Thursday, February 21, 2013

சிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப் பட்சி

omnibus தளத்தில் வெளிவந்தது (http://omnibus.sasariri.com/2013/02/blog-post_17.html)


பெருமாள் முருகன்  நாவல்களின் அமைப்பை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன் - ஒன்று, அதன் களம், சூழல் சார்ந்து. விளைநிலங்கள் விற்கப்படுவதாகட்டும், மாதாரிகளின் வாழ்நிலமாகட்டும், திரையரங்காகட்டும், அதன் களம் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். இரண்டாவது, மனிதர்கள், உறவு சார்ந்து  - மனித உறவுகளில் உள்ள பாசமும் பிணைப்பும், அதற்கு நேர்மாறாக, அவற்றில் உள்ள வன்முறையும் பொறாமையும்; காலம் மனிதர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனால் உறவுகளில் ஏற்படும் இயல்பான நெருக்கங்களும் விலகல்களும். இவை ஒன்றாக இணைவதையே பெருமாள் முருகனின் நாவலாக பார்க்கிறேன்,  அவருடைய சமீபத்திய நாவலான ஆளண்டாப் பட்சி வரை.


ஒரு வேளாண் கூட்டுக் குடும்பத்தில் நிலம், வீடு என இருக்கும் சொத்து பங்கு பிரிக்கப்பட, அதனால் ஏற்படும் இக்கட்டான நிலையால், குடும்பத்தின் கடைசி மகன் முத்து வேறொரு இடத்தில் நிலம் வாங்கி இடம்பெயர்வதைச் சொல்கிறது இந்த நாவல்.  ஏன் குடும்பத்தில் பங்கு பிரிக்கப்பட்டது என்பது நாவலில் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஏதும் பெரும் பிரச்சனை இருந்தது போலவும் நமக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனால் ஒரு கூட்டுக் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஜாடைமாடையான உரசல்கள்,  உறவுகளுக்குள் இருக்கும் வெளிசொல்லாத பொருமல்கள், அதில் ஏற்படும் ஊமை காயங்கள், இவற்றைக் கொடி காட்டிச் செல்கிறார் பெருமாள் முருகன். இதனால் என்ன நடந்திருக்கக்கூடும்  என்பதை வாசகன்  யூகிக்க முடியும். பங்கு பிரித்தபின் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு குடும்பம் என்பது (அது தனி குடும்பமோ அல்லது கூட்டுக்குடும்பமோ) எவ்வளவு வன்மத்தை தன்னுள் பொதித்து வெளியே இயல்பாக இருக்கக்கூடியது, உறவுகளை இணைத்திருக்கும் பிணைப்பு எவ்வளவு வலுவற்றது, அது அறுந்தபின் தேக்கி வைக்கப்பட்ட எண்ணங்கள் எப்படி பீரிட்டு வருகின்றன என்பதைப் பார்க்கிறோம்.

இடப்பெயர்வு நாவலின் முக்கிய அம்சமாக இருந்தாலும் கதை மாந்தர் குறித்தே முதலில் சொல்ல வேண்டும். நல்லவர் X கெட்டவர்  என்ற உளுத்துப்போன பாத்திரப் படைப்பாக இல்லாமல் முப்பரிமாணத்துடன் இருக்கின்றனர் கதை மாந்தர் அனைவரும். உதாரணமாக முத்து. குப்பன் முத்துவின் மாமனார் பண்ணையில் வேலை செய்பவர், முத்து நிலம் தேடிச் செல்லும்போது தானும் உதவிக்கு கூட வருவதாக கூறி  முத்துவுடன் செல்கிறார். குப்பனை முத்து நல்லவிதமாக நடத்துகிறார், பாசமும் மரியாதையுமாக இருக்கிறார், அதை குப்பனும் உணர்ந்தே இருக்கிறார். இருந்தும் ஓர் இடத்தில் நிலம் வாங்குவதை பற்றி இருவரும் பேசும்போது முத்து 'சக்கிலிய குடி பக்கத்தில் நிலம் வாங்கினால் எப்போதும் காவல் இருக்க வேண்டும்' என்று சொல்கிறார்.

இதில் முத்துவின் சாதி வெறி, காழ்ப்பு தெரிகிறது. இது பொதுபுத்தி சார்ந்ததாக இருக்கும் ஒரு மனநிலை. முத்து குப்பனிடம் அன்பும், மரியாதையும் கொண்ட மனிதனாகவும், தன்னுள் சாதி வேற்றுமை குறித்த மோசமான கருத்துக்கள் உள்ளன என்பதை பற்றி பிரக்ஞை இல்லாத, அதை ஏற்றுக்கொள்கிற மனிதனாகவும் ஒருசேர இருக்கிறான். ஒரே மனிதன் இப்படி இரு வேறு மிகவும் மாறுபட்ட எண்ண ஓட்டம் கொண்டவனாக இருக்க முடியும்.  முரண்பாடுகளின் மூட்டைதான் மனிதன், அதற்காக  முத்துவின் செய்கை  எங்கும் நியாயப்படுத்தப்படுவதில்லை, அவன் அப்படித்தான் என்று காட்டிச் சென்று விடுகிறார் ஆசிரியர். 

சிறு பாத்திரங்களிலும் இந்த முரண்பாட்டை நமக்குக் காட்டுகிறார். மருமகளிடம் வெறுப்பை உமிழும் முத்துவின் தாய் (சோற்றில் விஷம் வைக்கக்கூடியவள் என்று ஜாடையாக சொல்லுமளவுக்கு),   பாகப்பிரிவினையின்போது முத்துவிற்கு நேரும் நிலையைப் பற்றி கவலைப்படாதவர்,  தன் மூத்த மகன் (பெரியண்ணன்) செய்த கீழ்மையான செயலை நியாயப்படுத்துபவர், பிறகு முத்துவிற்கு ஒரு கட்டத்தில் பண உதவி செய்கிறார்.

பெரியண்ணன் பாத்திரம்கூட அப்படித்தான். குடும்பம் பிரிந்தபின் அவர் செய்யும் காரியம், முத்துவை நிலத்தை விட்டு விரட்ட வேண்டும் என்பதற்காகவா அல்லது பெருமா மீது இருந்த ஈடுபாட்டாலா? முத்துவை எப்போதும் தோளில் சுமந்து வளர்த்த அவர் எப்படி இப்படியொரு காரியம் செய்ய துணிந்தார், இப்படிப்பட்ட சலனத்துடனா அவர் பழகி வந்தார்? உறவுகளில் பொதிந்திருக்கக்கூடிய கள்ளத்தனம்,  பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தன் காரியத்தை சாதிக்க பகடைக்காயாக உபயோகிக்கலாம் என்ற ஆணின் எண்ணம் இவைதான் பெரியண்ணன் செயல் மூலம் வெளிப்படுகின்றன.

பொதுவாக இடப்பெயர்வு என்பது வெளிநாடுகளில் சென்று குடியமர்வது என்பதான அளவிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாட்டில், ஒரு மாநிலத்திலேயே இடப்பெயர்வு தரும் சங்கடங்கள் குறித்த பதிவுகள் அரிதே ('மற்றும் சிலர்' நாவல் நினைவுக்கு வருகிறது). நாவலின் கதை நடக்கும் காலகட்டத்தில் (பஸ், ரயில் போன்றவை அதிகம் இல்லாத காலமாக நான் புரிந்து கொள்கிறேன்), மாட்டு வண்டியில் செல்வதென்பது, ஒரு 50-100 கிலோமீட்டர் தொலைவையே முற்றிலும் புதிதான இடமாக காட்டக்கூடும். வெளியூர் என்பதே ஒரு பத்து மைல் தொலைவுதான் என்று இருந்திருக்கக்கூடிய காலம் அது  (குப்பன் முத்துவுடன் கிளம்பும்போது, தான் கிணற்றை மட்டுமே பார்த்திருப்பதாகவும், இனிதான் ஆறுகள் போன்ற பெரிய நீர்நிலைகளைப் பார்க்கவேண்டும் என்றும் பொருள்பட தன்னுடைய முந்தைய பயணங்கள் பற்றி கூறுவதை இங்கு பொருத்திப் பார்க்கலாம், அதாவது அவர் அதிகம் எங்குமே சென்றதில்லை என்பதை அறியலாம்). எனவே முத்துவிற்கு எப்போதும் இருக்கும் பதட்டம், யாரையும் முழுதும் நம்பாத அதீத சுதாரிப்பு நிலை இவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. பணம் களவாடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே எப்போதும் அவன் இருக்கிறான்.  பணம் தன்னிடம் கையிருப்பில் இல்லை என்று பொய் சொல்லி, பதிவு செய்யும் நாளில் பஸ் மூலம் பணம் வரும் என்று பொழுதைக் கழிக்க ஊர் சுற்றி பின் வருவது இதன் நீட்சியே.

நம்பிக்கை மட்டுமல்ல, முத்துவின் இடத்திலிருந்து பத்து நாள் தொலைவில் உள்ள இடமும் அவனுக்கு ஒரு கலாசார அதிர்ச்சியையே கொடுக்கிறது. அவன் நிலம் வாங்கும் கிராமத்தில் உள்ள மனிதர்களின் பழக்க வழக்கங்கள் அன்னியமாக தோன்றுகின்றன (நீ, வா, போ என்று அந்த கிராமத்து மக்கள் கூப்பிடுவது, கை கூப்பி வணக்கம் சொல்லாதது போன்றவை). இன்று வெளிநாடுகளுக்கு செல்பவருக்கு ஏற்படும் அதே அதிர்வுதான் முத்துவுக்கும் ஏற்படுகிறது.  இடம்பெயரும்  இடத்தின்  தூரத்திற்கும் இடப்பெயர்வினால்  உண்டாகும் பயம், அந்நியத்தன்மை இவற்றுக்கும்  சம்பந்தம் உண்டென்றாலும், அது பெரிதும் நம் மனதைச் சார்ந்ததே. பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி வாழ வேண்டும் என்றாலும் அது மனரீதியாக நமக்கு முதலில் ஒவ்வாமையாகத்தான் இருக்கும், இதில் அதே மாநிலம், நாடு அல்லது வெளிநாடு என்று வேறுபாடு கிடையாது. என்ன, புதிய இடத்தில் நம்மை பொருத்திக் கொள்ள ஆகும் காலம் மாறுபடும்.

நிலம் வாங்கியபின் அதைச் சீரமைக்க முயல்வதே நாவலின் இறுதி பகுதி.  இதில்  இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என்று பிரமிக்க வைக்கின்ற விஷயங்கள் இந்த பகுதியில் உள்ளன. நாவல் முழுவதும் வேளாண்மை, நிலம், மண் குறித்த இத்தகைய தகவல்கள் விரவியுள்ளன. இந்த பகுதியில் உழைப்பே, நிலமே  வேளாண்மையில் ஈடுபடுவர்களுக்கு வாழ்க்கை என்பதை முத்து, குப்பன், பாட்டி, ராசா இவர்களின் தினசரி வாழ்கை மூலம் உணர்கிறோம். முத்து பார வண்டி ஓட்டுவது போன்ற வேறு சில வேலைகளுக்குப் போனாலும் அவன் திரும்ப நிலத்திற்கே வருவது இதனால்தான். இத்தனை முதிர்ந்த வயதில் பாட்டியின்  உழைப்பு, பிறரை எதிர்பார்க்காமல் இறுதி வரை வாழ வேண்டும், உழைக்க வேண்டும் என்ற வைராக்கியம், சுயமரியாதை நம்மை வெட்கச் செய்யக்கூடியது. காலையில் வேலைக்குச் சென்று, மாலை வீடு திரும்பும் அந்த கிராமத்து மக்களைப் பார்த்து முத்து ஆச்சர்யப்படுவதின் காரணம், காடே வீடாக, வாழ்க்கையாக அவர்கள் இருப்பதை படித்தவுடன் புரிகிறது.

குப்பனையும், பாட்டியையும் இந்த நாவலின் ஆளண்டாப் பட்சிகளாக பார்க்கிறேன். எவ்வளவு உதவுகிறார் குப்பன் முத்துவிற்கு, அவரில்லாமல் இந்த நாவலே இல்லை. முத்து மனதறிந்து ஊக்கப்படுத்துவதாகட்டும், தேற்றுவதாகட்டும் உடலுழைப்புக்கு ஈடாக அவர் மனரீதியாகவும் தூணாக உள்ளார். தன் வாழ்க்கையை முத்துவின் மாமனாருக்கு வேலை செய்தே கழித்தவர், இந்த முதிய வயதில் தான் பார்த்து வளர்ந்த பெருமாவிற்காக முத்துவுடன் அலைகிறார், தன் குடும்பத்தை அப்படியே விட்டுவிட்டு முத்துவிற்கு அயராது உதவுகிறார்.

இந்த பாத்திரப்படைப்பில் நமக்கு கேள்விகள் எழலாம். முத்து சக்கிலிய குடி பற்றி பேசுவதை குப்பன் ஏன் மெளனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நமக்கு தோன்றுகிறது,  அதற்கு அவர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை. மேலும் அவரின் உழைப்பு முற்றிலும் மற்றவர்களால் உறிஞ்சப்படுகிறது என்பதுதான் உண்மை. இன்றைய சமூக, அரசியல் பார்வையில் இந்த கேள்விகள் முக்கியமானவை, கேட்கப்படவேண்டியவை, இருப்பினும் அவரின் மனநிலையை கதை நடக்கும் காலகட்டத்தை வைத்து நாம் பார்க்க வேண்டும். அவருக்கு தாம் உறிஞ்சப்படுகிறோம் என்று தோன்றிக்கூட இருக்காது, அல்லது தனக்கு விதித்தது இவ்வளவுதான் என்று அவர் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அது சரியானது அல்ல, ஆனால் என்ன செய்ய, அவர் புரட்சியாளர் அல்ல.

பெரியார் பற்றி குப்பனின் பாட்டன்  கூறியதாக குப்பன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஒருவேளை பெரியார் குறித்து இன்னும் அதிகம் குப்பன் தெரிந்துகொண்டிருந்தால், அவரது மேடைபேச்சுக்களை கேட்டிருந்தால் குப்பனின் வாழ்க்கையும் மாறி இருக்கும். குப்பனின் பாட்டன் செய்தது போல் - "எல்லா ஊருச் சந்தைக்கும் போயிருவாரு..... செருப்பு தெப்பாரு. ... இப்பிடித்தான் அவரு பொழப்பு. கவண்டமூட்டுப் பண்ணையதுக்கு மட்டும் போவமாட்டம்னு சொல்லிட்டாரு" - சுதந்திரமாக இருந்திருப்பார்.

இதை இங்கு சொல்லக் காரணம் குப்பனின் பாத்திரத்தை ஆசிரியரின் நோக்கத்திற்கு எதிர்மறையாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதால். நாவலின் நாம் பார்க்க வேண்டியது அவரின் அளவற்ற உதவும் தன்மையையும், உழைப்பையுமே. அவர் ஏன் அப்படி உள்ளார் என்பதை நாம் நாவலுக்கு வெளியேதான் தேட வேண்டும். அதுதான்  நாவலின் வெற்றி, முடிந்த பின்பும் நம்மை யோசிக்க வைத்து, வாசகனையே கதையை நீடிக்க செய்வது.

நாவல் முடிக்கையில் மனிதர்களின் முடிவில்லாத (உடல் /மனரீதியான) அலைச்சலை பற்றிய எண்ணங்கள் மேலோங்குகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட முதல் மனிதனில் ஏற்பட்ட அலைச்சல் இன்னும் ஓயவில்லை. முத்துவின் முன்னோர்களும் இப்படிதான் பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படி வேறொரு இடத்திலிருந்து வந்திருப்பார்கள், அவர்களும் இதேபோல் புது இடத்துடன் உடனே ஒன்ற முடியாமல் இருந்து, காலப்போக்கில் மாறி, முத்துவின் தலைமுறையில் முற்றிலும் மண்ணின் மைந்தர்களாகி இருப்பார்கள். மனித இனத்தின் தீராத அலைச்சலின் ஒரு microcosmஐ இந்த நாவலில் பார்க்கிறேன்.

No comments:

Post a Comment