Wednesday, October 8, 2014

Tana French - டானா ப்ரெஞ்ச்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2014/09/21/tana-french/)
----------
ஒரு சிறுவன் தன் இரு நண்பர்களுடன் விளையாடச் சென்றபோது, நண்பர்கள் காணாமல்போக, சிறுவனும் அன்று நடந்த சம்பவங்கள் பற்றிய நினைவை இழக்கிறான். புதிராக உள்ளதல்லவா. அவன் பெரியவனாகி அந்தச் சம்பவம் நடந்த அதே இடத்தில் நடக்கும் ஒரு கொலை குறித்த விசாரணை செய்தால், அந்த விசாரணையை பற்றிக் கூறும் கதைசொல்லியும் அவன்தான் என்றால் ஜீரணிக்க சிரமமாக உள்ளதா. ஒரு பெண் காவல்துறை அதிகாரி தன்னைப் போலவே இருப்பவர் (Doppelganger) கொலை செய்யப்பட, அந்தப் பெண்ணாக நடித்து கொலை குறித்த விசாரணையை செய்கிறார். இப்படி சட்டென்று நம்ப முடியாத கருக்களை வைத்து, பதற வைக்கும் அதே நேரம் நம்பகத்தன்மை இருக்கக் கூடிய குற்றப் புனைவுகளை எழுதி வருகிறார் ‘டானா ப்ரெஞ்ச்’ (Tana French).
‘Broken Harbour’ நாவலின் ஆரம்பத்தில் , முக்கிய பாத்திரமான கென்னடி மற்றும் அவரின் சக ஊழியர், 4 பேர் கொண்ட குடும்பம் தாக்கப்பட்ட வீட்டிற்குள் நுழைகிறார்கள். அந்தக் கணத்தில் அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அந்தத் தீமை குறித்த உணர்வு ஏற்படுகிறது. சம்பவத்தின் குரூரம் மட்டுமே அதற்கு காரணமல்ல. (அது மட்டுமேயென்றால் டானாவும் வழக்கமான குற்றப் புனைவு எழுத்தாளராகி விடுவார்). அந்த வீட்டின் சுவர்களில் உள்ள பெரும் ஓட்டைகள் யாரால் செய்யப்பட்டன, வீட்டின் அனைத்து அறைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமரா என்ன சொல்ல வருகிறது. யாருக்கோ (எதற்கோ) பயந்தபடி அந்தக் குடும்பம் தன் நாட்களைக் கடத்தி வந்ததா, அந்த யாரோ (அல்லது எதுவோ) தான் சுவற்றில் ஓட்டைகள் செய்ததா. இரு சிறு குழந்தைகளுடன் இந்த இளம் தம்பதியர் எதற்காக, என்ன நடக்கப் போவதென்று பயந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? நடக்கப் போவதை எண்ணி அவர்கள் மனம் எப்படி அலைக்கழிப்பட்டிருக்கும். இந்த எண்ணங்களே கென்னடி மற்றும் நம் மனதில் பீதியைக் கிளப்பக் கூடியவை.
‘In the Woods’ நாவலில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நாம் சந்திக்கும் போது, அக்குடும்பத்தில் ஏதோ சரியில்லை, நடந்துள்ள வன்முறைக்கு ஈடான மோசமான சில ரகசியங்கள் அக்குடும்பத்தில் புதைந்துள்ளன என்ற உணர்வே மேலிடுகிறது. ‘The Likeness’ நாவல், குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுபவர்களுடன், வேறொரு நபராக நடித்துக் கொண்டு, ஒரே வீட்டில் தங்கி, அவர்களுக்கு தெரியாமல் விசாரணை செய்ய வேண்டிய சூழல் கோதிக் (Gothic) மற்றும் claustrophobic உணர்வை உருவாக்குகிறது. இப்படி டானாவின் நாவல்களில் உள்ள சூழல் வெவ்வேறானவை என்றாலும், அனைத்திலும், ஆரம்பத்திலிருந்தே நம் கண்ணுக்குத் தெரியாமல் கதையுலகில் நம்மையும் (பாத்திரங்களையும்) சுற்றி ஒரு பெரும் தீமை உள்ளது என்ற பொது உணர்வை உண்டாக்கக் கூடியவை.
தன் நாவல்களின் ஆரம்பத்திலேயே ‘தீமையின்’ அருகாமையை டானா சுட்டினாலும், இவை அவசர கதியில் இயங்குபவை அல்ல. 400-500 பக்கங்கள் நீளும் நாவல்களில் ஒரு புதிரை ஆரம்பத்தில் உருவாக்கி, மெல்ல மெல்ல அதை இன்னும் சிக்கலாக்கி, பின்னர் முடிச்சுக்களை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கிறார் டானா. இது பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம் எதிர்பார்க்கப்படும் குற்றப் புனைவுகளில், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.  உதாரணமாக 500 பக்கத்திற்கு மேல் விரியும் ‘Broken Harbour’ முதல் 150 பக்கங்கள் விசாரணையின் முதல் இரு நாட்களை விவரிப்பது வாசகனை, இத்தனை பக்கங்களில் எதுவுமே நடக்கவில்லை என சலிப்புறச் செய்திருக்கக்கூடும். டானாவின் கதை சொல்லல் அப்படி நேர அனுமதிப்பதில்லை. நாவலின் இந்தப் பகுதியில் குற்றவாளி மீண்டும் சம்பவ இடத்திற்கு வருவானென்று பொறி வைத்து காத்திருக்கும் நிமிடங்களில் சட்டென்று நடக்கும் சம்பவம் வாசகனை சில்லிட வைக்கும்.
முடிந்தவரை வாசகன் எழுப்பக்கூடிய கேள்விகளை யூகித்து, அதற்கான பதிலையும் நாவலில் சொல்லி விடுகிறார். குற்றம் நடந்த சம்பவ இடத்தோடு நெருங்கிய சம்பந்தம் உடையவரை அந்த குற்றத்தை விசாரிக்க விடுவார்களா? காவல்துறை அதிகாரி போலவே இன்னொருவர் இருக்கலாம், அவர் கொல்லப்படலாம். ஆனால் அந்த அதிகாரி ஒரு காலத்தில், வேறு பெயரோடு செய்த விசாரணையில் (undercover investigation) உபயோகித்த பெயரையே இறந்தவர் எப்படி தற்செயலாக உபயோகித்திருக்க முடியும். அனைத்திற்கும் விளக்கம் தருகிறார் டானா.
விசாரணையின் போக்கை/ முடிவை கதைசொல்லி மூலமாக முதலிலேயே சுட்டி விடுகிறார் டானா. யார் குற்றவாளி என்று தெரியாவிட்டாலும் இந்த விசாரணை நல்ல விதமாக முடியாது என்று நமக்கு அப்போதே தெரிந்து விடுகிறது. சரி எப்படித்தான் முடியும் என்றும், முடிவிற்கான பாதை குறித்த ஆர்வமும் நம்மை தொடர்ந்து பயணிக்கச் செய்கின்றன.
சாவகாசமாக எழுப்பப்படும் அடித்தளத்தை முடிவுடன் இணைக்கும், நம்மை இறுதி ஓட்டத்திற்கு தயார் செய்யும் பகுதிகளை (ஒரு நாவலில் வரும் ‘entrapment’ பாணியிலான உரையாடல், இன்னொன்றில் முக்கியத் துப்பு வெளித் தெரியும் இடம்) இவர் நாவல்களின் பலவீனமாகச் சொல்லலாம். இவை நாவலை முடிக்க அவசரத்தில் எழுதப்பட்டுள்ளவை போல் தெரிகின்றன.
