தொண்ணூறுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த என்.ஸ்ரீராம், இன்றைய இளைய படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். 'வெளி வாங்கும் காலம்' தொகுப்பிற்கு பிறகு வரும் அவருடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு 'மாட வீடுகளின் தனிமை'.
ஸ்ரீராமின் கதை நிலபரப்பு கொங்கு மண். கதைகளின் கரு, சம்பவங்கள் நமக்கு ஏற்கனவே படித்த உணர்வை (deja vu) தரக்கூடும். ஆனால் அதை சொல்லும் முறையில் நம்மை உள்ளிழுத்து கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. கதைகளின் புற சூழலில், வெய்யிலின் வெக்கையையும், மழை/புயல் இவற்றால் ஏற்படும் ஒடுக்கத்தையும், இரவில் நகரில் யாருமற்ற சாலைகளில் சோடியம் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத் தையும் நாம் உணர முடியும். கதை மாந்தர்களின் உணர்வுகளும் ஒரு விதத்தில் அது போல் தான் உள்ளன. வாழ்கையின் பிரச்சனைகளால் ஏற்படும் மன புழுக்கம், அதன் அழுத்தத்தால் ஏற்படும் மன ஒடுக்கம், தனிமையின் வாதை இவற்றின் ஊடே தான் இந்த கதைகளில் உள்ள மனிதர்கள் பயணிக்கின்றார்கள்.
'மூன்றாம் நதி ஓடும் ஊரின் கதை' சமூகத்தில் உள்ள சுரண்டல்கள் பற்றி பேசுகின்றது. மனித உறுப்புக்களை (கிட்னி) கடனடைக்க விற்கும் வர்க்க சுரண்டல், அதை விற்க செல்பவள் மீது நடத்தப்படும் பாலியல் சுரண்டல், கிட்னி விற்று வந்தபின் தனது பாலியல் தேவைகளுக்காக அவளை விட்டு செல்லும் (மீதமிருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு) அவள் கணவனின் சுரண்டல் என கதையில் மனிதர்கள் மற்றவரை சுரண்டிக்கொண்டே இருக்கின்றார்கள். 'திருவேலைக்காரி' தன் பெண்ணின் திருமணத்திற்காக அரசாங்கம் கொடுக்கும் பணத்தை பெற முயற்சிக்கும் தாயின் கதை. நமக்கு பழக்கமான கதை தான். அரசு அலுவகலத்தில் நாம் எதிர்கொண்டுள்ள/எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. கொஞ்சம் படித்தவர்களுக்கே சவாலாக இருக்ககூடிய அது, படிக்காத எளிய மக்களுக்கு எவ்வளவு மலைப்பாக இருக்கும். நமக்கு கதையின் முடிவு சுபமாக இருக்காது என்பது முதலிலேயே தெரிந்தாலும், சம்பவங்களின் நெருக்கத்தால் கதையுடன் ஒன்றி விடுகின்றோம். 'வண்ணக்கனவுகளும் அப்பாவும்' கதையின் களம் சென்னை. சினிமாவில் சேர விரும்பி சில ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கும் ஒருவனை பார்க்க அவன் தந்தை மேன்ஷனுக்கு வருகிறார். அவன் அப்பா அறை நண்பனிடம் வேறு தொழில் பார்க்குமாறு சொல்கிறார். ஆனால் தந்தையும் மகனும் சரியாக பேசிக்கொள்வதில்லை, ஏதோ தயக்கம். இரவு பஸ்சில் அவர் ஏறியவுடன் மகன் உடைந்து வெற்றி பெறுவதை பற்றி தனக்குள் ஏற்பட ஆரம்பித்திருக்கும் அவநம்பிக்கையை, அதனால் ஊர் திரும்ப விடாத அவமான உணர்ச்சியை, முதல் முறையாக அவருடன் சொல்கிறான். அவனது தந்தை அவனை ஊருக்க வர அழைக்கவில்லை, மாறாக ஐநூறு ருபாய் நோட்டுக்களாக தந்து விட்டு செல்கிறார். ஏன்? காலையில் மகன் ஊர் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தது போலிருந்தவர், ஏன் பணத்தை கொடுத்து செல்கிறார். மகனின் துக்கத்தை தாங்க முடியாததாலா, அவன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளத என்று யோசிக்க வைக்கின்றது. 'வேகாத வெய்யில்' ஒரு கனவு சிதைவதை பற்றியது. பனிரெண்டாவது முடித்து விடுதியில் இருந்து கிளம்பி தன் சொந்த ஊர் வருகிறான் ஒரு மாணவன். கணிப்பொறி பாடத்தை எடுத்திருந்த அவன் மேலும் படிக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. மதியம் ஊருக்கு வந்து தாய்/தந்தை படும் பாட்டை பார்ப்பவன், அன்று மாலையே திருப்பூரில் வேலை செய்ய ஏற்பாடு செய்து விடுகிறான். அவனின் உள் உணர்சிகள் நமக்கு தெரிவதில்லை, இயல்பாக நடக்கும் செயல் போல் தன் கனவுகளை முறித்து வேலைக்கு செல்ல ஆயுத்தமாகின்றான். படிக்கும் நமக்குள் துயரம் பரவுகிறது. இதே போல் எத்தனை பேர் தங்கள் கனவுகளை வருட வருடம் தெரிந்தே தொலைக்கின்றார்கள். 'ஆறுமுகக் காவடி', 'நிழல் விளையாட்டு' சாதியத்தின் கோர கரங்களின் வலிமையை கட்டுகின்ற கதைகள்.
ஸ்ரீராமின் கதைகளில் இருக்கும் பொதுத்தன்மை உருவ அமைதி எனலாம். கதைகள் உரத்த தொனியில் இருப்பதில்லை, ஒரு சலமற்ற வெளியை வெயிலில் பார்ப்பது போலவோ, இளங்காலை சூட்டில் வீடு வாசலில் அமர்ந்து வெயிலில் ஒளிர்ந்து பளிச்சென்று இருக்கும் தெருவின் அமைதியை பார்ப்பது போல் ஏற்படும் உணர்வு கதைகளை படிக்கும் போது ஏற்படும். வாசகனை தனக்கு நெருக்கமாக்கி, எளிதில் கதைக்குள் அழைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது அது. காத்திரமான கதைகளை கொண்ட இந்த தொகுப்பு நிச்சயம் நல்ல வாசிப்பனுபவத்தை தரும்.
வெளியீடு -தோழமை பதிப்பகம்.
No comments:
Post a Comment