சொல்வனம் இதழில்(
http://solvanam.com/?p=26346 ) வெளிவந்தது
-----------------
“Do what you love and you’ll never work a day” போன்ற வாக்கியங்களை இப்போதெல்லாம் நாம் அதிகம் காண்கிறோம். ஆனால் நடைமுறை வாழ்க்கை அப்படியா உள்ளது? ஒரு சாரார் தங்களுக்கு சுத்தமாக பிடிக்காத வேலையில் உள்ளனர். இன்னொரு சாரார் தங்கள் வெறுக்கும் வேலையில் இல்லாவிட்டாலும், தங்களுக்கு விருப்பமான துறையில் இல்லாதவர்கள். மிக சிறிய சகவீதமே தங்களுக்கு பிடித்த துறையில், தாங்கள் விரும்பும் வேலையில் ஈடுபடுகிறார்கள். எனவே தங்கள்அலுவல் சார்ந்த சலிப்பு (ennui) என்பது பலரிடம் உள்ளது.
இலக்கியத்தில் இது குறித்து நிறைய பேசப்பட்டுள்ளது. அலுவல் சார்ந்த எழுத்துக்களை இரண்டு வகையாக பார்க்கலாம். ஒன்று, மனிதன் தன் அலுவலின் அழுத்தத்தால் வேறொன்றாக உருமாற்றம் (metamorphosis) கொள்ளும் காஃப்கா பாணி. இந்த வகை நாவல்களில் வேலை, அலுவகலம் இவை எல்லாம் ஒரு தொடக்கப் புள்ளியே. நாவலின் மையம் முக்கிய பாத்திரத்தின் இருத்தலியல் நெருக்கடியாகவோ , தன் வேலையின் அலுப்பில் இருந்து மீள வேறொன்றில் அதீத ஆர்வம் காட்டுவதாகவோ இருக்கும். சரமாகோவின் ‘All The Names’ நாவலில் மாறுதலே இல்லாத வாழ்க்கையை வாழும் நடுவயதான ஒரு எழுத்தர் ஒரு பெண்ணை கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் முற்றிலும் பீடிக்கப்படுவதால் அவர் வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது.
இன்னொரு வகை நாவல்களில் முக்கிய பாத்திரத்தின் வேலை, அலுவலகம் இவையும் ஒரு பாத்திரமாகவே இருக்கும். அவன் வேலை செய்யும் துறை பற்றிய குறிப்புகள் அதிகம் இருக்கும், முக்கியமாக அவல நகைச்சுவை இருக்கும். இந்த நாவல்களை அலுவலக நாவல் (‘office novel’) என்று தனியே வகைப்படுத்தலாம். இரண்டு வகை நாவல்களிலும் சொல்லும் முறை வேறுபட்டு இருப்பது போல் தோன்றினாலும் இரண்டும் சொல்வது ஒன்றைத்தான், ஒன்றை இன்னொன்றின் mirror image எனலாம். காப்கவில் இல்லாத இருண்ட நகைச்சுவையா? அதே போல்அலுவலக நாவல்கள் நகைச்சுவையாக இருப்பது போல் தோன்றினாலும், நவீன மனிதனின் சிதைவைத் தான் அவையும் காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அலுவலக நாவல் தான் நாம் பார்க்கவிருக்கும் ஜாஷுவா ஃபெர்ரிஸ் (Joshua Ferris’) எழுதிய ‘Then We Came to the End’.
நாவலின் தலைப்பில் உள்ள ‘முடிவு’ என்பது எதைக் குறிக்கிறது?. இன்று முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் அதாவது தொண்ணூறுகளின் மத்தியில்/இறுதியில் வேலைக்கு சேர்ந்து விட்டவர்களுக்கு, 95 முதல் 2000 வரையிலான ஆண்டுகளை ‘It was the best of times, it was the worst of times,’ என்று குறிப்பிட்டால் புரியும். அதற்கு முன் நினைத்தே பார்த்திராத சம்பளம், அதைத் தவிரவும் பல சலுகைகள், என அவர்தம் பெற்றோர் பல பத்தாண்டுகள் வேலை செய்து ஈட்டிய ஊதியத்தை வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திலேயே பார்த்த காலம். 2000இல் உலக பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு, வேலை சூழல் முற்றிலும் மாறியது. கனவுகள் துர்சொப்பனங்களாக மாறின, மிக அதிக சம்பளம் என்பது போய், வேலை நிலைத்தால் போதும் என்ற நிலை. இப்படி ஒரு உச்சத்திற்கு சென்று, 2000-இல் நலிவடைந்த ஒரு விளம்பர நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்க்கையை, ஒரு கூட்டு அமெரிக்கக் கனவின் முடிவை இந்த நாவல் காட்டுகிறது.
