Saturday, February 4, 2012

நிழலின் தனிமை - தேவிபாரதி


இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் தேவிபாரதி குறைவாகவே எழுதி உள்ளார். ஒரு சிறுகதை/நெடுங்கதை/கவிதை/கட்டுரை தொகுப்பு மற்றும் ஒரு நாடகம் அவ்வளவே. 'நிழலின் தனிமை' அவருடைய முதலாவது நாவல். 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு துயர சம்பவத்தின் நினைவுகளை சிலுவையாக தன்னுள் சுமந்து தெரியும் ஒருவனின் கதை இது. அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு கிளார்க் தன் அக்கா சாரதாவை வன்புணர்ச்சி செய்த கருணாகரன் என்பவனை முப்பது ஆண்டுகள் கழித்து சந்திக்கின்றான். இத்தனை ஆண்டுகளும் அவனை பழிவாங்க வேண்டும் என்ற வன்மத்துடன் கிளார்க் இருந்துள்ளார். கருணாகரனுடன் பழக வாய்ப்பு கிடைக்க, அவன் வீட்டிற்கு அடிக்கடி செல்லும், அவனுடைய கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் அளவிற்கு உயர்கின்றார். இதனிடையே கருணாகரனை பழிவாங்க எண்ணி அவர் செய்யும் காரியங்கள், அதன் விளைவுகள், அதனால் கிளர்க்கே எப்படி மாறுகின்றார் என்பது தான் நாவல். 

அவருடைய பழிவாங்கும் (அல்லது அப்படி நினைக்கும்) செயல்களில் இருக்கும் அர்த்தமின்மை மற்றும் அபத்தம், வாழ்கையில் நீதி என்பது இல்லை என்று நம்மை நினைக்க தோன்றும். அவருடைய ஒவ்வொரு செயலும், ஒன்று குழந்தைத்தனமாக இருக்கும் (மொட்டை கடுதாசி போடுதல்), அல்லது அவருடைய தயக்கத்தால் பாதியில் விட்டு விடுவதாக முடியும். (கொலை செய்ய கத்தியுடன் சென்று, வாய்ப்பு கிடைத்தும் நிறைவேற்றாமல் இருப்பது). அதே போல் கருணாகரன் மகளுடன் (சுலோ)  காதல் கொள்வது, அதன் மூலம் அவனை காயப்படுத்த நினைப்பது. (மூன்றாம் தர சினிமா போல் என்று கிளர்க்கே நினைக்கின்றார்) . கிளார்க் உண்மையில் அவளை காதலித்தாரா அல்லது நடித்தாரா  என்று உறுதியாக சொல்லமுடியாது. அவளை கைவிட்டதற்கு அவருடைய இயல்பான, எதிலும் இருக்கும் தயக்கமே ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இதனால் கருணாகரன் காயப்படவில்லை, அவனுக்கு இது பற்றி தெரியவே தெரியாது. இது ஒரு புறமிருக்க, சுலோ கிளார்க் தன்னை மணம் முடிக்க மாட்டான் என்று தெரிந்ததும் அவனை ஒரு வேலையாள் போலவே நடத்த ஆரம்பிக்கின்றாள், கிளார்க்கும் அதை எதிர்க்கவில்லை. கருணாகரன் குடும்பம் வேறொரு பிரச்சனையில் மாட்டிய போதும், அவர் கூட இருந்து உதவுகின்றார். பழிவாங்க சென்ற இடத்தில், வேலையாளாக மாறி அவர்களின் நன்மைக்கு உழைப்பவனாக மாறிப்போனது ஒரு அபத்தம் தானே. 

பின்னர் கிளார்க் அவர்கள் வீட்டிலிருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்கை மேற்கொள்கின்றார். இதில்  கிளார்க்கே ஒரு வகையில் கருணாகரன் போல் நடந்து கொள்வது ஒரு முரண் நகை. சுலோவிடம், அவருடைய  நடத்தையை இப்படி பார்க்கலாம்.  கிளார்க் அவரை வேண்டுமென்றே ஏமாற்றினாலும், அல்லது பயத்தால் விலகிப்போனாலும் ஆண்கள் பெண்கள் மீது செய்யும் வன்முறையின் இன்னொரு வகை தானே அது. (கண்ணாடியில் கருணாகரனின்  முகத்தை பார்க்கும் இடம், அதற்கு முன்பான இடங்களில் கதை யதார்த்தவாதத்தில் ஒரு சில பக்கங்கள் சர்ரியலிச பாணியில் செல்கின்றது, அது ஒன்றும் துருத்தலாக இல்லை, அவருடைய அப்போதைய மனநிலைக்கு,  தோதாகவே உள்ளது. அவரின் ஆழமான உணர்வுகளின் கனவென்று தான் கொள்ளவேண்டும்). நாவலின் முடிவை இரண்டு விதமாக கருத வாய்ப்புண்டு, ஒன்று வலிந்து திணிக்கப்பட்டதாக கருதலாம் அல்லது  தர்க்கரீதியானதாக. என்னால் இதை, திடீர் திருப்பமாக பார்க்க முடியவில்லை நாவலின் அடிநாதமாக வரும் அபத்தத்தின், அர்த்தமின்மையின்  உச்சமாகவே பார்கின்றேன். 

