Wednesday, October 29, 2014

மேவாரின் பட்டத்தரசன்: மீராவின் கணவன்: கண்ணனின் பகைவன் - Kiran Nagarkar - Cuckold

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2014/10/12/cuckold/
----------
மேவார் ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு, மகாராஜ் குமார் என்று பட்டம் சூட்டி அழைக்கப்படும் இளவரசருக்கு, ஒரு பெரிய சிக்கல். அவர் மனைவி தான் இன்னொருவருக்குச் சொந்தமானவர் என்கிறார். மகாராஜ் குமாரால் யார் அந்த ஆசாமி என்று கண்டுபிடிக்க முடியவில்லை, அப்படி ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை. சரி, ஏதாவது தீய அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கும், பேயோட்டலாம் என்று பார்க்கும்போது. “You can exorcise the devil. But how do you rid yourself of a God!” என்ற கேள்வி எழுகிறது. ஆம் இளவரசி தன் மனதில் வரிந்திருப்பது கண்ணனை.
ராஜஸ்தானிய இளவரசி கண்ணன் மீது கொண்ட பிரேமை என்று படிக்கும்போது, ‘மீரா பாய்’ நினைவுக்கு வருகிறார் அல்லவா. அவரைப் பற்றிய தொல்கதைகள் பரவியுள்ள அளவிற்கு அவர் கணவர் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அப்படியே தெரிந்ததும் தன் மனைவியின் பக்தியை புரிந்து கொள்ளாத கல் மனிதராக என அவ்வளவு சிறப்பாக இருக்காது. அவரின் கோணத்தை கிரண் நகர்கர் (Kiran Nagarkar), தன்னுடைய ‘Cuckold’ நாவலில் தர முயன்றுள்ளார். ஆனால் இந்த நாவல் மகாராஜ் குமார் குடும்ப வாழ்க்கை, தனிமனித உறவுகள் என்று மட்டும் பேசுவதாக இல்லாமல், விரிவான வரலாற்றுப் பார்வையையும் முன்வைக்கிறது. மேவார் ராஜ்ஜியத்தில் நடக்கும் அரசியல் சதிகள், மேவார் குஜராத்/ டெல்லி ராஜ்ஜியங்களுடன் நடத்தும் போர்கள், பாபரின் வருகை என பதினைந்தாம் நூற்றாண்டு வடமேற்கு இந்தியாவின் சித்திரத்தையும் அளிக்கிறது.
நமக்கு முதலில் அறிமுகமாகும் மகாராஜ் குமார், மேவார் ராஜ்ஜியத்தைக் காக்கும் வலிமை உடையவரா என எண்ணும்படி கொஞ்சம் பலவீனவராக தோன்றுகிறார். அது தவறான புரிதல் என சீக்கிரம் உணர்கிறோம். மேவாரின் பொருளாதாரம், சித்தோர் நகரின் கழிவு நீர் வெளியேற்ற அமைப்பைச் சீர் செய்யுதல், போர்க்கால வியூகங்கள்/ தந்திரங்கள்/ ஆயுதத் தளவாடங்களை நவீன காலத்திற்க்கேற்ப மேம்படுத்தல் என நவீனமான ஆசாமியாக உள்ளார். தன் மனைவியின் மனங்கவர்ந்த கண்ணனை அவர் வெறுத்தாலும், சில விஷயங்களில் அவரை வழிகாட்டியாக கொள்கிறார். போரை கடைசி வரை தவிர்க்க முயல்கிறார், வேறு வழியில்லாமல் போரிட நேர்ந்தால், அதில் தோல்வி வரும் எனத் தெரிந்தால் பின்வாங்க வெட்கப்படுவதில்லை. அதே நேரம், வெற்றி பெற எந்தத் தந்திரத்தைக் கையாளவும் அஞ்சுவதில்லை.