டான் டெலிலோ (Don Dellilo) எழுதிய ‘Americana’ நாவலின் முதல் வரியிலிருந்து (‘then we came to the end of another dull and lurid year’ ) நாவலின் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரியும்தான் நாவல் எதைப் பற்றியது என்பதை சுட்டுகிறது. கதை சொல்லலில் மிக சுவாரஸ்யமான உத்தியை ஃபெர்ரிஸ் பயன்படுத்தி உள்ளார். நாவல் முழுவதும் தன்மைப் பன்மையில்(’first person plural)உள்ளது. இது கதையைச் சொல்வது ஒருவரா அல்லது பலரா என்று எண்ணவைக்கிறது. நேர்க்கோட்டில் செல்லும் கதையாகவும் இல்லாமல், ஒரே தாளகதியில் காலத்தில் முன் பின்னாக செல்லும் கதையாகவும் இல்லாமல், பல பேர் சேர்ந்து பேசும் போது, சம்பவங்கள் கூறப்படுவதும், ஒன்றுக்குள் இன்னொன்று சொல்லப்படுவதும், ஒரு சம்பவம் பாதியில் வெட்டப்பட்டு, இன்னொருவர் பேச, சிறிது நேரம் கழித்து மீண்டும் பழைய சம்பவத்திற்கு பேச்சு திரும்புவது போல் இருக்கும், பல குரல்கள் ஒலிக்கும் polyphonyஐ நினைவூட்டுகிறது. இந்தக் குரல்கள் நம்முடையதாகவோ, அல்லது அவை சொல்லும் சம்பவங்கள் நமக்கோ,நமக்குத் தெரிந்தவருக்கோ நடந்ததாகவோ இருக்கக்கூடும்.
தனக்குப் பிடித்த துறையில் இருப்பவர்கள் பற்றிக் கவலை இல்லை, அவர்கள் பொருளாதார ரீதியாகத் துன்பப்பட்டாலும் மனதளவில் ஓரளவு நிறைவாக இருப்பார்கள். தாங்கள் வெறுக்கும் வேலையில் இருப்பவர்களுக்கோ எதிர்நோக்க ஒரு வருங்காலம் உள்ளது, தங்கள் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தற்காலிக உறைவிடம் தான் அவர்களின் வேலை. ஆனால் இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலானோர், எப்படி இந்தத் துறைக்கு வந்தோம் என்று புரியாமலேயே வேலை செய்து கொண்டிருப்பவர்கள். உண்மையில் இத்தகைவர்கள் பாடு தான் மிகவும் மோசமானது. இதனால் தங்கள் வேலையை அவர்கள் வெறுக்காவிட்டாலும் , என்னவென்று சொல்லத்தெரியாத சஞ்சலத்தில் உழல்பவர்கள். நல்ல சம்பளம், கார், சொந்த வீடு என்று இருந்தாலும், பல்லிடுக்கில் ஏதோ சிக்கிகொண்டது போல் உணர்பவர்கள்.
ஹாலிவுட்டில் திரைக்கதை ஆசிரியராக முயலும், நாவல் எழுதிக்கொண்டிருக்கும் தங்கள் சகாக்களை பார்த்து ஆச்சர்யப்படுபவர்கள், வேலையை உதறி விட்டுச் செல்பவர்களை பார்த்துப் பொறாமைப்படுபவர்கள். அது கூட ஒரு சில வினாடிகள் தான். வீட்டுக் கடன், கடன் அட்டை பில், கோடை விடுமுறை இவை எல்லாம் ஞாபகம் வந்தவுடன் மீண்டும் தங்கள் உலகிற்குள் சென்று விடுகிறார்கள். இருத்தியல் சார்ந்த நேரடியான நெருக்கடிகளும் இந்த நாவலில் இல்லையென்றாலும், தங்களை அறியாமலேயே இத்தகைய நெருக்கடியில் சிக்குண்டவர்கள் தான் இந்த கதை மாந்தர்கள் என்பதால் தான் அது வெளிப்படியாகப் பேசப்படுவதில்லை.
