பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/02/18/ajay-note/)
------
------
‘A Little Love Story’ என்ற தலைப்பு மட்டுமல்ல, “Everything is just as it always was, it seems nothing has changed…”, என்று ஆரம்பிக்கும் முதல் பத்தி, “… Only that summer’s gone…” என்று கோடைப் பருவம் மாறிவிட்டதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்போது, இனி திரும்பி வர இயலாத காலத்தின் ஒரு துளியை மட்டுமல்ல, அந்தக் காலத்தில் உறைந்துப் போயுள்ள, இனி மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லாத காதலைப் பற்றிய கதை இது என்று உணர்த்தி விடுகிறது ((‘Shall I compare thee to a summer’s day?’ என்ற கவிதையில் ஷேக்ஸ்பியர், பருவ நிலையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு காலப்போக்கில் எல்லாம் அழிந்தாலும், “But thy eternal summer shall not fade,” என்று தன் காதலைச் சொல்கிறார். ஆங்கில இலக்கியத்தில் உணர்ச்சி வேகத்தையும் இளமையையும் உணர்த்தும் படிமமாக கோடைப் பருவம் உள்ளது)). அடுத்து, இலையுதிர் காலத்தைப் பற்றிய சிறிய, செறிவான வர்ணனை தொடர்கிறது இங்கு ஏன் இலையுதிர் காலத்தைச் சுட்ட வேண்டும் என்று கதையில் போக்கில் புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.
இப்போது கதைசொல்லியின் ஒரு கோடை கால நினைவோடைக்குள் வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். இதில் திடீரென்று ‘இது பற்றியெல்லாம் உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்?’ என்று கதைசொல்லி/ ஆசிரியர் வாசகனிடம் நேரடியாகக் கேட்கும் சித்து வேலையும் நடக்கிறது. இன்று இத்தகைய உத்திகள் மலிந்து விட்டன. Tristram Shandy போன்ற நாவல்கள் இவற்றை இன்னும் முன்னரே செய்திருந்தாலும், 1900களின் ஆரம்பப் பகுதிகளில் இத்தகைய உத்திகள் இன்னும் வியப்பை உருவாக்கக் கூடியவையாகவே இருந்திருக்கக் கூடும். கதையின் ஓட்டத்திற்கு இது பொருத்தமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.
அடுத்து, கதைசொல்லி தன்னைக் குறித்தும் சொல்கிறார். இப்போது, கதையில் முதல் பத்திகள் அவர் குறித்து உருவாக்கக் கூடிய நெகிழ்வான சித்திரத்திற்கு நேர்மாறாக இருக்கிறார் அவர். பெண்களைப் போகப் பொருளாக, இச்சையின் வடிகாலாக மட்டுமே பார்த்தவனாக (” I wanted every girl I saw, I wanted to possess her”) தான் அந்தக் கோடையின்போது இருந்ததாக சொல்கிறார். தன் காதலி குறித்தும் அவருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை, அவள் செவிடாகவும்/ ஊமையாகவும் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார். அதே நேரம், தான் அப்போது மூர்க்கமான மனிதனாக இருந்தேன் என்பதை இப்போது ஒப்புக் கொள்ளுமளவிற்கு காலம் அவரைக் கனியச் செய்துள்ளது.
ஒரு நாள் அவர் காதலி, தயக்கத்துடன், நீ ஏன் என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய், என்று கேட்கிறார். இதை அவர் கழிவிரக்கத்துடனோ, அவனிடமிருந்து தன்னைக் குறித்த புகழ்ச்சியை சுற்றி வளைத்து வரவழைக்கவோ கேட்கவில்லை என்பதையும், அவள் நுண்ணுணர்வு உள்ளவர் என்பதையும் ” You don’t love me at all, …” என்று அவர் தொடர்ந்து பேசுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கும் நம் கதைசொல்லி மிக மட்டமான பதிலையே சொல்கிறான். அவன் குணாதிசயமே இதுதான் என்றாலும், தன் உள்ளத்தை அவள் ஊடுருவிப் பார்க்கிறாள் என்பதும், அதில் (அவளைக் குறித்து அவன் எண்ணுவது) காண்பதைக் குறித்து அவள் அதிகம் வருத்தமடைவது போல் தெரியவில்லை என்பதும் கதைசொல்லியின் அகங்காரத்தைச் சீண்டி அவனை அப்படியொரு இழிவான எதிர்வினைக்குத் தூண்டியிருக்கக் கூடும்.
