Monday, February 8, 2016

அகமும் புறமும் உயிர் கொள்ளும் துர்க்கனவுகள் – பென் ஒக்ரியின் (Ben Okri) ‘Stars of the New Curfew’

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2016/01/31/ben-okri/
------------------
பென் ஒக்ரியின் (Ben Okri)  'Stars of the new Curfew' தொகுப்பில் ''Worlds that flourish' கதையின் கதைசொல்லியிடம்அவர் அண்டை வீட்டுக்காரர், "விழி இழந்தவன் போல் நடந்து கொள்கிறாயே"  என்று கேட்கிறார். கதைசொல்லி விழி இழந்தவர் அல்ல என்றாலும்  கதைசொல்லி  எதையும் கூர்ந்து கவனிப்பதில்லை என்பதைச் சுட்டும் விதமாக அவ்வாறு கேட்கிறார்..  ஒரு கட்டத்தில்  தன்னைச் சுற்றி நடப்பதை அவர் கூர்ந்து நோக்க ஆரம்பிக்கும்போது, தான் இதுவரை கவனிக்காதகொடுங்கனவாய் தோற்றமளிக்கும் வாழ்விலிருந்து தப்பிக்க எண்ணி நகரை விட்டு நீங்கி ஆன்மாக்களின்  (spirits ) உறைவிடமாக  உள்ள ஓர் உலகினுள் பிரவேசிக்க நேர்கிறது.  அந்த உலகும் பீதியளிப்பதாக இருக்கவே, கதைசொல்லி அதிலிருந்தும் மீட்சி தேட வேண்டியதாகிறது.. 

பணத்திற்காக அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், 5-6 இராணுவ வீரர்களால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உடலுறவை வெறுத்து வேறு சில  இராணுவ வீரர்கள் தன்னை நெருங்குவதைக் கண்டு தன் மணிக்கட்டை அறுத்துக் கொள்ளும் பெண்நாட்டை ஆள்பவரின் பிறந்த நாள் கேளிக்கைகளை காணச் சென்று  இறுதியில் வானூர்திகள் தூவிச் செல்லும் துண்டுப் பிராசார காகிதங்களை பசியோடு தங்கள் வெறுமை சூழ்ந்த மனைகளுக்கு எடுத்துச் செல்பவர்கள் என   கொடுங்கனவாக உருவெடுக்கும் தங்கள் புற/அக உலகங்களின்  பிழற்சியை முதல் முறையாக காண நேர்ந்த பின்ஒன்றிலிருந்து தப்ப   இன்னொன்றில் சிக்கி, எவ்வுலகிலும்  ஆசுவாசம் அடையமுடியாத  இக்கட்டில் உள்ள மனிதர்களை இந்தக்  கதைத் தொகுப்பில் பார்க்கிறோம்.

வெளிப்படையாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் 'Laos' நகர்/ அதன் புறநகர்/ கிராமப்புற பகுதிகளே இந்தக் கதைகளின் களன்  என்று புரிந்து கொள்ளலாம். மூன்றாம் உலக நாடுகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை மேற்குலகு  தகமவைத்துக் கொள்ள/ உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படும்அவர்களை வாசக இலக்காகக் கொண்ட எழுத்துக்கள் என்று தேசியக் கோணத்தில் இத்தொகுதியை ஒருவர் விமர்சிக்கலாம். அப்படிச்  செய்வதெனில்  'The Wizard of the Crow' முதல் 'தர்பாரி ராகம்வரையிலான நாவல்களையும் இதே கோணத்திலிருந்தே எளிதில் புறந்தள்ள முடியும்.   தொகுப்பின் களத்தில் வாழ்ந்தவர் ஒருவரேஅவரும் கூட தன் அனுபவங்களுக்கேற்ப மட்டுமே இந்தக் களத்தை பற்றி கூற முடியும் என்ற நிலையில் அத்தகைய விமர்சனத்தை இத்தொகுதி குறித்து அவசர கதியில் முன்வைக்க முகாந்திரம் இல்லை. 