சில நாட்கள் வெறித்தனமாக வேலை செய்ய உந்தப்படுவது, சில நாட்கள் காலையிலேயே அலுவலகத்தில் காலடி வைக்கவே வெறுப்பது போன்ற மனரீதியான ஏற்ற இறக்கங்கள் (ebbs and flows), பல தரப்பட்ட கிசுகிசுக்கள் (யார் யாரைக் காதலிக்கிறார்கள்), வதந்திகள் (அடுத்து யார் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்), என ஒரு சராசரி அலுவலக நாளின் நாடியைப் பிடித்து நமக்குச் சொல்கிறார் ஆசிரியர். வேலை அலுப்பைப் போக்க வித விதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள், ஒருவர் எலும்புக்கூட்டை தன் வேலை அறையில் வைத்திருக்கிறார். அதற்கு தொப்பி அணிவித்து, அதன் கையில் துப்பாக்கியும் கொடுத்திருக்கிறார். ஹாங்க் (Hank) ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பவர் , அலுவலகம் வந்தவுடன் ஒரு நாவலை ஜெராக்ஸ் எடுத்து படிப்பவர்., பார்ப்பவர் அவர் அலுவலகப் பத்திரங்களைப் படிப்பதாக எண்ணுவார்கள். அப்படி எதுவும் ஏமாற்ற முடியாத போது, ‘we wandered the hallways carrying papers that indicated some mission of business when in reality we were in search of free candy.’ என்று பொழுது கழியும்.
இன்றையப் பெருநிறுவனச் சூழலின் முக்கியமான பக்க விளைவு , வேலையாட்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு. ஊதியம் அதிகரிக்க அதிகரிக்க, இவர்களுக்கு தங்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா என்ற சந்தேகம் எழுகிறது. ஊதியத்திற்கு மேலாகக் கடன் வேறு வாங்கி விடுகிறார்கள். இதுவும் அவர்களுடைய அச்சத்தை அதிகரிக்க, தங்கள் ஒவ்வொரு செயலும் மேலதிகாரிகளால் பார்க்கப்பட்டு குறித்து வைக்கப்படுவது போல் எண்ணுகிறார்கள். தன் சக ஊழியர் ஒரு சிறந்த கருத்தைச் சொன்னால் பதட்டமாகிறார்கள், எரிச்சலடைகிறார்கள். அந்த கணம் சக ஊழியரை வெறுக்கிறார்கள். ஒரு சின்ன பாராட்டு கிடைத்தால் சிறிது சந்தோஷப்பட்டாலும், ஏன் அவ்வளவு தான் பாராட்டினார் என்று சந்தேகப்படும் அளவிற்கு இவர்கள் நிலைமை மோசம், இவர்கள் போல் கட்டுடைத்தலை யாரும் செய்ய முடியாது. மேலதிகாரி சொல்லும் ஒரு சொல் இவர்களை நாள் முழுவதும் அலைகழிக்கும் ஆற்றல் உள்ளது. இந்த நாவலில் மேலதிகாரி ஒரு சிறு தவறு செய்தவரிடம் “Don’t worry so much..” என்கிறார். நியாயமாகப் பார்த்தால் இதில் பயப்பட ஒன்றும் இல்லை. ஆனால் அதற்கு வரும் எதிர்வினை என்ன? “‘Dont worry so much?’ we asked each other. ‘Why not at all’” தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்த கதை தான்.
ஒரு கட்டத்தில் இந்த மன அழுத்தம் மிக மோசமான விளைவுகளுக்கு கொண்டு செல்கிறது. கார்ல் (carl) என்ற பாத்திரம் ரொம்பவே கவலைப்படுபவர். கூடவே அவர் மனைவி ஒரு பிஸியான மருத்துவர். அவருடன் வேறு ஒப்பிட்டு தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் கார்ல், ஒரு நாள் தன் மனைவியுடன் காரில் அலுவலகம் வந்தவுடன், இறங்காமல் தன் உடைகளை களைந்து, அலுவலகம் சென்றால் இப்படித்தான் செல்வேன் என்கிறார். ஒரு கட்டத்தில் மன அழுத்தம் குறைக்கும் மருந்துகளுக்கு (antidepressants) அடிமையாகிறார், அதை மற்ற ஊழியர்களிடமிருந்து திருடவும் செய்கிறார்.
