Friday, February 11, 2011

கரையும் உருவங்கள் - இயலாமையின் குற்றஉணர்வு

இளமையில் வறுமை கொடியது தான். அதே அளவுக்கு, இளமையில் வேலையில்லாமல் இருப்பதையும் சொல்லலாம். (வேலை இல்லாமல் இருப்பது எப்போதும் கொடுமை தான், இருந்தாலும் இது இன்னும் கொடிது). அதுவும், வீட்டில் முதியவர்கள் வேலை செய்து கொண்டு இருக்க, தம்பி, அக்காக்கள் இருக்கும் போது வேலையில்லாமல் இருப்பது என்பது மிகவும் கொடியது தான். அப்படிப்பட்ட ஒருவனின் கதை தான், வண்ணநிலவனின் 'கரையும் உருவங்கள்'.
கதை சங்கரன் என்னும் இளைஞனின் பார்வையில், அவன் வீடு வந்து திரும்பும் ஒரு இரவில் நடப்பது. இரவில் நேரம் கழித்து வீட்டிற்கு வரும் அவன், கதவை தட்டாமலே வெளியேவே நிற்கின்றான். அவன் அக்கா அவனை பார்த்து உள்ளே அழைக்கின்றாள். அவனின்  இந்த ஒரு செயலே, அவனின் குற்றுனர்வை கோடிட்டு காட்டுகின்றது. அவன் அக்காவிற்கு இது எல்லாம் புரிகின்றது, அவனை அவள் பரிவோடு நடத்துகின்றாள்.வீட்டிற்குள் வரும் அவனுக்கு, சாப்பாடு வைக்கின்றாள், அன்பாக பேசுகின்றாள். வேலையில்லாமல் இருக்கும் சூழலில், வீட்டிலிருப்பவர்கள் கடிந்து பேசினால் கூட பரவாயில்லை தானே? நாம் அதற்கு எதிர்வினையாக கோபத்தை காட்டி நம்முடைய இயலாமைக்கு கவசமாக உபயோகிக்கலாம். ஆனால் இந்த மாதிரி அன்புடன் இருக்கும் போது, அது இன்னும் குற்ற உணர்வை பெருக்கி, நம் இயலாமை மீதே இன்னும் வெறுப்பு கொள்ளதான் செய்யும். இந்த அன்பிற்கு முன்பு நிராயுதபாணியாக தான் உணர்வோம். சங்கரனுக்கு இந்த நிலை தான், சாப்பிட கூச்சம், வீட்டில் படுக்கவே கூச்சமாக உள்ளது. இந்த உணர்வு நம்மில் பலருக்கு இருந்திருக்கும். அவன் துணியை சரி வர தோய்ப்பது கூட இல்லை, நேர்முகத்தேர்வுக்கு கூட நடந்தே செல்ல நினைக்கின்றான். அவன் அக்கா அவனை தேற்றுகிறாள். இந்த உரையாடல்கள் அனைத்தும் மிக இயல்பாக உள்ளன.ஒரு வகையில் சங்காரம், நம்மில் பலரும் தான். 
சரி, இது வரை இது நல்ல கதை தான், ஆனால், வேலையில்லா பிரச்சனை, அந்த உணர்வுகள் பற்றி பல கதைகள் வந்து தான் உள்ளன. இறுதியில் வரும் அக்கா பேசும் வார்த்தைகள் தான், இந்த கதையை அதையும் மீறி ஒரு சிறந்த கதையாக மாற்றுகின்றது. சங்கரனின் செயல்களை பார்த்து அவள் கூறுகிறாள், '... அக்கா ஒக்காந்து பத்து வருஷம் ஆச்சு. ஏதாவது ஒன்னு கொறசிருக்கேனா. ஆனாலும் நீ ரோஷக்காரண்டா', இப்படி அவள் விசும்பலுடன் கூறி கதை முடியும் போது, சங்கரனின் POVஇல்  நகரும் கதை, சட்டென்று ஒரு நொடியில் மாறி இன்னும் பல தளங்களை நமக்கு திறக்கின்றது. இது ஒன்றும், ஒ.ஹென்றி பாணியிலான, வலிந்து வரவழைக்கப்பட்ட திருப்பமோ, உச்ச நிகழ்வோ அல்ல, மிக இயல்பாக நிகழும் ஒன்றும். இறுதியில் நம்மக்கு ஏற்படும் மன உணர்வுகளை விவரிக்க முடியாது. ஒவ்வொருவரும் இப்படித்தான் நம்முடைய தனிப்பட்ட சிலுவையை சுமந்து, இயலாமையின் குற்ற உணர்வுடன் வாழ்கின்றோம். 
படித்து பல காலம் ஆகியும், மறக்க முடியாத கதை இது. சிறுகதை எழுத வேண்டும் என்றால் இந்த கதையை, வண்ணநிலவனை படிக்கலாம், தவறொன்றும் இல்லை. உள்ளொளி பயணம், தத்துவம், தரிசனம் என்றெல்லாம் படம் போடாமல் எளிமையான சிறந்த கதைகள் இவருடையது. 
வண்ணநிலவன் கதை தொகுப்பு - சந்தியா பதிப்பகம். 

5 comments:

  1. படிக்கும் ஆவலை தூண்டுகிறது.
    நன்றி.

    ReplyDelete
  2. மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்’ நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் அருமை. படித்துவிட்டீர்களா? தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.

    ReplyDelete
  3. மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்’ நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் அருமை. படித்துவிட்டீர்களா? தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.

    ReplyDelete
  4. எளிமையான சிறந்த கதைகள் பற்றிய அருமையான அறிமுகம்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete