடிவாதத்தோடு ஒரு நிலையில் இருந்துஆனால் ஒரு கட்டத்தில் ஆயாசத்தோடு அதை விட்டுவிடுவதுஎதையும் இறுதி வரைக்கும் கொண்டு செல்ல இயலாத மனநிலை  -    இருக்கக்கூடும் என்று தெரிய வரலாம்.  ஸ்டோனரின் வாழ்வில் ஒரு பெண் வருகிறாள். அவர் மனதிற்கு மிக மிக அணுக்கமாக இருக்கும் அந்த உறவையும் அவர் முறித்துக் கொள்ள வேண்டியதாகிறது. மத்திய வயது ஆணின் நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை, அவருக்கு ஏற்படும்  இல்லறத்தைத் தாண்டிய காதல் என்ற வழமையான ஒன்றுதான் என்றாலும் அக்காதல் உருவாவதை மட்டுமின்றிஅது முறிவதையும் கண்ணியத்தோடு விவரிக்கிறார். அக்கண்ணியம் அவ்வுறவு குறித்த காத்திரமான/ தூய்மையான  பிம்பத்தை உருவாக்கி, - இலக்கியத்தில் இத்தகைய உறவுகள் குறித்த பரிச்சயம் இருந்தாலும் - வாசகனை அகம் நெகிழச் செய்கிறது.

இதெல்லாம் நடந்தது/ இவற்றை ஸ்டோனர் அடைந்தார் என்பதாக இல்லாமல்இவையெல்லாம் நடக்கவில்லை/ இவற்றையெல்லாம் அவர் இழந்தார் என்பதாக மட்டுமே ஸ்டோனரின் வாழ்கை விரிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அவர் மிகவும் விரும்பும் ஆசிரியப் பணியைச் செய்வதிலும் இடறி விழுந்துஅவர் விருப்பத்திற்கு மாறாக பணி மூப்பிற்கு தள்ளப்படுகிறார்.
இதிலும் அவர்  தோல்வியையே சந்திக்கிறார்.  நோயால் பீடிக்கப்படும் அவர்,    அந்திமக் கணங்களில்,  தான் மிகவும் விரும்பிய இலக்கியத்தின் (புத்தகங்களின்) அருகாமையில்அவற்றைப் பார்த்துக்கொண்டேஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது அவர் உயிர் பிரிகிறது. 

 மிக எளிய அறையில்இன்னொருவரின் மஞ்சத்தில் படுத்தபடிஅதிக பொருட்கள் இல்லாத அணிமேஜையைகலங்கிய முகக்கண்ணாடியைப் பார்த்தப்படி மரணிக்கும் பொலிவரைவிட தான் விரும்பிய சூழலில் மரணிக்கும் - நிராசையின் நிழலிலேயே வாழ்நாளை கழித்த - ஸ்டோனரின் அந்திமக் கணங்கள் சற்றே ஆசுவாசமளிப்பவையாக இருந்திருக்கக் கூடும் என்பது ஒரு நகை முரண் தான். 


மரணத்தைப் பற்றிய ஷெர்லியின் கவிதை 
"Only the actions of the just 
Smell sweet and blossom in their dust. "
என்று முடிகிறது. பொலிவரின் செயல்கள் குறித்து அவை  நியாயமா இல்லையா என்று வாதிட முடியும் என்றாலும்அவற்றின் செயற்கரியத் தன்மையைஅவர் ஒரு வரலாற்று நாயகர் என்பதை யாரும் மறுக்கவியலாது. அவருடைய அந்திமக் கணங்கள் நிராகரிப்பின் வலியில்தனிமையின் பிடியில் கழிந்திருக்கலாம். ஆனால் "the final brilliance of life that would never, through all eternity be repeated again" என்று அந்நாவல் முடியும்போது அனைத்தையும் சரி செய்து ,அவர் புகழ் (அவர் செயல்கள் குறித்த விமர்சனங்களோடு) என்றும் நீடித்திருக்கும் என்பதை வாசகனுக்கு உணர்த்துகிறது. 

ஆனால் ஸ்டோனரின் நிலை? அந்திம நேரத்தில் "What did you expect"   என்று தன் வாழ்க்கை குறித்து  அவர் மீண்டும் மீண்டும் தன்னையே கேட்டுக்கொள்வது வாசகனை மனமுடையச் செய்கிறது. யாரும் பார்க்காமலே மொட்டவிழ்ந்துயாரும் முகராமலே மணம் வீசி, யாருக்கும் இழப்பதற்கு இல்லாமல் உதிரும் பூ போன்ற வாழ்க்கையை மட்டுமே அவர் வாழ்ந்திருக்கிறாராஎந்த அர்த்தமும் அதற்கு இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் நாவலின் மீள் பார்வை செய்தால்முதலில் வாசகன் உணரக்கூடிய வாழ்க்கை சார்ந்த ஆயாசத்தையும்/ அவநம்பிக்கையையும் தாண்டி உண்மையில் எழுச்சிமிக்க  வாழ்க்கை அனுபவத்தையேஅத்தகைய  ஒரு வாழ்வையே ஸ்டோனர் வாழ்ந்திருக்கிறார் என்று வாசகன் உணர முடியும். 

ஸ்டோனர்  வாழ்வில் இரு சம்பவங்கள் இது குறித்த சிலத்  தெளிவுகளைத் தரக்கூடும். வேளாண்மை படிக்க வந்துள்ள ஸ்டோனரைநீ ஆசிரியராகப் போகிறாய் என்று அவருடைய ஆசிரியர் சொல்கிறார். அதுவரை அப்படி எண்ணிக்கூட பார்த்திராத ஸ்டோனர் புரியாமல் ஆசிரியரை நோக்க "It's love, Mr.Stoner,' Sloane said cheerfully. 'You are in love. It's as simple as that.'"   என்று சொல்கிறார். இன்னொரு நிகழ்வு.  தன் காதலை முறித்துக் கொள்வதைப் பற்றி ஸ்டோனர் பேசும் போது,   நாம் மற்றவர்களுக்கு பயந்தோஇதனால் நாம் சந்திக்கக் கூடிய இன்னல்களைத் தவிர்க்கவோ இதைச் செய்யப்போவதில்லை என்று சொல்லி "It is simply the destruction of ourselves, of what we do" என்பதால் காதலைத் துறக்கிறோம் என்று முடிக்கிறார்.

ஸ்டோனர் அனைத்திலும் தோல்வி அடைந்திருக்கலாம். சில விஷயங்களில் மாற்று கோணத்தை பார்க்க இயலாதவராக,
மனத்திடம் இல்லாதவராக இருந்திருக்கலாம்ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு நிகழ்வுகள் வாசகனுக்குச் சுட்டுவது என்னஅவருடைய முதற் பெருங்காதலான இலக்கியத்தை/ கற்பித்தலை அவர் எப்போதும் கைவிடவில்லை. "I want to thank you all for letting me teach" என்றே தன் மேல் திணிக்கப்பட்ட  பணி நிறைவு விழாவின் போது சொல்கிறார்.  காதலைத் துறக்கும்போது "..what we do" என்று அவர் குறிப்பிடுவதுதங்களைக் குறித்து அவர்களே கட்டமைத்துள்ள பிம்பத்தை மட்டுமின்றிஇலக்கியத்தை /கற்பித்தலையும் சுட்டுகிறது என்று உணரலாம்.   அதற்கேற்பதான் வகுத்துக் கொண்ட விழுமியங்களையும் (அவை மற்றவர்களின் கோணத்தில் தவறானவையாக - தன் காதலை முறிக்க அவர் சொல்லும்  காரணத்தைப் போல-  தேவையற்றவையாக இருக்கலாம்)ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் (இறுதி வரை தன் மனைவியிடம் இருந்து அவர் பிரிவதில்லைதன்னை ஒதுக்கிய மகள் இக்கட்டில் சிக்கும் போது அவள் தரப்பையே எடுக்க விழைகிறார்-   கைவிடாமல்அவற்றுக்கு  நியாயம் செய்யவே எப்போதும் முயல்கிறார். எதையும் வென்றிலன் எனும் போதும் அவரும் பொலிவரைப் போல் ஒரு நாயகரே.



Monday, February 15, 2016

நடை பிணங்களும் நாகரீகக் கோமாளியும்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/02/07/zombies-and-the-modern-jester-ajay-r/)
-------------
எங்குஎப்போது போர் நடந்தாலும்யுத்தம் சில வருடங்கள் நீடிக்கும் நிலையில்ஒரு  கட்டத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர்களோடு கல்லூரி படிப்பை அப்போதுதான் முடித்தவர்கள்இளைஞர்கள்நடுத்தர வயதினர் (ஒரு 40 வயது வரை) என பலதரப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.  யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு பயிற்சியும் அதிகம் அளிக்கப்பபடுவதில்லைகுறிப்பாக மன ரீதியாக அவர்களைத் தயார் செய்வதில்லை. போரின் பயங்கரத்திற்கு ஒருவரை பயிற்சியால் மன ரீதியாக முற்றிலும் தயார் செய்து விட முடியாது என்பது உண்மை. இருந்தும் அப்போதைய அவசரத்தில் அத்தியாவசிய பயிற்சியைத் தாண்டி எந்த புரிதலையும் அளிக்காமல் மந்தை மந்தையாக அவர்கள் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்இவர்கள் எந்தத் தரப்பாக இருந்தாலும்தங்கள் தரப்பில்  போர் உயர்ந்த விழுமியங்களுக்காக நடத்தப்படுகிறதுஅதற்காக பலியாவது பெரும் பேறு என்ற எளிய மனநிலைக்கு தள்ளப்பட்ட சூழலில் போரை எதிர்கொள்கிறார்கள்.  அங்கு அவர்கள் மயக்கங்கள் கலைகின்றன. 

இப்படி  தேசியம்அறம் போன்ற விழுமியங்களினால் ஈர்க்கப்பட்டு இராணுவத்தில் சேர்ந்து/ சேர்க்கப்பட்டுபோரின் உண்மை முகத்தைமனிதத்தின் மரணத்தைப்  பார்த்து சிறிது சிறிதாக உள்ளம் சிதையும்,   'All Quiet on the Western Front'  நாவலின்   மைய பாத்திரமான பால் (Paul Bäumer) முதல் போருக்குப் பின்னான வாழ்க்கையைப் பேசும் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான 'Redeployment' வரை இத்தகைய பல பாத்திரங்கள் (பெரும்பாலும் 20களில், 30களின் ஆரம்பத்தில் உள்ள இளைஞர்கள்)   உள்ளன.  இவற்றின் இறுக்கமான தொனிக்கு நேர்மாறாகதங்களை பிறழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளும் நிகழ்வுகளை அவல நகைச்சுவையோடு எதிர்கொள்ளும் பாத்திரங்கள் (யோஸாரியன்/ Yossarian), மூலம் போர் குறித்த விமர்சனங்களை முன்வைக்கும்   Catch-22 போன்ற நாவல்களும் உள்ளன. 

