சற்றே பழைய பதிவு. சொல்வனம் இதழில் நான் எழுதும் குற்றபுனைவுகள் பற்றிய தொடரின் முதல் கட்டுரை. நன்றி solvanam.com. கட்டுரையை படிக்க http://solvanam.com/?p=19014
------------------------
Crime Fiction. குற்றப்புனைவு. இந்த வார்த்தைகள் இன்றைய நவீனத்தமிழ் இலக்கிய வாசகன் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு நேர்மறையாக இருக்காது. தமிழில் இன்று எழுதப்படும் மிகப் பெரும்பாலான குற்றப்புனைவுகள் வாசகனை மன எழுச்சிக்கு ஆளாக்கி, எளிதாக இரண்டு மணி நேரம் கடத்துவதற்கு மட்டுமே உதவி செய்கின்றன. கூர்ந்த கவனிப்போ, வாசிப்போ இவற்றைப் படிப்பதற்குத் தேவை இல்லை. ஒரு கொலை, குற்றம், ரத்தம். அதை விசாரிக்கும் சில தனியார் துப்பறிவாளர்கள். அசட்டு நகைச்சுவை. சுபம். தமிழிலேயே நேரடியாக எழுதப்பட்ட குற்றப் புனைவுகள் இப்படி என்றால், தமிழ் வாசகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் குற்றப் புனைவுகளும் வெகு குறைவு. ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், சிட்னி ஷெல்டன் போன்றவர்கள் எழுதும் த்ரில்லர்கள், அகதா க்றிஸ்டியின் நாவல்கள், ஆர்த்தர் கோனன் டாயிலின் பிரபலமான ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள், திரைப்படமாக வெளிவந்து உலகெங்கும் அறியப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் கதைகள் - இவ்வளவே. இவை தமிழ் குற்றப்புனைவுகளைக் காட்டிலும் மேலானவை என்றாலும், இன்று மேற்குலகில், குறிப்பாக ஐரோப்பாவில் குற்றப்புனைவுகள் எட்டியிருக்கும் உச்சங்கள் அசாத்தியமானவை.
ஆனால் சமீபகாலம் வரை இங்கிலாந்து, அமெரிக்காவில் கூட குற்றப்புனைவு படைப்புகள் இலக்கியமாகக் கருதப்படவில்லை. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபலமான குற்றப்புனைவு எழுத்தாளரான இயன் ரேங்கின் (Ian Rankin), தான் எழுத ஆரம்பித்தகாலத்தில், தான் செல்லும் புத்தகக் கடைகளில் Crime Fiction, Literature எனத் தனித்தனி பிரிவுகளில் வைக்கப்பட்ட புத்தகங்களை ஒரே பிரிவில் எடுத்துவைக்கும் வழக்கம்கொண்டவர். ஒரு பேட்டியில் அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்:
“நான் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தவன். நான் முதல் குற்றப்புனைவு நாவலை எழுத ஆரம்பித்தபோது பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் Ph.D செய்துகொண்டிருந்தேன். அப்போது எனக்குக் குற்றப்புனைவுகள் மீது பெரிய விருப்பம் இருக்கவில்லை. ஒரு துப்பறியும் கதை மூலம் சமூகத்தைப் பார்ப்பதும், நகரத்தைக் காட்டுவதும் நன்றாக இருக்கும் என்றே குற்றைப்புனைவாக எழுதினேன். அப்புத்தகம் வெளியானவுடன், அது புத்தகக்கடையில் ‘Crime’ பிரிவில் வைக்கப்பட்டது. அதைப் பார்த்து எரிச்சலான நான், அதை ‘Literature’ பகுதிக்கு மாற்றினேன். என் புத்தகம் நான் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும் சர் வால்டர் ஸ்காட், ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன், முரியல் ஸ்பார்க் போன்றவர்களின் புத்தகங்களோடு இருப்பதையே கெளரவமாகக் கருதினேன். அதன்பிறகு குற்றப்புனைவு புத்தகங்களைப் படித்துப்பார்த்தேன். அவை எனக்குப் பிடித்திருந்தன. நான் இந்த உலகைக் குறித்து சொல்லவேண்டிய எல்லா விஷயங்களையும் குற்றப்புனைவு வகையில் சொல்லமுடிந்தது. பிறகுதான், குற்றப்புனைவு வகையிலேயே கதைகளை எழுதினேன்.”