மகாராஜ் குமாரின் தந்தை ராணா சங்காவின் மனைவிகளுள் மிகவும் பிரியத்துக்குரியவரான கர்மாவதி, தன் மகன் விக்ரமாதித்தியனை வாரிசாக்க முயல்கிறார். எனவே, அரச குலப்பெண்ணான தன் மனைவி கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு, ஆடல்/பாடலில் ஈடுபடுவதைக்கூட (கண்ணனின் பக்தியில்தான் என்றாலும்) கட்டுப்படுத்த முடியாதவர் என்ற பிம்பத்தை அவர்கள் உருவாக்குகின்றனர். மகராஜ் குமாரின் மனைவியின் ஆடல்/ பாடலைக் காண்பதால், மக்களும் இதே போல் எண்ணுகிறார்கள். இதற்கு கர்மாவதியின் சூழ்ச்சி மட்டுமல்ல, தன் மனைவியைக்கூட கட்டுப்படுத்த முடியாதவன் ஒரு ராஜபுத்திர வீரனா, அரசாள தகுதி உள்ளவனா என சந்தேகம் மக்கள் மனத்திலும் எழுவதற்கு எந்த காலகட்டத்திலும் கணவன்/ மனைவி உறவு குறித்து பொதுவாக நிலவும் மனநிலையும் ஒரு காரணம். இத்தகைய பேச்சுக்களை இன்றும் கேட்க முடியும.
அரியணைக்காக இத்தகைய சதி வேலைகள் மேவார் அரச வம்சத்தில் சகோதரர்களிடையே எப்போதும் நடக்கும் ஒன்று என்பதை, அந்த ராஜ்ஜியத்தின் வரலாற்றில் நடந்துள்ள போட்டி, ரத்த விரயம் பற்றி சொல்லும் தகவல்கள் நாவலில் உள்ளன. ராணா சங்காவே தன் அரியணையைக் காக்க, தன் மகன்கள் மோதிக் கொள்வதை ஊக்குவிப்பவர் போல, சில நேரம் நடந்து கொள்கிறார். ஒரே நேரம் ஒருவரை உயர்த்துவது, இன்னொரு நேரம் மற்ற மகன், ஆனால் இருவரில் யார் பக்கமும் இறுதியாக சாயாமல், இரு மகன்களையும் தன் மனநிலை குறித்த குழப்பத்தில் வைத்திருக்கிறார். கர்மாவதியின் தூண்டுதல் இதற்கு ஒரு காரணமென்றாலும், இப்படி தங்களுக்குள் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதுவரை தன் பதவி பாதுகாப்பானது என அவர் நினைத்திருக்கலாம். தன் குல வரலாற்றை அறிந்தவரல்லவா. ராணா- சங்காவே மற்ற சகோதரர்களின் கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்தே அரியணை ஏறுகிறார். அவரது பாட்டன் ராணா கும்பா தன் மகனாலேயே கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஊகங்களும் நாவலில் உள்ளன.
அரியணைக்காக எதையும் செய்யத் துணிபவர்களை, அவர்கள் செய்த கீழ்மைகளை மறந்து அரசர்களாக ஏற்றுக் கொள்ளும் மக்கள் ஒரு புறமிருக்க, போரில் இறப்பதையே வாழ்வின் சாதனையாகக் கருதுவது இன்னொரு புறம் இருப்பது நகைமுரண்தான். தன் மகன்களையே நம்பாத அரசர்களையும் பார்க்கிறோம். இப்படி காலாவதியாகி விட்ட, பாசாங்குத்தனம் கொண்ட கருத்துக்களில் உள்ள அபத்தங்கள் நாவல் முழுதும் நேரடியாக இல்லாமல், நுட்பமாக பொதிந்துள்ள பகடியாக வருகின்றன.
மகாராஜ் குமார் வாழ்ந்த காலகட்டமான 15ஆம் நூற்றாண்டு உள்நாட்டு யுத்தங்களால் மட்டுமின்றி, பாபரின் படையெடுப்பாலும் முக்கியத்துவம் பெறுகிறது. பாபர் நேரடி பாத்திரமாக நாவலில் வருவதில்லை. ஒற்றன் மூலம்,அவர் எழுதும் நினைவு/ நாட்குறிப்புக்களின் பிரதி மகாராஜ் குமாருக்கு கிடைக்க அதன் மூலமே அவருக்கும்/ நமக்கும் பாபர் பற்றி தெரிய வருகிறது.