 நாவலின் கட்டமைப்பிலும்பாத்திரங்கள் போருக்கு எதிர்வினை புரியும் விதத்திலும்  பெரும் வேறுபாடு இருந்தாலும்பாலும் சரியோஸாரியனும் சரி தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளால் நடைபிணமாக மாறி  தங்கள் நாட்களை கடத்தும் இடத்தில் ஒன்றிணைகிறார்கள்.  Czech மொழியின் நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று போற்றப்படும்முதல் உலகப் போரின் பின்னணியில்போர் விமர்சன புனைவுகளின் மிக ஆரம்ப கட்டத்தில் ஹசேகால்  (Jaroslav Hašek)  எழுதப்பட்டதுமான  ,-  நான்கு தொகுதிகள் கொண்டமுற்று பெறாத - 'The Good Soldier Švejk' நாவலின் மைய பாத்திரம்   சிப்பாய்  ஷ்வேக் (Švejk) இவர்களிடமிருந்து மாறுபடுகிறான்.   

போர் குறித்த அறம் சார்ந்த கற்பிதங்கள்  எதுவும் அவனுக்கு கிடையாது. அதே போல்தன்னிலை குறித்து வருந்தி சித்தம் குலைபவனும் இல்லை அவன்.  போரில் ஈடுபடுவதை/ஈடுபடுத்தப்படுவதைத்    தவிர்க்க வேண்டும் அவன்  லட்சியம். 700 பக்கங்களுக்கு மேல் நீளும் இந்நாவல் முழுதும் அவன் செய்வதும் அதையே.  ஆனால் அதற்காகநடைபிணமாக மாறாமல்
தன் மேல் திணிக்கப்பட்ட போரில் உயிரையும்/ சித்தத்தையும் இழக்காமல் இருக்கபோர்க்களத்தையே  நாடக அரங்காக மாற்றி அதில் நாகரீகக் கோமாளியைப் போல் தன் கூத்தை நிகழ்த்துகிறான். ஆனால்  அவன்  மகிழ்விக்க நினைப்பது தன் மேலதிகாரிகளை அல்ல என்பதை  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என நாவலின் ஒரு  சம்பவம் மூலம் உணரலாம்.  ஷ்வேக்  ஒரு இடைவெளிக்குப் பிறகு தனது மேலதிகாரியைப் சந்திக்கிறான். மேலதிகாரி அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து விழிகளை மூடி,  செயலற்றுப் போகிறார். முன்பு ஷ்வேக் போர்க்களத்தில் அவர் உயிரைக் காப்பாற்றியதை எண்ணுகிறாராஇருவருக்குமிடையில் நெருங்கிய நட்புள்ளதா என்றெல்லாம் யோசிக்க  ஒன்றுமில்லை. காசிக்கு சென்றும் பாவம் தொலையாத கதையாகஒரு வழியாகத் தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த தன் பணியாளன் மீண்டும் வந்ததைக் கண்டு ஏற்பட்ட  பீதியும்அதிர்ச்சியும்  மட்டுமே அவருடைய அத்தகைய எதிர்வினைக்கான காரணம்.

அப்பாவியாகத் தோற்றமளிக்கும் முகத்தில்கனிவு ததும்பும் விழிகளுடன் இருப்பது  அவன் அணிந்திருக்கும் முகமூடியா அல்லது அவனது குணாதிசயமே முட்டாள்தனமாக நடந்து கொள்வதா என உறுதியாக சொல்லமுடியாத அவன் மேலதிகாரிகள் அவனை பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதென்று தாண்டிச் செல்லவும் முடியாமல்இறுதியில் அவனிடமிருந்து அவர்களே தப்பிச் செல்ல முயல்கிறார்கள்.  கீழே உள்ள இரு சித்திரங்கள் அதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.




சிப்பாய் என்றில்லைஎந்தவொரு  பணியாளனும் தன் மேலதிகாரி இப்படித்தான் தன்னிடம்  எதிர்வினை புரிய வேண்டும் என விரும்பக் கூடியதை  நிகழ்த்திக் காட்டும் பாத்திரமாக  ஷ்வேக் இருப்பது மற்ற 'போர் விமர்சனநாவல்களின்  முக்கியப் பாத்திரங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.  இன்னொரு வேறுபாடும் முக்கியமானது.   பாலும் சரியோஸாரியனும் சரி போரினால் தான் இத்தகைய  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்அமைதி நிலவும் ஒரு குடிமைச் சமூகத்தில் அவர்கள்தங்கள் சூழலுடன் பொருந்தியுள்ள பொறுப்பான  குடிமகன்களாக இருந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையும்அது நிகழவில்லையே என்ற ஏக்கமும் வாசகனுக்குள் தோன்றுகிறது. ஆனால்  ஷ்வேக் குறித்து அப்படி எந்த கற்பிதங்களும் நமக்கு ஏற்படுவதில்லை. எந்த சூழலிலும் அவன் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாதஅச்சூழலின் சமநிலையைக் குலைக்கும்  அராஜகவாதியாகவே (anarchist)  இருந்திருப்பான் என்றே நாவலின் போக்கிலிருந்து உணர முடிகிறது. கட்டற்ற வாழ்கை வாழ்ந்த நாவலின் ஆசிரியர்  ஹசேகின் ஆளுமை இப்பாத்திரத்தில் தெரிகிறது.   

1921ல் எழுத ஆரம்பிக்கப்பட்டு 1923ல் ஹசேகின் மரணத்தால் முற்று பெறாத இந்நாவலின் தாக்கத்தை Catch-22ல் காண முடிகிறது. ஹெல்லரும் இந்நாவலே தன்னை Catch-22 எழுத தூண்டியதாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது.   போர்க்கால இராணுவ  தந்திரங்கள் குறித்து அதிகம் தெரிந்திருக்காமல்,
தன் கீழ் பணியாற்றும் வீரர்கள் குறித்து எந்த கவலையும் கொள்ளாமல்தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவ்வீரர்களை களப்பலியாக கொடுக்கும் தளபதிகள்/ மேலதிகாரிகள்இராணுவ முகாம்களில் உள்ள  உணவகத்தில்/ உணவுப் பொருட்கள் காப்பகத்தில் நடக்கும் ஊழல்கள்அதீத ஆர்வத்தில் உள்ள சில இளம் சிப்பாய்கள்எங்கும் பரவியுள்ள அபத்தச் சூழல் என இரண்டு நாவல்களுக்கும் பொது அம்சங்கள் நிறைய உண்டென்றாலும் அவை வேறுபடும் இடங்களிலேயே முக்கியத்துவமும்தனித்துவமும் பெறுகின்றன.



