Monday, June 27, 2016

அந்தரங்க வாசிப்பின் துணைக்கருவிகள்

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/06/19/ancillary-instruments/)
---
உணர்தல், உணர்வதை புரிந்து கொள்ள முயலுதல், பிறகு ஏன் அவ்வாறு உணர்ந்தோம்/ புரிந்து கொண்டோம் என இன்னும் உள்நோக்கி செல்லுதல் என்பது வாசகன் எந்தவொரு கலைப்படைப்பையும் உள்ளுணர்வும் தர்க்கமும் சார்ந்து அணுகும் முறையில் ஒன்றாக இருக்கலாம். வாசிப்பு முதன்மையாக, அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே இருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு மட்டுமாக இருந்தால், வாசிப்பின் நாம் அறிந்திராத பல பாதைகளில் பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டாது. அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான செவ்வியல் ஆக்கங்களை வாசிக்க -படைப்பு எழுதப்பட்டுள்ள மொழியில் மட்டுமின்றி சமூகத்திலும், விழுமியங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் – இலக்கிய பதிப்புக்களின் துணை முக்கியத்துவம் பெறுகிறது.
ஷேக்ஸ்பியரின் 5வது சானட்டில் உள்ள
Beauty o’er-snowed and bareness every where:
Then were not summer’s distillation left,
A liquid prisoner pent in walls of glass,
Beauty’s effect with beauty were bereft,
Nor it, nor no remembrance what it was:
வரிகள். கண்ணாடிக் குவளையில் திரவத்தை ஊற்றி வைப்பது போல் அழகை பொத்தி வைத்து, அழகின் சாரத்தையேனும் அழியாமல் காப்பாற்ற முடியும் என்பதாக இவற்றை ஒரு பொது இலக்கிய வாசகன் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் , ‘கைதி’ என்று சுட்டுவதன் நோக்கம் என்ன, அப்படிச் சிறைபிடித்தாவது அழகை பாதுகாக்க வேண்டுமா, அப்படி செய்வது அறம் சார்ந்ததா போன்ற கேள்விகளையும் அவன் எழுப்பக் கூடும்.
ஷேக்ஸ்பியரின் 19வது சானட்டின்
“Pluck the keen teeth from the fierce tiger’s jaws,
And burn the long-lived phoenix in her blood;”
வரிகளில் Phoenix பறவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து (Phoenix பறவை குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்தபின் புத்துயிர் பெறுவதாக பொதுவான ஐதீகம் உள்ளது), காலம் அழகை எத்தனை முறை அழித்தாலும் அது மீண்டும் உயிர்கொள்ளும் என்று புரிந்து கொள்ளலாம்- ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 18வது சானட்டில்
“Nor shall Death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;
So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee. “
என்று சொல்லி இருப்பது போல் கவிஞனின் எழுத்தில் கிடைக்கும் இறவாமையால்- என்பதாக வாசகன் நேரடி வாசிப்பில் புரிந்து கொள்ள முடியும்.
ஷேக்ஸ்பியரின் சானட்கள் குறித்து பல கோணங்களில் விளக்கங்களை முன்வைக்கும் பதிப்புகள் பல வந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக சொல்லப்படும் ஒன்றான John Kerrigan பதிப்பில் மேலே பார்த்த 5ஆம் சானட்டின் வரிகளை அவர் இப்படி விளக்குகிறார்: ரோஜா நீர் கண்ணாடி குவளையில் இருப்பது என்பது திருமண பந்தத்தின் தூய்மையின் பாதுகாவலாக, அக்குவளை உடைவது அப்பந்தத்தை கெடுக்கும் ஒன்றின் உருவகமாக ஷேக்ஸ்பியருக்கு முன்னர் Arcadia என்ற நூலில் உபயோகிக்கப்பட்டது. இப்போது வாசகனுக்கு அந்த வரியின் இதுவரை தான் அறிந்திராத பொருள் தெரிய வருகிறது. மணவுறவு என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், அதில் ‘பெண்ணின்’ இடம், அவளிடம் எதிர்பார்க்கப்படும் ‘தூய்மை’ இவற்றையே ‘Arcadia’ சுட்டுகிறது என்றும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த உருவகத்தை ஷேக்ஸ்பியர் எப்படி மாற்றுகிறார் – திருமண பந்தத்தின் பாதுகாவல் என்ற அர்த்தத்தை மாற்றி, குவளை என்பது கருவறையை சுட்டுவதாக, அதாவது அழகின் எச்சமேனும், தலைமுறைகள் தோறும் வாரிசுகளால், வழித்தோன்றல்களால் காப்பாற்றப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுவதாக புரிந்து கொள்கிறான். இப்போது அவ்வரிகள் குறித்த இரு புதிய திறப்புக்கள் மட்டுமின்றி, பழமையை புத்தாக்கம் செய்யும் ஷேக்ஸ்பியரின் எழுத்தாளுமை பற்றிய புரிதலும் கிடைக்கக்கூடும்.
அதே போல் 19ஆம் சானட்டின் வரிகளையும் விரிவாசிப்பு செய்கிறார் Kerrigan. “in her blood” என்ற சொற்றொடர் “to be in blood” என்பதின் அதாவது “to be in one’s prime” என்று அர்த்தம் கொள்ளத்தக்க சொற்றொடரின் மருவல் என்று விளக்குகிறார். இப்போது இந்த வரிகளை, Phoenix பறவையை (அழகை) அழிக்க, காலம் 500 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் அதை அழிக்க முடியும் என்ற பொருளில் வாசிக்க வாய்ப்புள்ளது. Phoenix (அல்லது அது இக்கவிதையில் சுட்ட வரும் அழகு) இப்போது காலத்தை வெல்லும் பறவை மட்டும் அல்ல. நாளை இந்த சானட்களின் பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டால், இவற்றின் உந்து சக்தியான (muse) நாயகன்/ நாயகியை உலகம் காலப்போக்கில் மறந்து விடும். அதே நேரம், ஒரு சிலரிடம் மட்டும் வாய்மொழி பதிவுகளாக இவை காப்பாற்றப்பட்டு மீண்டும் காலத்தை மீறி, உலகின் முன் வலம் வர வாய்ப்புள்ளது. இப்போது இந்தக் கவிதை இறுதியான வெற்றியோ தோல்வியோ இல்லாத – இரு தரப்பும் சமநிலையில் இருக்கும் – களத்தின் சித்தரிப்பாக வாசகனுக்கு தோன்றக் கூடும். மேலும் 5வது சானட்டில் பார்த்தது போல் வாரிசுகளாலும் அழகு தொடர்ந்து உயிர் கொண்டிருக்கும் என்றும் இந்த இரு சானட்களையும் ஒப்பிட்டு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும்.
மொழி என்றில்லை, எழுதப்பட்ட சூழல் குறித்தும் பதிப்பு நூல்களில் இருந்து வாசகனுக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் குறித்து எந்த வாசிப்பும் செய்திராத ஒருவரிடம் அவரின் சானட் தொகுதியைக் கொடுத்தால், அனைத்து சானட்களும் கவிஞனின் உத்வேகமாக (muse) இருந்த ஏதோ ஒரு பெண்ணை முன்னிறுத்தி எழுதப்பட்டவை என்றே முடிவுக்கு வருவார். எனவே, இந்தத் தொகுதியில் 126 சானட்கள் ஒரு இளைஞனை நோக்கி எழுதப்பட்டவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவருக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். இந்தப் புரிதல் அவருடைய வாசிப்பில், அவர் முதலில் இந்தக் கவிதைகளில் உணர்ந்ததில் எந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது யோசிக்கத்தக்கது. ஷேக்ஸ்பியரை பாதித்த படைப்புக்கள்/ எழுத்தாளர்கள்,அவற்றின் தாக்கத்திலிருந்து சிறு கருவை எடுத்துக் கொண்டு முற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்புக்களை அவர் உருவக்கிய விதம் குறித்து விளக்கும் பல கட்டுரைகள்/ நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிய அறிதலும் அவரின் எழுத்தாளுமையை இன்னும் உள்வாங்க உதவக்கூடும்.
ஒரு கலைப்படைப்பை அதன் படைப்பாளி எந்த அர்த்தத்தில்/ கோணத்தில் உருவாக்கினான் என்பது குறித்தோ அதிலிருந்து தான் மிகவும் விலகிச் செல்வதைப் பற்றியோ கவலை கொள்ளாமல் அதை உள்வாங்குவதை முற்றிலும் தனக்கான ஒன்றாக மட்டுமே வாசகன் அணுகக் கூடும். செவ்வியல் படைப்புக்களைப் பொருத்தவரை, ஒரு படைப்பிற்கே பல பதிப்பாசிரியர்கள்/ தொகுப்பாசிரியர்கள் உள்ளார்கள். அவரவர்களின் அழகியல், கருத்தியல் கோட்பாடு சார்ந்து பல்வகைப்பட்ட பார்வைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றோடு சேர்த்து செவ்வியல் ஆக்கங்களை படிக்கும்போது, தன் வாசிப்பின் சுயத்தை கொஞ்சமேனும் விட்டுக் கொடுக்காமல் பன்முக வாசிப்பை உள்வாங்குவது சாத்தியம் அல்ல. அப்படி விட்டுக் கொடுக்கும்போது பல புதிய உலகங்கள் அவன் முன் தோன்றுகின்றன, அவற்றினுள் செல்ல தான் உருவாக்கிய உலகை விட்டு அவன் தற்காலிகமாகவேனும் நீங்க வேண்டியுள்ளது. அதே நேரம் தன் அழகியல் மற்றும் உணர்வுத்திறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை அவன் கொள்ள வேண்டியதில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தவாறே மற்ற கோணங்களின் சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதும், சில நேரங்களின் தன் முந்தையை நிலைபாட்டை மாற்றிகொள்வதும் கூட அவன் வாசிப்பு ஆளுமையையை இன்னும் மெருகேற்றவே செய்யும்.
பின்குறிப்பு:
பெங்குவின் வெளியீடாக வந்துள்ள ‘The Sonnets and A Lover’s Complaint’ (John Kerrigan)நூலில் இருந்து இந்த இரு சானட்களுக்கான விளக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன.