பதாகை இதழில் வெளிவந்தது -
http://padhaakai.com/2014/11/09/the-assassination-of-margaret-thatcher/-----------------------------
Bachman என்ற புனைப்பெயரில் ஸ்டீபன் கிங் எழுதிய ‘Thinner’ நாவல், ஜிப்சி ஒருவனால் தீச்சொல்லிடப்படும் பில்லியின் உடல் எடை இழக்க ஆரம்பிப்பதையும், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களையும், திகில் நாவல்களின் பாணியில் சொல்கிறது. நம்மை எவ்வளவு அச்சுறுத்தினாலும், அனைத்தும் ஆசிரியருக்கும்/ வாசகனுக்கும் உள்ள எழுதப்படாத ஒப்பந்தத்தின் பேரில் நடப்பது என்று உணர்ந்திருப்பதால் (பயமுறுத்துவது ஆசிரியரின் பங்கு – கிளர்ச்சியடைவது வாசகனின் பங்கு) நாவலில் இருந்து நாம் சற்று விலகியே இருக்கிறோம். இங்கு பயம் என்பது கிளர்ச்சியாகவே உள்ளது. நாவல் முடிந்தவுடன், இரவு நம்மை பயமுறுத்தலாம், அன்று தூங்குவது எளிதாக இல்லாமல் போகலாம் ஆனால் நம் அன்றாட வாழ்விற்கு வெகு தொலைவிலேயே நாவல் இருக்கிறது என்ற ஆசுவாசம் அடைகிறோம்.
இந்த ஆசுவாசம் எப்போதும் செல்லுபடியாகுமா? ‘ஹிலரி மேன்டலின்’ ‘The Assassination of Margaret Thatcher’ சிறுகதை தொகுப்பின் ‘The Heart Fails Without Warning’ சிறுகதை, “When she began to lose weight at first, her sister had said, I don’t mind;…” என்று சாதாரணமாகவே ஆரம்பிக்கிறது. “Anorexia” பற்றிய செய்திகள் அதிகம் கவனப்படுத்தப்படும் இந்நாளில், உணவு உட்கொள்ள மறுக்கும் பதின்பருவப் பெண் பற்றிய வழமையான கதை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் “.. was shrinking…” என்று மேன்டல் சொல்லும்போது, இது நாம் முதலில் எண்ணியதைவிட விபரீதமானது என்று புரிகிறது. எடை அதிகமாக இருப்பதாகக் காட்ட, அதிக உடைகளை அணிந்து கொள்வது, எடை பார்க்கும் முன் நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற அப்பெண்ணின் தந்திரங்களை முறியடிக்க அவள் தாய், குறிப்பிட்ட நேரமென்றில்லாமல் திடீர் திடீரென்று எடையைப் பரிசோதிப்பது, என நடக்கும் தாய்-மகள் ஆடுபுலியாட்டம் கிளர்ச்சியூட்டுவதில்லை. அந்தப் பெண் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான குடும்பமே சுருங்கி, எடையிழந்து எலும்புக்கூடாக மாறுவதையும் பார்ப்பது, கதை முடிந்த உடன் சிறிது நேரத்திலேயே நாம் நமது உலகுக்கு திரும்பி விடலாம் என்பது போன்ற எந்த ஆசுவாசத்தையும் அளிப்பதில்லை. கதையின் களன் நமக்கு மிக நெருக்கமான ஒன்றாக, நம் யார் வாழ்விலும் சந்திக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால், அதன் அச்சுறுத்தலை இன்னும் நிஜமானதாக, எப்போதும் நமக்கு அருகிலேயே இருக்கும் ஒன்றாக உணர்வது, எந்த திகில் கதைக்கும் ஈடான அல்லது அதைவிட பயங்கரமான ஒன்றாக இந்தக் கதையை ஆக்குகிறது.
இந்தக் கதை நமக்குக் கடத்தும் உணர்வை இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகளின் பொதுச்சரடாக கொள்ளலாம். யதார்த்தமும்/ கொடுங்கனவுகளும் தொட்டுச் சென்றாலும், இவை யதார்த்த தளத்திலேயே அழுத்தமாக காலூன்றியுள்ளன. உளக்காய்ச்சலால் வெதும்பும் பாத்திரங்கள், ஏதோ விபரீதம் நடக்கக் போகிறது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும், அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் தென்படும் மிகையதார்த்தத்தன்மை (surreal), இவற்றின் சஞ்சலத்துடன் கதையினூடாக வாசகனின்/ பாத்திரங்களின் பயணம் இந்தக் கதைகளின் உள்ளது.