குற்றப் புனைவுகளில் பொய் துப்புக்கள் (red herrings) முக்கியமானவை. உண்மையான துப்புக்களை புரிந்து கொள்ளாமல், பொய் துப்புக்களை பின்தொடர்ந்து, இறுதி வரை வாசகன் தான் தவறான பாதையில் செலுத்தப்படுகிறோம் என்று புரியாமல் இருக்க, இறுதியில் அவனை ஆச்சர்யப்பட வைப்பதில் எழுத்தாளரின் வெற்றி உள்ளது. இந்த துப்பு ஏமாற்று என்றோ அல்லது இந்தப் பாதையே குற்றவாளியை அடையாளம் காட்டும் என்றோ வாசகனுக்கு புரிந்து விட்டால் நாவல் அங்கு தோல்வி அடைகிறது. இது குற்றப் புனைவுகளின் பொது விதி.
டானாவின் நாவல்களிலும் சில பொய் துப்புக்கள் வருகின்றன, அவை பொய்யாகத்தான் இருக்கும் என்று எளிதில் யூகிக்க முடிவதாய் உள்ளன. ( ‘Broken Harbour’ நாவலில் நடக்கும் ஒரு கைது ). பொய் துப்பு என்றில்லை, சில குற்றவாளிகளையும் இடையிலேயே நாம் அடையாளம் காணும்படி சில விஷயங்களை வைத்துள்ளார் டானா. ‘In the woods’ நாவலின் நடுவில் மூன்று பேரிடையே நடக்கும் ஒரு சந்திப்பின்போதே குற்றவாளியை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
இவை இந்த நாவல்களின் பலவீனமா? இல்லை, இந்தத் துப்புக்களை/சங்கேத விஷயங்களை நாம் புரிந்து கொண்டு விட்டோம் என வாசகன் சந்தோஷப்பட முடியாது, ஏனென்றால் அந்த பொய் துப்புக்களின் வெளிப்படைத் தன்மையே/ எளிமையே நம்மை யோசிக்க வைக்கின்றது. அதே போல் நமக்கு காட்டாத (அல்லது நாம் கவனிக்கத் தவறிய) இன்னொரு துருப்புச் சீட்டை டானா வைத்திருப்பார். இவற்றிக்கான அடித்தளத்தை முதலிலேயே டானா அமைத்திருப்பார். ‘In the Woods’ இறுதி திருப்பம் என நாம் நினைப்பதின், இறுதியில் வரும் இன்னொரு திருப்பம் ஒரு உதாரணம்.
மேலும் இந்த நாவல்களில் முக்கிய பாத்திரங்களே கதைசொல்லியாகவும் இருப்பதால், விசாரணை குறித்து அவர்கள் சொல்வதை எப்படி நம்புவது. “What I am telling you, before you begin my story, is this – two things: I crave truth. And I lie.” என்று ஒரு காவல்துறை அதிகாரி நாவலின் ஆரம்பத்திலேயே சொல்லும்போது , அவர் தன் கடந்த காலம் பற்றி சொல்வதையும், விசாரணையில் சில சம்பவங்களுக்கு அவர் செய்யும் எதிர்வினைகளையோ அல்லது அதற்கு அவர் சொல்லும் காரணங்களையோ எப்படி நம்புவது. பொதுப் புனைவுகளிலேயே கதைசொல்லி மீது நம்பிக்கை இல்லையென்றால் நாவலை உள்வாங்குவதில் நிறைய அடுக்குகள் இருக்கும் எனும்போது, உடலாலும்/ உள்ளத்தாலும் ஆடு புலி ஆட்டம் நடக்கும் குற்றப் புனைவுகளில் சொல்லவே வேண்டாம்.
இவை ஒரே முக்கியப் பாத்திரத்தைப் பின் தொடரும் தொடர் நாவல்கள் அல்ல, ஒரு நாவலின் சிறிய பாத்திரமாக வருபவர் இன்னொரு நாவலின் முக்கிய பாத்திரமாக வருவார் அல்லது முற்றிலும் புதியவராக இருப்பார். அவரே கதைசொல்லியாகவும் இருக்கலாம். தன் நண்பர்கள் காணாமல் போன அன்று நடந்த சம்பவங்களை மறந்துவிட்டதாக சொல்லும் ‘ராப்’,
எதையும் விதிகள்படி மட்டுமே செய்யும், தன் உயரதிகாரி அழைத்தவுடன், தலை வாரிய பின்னரே அவர் அழைக்குள் நுழையும், முதல் பார்வையில் ‘எல்லாம் தெரிந்த ஏகம்பரமாக’ தோன்றும் கென்னடி என இவர்கள் தங்கள் கசப்புக்களுடன்தான் வாழ்கிறார்கள். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தையும், நாவலின் மைய இழையோடு நாம் பார்க்கிறோம். நாவலில் இவர்கள் விசாரிக்கும் வழக்கு இதுவரை சந்தித்ததிலேயே மிகக் கடினமானதாக, உடலையும்/ உள்ளத்தையும் உருக்குலைப்பதாக இருப்பது இந்த நாவல்களின் பொது அம்சம். முன்பே சொன்னது போல், இதையும் நாவலின் முதலிலேயே கதைசொல்லி நமக்கு தெரிவித்து விடுகிறார். எனவே இவர்களின் வாழ்வும் மோசமான திருப்பத்தை சந்திக்கப் போகிறது என்று நாம் யூகித்தாலும், அதை அறியவும் ஆர்வமாகவே உள்ளோம்.
டானாவின் பாத்திரங்களில் முக்கியமானவர் ‘கேஸி’ (Cassie). ‘In the Woods’, ‘The Likeness’ இரு நாவல்களிலும் வரும் இவர் நண்பர், காதலி, சகோதரி, சக ஊழியர் என உங்களுக்கு எந்த உறவாக இருந்தாலும் அதில் மிகச் சிறந்தவராக இருப்பார் என்று துணிந்து கூறலாம். அவரின் அருகாமை இருந்தால், எந்த சூழலிலும் உங்களை அவர் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு வரும். நெகிழ்வும் உறுதியும் சமமாக கலந்த இவருக்கு எந்த வித ஆறுதலோ, அரவணைப்போ தேவைப்படாது, மாறாக அவரிடமிருந்து நாம் அதை பெற்றுக் கொள்ளமுடியும் என்று நாம் உணர்ந்தாலும், அவரை பாதுகாக்கவே விரும்புகிறோம். இவரை வைத்து தொடர் நாவல்களை டானா எழுதி இருந்தால், குற்றப் புனைவுகளுக்கு நம் காலத்திற்கான இன்னொரு மறக்கவியலா கதாநாயகி கிடைத்திருப்பார்.
‘யார்’, ‘எப்படி’, இறுதி திருப்பம் என்பதை விட ‘ஏன்’, அந்த ‘ஏனை’ வந்தடைந்த பாதையே இவர் நாவல்களின் முக்கியமானது. இவற்றின் மூலம் நாவலின் பாத்திரங்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம். விசாரணையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி தோண்ட தோண்ட, நாவலின் முடிச்சு அவிழ்வதுடன், ஒரு மனதின் முடிச்சு அவிழ்ந்து சிதையும் அவலத்தையும் பார்க்கிறோம். உறவுகள் (அல்லது உறவுகள் இல்லாமை) எப்படி சில சந்தர்ப்பங்களை உருவாக்குகின்றன, சில சந்தர்ப்பங்கள் எப்படி சில உறவுகளை மாற்றுகின்றன என்றும் தெரிய வருகிறது. இந்த நாவல்களில் கொலை, மர்மம் இவற்றை எடுத்து விட்டால், உறவுகளின் வலி, இழப்பு, மீட்சி உண்டு என்ற நம்பிக்கை, உலகளாவிய நிதி நெருக்கடி போன்ற சமூகச் சூழ்நிலை நம்மை புரட்டிப் போடும் விதம் என பொது இலக்கியம் பேசுவதையே இவையும் பேசுகின்றன என்று புரியும்.
