Wednesday, October 8, 2014

புத்தாயிரத்தின் குரல்கள் – வெல்ஸ் டவர் - Wells Tower - Everything Ravaged Everything Burned

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2014/09/28/wells-tower/)
-------------
மூன்று கதைகள், மூன்று சம்பவங்கள்.
ஒன்று (Down through the valley) – தன்னைப் பிரிந்து சென்ற மனைவி பிரபஞ்ச சக்தியை உணரச் சென்ற ஆசிரமத்தில், அவளுடைய காதலன் ‘பாரி’ அடிபட்டுக் கொள்ள, அவனையும், தன் மகளையும் அழைத்து வர (முன்னாள் மனைவி இன்னும் சில நாட்கள் ஆசிரமத்தில் தங்க வேண்டி இருப்பதால்) கதைசொல்லி செல்கிறார். மனைவியின் காதலன் மிக இயல்பாக பழகுகிறார், கதைசொல்லியின் மகளைப் பற்றி அவருக்கே சில தகவல்கள்/ அறிவுறுத்தல்கள் சொல்கிறார். இதையெல்லாம் கதைசொல்லி பொறுத்துக் கொள்கிறார். அவர்கள் உணவருந்த நிறுத்தும் இடத்தில், ஒரு இளஞ் ஜோடி சண்டையிட்டுக்கொள்ள, மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பதை விரும்பும் ‘பாரி’, அந்த ஜோடியின் சண்டையிலும் மூக்கை நுழைக்க , ஒரு கட்டத்தில் கதைசொல்லி இதில் சம்பந்தப்பட்டு, அந்த இளைஞனை மிக மூர்க்கமாக காயப்படுத்தி விடுகிறார்.
இரண்டு (Wild America)- பதின் வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜேசிககு , தன் அத்தை மகள் குறித்த சிறு பொறாமை உள்ளது. தங்கள் வயதையொத்த ஆணுடன் அவர்கள் சிறு காட்டினுள் நடை செல்லும்போது, பொறாமை அதிகமாகி, ஜேசி அவர்களை விட்டு நீங்கி, அவர்கள் நடையின்போது சந்தித்த , அதுவரை பார்த்திராத அந்நியனுடன் சேர்ந்து கொள்கிறாள்.
மூன்று (On the show) – ராண்டி தன் தாயின் கணவன் டேவிட் வீட்டில் விடுமுறைக்காகத் தங்கச் சென்று, நான்கு மாதங்கள் தங்கி விடுகிறான். 70 வயதான டேவிட், மூன்று மாதங்கள் கழித்து, ஒரு நாள் தன் வண்டியை கழுவி விடச் சொல்கிறார். ராண்டி அதை செய்கிறான். அடுத்த வாரம் தன் நண்பனின் வண்டியை கழுவி விடச் சொல்கிறார். இந்த முறை ராண்டி அது குறித்து அலட்சியமாக சிரிக்க, டேவிட் அவனை அறைய, அவர்களுக்குள் கைகலப்பு ஏற்படுகிறது.
முப்பதுகளில் இருக்கும் ஒருவன், பதின் பருவத்தின் வாசலில் நுழைந்திருக்கும் சிறுமி, எழுபதுகளில் உள்ள முதியவர், என்று இந்த மூன்று சம்பவங்களில் வரும், இவர்களுக்குள், ‘வெல்ஸ் டவரின்’ முதல் சிறுகதை தொகுப்பான ‘Everything Ravaged Everything Burned’இல் வரும் பாத்திரங்கள் என்பதைத் தவிர வேறென்ன ஒற்றுமை இருக்கிறது, ஏன் இவர்கள் குறித்த இந்த மூன்று சம்பவங்களை ஒன்றாகப் பார்க்க வேண்டும். வயதில், வாழ்வியல் சூழலில் என அனைத்திலும் வேறுபட்டிருக்கும் இவர்களை இணைப்பது இவர்களுக்குள் எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் அதிருப்தியும் (frustration), அந்த அதிருப்தி, சுய அழிப்பாக (self destruction) வெளிப்படும் கணங்களும்தான். அதனால்தான், அந்தக் கணம் வரை இயல்பாக இருக்கும் கதைசொல்லியும், 70 வயது முதியவரும் தேவையே இல்லாமல் மூர்க்கமாகிறார்கள். ஒரு சிறுமி முன் பின் தெரியாதவனுடன் அவன் அழைக்கும் இடத்திற்கு செல்லத் துணிகிறாள்.
இவர்கள் மூவர் மட்டுமல்ல இந்தச் சிறுகதை தொகுப்பிலுள்ள பலரும் இத்தகைய அதிருப்தியால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான காரணங்களை (காரணங்கள் என்று அவர்கள் நம்புவதை) ஊமைக்காயங்களாக சுமந்தலைகிறார்கள்.
தந்தையின் மறைவு சங்கடமானதுதான் (The Brown Coast), ஆனால் அது வேலையின் தரத்தை பாதித்தால், முதலாளி அதை எப்படி ஏற்றுக்கொள்வார். வேலை போகிறது. இந்தத் துயரை மறக்க, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் மனைவி விட்டுத்தானே செல்வார். யாரை இதில் குற்றம் சொல்ல.
‘Retreat’ கதையில் சகோதரர்கள், தங்கள் கிண்டல்களால், விலங்குகள் போல் ஒருவரையொருவர் மனதளவில் காயப்படுத்திக் கொள்வதை, காயப்படுத்துவது/ காயப்படுவது (சகோதரனால் காயப்பட்டுள்ளதாக காட்டிக்கொள்வது) என இரண்டிலும் திளைப்பதை எப்படி புரிந்து கொள்வது. இருவரின் வாழ்வில், வசதியில் உள்ள வேறுபாடோ அல்லது குழந்தை பருவத்திலிருந்தே ஆரம்பித்து, இப்போது வரை தொடர்ந்து வரும் போட்டியோ (sibling rivalry) இதற்கு காரணம் என்று சொல்ல முடியாது.
பொதுவாக இந்தக் கதைகளின் பாத்திரங்கள், தங்கள் அதிருப்தியின் காரணத்தை தாங்களே தெளிவாக வரையறுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள், அப்போதைக்கு தங்களுக்குத் தோன்றும் காரணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். டவர் இந்தக் காயங்களுக்கு எந்த இரக்கத்தையும் வாசகனிடம் கோருவதில்லை. வாசகனின் நெகிழ்வை கோரக்கூடிய இடங்களையும் லாகவமாக கடந்து செல்கிறார்.
‘Door in your eye’ கதையில், மகள் வீட்டில் தங்க வந்திருக்கும் முதியவரிடம் , அடுத்த வீட்டில் வசிக்கும் பெண் ஒரு விலைமாது என்று சொல்கிறார் அவர் மகள். அதை உறுதிப்படுத்துவது போல சில சம்பவங்களை முதியவர் பார்க்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் வீட்டிற்கு முதியவர் செல்ல நேரிடுகிறது . அந்தப் பெண்ணுடன் சிறிது நேரம் படுக்கையில் படுத்துக் கொள்ள மட்டும் விரும்புவதாகவும் அதற்கு பணம் தருவதாகவும் முதியவர் கூறுகிறார். பொன்மனம் கொண்ட விலைமாதுவுக்கும், தனிமையில் வாடும் முதியவருக்கும் இடையே உறவு மலரும் கதையோ என்று என்று எண்ணி முடிப்பதற்குள் ஒரு கூக்ளியை வீசுகிறார் டவர். அந்தப் பெண் விலைமாது அல்ல, போதைப் பொருள் விற்பவர், அதனால்தான் அவர் வீட்டிற்கு பல ஆண்கள் வந்து செல்கிறார்கள். அதுவரை இருந்த எதிர்பார்ப்பு, அது உருவாக்கிய இறுக்கம் தளர்ந்து நம் (மற்றும் முதியவரின்) இதுவரையிலான எண்ணங்களின் அபத்தத்தை நினைத்து சிரித்து விடுகிறோம். இனிமேலும் இவர்களுக்குள் உறவு ஏற்பட வாய்ப்புள்ளதுதான் என்றாலும், டவர் அதை அனுமதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
‘Executors of important energies’ கதையில் கதைசொல்லியின் தந்தை, முதுமை உருவாக்கும் மறதியின் பிடியில் சிக்கியுள்ளார். தந்தையுடன் (அவரது தற்போதைய மனைவியுடன்) இரவு உணவருந்த வேண்டிய சூழல் கதைசொல்லிக்கு. இவர்களுக்கிடையே உள்ள கசப்பை போக்காவிட்டாலும், கொஞ்சமேனும் ஈரத்தை இந்தச் சந்திப்பு ஏற்படுத்தும் என நாம் நினைத்தால் அது நடப்பதில்லை. கனன்று கொண்டே இருக்கும் கோபத்தை டவர் எப்போதும் அணையவிடுவதில்லை.
இத்தனை கோபத்தை சுமந்தலையும் இவர்களை இன்றைய சமூகத்திலுள்ள கட்டுப்பாடுகள்/ விதிகள் அடக்கி வைக்கின்றன. இல்லாவிட்டால், இந்தக் கதைகளில் நாம் காணும் கொதிநிலைக்கு முன்னரே இவர்கள் வெடித்திருப்பார்கள். இத்தனை இறுக்கமான கட்டுப்பாடுகள் இல்லாத காலத்தில் இவர்கள் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள்?
தலைப்புக் கதையான Everything Ravaged Everything Burned’இல் வைக்கிங் (Viking) குழு ஒன்றைப் பார்க்கிறோம். அதன் தலைவன் சூறையாடலின் ஆர்வலன். அவன் தலைமையில் குழுவாக கப்பலில் பயணிக்கிறார்கள். நம் கதைசொல்லியோ (புது) மனைவியை பிரிய மனமில்லாமல், ஆனால் தலைவனை எதிர்க்க துணிவில்லாமல் அவர்களுடன் செல்கிறான். குழு அவர்கள் சென்ற முறை கொள்ளையடித்த இடத்தில் இறங்கி, உற்சாகமாக சூறையாடலில் ஈடுபட, கதைசொல்லியும் அவன் நண்பர்களும் சற்றுப் பின்தங்குகிறார்கள்.
அவர்களை அந்த கிராமத்தில் உள்ள ஒரு முதியவர் உற்று நோக்குகிறார். அவர்களை முன்பே பார்த்தது போல் இருக்கிறது என்கிறார், நம் கதைசொல்லி சென்ற இலையுதிர் காலத்தின்போது இங்கு வந்திருந்ததாக (வேறெதற்கு கொள்ளையடிக்கத்தான்) சொல்கிறார். கிராமம் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க, இந்த இடம் என்னமோ, சுற்றுலாத்தலம் போலவும், இந்தக் குழுவினர் வருடா வருடம் , விடுமுறைக்கு வருபவர் போலவும், முதியவருக்கும் இவர்களுக்கும் இடையே நடக்கும் அபத்த உரையாடல் இப்படித் தொடர்கிறது
“… So what are you doing, any looting?”.
“Why? you got anything to loot?”
“Me? Oh, no. Got a decent cookstove, but I can’t see you toting that back on the ship.”
“Don’t suppose you’ve got a coin hoard or anything buried out back?”…
மூர்க்கமானவர்கள் என்று குறிப்பிடப்படும் வைக்கிங்குகள் பற்றிய இந்தக் கதையின் இறுதியில் உள்ள உள்நோக்கிப் பார்க்கும் தருணம் (contemplation) நாகரீக சமூகமாக சொல்லிக் கொள்ளும், நம் காலத்தில் நடக்கும் மற்றக் கதைகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோபத்தை, எரிச்சலை வெளிக்கொணரும் உரையாடல்களும், சம்பவ விவரணைகளும் அதற்கேற்றார்போல் பட்டாசாக வெடித்துச் சிதறுவதாக, (படிப்பவருக்கு) உற்சாகம் கொப்பளிப்பதாக உள்ளன.  குப்பைக் கூளமான ஒரு இடத்தைப் பற்றி “Nearby,a crew of buzzards slunk around ignoring the carcass, as if to say, We know we eat terrible things for a living, but there is a limit” என்ற வரி வருகிறது. ‘Door in your eye’ கதையில் ஒரு பெண் தன் கண்ணில் தோட்டா பாய்ந்ததைப் பற்றிச் “… what getting shot is all about. How it’s just getting touched by a little thing, only it’s touching really fast. If it was going slow, you’d be fine as pie. The only thing that matters is the speed.” என்று சொல்வது, ஒரு சம்பவத்தை இன்னொரு விதமாக பார்க்கத் தருவதோடு, இப்படி இந்தப் பாத்திரம் பேசுமா என்றும் கேள்வி எழுப்பலாம்.
இவற்றை ஆசிரியரின் தலையீடு என்றும், கதைகளில் வரும் கொந்தளிப்பான சூழலில் (மேலே பார்த்த வைக்கிங் உரையாடல் போன்று ) இப்படி யாராவது பேசுவார்களா என்றும் கேள்வி எழலாம். இந்தக் கதைகள் நடைமுறை வாழ்வைப் பேசினாலும், விவரணைகளிலும், உரையாடல்களிலும் முழு யதார்த்தத் தளத்தில் இயங்குபவை அல்ல. அதே நேரம் ‘hysterical realism’ பாணி ‘செயலிழந்த குடும்பங்களை/உறவுகளைப்’ பற்றிய கதைகளும் இல்லை. நம் நிஜ உருவத்தை நீண்ட, பெருத்த, அஷ்டகோணலாகிய பிம்பங்களாகக் காட்டும் கண்ணாடியைப் (carnival mirror போன்றவை இதற்காகவே உள்ளன) போல், திரிக்கப்பட்ட (distorted) யதார்த்தத்தை, அதன் இன்னொரு பிம்பத்தை நமக்கு அளிப்பவை இவை. இந்தக் கோணத்தில் நோக்கினால் தொகுப்பின் உரைநடையை/ கதை சொல்லலை ரசிக்க முடியும். ஆனால் எல்லா இடத்திலும் இதே பாணி உரைநடை வருவதில்லை, மௌனத்தின் தாக்கத்தையும் டவர் சில இடங்களில் உணர்த்துகிறார்.
தன் நண்பனுடன் சண்டையிடும் சிறுவன் ஹென்றி (On the Show), கேளிக்கை பூங்காவில் தனித்து விடப்படுகிறான். அவனை யாரும் கண்டுபிடிக்க முடியாத பத்திரமான இடம் என்று கழிப்பறைக்கு அழைத்துச் செல்கிறான் ஒரு ஆள். இந்தக் காட்சியை இத்துடன் முடித்து விடுகிறார் டவர். என்ன நடந்திருக்கும்? அடுத்து நாம் பார்ப்பது ஹென்றியின் தந்தை அவனைத் தேடி கண்டுபிடிப்பதை. ஹென்றி அவரிடம் என்ன சொன்னான் என்று நமக்குத் தெரிவதில்லை, ஆனால் அவன் சொல்வதை அவரால் முற்றிலும் நம்ப முடியவில்லை என்று மட்டும் டவர் சொல்கிறார். அவனை சந்தேகப்பட்டாலும் “But Henry is missing his underwear and one of his shoes, which gives the story a bad ring of truth” என்று டவர் முடிக்கிறார். நடந்த கோரத்தை இந்த வரி உணர்த்தி விடுகிறது.
எந்த வயதினருக்கும் பொதுவான உணர்வுகளை மூர்க்கமாக வெளிக்கொணரும் டவர், ‘Wild America’ கதையில் மட்டும் சற்றுத் தடுமாறுகிறார். பதின் பருவத்தில் நுழைந்திருக்கும் இரு சிறுமிகளின் உணர்வுகள், போட்டி/பொறாமைகள் என ஆரம்பிக்கும் இந்தக் கதையில், மற்றக் கதைகளில் இருப்பதைப் போல, நம்மை சற்றுத் துணுக்குற வைக்கும் எந்தத் திரிபும் இல்லாமல், பதின் பருவ உணர்வுகள் பற்றிய வழக்கமான (generic) கூறுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஜேசி தன் அத்தை மகளிடம் கோபித்துக் கொண்டு பிரிந்து தனித்து வந்தவுடன், கதை டவரின் வழக்கமான களத்தில் (அதிருப்தி, அதனால் வரும் கோபம்,அது செய்யத் தூண்டும் கண்மூடித்தனமான செயல்கள்) நுழைய, மற்றக் கதைகளின் தளத்திற்கு சென்று விடுகிறது.
இது டவரின் முதல் கதைத் தொகுப்பு, இதுவரை வெளிவந்துள்ளதும் இது மட்டுமே. இந்தத் தொகுப்பின் களங்கள் முற்றிலும் புதிதல்ல, கதை சொல்லும் உத்தி/ உரைநடை புதிய பாதையில் பயணிப்பவை அல்ல. ஆனால் நாம் ஏற்கனவே பார்த்துள்ளதை/ அனுபவித்துள்ளதை சற்றுக் கலைத்துப் போட்டு புதிய கோணத்தில், நேர்த்தியாகக் காண்பிக்கிறார் டவர். இது அவரை நமக்கு நம்பிக்கையூட்டும் எழுத்தாளராக நிறுவி, அவரின் அடுத்த படைப்புக்களை ஆர்வத்தோடு எதிர்நோக்க வைக்கிறது.

No comments:

Post a Comment