 'All Quiet on the Western Front'ம், 'Catch-22'ம் அதன் முக்கியப் பாத்திரங்களின் இருத்தலியல் சிக்கல்களை முன்வைத்தே போர் குறித்த எதிர்மறை  கருத்துக்கள் சுட்டப்படுகின்றன. போரின் புவி அரசியல் (geopolitics) சூழல் போன்றவை சுட்டப்படுவதில்லை. 
எந்த இருத்தலியல் சிக்கல்களும் இல்லாத  ஷ்வேக்கின் விமர்சனத்தில் இருந்து  யாரும் தப்புவதில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய  எந்தத் தகுதியும் இல்லாத, வாய் ஜாலத்தை மட்டுமே நம்பும் இராணுவ உயரதிகாரிகள் குறித்த மிக மோசமான சித்தரிப்பே நாவல் முழுதும் உள்ளது. போதையின் பிடியில் உள்ள அதிகாரி ஒருவரின் சித்திரத்தில்  




சீருடையில் குத்தப்பட்டுள்ள பல பதக்கங்களுக்குக்ம் , முறுக்கிய மீசைக்கும் முற்றிலும் முரண்பாடாக உள்ள அவரது நிலை, இராணுவத்தின் ஆடை/உடல் பாராமரிப்பு சார்ந்த கட்டுப்பாடுகளை பகடி செய்வதாகவும் உள்ளது. . 

ஜெர்மானியர்கள்செர்பியர்கள்ஆஸ்திரியர்கள்ஹங்கேரியர்கள்,  இவர்களோடு  தன் சொந்த நாட்டு மக்களும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சச்சரவுகளைஒரு இனத்தவர் மேட்டிமைத்தன்மையோடு மற்ற நாட்டினர்  குறித்து கொண்டுள்ள (தவறான) இழிவான அபிப்ராயங்களை   நுட்பமான பகடிகளாக நாவலில் சுட்டிச் செல்கிறார் . பல சாம்ராஜ்யங்கள் சிதைந்துபுதிய அரசுகள் உருவான முதல் உலகப்  போரின் பின்னணியில் பார்க்கும் போது,  இப்பகடிகள் முக்கியத்துவம் - ஒரு நாடு ஏன் ஒரு குறிப்பிட்ட தரப்பை எடுத்தது என்பதை புரிந்து கொள்ள - பெறுகின்றன.  போரை தீரச்செயலாக பார்க்கும்வீரர்களுக்கு உணவு முதலிய உதவிகளை வழங்கும் முதிய சீமாட்டிகளும் - முதிய சீமாட்டி ஒருவரை விலை மகள் என்று எண்ணி சிப்பாய் ஒருவன் அதிருப்தி கொள்கிறான் -ஆஸ்திரிய அரசரும் கூட    பகடி செய்யப்படுகிறார்கள்.  20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூடஅரசர் கடவுளின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டுஅவரது அதிகாரம் தெய்வத்தின் மூலம் அளிக்கப்பட்டதாக (Divine Right) கருதப்பட்ட/ ஏற்றுக்கொள்ளப்பட்ட  -மக்களாட்சி என்ற கருத்தாக்கம்  இன்னும் பலமாக வேரூன்றாத - காலத்தில்இது ஒரு முக்கியமான கலகக் குரல்.  

கிருத்துவ மதமும் இவரிடம் சிக்குகிறது. வீரர்களின் மரணம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர்களை (மரணத்திற்காக) வாழ்த்தி,வழியனுப்பும் போதகர்கள்சொகுசான வாழ்வை  அனுபவிக்கும்,  நடைமுறை யதார்த்தம் குறித்து கொஞ்சமும் அறிந்திராதவர்களாகசூதாடிகளாககுடிகாரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். 


கட்டற்ற பித்து நிலையில் இயங்கும் நாவலென்றாலும்,  அப்பித்து நிலையின் உருவாக்கத்தின் பின்னால்  ஒரு முறைமை Catch-22ல் உள்ளது. சித்தம் பேதலித்த நிலை என்ற ஒரே விஷயத்தை நாவல் முழுதும் நுட்பமான வேறுபாடுகளுடன் முன்வைக்கும் ஹெல்லர் 
 நாவலின் விரவியுள்ள அபத்தத்தின் கீழுள்ள துயரத்தை/ கூர்மையான விமர்சனத்தை வாசகன் உணரச்செய்கிறார் .  "Frankly, I'd like to see the government get out of war altogether and leave the whole field to private industry." என்று  அந்நாவலின்  மிலோ (Milo Minderbinder)   கூறுவது அபத்தமாக தோன்றினாலும்போர் வர்த்தகமாக மாறுவதை சுட்டுகிறது. இன்று Blackwater போன்ற நிறுவனங்கள் சட்டத்தை நீங்கள் சரி செய்து கொடுங்கள்மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போர்த்தொழிலில் இறங்கிவிட்டன . "You're inches away from death every time you go on a mission. How much older can you be at your age?என்று கூறப்படும் தர்க்கத்தில் உண்மையும்அபத்தமும்துயரும்  ஒரு சேர தெரிகின்றன அல்லவா. 

