Saturday, February 5, 2011

மாதொருபாகன் - ஒரு சிறு குறிப்பு - பெருமாள் முருகன்

குழந்தைப்பேறு/குழந்தைஇன்மை பற்றி சமூகம் சார்ந்த பொது நோக்கு குறித்து, ஆணின் பார்வையிலும் பேசும் புதினம் இது. பொதுவாக  குழந்தைபேரு என்பது பெண் சார்ந்த விஷயமாக/பிரச்சனையாக பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆணின் மனவோட்டத்தை பேசும் இந்த புதினம் ஒரு வகையில் 'கங்கணத்தின்' நீட்சி என்றும் தோன்றுகின்றது. இந்த களம் தமிழ்க்கு புதிது, விரிவாக பேசப்படவில்லை என்று தான் நினைக்கின்றேன் (ஹிந்தி நாடகம் 'Surya ki Antim Kiran Se Surya Ki Pehli Kiran Tak இது பற்றியது ,தமிழில் சில சிறுகதைகள் படித்த ஞாபகம் (ரமேஷ்-பிரேம்), நியோகா முறை என்பது முன்பு வழக்கில் இருந்துள்ளது, மகாபாரதம் கூட ஆரம்பிப்பது இப்படிதானே ?)

திருமணமாகி ஒரு பத்து வருடம் கழித்து, குழந்தை இல்லாத ஒரு தம்பதியரின் கதை இது (காளி/பொன்னாயி). நாவல் காளியின் பார்வையில் மிகுதியாக சொல்லப்படுகின்றது. ஒரு இரண்டு நாட்களில் நடக்கும் நிகழ்வுகளுடன்  அதனுள் முன்னால் நடந்தவை இணைக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் முறையில் முன் பின்னாக செல்வது எனக்கு பிடித்திருந்தது. பொன்னாயியின் தாய் ஏன் அவளையும் காளியையும் வெகு நேரம் பேச விட மாட்டேன் என்கிறாள், முத்து ஏன் அன்று முழுவதும் ஏதோ வேலையாக வெளியே சென்று இருக்கின்றான், காளி ஏன் இரண்டு வருடங்களாக தன் மாமனார் வீட்டிற்கு வரவில்லை போன்ற கேள்விகள் போகிற போக்கில நன்றாக, இயல்பாக வாசகனுக்கு புரியம்படி, சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கின்றது. அதிலும் கடைசி அத்தியாயங்கள் பொன்னாயி/காளி இருவரின் மனவோட்டத்தின் படி அவர்களின் (POV ) படி சொல்லி இருப்பதால், நமக்கும் என்ன நடக்கும் என்ற பதட்டம் தொற்றுகின்றது.  பொன்னியின் POV வரும் பகுதிகள் ஒரு பெண்ணின் மனவோட்டத்தை, பாலியல் விழைவுகளை நன்றாக கூறியுள்ளன. அவளின் பதின் பருவ எண்ணங்கள் போகிற போக்கில் சொல்லப்பட்டு, வாசகனை கதை சொல்லாததையும் சிந்திக்க வைக்கின்றன. குறிப்பாக பொன்னாயி, அவள் பண்ணை வீட்டில் வேலை செய்பவன் முகத்தை, அந்த இடத்தில் காளியை வைக்க சில காலம ஆனது என்ற இடம், பல பெண்களுக்கும் இது இருக்குமல்லவா. குழந்தை என்று வரும் போது இரு வீட்டிலும் இருக்கும் தாயார்கள் ஒன்று சேர்ந்து அந்த சாமி பிள்ளை என்பதை முன்னிறுத்தும் போது, குழந்தையின் முக்கியத்துவம் சமூகத்தில் எவ்வளவு உள்ளது என்பது தெரிகின்றது. இருந்தும் காளியின் தாயார் இதற்கு ஒப்புக்கொள்வது ஒரு ஆசிரியம் தான். தன் மகன் மேல் குறை இல்லை என்று தான் பல தாய்கள் சொல்வார்கள் அல்லவா?

காளி எடுக்கப்போகும் முடிவு சூசகமாக இருந்தாலும் நமக்கு மனசைப் பிசைகின்றது. ஆனால் இது பற்றி சிறிது யோசித்த போது ஒன்று தோன்றியது. காளி மறுமணம் பற்றி நினைக்கும் போது, அவன் அதை ஒரேயடியாக ஒதுக்கவில்லை, சிந்தித்து இரண்டு பேருடன் குடும்பம் என்பது கஷ்டம் என்பதும் அவன் அதை நிராகரிக்க ஒரு காரணம், ஆனால் தன் மனைவி இப்படி நடந்தவுடன், நடப்பாள் என்று தோன்றியவுடனே அவனுக்கு அதை நினைக்ககூட முடியவில்லை. கணவன்/மனைவி, ஆண்/பெண் இருவருக்கும் உள்ள பாலியல் விழைவுகள் பற்றிய எண்ணங்கள் இன்னும் ஆண் சார்ந்தவையாக தான் உள்ளன என்று புரிந்து கொள்கிறேன். பொன்னாயி மிகுந்த ஆபத்தை குடுக்கும் கல்லை சுற்றல் போன்றவற்றை செய்வது காளி முற்றிலும் தடுப்பதில்லை, அதை ஒரு வகையில் அவன் ஏற்கின்றான்.

என்னை மிகவும் ஈர்த்தது கதையில் வரும் தொன்மங்கள் (பாவாத்தா )  பற்றிய குறிப்புக்கள் தான். அந்த காடுகள், மலைமேல் உள்ள படிக்கட்டுக்கள் பற்றி உள்ள பகுதிகள் நன்றாக உள்ளன. ஆனால் அவை பற்றி இன்னும் சொல்லி இருக்கலாம். கதை பற்றிய blurbஇல் கூறியுள்ளபடி தொன்மங்கள், வரலாறுகள் விரிவாக சொல்லப்படவில்லை. பெருமாள் முருகன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல இது பற்றி வரலாறாக அவர் எழுத வேண்டும், எழுதுவார் என்று எதிர் பார்கின்றேன்.

இது மிக சிறந்த கதையா, இது நாவலா இல்லையா, இந்த ஆண்டின் மிக சிறந்த படைப்பா என்றெல்லாம் பேசப்படுவதற்கு எனக்கு பதில் இல்லை. புத்தகம் வந்து ஒரு மாதத்திற்குள் இந்த மாதிரியான hyperbole தேவையா என்று தோன்றுகின்றது.  காலப்போக்கில் வாசகர்கள் தான் இதை தீர்மானிக்க வேண்டும். இருந்தாலும், மிகுந்த ஆரவாரத்துடன் வரும் படைப்புக்கள், brand ஆக மாறிவரும் எழுத்தாளர்கள்  இடையே இந்த மாதிரியான படைப்புக்கள் பேசப்படவேண்டும், பெருமாள் முருகன் போன்றோர் இன்னும் வாசிக்கப்படவேண்டும் என்பது என் எண்ணம். 

2 comments:

  1. Thanks a lot for Sharing Ajay.Pls do include the publisher name.

    I have read Perumal Murugan's "Koola maathaari" and "Yeru veyil" - notable thalith works in tamil.

    Thanks again.

    ReplyDelete
  2. நன்றி லேகா. இது காலச்சுவடால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கங்கணமும் படித்து விடுங்கள். (அடையாளம் பதிப்பகம்)

    ReplyDelete