பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/11/04/on-chesil-beach/)
---------------
---------------
திருமணம் முடித்த கையோடு தேனிலவு கொண்டாட கடலோர விடுதிக்கு வந்திருக்கும் இளம் தம்பதியரான எட்வர்ட் (Edward)/ ப்ளாரன்ஸ் (Florence) இரவு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
தேனிலவு அறையின் நிசப்தம், உணவைப் பரிமாறும் இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருப்பதால் தரையில் உண்டாகும் கீச்சிடும் சப்தம், அந்த இளைஞர்கள் எதாவது நமுட்டுச் சிரிப்பை உதிர்க்கிறார்களா என்ற எட்வர்ட்டின் கவனித்தல், உணவிற்குப் பின் கடற்கரைக்கு நடை செல்ல வேண்டும் என்ற அப்போதைய திட்டம் முதல், அவர்கள் மண வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் – இசைத்துறையில் ப்ளாரன்ஸ் செய்ய வேண்டியவை, எட்வர்ட்டின் பணி, இருவரின் நண்பர்கள் – என்பது வரை போதையேற்றுகிற பல கனவுகளை அவர்கள் – “heaped up before them in the misty future” – கொண்டுள்ளார்கள்.
ஆனால் அனைத்தையும் விட அவர்கள் இருக்கும் அறையிலிருந்து, அவர்கள் பார்வையின் ஓரத்தில் தெரியும் மென்மையான, தூய வெள்ளை நிறத்திலான விரிப்பைக் கொண்ட படுக்கை தான் அவர்களை மனதை முழுதும் ஆக்கிரமித்து, அவர்கள் வருங்காலத்தை மூடுபனியால் போர்த்திருக்கிறது. திருமண தினத்தின் உற்சாகத்தை சற்றே வடியச் செய்யும், அன்றைய இரவைக் குறித்த இயல்பான பதற்றம் அல்ல இது என்பதும், அவர்கள் நுழைய உள்ள மூடுபனியில் ஒருவரை ஒருவர் தவற விட்டு, பாதை மாறி, வருங்காலத்தை இழக்கக் கூடும் என்பதும் விரைவில் வாசகனுக்கு சில விவரிப்புக்கள் மூலம் புரியவருகிறது (Sex with Edward could not be the summation of her joy, but was the price she must pay for it, என்று ப்ளாரன்ஸ் எண்ணுகிறாள்)
திரும்பி வர முடியாத புள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கும் இந்தத் தம்பதியர் வாழ்வின் ஓர் இரவை, அவ்விரவின் சம்பவங்களோடு, கடந்த காலத்தையும் மெக்கீவன் கலக்கிறார். இது ஒரு சிறு/நெடுங்கதையாக முடித்திருக்கக் கூடியதை நாவலாக நீட்டிப்பதற்கு செய்யும் யுத்தி மட்டுமே அல்ல.
1960களின் ஆரம்பத்தில், உலக அரங்கில் இங்கிலாந்து தன் இடத்தை இழந்து கொண்டிருப்பதை, அப்பேரரசின் சூரியன் அஸ்தமனமாகத் தொடங்குவதை நம்ப/ புரிந்து கொள்ள முடியாமல் கவனித்துக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகப் போரில் போரிட்ட மத்திய வயதுடைவர்கள், இவர்களுக்கு நேர்மாறாக அப்போது குழந்தைகளாக இருந்து இப்போது 20களில் இருப்பவர்களின் அணுசக்தி எதிர்ப்பு போன்ற கொள்கைகள் (இங்கிலாந்தைப் பொருத்தவரை) ஒரு யுகத்தின் முடிவிற்கு) சாட்சியாக இருக்கிறாகள்.
ப்ளாரன்ஸ் /எட்வர்ட்டின் சந்திப்பு, குடும்பப் பின்னணி, இருவருக்குமிடையே உள்ள வித்தியாசங்கள் ( ப்ளாரன்ஸ் மேற்கத்திய செவ்வியல் இசை பயின்றவர்/ நிகழ்த்துபவர், எட்வர்ட் ‘ராக்’ இசை கேட்பவர்) போன்றவற்றின் சித்தரிப்புக்கள் அவர்கள் தங்கள் திருமண இரவன்று வந்தடைந்துள்ள இடத்திற்கான பாதையை விளக்குகிறது.
60களின் ஆரம்பம் என்பதால் பாலியல் குறித்த உரையாடல்கள் சாத்தியம் இல்லை என்று ஒற்றைப்படையாக இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாது. இது குறித்த உரையாடல்கள் எப்போதுமே எளிமையானவை அல்ல இல்லையா? மனதில் உள்ளதை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள்/ எதிர்பார்ப்புக்கள் தம்பதியரிடையே பிரச்சனைக்கு காரணமாகிறது. ப்ளாரன்ஸ் நான்கு பேர் கொண்ட மேற்கத்திய செவ்வியல் இசையை நிகழ்த்தும் குழுவின் அறிவிக்கப்படாத தலைவியாக இருக்கிறாள், அந்த ஆளுமை அவளுக்கு இயல்பாக உள்ளது. அதை கவனிக்கும் எட்வர்ட்டால், அத்தகைய ஆளுமை உடைய பெண் பாலுறவு குறித்த வெறுப்பு கொண்டிருப்பாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், இருவரும் நெருங்கும் கணங்களில் அவளின் தயக்கத்தை/ விலகலை நாணமாகவே கருதி, திருமணத்திற்குப் பின் சரியாகி விடும் என்று நம்புகிறான். இறுதி வரை, இத்தகையத் தவறானப் புரிதல்கள் நீடிக்கின்றன. திருமண இரவன்று அவளை முத்தமிடும் போது, ப்ளாரன்ஸ் குமட்டல் ஒலி எழுப்ப அப்போதும் கூட அதை அவளின் எழுச்சியின் வெளிப்பாடாகவே தவறாகப் புரிந்து கொள்கிறான்.
இருவரின் கூச்ச உணர்வோடு, திருமணம்/ உடலுறவு, பாலிய இயங்குவியல் குறித்த சமூக கற்பிதங்களும் அவர்களைத் தங்கள் தயக்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதிலிருந்து தடுக்கின்றன. திருமணத்திற்குப் பின் ஆணுக்கு உரியதான பெண் உடல் என்று பதிந்துள்ளதால், இறுதி வரை ப்ளாரன்ஸ் தன்னிடம் ஏதோ பெரிய குறைபாடு உள்ளதென்றும், அனைத்துமே தன்னுடைய தவறு தான் என்றுமே எண்ணுகிறாள். அதுவே அது குறித்து பேச மேலும் தடையாக உள்ளது. திருமண நிச்சயத்திற்குப் பின்னான, திருமணம் வரையிலான பல மாத இடைவெளியில், உடல் சார்ந்த நெருக்கத்தை ப்ளாரன்ஸ் தவிர்ப்பது அவனைத் துன்புறுத்தினாலும், அதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் பொறுத்துக் கொள்ளுமளவுக்கு அவனுள் நேசம் உள்ளது. உடலுக்கு உரியவன் என்று சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும், அதற்கான தகுதி தன்னிடம் உள்ளதா என்ற (இயல்பான) சந்தேகமும் எட்வர்ட்டை ப்ளாரன்ஸ்ஸின் தயக்கத்தை அப்போதைக்கு கடந்து செல்ல வைக்கிறது, அதுவே இறுதியில் வினையாகி விடுகிறது.
நேரடியாக சொல்லாவிட்டாலும், ப்ளாரன்ஸ் சிறுவயதில் மிக நெருங்கிய உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதுவே அவளின் வெறுப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்பதற்கான சில மங்கலான தடயங்களை நாவலெங்கும் மெக்கீவன் விட்டுச் செல்கிறார். ப்ளாரன்ஸ்ஸின் உணர்வுகளோடு இது சரியாகப் பொருந்தினாலும், அவள் பாத்திரத்திற்கு மேலும் அழுத்தம் கூட்ட திணிக்கப்பட்ட தகவலாகவும் இது உள்ளது. யூகமாகக் கூட எதையும் சுட்டாமல் பாலியல் குறித்த தேவையற்ற கற்பிதங்கள் கொண்ட வெகுளிப் (sexually naive) பெண்ணாக மட்டுமே அவரைச் சித்தரித்து – நாவலின் ஓர் இடத்தில், புதுமணப் பெண்களுக்கான கையேடு ஒன்றைப் வாசிக்கும் ப்ளாரன்ஸ் அதில் வரும் ‘penetration’ என்ற வார்த்தையை கத்தியால் பிளக்கப்படும் வலியாக உருவகிக்கிறார்- இருந்தால் அப்பாத்திரத்திற்கு வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கக் கூடும்.
சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை என்றோ அதன் விளைவுகள் வாழ்க்கை முழுதும் அவர்களைத் தொடர்வதில்லை வாட்டுவதில்லை என்றோ இங்கு சொல்ல வரவில்லை, அப்படி எந்த துயர நிகழ்வையும் எதிர்கொள்ளாத எத்தனையோ பேருக்கும் உள்ள பாலியல் குறித்த குழப்பங்களை முன்வைத்து இந்தப் பாத்திரத்தை உருவாக்கி இருக்கலாம். இரண்டிற்குமே சாத்தியங்களை நாவலில் வைத்துள்ளதால் தான் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெளிவாக சொல்லாமல் வாசகனின் யூகத்திற்கு மெக்கீவன் விட்டிருக்கலாம். ப்ளாரன்ஸ்ஸின் பால்யம் குறித்த நினைவுகளுமே தவறான புரிதல்களால் உருவாகி இருக்கலாம் என்ற மூன்றாம் கோணத்தையும் கருத்தில் கொள்ளலாம். David Foster Wallanceன் ‘Signifying Nothing’ சிறுகதையை இங்கு அதன் கதைசொல்லியின் மைய உணர்வுக்காக ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு வேளை இந்தக் கதைசொல்லி தன் நினைவுகளை எதிர்கொண்ட விதத்தில் ப்ளாரன்ஸும் செய்திருந்தால்?
நாவல் முழுவதும் இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என வேறு பாதைகளை இந்தப் பாத்திரங்கள் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய பலச் சந்தர்ப்பங்கள் உள்ளன என்றாலும் பெரும்பாலும் எதுவும் செய்யாமல், மெக்கீவன் சொல்வது போல்,- This is how the entire course of a life can be changed: by doing nothing– வீணடிக்கிறார்கள். நகை முரணாக திருமண இரவன்று, திட்டமிட்டப்படி கடற்கரைக்குச் செல்லாமல், தன் வெறுப்பை வெல்ல ப்ளாரன்ஸ் தான் அருவருக்கும் ஒன்றை நோக்கி எடுத்துவைக்கும் அடி ஒன்றே, அதுவரை அவர்களிடையே இருந்த திரையை கிழிக்கிறது. ஒரு கோணத்தில் அந்நிகழ்வு தேவையானது தான் என்றாலும், வெளிக்கொணர்ந்த சூழல் பொருத்தமாக இல்லாததால் நெருக்கடியை உருவாக்குகிறது
நாவல் முழுதும் எந்தப் பூச்சுக்ளுமற்ற உரைநடையை கையாண்டிருக்கும் மெக்கீவன், தம்பதியரின் முதல் உடலுறவு முயற்சியையும், அவ்வாறே சில வரிகளில் நேரடியாகச் சொல்கிறார். ஆனால் பதட்டத்தில் ப்ளாரன்ஸ் உடலெங்கும் எட்வர்ட்டின் விந்து சிதறி உறைய ஆரம்பிக்க, தீயை அள்ளிக் கொட்டியது போல் ப்ளாரன்ஸ் தன் ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த வெறுப்பின் வெளிப்பாடாக செய்யும் செயல், (ப்ளாரன்ஸ் மீது தவறில்லை என்றாலும்) எட்வர்ட் மனதில் ஆறா வடுவை உருவாக்குகிறது.
அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணரும் எட்வர்ட், தன்னையே எரித்துக்கொள்ளும் கோபமும் (அவனுக்குள் சில சமயம் உருவாகும் இத்தகைய அதீதக் கோபத்தைப் பற்றியக் குறிப்புக்களை முன்பே நாவலில் மெக்கீவன் தந்துவிடுகிறார்) , அதை அணைக்க முயலும் காதலுமாக அறையை விட்டு நீங்கி கடற்கரைக்குச் சென்றுள்ள ப்ளாரன்ஸ்ஸைத் தேடிச் செல்கிறான். தவறு தன் மீது தான் என்றே இப்போதும் எண்ணும் ப்ளாரன்ஸ் தற்காப்புக்காக, எட்வர்ட் மீது முதல்முறையாக மனதில் குற்றம் சுமத்துகிறாள்.வெறுப்பு/ நேசம் என்ற இரு துருவ உணர்ச்சிகளின் பிடியில் இருக்கும் இருவரின் உரையாடல் எதை சாதித்திருக்கக் கூடும்? தங்கள் உறவைக் காப்பதாக எண்ணி ப்ளாரன்ஸ் சொல்லும் ஒரு ஆலோசனை அவர்கள் வாழ்க்கை பாதையை முற்றிலும் மாற்றிப் போடுகிறது. “All she had needed was the certainty of his love, and his reassurance that there was no hurry when a lifetime lay ahead of them,” என்று ஏங்கும் ப்ளாரன்ஸ்ஸை எட்வர்ட் எப்படி மீட்டிருக்கக் கூடும்?