இப்போதும் அவன் காதலி தன்னிலை இழப்பதில்லை. “You poor thing” என்று கூறி அவனை மென்மையாக முத்தமிட்டு அவனை விட்டு நீங்குகிறாள். அவள் செய்கையில் காதலோ, வருத்தமோ தெரிவதில்லை. இவன் வாழ்வு முழுதும் அலைக்கழிந்து கொண்டே இருப்பான் என்பது அவளுக்கு புலப்பட அது குறித்த பரிதாப உணர்வோடேயே அவள் செல்கிறாள்.
”On Chesil Beach’ நாவலில், வேறொரு சூழ்நிலையில், ஆனால் ஒரு விதத்தில் இக்கதையின் பாத்திரங்களைப் போல் அதே கொதிநிலையில் உள்ள தம்பதியரின் வாழ்வு எப்படி “This is how the entire course of a life can be changed: by doing nothing-.” முற்றிலும் மாறுகிறது என்று சொல்லப்படுகிறது. நம் கதைசொல்லி, ஒன்றுமே செய்யாமல் இல்லை, அவள் விலகிச் செல்லும்போது பத்தடி தொடர்ந்து செல்பவன், அதற்குப் பின் திரும்பி விடுகிறான். இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருந்தால் அவன் வாழ்வு மாறி இருக்கக் கூடும், ஆனால் முதலில் மனதளவில் எடுத்து வைக்க வேண்டிய காலடியே முடியாமல் போகும் போது, அவன் நின்று விடுகிறான்.
இதுவரை, சிற்சில நுட்பங்கள் இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது வழமையான கதையாக இருந்தது, “Only ten paces. But for that brief interval of time, this tiny love blazed heartfelt and intense, filled with splendor like a fairy tale,” என்று முடியும்போது இன்னொரு தளத்தை எட்டுகிறது. இப்போது கதையின் ஆரம்பத்தில் அவன், திரும்ப வர முடியாத கோடையை நினைத்துப் பார்ப்பதற்கு அர்த்தம் கிடைக்கிறது.
கோடையில் அக்காதல் வெந்தழிந்தபின் அவன் பல வசந்தங்களைப் (உறவுகளிலும்) பார்த்திருப்பான். இப்போது காலநிலை மட்டுமல்ல அவன் வாழ்வும், இலையுதிர் காலத்தில் இருக்கக் கூடும் (கோடையில் இளமை வேகம் என்றால் இலையுதிர் காலம் மனமுதிர்ச்சியை சுட்டும் படிமம் என்று கருதலாம்).. அதனாலேயே அகங்காரம் உதிர்ந்து, தன் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருந்ததை வெளிக்கொணர்ந்து அதை நோக்கும் முதிர்ச்சியை, கனிவை அவன் அடைந்திருக்கக்கூடும். தன் காதல் குறித்து “..Not a love like Romeo and Juliet, that lasts beyond the grave.” என்று இப்போது என்ன சொன்னாலும் உண்மையில் அக்கோடையில் தீ பற்றிய அவன் உள்ளமும் சரி காதலும் சரி பிறகெப்போதும் அணையவேயில்லை என்பதும் கதைசொல்லியைப் பொருத்தவரையிலேனும் (இவர்கள் பிரிந்த பிறகு அப்பெண் குறித்து கதையில் வேறு எதுவும் சொல்லப்படாததால்) எப்போதும் தன் கோடைக் காதலின் தழல் அவனைச் சுட்டெரித்துக் கொண்டே இருக்கும் என்றும் புரிகிறது.
கதையை இங்கு வாசிக்கலாம் – ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)
No comments:
Post a Comment