பொதுவாக மேலாளர்களைத் திறமையற்றவர்களாக, மற்றவர்களின் உழைப்பைத் திருடுபவர்களாக, குரூரமாகக் காட்டுவது இந்த வகை நாவல்களின் இயல்பு. நல்ல வேளை ஃபெர்ரிஸ் அப்படி எதுவும் செய்வதில்லை. சொல்லப்போனால் நாவலில், இரு உயரதிகாரிகளுக்கு மட்டும் சற்றே அழுத்தமாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொல்லப்படுகிறது. லின் (Lynn) இந்த அலுவலகத்தின் ஒரு பங்குதாரர். அனைவரும் அவரைக் கண்டு பயந்தாலும், அவர் திறமை மேல் மதிப்புடையவர்கள், அவரின் ஒரு பாராட்டுச் சொல்லிற்காக ஏங்குகிறார்கள். மார்புப் புற்றுநோய் குறித்த ஒரு விளம்பரப்படம் எடுக்க வேண்டும் என்ற புதிய வேலையை லின் தருகிறார். இந்த நேரத்தில் அவருக்கே மார்புப் புற்று நோய் இருப்பதாக வதந்தி பரவுகிறது. பிறகு லின் திட்டத்தைக் கை விடுகிறார். உண்மையில் அப்படி ஒரு வாடிக்கையாளர் இருந்தாரா, அல்லது லின் தன் நோயின் காரணமாக இப்படி ஒரு திட்டத்தை ஆரம்பித்தாரா என்று இறுதி வரை தெரிவதில்லை. எப்போதும் கட்டுப்பாடோடு இருக்கும் லின்னின் இன்னொரு முகத்தை நாம் பார்க்கிறோம்.
லின் போன்றவர்களிடம் ஊழியர்கள் பணிந்து சென்று விடுவார்கள். பின்னால் கரித்துக் கொட்டினாலும் நேரடியாக எதுவும் செய்ய மாட்டார்கள். இடை நிலை மேலாளர்கள் நிலைமை தான்மோசம். அவர்கள்மீது தங்கள் காழ்ப்பை மற்ற ஊழியர்கள் அவ்வப்போது பல வகைகளில் காட்டுவார்கள். இங்கு ஜோ என்ற மேலாளர் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர், workaholic. இதனாலேயே மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாகிறார், முசுடு என்று ஏசப்படுகிறார், மற்ற ஊழியர்களிடமிருந்து சில பொருட்களைத் திருடி இவர் அறையில் வைக்கிறார்கள். ஆனால் அவர் இவர்கள் மேல் வெறுப்பை உமிழ்வதில்லை, அதற்கான காரணத்தை அவர் கூறும் இடத்தில், எந்திரம் போல் இருக்கும் அவரிடம் ,தன்னைப் பற்றியும், சமூகம் பற்றியும் ஒரு கூர்மையான் அவதானிப்பு உண்டு என்பதை உணர்கிறோம். அவரின் செயல்கள் இப்போது நமக்கு புரிவது போல் தோன்றுகிறது.
இப்படி உயரதிகாரிகளின் மனிதத்தை மறுக்காமல்,அவர்களும் சாதாரணர்கள் தான், அவர்களுக்கும் தடுமாற்றங்கள் உண்டு என்று ஃபெர்ரிஸ் காட்டுகிறார். மற்ற பாத்திரங்களைக் கோட்டோவியம் போல் தீட்டிச்சென்றாலும் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த ஊழியர்களின் சின்னங்களாக உள்ளார்கள், தனித்தனியாகப் பேசினாலும் அவர்களின் குரல் உலகமயமாக்கலில் சிக்கிக் கொண்டுள்ள நவீனயுக ஊழியனின் குரல்.