இயன் ரேங்கின் குறிப்பிடுவது போன்ற இலக்கியத்தரமான குற்றப்புனைவு நூல்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்துவதே இத்தொடரின் நோக்கம். ஆகவே இக்கட்டுரையில் குற்றப்புனைவு என்று நான் சொல்வதெல்லாம், நல்ல குற்றப்புனைவுகளை மட்டுமே. ஏராளமாக எழுதிக்குவிக்கப்படும் பல்ப் ஃபிக்ஷன் வகையறாக்களை அல்ல.
கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் ஒரு விஷயத்தைச் சொல்லியாகவேண்டும். நல்ல குற்றப்புனைவுகளைப் பற்றித் தமிழில் அதிகம் அறிமுகம் இல்லாத சூழ்நிலையில், இவற்றைப் பற்றி தமிழில் எழுதுவது கடினமாக இருக்கிறது. அப்படி எழுதினாலும் அதன் பின்னணியைத் தமிழ் மட்டுமே அறிந்த வாசகர் புரிந்து கொண்டு வாசிக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. அசோகமித்திரனை வாசித்தவர்களுக்கு ரேமண்ட் கார்வரின் எழுத்தை ரசிப்பது கடினமாக இருக்காது. அதேபோல் தமிழின் உயர்ந்த படைப்பாளிகளை மட்டும் வாசித்தவர்கள் கூட டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் (David Foster Wallace) எழுதுவதையும், அவர் எழுதும் சலிப்பு, வணிகமயம் போன்ற விஷயங்களையும் அதன் பின்னணியைப் புரிந்து கொண்டு படித்துவிட முடியும். ஆனால் மேற்கின் சிறந்த குற்றப்புனைவுகளை ஒப்பிட்டுப் படித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளும்படி தமிழில் சிறந்த குற்றப்புனைவுகள் எதுவும் இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை.
தமிழில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் இந்த வகை நாவல்களை முதலில் எழுதினார்கள். அவைகளில் பல ஆங்கில நாவல்களின் தழுவல்கள். (கானான் டயல் , கிறிஸ்டி ஆகியோரின் ஆக்கங்கள் அதிகம் தழுவப்பட்டன.) துரைசாமி ஐயங்காரின் ‘திகம்பர சாமியார்’ பிரபலமான கதாபாத்திரம். பிறகு தமிழ்வாணன், தேவன் ஆகியோர் வந்தனர். தமிழ்வாணன் கூட பல தழுவல் கதைகளை எழுதி உள்ளார். அவருடைய சங்கர்லாலும் புகழ் பெற்ற பாத்திரம். கதைகளின் தலைப்பும், கதை மாந்தர்களின் பெயரும் தூய தமிழில் இவர் கதைகளில் இருப்பது ஒரு சிறப்பு. (’மணிமொழி நீ என்னை மறந்து விடு’) தேவனுடையது பகடி சார்ந்த கதை போக்கு. சாம்பு ஒரு bumbling amateur detective என்றளவில் வித்தியாசமான படைப்பு. அவருடைய ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன் ‘ ஒரு ‘court room drama’. இந்த வகை கதை சொல்லல் தமிழில் அதிகம் இல்லை என்றுதான் நினைக்கின்றேன். பிறகு சுஜாதா ‘நைலான் கயிற்றுடன்’ வந்தார். அதைத் தொடர்ந்து ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், சுபா, பட்டுகோட்டை பிரபாகர், ஆர்னிகா நாசர், புஷ்பா தங்கதுரை போன்றோர் வந்தனர். எண்பதுகளின் இரண்டாம் பகுதி மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பம் இவர்களின் பொற்காலம் எனலாம். இந்த ஆக்கங்களின் ஒரு பொதுவான அம்சம் என்னவென்றால், அவை குற்றம்/புலனாய்வு/குற்றவாளியைக் கண்டுபிடித்தல் என ஒற்றை தன்மையுடன் இருக்கும். படிப்பவனுக்கு குற்றம் பற்றி படிக்கின்றோம் என்ற எண்ணத்தை விட குதூகலமே இருக்கும். இது ஒன்றும் முற்றிலும் தவறென்று சொல்லவில்லை, ஆனால் நாம் இந்த வகை நாவல்களின் சாத்தியங்களை பரிசோதிக்காமலேயே இருந்து விட்டோம் என்பதைத்தான் இவை காட்டுகின்றன. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்/குற்றவாளி/புலனாய்வு செய்பவர் மூவரும் மனிதர்கள், அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை, அவர்கள் சார்ந்த சமூக சூழ்நிலை அவர்களை எப்படி பாதித்தது, என்பதெல்லாம் இருக்காது. சில பழிவாங்கும் கதைகளில் மேலோட்டமான வாழ்கைச்சித்திரம் கிடைக்கும், அவ்வளவுதான். இதற்கு விதி விலக்குகள் இருக்கலாம், ஆனால் பெரும்பாலான படைப்புகள் அப்படிதான் உள்ளன. மாதநாவல் மற்றும் தொடர்கதை வடிவங்கள் கூட இப்படி மேலோட்டமான குற்றப்புனைவுகளுக்குக் காரணமாக இருக்கலாம். ஒரு மாதத்திற்கு ஒரு கதை என்றால் எழுத்தாளர் அதற்குள் கதையை எவ்வளவுதான் விரிவாக, ஆழமாகக் கொண்டு செல்ல முடியும்? தொடர்கதையிலும் இதே சங்கடம்தான். தீபாவளியில் ஆரம்பித்து ஒரு தொடரை ஏப்ரல் மாதத்தில் முடிக்க வேண்டும் என்றால் அதற்குள் அடங்கும்படிதானே எழுதமுடியும்?
