Thursday, August 22, 2013

டேவிட் ஃபாஸ்டர் வாலெஸ்


சொல்வனம் இதழில்( http://solvanam.com/?p=27972 ) வெளிவந்தது 
-----------------

1987ஆம் ஆண்டு அமெரிக்க இலக்கிய உலகில் ‘literary brat pack’ என்ற சொற்றொடர்- வம்படி வாலிப இலக்கியவாதிகள்?-  பிரபலமாகியது.இது இளம் வயதுடைய, அன்றைய காலகட்டத்தில்  தங்கள் அறிமுகப் படைப்பிலேயே  சில அதிர்வுகளை ஏற்படுத்திய  நான்கைந்து எழுத்தாளர்களைக் குறிக்க உபயோகிக்கப்பட்டது,  உதாரணமாக,  ப்ரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis). [இதை நாம் வேறு விதமாகப் புரிந்து கொள்வதானால், எழுத்துத் துறையில் பெரும் போட்டி நிலவும் அமெரிக்கச் சந்தையில் இப்படிச் சிலரை வித்தியாசப்படுத்தி எடுப்பாகக் காட்ட ஒரு நாமகரணம் செயவது உதவும் என்பதாலும் அப்படி ஒரு பெயர் உருவாக்கப்பட்டிருக்கலாம்.  இதுவே  பற்பசையாக இருந்தால், ப்ராண்டிங் என்று நாம் உடனே அறிவோம். எழுத்தாளராக இருந்தால் அது சில நேரம் சந்தைக்கான முத்திரையாகவும், சில நேரம் உண்மையான குணாதிசயப் பெயராகவும் இருக்கலாம். இங்கு இரண்டின் கலவைதான் அந்தப் பெயர் என்று தோன்றுகிறது. ]
இவர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்களான ரேமண்ட் கார்வர், ஜேன் ஆன் ஃபிலிப்ஸ் (Raymond Carver, Jayne Ann-Philips) போன்றோரால் எடுத்தாளப்பட்ட அழுக்கு எதார்த்தம் + சிறுமவியம் (Dirty Realism/minimalism) என்னும் வகைமையின் அடுத்த எடுப்பாகப் பார்க்கப்பட்டார்கள். காலப்போக்கில் இவர்களின் எழுத்துமுறையும் மாறியது (2005இல் வெளிவந்த எல்லிஸின் ‘Lunar Park’ நாவலுக்கும்  அவரின் முந்தைய நாவல்களுக்கும் உள்ள வேறுபாடை நாம் உணர முடியும்). ஆனால் நாம் பார்க்கப்போவது இவர்களைப்பற்றி அல்ல, இதே ஆண்டு  அமெரிக்க இலக்கிய உலகில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது.   ‘literary brat pack’இன் எழுத்து முறைக்கு நேர்மாறான தன்மையை -செறிவியம் -maximalism எனலாம்-  கொண்ட,  ஒரு 25 வயது இளைஞர் எழுதிய முதல் நாவல், ‘The Broom Of The System’ என்பது, இந்த ஆண்டில் வெளியானது.   அதிலிருந்து 2008இல் தன் அகால மறைவு வரை இரண்டு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு முற்றுப் பெறாத நாவல், பல அ-புனைவு படைப்புக்கள் எனத் தன் தலைமுறையின் மிக  முக்கியமான ஆளுமையாக, தன் உரைநடை, வடிவ உத்திகள் எனப் பலவற்றின் மூலம் புதிய பாதையை வகுத்தவராக அமெரிக்க இலக்கியத்தில் திகழ்ந்தவர், டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் (David Foster Wallace).

வாலெஸின் பெற்றோர் கல்வித்துறையில்  இருப்பவர்கள். வாலெஸ், டென்னிஸில் ஜூனியர் பிரிவில் மண்டல அளவில் தரவரிசையில் இருந்தார், ஆனால் தான் சற்று சுமாரான ஆட்டக்காரன்தான் என்று குறிப்பிடுகிறார்.  (Federer குறித்த அவர் எழுதிய ஒரு  கட்டுரையின் தலைப்பு ‘Federer as Religious Experience’.[அதை  வாசிக்க, இங்கே செல்லவும்.]
