இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகும் ’ஜ்யொர்ஜ் ஸாண்டர்ஸின்’ அண்மையச் சிறுகதை/நெடுங்கதைத் தொகுப்பான ’டிசம்பர் பத்து’ (Tenth Of December) இந்த வருடம், ஜனவரியில் வெளியானபோது, முதலில் வெளிவந்த நூல் விமர்சனங்களில் ஒன்றின் தலைப்பு ‘இந்த வருடம் நீங்கள் படிக்கக் கூடியவற்றில் மிகச் சிறந்த புத்தகத்தை ஜ்யொர்ஜ் ஸாண்டர்ஸ் எழுதியுள்ளார்’.
இந்த விமர்சனம் வெளிவந்தது ஜனவரி மூன்றாம் தேதி. அதற்குள் இந்த ஆண்டின் மிகச் சிறந்த புத்தகம் இது என்று ஒன்றை சொல்ல முடியுமா என்று நமக்குத் தோன்றினாலும், விமர்சகர் உணர்ச்சி வயப்பட்ட மனநிலையில் இதைச் சொல்லி இருக்கலாம் என்று எண்ணலாம். இதை இங்கு குறிப்பிட இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இப்படிப் பட்ட புகழுரைகள் , நல்லெண்ணத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் எதிர்மறையாகவும் மாறக் கூடும். இந்தப் புத்தகத்தைப் பற்றி நீங்கள் இணையத்தில் தேடினால், இந்தப் புகழுரையைப் பார்க்காமல் இருக்க முடியாது, இதுவே நூலுக்குள் நுழைவதற்குள், முன் முடிவுகளையும், அதீத எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தி நூலை உள்வாங்குவதில் சிக்கல்களை உண்டு பண்ணலாம். இந்த புத்தகம் என்றில்லை, எந்த நூலினுள்ளும் திறந்த மனதோடு நுழைவதே நல்லது இல்லையா.
இரண்டாவது காரணம், இந்த நூலில் ஸாண்டர்ஸ் தன் எழுத்துப் பாணியில் செய்துள்ள மாற்றம். அவரின் மற்றப் படைப்புக்களை படித்து விட்டு ஸாண்டர்ஸ் பாணி என்று இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று சமகாலத்திய அரசியல்/சமூகப் போக்குக்களைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றிய அவதானிப்புக்களைத் தன் கதைகளின் கருப்பொருட்களாக (themes) பெரும்பாலும் வைத்துள்ளது. இன்னொன்று இந்தக் கருப்பொருட்களை குறியீடுகளாகக் கொண்ட கதைகளாக மாற்றி, ஒரு புதிய உலகை உருவாக்கும் அவருடைய அசாதாரணமான கற்பனைத் திறன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் வெளிப்படையான அரசியல்/சமூகக் கூறுகளோ, குறியீடுகளோ, அசரடிக்கும் கற்பனையோ இல்லை. ஆனால் இவற்றின் இல்லாமை இந்தத் தொகுப்பை பலவீனமாக்கவில்லை, மாறாக எந்தக் கவனச்சிதறல்களும் இல்லாமல் கதைகளில் மூழ்க முடிகிறது. இதை இப்படிச் சொல்லலாம், அவர் முந்தைய படைப்புக்களைப் படித்த பின் நம் மனதில் பாத்திரங்களை விடக் கருப்பொருளும், அதை அவர் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட தாக்கமும் தான் மனதில் இருக்கும்,அந்த அடித்தளத்திலிருந்து வாசகனின் பயணம் கதையைத் தாண்டி தொடரும்,
இங்கு பாத்திரங்கள் என்பன கருப்பொருள் கதையாக விரிவதற்கான ஒரு சாதனம் தான் . உதாரணமாக அவருடைய ’Red Bow’ சிறுகதையில், ஒரு சிறுமிக்கு நேரும் துர்சம்பவம் தான் ஆரம்பம் என்றாலும், பிறகு ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் மூலம் கூட்டத்தின் வெறியை (mass hysteria) உருவாக்குவது, பிறகு அதை வைத்து ஒரு சாரார் மேல் வெறுப்பைக் கட்டமைப்பது என பல தளங்களில் குறியீடுகளாக கதை விரிகிறது). இதற்கு மாறாக, பதின் பருவத்தில் ஏற்படும் பாதுகாப்பற்ற, தன் சுயம் பற்றிய உறுதி படியாத மனநிலையில் இருப்பவர்கள், அந்தப் பருவத்திற்குரிய வீச்சும் துரிதமும் ஆழ்ந்த உணர்ச்சிகளும் நிறைந்த கனவுகள் காண்பவர்கள், அந்தக் கனவுகள் அனைத்தும் கலைந்து, அன்றாட வாழ்க்கையின் வறட்சியில் உழலும் மத்திம வயதுடையவர்கள், இவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள், அவற்றிற்கு அவர்களின் எதிர்வினைகள் என இந்தத் தொகுப்பின் கதைகள் அந்தரங்கங்களைப் பற்றியவாக, தனி நபர் ஆளுமைகளைச் சுற்றியனவாக உள்ளன. கதைகளின் முடிவில் இந்தப் பாத்திரங்களையும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் சுற்றியே வாசகன் மனம் செல்லும். இரண்டு விதமான கதை சொல்லலும் அவ்வவற்றினளவில் சிறந்தவையே. இந்தத் தொகுப்பில் நேர்ந்துள்ள மாற்றம் ஒரு எழுத்தாளர் ஒரே இடத்தில் தேங்கி நின்று விடாமல், வேறு பரிமாணம் பெறுவதை, அந்த மாற்றம் ஏற்பட தன் மனதை அவர் திறந்து வைத்திருப்பதைக் காட்டுகிறது. இந்த மாற்றம் குறித்து ஸாண்டர்ஸ் இப்படிசொல்கிறார்
”என் எழுத்துப் பாணியைப் பொறுத்து நானும் வரவர ஒரு பரிணாமத்தை அடைந்திருக்கிறேன், அது நான் பயணங்களடிப்படையாகக் கொண்ட அ-புனைவுகளை எழுதுவதால் ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வாக்கியத்திலும் வாண வேடிக்கைகளை நுழைக்காமல் எழுதுவது என்ற கருத்தை நான் ஏற்கத் தொடங்கி இருக்கிறேன் என நினைக்கிறேன். இது என்ன சுட்டுகிறதென்றால், வெளிப்படையாக அசாதாரண உத்திகளேதும் இல்லாத கதைகளை எழுதுமளவு நான் விசாலப்பட்டிருக்கிறேன் என்பதை. உதாரணமாக, (“விக்டரி லாப்”, அல்லது ‘பப்பி” அல்லது “ஆல் ரூஸ்டன்” போன்ற) கதைக்களத்திலும், செயல்களிலும் எதார்த்தத்துக்கு ஓரெட்டே அருகில் உள்ள கதைகளைச் சொல்லலாம்.”[1]
எனவே ஸாண்டர்ஸின் முந்தைய பாணிக் கதைகளை எதிர்ப்பார்த்து இந்தத் தொகுப்பில் நுழைந்தால் ஏமாற நேரிடலாம்.