குற்றப்புனைவு குறித்து அறிந்து கொள்ளப்பட வேண்டிய பின்னணித் தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ஓரிரு கட்டுரைகளில் பேசிவிட முடியாது. இந்த நாவல்களின் நுட்பங்களை ரசிக்க, குற்றப்புனைவின் இயல்பு குறித்தே ஒரு பொதுவான புரிதல் தேவைப்படுகிறது. நோய்டாவில் நடந்த ஆருஷி மற்றும் நிதாரி கொலை வழக்குகள் நம்மில் பலருக்கு ஞாபகமிருக்கும். அதைப் பற்றி ஊடகங்கள் எவ்வளவோ எழுதி விட்டன. உண்மையைச் சொல்லுகின்றவை என்று மார்தட்டிக்கொள்ளும் ஊடகங்களே இந்த வழக்குகளை வெற்றுப் பரபரப்பாகத்தானே பார்த்தார்கள்? அதிலும் ஆருஷி வழக்கில் ஊடகங்களே வழக்கையும் நடத்தி தீர்ப்பையும் சொல்லிவிட்டன. பின்னர் அதற்காக நீதிமன்றத்தால் கண்டிக்கவும்பட்டன. இவர்களே இப்படி இருக்கையில் இது போன்ற சம்பவங்கள் குறித்த புனைவுகளில் இன்னும் மோசமாக ரத்தம், வன்முறை, விபரீத உறவு போன்றவற்றைத்தான் வாசகர்கள் எதிர்பார்க்கக்கூடும். ஆனால் ‘நல்ல’ குற்றப்புனைவுகள், கொலை செய்யப்பட சிறுவர்/சிறுமியர் வாழ்க்கை குறித்து பரிவோடு பார்க்கும். அவர்களின் கனவுகள், அவர்கள் வருங்காலம் மேல் அவர்கள் குடும்பத்தார் வைத்திருந்த நம்பிக்கைகள், ஆசைகள், அந்த கனவுகளின் நொறுக்கம் இவை பேசப்படும். குற்றம் செய்தவரை பரிவோடு பார்க்காவிட்டாலும், அவருடைய வாழ்க்கை, மனநிலை ஆராயப்படும். குற்றத்தைத் தீர்க்கும் காவல் அதிகாரியின் மனோநிலை, தீவிரம், காவல்துறையின் செயல்பாட்டு அமைப்பு, அதை இயக்கும் அரசு இயந்திரத்தின் வழிமுறைகள், குறுக்கீடுகள், ஊடகங்களின் கோமாளித்தனங்கள், குற்றம் நடந்த ஊரின் அரசியல், சூழ்நிலை, முக்கியமாக ஊரின் அமைப்பு, தெருக்கள், அந்த ஊர் செயல்படும் விதம் - இவையெல்லாம் பேசப்படும். ஒரே படைப்பில் இவை அனைத்தும் இல்லாவிட்டாலும், இவற்றில் பெரும்பாலானவையாவது இருக்கும்.
குற்றப்புனைவுகளின் ஆரம்பம் என்று பார்த்தால் வில்கி காலின்ஸ் (Wilike Collins’s Moonstone), எட்கர் அல்லன் போ (Edgar Allan Poe’s ‘The Murders in the Rue Morgue’) போன்றவர்களை ஆங்கிலத்தில் சொல்லலாம். இருவரையும் இவ்வகைக் கதைகள் மட்டுமே எழுதியவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவர்கள் கதைகளில் இவ்வகையின் கூறுகள் உள்ளன. சீனாவில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ‘ஜட்ஜ் டீ’ (Judge Dee) என்ற நீதிபதி ஒருவர், குற்றத்தை விசாரிக்கும் கதைகள் எழுதப்பட்டன.
குற்றப்புனைவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன. உதாரணத்துக்கு போலீஸ் ப்ரோசிஜூரல் (Police Procedural) என்ற ஒரு தனி வகை இருக்கிறது. அந்த போலீஸ் ப்ரோசிஜூரல் கதைகளில் ‘டார்ட்டான் நோர்” (Tartan Noir) என்று இன்னுமொரு தனி வகைக் கதைகள் இருக்கின்றன. இக்கதைகளில் ஏகத்துக்கும் ரத்த விரயம் பேசப்படும் என்று எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவார்கள். அதே போல், இது வெறும் கொலை, ரத்தம் பற்றிதான் என்று எண்ணி இவ்வகை நாவல்களைப் புறக்கணிப்பவர்களும், இலக்கியப்படைப்புகளின் ஒரு பிரிவையே இழக்கிறார்கள். குற்றப்புனைவுகளின் உட்பிரிவுகளுக்கான வரையறைகள் கறாரானவை அல்ல, நெகிழ்வனவை. ஒரு வகை கதைக்குள் மற்றொரு வகையின் தன்மை தென்படக்கூடும். இப்படிப் பிரிப்பது ஒரு சௌகரியத்துக்காக மற்றும் ஒரு அறிமுகத்திற்காக மட்டுமே. இவற்றில் அடங்காத பல படைப்புகளும் உள்ளன. உதாரணமாக இரா லெவின் (Ira Levin), ரஸ்ஸல் கிரீணன் (Russel H Greenan) போன்றோரின் கதைகளை எளிதில் ஒரு பிரிவில் அடைத்துவிடமுடியாது.
கிளாச்சிகல் பிரிட்டிஷ் மிஸ்டரி (Classical British Mystery) - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதி காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகளின் பாணி. உதாரணமாக, பூட்டிய அறைக்குள் கொலை, ஒரு வீட்டிலோ, தீவிலோ ஒரு குழு மாட்டி கொலை செய்யப்படுவது போன்ற கதைகள் இவை. ஆர்த்தர் கோனண்டோயில், அகதா கிறிஸ்டி போன்றவர்களின் கதைகள் இவ்வகையில் வரும். இக்கதைகளில் ஒரு தனியார் துப்பறிவாளர்,அறிவு ஜீவி இருப்பார். குற்றங்களை மனக்கணக்கு மூலமே அதிகம் கண்டுபிடிப்பார். இதை ஹூடன்னிட் (whodunnit) என்றும் சொல்லலாம். இதே பாணியில் இப்போதும் கதைகள் வருகின்றன.
ஹார்ட்பாயில் க்ரைம்/நோயர் (Hardboiled Crime/Noir) - ரேமண்ட் சேண்ட்லர் (Raymond Chandler), டாஷ்யெல் ஹம்மெட் (Dashiell Hammett) போன்றோரின் கதைகள் இந்த வகையில் வரும். இதிலும் ஒரு தனியார் துப்பறிவாளர் இருப்பார். ஆனால் அவரின் பாத்திரப்படைப்பு வேறு மாதிரி இருக்கும். அவர் தனிமை விரும்பி (loner), எந்த பந்தங்களும் இல்லாதவர், எந்த நெருக்கடியையும் அதிராமல் சமாளிப்பவர். இவ்வகைக் கதைகளில் வன்முறை சற்று அதிகம் இருக்கும். ஒரு மர்மப் பெண் (Femme Fatale) இவ்வகைக் கதைகளில் முக்கிய பங்கு வகிப்பார்
வரலாற்றுக் குற்றப்புனைவு (Historical crime) - கதைகள் கடந்த காலத்தில் நிகழும். பால் டோஹெர்ட்டி (Paul Doherty) எழுதும் நாவல்களை இதில் சேர்க்கலாம். அவரின் கதைகள் பதிமூன்று/பதிநான்காம் நூற்றாண்டுகளில் நடக்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றி அமைந்தவை. ஒரு அளவில் அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றிய சித்திரத்தை இவை அளிக்கும்.
மனவியல் சார்ந்த குற்றப்புனைவு (Psychological crime) - மனதின் இருண்ட பக்கங்கள் மீது அதிகம் கவனம் செலுத்துபவை. இதில் போலீஸ், துப்பறிகின்றவர் என்று இருப்பதை விட, சாதாரண மனிதர்கள் தங்கள் மனத்தின் இருண்மை காரணமாகக் குற்றம் புரிவதையும், அதை அவர்களால் பாதிக்கப்படுவர்கள் எதிர்கொண்டு தீர்ப்பதையும் பற்றி அதிகம் இருக்கும். ருத் ரெண்டல் (Ruth Rendell) என்பவர் இவ்வகை நாவல்கள் எழுதுவதில் வல்லவர். இந்தப் பெயர் மற்றும் பார்பாரா வைன் (Barbara Vine) என்ற இன்னொரு பெயரிலும் அவர் எழுதுகிறார்.