படிப்பிலும் தான் மிகச் சிறந்த மாணவன் இல்லை என்கிறார், மொத்தத்தில் இரண்டும் கெட்டான் என்பது அவர் கருத்து. பின்னர் அமெரிக்காவின் சிறந்த சிறு, தனியார் கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆம்ஹெர்ஸ்ட்  கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கணிதத்திலும் ஆர்வமுடையவர். டென்னிஸ், தத்துவம், கணிதம் என இவை அனைத்தின் தாக்கத்தையும் அவர் படைப்புக்களில் காணலாம். ஆங்கில மேற்படிப்பிற்கான கட்டுரைக்காக (theses) எழுதியதே அவருடைய முதல் நாவல் ‘The Broom Of The System’. [  இப்புத்தகத்திற்கான  அந்த வருடத்திய மதிப்புரை ஒன்று இங்கே. இன்னொரு சுட்டி இங்கே. கிசு கிசு தன்மைக்காகவோ, பரபரப்புக்காகவோ, இரு எழுத்தாளர்களை ஒப்பிடவோ இதை கொடுக்கவில்லை, ‘literary brat pack’ என்ற அலை உச்சத்திற்கு வந்த அதே நேரத்தில் இந்த நாவல் ஏற்படுத்திய அதிர்வை இதன் மூலம் உணர முடியும். இதை எழுதியவர் எல்லிஸ், வாலஸ் இருவரின் முதல் நாவலை செப்பனிட்டவர் என்பதால் அதன் ந்ம்பகத்தன்மை  அதிகமாகிறது.
வாலெஸின் புனைவுலகைப் பற்றிப்  பேசும் போது, அதை அவரின் கருப்பொருட்கள் (themes/canvas), வடிவ/உரைநடை உத்திகள், அவர் உருவாக்கும் பாத்திரங்கள் என மூன்றாகப் பிரித்துப் பார்க்கலாம். தன் முதல் புத்தகத்தை அவர் விட்கென்ஸ்டைனுக்கும் டெரிடாவுக்குமிடையே நடக்கும் உரையாடல் என்று கருதலாம் என்று சொல்கிறார். ஆனால் மேலே உள்ள புத்தக மதிப்புரை சுட்டுவது போல அப்புத்தகம் ஏற்கனவே அமெரிக்க இலக்கியத்தில் பிரபலமாக இருந்த சில எழுத்தாளர்களின் அணுகலின் நீட்சி என்று கருத இடமுண்டு. ஸ்டான்லி எல்கின், தாமஸ் பிஞ்சன், ஜான் இர்விங் போன்றாரின் எழுத்தும் ஒன்றும் புதிதல்ல- சில பத்தாண்டுகளாக அவர்கள் எழுதி வந்தவர்கள்தான்.
முற்றிலும் நுகர்வுமையமாக மாறிக்கொண்டிருக்கும் சமூகம், அதனால் ஏற்படும் சிக்கல்கள், மக்களின் மீது தொலைக்காட்சி பிம்பங்களின்  ஆதிக்கம் போன்றவை  வாலெஸ்டின் எழுத்தின் சில கருப்பொருட்கள். இதில்  ‘டான் டெலிலோ’வின் தாக்கத்தையும், ஸ்டான்லி எல்கினின் தாக்கத்தையும் காணலாம். உடனடியாகக் கிடைக்கக் கூடிய நித்தியப் பெருமகிழ்ச்சியைத் (instantaneous and  eternal gratification) தேடியபடி இருக்கும் சமூகத்தைச் சித்திரிக்கையில் அவரது தொனியிலேயே விமர்சனம் நமக்குக் கிட்டுகிறது.
உதாரணமாக,
“A U. S. of modern A. where the State is not a team or a code, but a sort of sloppy intersection of desires and fears, where the only public consensus a boy must surrender to is the acknowledged primacy of straight-line pursuing this flat and short-sighted idea of personal happiness.”
அவருடைய கற்பனாவாதப் பார்வை, தொலைநோக்குடையதாகவும், வருவதை முன்கூட்டிக் கணிப்பதாகவும் உள்ளது எனச் சொல்லலாம். ‘முடிவற்ற வேடிக்கை’ நாவலில் நடக்கும் காலகட்டத்தில் பெரு நிறுவனங்கள் ஆண்டுகளுக்கான பெயரை ஏலத்தில் எடுக்கின்றன, எனவே 1920,2010 என்றெல்லாம் இல்லாமல் ‘YEAR OF THE TUCKS MEDICATED PAD’, ‘YEAR OF THE DEPEND ADULT UNDERGARMENT’ என்றே அழைக்கப்படுகின்றன, இதே நாவலில் ஒரு படச்சுருள் பற்றிக் குறிப்பிடப்படுகிறது, அதைப் பார்ப்பவர் அதிலேயே பித்தாகி, வேறெதிலும் ஈடுபாடில்லாமல், somnambulistic நிலைக்குச் சென்று   இறந்தே விடுகிறார்கள், இதைப் பலர் தேடுகிறார்கள்.