'The Good Soldier Švejk' நாவலில் மிகப் பெரிய பலமான, 'ஷ்வேக்கின்யாரையும்/ எதையும் துச்சமென கருதும் போக்கே  (irreverent anarchy),  அதே அலட்சியம் நாவலின் கட்டமைப்பிலும் தெரியும் போது அதன் பலவீனமாகவும் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.     தன் மேலதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளும் ஷ்வேக்அதிலிருந்து தப்பிக்க கடந்த காலத்தில் நடந்ததாக சொல்லி ஒரு நிகழ்வை/ கதையை விவரிக்கிறான். அக்கதையில் குழம்பி மேலதிகாரிகள்விட்டால் போதும் என்று  ஷ்வேக்கை தண்டிப்பதில்லை. ஷ்வேக்கின் தந்திரத்தை உணர்த்தும் இவ்வுத்தி ஓரிருமுறை  சுவாரஸ்யமாக இருந்தாலும்தொடர்ந்து பல முறை எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாணியில் விவரிக்கப்படுவதுசலிப்பை ஏற்படுத்தக்கூடியது. 

எல்லாவற்றையும் கலைத்துப்  போடும் ஹசேக்அவற்றினுள் பொதிந்திருக்கும் இன்னொரு அடுக்கை வாசகனுக்கு சுட்டுவதில் 
கவனம் கொள்வதில்லை. ஒன்றைக் கலைத்துப் போட்டபின்அடுத்த கலகத்திற்கு தயாராகி விடுகிறார். யுத்த களத்திற்கு ரயிலில் செல்லும் ஒரு சிப்பாய் தவறிரயில் நிலையத்தில் உள்ள  கூர்முனைகள் கொண்ட கம்பிகளில் விழுந்து இறக்கிறான். கோர மரணம்.  அவன் சடலத்தை என்ன செய்வது என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்கஒரு சிப்பாய் மிகுந்த கடமை உணர்ச்சியோடு அதைக் காவல் காக்கிறான்.  நாவலின் போக்கில்இச்சம்பவத்தில் உள்ள அபத்தத்தை உணரும் வாசகன், அதில் பொதிந்துள்ள    துயரை - இத்தகைய பல நிகழ்வுகள்  நாவலில் உள்ளன -  உள்வாங்குவதற்குள்அடுத்த அபத்த நிகழ்வு அவனுக்காக காத்திருக்கிறது. 

Catch-22வைப் போலவே இந்நாவலிலும்  கேலிச் சித்திரமாக  (caricature) தோற்றமளிக்கும் -எப்போதும் தீராப் பசியில் இருக்கும்மேலதிகாரிகளின் உணவைக் கூட உண்டு விடும்  சிப்பாய்அமானுஷ்யத்தில்  ஈடுபாடுள்ள சமையல்காரர்  (occultist), அவரின் தத்துவங்கள்  (Form is non-being and non-being is form) - பாத்திரங்கள் இருந்தாலும், இவர்கள், அந்நாவலின் பாத்திரங்கள் போல் உயிர் கொள்வதில்லை. 

நாவலின் விரவி இருக்கும் அலட்சிய பாவம் மற்றும் இத்தகைய பாத்திர வார்ப்புக்கள் நாவலுக்கு சித்திரக்கதையின் (comics) தோற்றத்தைத்   தருவதால்,  ஒரு கட்டத்தில் 'Catch-22'ஐ விட   'Sad Sack' சித்திரத் தொடர்இந்நாவலுக்கு  நெருக்கமாக உள்ளதோ என  வாசகன் எண்ண  ஆரம்பிக்கிறான்.  

 இது இரு நாவல்களுக்குமிடையே தரம் குறித்த ஒப்பீடு அல்லஅதை இப்படி எளிமைப்படுத்தவும் இயலாது.  ஒரு பிரதியின் தாக்கத்தால் எழுதப்பட்ட மற்றொன்று தன் தனித்தன்மையை  எப்படி தகவமைத்துக் கொண்டு , சில இடங்களின் தன் மூல உந்துதலையே தாண்டிச் செல்கிறதுஅதே நேரம் மூலப் பிரதி எப்படி/ எதனால் தன் முக்கியத்துவத்தை/ தனித்தன்மையை இழக்காமல் உள்ளது  என்பதற்கான உதாரணமாக 'The Good Soldier Švejk'/ 'Catch-22' நாவல்களைப் பார்க்கலாம். 

  'All Quiet on the Western Front'  நாவலின் இறுதியில் பால் இறக்கிறான். 'Catch-22' நாவலின் இறுதியில் யோஸாரியன் தப்பிச் சென்றாலும், அவனுடைய பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வு குறித்த அச்சம் வாசகனுக்கு ஏற்படுகிறது. அதற்கேற்றார் போல் இந்நாவலின் தொடர்ச்சியான 'Closing Time'லும் அவன் போர்க்கால பாதிப்பிலிருந்து முற்றிலும் மீளவில்லை என்று தெரிந்து கொள்கிறோம். 'The Good Soldier Švejk' நாவல் முற்று பெறாவிட்டாலும்,  போரின் இறுதியில்  ஷ்வேக் எந்த பாதிப்பும் இல்லாமல் மீள்வான் என்பது குறித்து வாசகனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்லஅவன் வயது காரணமாக இரண்டாம் உலகப் போரில் அவன் ஈடுபட இயலாது என்று தெரிந்தாலும்ஒரு சூழலில் அதிலும் அவன் ஈடுபட நேர்ந்தால்மீண்டும் அப்போர்க்களத்தை நாடக மேடையாக்கி அதில் தன் கூத்தை அவன் அரங்கேற்றி வெற்றி பெறுவான் என்றே வாசகன் நம்புவான். ஒரு சாதாரணன், அரசு எந்திரத்திற்கு எதிராக - வளைவது போல் நடித்து -  வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும்  ஷ்வேக் Czech இலக்கியத்தின் மிகப் பிரபலமான, அம்மக்களுக்கு நெருக்கமான பாத்திரமாக, அவர்களை பிரதிபலிக்கும் ஒருவனாக இன்றும் கருதப்படுவதில்  எந்த வியப்புமில்லை. இப்புனைவுப் பாத்திரங்கள் ஒரு புறமிருக்கஇன்றும் உலகின் பலப்  போர்க்களங்களின் இப்படி நடைபிணங்களாகவோ , நாகரீகக் கோமாளிகளாகவோ எதிர்வினை புரிந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் நம்  பரிவுக்குரியவர்களே.     