பதின் வயதிலிருந்தே போரில் ஈடுபட ஆரம்பித்து, வெற்றிகளுக்கு நிகராகக் தோல்விகளையும் சந்தித்த, ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மிக விரைவில் மீண்டெழும் மன வலிமையே முதலில் மகாராஜ் குமாரை, பாபர் மீது கவனம் செலுத்தத் தூண்டுகிறது. செல்வத்திற்காக படையெடுத்து, பின் தன் நாட்டிற்கே திரும்பி விடும் எண்ணமில்லாமல் ஒரு புதிய சாம்ராஜ்யத்தை அமைக்கும் பாபரின் கனவு பற்றியும் தெரிய வருகிறது. அதற்குத் தேவையான அனைத்து தந்திரோபாயங்களையும் அவர் கையாள்கிறார்.
டிமுரின் படையெடுப்பு கொள்ளையடிப்பதாகவே இருந்து அவர் தில்லியை அதிக நாட்கள் ஆட்சி செய்யவில்லை என்றாலும், டிமுரின் வம்சாவளி தான் என்பதை தில்லியை ஆட்சி செய்ய தனக்குள்ள உரிமையாக வைக்கிறார். அவரின் முதல் பெரும் எதிரி இன்னோர் இஸ்லாமியரான லோடி என்றாலும், காபிர்களுக்கு எதிரான, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்க தான் செய்யும் யுத்தமாகவும் இதை முன்வைக்கிறார். அதற்காக கோயில்களை இடிப்பது போன்ற செயல்களும் நடத்தப்படுகின்றன. அதே நேரம் , பீரங்கிகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் உபயோகித்து ராணுவத்தை நவீனப்படுத்தவும் செய்கிறார். ஒரே நேரத்தில் நவீனமாகவும், வைதீகமாகவும் எந்த சஞ்சலமும் இல்லாமல் அவரால் இருக்க முடிந்திருக்கிறது. சாம்ராஜ்யக் கனவில், அதன் வெற்றிக்காக எதையும் செய்யத் துணியும் எந்த ஒரு நபரிடமும் இருக்கும் பொதுக்குணங்கள் இவரிடமும் உள்ளன.
இந்தக் குறிப்புகள் குமாருக்கும், பாபருக்கும் இடையே உள்ள ஒற்றுமை/ வேற்றுமைகளையும் காட்டுகின்றன. இருவரும் நவீனத்துவத்தை நாடுபவர்கள், தங்கள் நாடு, பக்கத்து நாடு என்றில்லாமல் அதைவிட பெரியதாக கற்பனை செய்யக் கூடியவர்கள் என்பன போன்றவை ஒற்றுமையென்றால், பாபரிடம் இருந்த ஒற்றை நோக்கு மகாராஜ் குமாரிடம் இல்லை என்பதை நாம் உணரலாம்.
பாபரால் ஏற்படக்கூடிய ஆபத்தை குமார் உணர்ந்தாலும், மற்றவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. “God brought it right!” என்ற வரி அடிக்கடி பாபரின் குறிப்புக்களில் தென்படுவது குமாரை துணுக்குற செய்கிறது. அவருக்கும் கடவுளுக்குமான உறவை “.. my relationship with God is distant, formal and more a matter of protocol and faith” என்று சொல்லும் மகாராஜ் குமார், “The diarist on the other hand has an extraordinary faith , the kind of compelling faith that can almost bend and coerce God to rise to his expectations.” என்று பாபர் பற்றிக் குறிப்பிடுகிறார். (கான்வா யுத்தத்தில் பாபர் மது அருந்த மாட்டேன் என்று செய்த சத்தியம் படைவீரர்களை எழுச்சி பெறச் செய்ததை பற்றியும் நமக்குத் தெரியும்)
“If Mewar is to grow and expand, one of our major tasks will have to do with making Muslims feel secure in a Hindu kingdom. They must have as much of a stake in Mewar’s future as the Jains or Hindus. How, I keep wondering do we ensure a dichotomy whereby God and faith remain at home and the state takes first priority in public life” என இன்றளவும் மதம்-அரசு குறித்து நடக்கும் விவாதங்களைப் பற்றி மகாராஜ் குமார் யோசிக்கிறார். ராணா சங்கா, மகாராஜ் குமாரிடம் ஒரு முறை “You are a prophet who’s come before his time. An early bird waking up people just little after the hour of midnight” என்று சொல்வது பொருத்தமாகத்தான் உள்ளது.