இந்த நாவல் 1996இல் வெளியானது, 8 ஆண்டுகள் கழித்து 2004இல் வெளிவந்த ‘Oblivion’ கதைத்  தொகுப்பில் உள்ள  ‘The suffering channel’  என்ற நெடுங்கதையில், களிப்பைத் தேடுதல், மற்றும் பார்வையாள மோகத்தின்  பரிணாம வளர்ச்சியாக  24 மணிநேரமும் ஓயாமல் மனிதர்களின் துயரத்தை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனலை காட்டுகிறார். 
இன்று 2013இல் இப்போது மற்றவர்களின் துயரத்தை, அந்தரங்கத்தை ஒன்றிரண்டு மணி நேரம் பார்க்கும் வாய்ப்புள்ள நாம் இத்தகைய 24 மணி நேர துயர சேனலை விரைவில் காணக்கூடும்.வாழ்வில் இன்றியமையாததாக ஒரு பொருள்  மக்கள் மனதில் ஊன்றப்படுவதில் விளம்பரங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. (“It did what all ads are supposed to do: create an anxiety relievable by purchase.” என்று வாலெஸ் சொல்கிறார்). ஒரு புதிய பொருள் சந்தைக்கு வரும் முன் நடக்கும் ‘மாதிரி நுகர்வோர்கள்’ (sample consumers) மீது நடக்கும் ஆராய்ச்சி, அவர்களின் demographic பற்றிய குறிப்புக்கள், புள்ளியல் விவரங்களில் ஆதிக்கம் என விரிகிறது அவருடைய “Mister Squishy” என்ற அவருடைய நெடுங்கதை. முற்றுப்பெறாத அவருடைய இறுதி நாவலான ‘The Pale King’ வேலையில் ஏற்படும் சலிப்பை எதிர்கொள்வதைப் பற்றியது. எந்த வித ரஸமும் இல்லாத (prosaic) நாட்களைக் கடத்தும் ஊழியர்கள் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, அவர்களுக்கு ‘சலிப்பை எதிர்கொள்ளுதல்’ பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. “Almost anything that you pay close, direct attention to becomes interesting” என்பது ஒரு விடையாக முன்வைக்கப்படுகிறது.
True heroism is minutes, hours, weeks, year upon year of the quiet, precise, judicious exercise of probity and care—with no one there to see or cheer. This is the world.
இவர் படைப்புக்களின் வடிவம், அதில் உள்ள உத்திகளில் ஜான் பார்த், பிஞ்சன், காடிஸ் போன்றோரை சற்றே நினைவு படுத்துவார். வாசகன் அப்படியே கதைக்குள் மூழ்கி விட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகளுக்கு நேர்மாறாக, ஆசிரியர் இடையிடையே வாசகனுடன் உரையாடி  அவன் ஒரு கதையைத் தான் படித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை ஏற்படுத்துவது, நாவலுக்குள் இன்னொரு நாவலோ அல்லது சிறுகதையோ ஒரு கதாபாத்திரத்தால் எழுதப்படுவது, அடிக்குறிப்புக்கள், அடைப்புக்குறிகள் பயன்படுத்துவது என பல யுத்திகள் இவர் படைப்புக்களில் உண்டு.
டே. ஃபா. வா, பல எழுத்தாளர்களால் பாதிக்கப்பட்டு , அவர்கள் பாணியை நகல் செய்பவரோ என்று ஒரு எண்ணம் தோன்றலாம், அது தவறாகும். தன் முன்னோடிகளிருந்து சில விஷயங்களை பெற்றுக்கொண்டாலும் அவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று தனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர் இவர். புனைவின் வடிவம் மற்றும் உரைநடை குறித்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் எல்லைகள் பற்றிய மனத்தடைகள் எதுவுமில்லாமல் புதிய தொடுவானத்தை உருவாக்கிச் சென்றுள்ளார். எழுத்து சார்ந்த எந்தத் தயக்கமும்  (utter fearlessness ) அவருக்கு இல்லை என்பதற்கு உதாரணமாக அடிக்குறிப்புக்களை அவர் பயன்படுத்திய விதத்தைச் சொல்லலாம். இவருக்கு முன்பே புனைவுகளில் ஓரளவுக்கு அடிக்குறிப்புகள் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், இவர் அதை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறார். அவருடைய magnus opus ‘முடிவற்ற வேடிக்கை’ நாவல் கிட்டத்தட்ட 1000 பக்கம் உடையது, இதைத்தவிர 100 பக்கங்கள் தனியாக இறுதியில் அடிக்குறிப்புக்கு உள்ளன.