போலீஸ் ப்ரோசிஜூரல் (Police Procedural) - நாம் இந்தத் தொடரில் பேசவிருக்கும் புதினங்கள் போலீஸ் ப்ரோசிஜூரல் (Police Procedural) என்றழைக்கப்படும் உட்பிரிவைச் சேர்ந்தவை. இவ்வகைக் கதைகளை உருவாக்கியவர்கள் என்று தீர்மானமாக யாரையும் சொல்ல முடியாதென்றாலும் எட் மெக்பெய்ன் (’Ed McBain’- அமெரிக்கா) மற்றும் மய் ஷ்யோவால் - பெர் வாலூ தம்பதியினர் (Maj Sjöwall and Per Wahlöö - ஸ்வீடன்), ஆகிய இருவரையும் இதன் முன்னோடிகளாகச் சொல்லலாம். அவர்களையடுத்து இவ்வகைக் கதைகளில் பெரும்பாதிப்பு ஏற்படுத்தியவர் ஹென்னிங் மான்கெல் (Henning Mankell). மார்க்வெஸ்சுக்குப் பிறகு லத்தீன அமெரிக்க எழுத்தில் காணப்பட்ட உத்வேகம் போன்ற ஒன்று மான்கெலுக்குப் பிறகு இவ்வகைக் கதைகளில் ஏற்பட்டது.
இன்றைக்கும் சிறந்த போலிஸ் ப்ரோசிஜுரல்கள் ஸ்காண்டிநேவிய நாடுகளில்தான் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்காண்டிநேவிய நாட்டிலும் ஒரு முக்கியமான எழுத்தாளர் இவ்வகைக் கதையை எழுதுபவராக இருக்கின்றார். அதை அடுத்து இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் போலீஸ் ப்ரோசீஜூரல்கள் அதிகம் எழுதப்படவில்லை என்று சொல்லலாம். மைக்கேல் கான்னெலி (Micheal Connely), ஜேம்ஸ் எல்ராய் (James Ellroy) ஆகிய இருவரும் எழுதுகிறார்கள் என்றாலும், அங்கே தொடர்கொலை (Serial Killer) நாவல்கள்தான் அதிக அளவில் எழுதப்படுகின்றன. இவற்றைத் தவிர மத்தியகிழக்கு, ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் இருந்து இப்போது இவ்வகை நாவல்கள் வர ஆரம்பித்துள்ளன. இந்த உலகளாவிய வளர்ச்சி ஒரு பக்கம் இருக்க, இவ்வகையின் வாசகர்களின் எண்ணிக்கை கூடக் கூட, இதில் அசம்ப்ளி லைன் தயாரிப்புகள் போல் புத்தகங்களும் பதிப்பாக ஆரம்பித்து விட்டன.
குற்றப்புனைவுகளில் போலீஸ் ப்ரோசீஜூரல்களுக்கு என்றிருக்கும் தனித்துவ அடையாளத்தை உணர்த்தும் ஒரு சிறு அறிமுகம் மட்டுமே இது. இந்தத் தொடரில் நான் படித்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றிதான் எழுதப்போகிறேன்.
இவ்வகையின் சிறப்பியல்புகளாகச் சிலவற்றை சொல்லலாம்:
1. இங்கு குற்றம் செய்தது யார் என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ, அதே அளவுக்குப் பிற விஷயங்களும் முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. குற்றம் ஏன் நிகழ்ந்தது, குற்றத்தால் பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தையும், ஏன், குற்றவாளியையுமே அந்தக் குற்றம் எப்படி பாதிக்கிறது என்பனவும் சம அளவு முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு பதின்பருவத்துப் பெண் கொலை செய்யப்படுகின்றாள். அவளுடைய பெற்றோரை அது எப்படி பாதிக்கிறது? அந்த துயர நிகழ்வுக்காக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதளவிலும் சில சமயம் நேரடியாகவும் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். (கணவன் வேலை என்று அலைந்து கொண்டிருந்தார் என்று மனைவியும், மனைவி பெண்ணை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்று கணவனும்). இந்த பிணக்கு பெரிதாகி ஒரு கட்டத்தில் அவர்கள் விவாகரத்தும் பெற்று விடுகின்றனர். இப்படி ஒரு சம்பவத்தால் அதில் நேரடியாக பாதிக்கப்படுபவர் மட்டுமின்றி, ஒரு குடும்பமே முழுமையாக சிதைந்து போய்விடுவதை இவை காட்டுகின்றன.
2. வழக்கைப் புலன் விசாரணை செய்பவர்கள், வாழ்க்கை பற்றிய சித்தரிப்புகள். இவ்வகைத் தொடர் நாவல்களில் ஒரு கதாபாத்திரம் அல்லது சில பாத்திரங்கள் தொடர்ந்து இடம் பெறுவதால் அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களும் நிறைய இருக்கும். இதன் மூலம் ஒரு வாழ்க்கைச் சித்திரமே நமக்கு கிடைக்கின்றது. உதாரணமாக, ஒரு தொடரின் முதல் நாவலில் இன்ஸ்பெக்டர் மணமானவர், அவருக்குத் தன் மனைவியுடன் பிணக்கு இருக்கிறது. அடுத்து வரும் நாவல்களில் இந்தப் பிணக்கு அதிகமாகி, விவாகரத்தாகி, பின்னர் இன்னொரு பெண்ணிடம் நட்பு ஏற்படுகின்றது. பொதுவாக இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, வேலைப்பளு காரணமாக நன்றாக இருப்பதில்லை. மனைவி/குழந்தைகளுடன் நல்ல உறவு கிடையாது. பலர் விவாகரத்தானவர்கள். மகன்/மகளுடன் பல ஆண்டுகள் பேசாமல் இருப்பவர்கள், தனிமையில் உழல்பவர்கள். தங்களால் கண்டுபிக்க முடியாமல் போன வழக்குகளின் நினைவுகளால், இறந்து போனவர்களின் நினைவுகளால், துரத்தப்படுபவர்கள். அதை மறக்க மதுவை நாடுபவர்கள், அதற்கு அடிமை ஆனவர்கள் என்றும் சொல்லலாம். குற்றவாளியைக் கண்டுபிடிப்பதின் மூலம் ஏதோ ஒரு வகையில் தங்கள் இருப்பின் அவசியத்தை உறுதிப்படுத்திக்கொள்பவர்கள். ஒரு புல் டாக் (Bull Dog) மனநிலையுடன் விடாப்பிடியாக விசாரணை செய்வார்கள். இதை அறச்சீற்றம் என்று சொல்ல முடியாது. குற்றங்களை கண்டுபிடிப்பதின் மூலம் ஏதோ ஒரு நிறைவு (closure) அவர்களுக்குக் கிடைக்கின்றது.
3. புலன் விசாரணை நடக்கும் முறை: விசாரணை செய்பவர்கள் அறிஜீவிகள் அல்ல, மனதிற்குள்ளேயே அனைத்தையும் கண்டுபிடித்து, பின்னர் குற்றவாளியை எதிர்கொண்டு, குற்றவாளிகளும் தன் குற்றத்தை எந்த வித ஆதாரமும் (material evidence) இல்லாமல் ஒப்புக்கொள்வது எல்லாம் இதில் கிடையாது (Poirot, Holmes போல் இல்லை). பல பேரை விசாரிப்பது, (சில சமயம் மீண்டும் மீண்டும் ஒரே ஆளை), வீடு வீடாகச் சென்று தகவல்கள் சேகரித்தல் என்று கதை செல்லும். அந்த சாட்சிகளை, அலிபிகளை (alibi), சீர்தூக்கி, ஆதாரங்கள் சேகரித்து பின்னரே ஒரு முடிவுக்கு வருவார்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வழக்குகளை விசாரணை செய்ய வேண்டி வரும் சூழ்நிலையும் உண்டு. இதன் நடுவே அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள். சில சமயம் அவர்களும் தவறு செய்வதுண்டு, அதனால் வேறு சிலர் பாதிப்படைவதும் உண்டு, அது தேவையற்ற வன்முறையிலும், மரணத்திலும் கூட சென்று முடியலாம்.
4. குற்றத்தைப் பற்றி பேசுவதோடு இந்தப் புனைவுகள் மிக நுட்பமாகத் தங்கள் சமூகத்தை விமர்சிக்கின்றன, சமூகத்தில் நடக்கும் மாற்றங்களைப் பதிவு செய்கின்றன. நாவல்களின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மத்திய வயதுடையவர்கள், தங்கள் நாடு/நகரத்தில் நடக்கும் மாற்றங்களை நேரடியாகப் பார்த்து, அனுபவிப்பவர்கள். ஒரு இருபது வருடம் முன்பு நிலை இப்படி இல்லையே, குற்றங்கள் பெருகி வருகின்றனவே என்று இந்த மாற்றத்தை தடுக்க முடியாமலும், ஒப்புக்கொள்ள முடியாமலும் தவிப்பவர்கள். ஒரு சமூகத்தில் பெருகி வரும் வன்முறை பற்றிய சித்திரம் நமக்கு இதன் மூலம் கிடைக்கின்றது. இன வெறி பற்றியும், போர்க்கால குற்றங்கள் பற்றியும் இவை பேசுகின்றன. ஒரு நகரத்தை, அதன் தெருக்களை, வானிலையை , முக்கிய இடங்களை இவை நுணுக்கமாக விவரிக்கின்றன. ஒரு தொடரைத் தொடர்ந்து படித்தால், அது நடக்கும் நகரம் கூட பல நேரங்களில் ஒரு பாத்திரமாகி விடும். அசோகமித்திரனின் செகந்திராபாத், மார்க்வெஸ்ஸின் புனைவுலக மொகோண்டோவும் (Mocondo) வாசகனுக்கு எவ்வளவு நேசத்துக்குரியதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மான்கெல்லின் (Mankell) ஸ்வீடனும், இயஸ்தாத் (Ystad) நகரும் நெருக்கமாக இருக்கின்றன.
பெரும்பாலும், இவ்வகைப் புனைவுகள் ஆண்டுக்கு ஒன்றாக அல்லது ஒரு நாவலுக்கு பல ஆண்டுகள் எடுத்து, அதன் எழுத்தாளரால் எழுதப்படுகின்றன. அவற்றை அவை வெளி வரும்/வந்த வரிசையிலேயே படிப்பது விரும்பத்தக்கது. ஆனால் பல சமயம் நமக்குக் கிடைக்கும் புத்தங்கள் அந்த வரிசையில் இருக்காது. மொழிபெயர்ப்பே சில சமயங்களில் வேறு வரிசையில்தான் நடக்கின்றது. நான் கூட வரிசை மாற்றிதான் சில தொடர் நாவல்களைப் படித்தேன், சில நெருடல்கள் தவிர வேறு சிரமம் இல்லை. ஒரே சம்பவம் இரு வேறு நாவல்களில் அதிக அளவில் பேசப்படுவதில்லை என்றாலும், தொடரில் முதலில் வரும் நாவலில் வரும் சம்பவங்கள் சில சமயம் பின் வரும் நாவல்களில் குறிப்பிடப்படும். மேலும் முக்கியமான பாத்திரங்களின் வாழ்க்கை மாற்றங்கள் கூட வரிசையில் படித்தால் ஒரு கோர்வையாக இருக்கும். ஆனால் சில தொடர்நாவல்களை மட்டும் கண்டிப்பாக எழுதப்பட்ட வரிசைப்படி படிப்பதுதான் நல்லது.
இவ்வகைப் புதினங்களை எழுதிய சில முக்கியமான எழுத்தாளர்கள், அவர்கள் எழுதிய தொடர் புதினங்களின் முக்கியமான துப்பறிவாளர் கதாபாத்திரங்களின் பட்டியல் இது:
Henning Mankell/Wallander (Sweden)
Ian Rankin/Jack Rebus (Scotland)
Arnaldur Indridason/Erlunder (Iceland)
Val Mcdermid/Tony Hill-Carol Jordan (Scotland)
Fred Vargas/Adamsberg (France)
Colin Dexter/Morse (England)
Sjöwall and Wahlöö/Marin Beck (Sweden)
Ian Rankin/Jack Rebus (Scotland)
Arnaldur Indridason/Erlunder (Iceland)
Val Mcdermid/Tony Hill-Carol Jordan (Scotland)
Fred Vargas/Adamsberg (France)
Colin Dexter/Morse (England)
Sjöwall and Wahlöö/Marin Beck (Sweden)
இவர்கள் தவிர Jo Nesbo, Ake Edwardsen, Yrsa Sigurdardottir, Stuart Mcbride, Hakan Nasser என்று பலர் உள்ளனர்.
ஐரோப்பாவில் இவ்வகையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். குற்றப்புனைவுகள் மொத்ததுக்குமாக தனி அமைப்பும் (Crime writers Association) உண்டு. அது தரும் ‘Daggers award’ என்ற பரிசும் பெருமை மிக்கது.