மேன்டலின் உரைநடையில் உள்ள ஒளிர்வு (luminosity) அதன் சிறப்பம்சம். ‘ஒளிர்வு’ என்பது கதையின் அனைத்து அம்சங்களையும் நிகழ்வுகளின் காரணகாரியங்களையும் விலாவரியாக விளக்குவது அல்ல. உரைநடையில் சிடுக்குகள் இல்லாமல் தான் சொல்ல வருவதை (அவற்றில் பொதிந்துள்ள தெளிவின்மையோடு) துல்லியமாக சொல்வது. இந்த ஒளிர்வு சவுதியில், வீட்டின் அனைத்து சன்னல்களும் எப்போதும் மூடப்பட்டுள்ள இறுக்கம், லண்டனின் ரயில் நிலையங்களில் உள்ள நெரிசல் போன்ற புறச்சூழலுக்குள்ளும், பாத்திரங்களின் அகஉணர்வுகளுக்குள்ளும் சமமாக ஊடுருவி, இரண்டையும் இணைத்து, பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் உருக்கொள்ளச் செய்கிறது.
‘Sorry to Disturb’ கதை, சவுதியில் வசிக்கும் கதைசொல்லி, தொலைபேசியை உபயோகிக்க அனுமதி கேட்கும் அந்நியனை வீட்டினுள் அனுமதிப்பதுடன் ஆரம்பிக்கிறது. நாளின் பெரும்பகுதியை தனிமையில் கழிக்கும் பெண், அவள் சந்திக்கும் ஆண் என்றவுடன் கதையின் போக்கு குறித்து நமக்கு தோன்றும் எதுவும் நடப்பதில்லை. துணையில்லாமல் வெளியில் எங்கும் செல்ல முடியாத, எப்போதும் அடைபட்டிருக்கவேண்டிய சூழல் , கதைசொல்லியைச் சுற்றி வீட்டின் சுவர்கள் நெருங்கி வரும் உணர்வோடு, அவர் மனமும் சுருங்கும் claustrophobiaவை அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் உருவாக்குகிறது. வீட்டின் மேஜை நாற்காலிகள் தங்களைத் தாமே வேறு வேறு இடங்களுக்கு நகர்த்திக் கொள்கின்றன என்று கதைசொல்லி சொல்வதை, தன்விருப்பத்தையொட்டி எங்கும் செல்லும் சுதந்திரமற்ற அவருடைய நிலைக்கு பதிலீடாக அவர் வைப்பதாகக் கொள்ளலாம்.
யதார்த்த சூழலை குலைக்கும் கதைகளுக்கு நேர்மாறாக, இறந்து போன தன் தந்தை ரயிலில் செல்வதைக் கதைசொல்லி பார்ப்பதாக ‘Terminus’ ஆரம்பிக்கிறது. அமானுஷ்ய நிகழ்வுகளை உருவாக்க வலுவான களத்தைக் கொண்டிருந்தாலும், ஆன்மா பற்றியோ, தந்தையுடனான தன் உறவு பற்றியோ (அது பற்றி அவர் வேகமாக கடந்து செல்லும் ஓரிரு இடங்கள் தவிர) கதைசொல்லி சொல்லவில்லை. அவர் தன் தந்தையைத் தேடுவது பற்றி பேசுவதாகவும், இறந்தவர்கள்/ உயிரோடிருப்பவர்கள் பற்றிய அவருடைய எண்ண ஓட்டங்களாகவும், கொந்தளிப்பில்லாத contemplative கதைசொல்லலைக் கொண்டுள்ளது.
‘Sorry to Disturb’ கதையைப் போல் தலைப்புக் கதையிலும் கதைசொல்லி ஒருவனை வீட்டினுள்ளே அனுமதிக்கிறார். ஆனால் குழாய் செப்பனிடுபவர் என்று கதைசொல்லி எண்ணிய அந்த ஆசாமி, கதைசொல்லியின் வீட்டினருகே உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, கதை நடக்கும் அன்று, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ள இங்கிலாந்து பிரதமர் ‘மார்க்ரெட் தாட்சரைக்’ கொல்ல வந்தவன். அதற்கு தோதான இடமாக கதைசொல்லியின் வீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அவன் பிரதமரை கொன்றானா இல்லையா என்பது குறித்த தெளிவற்றதன்மை கதையின் ஒரு பகுதி என்றால், கதைசொல்லிக்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல்கள், கதைசொல்லி நடந்து கொள்ளும் விதம் இவை, அந்த ஆசாமி கொன்றானா இல்லையா என்ற கேள்விக்கு இணையான முக்கியத்துவம் உடையவை.
எண்பதுகளில் தாட்சர் ஆட்சியின் கீழ் வாழ்ந்து அதை நேரடியாக அனுபவித்தவர்கள், அல்லது அந்தக் காலத்தைக் குறித்து ஆராய்ந்தவர்கள், நம்மைப் போன்ற வெளியாட்கள் தவறவிடக்கூடிய சரடுகளை நெருக்கமாக உணரக்கூடும் (கொல்ல வருபவனின் தாட்சர் வெறுப்பு நமக்கு அவன் பேசுவதன் மூலம் தெரியும் தகவல் அவ்வளவே, அதற்கான காரணிகள், அந்தச் சூழல் இவை நமக்கு அந்நியம்.