பாபர் லோடியை வென்று தில்லியைக் கைப்பற்றிய பிறகும் பாபரின் அபாயத்தை உணராத நிலைதான் நீடிக்கிறது. பாபர், பீரங்கிகள் போன்ற (அன்றைய) நவீன கண்டுபிடிப்புகளை உபயோகிப்பதின் முக்கியத்துவத்தையும் மகாராஜ் குமாரே உணர்கிறார். அவரும் பீரங்கிகள் வாங்க முயற்சித்தாலும், அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றன. இப்படி தங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டு, பாபரைக் குறைவாக மதிப்பிட்டு அவரை எதிர்கொள்ளும் ‘கான்வா போரில்’ (Battle of Khanwa, 1527), ராஜபுத்திர அணியினர் தோல்வி அடைவதுடன் நாவல் முடிகிறது. (மூன்றாம் பானிபட் (1761) யுத்ததிற்கான முன்னேற்பாடுகளிலும், இரு புறமிருந்த படைகளின் எண்ணிக்கை வித்தியாசத்திலும் என கிட்டத்தட்ட இதே சூழலில் நடந்த போரின் முடிவையும் கொண்டு, வரலாற்றிலிருந்து இந்திய மன்னர்கள் அதிகம் கற்றுக் கொள்ளவில்லை என்பதாக புரிந்து கொள்ளலாமா?)
இத்தனை நுட்பமாக திட்டமிடும் பாபர் , கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக, தன் குறிப்புகள் எதிரிக்கு அனுப்பப்படுவதை அறிந்திராமல் இருப்பாரா என்ற கேள்வி எழலாம். நகர்கர் தன் பின்னுரையில் நாவலில் உள்ள சரித்திர உண்மைகள் பற்றிப் பேசி விட்டு “As for the rest, storytellers are liars. We all know that.” என்று முடிக்கிறார். பாபரை நாவலின் ஒரு பாத்திரமாக நேரடியாகக் காட்டாமல், அவரின் நாட்குறிப்பு மூலமே நமக்கு ஒரு சித்திரத்தை அளித்து, அதை குமார் மகராஜ் பாத்திரத்துடன் இணைத்துப் பார்க்கச் செய்வதை நகர்கரின் இலக்கிய உத்தியாக எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
இத்தனை பிரச்சினைகளோடு தன் குடும்ப வாழ்வையும், அதன் பிரச்சனைகளையும் மகாராஜ் குமார் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர் மனைவி முதலில் மேவாரில் எள்ளி நகையாடப் படுகிறார். குஜராத் ராஜ்ஜியத்திற்கு எதிரான போரில், முதலில் பின்வாங்கும் மகாராஜ் குமார், பிறகு தந்திரத்தால் மிகப் பெரிய வெற்றிப் பெறுகிறார். ஆனால் மேவார் ராணுவ தளபதிகள், மேவாரின் மக்கள் இதை முழு மனதுடன் ஏற்பதில்லை, மேவாரின் பெருமையை அவர் கெடுத்து விட்டதாக எண்ணுகிறார்கள், அவரைத் தூற்றுகிறார்கள், அவர் பெறும் வெற்றிகளை மலினப்படுத்துகிறார்கள். இதிலும் ஒரு நகைமுரணைப் பார்க்கலாம், அரியணைக்கான சதிகளைப் பொறுத்துக் கொள்பவர்கள், போரைப் பொறுத்த வரை, வெற்றி என்பதை விட, வீரத்தை வெளிக்காட்டுதல், வீர மரணம், தியாகம், இவற்றால் கிடைக்கும் (இறந்தப் பின்) புகழ், இவற்றையே அதிகம் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. பாபர் பெற்ற வெற்றிக்கு இவர்களின் இந்த மனநிலையும் ஒரு முக்கியக் காரணம்.