இதுவரை இவ்வகை நாவல்களின் உட்பிரிவுகள், அதன் சிறப்பியல்புகளையும் பார்த்தோம். குற்றப்புனைவுகள் சமூகம் பற்றி பேசினாலும், கதையின் முக்கிய இழை குற்றம் அல்லது குற்றவாளியாகத்தான் இருக்கும். ஒருபோதும் அதன் முக்கியத்துவம் குறையாது. அதுதான் கதையின் உந்து சக்தி. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வேறு வகைப் புனைவுகளிலும் குற்றம் நிகழும். ஆனால் அது ஒரு தொடக்கப் புள்ளியாகவே இருக்கும். அதன் மூலம் கதை வேறு கிளைகளுக்குத் தாவி, நாவலின் போக்கே வேறு மாதிரி சென்று விடும். அவற்றை குற்றப்புனைவாகக் கருதமுடியாது.
டோன்னா டார்ட் (Donna Tartt) எழுதிய ‘The Secret History’ நாவலில் முதல் பக்கங்களில் ஒரு கொலை நடக்கின்றது, யார் கொலை செய்யப்பட்டது, யார் செய்தது இரண்டும் அப்போதே தெரிந்து விடும். மீதி நாவல் முழுக்க, கொலைக்கான காரணத்தையும், அதன் பின் விளைவுகள் பற்றியுமே பேசும். வழக்கை விசாரிப்பவர் என்று முக்கியமாக யாரும் இந்த நாவலில் கிடையாது. கொல்லப்பட்டவன், கொலையைச் செய்தவன் அனைவரும் நன்கு வார்க்கப்பட்ட பாத்திரங்கள். அதே போல் ஓர்ஹான் பாமுக் (Orhan Pamuk) எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்ற பிரபலமான நாவல், ஒரு கொலையின் மூலம், ஒரு காலகட்டத்தை, கலாசாரத்தை, மிகப்பெரும் பேரரசின் சித்திரங்களை, கலை (ஓவியம்) பற்றிய கருத்துக்களை, கலைக்கும் மதத்திற்கும் இடையே உள்ள பிரச்சினைகளைப் பேசுகிறது. ஹருகி முரகாமியின் (Haruki Murakami) பல கதைகளின் மேல் பூச்சு வடிவம், திடீரென்று மனைவி காணாமற் போதல் போன்ற ஏதோ ஒரு மர்மம்தான். அதன் மூலம் நவீன ஜப்பானின் பிரச்சினைகளை (நகர வாழ்கையின் தனிமை, உறவுகளின் சிடுக்கு) அவர் பேசுகிறார், நமக்கு வேறொரு உலகையே காட்டுகிறார். இவற்றையெல்லாம் குற்றப்புனைவுகள் என்று சொல்ல முடியாது. குற்றம் ஒரு அங்கமாக இருக்கும் இருக்கும் நாவல்கள், அவ்வளவே.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த பேட்டியில் இயான் ரேன்கின் சொல்லியிருக்கும் ஒரு குறிப்போடு இப்பகுதியை நிறைவு செய்கிறேன்:
“குற்றப்புனைவின் சிறந்த நாவல்கள் இன்று இலக்கியப் புத்தகங்கள் என்ன பேசுகின்றனவோ, அவற்றையே பேசுகின்றன. அறநெறிகளைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழலில் நிறுத்தியபின், ‘இச்சூழலில் நீங்கள் இருந்திருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என்று வாசகர்களைக் கேட்கின்றன. ‘இப்படிப்பட்ட குற்றங்கள் நடப்பதை அனுமதிக்கும் உலகில் வசிப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்கின்றன. இலக்கியத்தையும், குற்றப்புனைவையும் நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. சில சிறந்த குற்றப்புனைவுகள் சிறந்த இலக்கியப்படைப்புகளாகவும், சில சிறந்த இலக்கியப்படைப்புகள், சிறந்த குற்றப்புனைவுகளாகவும் இருக்கின்றன.”
//சில சிறந்த குற்றப்புனைவுகள் சிறந்த இலக்கியப்படைப்புகளாகவும், சில சிறந்த இலக்கியப்படைப்புகள், சிறந்த குற்றப்புனைவுகளாகவும் இருக்கின்றன.//
ReplyDeleteஇதுவே அதுவாகவும், அதுவே இதுவாகவும்.
எங்கேயோ இழுத்துச் செல்லும் எழுத்துக்கள். அவற்றைப் படிப்பதே ஒரு சுகானுபவம். ஆழ, அகல அலசிப் பார்த்து விட்டீர்கள். வாசிக்கும் வாய்ப்பைக் கொடுத்தமைக்கு நன்றி.
நன்றி சார்
ReplyDelete