நாவலின் ஆரம்பத்தில், அவர்களின் திருமணம் குறித்து சொல்லும் போது எட்வர்ட்டின் தாய் “… had not significantly misbehaved, or completely forgotten the purpose of the occasion,” என்று சொல்லப்படுவது புதிராக உள்ளது. அவ்வப்போது வரும் எட்வர்ட் குடும்பம் குறித்த சித்தரிப்புக்களும் இந்தப் புதிரை அதிகமாக்குகின்றன. எட்வர்டுக்கு ஐந்து வயதும் அவன் இரட்டை சகோதரிகள் கைக்குழந்தைகளாகவும் இருக்கும் போது, அவன் தாய்க்கு ஏற்படும் விபத்தால் மூளை பாதிப்படைகிறது. கலங்கலான உணர்வுகள்/ நினைவுகள் மட்டுமே உள்ள அவரை கவனித்துக் கொள்வதோடு, மூன்று குழந்தைகளையும் எட்வர்ட்டின் தந்தை வளர்க்கிறார். தாய் வித்தியாசமானவர் என்று உணர்ந்தாலும், என்னவென்று சரியாகத் தெரியாத எட்வர்ட்டிடம் (eccentric என்றே அவரும் சரி மற்றவர்களும் சரி நினைத்துக்கொள்கிறார்கள்) அவனுக்கு 14 வயதானப் போது அவன் தந்தை அந்த விபத்தைப் பற்றிக் கூறி “What I’ve said changes nothing, absolutely nothing,..” என்று முடிக்கிறார். அப்போது கூட தாயை அவன் அணுகும் கோணத்தில் எதுவும் மாற்றமிருக்க கூடாது என செய்வது செய்வது அவர் மனைவி மேல் உள்ள காதல் மற்றும் திருமண உறவு குறித்து தனக்குள்ள கடமை என அவர் உணரச் செய்யும் பொறுமை. எட்வர்ட் மற்றும் ப்ளாரன்ஸ்ஸிடையே ஆழ்ந்த நேசம் உள்ளது என்பதற்கான அத்தாட்சிகள் நாவல் முழுதும் உள்ளன. பொறுமையும் ஓரளவுக்கு உள்ளது என்பதை நாவலில் காண்கிறோம். ஆனால் கொந்தளிப்பான நேரத்தில் அதை அணைக்கும் பொறுமை?
அந்தப் பொறுமை மட்டுமிருந்திருந்தால் அவர்கள் காதல் எந்தப் பிரச்சனையையும் எதிர்கொண்டு வென்றிருக்கக் கூடும். ஆனால் கணித சூத்திரம் போல் வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்தால் அந்தியில், கடற்கரையில் சரிந்த மரத்தின் மீது தனிமையில் சாய்ந்திருக்கும், பிறகு விவாதம் முற்றி, சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்து, நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையில்
… certain in her distress that she was about to lose him, she had never loved him more, or more hopelessly, and that the sound of his voice would have been a deliverance, and she would have turned back….
என்று பெருங்காதலோடு, தன்னை ஆற்றுப்படுத்தும் ஒரு இன்சொல்லுக்காக ஏங்கி அந்தக் காதலை விட்டுப் பிரிந்த நேசத்திற்குரிய இளம் பெண்ணிற்கும் , அவள் விலகிச் செல்லச் செல்ல சிறு புள்ளியாகி, அந்தியின் ஒளியோடு கலப்பதை எதுவும் செய்யாமல்/செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்க்குரிய இளைஞனுக்கும்
இலக்கியத்தில் ஏது இடம்?
இலக்கியத்தில் ஏது இடம்?
No comments:
Post a Comment