ஒரு ஊழியர் வேலை நீக்கம் செய்யப்பட்ட பின் அவர் நாற்காலியை, புத்தக அலமாரியைத் திருடுவது, ஊசின பண்டத்தை சக ஊழியரின் அறையில் ஒளித்து வைப்பது, பிரபலமானவர்களில் யார் இறப்பார்கள் என்று பந்தயம் கட்டுவது போன்ற சற்று அதீத விஷயங்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒரு ஊழியரின் அறையில் பலர் குழுமி வெட்டியாக அரட்டை அடிக்கும் போது வரும் மேலாளர், அச்சுப் பொறியில் ’பலான’ படம் எடுக்க நின்று கொண்டிருக்கும் போது வரும் மேலாளர் என நடைமுறைத் தர்ம சங்கடங்களும் இதில் உண்டு. ஆனால் நகைச்சுவை உள்ளீடற்ற துணுக்குகளாக இல்லாமல் அதிலும் ஒரு சோகம், இயலாமை உள்ளது.
சார்லி சாப்ளின் ‘Life is a tragedy when seen in close-up, but a comedy in long-shot,’ என்று சொன்னது போல் ஒரே நேரத்தில் புன்னகைக்கவும், அதிரவும் செய்யும் நகைச்சுவை. வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவன், அலுவலகம் விட்டு வெளியேறியதும் பிச்சை எடுக்க ஆரம்பிப்பது சிரிக்க மட்டுமா வைக்கும்? உடைகளை காரில் கழற்றி, கிட்டத்தட்ட நிர்வாணமாக அலுவலகத்தில் நுழைபவனைப் பார்த்து நாம் சிரிப்பதா, அல்லது அவன் எப்படி அந்த நிலையை அடைந்தான் என்று யோசிப்பதா?
வேலை நீக்கம் செய்வதை, ‘fired’, ‘terminated’ என்று சொல்ல ஆரம்பித்து, ‘retrenched’, ‘layoff’இல் வந்து ‘letting go’ என்று இன்று வந்துள்ளது. வார்த்தைகள் மாறினாலும், அவற்றின் அழுத்தம் குறைந்தாலும் செயல் ஒன்று தானே. இந்த வேலை நீக்கம் திடீரென்று நடப்பதில்லை. முதலில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் (perks) நிறுத்தப்படுகின்றன. அலுவலக முகப்பில் வைக்கப்படும் பூக்கள் இப்போதில்லை, விடுமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன, போனஸ் நிறுத்தப்படுகிறது, ஊதிய உயர்வு அளிக்கப்படுவதில்லை. முதலில் ஒவ்வொரு சலுகை நீக்கப்படும் போதும் புலம்பும் ஊழியர்கள், இறுதியில் வேலை இருந்தால் போதும், மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் என்கிறார்கள். தங்கள் முறை வரும் வரை அவர்கள் படும் அவஸ்த்தை பரிதாபம். ஒவ்வொரு நாளும் இது தன்னுடைய முறையா என்று கவலைப்படுவதும், சக ஊழியரின் முறை என்று தெரிய வரும் போது, ஒரே நேரத்தில் சந்தோஷம்/ ஆசுவாசம் மற்றும் சகாவின் நிலை குறித்த வருத்தம், அவர் கண்களைச் சந்திக்கக்கூட மறுப்பது, இப்படிப்பட்ட நேரத்தில் கூட தான் ஒரு சின்ன நிம்மதி அடைகின்றோமே என்ற குற்ற உணர்வு போன்ற கலவையான உணர்வோடு அலுவகலத்தில் zombieகள் போல் வலம் வருகிறார்கள். அவர்களுக்குத் தெரியும் தங்கள் முறை கண்டிப்பாக வரப்போவதென்று . இதைப் பற்றிப் பேசுவதே அவர்கள் அலுவலக வேலையாகி விடுகிறது.
வேலை நீக்கம் செய்யப்படுவது என்பது ஒரு மனிதனின் சுயமரியாதையை அழிக்ககூடியது. தான் எதற்கும் உபயோகமில்லாதவன் என்ற எண்ணத்தை அவன் மனதில் விதைத்து, ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவனைப் பித்து நிலைக்குத் தள்ளக் கூடியது. வேலை இல்லாததால் ஏற்படும் பொருளாதாரக் கஷ்டத்தை விட இதுவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் யாரும் ‘employee’ கிடையாது, resource அல்லது asset தான். முதலாளித்துவம் எப்போதுமே இப்படித்தான் என்றாலும் பெரு நிறுவனங்கள் இதனை இன்னொரு தளத்திற்குக் கொண்டு சென்று விட்டன.
