பாமாவின் ஆக்கங்களில் பொதுவாக முக்கிய கரு, தலித்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், உட்சாதி பிரச்சனைகள், திருச்சபையிலும் அவர்களால் ஒதுக்கப்படுதல் ஆகியவையாகும். இவற்றை தவிர தலித் பெண்கள் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்கள், அடக்குமுறைகள் பற்றி அவர் பேசி இருந்தாலும் (ஊர் கூட்டத்திற்கு பெண்களுக்கு தடை போன்றவை), அவை முழு நாவலாக இதுவரை வரவில்லை. ராசாத்தி எண்ணும் ஒரு தலித் பெண் திருமணம் செய்யாமல் வாழ எண்ணும் போது அவர் எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைகள் பற்றியதே பாமாவுடைய புதிய நாவல் 'மனுஷி'.
ராசாத்தி பி.எட் படித்து ஒரு சிறிய ஊரில் ஆசிரியர் வேலைக்கு சேருவதில் இருந்து நாவல் தொடங்குகின்றது. அதற்கு முன் அவர் கன்னியர் மடத்தில் சேர்ந்ததும் பின்னர் அதிலிருந்து விலகியது சுருக்கமாக குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் இந்த நாவலை அவருடைய கருக்கு நாவலின் நீட்சியாக பார்க்க முடியும். நாவலை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். தனியாக இருக்கும் பெண் எதிர்கொள்ளவேண்டிய பாலியல் துன்புறுத்தல், வீடு கிடைப்பது போன்ற பிரச்சனைகளுடன் தினம் தினம் வேறு பல பிரச்சனைகளும் உண்டு. ஒரு புறம் வீடு கிடைப்பது கடினமாக இருக்க, இன்னொரு புறம் அவள் தனியாக இருப்பதால் அவளை வேறொரு ஊருக்கு மாற்ற எளிதாக முடிவு செய்கின்றார்கள். காரணம், அவளுக்கு வேறு இடம் செல்ல சிரமம் இருக்காது என்ற எண்ணம் தான். அவளுடைய விருப்பம் பற்றி எந்த கேள்வியும் இல்லை. அந்த மாற்றலை ராசாத்தி மறுத்தாலும், பிறகு மீண்டும் இதே நிகழ்வு நடக்கின்றது. சக ஆசிரியை குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு சிற்றூருக்கு செல்கிறாள். மேல்நிலை பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுப்பவள் ஆரம்ப பள்ளிக்கு மாற்றப்பட்டாலும், அங்கு அதிகம் தலித் மாணவர்களே இருப்பதால் ராசாத்தி இம்முறை ஒப்புக்கொள்கிறாள். அங்கும் சாதி அவளை தொடர்ந்தே வருகின்றது. வாடகைக்கு இருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அவளின் சாதியை அறிய முயல்கின்றார். அவள் சொல்லாத போதும், அதன் மூலமே அவராக யூகித்து, அவளை காலி செய்ய சொல்கின்றார். இது கிராமம் என்று மட்டுமல்ல, சிறு நகர்/பெரு நகரங்களின் நடக்கும் ஒன்று தானே. சாதியை மறைத்து தானே வாழ வேண்டி உள்ளது. அடுத்து அவர் தன் சாதியை சேர்ந்தவர் வீட்டில் குடி போகிறார். இங்கு சாதி ஒன்று தான் என்றாலும் வேறு பிரச்சனைகள். வீட்டு சொந்தக்காரர் என்ற ஹோதாவில் ராசாத்தியை அடக்க முயல்கின்றார்கள். தனியாக இருந்தவளுக்கு வீடு குடுத்தேன் என்ற இறுமாப்பு வேறு. இப்படி சாதி சார்ந்தும் சரி, பெண்ணாகவும் சரி அவர் பல இன்னல்களை எதிர் கொள்ளவேண்டி உள்ளது. அவர் ஒரு வீடு கட்ட முடிவெடுத்து கட்டி குடியேருகின்றார். இத்துடன் கதையின் ஒரு இழை முடிகின்றது.
புதிய வீட்டில் குடி வந்த பிறகு அந்த தெருவில் உள்ள பெண்கள்/ஆண்கள் மூலம் பல பிரச்சனைகள். முக்கியமாக அவளுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றிய கேள்விகள், திருமணம் செய்யாமல் இருப்பதை பற்றிய போலி அனுதாபங்கள், பின்னால் புரளி பேசுவது, உதவி என்று சென்றால் முகத்திற்கு எதிராக இன்சொல் பேசி, பின்னால் தான் ஏதோ ராசாத்திக்கு கருணை புரிந்த மாதிரி சொல்வது என்று பல சம்பவங்கள். தண்ணீர் எடுக்க சென்றால் கூட 'தனியாக தானே இருக்கீங்க, அப்பறம் தண்ணி புடிங்க' என்று சொல்கின்றார்கள். தனியாக இருந்தால் அவர்களுக்கு எதற்கு பணம் என்று அவளிடமிருந்து திருடவும் செய்கின்றார்கள். இத்தோடு குழந்தை இல்லாதவர்கள் பற்றிய, 'அவனுக்கென்ன செலவு, எதுக்கு சொத்து சேர்கின்றான்' போன்ற சொல்லாடல்களையும் நாம் சேர்த்து பார்க்கலாம். மற்றவர்கள் மனம் புண்படுமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இப்படி பலர் பேசுகின்றார்கள் அல்லவா. இதில் ஒரு முரண் நகை என்னவென்றால், ராசாத்தி பற்றி இப்படி பேசும் பெண்கள் பலரே இரு மனநிலையில் இருப்பவர்கள். ஒரு புறம் திருமணம் முக்கியம் என்று சொல்பவர்கள், இன்னொரு புறம் ராசாத்தியின் சுதந்திரத்தை பார்த்து பொறாமை கூட கொள்கின்றார்கள், 'உங்கள போல இருக்கணும் டீச்சர்' என்கின்றார்கள். சமூகத்தின் எழுதப்படாத விதிகளை மீற முடியாமல், அதே நேரத்தில் மீறுபவர்களை பார்த்து பெருமூச்சு விட்டும், புரளி பேசியும் காலத்தை கடத்துகின்றார்கள். நாவலின் இந்த பகுதியில் வரும் சம்பவங்கள் ஒரு மாதிரி இருக்கும். காரணம், பொதுவாக குடும்ப வாழ்கையில் பெண்கள் ஒரே மாதிரி இன்னல்கள் தான் அனுபவிக்கின்றார்கள். இதில் படித்த, படிக்காத பெண்கள் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. படித்த பெண்களும், தங்கள் சம்பளம், எ.டி.எம் கார்டு எல்லாவற்றையும் தங்கள் கணவனிடம் குடுத்து அவனை எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
ராசாத்தி ஒரு காத்திரமான, யதார்த்தமான பாத்திரப்படைப்பு. அவர் திருமணம் தான் வேண்டாம் என்று இருக்கின்றாரே தவிர, அவர் ஆண்களை வெறுப்பவரோ, யாருமில்லாமல் தனியாக இருக்கவேண்டும் என்று எண்ணுபவரோ இல்லை. குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பவர் அதனாலேயே சிறிய ஊரில் ஆரம்ப பள்ளியில் வேலை செய்ய சம்மதிப்பவர், சக மனிதர்கள் மேல் அன்பு கொண்டவர், அவர்களுக்கு முடிந்த அளவுக்கு உதவுபவர். ஆனால் இதை எல்லாவற்றையும் விட அவர் திருமணமாகதவர் என்பது தான் அனைவர் கண்களுக்கும் தெரிவதும், அதை சார்ந்தே அவர் குறித்த முன் முடிவுகளுக்கு மற்றவர்கள் வருவதும், அவரோடு பழகுவதும் கொடுமை. இதனால் அவர் தன் அலைவரிசையில் உள்ளவர்கள் இல்லாமல் மிகுதியும் தனிமையில் தள்ளப்படுகின்றார். தன் வீட்டில் உள்ள தொலைபேசியில் தானே பேசிக்கொள்ளும் இடம் நெகிழ்ச்சியான ஒன்று. இந்த தனிமையோ, மற்றவர்களின் குத்தல், கேலி பேச்சுக்களோ, பிற தொந்தரவுகளோ அவரை மனதளவில் சில சமயம் காயப்படுத்தினாலும், தன் முடிவில் மாறாமல், திடமாக தன் சுதந்திரத்தை, தான் நேசிப்பதை செய்வதில் உறுதியாக இருக்கின்றார். நாவலின் இறுதியில் வரும் ஒரு கனவு பற்றிய ராசாத்தியின் டைரி குறிப்பு குடும்ப வாழ்கையில் பெண்களின் நிலை பற்றிய ஒரு மிக சிறந்த கழுகு பார்வை.
இதை படிக்கும் போது எனக்கு, கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை', பொன்ன்லனின் 'மறுபக்கத்தில்' வரும் 'முத்து' ஆகிய இரண்டு பாத்திரங்கள் நினைவில் வந்த படி இருந்தன. மூன்று பெண்கள் வேறு வேறு சமூக நிலை, படிப்பறிவு, மூவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என, சமீபத்திய நாவல்களில் மிக சிறந்த பெண் பத்திரங்கள் என்று மூவரையுமே சொல்லலாம். பெண் என்ன படித்திருந்தாலும், நல்ல வேளையில் இருந்தாலும், தன் வாழ்கை பற்றிய தெரிவை அவள் தானாக செய்தால், என்னென்ன எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை அழுத்தமாக சொல்லும் இந்த நாவல் மட்டுமல்ல, பாமாவின் அனைத்து படைப்புக்களும் கண்டிப்பாக படிக்கப்படவேண்டியவை. 'விடியல்' பதிப்பகத்தில் அவருடைய அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்.