'படைப்பு மொழியை கண்டறிவதின் சவாலை' பற்றி தேவிபாரதி  முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். அது உண்மை தான்,  அவருடைய பலி தொகுதி மற்றும் சமீபத்திய நெடுங்கதைகளை பார்க்கும் போது இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை,மாற்றத்தை நாம் உணர முடியும். இந்த நாவலும் சமீபத்திய நெடுங்ககதைகளின் மொழியின் நீட்சியாக உள்ளது. சற்றே மெருகேறி உள்ளது என்றும் கூறலாம்.   எளிமையான அதேநேரம் கட்டுக்கோப்பான, அடர்த்தியான மொழி. பத்திரங்களின் பதற்றத்தையும், சோகத்தையும், மன இறுக்கத்தையும், சிடுக்குகளையும் வாசகனுக்கு கடத்தும் மொழி. கிளார்க்கின் மொட்டை கடிதம் எழுதி அதை தபால் ஆபீசில் போட செல்லும் இடம் ஒரு உதாரணம். அவருக்கு  மனதில் ஏற்படும் பதற்றங்கள் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.  மிக நுணுக்கமான, சிடுக்குகள் நிறைந்த மன உணர்வுகளை மொழி மூலம் வெளிக்கொணரும் முயற்சி நாவல் முழுக்க விரவிக்கிடக்கின்றது.  இந்த நாவல் முழுவதும் ஒரு மிக மெல்லிய அங்கதம் இருந்ததாக தோன்றியது எனக்கு. அது மிக இயல்பாக, சற்றே கண்ணையர்ந்தால் கவனிக்க படாமல் சென்று விடக்கூடியதாக இருக்கின்றது. 

கிளார்க்கிற்கு நாவல் முழுதும் பெயர் இல்லாமல் இருப்பது மிக பொருத்தம். அவர் எல்லார் வாழ்விலும் பங்கு பெற்றாலும் ஒரு வகையில் அநாமதேயமாகவே, எங்கும் நிலைகொள்ளாமல் உள்ளார். கருணாகரன் குடும்பத்துடன் பழகுவது, சட்டென்று விலகுவது, சுகந்தியுடன் ஒரு தற்காலிக உறவு இப்படி எப்போதும் ஒரு அலைச்சல் அவர் வாழ்கை முழுவதும்.   கிளார்க் சிறுவனாக இருக்கும் பொது கருணாகரனை வெட்ட சென்று அதில் தோல்வி தான் அடைகின்றார். கிளார்க் வளர்ந்து விட்டாலும், அவர் மனதில் அந்த சிறுவன் அப்படியே தான் உள்ளான் என்று கிளார்க்கின் செயல்கள் மூலமும் அவை வியர்த்தனமாவதின் மூலமும் தோன்றுகின்றது. இப்படி எண்ண வாசகனுக்கு சங்கடமாகதான் உள்ளது, ஆனால் வாழ்கை எப்போதும் நமக்கு தேவையான ஒரு நிறைவு  (closure) அளிப்பதில்லையே. 

நாவல் முழுவதும் கிளார்க்கின் பார்வையில் உள்ளதால் மற்ற பாத்திரங்கள், அவர்களின் உணர்வுகள் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. நாவலின் ஆரம்பத்தில், சாரதா, கருணாகரன் இருவரும் நாவலில் முக்கிய பங்குவகிப்பார்கள் என்று நாம் நினைப்போம், ஆனால்   சாரதா வெகு அரிதாகவே வருகின்றார், கருணாகரன் உணர்வுகள் குறித்தும் அதிகம் இல்லை. இதை நெகடிவாக கொள்ள வேண்டாம், இவர்கள் மூவருக்கும் இடையில் இருக்கும் ரூபிக் கூப் போன்ற உறவின் ஒரு பக்கம் தான் இந்த நாவல். இதை இன்னும் நான் நீடிக்க முடியும்.  சாரதாவின் பார்வையில் இருந்து இதை இன்னொரு நாவலாக எழுதக்கூடும். அந்த துயர சம்பவத்தை எப்படி எதிர்கொண்டார், எப்படி தன் வாழ்கையை மீட்டு ,குடும்பம், குழந்தை என்று ஒரு நடைமுறை வாழ்கைக்கு திரும்பினார் போன்ற கேள்விகள் நமக்கு அதில் விடை கிடைக்கலாம். அவர் கருணாகரனை, மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை என்று அவர் வரும் சில இடங்களிலேயே தெரிகின்றது, அதன் மூலம் அவர் இன்னும் சுமந்து கொண்டிருக்கும் வலியின் ஆழத்தையும்.  அவர் நாவலில் இறுதியில் கூறியது உண்மை தானா என்றும் நமக்கு அந்த நாவலில் தெரியக்கூடும். 

அதே போல் கருணாகரன் நமக்கு  பல வியாபாரங்கள் செய்யும், அரசியலில் சற்றே செல்வாக்கான மனிதர் என்ற அளவில்  வழக்கமான, சாதாரணமான ஆசாமியாக தோன்றுகிறார். சாரதாவிடம் அவருடைய நடத்தை பற்றி நமக்கு தெரியவில்லை என்றால் அவரை பற்றி நமக்கு வேற பிம்பமே ஏற்படும்.   எந்த ஒரு மனிதருக்கும் பல பக்கங்கள் இருப்பது போல நாம் பார்ப்பது அவருடைய ஒரு பக்கம் தான். 

இதை நல்ல/மோசமான நாவல்,பிடிக்கும், பிடிக்கவில்லை, என்று ஒற்றை வரியில் சொல்லமுடியாது. மனதின் அலைச்சலை கூறும், படிப்பவரையும்  அலைகழிக்கும் இந்த நாவல் படித்தவுடன் இன்னொரு வாசிப்பை கோரும். பத்திரங்களின் மனவியல் குறித்து சிந்திக்க தூண்டும், கூடவே நாம் செய்யும் பல செயல்களின் முடிவில் உள்ள அர்த்தமின்மையையும். இந்த நாவல் கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுங்கள். 

வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்