வேலை நீக்க அறிவுப்புக் காலம் என்றெல்லாம் இல்லாமல், ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து இன்றே, இப்போதே சென்று விடு என்று சொல்கிறார்கள். இப்படித் திடீரென்று வீசி எறியப்படுவது அவர்கள் மனரீதியாகத் தயாராக அனுமதிப்பதில்லை.
வேலை நீக்கத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறார்கள். ஒருவர் தன் சக ஊழியர் அனைவரிடமிருந்தும் முறையாக விடை பெற்று செல்கிறார் (Grace Under Fire). இதைப் பார்த்தும் அவர் சகாக்கள் பொருமுகிறார்கள், அவர் தங்களை விட உயர்ந்தவன் என்று காட்டுவதற்காக அப்படி நடந்து கொண்டதாகப் பேசுகிறார்கள். அவர்கள் அவர் மீது காழ்ப்புணர்வு கொள்ளவில்லை, அவர் நிலையில் தங்களை வருங்காலத்தில் பார்ப்பதாலேயே அவருடனோ (அல்லது வேலை நீக்கம் செய்யப்படும் எவருடனோ) அதிக தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. இன்னொருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டு வெளியேறும் போது, அதே கட்டிடத்தில் உள்ள மற்ற நிறுவன ஊழியர்களிடம் பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறார்.
கிறிஸ் (Chris) என்பவரின் எதிர்வினை அனைத்திலும் பரிதாபமானது. அவர் வயது 48. வயது குறைவாக இருந்தால், தன்னம்பிக்கை அதிகம் இருக்கும், தேவையானால் புதிய துறையில் நுழையப்பார்க்கலாம். ஆனால் இந்த வயதில்? தான் வேலை நீக்கம் செய்யப்படும் செய்தியை தன்னிடம் சொல்லும் லின்னிடம் கெஞ்சுகிறார். தன்னிடம் உள்ள தவறுகள் என சிலதை அவரே சொல்லி, அதைச் சரி செய்து விடுவதாக சொல்கிறார். பின்னர் தனக்கு போனஸ், மற்றும் ஊதிய உயர்வு வேண்டாமென்கிறார். எதுவும் செல்லுபடியாவதில்லை. இதனிடையே வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் ஒரு நாள் மீண்டும் வந்து வன்முறையில் ஈடுபடுவார் என்பது போன்ற வதந்திகள் வேறு பரவுகிறது.
இப்படி ஒவ்வொருவராக செல்லச் செல்ல, 2001ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வர இந்த கூத்திற்கு ஒரு முடிவு வருகிறது. நேரடியாகச் சொல்லாவிட்டாலும் நிறுவனம் முற்றிலும் மூடப்படுகிறது என நாம் யூகிக்கலாம். அடுத்து நாம் இவர்களை பார்ப்பது 2006ஆம் ஆண்டில். இப்போது அனைவரும் வேறு வேறு நிறுவனங்களில் பணியில் உள்ளனர். தன் பழைய அலுவலக சகாக்கள் சிலருடன் தொடர்பில் உள்ளனர், சிலரை மறந்தே விட்டனர். இங்கும் வாழ்க்கை முன்னர் போலவே இருந்தாலும், கடந்த கால நினைவின் மீது எழும் பிரேமையால், தங்கள் பழைய நிறுவனத்தை, தாங்கள் வெறுத்த மேலாளர்களை, சண்டைபோட்ட சக ஊழியர்களை பற்றி அதிகம் சுகமான நினைவுகளே இப்போது இவர்களிடம் உள்ளன, அதனை தங்கள் தற்போதைய நிறுவனத்துடன் ஒப்பீடு செய்து புலம்புகிறார்கள். ஹாங்க் (hank) என்பவரிடம் இருந்து தன்னுடைய நாவல் வெளியீட்டு நிகழ்வுக்கு அழைப்பு வர, முதலில் அவர் யாரென்றே தெரியாமல் பின்னர் அவர் நாவல் எழுத முயன்று கொண்டிருந்த ஆசாமி என்று உணர்கிறார்கள். அந்த நிகழ்வுக்கு பலர் வருகிறார்கள். இவர்கள் மீண்டும் சந்திப்பது நாவலின் மகத்தான கணம். கொஞ்சம் பிசகி இருந்தாலும் கிளிஷேவாகவும், மிகை நாடகமாகவும் ஆகி இருக்கக் கூடிய ஒன்றை ஃபெர்ரிஸ் லாவகமாகக் கையாண்டுள்ளார். இந்த சந்திப்பில் அவர்கள் யாரும் அழுவதில்லை, உணர்ச்சி வசப்படுவதில்லை.