அதே நேரம் யுத்தம் நடந்த ஓராண்டு காலத்தில், அவர் மனைவி குறித்த பார்வை பொதுமக்களிடையே மாறி விடுகிறது. மகாராஜ் குமார் ஓராண்டுக்குப்பின் திரும்பும்போது மீரா பாய் ‘Little Saint’ என்று மக்களால் வணங்கப்படுகிறார். ஓராண்டில் இந்த மாற்றம் எப்படி நடந்தது என்று நகர்கர் வெளிப்படையாக சொல்வதில்லை, சுட்டுவதுமில்லை. ‘Little Saint’இன் பக்தியை இந்தக் காலகட்டத்தில் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்றாலும் இது நாவலின் பலவீனமாகவே உள்ளது.
நாம் அறிந்துள்ள மீரா பாய்க்கும், ‘Little Saint’க்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. கண்ணன் மேல் அதீத பக்தி இருந்தாலும், எப்போதும் வான் மேகங்களிலேயே அவர் பறப்பதில்லை. நாம் பார்க்கும், ‘Little Saint’ சீட்டாட்டத்தில் ஏமாற்றுபவர், மாட்டிக்கொண்டாலும் அதை ஒப்புக்கொள்ளாதவர், அரசியல் போக்கை தெரிந்து வைத்திருப்பவர் என பன்முகம் கொண்டவராக இருக்கிறார். மகாராஜ் குமார் இரண்டாவது மணம் புரிந்து கொண்டதும், சற்றே பொறமை கொள்கிறாரோ என்றும் நம்மை எண்ணச் செய்கிறார்.
மகாராஜ் குமார், ஏன நீலச் சாயம் பூசி, கண்ணன் போல் உடையணிந்து அந்தப்புரத்திற்குப் போகிறார், அப்படியாவது ‘Little Saint’ இன் அன்பை பெற முயல்கிறாரா? ‘Little Saint’ அவரை கண்ணனாக ஏற்றுக் கொள்கிறார், சில நேரம் கொஞ்சுகிறார்,சில நேரம் சிணுங்கல் ,சில நேரம் கோபம் (கண்ணன் மீது மட்டுமல்ல, ராதை மீதும்தான், இவர்கள் மீது மட்டுமின்றி கண்ணனின் மற்ற அனைத்து காதலிகளையும் திட்டுகிறார்). அதே நேரம் ஒரு முறை, ராசலீலாவின் பாதிப்பில் மகாராஜ் குமார்/ கண்ணனைப் பெண் உடை அணியச் செய்கிறார், இந்தச் சல்லாபங்கள் , வந்துள்ளது கண்ணன் என்று நம்பித்தான் நடக்கிறதா , அல்லது ‘Little Saint’ , வந்துள்ளது தன் கணவன்தான் என்று அறிந்தும் அறியாதது போல் நடிக்கிறாரா?
‘Little Saint’ ஒரு புதிர் என்றால், மகாராஜ் குமாரால் ஏன் அவரை ஒதுக்க முடியவில்லை. இப்படி அவரை வசப்படுத்த எதையும் செய்ய நினைக்கும் மகாராஜ் குமார் (பெண் உடைகளை அணிவது வெளியே தெரிந்தால் அது தன் எதிரிகளுக்கு இன்னும் வலுசேர்க்கும் என்று புரிந்தாலும்) ஒன்றும் ஏகபத்தினி விரதனும் கிடையாது. தன்னுடைய செவிலித்தாயுடன் (கௌசல்யா), திருமணத்திற்கு முன்பே தான் வைத்திருந்த உறவைத் தொடர்கிறார். தன் தங்கை போலத் தோற்றமளிக்கும் சிறு பெண்ணிடம் (லீலாவதி) அவருக்கு உள்ள உறவை எந்த வகையில் சேர்ப்பது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம். அவளை அவர் தவிர்ப்பது, அவள் தங்கை போல் இருக்கிறாள் என்பதாலா அல்லது அவளின் தாத்தா மேவார் அரசுக்கு கடனுதவி அளிக்குமளவுக்கு வலிமை உள்ளவர் என்பதாலா? கொஞ்சம் பிசகினாலும் அருவருப்பான ஒன்றாக ஆகி இருக்கக்கூடிய இந்த உறவுகளை நகர்கர் நுட்பமாக கையாள்கிறார்.
இந்த இரு உறவுகளைப் பார்த்து அவரிடம் ‘Little Saint’மீது காதல் இல்லை , தன்னை ஒருத்தி நிராகரிப்பதா என்ற அகங்காரம் மட்டும்தான் உள்ளது என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் நாவலின் இறுதியில், மிக மோசமான சூழலில் அவர் முன்னே பல தேர்வுகள் இருந்தும் “But there is only one woman for me. it is not Leelawati and it is not Kausalya. It is my wife..”. என்று அவர் ஏன் சொல்ல வேண்டும். காதல், அகங்காரம் இவற்றை விடவும் ஏதோ ஒன்று அவரை இறுதிவரை ‘Little Saint’உடன் பிணைத்துள்ளது.
கௌசல்யாவின் மகன் மங்களுடன் (Mangal) இவருக்கு உள்ள உறவும் நுட்பமானது. மங்கள் தன் தாய்க்கும் , தன் (சிறுவயது) நண்பனுக்கும் இடையே உள்ள உறவை அறிந்திருப்பான் என்று யூகிக்கலாம். (அவன் உளவுத்துறையைச் சார்ந்தவன்). அதற்கேற்றார்போல் அவனுக்கும் அவன் தாய்க்கும் உள்ள உறவு, கொஞ்சம் விட்டேத்தியான ஒன்றாகவே காண்பிக்கப்படுகிறது (தாயின் கள்ள உறவுதான் காரணமா?). ஆனால் ஒரு இடத்திலும் அந்த உறவை தான் அறிந்துள்ளதாக அவன் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
அவனுக்குத் இது தெரிந்திருந்தும், இறுதி வரை குமார் மகாராஜுக்கு விசுவாசமாக, மேவாரின் அரசு ஊழியர்களில், ஏன் தன் குடும்ப உறுப்பினர்களிலேயேகூட மகாராஜ் குமார் எந்த பயமும் இல்லாமல் எப்போதும் நம்பக் கூடியவனாக மங்கள் இறுதி வரை இருந்தானா? அவர் அவனை சில நேரம் தேவையில்லாமல் கடிந்து கொண்டு, தன் எரிச்சலுக்கு வடிகாலாக பயன்படுத்துவதையும் மங்கள் பொறுத்துக் கொள்கிறான். சிறு வயது நட்பு காரணமா அல்லது தனிப்பட்ட உணர்வுகளை அனுமதிக்காத கடமை உணர்வா?
தன் மனைவி கண்ணன் மீது கொண்டுள்ள காதலால், “Two mortal enemies. Correction. One mortal and the other divine and immortal” என தனிப்பட்ட முறையில் கண்ணனுடனான உறவை குமார் மகராஜ் முறித்து, அவரை எதிரியாகப் பார்த்தாலும், பட்டத்து இளவரசனாக ஜன்மாஷ்டமி விழாவின்போது அரச குடும்பத்தின் சார்பாக கண்ணன் கோவிலுக்கு செல்ல வேண்டிய மரபை கடைபிடிக்க வேண்டியுள்ளது- “I was overtaken by such a strong wave of loathing, I wanted to strangle him till the last breath had gone out of him and then snap his neck…. I didn’t want to see his face again, not be anywhere in his vicinity for the rest of my life” என்று பொருமினாலும் மரபுகளுக்காக எதிரியை சகித்துக் கொள்ள வேண்டிய நிலை.
ஆனால், கண்ணனுடனான மகாராஜ் குமாரின் உறவு, வெறுப்பைத் தாண்டி இன்னும் பல அடுக்குகள் கொண்டது. சிறு வயதில் ராமர், சிவன், கிருஷ்ணர் என பல கதாநாயகர்கள் அவருக்கு இருந்தாலும் வயதாக, வயதாக கண்ணனையே தனக்கு நெருக்கமாக உணர்கிறார் குமார் மகராஜ். சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளும், தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைக் கொள்ளாத, தன்னைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க நினைக்காத கண்ணனை வாழ்வியல் குருவாக எண்ணுகிறார். தன் மனைவி கண்ணனை விரும்புகிறாள் என்று தெரிந்ததும், குமார் மகராஜின் மனநிலையில் கண்ணன் குறித்த கசப்பு உருவாகிறது. கண்ணனுக்கு பல காதலிகள் இருந்தும் பெண்கள் ஏன் மேலும் மேலும் அவன் மேல் மையல் கொள்கிறார்கள் என்று யோசிக்கிறார், “The truth is perhaps simpler than that: women love a philanderer”.
நாவலின் உரைநடை பற்றி: “Fallopian Tubes”, ‘Stag parties”, போன்ற வார்த்தைகள், “Cat got your tongue” போன்ற சொற்றொடர்கள் அந்த காலத்திற்கு ஒட்டாமல் இருப்பதாக தோன்றலாம் . (சில இடங்களில் ‘kotwal’ போன்ற அந்தக் கட்டத்திற்கு ஒப்பும் பதங்களையும் உபயோகிக்கிறார்). சரித்திர நாவலுக்கு ஒட்டாமல் இருக்கும் உரைநடை என்று சொல்லலாமென்றால் அதையும் நகர்கர் எதிர்பார்த்து தன் முன்னுரையில் “One of the premises underlying this novel is that an easy colloquial currency of the language will make the concerns of the ….. and the others as real as anything we ourselves are caught in:… The idea was to use contemporary idiom so long as the concepts we use today were available in the sixteenth century…. என்கிறார். அதன்படியே உரைநடையும் அமைந்துள்ளது.
இதை சரித்திர நாவல் என்றோ, அரசியல் நாவல் என்றோ, குறிப்பிட்ட சரித்திர நபர் பற்றியதென்றோ தனித்து சொல்ல முடியாது. ராஜஸ்தான் என்றவுடன் ‘வண்ணங்கள்’தான் நினைவுக்கு வரும். பெண்கள் அணியும் உடைகளின்/ ராணுவ வீரர்களின் உடைகளின் வண்ணங்கள், அங்குள்ள கோவில்களின் வண்ணங்கள் இவற்றோடு காதல், துரோகம், பொறமை, வெறுப்பு, கீழ்மை, பாலியல் இச்சை என மனதின் பல வண்ணங்களை இந்த நாவல் நமக்கு காட்டுகிறது.
‘Cuckold’ என்ற வார்த்தை, வேறொருவனுடன் உறவு வைத்திருக்கும் பெண்ணின் கணவனைக் குறிப்பிடுகிறது. ஆம், மகாராஜ் குமாரின் மனைவி இன்னொருவரை மனதால் வரிந்துள்ளார். அது மட்டுமல்ல, முடியாட்சி விதிகள்படி, அரியணை மகாராஜ் குமாருக்கே உரியது என்றாலும், அவர் அதற்கு தகுதி உடையவர், போர்களில் வெற்றி தேடித் தந்தவர் என்றாலும், அவர் தந்தை அதைத் தர தயங்குகிறார், தன் பிரியத்திருக்குரிய மனைவியின் மகனை சில நேரம் முன்னிறுத்துகிறார். மகாராஜ் குமார் போரில் பெறும் வெற்றிகளின் பலனை அனுபவித்தாலும், தளபதிகளும்/ மக்களும் அவரை ஏற்பதில்லை, இன்னொரு இளவரசரை விரும்புகிறார்கள் (இதில் அந்த இளவரசரின் தூண்டுதல் இருந்தாலும்). தனி வாழ்க்கையில் மட்டுமின்றி, அரசியல் வாழ்விலும் ‘Cuckold’ஆகத் தான் இவர் இருக்கிறார்.
பின்குறிப்பு:
மீரா பாய் நாவல் முழுதும், ‘wife’, ‘Green eyes’ ‘Little Saint’ என்றே அழைக்கப்படுகிறார். மீரா என்று எங்கும் சொல்லப்படுவதில்லை.அவர் கணவரும், ‘ மகாராஜ் குமார்’ என்ற பட்டப் பெயராலேயே அழைக்கப் படுகிறார்.
எனவே இந்தப் பதிவிலும் அவர்கள் அவ்வாறே (ஓரிரு இடங்கள் தவிர்த்து) குறிப்பிடப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment