Thursday, March 22, 2012

உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்

பொதுவாக தமிழில் வரும் நகரம் சார்ந்த கதைகள் குறித்து எனக்கு சில மன தடைகள் உண்டு. தங்கள் கிராமத்தை/பிறந்த ஊரை உயர்த்தி,   பிடித்து அதை சொர்கபுரியாகவும் , நகரத்தை ஒரு ஈவிரக்கமில்லா உலகமாக, எந்த வித நல்லவையும் இல்லாத இடமாக  காட்டுபவை தான் அதிகம். பிறந்த மண் சார்ந்த nostalgia அனைவருக்கும் உண்டு தான், அதற்காக தான் தற்போது வாழும் இடத்தை பற்றி கேவலகமாக பேசுவது எப்படி என்று புரிவதில்லை. நானும் ஒரு டவுனில் வளர்ந்து வேலை நிமித்தம் தான் நகரத்தில் இருக்கிறேன். எனக்கும் நகரம் முதலில் அன்னியமாக தான் இருந்தது, வளர்ந்த இடம் குறித்த எண்ணங்கள் இன்னும் என்னுள் உள்ளது, ஆனால் என்னால் சென்னையை, அதன்  இயக்கத்தை முற்றிலும் வெறுக்க முடியவில்லை.  ஏதோ ஒன்று இங்குள்ளது என்பதால்தானே அந்த இடத்தில் நாம் வசிக்கிறோம். சரி, பணம் தான் இங்குள்ளது என்று சொன்னால், உங்களுக்கு பணம் வேண்டாமென்றால் நகரை விட்டு நீங்கலாமே,அது முடியாதல்லவா.  ஒவ்வொரு இடத்துக்கும் அதன் பிரத்யேக இயல்புகளும் நல்லது/கேட்டதுகளும் உண்டு தானே, அது போல் தான் இந்த இடத்தையும் பார்கிறேன். கிராமங்களில் பிரச்சனைகளே இல்லையா என்ன. நகரத்தை, அதன் இயல்புகளை  உருவாக்குவதும் நாம் தானே. சரி இந்த பீடிகை எதற்காக? 'லக்ஷ்மி சரவணகுமாரின்' 'உப்பு நாய்கள்' நாவல் சென்னை நகரின் அவலங்களை காட்டினாலும் கிராமம் X  நகரம் மாதிரியான ஒப்பீடுகள் எல்லாம் இல்லை என்பது ஆசுவாசமாக இருந்தது. இன்னொன்று நகரம் சார்ந்த கதைகளில் இருக்கும் மத்திய தர வாழ்கை, அல்லது வார இதழ்களில் வரும் தரையில் கால் படாத பணக்கார நகரவாசிகள் என்று இல்லாமல் சென்னையின் விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து உள்ளது. முன்பு ஜே பி.சாணக்யாவின் சில சிறுகதைகளில் சென்னையின் விளிம்பு நிலை வாழ்க்கை பற்றி சில சித்திரங்கள் உண்டு. இந்த நாவலில் அது மிக உக்கிரமாக வெளிப்பட்டுள்ளது.   சென்னையில் எண்ணற்ற மனிதர்கள், எண்ணற்ற கதைகள் உள்ளது. அதில் மூன்றை இந்த நாவலில் சரவணகுமார் நம் முன் வைக்கிறார். மூன்று இழைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து சொல்லப்பட்டுள்ளது. 

ஆதம்மாவின் கதை இழை தான் மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். கடந்த சில சென்னையில் எழும்பி வரும் கட்டிடங்களை பார்பவர்களில் அதை கட்டியவர்களை பற்றி யோசிப்பவர்கள் எத்தனை பேர். சென்னை பேருந்துகளில் இப்போது வெளி மாநிலத்தவர் (கட்டிட தொழில் முதல் ஐ.டி வேலை வரை செய்பவர்கள்), அதிகம் தென்படுவது, அதனால் ஏற்படும் மாற்றங்கள், வேலைக்காக இங்கு வந்து  வாழும் வட மாநிலத்தவர் வாழ்க்கை  பற்றி நமக்கு என்ன தெரியும், குறிப்பாக மிக சொற்ப பணத்தில் ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து மிக சொற்ப பணத்தில் உழைப்பவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? நான் வசிக்கும் இடத்திற்கு எதிரிலுள்ள இடத்தில் அரசாங்கமே வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறது, மிக பெரிய project. வேலை செய்பவர்கள் வெளி மாநிலத்தவர்கள். காலை 8.30 முதல் வேலை ஆரம்பித்தால், இரவு 8 வரை நீளும். கோடையில் இன்னும் அதிகமாக இரவு பத்து மணிக்கு மேல் கூட வேலை தொடரும். ஞாயிறு மதியம் மட்டும் தான் விடுமுறை.  அப்போதும் அடுத்த வார உணவிற்கான பொருட்களை  வாங்க சென்று விட்டு  மாலையில் மூட்டையில் பொருட்களை சுமந்து வருவார்கள். இங்கு வேலை பார்ப்பவர்கள் அரசின் கொத்தடிமைகள் என்று தான் சொல்லவேண்டும். இந்த மிக முக்கியமான மாற்றத்தை   மக்கள் சக்கையாக உறுஞ்சப்படும் அவலத்தை, ஆந்திராவிலிருந்து வரும் ஆதம்மாவின் குடும்பத்தின் மூலம் சொல்கிறார் சரவணகுமார். இதை குறித்து பேசும் முதல் பதிவு (at-least one of the first works to speak on this) இது என்று நினைக்கிறேன். இந்த நாவலை படிக்கும் போது தான், வேளச்சேரி என்கௌன்ட்டர் நடந்தது ஒரு sick coincidence என்று சொல்லவேண்டும். அந்த நிகழ்வையும், அதனையொட்டி வட மாநில மக்கள்/குடியிருப்பவர் குறித்த தகவல் திரட்டுதல் போன்ற profilingஐ ஆதரிப்பவர்கள் இந்த இழையை படித்த பின் அடுத்த முறை உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தை, அதில் வேலைசெய்பவர்களை வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். (Criminal acts cannot be justified, but the state's response  too it surely have to humanistic). எத்தனை வெளி மாநிலத்திலிருந்து எத்தனை பேர் வந்து வேலை செய்கிறார்கள், என்ன பணம் கிடைக்கும். எ.டி.எம் கருவியில் பணம் எடுக்க தெரியாமல், கும்பலாக ஒருவரை சுற்றி நின்று அதன் இயக்கத்தை அப்போது தான் தெரிந்து கொண்டிருந்தவர்கள் இப்போது நினைவுக்கு வருகிறார்கள். ஆதம்மா இருவருக்குமேடையே ஏற்படும் நட்பு/உறவு மிக இயல்பாக எந்த நாடகத்தன்மையும் இல்லாமல் உருவாகுவது நெகிழ்ச்சியான ஒன்று. இறுதியில் ஆதம்மா ஊருக்கு கிளம்புவது, பிறகு ஆர்த்தி வீட்டில் இருப்பது ஒரு கிளிஷே போல் இருந்தாலும் இப்படி நடந்தால் நன்றாக தான் இருக்கும் அல்லவா. வெளி ஊரிலிருந்து  வரும் ஒரு சிறு பெண் பார்வையில் சென்னையை காண்பது, அவளுடைய reactions எல்லாமே சென்னையில் மாறி வருகிற/நாம் கவனிக்கத விஷயங்களை சொல்கின்றன. குழந்தைகள் எப்படியோ புது இடத்திற்கு பொருந்தி விடுகின்றன, ஆதம்மா தன் கிராமத்தை பற்றி நினைத்தாலும் அவள் நகரத்தை வெறுப்பதில்லை, அதை உள்வாங்கிக்கொள்கிறாள்.   

செல்வியின் இழை அடுத்தது. விளிம்பு நிலை வாழ்க்கை குறித்த பதிவுகளில் அதிகம் ஆண் சார்ந்து தான் இருக்கும். அவன் பார்வையில் தான் பெண்கள் குறித்த கதையோட்டம் செல்லும். இதில், செல்வியின் பார்வையிலே கதை செல்கிறது. பெண்களின் சிறைவாசம், பெண் கைதிகள் பழகுவது,/பிக்பாக்கெட் தொழில் அதற்கான முஸ்தீபுகள்  என நமக்கு புதிதான களங்கள். செல்வி, முத்து உறவை எப்படி சொல்லவது, "Repulsive Attraction?".  தான் சந்திக்கும் சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொண்டு, அதிகம் வருந்தி நிற்காமல் அதற்கேற்றார் போல் தன்னை 
மாற்றியமைத்துக்கொள்ளும் செல்வி நாவலின் மிக காத்திரமான பாத்திரம். முத்துவை கூட நம்மால் சரியாக கணிக்க முடியாது, ஒரு புறம் மற்ற பெண்களை தான் வசதிக்காக உபயோகித்தாலும், செல்வி மேல் அவள் கொள்ளும் dependence எதை குறிக்கின்றது. அதை வெறும் உடல் சார்ந்தது என்று கூற முடியாது. பொதுவாக இந்த நாவலில் வரும் பெண் பாத்திரங்கள், ஆண்களை விட துணிந்து முடிவெடுப்பவர்களாக, அழுத்தமானவர்களாக  உள்ளனர்.  

சம்பத்தின் இழையில் விஷயங்கள் சற்றே அதிகம் திணிக்கப்பட்டது போல் தோன்றியது. பொட்டலம் விற்பது, சம்பத்/இவாஞ்சலின் உறவு, மணி/சம்பத் அம்மா உறவு, ஷிவானி என நிறைய விஷயங்கள் இருந்தாலும் மற்ற இரு இழைகளில் கதையோட்டத்தில் இருந்த இறுக்கம்/அழுத்தம் இதில் எனக்கு அவ்வளவாக கிடைக்கவில்லை. உதாரணமாக அலைபேசியில் தன்னுடைய/மற்றவர் அந்தரங்கத்தை பதிவு செய்வது/பார்ப்பது குறித்து ஒரு சம்பவம் இந்த இழையில் வந்தாலும் அது இப்போது சமூகத்தில் நடப்பதை கொண்டு வரவேண்டும் என்று ஒரே நோக்கில் புகுத்தப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.  இறுதியில் சம்பத்/சுந்தர், சம்பத்/ஷிவானி உறவில் வரும் ஒரு பூடகத்தன்மையும் அவ்வாறே தொக்கி நிற்கிறது. இதை இப்படி பார்க்கலாம், ஆதம்மா/செல்வியின்  கதையோட்டத்தில், வெளி மாநிலத்தவரின் வாழ்க்கை/பிக்பாக்கெட் தொழில், பொருட்களை வேறு ஊர்களுக்கு கடத்துவது என அனைத்தும் அந்த இழைகளோடு  இழையோடு ஒட்டி வருகிறது, சம்பத்தின் இழையில் சம்பவங்கள்  சற்றே விலகி உள்ளது.
'யாக்கை'  சிறுகதை தொகுப்பை படித்து ஈர்க்கப்பட்டு இந்த நாவலை படித்தேன். இதுவும் ஏமாற்றமளிக்கவில்லை.  வெயிலும், வாதையும், ரத்தமும், நிணமும் முகத்திலறையும் இந்த நாவல் கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுங்கள்.  

8 comments:

  1. //ஒவ்வொரு இடத்துக்கும் அதன் பிரத்யேக இயல்புகளும் நல்லது/கேட்டதுகளும் உண்டு தானே..//

    நாடோ கொன்றோ, காடா கொன்றோ
    அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே!

    -- ஒளவையார்

    ReplyDelete
  2. //வெயிலும், வாதையும், ரத்தமும், நிணமும் முகத்திலறையும் இந்த நாவல் கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுங்கள்.//

    படித்துப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

    தடித்த பேசப்படும் நாவல்களில் கூட இல்லாத ஜீவன் இதில் இருப்பதாகத் தெரிவதால்.

    ReplyDelete
  3. இரும்புக் கரண்டி - இந்திரா கோஸ்வாமியின் புதினம் என்று நினைக்கிறேன். ஒரு பாலத்தை கட்டுமானம் செய்யும் அடிமட்டத் தொழிலாளிகள் பற்றி பேசும் படைப்பு. முக்கியமான படைப்பும் கூட... /-- at-least one of the first works to speak on this--/ இந்த வரிகளுக்காக தெரியப்படுத்தினேன்.