ஜனநாயக நடைமுறையற்ற அதிகார துஷ்ப்ரயோகத்தைஅதன்கீழ் மக்கள் நசுக்கப்படுவதை முகத்திலறையும் விதமாக நேரடியாகவோ அல்லது பகடியில் பொதிந்து வைத்தோ இந்தக் கதைகள் பேசுவதில்லை. "Everything shimmered like mirages in an omnipotent heat"  என்று ஒக்ரி விவரிப்பதற்கேற்ப,   எங்கும்/ எப்போதும்  நிறைந்திருக்கும் வெப்பம்அவ்வெப்பத்தினூடாக அன்றாட வாழ்வை கடத்த முயலும் மக்கள் திரள்அத்திரளின் மூச்சடைக்க வைக்கும் வியர்வை வீச்சம்இவையனைத்தையும் மட்டுப்படுத்த முயன்று  அதில் பரிதாபமாக தோற்கும் மின்விசிறிகள் என்ற மெய்ம்மையுடன் புறஉலகு உருவாக்கும் நெருக்கடி இட்டுச் செல்லும் சுய அழிப்பு பாதையின்   - பாத்திரங்களின்  அகக் கொந்தளிப்புக்கான குறியீடாக  உள்ள -  கானல் நீராக தோற்றமளிக்கும்மீன் மழை பொழிதல்நீர் பெருக்கெடுத்துச் செல்லும் சாக்கடைகளில் மிதந்து வரும் குழந்தைகளின் உடல்கள்மூன்று தலை மனிதர்கள், என்ற இணை உலகை  முயங்கச் செய்கிறார். இத்தகைய மிக விரிவான காட்சிப் படிமங்களை ஒக்ரி உருவாக்குவது அவர் எழுத்தின் வெற்றி என்றாலும், அவற்றுள் அவர் பொதிந்து வைத்திருப்பதை வாசகன் கடந்து சென்று, அவனைச் சலனப்படுத்தும் காட்சி பிம்பங்களாக மட்டுமே  இக்கதைகள் தங்கிவிட வாய்ப்புள்ளது. 

'Stars of the new Curfew' கதையில் இதை விரிவாக பார்க்கலாம். இதன் கதைசொல்லிமுறையாக பரிசோதனை செய்யப்படாமல் சந்தைப்படுத்தப்படும் மருந்துகளின் விற்பனையாளராக உள்ளார். இம்மருந்துகளால் பல மோசமான பக்க விளைவுகள் உருவாகின்றன (குடல் புழுக்களை அழிக்க அளிக்கப்படும் மருந்து குடலையே வெளியேற்றும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக உள்ளது). கதையின் ஆரம்பத்தில் கதைசொல்லி மருந்து விற்கும் பேருந்துகளில் உள்ள கூட்ட நெரிசல்விற்பனை செய்ய அவர் செய்யும் கோமாளி சேஷ்டைகள்அவர் முதலாளியின் விசித்திர நடவடிக்கைகள் (விற்பனைக்குச் செல்லும் முன் அனைத்து விற்பனையாளர்களுக்கும் வலுக்கட்டாயமாக அவர்கள் விற்பனை செய்யும் மருந்தையே புகட்டுவது) என அவல நகைச்சுவையோடு 
நகரும் கதைகதைசொல்லி தான் விற்பனை செய்யும் மருந்துகளால் பலர் பாதிக்கப்படுவது குறித்த கனவுகளால் (முதலாளி இவர் உடலின் பாகங்களை ஏலம்  விடுகிறார்)  உறங்க முடியாத அளவிற்கு அல்லலுறுவது என  வேறு தடத்திற்கு மாறுகிறது. பிறகு ஒரு நிகழ்வின் பாதிப்பிலிருந்து தப்பிக்க தான்  பிறந்து வளர்ந்த நகருக்குச்  செல்லும் அவர்தன் பால்ய கால நண்பர்களை சந்திக்கிறார். இரு பெரும்புள்ளிகளின் போட்டிக்களமாக உள்ள அவர் நகரில்மாந்த்ரீகம்அதைச் சார்ந்த சடங்குகளின்   பின்னணியில் இன்னொரு யுத்தமாக ஒரு விழா நடக்கிறது. அதில் அவர் காணும் காட்சிகள் அவரைத்  துரத்த திரும்பி வந்து மீண்டும் அதே மருந்து விற்பனை வேலையில் சேர்கிறார்.

யதார்த்தமும்அதிகற்பனையும் மாறி மாறி வரும் இந்தக் கதையில் முதல் பதிவாக அதன் காட்சிப் பிம்பங்களே நிற்கின்றன. ஆனால் வேறு வேலை கிடைக்காததால்தான் இதில் சேர்ந்ததாகச் சொல்லும் கதைசொல்லி "Everybody seemed to need a cure for something" என்றுரைக்கும்போது,  அவரது இயலாமையை  மட்டுமல்லசிகிச்சை மனிதர்களின் உடலுக்கும்/ உள்ளத்திற்கும் மட்டுமல்லஅந்நாட்டிற்கே தேவை என்பதாக புரிந்து கொள்ளலாம். 
மீண்டும் வேலைக்குச் சேர்ந்தப் பின் அவரைத் துரத்திய துர்க்கனவுகள் நீங்குகின்றன. ஆனால் "I had begun to see our lives as a bit of a nightmare. I think I prefer my former condition," என்று கதை முடியும்போதுதூக்கத்தைத் தொலைத்துபயங்கர காட்சிகள் தோன்றும் கனவிலி  வாழ்வைவிட அன்றாட வாழ்வு அதிகம் அச்சுறுத்துவதாக உள்ளது என ஒருவர் சொல்லும்போது, அவ்வாழ்வை வாசகன்  எவ்வாறு புரிந்து கொள்ள?

கனவிலி வாழ்வை மேம்பட்டது   என இவர்கள் எண்ணினாலும்இவ்வுலகை கைவிடவும் இவர்கள் விரும்புவது இல்லை. அதனால் தான் வாழ்விற்கும்/ இறப்பிற்கும் இடையிலேயான காலகட்டத்தை ஆன்மாக்களின் உலகில் கழிக்கும் '''Worlds that flourish' மற்றும் 'What the Tapster saw' கதைகளின் கதைசொல்லிகள் மீண்டும் நம் உலகிற்கே திரும்புகிறார்கள். வாழ்வின் விழைவே இவர்களை தாங்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்ப்பாடுகளைத் தாண்டிச் செல்ல உந்துகிறது. போலி மருந்து விற்பனைரத்த தானம்ஜேப்படி செய்வது என தார்மீக ரீதியில் இவர்கள் செய்வது சரி அல்ல என்று சொல்வதை விடஉண் அல்லது உண்ணப்படு என்ற விதியமைந்துள்ள உலகில் அவர்களின் தேர்வை இயல்பான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. 

நனவிலிக்கும் கனவிலிக்கும் இடையிலேயான நடனம் 'When the lights return' என்ற கதையில்  உச்சத்தை அடைகிறது. ஏட்டே (Edde) என்னும் இசைக் கலைஞன் தான் பிணக்கு கொண்டு கடிந்து கொண்ட , சில வாரங்களாக சென்று பார்க்காத தன் காதலியைப் பார்க்க நகரமெங்கும் மின்வெட்டு நேர்ந்துள்ள ஒரு பின்மாலை/ முன்னிரவு நேரத்தில் செல்கிறான்.  வாகனங்கள் கொஞ்சம் கூட நகர முடியாத போக்குவரத்து நெரிசலால்,  வீடுகளிலும்/ கடைகளும் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்திகள்/ விளக்குகளின் ஒளியில் 
எங்கும் சூழ்ந்துள்ள புகை/ தூசியினூடே அவள் வீட்டிற்கு நடந்தே செல்கிறான்.    பெரும்பாலும் இருள் சூழ்ந்துள்ள அந்நேரத்தில் அவன் தன்னைச் சுற்றியுள்ளவற்றை பார்க்க ஆரம்பிக்கிறான் என்பது ஒரு நகைமுரண். குப்பைக்கூளத்தில் எறியப்பட்டிருக்கும் - திடீரென எழுந்து புரட்சி செய்யச் சொல்லும் - பிணம்பதாகை ஏந்திய தீர்க்கதரிசினி என அவன் காணும் காட்சிகள் அவன் மனத்தைக் குலைக்கின்றன. அதை கவனித்துக் கொண்டே இருப்பதில்  இராணுவ வீரன் ஒருவனுடன் அவனுக்குப் பிணக்கு ஏற்படுகிறது. பின் அவன் எப்படியோ காதலி வீட்டை அடைய கதை துன்ப முடிவு அடைகிறது.  "It was as if a nameless instrument, whose terrible music is fashioned out of the extremes of human chaos, were being strained to cracking point." என்று அவன் எண்ணுவது அவன் நடந்து செல்லும் வழியில் காணும் ஒழுங்கின்மையை மட்டுமல்லஇத்தொகுப்பின் அடிநாதமாக உள்ள அந்நாட்டின் எல்லாத்  துறைகளிலும் பரவியுள்ள பெரும் சீர்குலைவின் பிரதிபலிப்பாகும். 


'In the Shadow of War' கதையில் ஒமொவோ (Omovo) என்ற சிறுவன் தன் கிராமத்தில் ஒரு பெண் குறிப்பிட்ட நேரத்தில் அருகில் உள்ள காட்டிற்குள் செல்வதைக்  கவனிக்கிறான். புரட்சியாளர்களுக்கு உதவி செய்பவரான அப்பெண்ணை ஒரு நாள் அவன் தொடர்ந்து செல்லஅவள் இராணுவ வீரர்களால் கொல்லப்படுவதைப் பார்த்து பயந்து ஓடும் போது தடுமாறி விழுந்து மயங்கி விடுகிறான். மீண்டும் சுய நினைவு வந்து அலறும்போது  அவன் வீட்டில் இருக்கிறான். அவன் அறைக்கு வரும்  தந்தையுடன் அந்த இராணுவ வீரர்களைப் பார்த்து அவன் ஏதோ சொல்ல முயலஅவன் தந்தை இவர்கள் தான் உன்னைக் காப்பாற்றினார்கள் என்று சொல்கிறார்.  ஒமொவோ  தான் கண்டதைச் சொல்ல ஆரம்பிக்க,  அவ்வீரர்களை நோக்கி மன்னிப்புக் கோரும் சிரிப்பை உதிர்த்தவாறு அவனை படுக்கை அறைக்கு தூக்கிச் செல்கிறார் அவன் தந்தை. கதை இங்கு முடிகிறது. மகனைக் காக்க வேண்டும் என்ற அத்தந்தையின் நோக்கம் நமக்குப் புரிகிறது.  அவன் கண்டது ஒரு கனவு என்றோ அவன் கண்டதை தவறாகப் புரிந்து கொண்டான் என்றோ அவனை அவர் சமாதானப்படுத்தக்கூடும். ஆனால் அதனால் சாதகமான விளைவு ஏதேனும் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவே.  ஒமொவோவின் அக/புற விழிகள் திறக்கப்பட்டு விட்டன. அவற்றின் பார்வையில்  செழித்து வளரப்போகும் உலகங்களுக்கான  ('Worlds that flourish')  அடித்தளம் அவன் அகத்தில் போடப்பட்டு விட்டது. இன்னும் சில காலத்திற்குள்,  இத்தொகுப்பின் மற்றப் பாத்திரங்களைப் போல, அப்  புற/அக உலகங்கள் உருவாக்கும் நெருக்கடிகளை அவனும் தன் வாழ்நாள் முழுதும் எதிர்கொண்டிருப்பான். 

No comments:

Post a Comment