” it gets there because they open the door and invite it in,” என்று வெளிப்பார்வையில் சாதாரணமாக தோன்றுபவர்கள்/ தோன்றும் குடும்பங்களுக்கு நிகழும் வன்முறை பற்றி ஒரு பாத்திரம் சொல்கிறது. ஆம், தீமை நம் வீட்டிற்கு வெளியேதான் உள்ளது. எதுவும் சந்தேகிக்காத எளிய மனிதர்கள் தன்னை உள்ளே அழைக்க அது காத்திருக்கிறது. அவர்களும் தங்கள் வாழ்வு நலன் கருதி, வாழ்வு மேம்படும் என்று எண்ணி, தீமை என்று உணராமல், பாசக்கார மூதாட்டியை வீட்டினுள் அழைப்பதாக எண்ணுகிறார்கள், ஆனால் வருவதோ ஒரு பெரிய ஓநாய். உண்மையை வீட்டிலுள்ளவர்கள் உணர்வதற்குள், ஓநாய் வீட்டை தனதாக்கி விடுகிறது. நாவலின் முடிவில் நம்மில் எஞ்சுவது ஒரு பெரிய வேட்டையை முடித்த களிப்பு அல்ல, தங்கள்/ குடும்ப நலன் என்று கருதி சிலர் செய்வது அவர்களுக்கே வினையாகி விடுவதன் சோகமே. நம்மை அதிகம் பீதியூட்டுவதும் எவ்வளவு எளிதாக ‘தீமை’ நம்முள் நுழைந்து நம்மையும்/ மற்றவரையும் சிதைக்க முடியும் என்பதே.
கடந்த 7-8 ஆண்டுகளில் ஐந்து நாவல்கள் எழுதி இருக்கும் டானாவின் (ஐந்தாவது இந்த மாதம்தான் வெளிவந்தது), காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்வதாக வரும் இந்த நாவல்களை ‘காவல் துறை விசாரணை ‘ (police procedural) என்ற வகைமையின் மட்டுமே சேர்க்க முடியாது. காவல்துறையின் அன்றாட இயக்கம் குறித்த பதிவுகள் இவற்றில் அதிகம் இல்லை. பாத்திரங்களின் உளவியல் கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், உளவியல் சிக்கல் மட்டுமே நாவலின் மையம் இல்லை என்பதால் இவற்றை உளவியல் குற்றப்புனைவுகள் என்றும் சொல்ல முடியாது.
காவல் துறை விசாரணை, உளவியல் சார்ந்த பார்வை என இரண்டு வகைமைகளின் கூறுகளோடு, தனக்கென்ற தனித்துவமான பாணியை உருவாக்கிக் கொண்டு இன்றைய குற்றப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவராக உள்ளார் டானா பிரெஞ்ச்.
P.S – இவை தொடர் நாவல்கள் இல்லையென்பதால் படிக்கும் வரிசை அவ்வளவு முக்கியம் அல்ல. இருந்தாலும் ‘In the Woods’ மற்றும் அதற்குப் பிறகு வந்த ‘The Likeness’ நாவல் இரண்டை மட்டுமேனும் வெளிவந்த வரிசையில் படிக்க முயலலாம் . அது முடியாமல் ‘In the Woods’ஐ இரண்டாவதாக படித்தாலும், அதன் பின் ‘The Likeness’ நாவலின் முதல் 50 பக்கத்தை மட்டும் மறு வாசிப்பு செய்வது அந்நாவலின் ஆரம்பத்தை முதல் முறை படித்ததை விட இன்னும் சற்றுத் தெளிவாக்கும்.

No comments:

Post a Comment