இவ்வளவு பெரிய நாவலை எழுதுவதே ஒரு சவால் என்றால் அதில் வாசகனைத் திசை திருப்பும் இன்னொரு 100 பக்கங்களை வைப்பது ஒரு பெரிய சாகசம், அதுவும் வெறும் வடிவ உத்தி என்றில்லாமல் கதையின் நேர்கோட்டுத்தன்மையைக் கலைத்து அதே நேரம் மையக் கதையிலிருந்து விலகாமல் நாவலுக்குத் தொடர்புள்ளவையாக, இத்தனை அடிக்குறிப்புகள் எழுதுவது ஒரு சாதனை தான்.   அடிக்குறிப்புக்கள் அவரின் ஒரு அடையாளமாகவே இந்த நாவலுக்குப் பின் ஆகிவிட்டன. ஆனால்  இந்த நாவலுக்குப் பிறகு வந்த இரு சிறுகதைத் தொகுப்புக்களில் மிகக் குறைவான கதைகளிலேயே  இந்த உத்தியைப் பயன்படுத்தி உள்ளார். அதே நேரம் பயன்படுத்தியவற்றில் (‘The Depressed Person’, ‘Octet’) மிக அதிகமாகப் பயன்படுத்தி உள்ளார், இந்தக் கதைகளில் களம் சார்ந்து இங்கு இத்தனை அடிக்குறிப்புக்கள் பொருந்தி வருகின்றன.
இந்த நாவலுக்குப் பின்  1999இல் வந்த ‘Brief Interviews With Hideous Men’, வடிவ உத்திப் பரிசோதனைகளில் வாலெஸின் உச்சம் எனலாம். இதில் சில கதைகள், கேள்வி-பதில், வடிவில் இருந்தாலும், கேள்விகளே இருக்காது, ‘Q’ என்று மட்டுமே இருக்கும், பதில்கள் மூலம் கேள்வியை நாம் யூகிக்க வேண்டியது தான். இந்தத் தொகுப்பில்  சுய-பரிசீலனைத் தன்மை கொண்ட சிறுகதைகளையும் எழுதி உள்ளார்.  “Adult World (II)” என்ற சிறுகதையில்
la. Question Jeni Roberts asks is whether Former Lover had indeed in their past relationship ever fantasized about other women during lovemaking w/ her.
la(l) Inserted at beginning of question is participial phrase ‘After apologizing for how irrational and inappropriate it might sound after all this time …’
lb. At some point during J.’s question, J. follows F.L.’s gaze out fast-food window & sees husband’s special vanity license plate among vehicles in Adult World lot: → epiphany. Epiph unfolds more or less independently as facially asymmetric F.L. responds to J.’s question,
lc. Flat narr description of J.’s sudden pallor & inability to hold decaf steady as J. undergoes sddn blndng realization that hsbnd is a Secret Compulsive Masturbator & that insomnia/yen is cover for secret trips to Adult World to purchase/view/masturbate self raw to XXX films & images & that suspicions of hsbnd’s ambivalence about ‘sexlife together’ have in fact been prescient intuitions & that hsbnd has clearly been suffering from inner deficits/psychic pain of which J.’s own self-conscious anxieties have kept her from having any real idea [point of view (lc) all objective, exterior desc only).
இந்த இரண்டு பத்திகளையுமே சற்றே மாற்றி எழுதி இருந்தால் எப்படி வாசகனைச் சீண்டலாம், வளைக்கலாம் என்பதை வாலெஸ் தரும் குறிப்புக்கள் மூலம் அறிகிறோம், (ஜெனியின் கேள்வியின் முன்சேர்க்கையாக வாலெஸ் கூறுவது, அவருக்கு வரும் epiphany, அதனால் அவருள் ஏற்படும் மாற்றங்கள்) அப்படி எழுதி இருந்தால் சுவையற்றதாக ஆகக்கூடிய சாத்தியக்கூறு எழுத்து மொழி  சார்ந்த சமூக அவதானிப்புக்களில் அவர் சமகாலத்து எழுத்தாளர்களையும், பாணிகளையும் தாண்டி விட்டிருந்தார்  என்று அவர் உரைநடையை பார்க்கும் போது தெரிகிறது.
“It was yrstruly and C and Poor Tony that crewed that day and everything like that
we just left the type there in his vehicle off Mem Dr we broke the jaw for insentive not to eat no cheese and C insisted and was not 2Bdenied”
போன்ற குறுஞ்செய்தி வடிவ உரையாடல்களை 1995ஆம் ஆண்டிலயே அவர் எழுதிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிலேயே குறுஞ்செய்திகள் அதிகம் பிரபலமாகாதவை.
அவருடைய படைப்புக்களில் கடினமானதும் அதே நேரம் ‘முடிவற்ற வேடிக்கை’ நாவல் போல் வாசகனுக்கு மிகுந்த மன எழுச்சியை தரக்கூடியது, ‘Brief Interviews with Hideous Men’ தொகுப்பு.  இந்த தொகுப்பிற்கு பின் 2004 இல் வந்த Oblivion தொகுப்பு வடிவ உத்திகள் அதிகம் இல்லாமல் உள்ளது. கதைக்குள் கதை (The Soul is not a Smithy), இணைச் (parallel) சம்பவங்களைக் கொண்ட கதை (Mr.Squishy) என்று ஓரிரு கதைகளில் மட்டும் வடிவ ரீதியான விளையாட்டுகளை இதில் நிகழ்த்தி உள்ளார், அடிக்குறிப்புகள் ஓரிரு கதைகளில் மட்டும், அதுவும் குறைந்த அளவே உள்ளன. மற்ற கதைகள் ஓரளவு நேர்கோட்டுத்தன்மையுடன் (இதை அவரின் மற்றப் படைப்புகளுடன் ஒப்பிடும்போதுதான் சொல்ல முடியும், மரபார்ந்த கதை சொல்லல் இங்கு குறிப்பிடப்படவில்லை), முற்றிலும் உரைநடையின் பலத்தில் மட்டும் நிற்கின்றன.
2011இல் வெளிவந்த அவருடைய முற்றுப் பெறாத இறுதி நாவல் ‘The Pale King’ நாவலின் நடை  காட்டாறு போன்ற “Infinite Jest” மற்றும் அதன் பின் வந்த கதை தொகுப்புக்களின் உரைநடையிலிருந்து மாறுபட்டு கட்டுப்பாடுள்ள பெரும் சக்தியுடன் உள்ளது.  இது ஒரு நுண்ணிய (subtle) மற்றம் தானென்றாலும் அவர் புனைவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு இந்த மாற்றம் சற்று அதிர்வாக முதலில் இருக்கும்.
முடிவுறாத இந்த நாவலின் வரைவுகளைச் செப்பனிட்டு பதிப்பித்த “Pietsch”, இந்த வரைவுகளில் “no voice” என்று வாலஸ் குறித்துள்ளதாக கூறுகிறார். தன் உரைநடையை வேண்டுமென்றே சுயத்தணிக்கை செய்துள்ளது அபாயகரமானதும் கூட, ஏனென்றால் வாலஸ் புத்தகம் என்றால் வாசகர் எதிர்பார்க்கூடியதைக் கலைத்துப் போடும்போது, வாசகர் நூலிலிருந்து முற்றிலும் விலகக்கூடும். இதை முழுமையாக வாலஸ் எழுதி வெளிவந்திருந்தால் அவர் செய்ய நினைத்ததின் முழுப் பரிணாமமும் நமக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக அலுவலகம் சார்ந்த நாவல்கள் ‘தொலைக்காட்சி, விளம்பர நிறுவனம் போன்ற வேலையின் சலிப்போடு பல சுவாரஸ்யங்களைத் தனக்குள் வைத்திருக்கும் களங்களையே கொண்டிருக்கும். இந்தக் களங்களில் அபத்தமான, இருள் நகைச்சுவையுடன் கூடிய சம்பவங்களை உருவாக்குவது ஓரளவுக்கு எளிது தான். ஆனால் ‘Pale King’ இல் வாலஸ் இதிலும் வேறு மாதிரி சிந்தித்துள்ளார். இதன்  களமான வரித்துறை பற்றி (IRS), அங்கு வேலை செய்யும் நாள் முழுக்க எண்களை பார்த்துக்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையைப் பற்றி என்ன எழுதுவது, எழுதினாலும்  ஐநூறு பக்கத்திற்கு மேல் வாசகனை எப்படி அதிலிருந்து விலகிச் செல்லாமல் வைத்திருப்பது.
அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகலாம், புதிய வாசகர்களோ இந்த ஆசாமி இதைப் பற்றி எல்லாம் எழுதுகிறாரே என்று அவர் எழுத்துலகில் நுழையாமலே விலகலாம்,  வரித்துறை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிp படிக்க, (புனைவாகவே இருந்தாலும்) எத்தனை பேர் தயாராக இருப்போம்? முதலில் இப்படி ஒரு அசுவாரஸ்யமற்ற களத்தை தேர்ந்தேடுத்த பின், உரை நடையிலும் தன் வழக்கமான பாணியையும் மாற்றுவதென்றால் தன் கலையின் ஆற்றல் மீது நம்பிக்கையும், முயற்சியின் தோல்வி குறித்த பயமும் இல்லாமல் இருந்தால் தான் முடியும். இதில் மீண்டும் அடிக்குறிப்புக்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன.
ஆக தனக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்த  அடிக்குறிப்புக்கள்/வடிவ உத்திகள், உரைநடை  இவற்றை  ஒரு மோஸ்தர் போலாக்கி , அதிலேயே தன் அடையாளத்தைச் சிக்கியிருக்க விடாமல் தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.
வாலெஸ், பிஞ்சன், காடிஸ் போன்றவர்கள் மீது வைக்கப்படும் ஒரு விமர்சனம்  இவர்களுடையது ஊதிப் பெருத்த (bloated ) உரைநடை என்பது. ஆனால் இவர்கள் கூறவரும் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை, அதனோடு வழமையான கதைகூறல் முறை, உரைநடை இவற்றை எப்படி மாற்றலாம் என்றும் முயல்கிறார்கள். எனவேதான் பார்த் ஒருநாவலைத் தனக்கும் தன் பாத்திரங்களுக்குமிடையே ஆன கடிதப் பரிமாற்றமாக வைத்துள்ளார், பிஞ்சன் ஒரு நாவலில் 18ஆம் நூற்றாண்டின் ஆங்கில வடிவை உபயோகித்துள்ளார் (நாவலின் கால கட்டமும் அதுவே). இங்கு வாலெஸின் அபாரமான உரைநடை தான் அவர் படைப்பின் கேன்வாஸ் மற்றும் வடிவ உத்திகளுக்கிடையே உள்ள இணைப்பு. சற்றுச் சிக்கலான, ஒரு வரியின் அல்லது பத்தியின் ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய, வாசகனின் உழைப்பைக்கோருகின்ற, முடிவில் மூச்சடைக்கச் செய்யும், பரவசம் கொள்ள வைக்கும்  உரைநடை.
இவர் எழுத்துக்களின் ஒரு முக்கிய அம்சம் பாத்திரங்களின் எண்ணங்கள் குறித்த, முடிவற்றதாகச் சுற்றிவரும்  சுயநினைவை (recursive self-consciousness) வெளிக்கொணர்வது. ஒரு ஆசாமி அனைத்திலும் மற்றவர்களுக்கு கேட்காமலே வலியச் சென்று உதவுகின்றவர்,அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுபவர், திருத்த முனைபவர்  என்று வைத்துக்கொள்வோம். அவர் இதை இயல்பாகவே, மற்றவர்களை மட்டம் தட்ட எண்ணாமல் செய்தாலும் மற்றவர்களால் வெறுக்கப்படுவார் என்பது இயல்பான ஒன்று, பொதுவாகக் கதைகளில் இந்த அளவில் தான் இந்த மாதிரியான பாத்திரம், அதன் மேல் மற்றவர்கள் புரியும் எதிர்வினை உருவாக்கப்பட்டிருக்கும். வாலெஸ் இந்த சூழ்நிலையை இன்னும் வளர்த்துகிறார், அந்த ஆசாமியை மற்றவர் வெறுக்கிறார்கள், அவர் மேல் கோபம் கொள்கிறார்கள் சரி, அதே நேரம் அவர் சொல்வது அனைத்தும் சரிதான் என்றும் உணர்கிறார்கள், இப்படிப் பட்ட நல்லவரைப் போய் வெறுக்கின்றோமே என்று குற்ற உணர்வு கொள்கிறார்கள். இதனால் இப்படி தங்களைக் குற்ற உணர்வில் ஆழ்த்தும் ஆசாமியை இன்னும் வெறுக்கின்றார்கள் என முடிவில்லாத மனநிலையின் சுழற்சியை இவர் கதைகள் காட்டுகின்றன.