    திஸ்கி: புத்தகத்தை நான் இன்னும் வாசித்ததில்லை. மூத்த வாசகர் ஒருவர் பேச்சின் ஊடே தெரியப் படுத்தியது.

    ReplyDelete
  4. இரும்புக் கரண்டி - இந்திரா கோஸ்வாமியின் புதினம் என்று நினைக்கிறேன். ஒரு பாலத்தை கட்டுமானம் செய்யும் அடிமட்டத் தொழிலாளிகள் பற்றி பேசும் படைப்பு. முக்கியமான படைப்பும் கூட... /-- at-least one of the first works to speak on this--/ இந்த வரிகளுக்காக தெரியப்படுத்தினேன்.

    திஸ்கி: புத்தகத்தை நான் இன்னும் வாசித்ததில்லை. மூத்த வாசகர் ஒருவர் பேச்சின் ஊடே தெரியப் படுத்தியது.

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி. நான் தமிழ் புதினங்கள் சார்ந்து சொல்லி இருந்தேன். தமிழிலும் கூட முன்பே இது குறித்த புதினங்கள் வந்திருக்கலாம் தான்.

    ReplyDelete
  6. ஒரு பகுதியாக அங்கும் இங்கும் வந்திருக்கின்றன. என்றாலும் இது முழுமையாக பேசுகிறது.

    நகரின் அடித்தட்டு மனிதர்களைப் பற்றி ஜெயகாந்தன் ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார் (சிறுகதைகளாக). நடுத்தர மனிதர்கள் நகரத்திற்கு வந்து ஒரு அடைப்புக் குறிக்குள் வாழும் நிர்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதைப் பற்றி அசோகமித்திரன் நிறையவே எழுதி இருக்கிறார். இங்கு (ஆதம்மாவின் நிலை வேறு என்பதையும் மறுப்பதற்கில்லை. அவள் அடித்தட்டு மக்களை சேர்ந்தவள்.) வடநாட்டவர்கள் நகரத்தில் வாழும் நிலையைப் பற்றி திலீப்குமார் எழுதி இருக்கிறார். விமலாதித்த மாமல்லனையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். கூடவே தமிழ்மகன், பாலுசத்யா, விஜயமகேந்திரன், பாலபாரதி என வரிசை நீண்டுகொண்டே செல்லும். அந்த வரிசையில் லக்ஷ்மி சரவணாகுமாருக்கும் முக்கிய இடம் உள்ளது.

    நாவலின் மற்றொரு சிறப்பாகச் சொல்லவேண்டும் எனில், இது வட சென்னையில் மையம் கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெட்டுப்புலியைத் தவிர்த்து வேறெந்த நாவலும் அந்த அளவிற்கு வட சென்னையில் களம் அமைத்துக் கொள்ளவில்லை.

    ReplyDelete
  7. நீங்க சொல்வது சரி தான். திலீப் குமார் மத்திய/கீழ் மத்திய தர வாழ்க்கை பற்றி எழுதி உள்ளார். அடித்தட்டு மக்கள் என்று பார்க்கும் போது ஜி.நாகராஜன் கூட வருகிறார். நாம்அடித்தட்டு என்று பொதுவாக பதிவில் சொல்ல வரவில்லை.
    எனினும் இப்போது பதிவை மீண்டும் படிக்கும் போது நான் சொல்ல வந்தது சரியாக வரவில்லை என்று தெரிகிறது. நான் குறிப்பிட விரும்பியது கடந்த 6-7 ஆண்டுகளாக சென்னையில் பிற மாநிலத்தவர் அதிகம் புழங்க ஆரம்பித்து, கட்டிட வேலை செய்து வரும் மாற்றத்தை, ஒரு பறவை பார்வையில் கொண்டு வந்து பதிவு செய்ததை மட்டுமே.

    ReplyDelete
  8. Capturing the Zeitgeist of the current social climate, in this case the migration by immigrants and their toil here.

    This was what I intended, but got lost.

    ReplyDelete