பலக் கதைகள், எண்ணக் குவியல்கலாகத் தான் துவங்குகின்றன. ஸாண்டர்ஸ் கதாபாத்திரங்களை முதலில் நமக்கு காட்டுவதில்லை/அறிமுகப்படுத்துவதில்லை அவர்களின் மன ஓட்டத்திற்குள்தான் நம்மை அழைத்துச் செல்கிறார். ஆரம்பத்தில் தொடர்பில்லாதது போல், அரூபமாகத்தோன்றுபவை, கதை முன்னேறியதும், பனி மூட்டம் விலகி நமக்கு அர்த்தம் தரத்துவங்குகின்றன.இதை ’திறந்திடு ஸெஸமி!’ (Sesame) என்று மந்திர ஜாலம் போல் செய்வதில்லை ஸாண்டர்ஸ். வாசகனுக்குத் தேவையான திறப்புக்களை, பொறிகளாக கதையின் போக்கில் வைத்துள்ளார், பின் வேண்டுவது வாசக சாமர்த்தியமே!
தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளாக ‘Al Roosten’, ‘The Semplica-Girl Diaries’ மற்றும் தலைப்புக் கதையான ‘டிசம்பர் பத்து’ (Tenth Of December) கதைகளைச் சொல்வேன். இவை ஸாண்டர்ஸின் மிகச் சிறந்த படைப்புக்களில் இடம் பெறக்கூடியவை, குறிப்பாக ‘டிசம்பர் பத்து’.
’டிசம்பர் பத்து’ கதை விசித்திர மிருகங்கள் , இளவரசியைக் கடத்தல், அவள் காப்பாற்றப்படுதல் போன்ற அதி-கற்பனை (fantasy) சார்ந்த, தொடர்பில்லாதது போல் தோன்றும் எண்ண ஓட்டங்களோடு ஆரம்பிக்கிறது. சற்றுக் குழப்பமாக இரண்டு பக்கங்களைக் கடந்த பின், ஒரு நுண்ணிய திறப்பை ஸாண்டர்ஸ் கொடுக்கிறார்.
“Sometimes, believing it their coup de grâce, not realizing he’d heard this since time in memorial from certain in-school cretins, they’d go, Wow, we didn’t even know Robin could be a boy’s name. And chortle their Nether laughs”
மேலுள்ள பத்தியில் வெளிப்படியாக எதுவும் சொல்லவில்லை என்றாலும், இந்த எண்ண ஓட்டங்களுக்குச் சொந்தக்காரன், ‘ராபின்’ (robin) என்ற,பெரும்பாலும் பெண்களுக்கு வைக்கப்படும் பெயரை உடையவன், அதனால் கிண்டல் செய்யப்படுகிறவன் என்று தெரிகிறது.இப்போது அவனின் கற்பனைகள் நமக்கு புரிய ஆரம்பிக்கின்றது, அவன் பதின் பருவத்தில் இருக்கலாம் (பதின் பருவத்தில், சாகசம், இளவரசியை/தனக்கு பிடித்தப் பெண்ணைக் காப்பாற்றுவது போன்ற கற்பனைகள் இருந்திராத பயல்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? ).தன் எண்ணங்கள் மட்டுமே துணையாக இருக்க , அவன் டிசம்பர் மாத உறையும் குளிரில் ஒரு குன்றுப் பிரதேசத்தில் இலக்கில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறான். அவன் எண்ண ஓட்டங்கள் தொடர, தனியாளாக அவனை வளர்க்கும் தாய், அவரையும் கிண்டல் செய்பவர்கள் என அவன் துயர மிகு வாழ்வு நம் முன் விரிகிறது. இப்போது இன்னொரு எண்ண ஓட்டம் கதையில் கலக்கிறது. இதையும் யார் பேசுவது என்று முதலில் புரிவதில்லை, பின்னர் இவர் டான் ஈபர் (Don Eber) என்ற 50 வயதைக் கடந்த ஆசாமி என்றும், , தன் தந்தை ஆலன் (Allen ) குறித்த நினைவுகளால் மன உளைச்சலில் இருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. அன்பான தந்தையான ஆலன் நோயால் படுத்தபடுக்கையான பின் கசப்பு நிறைந்த மனிதராக மாறியதையும், அதை அவரும் உணர்ந்ததோடு அந்த மாற்றத்தை நிறுத்த முனைந்து தோற்ற இயலாமையையும் அறிகிறோம்.
“Sometimes the gentle Allen would be inside there, too, indicating, with his eyes, Look, go away, please go away, I am trying so hard not to call you kant!”
(“cunt” என்ற வசைச் சொல்லை, ஆலன் உச்சரித்த விதம் தான் மேலே உள்ளது.)
சரி, இவை துயரமான நினைவுகள் தான் என்றாலும், கடுங்குளிரில், தனியாக அதைக் குறித்து எண்ணி, எண்ணி ஏன் ஈபர் அலைய வேண்டும். இதற்கான காரணத்தையும், நேரடியாகச் சொல்லாமல், அவரின் (முதலில்) சாதாரணமாகத் தோன்றும் சில செயல்கள் மூலம் ஸாண்டர்ஸ் தெரியப்படுத்துகிறார்.
Took off his hat and gloves, stuffed the hat and gloves in a sleeve of the coat, left the coat on the bench.
This way they’d know. They’d find the car, walk up the path, find the coat. ……….. ……….
He’d waited in the med-bed for Molly to go off to the pharmacy. That was the toughest part. Just calling out a normal goodbye.
ஆம், ஈபர் தற்கொலை செய்து கொள்ளப்போகிறார். ஏன்? இதற்கான பதில் ’தன்மானம்’. எப்படி? வாழ்க்கையின் குரூர விளையாட்டில், ஈபர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ளார். அவர் மனைவி அன்பாகக் கவனித்துக்கொண்டாலும், தான் மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோம் என்று ஈபர் நினைக்கிறார். மேலும் இந்த இடத்தில் அவர் தந்தை குறித்த நினைவுகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம், அதாவது, தானும் தன் தந்தை போல் கசப்பே நிறைந்தவராக மாறிவிடுவோம் என்றும் அஞ்சுகிறார், அதனால் தற்கொலை முடிவுக்கு வருகிறார்.
ஒரு நெடுங்கதைக்கு இத்தனை மேற்கோள்களா என்று படிப்பவர் எண்ணலாம். இரண்டு காரணங்கள். முன்பே சொன்னது போல் எதையும் நேரடியாக, நேர்கோட்டில் சொல்லாமல் முன் பின்னாக, நுண்மையாகச் சொல்லியுள்ளதால், கதை பற்றி நேர்க்கோட்டில் சொல்லும் போது கிடைக்காத அனுபவம், கதையின் பாணியில், மேற்கோள்களுடன் சொல்லும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் வாசகனுக்குத் திறப்பைக் கொடுக்கும் முக்கிய பத்திகள் என நான் நினைப்பதை மேற்கோள்களாக மேலே கொடுத்துள்ளேன். இன்னொன்று இந்தப் பாணியை அவர் இந்தத் தொகுதி முழுதும் பரவலாக உபயோகித்துள்ளதால் வாசகருக்கு அது குறித்த அறிமுகமாகவும் இருக்கும்.
ஈபர் தற்கொலை செய்ய முயல்கையில், அங்கு ராபின் வருகிறான். பிறகு நடக்கும் சம்பவங்கள், வலிந்து திணிக்கப்பட்ட உணர்ச்சிகளாக இல்லாமல், மானுடத்தின் மீது நம்பிக்கையைப் புதுப்பிக்கின்றன. இறுதியில் வரும் இந்த வரிகள், அனைத்து மனிதர்களின் தேடலை, ஏக்கத்தை, அவர்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான ஒன்றை சுட்டுகின்றன.
” ..[T]hey were accepting each other back, and that feeling, that feeling of being accepted back again and again, of someone’s affection for you always expanding to encompass whatever new flawed thing had just manifested in you, that was the deepest, dearest thing he’d ever— “
ஆல் ரூஸ்டன் (Al Roosten) எனும் கதை, அன்றாட வாழ்க்கையின் வறட்சியிலிருந்து தப்பிக்க மனிதர்கள் அவ்வப்போது ’பகற்கனவில் ’ (reverie) ஆழ்வதையும், அதிலிருந்து வெளி வரும் போது நிதர்சனம் என்றும் மாறாமல் இருக்கும் சோகத்தையும் சொல்லும். எளிமையானதாகத் தோற்றமளிக்கும் ஆழமான கதை. ஒரு அறக்கட்டளைக்காக ஊரின் முக்கியஸ்தர்களை ஏலம் விடும் நிகழ்ச்சியில் ஆல் கலந்து கொள்வதுடன் கதை ஆரம்பிக்கறது. இங்கு முக்கியஸ்தர் என்றவுடன் மிகையான கற்பனை செய்ய வேண்டாம் ஏனென்றால் ஸாண்டர்ஸ் கூற்றின் படி முக்கியஸ்தர் என்பது இங்கு “வர்த்தகச் சங்கம் கேட்டதும் ஒப்புக்கொண்ட முட்டாளை” குறிக்கிறது . ஆல் திருமணமாகாதவர் , விவாகரத்தான தன் சகோதரி மற்றும் அவர் குழந்தைகளுடன் வசிப்பவர்.
முதல் கனவில், தான் ஏலத்தில் மற்றவர்களால் போட்டி போடப்பட்டு வாங்கப்பட்டது போலவும், ஏலத்திற்கு வந்த இன்னொரு (மிகப் பணக்கார) முக்கியஸ்தரை விட மற்றவர்களால் விரும்பப்பட்டதாகவும் எண்ணுகிறார் . இன்னொன்றில் அந்த முக்கியஸ்தருக்கு இவர் உதவுவது போலவும் அதனால் அந்த முக்கியஸ்தர் மற்றும் அவர் குடும்பத்தினர் இவரைப் புகழ்ந்து, மதிப்பளிப்பது போலவும் அவர் எண்ணுகிறார். முக்கியஸ்தர் தன்னைக் குறித்து பெரிய அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை என்றும் அவர் மற்றும் அவர் குடும்பத்தின் பார்வையில் தான்/தன் குடும்பம் , சற்று தள்ளியே வைக்கப் படவேண்டியவை என்று ஆல் எண்ணுகிறார், எனவே முக்கியஸ்தரை வெல்வது அல்லது நல்லது செய்து அவர் அன்புக்கு/நன்றிக்குப் பாத்திரமாவது போல் அவர் கனவு காண்கிறார். ஆனால் நிதர்சனம் வேறு. அந்த பணக்கார முக்கியஸ்தருடன் பேசும் போது, தான் ஏலம் எடுக்கப்பட்டது குறித்த பெருமிதம் உடைவதை ஆல் உணர்கிறார். அவரின் எந்த உதவியும் (இப்போதைக்கு) முக்கியஸ்தருக்குத் தேவையில்லை. ’டிசம்பர் பத்து’ கதையில் வரும் ராபினின் பகற்கனவுகளும், ஆலின் பகற்கனவுகளும் வேறுவேறானவை என்றாலும் அவற்றின் நோக்கம்/காரணம் ஒன்றுதான். பதின் பருவமோ, மத்திம வயதோ. ஒரு சிறிய அங்கீகாரத்திற்கான/மரியாதைக்கான ஏக்கம் எப்போதும் உள்ளது. அது கிடைக்காமல் மற்றவர்களால் கவனிக்கப்படாமல்/ஒதுக்கப்படும் போது, தன் எண்ணங்களைப் பகிர யாரும் இல்லாத போது பகற்கனவுகளே துணையாக மாறுகின்றன. ஆலின் வியாபாரம் மந்தமாக உள்ளது, இரண்டு மாதமாகத் தன் கடை வாடகையைக் கொடுக்கவில்லை, சகோதரி மற்றும் மருமகன்களை பராமரிக்க வேண்டும் என பிரச்சனைகள் அப்படியேதான் உள்ளன. இந்த எண்ண ஓட்டங்களுடன் தன் கடை அருகே வரும் ஆல், தன் காரைத் தாண்டி ஒரு வயதான நாடோடி (hobo) செல்வதைப் பார்க்கிறார். திடீரென அத்திரம் பீறிட்டு வர, அந்த முதியவரை அடித்துத் துவைப்பது போல் ஒரு கணம் கற்பனை செய்கிறார். முதிய நாடோடி இவரைப் பார்த்து புன்னகைக்க இவரும் பதிலுக்குப் புன்னகைப்பதுடன் கதை முடிகிறது.