தாங்கள் குரூரமாக நடந்து நடந்து கொள்கிறோம் என்பதை உணராத குழந்தைகள் பற்றிய ‘Comma’ கதையாகட்டும், கதைசொல்லி தன் தந்தை, அவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதையும், அது தன் குடும்பத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விலகலோடு கவனிக்கும் ‘Offences Against the Person’ கதையாகட்டும், அவை மோசமானவை அல்ல. நேரடியாக சொல்லப்படாத விஷயங்கள், பாத்திரங்களின் செயல்களுக்கு வெளித்தெரிந்த காரணத்தை விட வேறேதும் உள்நோக்கு உள்ளதா என யூகிக்க வைக்கும், பல அடுக்குகளாக உள்ள மன உணர்வுகள் என இலக்கியக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் முதலில் பார்த்த கதைகளைப் போல், மேன்டலின் எழுத்து பாணியாக உள்ள ஒளிர்மிகு உரைநடையில், தனித்துக் காட்டுவதாக இல்லாமல், இலக்கியக் கூறுகள் சூத்திரமாக மாற்றப்பட்டதைப் போல் வழமையான (generic), கதைகளாக உள்ளன.
இங்கு ‘வழமையான’ என்பது ஒரே களத்தை தங்கள் கதையில் பலர் உபயோகிப்பதை குறிப்பது அல்ல, அதே களத்திற்குள் ஆசிரியர் தன்னை எப்படி தனித்துக் காட்டுகிறார் என்பதைதான் குறிக்கிறது. சிலர் கதைசொல்லலை முன் பின்னாக கலைத்துப் போடுகிறார்கள், சிலர் வரலாற்றை/ தொன்மத்தை மறுவாசிப்புச் செய்து புதிதாக எழுதுகிறார்கள். மேன்டல் முதலில் பார்த்த கதைகளில் உள்ளது போல் உளக்காய்ச்சலை, அதை வெளிக்கொணரும் உரைநடைப் பாணியை கொண்டுள்ளார். இது இல்லாத கதைகளே வழமையான ஒன்றாக உள்ளன.
உதாரணமாக ஜூனோ டியாஸின் (Junot Diaz) ‘Ysrael’ கதையும் குழந்தைகள் இரக்கமில்லாமல் (அவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை உணராமல்) நடந்து கொள்வதைப் பற்றிய இன்னொரு கதை. ‘Comma’ கதையுடன் அதை ஒப்பிடுவது நோக்கமல்ல, மேலும் இரண்டின் மையம் ஒன்றாக இருந்தாலும், நிகழ்வுகள், உரைநடை பாணி இவற்றில் வேறுபட்டவை இவை. ஆனால் களம் என்பதைக் கணக்கில் கொள்ளாவிட்டாலும், ‘Comma’ தனித்துக் காட்டும் எதுவும் கதையில் இல்லை, குழந்தைகள் செலுத்தும் வன்முறை பற்றிய இன்னொரு கதை அவ்வளவே.
“… there are households with other lives… Different histories lie close; they are curled like winter animals, breathing shallow, pulse undetected.” என்று மேன்டல் இந்தத் தொகுப்பின் ஒரு கதையில் சொல்கிறார். பல்வேறு வாழ்வுகளைக் காட்டும் இந்தத் தொகுப்பில், இரண்டு வகையான கதைகள் உள்ளன. அன்றாட வாழ்வின் சில பக்கங்களைக் காட்டும், புற நிகழ்வுகளே மையமாக உள்ள, ‘Comma’, ‘Harley Street’ போன்ற நேரடித் தன்மையை உடைய சம்பிரதயமான கதைகள் ஒரு வகை. இதற்கு நேர்மாறாக ‘The Assassination of Margaret Thatcher’, ‘The Heart Fails Without Warning’, ‘Sorry to Disturb’ போன்ற, தங்களின் களத்தின் மேற்பரப்பை ஊடுருவிச் செல்லும் கதைகள். இந்தக் களங்கள் நமக்குப் பரிச்சயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாத்திரங்களுக்குள் சுருண்டிருக்கும் அக மிருகத்தின் அனல் மூச்சை, அதன் நாடித்துடிப்பின் படபடப்பை நாம் உணரும்படி செய்கின்றன. பாத்திரங்களின் அகக்கொந்தளிப்பு அன்றாட வாழ்வை பூதாகரமாக மாற்றும் தருணங்களைக் கொண்ட, எளிதில் கடந்து சென்று விட முடியாத இக்கதைகளே தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளாக உள்ளன.
No comments:
Post a Comment