நிகழ்வுக்கு வரும் ஒரு முன்னாள் சக ஊழியர் கிளம்பிச் சென்ற பிறகே அவர் பெயரென்னவென்று சிலருக்குத் தெரிகிறது). ஆனால் தங்கள் பழைய பொறாமை, காழ்ப்பை மறந்து, அலுவலக நெருக்கடிகளைச் சிறிது நேரம் பின் தள்ளி இவர்கள் ஒன்று சேருவது ‘தொலைந்து போனவர்களின்’ சந்திப்பு. இந்தக் கணம் நீடிக்காது என்று நமக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். நாளை மற்றுமொரு நாளாக அவர்கள் தங்களின் புதிய உலகிற்கு செல்ல வேண்டும்.
இருந்தும் அதை நீட்டிக்க முயல்கிறார்கள், ஒவ்வொருவராக கிளம்பிச் செல்ல கடைசியில் சிலர் மட்டும் தாமதிக்கிறார்கள்-”We kept hanging on, waiting for them to send over the big guy who’d force us out with a final command. And we would leave, eventually. Out to the parking lot, a few parking words. ‘Sure was good to see you again,’, we’d say. And with that, we’d get in our cars and open the windows and drive off, tapping the horn a final time. But for the moment, it was nice just to sit there together.”
அந்தக் கணத்தில் உறைந்திருக்க நாவல் நிறைவுறுகிறது.
நாவலின் ஆரம்பத்தில் டாம் (Tom) என்ற பாத்திரம் சொல்வதுடன் கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.
“What I’m doing is trying to generate a buck for a client so as to generate a quarter for us so that I can generate a nickel for me and have a penny left after….”
இது ஒரு ‘reductive’ கூற்று, மருத்துவர், விஞ்ஞானி போன்ற துறையில் இருப்பவர்களுக்குப் பொருந்தாவிட்டாலும் உலகின் முக்கால்வாசி ஊழியர்களுக்குப் பொருந்தும். இந்த கூற்றைப் பார்க்கையில் நாம் செல்லும் வேகம், அனுபவிக்கும் மன அழுத்தம் எல்லாம் தேவையானதா என்று தோன்றுகிறது. இதன் அர்த்தம் வேலையில் மேம்போக்காக இருக்க வேண்டும் என்பதோ, ஈடுபாடு இல்லாமல் இருக்க வேண்டுமென்பதோ இல்லை, நம் வேலையை,வாழ்க்கையை, சரியான கோணத்தில் (perspective) பார்க்கலாமே என்பது தான். வேலையை வாழ்க்கையை விட முக்கியமான ஒன்றாக எடுக்காமல், நிறுவனங்கள் கிளிப்பிள்ளை போல் சொல்லும் ‘work-life balance’ஐ அடைவது அப்போது தான் நடக்கும். சொல்வது எளிது தான், நடைமுறையில் சாத்தியமா? இதற்க்கான விடை தெரியும் வரை அலுவலக நாவல்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.
மேலும் சில அலுவலக வாழ்வு பற்றிய நாவல்கள்:
1. Americana (Don Dellilo) – அலுவலக மற்றும் ரோடு (Road) நாவல் இரண்டும் கலந்தது. இருத்தலியல் கேள்விகளை எழுப்புவது. இதன் தாக்கத்தை ‘Then We Came to the End’இல் பார்க்கலாம்.
2. Something happened (Joseph Heller) – அலுவலக மற்றும் குடும்ப நாவல் (dysfunctional family novel).
3. The Pale King (David Foster Wallace) – அலுவலக அலுப்பை கொண்டாடும் நாவல் (celebration of boredom)
4. e (Matt Beaumont) – மின்னஞ்சல் வடிவில் எழுதப்பட்ட நாவல் (epistolary office novel). படு சுவாரஸ்யமாக இருந்தாலும் வெறும் பகடி/நகைச்சுவை என்பதை தாண்டிச் செல்லாத நாவல்.
‘Office Space’ படத்தை மறக்க முடியுமா, எனவே அதையும் சேர்த்து விடுகிறேன்.