கதையில் முக்கியஸ்தர் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்பதெல்லாம் ஆலின் பார்வையில்தான் சொல்லப்படுகிறது. தன் வாழ்க்கைச் சூழலை எண்ணி, சமூகத்தில் தன் இடம் குறித்துத் தானாக ஒன்றை முடிவு செய்து , தன் தோல்விகளை (தோல்வி என்று அவர் நம்புவதை) எண்ணி மறுகி, பகற்கனவுகள் ஓரளவுக்கு மேல் பலனளிக்காத நிலையில், அனைத்தையும் மனத்தில் அடக்கி வைத்து அது பீறிடும் போது தான், நம்மைப் போல ஒரு சாதாரண மனிதனுக்கும் ஏதுமறியா முதியவரை உதைக்கும் எண்ணம் தோன்றுகிறது. இந்த முறை ஆல் தன்னை கட்டுப்படுத்தி விட்டார் அல்லது அவருக்கும் இன்னும் தைரியம் வரவில்லை). ஆனால் எதிர்காலத்தில்? [2]
‘The Semplica-Girl Diaries’ தலைப்பில் உள்ள ’Semplica-Girl’ (SG) என்ற பதம் ஸாண்டர்ஸ் உருவாக்கியது. ’Moldova’, ‘Laos’ போன்ற நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட (அல்லது தங்களையே விற்ற) பெண்கள் இவர்கள் என்றும், இவர்கள் மூளையில் ஒரு கம்பி செலுத்தப்பட்டு, வீடுகளில் ஏற்படுத்தப்படும், தோட்டம், செயற்கைக் குளங்கள் இவற்றில் கண்காட்சிப் பொருளாக, துணிக் காயவைக்கும் கயிற்றிலிருந்து தொங்க விடப்படுபவர்கள் என்று கதையின் போக்கில் நமக்குத் தெரிய வருகிறது. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து, நல்ல வேலை, பிரகாசமான எதிர்காலம் உண்டென்று நம்பி வெளிநாடுகளுக்குச் சென்று,கற்பனை கூடச் செய்துப் பார்த்திராத துயரங்களுக்கு ஆளாகும் பெண்கள் (ஆண்களும் கூட) இப்படித் தான் வாழ்கிறார்கள்.
மூன்று குழந்தைகளை உடைய, மந்தமான பொருளாதார சூழ்நிலையில் தன் குடும்பத்துக்கு பழகிப் போன வாழ்க்கை முறையைத் தக்கவைக்க முயலும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு தந்தையின் நாட்குறிப்புகளாக விரியும் இந்த நெடுங்கதை தன்னுள் பல அடுக்குக்களைக் கொண்டுள்ளது. நம்மிடையே இல்லாததை ஆசைப்படுவது மனித இயல்பு, குழந்தைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன் குழந்தைகளின் ஆசையை எப்படியாயினும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணுவதும் தவறல்ல. ஆனால் இங்கு ’ஆசை’ என்பது எதைக் குறிக்கிறது என்று பார்ப்போம். லில்லி என்ற தன் 13 வயது மகளின் தோழி லெஸ்லி (leslie) என்ற மிகப் பணக்காரப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றது இவரை சங்கடத்துக்குள்ளாக்கிறது. அந்த வீட்டின் செழுமை, அதைப் பார்த்து தன் குழந்தைகள் ஆச்சர்யப்படுவது இவரைக் குற்றஉணர்வு கொள்ளச்செய்கிறது. இத்தனைக்கும் இவர் ஒன்றும் ஏழை அல்ல, மத்திய/உயர்-மத்தியத் தர குடியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது(நிறையக் கடனும் உள்ளது). லில்லியின் பிறந்த நாளுக்கு இன்னும் 9 நாட்களே இருக்க, அவளுக்குப் பிடித்த (அதை விட முக்கியம், ஆடம்பரமான/விலை உயர்ந்த) பரிசாக எதை/எப்படி வாங்குவது என்று குழும்புகிறார். கடனட்டையை முழுதும் உபயோகித்தாகிவிட்டது). இந்நிலையில் அவருக்கு 10000 டாலர் பரிசு விழுகிறது. என்ன செய்கிறார் அவர்? இருக்கின்ற கடனை முழுவதுமோ/பகுதியோ அடைத்து, தன் மகளுக்கு நல்ல பரிசு வாங்குகிறாரா? இல்லை, கடனை அந்தஸ்தாக நினைக்கிற, ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என்று செல்கிற, நாளை பற்றிக் கவலைக் கொள்ளாத இன்றைய நுகர்வு சமுதாயத்தின் பிரதிநிதி அல்லவா அவர்? கடனடைப்பது பற்றி கொஞ்சம் யோசித்தாலும், பிறகு பிறந்த நாள் பரிசாக ’SG’க்களை வாங்கி வேட்டு விடுகிறார்.இப்படி செலவு செய்வது எதிர்காலத்தில் இவர் குழந்தைகளுக்கே வினையாக முடியலாம் என்று அவர் உணர்வதில்லை. இங்கு நாம் இந்த தந்தையை முட்டாள் என்றோ, ஊதாரி என்றோ சொல்ல முடியாது. ஏனென்றால் இவரை இன்னொரு கோணத்தில் அணுக , அவரின் தந்தையைப் பற்றியும் சில குறிப்புக்களை ஸாண்டர்ஸ் கூறிச்செல்கிறார். ஒரு சிறிய பத்தியில், மற்றவர்களுக்காக உழன்று, உழன்று தேய்ந்தவரைப் பற்றிய சித்திரம் இது.
“When Mom left Dad, Dad kept going to job. When laid off from job, got paper route. When laid off from paper route, got lesser paper route. In time, got better route back. By time Dad died, had job almost as good as original job. And had paid off most debt incurred after demotion to lesser route.”
என்ன வாழ்க்கை இது, ஒரு வேலையில் இருந்து நீக்கப்பட்டு, இன்னொன்று, அதிலிருந்தும் நீக்கப்பட்டாலும், தன்மானத்தை விட்டு, குடும்பத்திற்காக அதே இடத்தில் சிறிய நிலையில் வேலை செய்து , இப்படி வேலையே கதியெனக் கிடந்து ஒரு நாள் இறந்து விடுகிறார். ’By time Dad died, had job almost as good as original job’ என்ற வரியில் உள்ள சோகத்தை, அதன் பின்னால் உள்ள ஒரு (கதைசொல்லியைத் தவிர அனைவரும் மறந்திருக்ககூடிய) வாழ்க்கைச் சரிதத்தை எளிதில் கடக்க முடியுமா? கதைசொல்லிக்கும், அவர் தந்தைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை,இருவருக்கும் முடிவில்லாத, எந்தப் பெரும் வெற்றியையும் தராத உழைப்பே வாய்த்துள்ளது . (ஆனால் ஒன்று, கதைசொல்லியின் தந்தைக்கு இப்படி ஒரு பெரிய பரிசு விழுந்திருந்தால் அவர் அதை மொத்தமாக வேட்டு விட்டிருக்க மாட்டார். அவர் காலத்திய நுகர்வுச் சூழல் வேறல்லவா, கொஞ்சம் செலவு செய்து முக்கால் பங்கையாவது எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்திருப்பார்.) குடும்பச் சூழலால் தான் சிறிய வயதில் அனுபவிக்க முடியாத சந்தோஷத்தை எப்பாடுபட்டேனும் தன் குழந்தைகளுக்குத் தர முனையும் பெற்றோர்களின் பிரதிநிதி தான் நம் கதைசொல்லி. இவர் பரிசை ஆடம்பரமாகச் செலவு செய்ததை இது நியாப்படுத்தவில்லை, எனினும் கொஞ்சம் பரிவாக அணுகலாம்.
சரி, கதைசொல்லியின் செயலுக்கு ஒரு காரணம் உள்ளது, ஆனால் அவர் வாங்கிய பரிசுக்கு? தன் மகள் மேல் அத்தனை பாசம் வைத்துள்ளவர், பெண்களைக் கண்காட்சிப் பொருள் போல் தொங்க விடும் பரிசை வாங்க எப்படி சம்மதிக்கிறார். பாசம் கண்ணை மறைத்து விட்டதா? அப்படியென்றால் இந்த ’SG’களை, மகளின் பணக்காரத் தோழி பார்த்து வியக்கும் போது (ஆச்சர்யமாக அவர்கள் வீட்டில் ’SG’ இல்லை), அவர் ஏன் மிகவும் பூரிப்படைகிறார். மகளின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியை விட, மற்றவர்களிடம் இல்லாத ஒன்று தன்னிடம் உள்ளதால் ஏற்படும் மகிழ்ச்சியே அவருக்கு அதிகமாக உள்ளது போல் இருக்கிறது. எனக்கு இந்த பொருள் வேண்டும் என்பது, அவனிடம் இந்த பொருள் உள்ளது எனவே எனக்கும் வேண்டும் என்று மாறி, இறுதியில் யாரிடமும் இல்லாதது என்னிடம் இருக்க வேண்டும் என்ற ’one-upmanship’ நுகர்வு மனநிலையின் சீர்கேட்டின் உதாரணம் இது அல்லவா?
மகளுக்குப் பரிசைக் கொடுத்த பின் புதிதாகச் சில பிரச்சனைகள் எழுகின்றன. கதைசொல்லியின் இளைய மகள், ஈவா (eva) இந்த ’SG’களால் பாதிக்கப்படுகிறாள். ஒரு கட்டத்தில் மன உளைச்சல் தாள மாட்டாமல், அவர்களை விடுவித்து விடுகிறாள். ’SG’களை தருவித்த நிறுவனம், நஷ்ட ஈடு தரவேண்டுமென்றும், இது பற்றி ‘SG’ வாங்கும் போது கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சொல்கிறது (இன்றையச் சூழலில் எத்தனை பேர் ஓர் ஒப்பந்தத்தை முழுதும் படித்து, பின் கையோப்பமிடுகிறோம்?). வீட்டையே இழக்கக் கூடிய சூழல்(கதை சொல்லியின் மாமனார் பணமிருந்தும், இவர்கள் செய்த ஆடம்பரச் செலவின் பலனை இவர்கள் தான் அனுபவிக்க வேண்டும் என உதவ மறுத்து விடுகிறார், பழைய காலத்து ஆள் இல்லையா) . இருளில் ஒரு மெல்லிய ஒளி கீற்றாகக் கதைசொல்லி, முதல் முறையாக அந்த ’SG’ பெண்கள் பற்றியும், அவர்கள் உணர்வுகள் குறித்தும் யோசிக்கிறார், தான் வாங்கிய பரிசை வெறுக்க ஆரம்பிக்கிறார். இந்த மனமாற்றம் நிலையானது தானா, நாளையே அந்தப் பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, இன்னொரு 10000 டாலரோ அதற்கும் மேலோ பரிசு விழுந்தாலோ அவர் நுகர்வு மனம் மீண்டும் தடம் புரளாமல் இருக்குமா?
நாய்க்குட்டி (Puppy), கதையில் இரு விதமான ’அம்மாக்கள்’ வருகிறார்கள். இந்த இருவருக்கும் உள்ள வேறுபாட்டை ஸாண்டர்ஸ் சில காட்சிகள் மூலம் பதிவு செய்கிறார். ஒருவர் மர்ரீ (Marie), தன் குழந்தைகளுடன் நண்பனாகப் பழகும், அவர்கள் உலகில் பங்கெடுக்க விரும்பும் புதுயுகக் குழந்தைப் பராமரிப்பில் நம்பிக்கை உள்ள தாய் . இன்னொருவர் கால்லி (Callie), தன் கணவன் நடத்தும் ஒரு சிறிய பண்ணையில் இருப்பவர். கால்லி வீட்டில் உள்ள ஒரு நாய்க்குட்டியை விற்பதற்கு விளம்பரம் கொடுக்க, அதைப் பார்க்கத்தான் மர்ரீ தன் குழந்தைகளுடன் வருகிறார். பண்ணையில், நேரடியாக உபயோகமில்லாத, உபரியாக உள்ள எதுவும் தேவையற்றதே, எனவே ஒன்று நாய்க்குட்டியை விற்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்பது கால்லியின் கணவனின் முடிவு. அவனுக்கும் கொல்வதில் விருப்பமில்லை, அதே நேரம் அதை வளர்க்கவும் முடியாத சூழல். மர்ரீ வீட்டிலோ பல்வேறு மிருகங்கள் உள்ளன (ஒரு பெரிய உடும்பு (iguana) கூட உள்ளது), இவர்களுக்கு வளர்ப்பு மிருகங்கள் மகிழ்ச்சியைத் தருபவை. கால்லியின் மகன் ’போ’(Bo) மனநிலை பாதிக்கப்பட்டவன். மருந்துகளும் எல்லா நேரமும் அவனைக் கட்டுக்குள் வைத்திருப்பதில்லை என்பதால் ஒரு மாறுதலுக்காக அவனை வெளியில் உள்ள மரத்தில் கால்லி கட்டி வைத்துள்ளார். இது அவன் மீது பாசமில்லை என்பதால் அல்ல, நடைமுறையில் அவன் வெளியே இருந்தால் கோபங்கள் குறைந்து, சற்று ஆசுவாசமாக இருப்பதைப் போல் கால்லிக்கு தோன்றுவதால் அவனைக் வெளியே கட்டி வைத்துள்ளார்.
கால்லியின் வீட்டிற்கு மரி வருகிறார், அவர் குழந்தைகளுக்கு நாய்க்குட்டியைப் பிடித்து விடுகிறது. அப்போது எத்தேசையாகப் போவைப் பார்க்கும் மரி, அதிர்ச்சியுற்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவசரம் அவசரமாக வெளியேறுகிறார். கால்லி பற்றி தவறாக எண்ணி, குழந்தைகள் நல காப்பகத்தில் புகார் செய்யும் எண்ணத்தோடு செல்கிறார். இன்னொரு புறம் கால்லி நாய்குட்டி கொல்லப்படக்கூடாதென்று அதைப் பண்ணைக்கு வெளியே விடச் செல்கிறார். தான் சேமித்து வைத்திருந்த கொஞ்சப் பணத்தையும் கணவனிடம் கொடுத்து நாய்க்குட்டியை விற்று விட்டதாகப் பொய் சொல்லவும் முடிவு செய்கிறார். (யாரும் பராமரிக்காமல் அது இறந்து விடலாம், இருப்பினும் கொல்வதை விட இது மேல் என்று நினைக்கிறார் ). இத்துடன் கதை முடிகிறது, போவுக்கும் கால்லிக்கும் என்னவாகும், இருவரும் பிரிக்கப்படுவார்களா, மர்ரீ புகார் செய்யப்போவது சரியா என்ற கேள்விகள் தொடர்கின்றன. நாய்க்குட்டியைக் கொல்லக் கூட விரும்பாத, அதைக் காப்பாற்ற தன் சிறிய சேமிப்பைக் கூட செலவு செய்ய முடிவு செய்யும், தன் சூழலுக்கேற்ப பிள்ளைகளைப் பராமரிக்கும் தாய், அவரைத் தவறாகப் புரிந்து கொள்ளும், வசதி படைத்த, அந்த வசதியால் பிள்ளைகளை நன்கு பராமரிக்கும் தாய், வேற்றாரின் குழந்தை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று தோன்றியதுமே புகார் அளிக்கப் போகும் தாய். இதில் யாருடையப் பாசத்தைக் குறைவாக எண்ணுவது, வசதியைத் தவிர இருவருமும் ஒரே மாதிரித் தானே உள்ளார்கள்? மர்ரீ ஒரு நிமிடம் போ குறித்து கால்லியிடம் கேட்டிருந்தால் எல்லாம் சரியாகி இருக்குமே என்று வாசகனால் அங்கலாய்க்கத்தான் முடிகிறது.
‘வெற்றி ஓட்டம்’ (Victory Lap) கதை, அதன் கதை சொல்லல் முறையில் ‘டிசம்பர் பத்து’ கதையை ஒத்து இருக்கிறது. மூன்று பேர் உள்ள இந்தக் கதை அனைத்தும், அவர்களின் மன ஓட்டத்தாலேயே நகர்கிறது. ஆலிசன் (Allison) என்ற பதின் பருவப் பெண், தன் வயதுக்கே உரிய பகற்கனவில் இருக்கிறாள். அவள் வயதையொத்த, அவளால் ஏறிட்டும் பார்க்கப்படாத, அவளைப் பெரிய பொக்கிஷமாகக் கருதிப் பூஜிக்கும் அவளின் அண்டைவீட்டு வாசியான, கைல் (Kyle), தன்னை மூச்சுவிட முடியாத அளவுக்குக் கட்டுப்படுத்தும் பெற்றோர் குறித்தும், ஆலிசன் குறித்தும் எண்ணங்களில் ஆழ்ந்தபடி தந்தை தனக்கிட்டுள்ள வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறான். மூன்றாவதாக ஒருவன் கலங்கிய மனநிலையோடு ஆலிசனை கடத்திச் செல்கிறான். இதைக் கைல் பார்க்கிறான். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கவேண்டுமென்று பெற்றோரால் பாடம் புகட்டப்படுள்ள கைல் அதை மீறுகிறான். அவனின் குறுக்கீடு முற்றிலும் நன்மையில் முடிந்ததா. அதன் பக்கவிளைவுகளை கைலும், ஆலிசனும் எப்போது கடப்பார்கள், அல்லது வாழ்வு முழுதும் பாரமாக அவர்கள் கூடவே இருக்குமா?
‘சிலந்தி வலையில் இருந்து தப்பித்தல்’ (Escape from Spiderhead), கதையில் ஒரு நிறுவனம், மனிதர்கள் எளிதில் காதலில் விழ/அதிலிருந்து மீள ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கிடையே எந்த விசேஷ ஈர்ப்பும் இல்லாத ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரு ஊசி செலுத்தப்பட்டால், நிலைமை மாறி பெருங்காதல் கொள்கிறார்கள், அணுவணுவாக மற்றவரை ரசிக்கிறார்கள்.இன்னொரு ஊசி செலுத்தப்பட்டால் பெருங்காதல் குறைந்து, முன்பிருந்த ஈர்ப்பில்லாத நிலையை அடைகிறார்கள். அன்பையே நுகர்வுப் பொருளாக்கும் சூழல் குறித்து பேசும் கதைகளில் பத்தோடு ஒன்றாக இந்தக் கதை இருந்திருக்கும் (ஸாண்டர்ஸே நுகர்வு சமூகம் குறித்து பல கதைகள் எழுதியவர்). ஆனால் இந்த வகைக் கதைகள், ஒரு பொருள் நுகர்வுக்குத் தயாராகும் முன் ’பரிசோதனை எலிகளாக’ அந்தப் பொருளை உட்கொண்டு பக்க விளைவுகளால் அவதிப்படுபவர்கள் பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எந்த நம்பிக்கையில் இந்தப் பரிசோதனைகளுக்கு ஒப்புக்கொண்டார்கள் , அவர்களிடம் பரிசோதனைகளினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அனைத்து உண்மைகளும் பகிரப்பட்டதா என்று யாருக்குத் தெரியும். (சமீபத்தில் வந்த நாளேட்டுச் செய்திகளில் தமிழ் நாட்டில் வட மாநிலத்தவர், முழு உண்மைகளும் சொல்லப்படாமல் பரிசோதனை எலிகளாக உபயோகிக்கப்படுவது பற்றித் தெரிய வந்துள்ளது. )
இக் கதையின் கதைசொல்லி, காதல் மருந்தை உட்கொள்ளும் பரிசோதனை எலிகளில் ஒருவன். அவனுக்கு மூன்று பெண்களுடன் காதல் ஏற்படுத்தப்பட்டு/வெட்டப்படுகிறது. இதே போல் இன்னும் இரண்டு ஆண்கள் உள்ளனர். இதே போல் ஒவ்வொரு பெண்ணுக்கும் 3 ஆண்களுடன் காதல் ஏற்படுத்தப்பட்டு/வெட்டப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஏதோ குற்றம் புரிந்து, சிறைத் தண்டனைக்கு பதில் இந்தப் பரிசோதனைகளுக்கு ஒப்புக்கொண்டார்கள் என்று சுட்டப்படுகிறது. காதலில் வீழ்வதை எளிதில் நீருபித்து விடலாம், அதிலிருந்து ஒருவன் மீண்டு விட்டான் என்பதை எப்படி நிரூபிப்பது. இதற்காக கதைசொல்லி முதலில் காதல் வயப்பட்டிருந்தப் பெண்ணை, அவன் முன்னாலேயே துன்புறுத்துகிறார்கள் (இதற்கும் மருந்து தான்). கதைசொல்லி எந்த உணர்ச்சியும் காட்டாவிட்டால்,மருந்து எதிர்பார்த்தப்படி வேலை செய்கிறது என்று அர்த்தம். இப்படிப்பட்ட கொடுமைகளுக்கும் அவர்கள் ஆட்படுத்தப்பட்டாலும், இறுதியில் விஞ்ஞானம் என்ன வளர்ந்தாலும், மனித உணர்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாது என்ற நம்பிக்கையை ஸாண்டர்ஸ் நம்முள் விதைக்கிறார்.
‘உணர்வுகளைத் தூண்டுதல்’ (Exhortation), இல்லம்(Home) , ‘படு தோல்வியடைந்த என் தீரச்செயல்’ (My Chivalric Fiasco) ஆகிய கதைகள் மோசமானவை என்று சொல்ல முடியாது, இருப்பினும் மற்ற கதைகளோடு ஒப்பிடும் போது ஒரு மாற்றுக் குறைவு தான். ஒரு நிறுவனத்தின் ’கோட்ட இயக்குனர்’ (divisional director) தன் ஊழியர்களை ஊக்குவிக்க அனுப்பும் குறிப்பாணை (memo) பற்றியதே ’உணர்வுகளைத் தூண்டுதல்’ கதை. ஒரு மிகச் சுவாரஸ்யமான முடிச்சைக் கொண்டிருந்தாலும், கதையில் இருந்திருக்க வேண்டிய, அபத்தம் மற்றும் வலியுறத்தலின் கலவை இதில் குறைவாகவே உள்ளது, அதாவது ஒருவன் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய தூண்டுதல், அதே நேரம் கொஞ்சம் சிந்தித்தால் குறிப்பாணையில் உள்ள அபத்தம் தென்படக்கூடியதாகவும் இருந்திருக்க வேண்டும். இங்கு ஸாண்டர்ஸின் ’வற்புறுத்தல் தேசத்தில்’ (In Persuasion Nation’) தொகுப்பில், ‘என்னால் பேச முடியும்’ (I can speak) கதையையே இத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்தக் கதையில், குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் முன்பே, அவர்கள் சார்பில் பேசும் முகமூடிகளை விற்பவர், திருப்பி அனுப்பப்பட்ட முகமூடியை மீண்டும் வாடிக்கையாளர் தலையில் கட்ட முயல்வதே கதை. இங்கும் ஒருவரை தனக்கேற்பக் கையாள்வது/வளைப்பது (manipulation) நடக்கிறது. இதில் உள்ள அபத்தம் மற்றும் வலியுறத்தலின் கலவை ’உணர்வுகளைத் தூண்டுதல்’ சிறுகதையில் இல்லை.
‘இல்லம்’ கதை, போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தவனைப்பற்றியது. அவன் தன் சொந்த ஊருக்கு வந்தாலும், அவனுக்கென்று ஒரு இல்லம் இல்லை. இங்கு இல்லம் என்பது வீடு என்பதை மட்டுமில்லாமல், உறவினர், நட்புக்கள் இவற்றையும் குறிக்கிறது. இல்லம்/இருப்பிடம் என்பதை ஸ்தூல இடமாகப் பார்க்காமல், ஒருவன் ஆசுவாசமாக/ எந்த மனச் சங்கடங்களும் இல்லாமல் இருக்கக் கூடியச் சூழலாகப் பார்க்க வேண்டும். ‘feel at home’/'feels like home’ என்று சொல்வார்கள் இல்லையா அது போல், இது என் ஊர், என் வீடு, என் மக்கள் என ஒருவனுக்குத் தோன்றவேண்டும், அப்படி ஒரு சூழல் அமைய வேண்டும். அது கதைசொல்லிக்கு வாய்ப்பதில்லை.
அவன் குழந்தைகளின் தாய் இன்னொருவனை மணந்து கொண்டிருக்கிறாள், சகோதரி வீட்டில் அவனுக்கு மரியாதை இல்லை. புதிதாக ஒருவனுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தாயுடன் தங்குகிறான். வாடகை கொடுக்காததால் வசிக்கும் வீட்டிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தனக்கென்று ஒரு இருப்பிடம் இல்லாமல், எதிலும் ஓட்ட முடியாமல், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய, எரிமலை போல் கதைசொல்லி நடமாடுகிறான். போர்க்களத்திலிருந்து வந்தவர்கள், அந்த நினைவுகளை மறக்க முடியாமல், போருக்கு முந்தைய தன் வாழ்க்கையில் ஓட்ட முடியாமல் அல்லாடுவதைப் (Post traumatic stress disorders) பற்றிப் பேசும் பல படங்கள்/புனைவுகள் வந்துள்ளன. ’Civilwar land in bad decline’ என்ற ஸாண்டர்ஸின் அபாரமான சிறுகதையிலேயே, அமெரிக்க உள்நாட்டுப் போர், வியட்நாம் போர் இவற்றில் ஈடுபட்டவர்களின் மன உளைச்சலைச் சொல்லி இருப்பார். ஆனால் ’இல்லம்’ கதை ஒரு ஏற்கனவே படித்த உணர்வையே (deja-vu) வாசகனுக்கு தருகிறது.
பின்நவீனத்துவப் புனைவுகள் மீது, அவை அவநம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளன, அதன் படி பகடி, முரண்நகை, விட்டேற்றி மனப்பான்மை (cynicism) இவற்றில் தான் கவனம் செலுத்துகின்றன, என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. இது பெருமளவு உண்மையென்றாலும் விதிவிலக்குகளும் உள்ளன. (உ.ம் Kurt Vonnegut படைப்புக்களில் நம்பிக்கையின் கீற்றைக் காணலாம், ‘Cat’s Cradle’). இந்தத் தொகுப்பிலும் மானுட நேயத்தின் மேல் உள்ள நம்பிக்கையைக் காண முடிகிறது. பெரும்பாலான கதைகளில், கதாபாத்திரங்கள் மனித நேயம் சார்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழலை எதிர் கொள்கிறார்கள்.தாங்கள் தலையிட்டால் பிரச்சனை வரலாம், அதற்கு பதிலாக, காணாதது போல் சென்று விடலாம் என்று வரும் போது அவர்கள் மனித நேயம் சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். (‘நாய்க்குட்டி’ போன்ற கதைகளில் அது தவறான முடிவாகவும் உள்ளது). நம்பிக்கை, நெகிழ்ச்சி என்பது புனைவுகளில் ஒதுக்கப்படவேண்டியவை இல்லை, மிகவும் உணர்சிகரமாக (melodramatic) இல்லாமல் இயல்பாகவே இவற்றை வெளிக்கொணரலாம் என்று ஸாண்டர்ஸ் நிரூபிக்கிறார். அதற்காக ’அனைத்தும் சுபம்’ என்றும் மனித நேயம் பொழிகிறது என்றும் ஸாண்டர்ஸ் சொல்வதில்லை. ’டிசம்பர் பத்து’ கதையில் ஒரு பாத்திரம் உணர்வது போல்
“…now saw that there could still be many—many drops of goodness, is how it came to him—many drops of happy—of good fellowship—ahead, and those drops of fellowship were not—had never been—his to withheld.”
வாசகனுக்கும் மானுடம் முற்றிலும் வறண்டு விடாமல் துளித் துளிகளாகவேனும் இன்னும் உயிர்த்துள்ளதை ஸாண்டர்ஸ் இந்தத் தொகுப்பின் மூலம் உணர்த்துகிறார்.
———————————————————-
[1] இந்த மேற்கோளின் இங்கிலீஷ் மூலம்: ”I’ve also undergone a gradual stylistic evolution that may have had something to do with my writing travel-based nonfiction. I think I got a little more comfortable with the idea of not having to put total fireworks into every sentence, which meant that I could broaden out a bit and write stories that didn’t have any overt pyrotechnics—i.e., stories (like “Victory Lap” or “Puppy” or “Al Roosten”) that were a step closer to realism in their settings and actions.”
சோம்பேரிதனத்தை தவிர புத்தகம் படிக்காமல் இருப்பதற்கு என்னிடம் வேறு காரணம் ஒன்றும் இல்லை... ஆனால் உங்களின் //’Semplica-Girl’...Escape from Spiderhead),// ஆகிய இரண்டு கதைகளின் விமர்சனங்களை படித்தும்,
ReplyDelete"" ஸாண்டர்ஸ் கதாபாத்திரங்களை முதலில் நமக்கு காட்டுவதில்லை/அறிமுகப்படுத்துவதில்லை அவர்களின் மன ஓட்டத்திற்குள்தான் நம்மை அழைத்துச் செல்கிறார'' என்ற உங்களின் கருத்தை படித்த பின் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை பாட்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி.
நன்றி
ReplyDelete