பின்குறிப்பு: 
'The Good Soldier Švejk' நாவலுக்குபல மொழிபெயர்ப்புக்கள் உள்ள நிலையில் 'Cecil Parrot'ன் மொழிபெயர்ப்பு, எந்த சுருக்குதலும் இல்லாத  மூலப் பிரதிக்கு நெருங்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்நாவலை மொழிபெயர்ப்பதில் அவர் சந்தித்த சவால்கள், அதை அவர் எதிர்கொண்ட விதம், தவிர்க்க இயலாத சமரசங்கள், இவற்றைக்  குறித்து அவர் தன் அறிமுகத்தில் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோர் அனைவரும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

நான்கு தொகுதிகளுக்கும் 'Jospeh Lada' வரைந்துள்ள சித்திரங்கள், நாவலின் அடிநாதத்தோடு இயைந்து அதற்கு வலுசேர்க்கின்றன.  


Monday, February 8, 2016

அகமும் புறமும் உயிர் கொள்ளும் துர்க்கனவுகள் – பென் ஒக்ரியின் (Ben Okri) ‘Stars of the New Curfew’

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2016/01/31/ben-okri/
------------------
பென் ஒக்ரியின் (Ben Okri)  'Stars of the new Curfew' தொகுப்பில் ''Worlds that flourish' கதையின் கதைசொல்லியிடம்அவர் அண்டை வீட்டுக்காரர், "விழி இழந்தவன் போல் நடந்து கொள்கிறாயே"  என்று கேட்கிறார். கதைசொல்லி விழி இழந்தவர் அல்ல என்றாலும்  கதைசொல்லி  எதையும் கூர்ந்து கவனிப்பதில்லை என்பதைச் சுட்டும் விதமாக அவ்வாறு கேட்கிறார்..  ஒரு கட்டத்தில்  தன்னைச் சுற்றி நடப்பதை அவர் கூர்ந்து நோக்க ஆரம்பிக்கும்போது, தான் இதுவரை கவனிக்காதகொடுங்கனவாய் தோற்றமளிக்கும் வாழ்விலிருந்து தப்பிக்க எண்ணி நகரை விட்டு நீங்கி ஆன்மாக்களின்  (spirits ) உறைவிடமாக  உள்ள ஓர் உலகினுள் பிரவேசிக்க நேர்கிறது.  அந்த உலகும் பீதியளிப்பதாக இருக்கவே, கதைசொல்லி அதிலிருந்தும் மீட்சி தேட வேண்டியதாகிறது.. 

பணத்திற்காக அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், 5-6 இராணுவ வீரர்களால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உடலுறவை வெறுத்து வேறு சில  இராணுவ வீரர்கள் தன்னை நெருங்குவதைக் கண்டு தன் மணிக்கட்டை அறுத்துக் கொள்ளும் பெண்நாட்டை ஆள்பவரின் பிறந்த நாள் கேளிக்கைகளை காணச் சென்று  இறுதியில் வானூர்திகள் தூவிச் செல்லும் துண்டுப் பிராசார காகிதங்களை பசியோடு தங்கள் வெறுமை சூழ்ந்த மனைகளுக்கு எடுத்துச் செல்பவர்கள் என   கொடுங்கனவாக உருவெடுக்கும் தங்கள் புற/அக உலகங்களின்  பிழற்சியை முதல் முறையாக காண நேர்ந்த பின்ஒன்றிலிருந்து தப்ப   இன்னொன்றில் சிக்கி, எவ்வுலகிலும்  ஆசுவாசம் அடையமுடியாத  இக்கட்டில் உள்ள மனிதர்களை இந்தக்  கதைத் தொகுப்பில் பார்க்கிறோம்.

வெளிப்படையாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் 'Laos' நகர்/ அதன் புறநகர்/ கிராமப்புற பகுதிகளே இந்தக் கதைகளின் களன்  என்று புரிந்து கொள்ளலாம். மூன்றாம் உலக நாடுகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை மேற்குலகு  தகமவைத்துக் கொள்ள/ உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படும்அவர்களை வாசக இலக்காகக் கொண்ட எழுத்துக்கள் என்று தேசியக் கோணத்தில் இத்தொகுதியை ஒருவர் விமர்சிக்கலாம். அப்படிச்  செய்வதெனில்  'The Wizard of the Crow' முதல் 'தர்பாரி ராகம்வரையிலான நாவல்களையும் இதே கோணத்திலிருந்தே எளிதில் புறந்தள்ள முடியும்.   தொகுப்பின் களத்தில் வாழ்ந்தவர் ஒருவரேஅவரும் கூட தன் அனுபவங்களுக்கேற்ப மட்டுமே இந்தக் களத்தை பற்றி கூற முடியும் என்ற நிலையில் அத்தகைய விமர்சனத்தை இத்தொகுதி குறித்து அவசர கதியில் முன்வைக்க முகாந்திரம் இல்லை. 

ஜனநாயக நடைமுறையற்ற அதிகார துஷ்ப்ரயோகத்தைஅதன்கீழ் மக்கள் நசுக்கப்படுவதை முகத்திலறையும் விதமாக நேரடியாகவோ அல்லது பகடியில் பொதிந்து வைத்தோ இந்தக் கதைகள் பேசுவதில்லை. "Everything shimmered like mirages in an omnipotent heat"  என்று ஒக்ரி விவரிப்பதற்கேற்ப,   எங்கும்/ எப்போதும்  நிறைந்திருக்கும் வெப்பம்அவ்வெப்பத்தினூடாக அன்றாட வாழ்வை கடத்த முயலும் மக்கள் திரள்அத்திரளின் மூச்சடைக்க வைக்கும் வியர்வை வீச்சம்இவையனைத்தையும் மட்டுப்படுத்த முயன்று  அதில் பரிதாபமாக தோற்கும் மின்விசிறிகள் என்ற மெய்ம்மையுடன் புறஉலகு உருவாக்கும் நெருக்கடி இட்டுச் செல்லும் சுய அழிப்பு பாதையின்   - பாத்திரங்களின்  அகக் கொந்தளிப்புக்கான குறியீடாக  உள்ள -  கானல் நீராக தோற்றமளிக்கும்மீன் மழை பொழிதல்நீர் பெருக்கெடுத்துச் செல்லும் சாக்கடைகளில் மிதந்து வரும் குழந்தைகளின் உடல்கள்மூன்று தலை மனிதர்கள், என்ற இணை உலகை  முயங்கச் செய்கிறார். இத்தகைய மிக விரிவான காட்சிப் படிமங்களை ஒக்ரி உருவாக்குவது அவர் எழுத்தின் வெற்றி என்றாலும், அவற்றுள் அவர் பொதிந்து வைத்திருப்பதை வாசகன் கடந்து சென்று, அவனைச் சலனப்படுத்தும் காட்சி பிம்பங்களாக மட்டுமே  இக்கதைகள் தங்கிவிட வாய்ப்புள்ளது. 

'Stars of the new Curfew' கதையில் இதை விரிவாக பார்க்கலாம். இதன் கதைசொல்லிமுறையாக பரிசோதனை செய்யப்படாமல் சந்தைப்படுத்தப்படும் மருந்துகளின் விற்பனையாளராக உள்ளார். இம்மருந்துகளால் பல மோசமான பக்க விளைவுகள் உருவாகின்றன (குடல் புழுக்களை அழிக்க அளிக்கப்படும் மருந்து குடலையே வெளியேற்றும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக உள்ளது). கதையின் ஆரம்பத்தில் கதைசொல்லி மருந்து விற்கும் பேருந்துகளில் உள்ள கூட்ட நெரிசல்விற்பனை செய்ய அவர் செய்யும் கோமாளி சேஷ்டைகள்அவர் முதலாளியின் விசித்திர நடவடிக்கைகள் (விற்பனைக்குச் செல்லும் முன் அனைத்து விற்பனையாளர்களுக்கும் வலுக்கட்டாயமாக அவர்கள் விற்பனை செய்யும் மருந்தையே புகட்டுவது) என அவல நகைச்சுவையோடு 
நகரும் கதைகதைசொல்லி தான் விற்பனை செய்யும் மருந்துகளால் பலர் பாதிக்கப்படுவது குறித்த கனவுகளால் (முதலாளி இவர் உடலின் பாகங்களை ஏலம்  விடுகிறார்)  உறங்க முடியாத அளவிற்கு அல்லலுறுவது என  வேறு தடத்திற்கு மாறுகிறது. பிறகு ஒரு நிகழ்வின் பாதிப்பிலிருந்து தப்பிக்க தான்  பிறந்து வளர்ந்த நகருக்குச்  செல்லும் அவர்தன் பால்ய கால நண்பர்களை சந்திக்கிறார். இரு பெரும்புள்ளிகளின் போட்டிக்களமாக உள்ள அவர் நகரில்மாந்த்ரீகம்அதைச் சார்ந்த சடங்குகளின்   பின்னணியில் இன்னொரு யுத்தமாக ஒரு விழா நடக்கிறது. அதில் அவர் காணும் காட்சிகள் அவரைத்  துரத்த திரும்பி வந்து மீண்டும் அதே மருந்து விற்பனை வேலையில் சேர்கிறார்.

யதார்த்தமும்அதிகற்பனையும் மாறி மாறி வரும் இந்தக் கதையில் முதல் பதிவாக அதன் காட்சிப் பிம்பங்களே நிற்கின்றன. ஆனால் வேறு வேலை கிடைக்காததால்தான் இதில் சேர்ந்ததாகச் சொல்லும் கதைசொல்லி "Everybody seemed to need a cure for something" என்றுரைக்கும்போது,  அவரது இயலாமையை  மட்டுமல்லசிகிச்சை மனிதர்களின் உடலுக்கும்/ உள்ளத்திற்கும் மட்டுமல்லஅந்நாட்டிற்கே தேவை என்பதாக புரிந்து கொள்ளலாம். 
மீண்டும் வேலைக்குச் சேர்ந்தப் பின் அவரைத் துரத்திய துர்க்கனவுகள் நீங்குகின்றன. ஆனால் "I had begun to see our lives as a bit of a nightmare. I think I prefer my former condition," என்று கதை முடியும்போதுதூக்கத்தைத் தொலைத்துபயங்கர காட்சிகள் தோன்றும் கனவிலி  வாழ்வைவிட அன்றாட வாழ்வு அதிகம் அச்சுறுத்துவதாக உள்ளது என ஒருவர் சொல்லும்போது, அவ்வாழ்வை வாசகன்  எவ்வாறு புரிந்து கொள்ள?

கனவிலி வாழ்வை மேம்பட்டது   என இவர்கள் எண்ணினாலும்இவ்வுலகை கைவிடவும் இவர்கள் விரும்புவது இல்லை. அதனால் தான் வாழ்விற்கும்/ இறப்பிற்கும் இடையிலேயான காலகட்டத்தை ஆன்மாக்களின் உலகில் கழிக்கும் '''Worlds that flourish' மற்றும் 'What the Tapster saw' கதைகளின் கதைசொல்லிகள் மீண்டும் நம் உலகிற்கே திரும்புகிறார்கள். வாழ்வின் விழைவே இவர்களை தாங்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்ப்பாடுகளைத் தாண்டிச் செல்ல உந்துகிறது. போலி மருந்து விற்பனைரத்த தானம்ஜேப்படி செய்வது என தார்மீக ரீதியில் இவர்கள் செய்வது சரி அல்ல என்று சொல்வதை விடஉண் அல்லது உண்ணப்படு என்ற விதியமைந்துள்ள உலகில் அவர்களின் தேர்வை இயல்பான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. 

நனவிலிக்கும் கனவிலிக்கும் இடையிலேயான நடனம் 'When the lights return' என்ற கதையில்  உச்சத்தை அடைகிறது. ஏட்டே (Edde) என்னும் இசைக் கலைஞன் தான் பிணக்கு கொண்டு கடிந்து கொண்ட , சில வாரங்களாக சென்று பார்க்காத தன் காதலியைப் பார்க்க நகரமெங்கும் மின்வெட்டு நேர்ந்துள்ள ஒரு பின்மாலை/ முன்னிரவு நேரத்தில் செல்கிறான்.  வாகனங்கள் கொஞ்சம் கூட நகர முடியாத போக்குவரத்து நெரிசலால்,  வீடுகளிலும்/ கடைகளும் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்திகள்/ விளக்குகளின் ஒளியில் 
எங்கும் சூழ்ந்துள்ள புகை/ தூசியினூடே அவள் வீட்டிற்கு நடந்தே செல்கிறான்.    பெரும்பாலும் இருள் சூழ்ந்துள்ள அந்நேரத்தில் அவன் தன்னைச் சுற்றியுள்ளவற்றை பார்க்க ஆரம்பிக்கிறான் என்பது ஒரு நகைமுரண். குப்பைக்கூளத்தில் எறியப்பட்டிருக்கும் - திடீரென எழுந்து புரட்சி செய்யச் சொல்லும் - பிணம்பதாகை ஏந்திய தீர்க்கதரிசினி என அவன் காணும் காட்சிகள் அவன் மனத்தைக் குலைக்கின்றன. அதை கவனித்துக் கொண்டே இருப்பதில்  இராணுவ வீரன் ஒருவனுடன் அவனுக்குப் பிணக்கு ஏற்படுகிறது. பின் அவன் எப்படியோ காதலி வீட்டை அடைய கதை துன்ப முடிவு அடைகிறது.  "It was as if a nameless instrument, whose terrible music is fashioned out of the extremes of human chaos, were being strained to cracking point." என்று அவன் எண்ணுவது அவன் நடந்து செல்லும் வழியில் காணும் ஒழுங்கின்மையை மட்டுமல்லஇத்தொகுப்பின் அடிநாதமாக உள்ள அந்நாட்டின் எல்லாத்  துறைகளிலும் பரவியுள்ள பெரும் சீர்குலைவின் பிரதிபலிப்பாகும். 


'In the Shadow of War' கதையில் ஒமொவோ (Omovo) என்ற சிறுவன் தன் கிராமத்தில் ஒரு பெண் குறிப்பிட்ட நேரத்தில் அருகில் உள்ள காட்டிற்குள் செல்வதைக்  கவனிக்கிறான். புரட்சியாளர்களுக்கு உதவி செய்பவரான அப்பெண்ணை ஒரு நாள் அவன் தொடர்ந்து செல்லஅவள் இராணுவ வீரர்களால் கொல்லப்படுவதைப் பார்த்து பயந்து ஓடும் போது தடுமாறி விழுந்து மயங்கி விடுகிறான். மீண்டும் சுய நினைவு வந்து அலறும்போது  அவன் வீட்டில் இருக்கிறான். அவன் அறைக்கு வரும்  தந்தையுடன் அந்த இராணுவ வீரர்களைப் பார்த்து அவன் ஏதோ சொல்ல முயலஅவன் தந்தை இவர்கள் தான் உன்னைக் காப்பாற்றினார்கள் என்று சொல்கிறார்.  ஒமொவோ  தான் கண்டதைச் சொல்ல ஆரம்பிக்க,  அவ்வீரர்களை நோக்கி மன்னிப்புக் கோரும் சிரிப்பை உதிர்த்தவாறு அவனை படுக்கை அறைக்கு தூக்கிச் செல்கிறார் அவன் தந்தை. கதை இங்கு முடிகிறது. மகனைக் காக்க வேண்டும் என்ற அத்தந்தையின் நோக்கம் நமக்குப் புரிகிறது.  அவன் கண்டது ஒரு கனவு என்றோ அவன் கண்டதை தவறாகப் புரிந்து கொண்டான் என்றோ அவனை அவர் சமாதானப்படுத்தக்கூடும். ஆனால் அதனால் சாதகமான விளைவு ஏதேனும் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவே.  ஒமொவோவின் அக/புற விழிகள் திறக்கப்பட்டு விட்டன. அவற்றின் பார்வையில்  செழித்து வளரப்போகும் உலகங்களுக்கான  ('Worlds that flourish')  அடித்தளம் அவன் அகத்தில் போடப்பட்டு விட்டது. இன்னும் சில காலத்திற்குள்,  இத்தொகுப்பின் மற்றப் பாத்திரங்களைப் போல, அப்  புற/அக உலகங்கள் உருவாக்கும் நெருக்கடிகளை அவனும் தன் வாழ்நாள் முழுதும் எதிர்கொண்டிருப்பான்.