நீண்ட வாக்கிய அமைப்பு என்பது பல எழுத்தாளர்களால் உபயோகிக்கப்பட்டுள்ளது (மார்க்கெஸ், செபால்ட் போன்றவர்கள் இதில் விற்பன்னர்கள்). இது பொதுவாக காலக்கணக்கில் சற்றே நீண்ட நிகழ்வை விவரிப்பதாக வரும். வாலெஸ் இதிலிருந்து சற்று மாறுபடுகிறார். மிக மிக சிறிய (Minutiae) விவரங்களை அவர் கோர்த்துச் சொல்லும் போது, கீழே உள்ளது போல் ஒன்றிரண்டு பத்திகளாகத் தனித்தனியே வாசிப்பது என்றில்லாமல், ஒரு கதையின்/அத்தியாயத்தின் பெரும் பகுதி இதே போல் இருந்தால் ஒரு உன்மத்தச் சுழலில் மாட்டியது போல் உணர்ந்து, அதில் திளைத்து மனம் கிளர்ந்த நிலையில் தான் ஒவ்வொரு வாக்கியத்தின், பத்தியின் முடிவில் வெளிவருகிறோம். வெளி வந்து என்ன செய்ய, மீண்டும் இன்னொரு சுழல் நமக்காக காத்துக்கொண்டிருக்கின்றது.
The only way for an observer to detect anything unusual or out of the ordinary about the two UAF’s status would be to note that the facilitator never once looked fully or directly at them, whereas on the other hand Schmidt did look at each of the other twelve men at various intervals, making brief and candid eye-contact with first one man and then another at a different place around the conference table and so on, a subtle skill (there is no term for it) that often marks those who are practiced at speaking before small groups, Schmidt neither holding any man’s eye for so long as to discomfit nor simply panning automatically back and forth and brushing only lightly against each man’s gaze in such a way that the men in the Focus Group might feel as though this representative of Mister Squishy and Felonies! were talking merely at them rather than to or with them; and it would taken a practiced small-group observer indeed to notice that there were two men in the conference room – one being the terse eccentric member surrounded by personal-care product, the other a silent earnest-eyed bespectacled man who in blazer and turtleneck at the table’s far corner, which latter Schmidt had decided was the second UAF: something a tiny bit too composed about the man’s mien and blink-rate gave him up – on whose eyes the facilitator’s never quite did alight all the way.”
ஒரு தெரபிஸ்ட் கொடுக்கும் சிகிச்சை பற்றிய விவரிப்பு கீழே உள்ளது, இதில் அடைப்புக்குறிக்குள் உள்ளவற்றை எடுத்து விட்டாலோ அல்லது பிரதானப் பத்தியினுள் நேராகச் சேர்த்திருந்தாலோ வாசகனுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனுபவத்தை இதனுடன் ஒப்பீடு செய்தால் அவர் உத்திகளின் பின்னால் உள்ள தர்க்கநியதி தெரியும்.
“The depressed person’s therapist, whose school of therapy rejected the transference relation as a therapeutic resource and thus deliberately eschewed confrontation and “should”-statements and all normative, judging, “authority”-based theory in favor of a more value-neutral bioexperiential model and the creative use of analogy and narrative (including, but not necessarily mandating, the use of hand puppets, polystyrene props and toys, role-playing, human sculpture, mirroring, drama therapy, and, in appropriate cases, whole meticulously scripted and story boarded Childhood Reconstructions), had deployed the following medications in an attempt to help the depressed person find some relief from her acute affective discomfort and progress in her (i.e., the depressed person’s) journey toward enjoying some semblance of a normal adult life: Paxil, Zoloft, Prozac, Tofranil, Welbutrin, Elavil, Metrazol in combination with unilateral ECT (during a two-week voluntary in-patient course of treatment at a regional Mood Disorders clinic), Parnate both with and without lithium salts, Nardil both with and without Xanax.”
இப்படி நீண்ட வாக்கியங்கள், பத்திகள் மூலம் மட்டும் தான் என்றில்லை 
“The truth will set you free. But not until it is finished with you.” போன்ற ஒற்றை வரிகளும், அவரது இறுதி நாவலான The Pale King’ நூலில் வரும். 
வாலெஸ் பல பத்தாண்டுகள் மனநலச் சிகிச்சை பெற்றவர். தொடர்ந்து பல ஔஷதங்களை உட்கொண்டுதான் அன்றாட வாழ்வில் அவரால் பங்கெடுக்க முடிந்திருக்கிறது. ஆனால் அவற்றின் வீரியம் படிப்படியாகக் குறைந்ததாலோ, பக்க விளைவுகள் கடுமையாக இருந்ததாலோ அவற்றை விட்டு விட்டு வேறு சிகிச்சைகளைப் பயன்படுத்தினார், அவையும் செயல் திறனில்லாது போன ஒரு நிலையில் ஒரு கட்டத்தில் முழு நம்பிக்கையும் போனதாலோ என்னவோ தூக்குப் போட்டு இறக்கிறார்.  மேலே கண்ட பத்தியில் இருந்த பல கவனிப்புகளும் சொந்த அனுபவத்தாலும் கிட்டியவை. ’உண்மை என்பது நமக்குச் சுதந்திரமான உணர்வைத் தரும், ஆனால் அது கிட்டுவதற்குள் நம்மை அது முழுதும் தீர்த்துக் கட்டியிருக்கும்.’  என்ற வரி அவரது சுய அனுபவம் மட்டுமல்ல, அவர் வாழ்வாலேயே நிரூபிக்கப்படும் வரியும் கூட.
கைப்புணர்ச்சி பற்றி ‘அந்த நாவலில் வருவது இது.
“It’s a very interior time. It’s one of life’s only occasions of real self- sufficiency. It requires nothing outside you. It’s bringing yourself pleasure  with nothing but your own mind’s thoughts. Those thoughts reveal a lot about you: what you dream of when you yourself choose and control what you dream”
இது போன்ற பத்திகள்  மின்னல் கீற்றைப்போல் வாசகனைக் கவரும் பின்-நவீனத்துவ சித்து விளையாட்டை மட்டும் வாலெஸ் செய்கிறார் என்று அவரைப் படிக்கும் போது தோன்றக் கூடும், மரபார்ந்த கதை சொல்லல் இல்லாமை, ஒரு சில பாத்திரங்களின் மேல் குவிமையம் இல்லாமல், பல பாத்திரங்கள் கதைக்குள் வந்து செல்வது போன்றவற்றால் இந்த எண்ணம் மேலும் வலுக்கிறது. உள்ளீடற்று, இன்றைய ‘human condition’ஐ வைத்துப் பகடி மட்டுமே செய்கின்றன அவர் படைப்புக்கள் எனவும் இவர் மீது விமர்சனம் உள்ளது. உண்மையில் அவர் படைப்புக்களில் ‘பரிவு’ (compassion) கவிந்துள்ளது.  தன் சிறுவயதில் நடந்த (அல்லது நடந்ததாக நம்பும்  சம்பவம் ஒன்றினால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவன், மன அழுத்தத்தால் (depression) துன்புறும் பெண்,  கணவன் தங்களுடைய தாம்பத்திய உறவில் திருப்தி அடையவில்லையோ என எண்ணத்தால் பீடிக்கப்படும் மனைவி, தனக்கும் புத்தகத்தின் ஒரு பாத்திரத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்று யோசிப்பவள், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள், அதிலிருந்து மீள மையங்களில் (de-addiction centre)  இருப்பவர்கள் என இவர் புனைவுலகின் மாந்தர்கள் மன-ரீதியாக உடைந்து போனவர்கள். இவர்களை வாலெஸ் எள்ளல் செய்வதில்லை, அதற்கான தீர்வுகளைச் சொல்வதுமில்லை, இவர்கள் போகும் பாதையை நமக்கு காட்டுகிறார். உரைநடை/யுத்திகள் என்ற பாதை பலவாறு அலங்கரிக்கப்பட்டாலும், பயணம் கடுமையானது தான், இதை வாலெஸ் நம்மை எப்போதும் மறக்க விடுவதில்லை, பாதையின் அழகில் நாம் முழுதும் ஆழ்வதில்லை, பயணத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறோம். இதை வாலெஸ் “Fiction’s about what it is to be a fucking human being.” என்று சொல்கிறார்.
உன்னதக் கலைஞர்கள் பற்றிச் சொல்வது-
“What the really great artists do is they’re entirely themselves. They’re entirely themselves, they’ve got their own vision, they have their own way of fracturing reality, and if it’s authentic and true, you will feel it in your nerve endings.”
 வாலெஸ் கூறுவது அவருக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்துகிறது.  வாலெஸின் புனைவுலகிற்கு ஒரு சிறிய சாளரத்தைத் திறப்பதே இந்தப் பதிவு. வாசகனின் உழைப்பைக் கோருகிற, அலைக்கழிக்கிற, அவனின் இதுவரையிலான வாசிப்பு அனுபவத்திற்குச் சவால் விடுகிற, சமநிலையைக் குலைக்கிற, வரிக்கு வரி  excruciating happiness (இந்த பதம்  ஒரு oxymoronஆக இருந்தாலும் இதுவே பொருத்தமாக தோன்றுகிறது) தரக்கூடிய இவருடைய எழுத்துலகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment