Sunday, April 13, 2014

அதிகாரத்தின் மானுட முகங்கள் – பூமணியின் ஏட்டையாவும் ஆத்தியப்பனும்

பதாகை தளத்தில் வெளிவந்தது http://padhaakai.com/2014/03/09/poomani-police/)
--------
தினசரி செய்திகள், சொந்தங்கள்/ தெரிந்தவர்களின் அனுபவங்கள் மூலம் காவல்துறை பற்றி தெரியவருவதில் அந்தத் துறை குறித்து எதிர்மறையான கருத்துக்களே அதிகம் மக்களிடம் உள்ளன. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பற்றி திரைப்படங்கள், பல சாகச குற்றப்புனைவுகள் பொதுவாக அளிக்கும் பிம்பம், அவர்கள் எப்போதும் நீதியின்பால் நிற்பவர்கள், அதற்காக எதையும்/ யாரையும் எதிர்ப்பவர்கள், சாகசங்கள் புரிபவர்கள் என்பதாகும். இந்த ஒற்றைத் தன்மையிலிருந்து மாறுபட்ட ஆக்கங்களை மான்கெல் (Mankell) போன்றோர் தங்கள் குற்றப்புனைவுகளில் தந்திருக்கிறார்கள். ‘Ardh Sathya’ போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன. பொது இலக்கியத்தில், குறிப்பாக இடதுசாரி ஆக்கங்களில் வழிபாட்டுத் தன்மையற்ற சித்தரிப்புக்களைக் காண்கிறோம். இவற்றில் வெளிப்படும் காவல்துறை அமைப்பின் கோர முகம் அச்சுறுத்துவதாக உள்ளது- காவல்துறையினர் அரசு எந்திரத்தால் மனிதத்தன்மை அகற்றப்பட்டு (dehumanized), அவர்களே எந்திரங்களாக உள்ளனர்.
இப்படி நமக்கு கிடைத்துள்ள சித்தரிப்புக்கள் முக்கியமானவை என்றாலும் தெய்வம் X சாத்தான் என்றில்லாத மாறுபட்ட கோணத்தில் காவல்துறையினரை நெருக்கமாகச் சென்று பார்க்கும் சிறுகதைகள்/ நாவல்கள் பற்றி பார்க்கலாம். அதாவது. அவர்களை நாயக பிம்பத்தோடு வழிபடாமல், அவர்களுடைய செயல்களை நியாயப்படுத்தாமல், கதையின்/ நாவலின் முக்கிய பாத்திரங்களாக காவல்துறையினரை அமைத்து, அவர்கள் வாழ்வைப் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கும் படைப்புக்கள். சு.ராவின் ‘பிரசாதம்’ சிறுகதை நினைவுக்கு வருகிறது. இன்னும் வேறு படைப்புக்கள் இருக்கலாம், அவற்றைத் தொகுத்தால் தமிழிலக்கியம் காவல்துறை பற்றி அளித்துள்ள சித்திரம் நமக்குத் தெரியவரும்.
பூமணியின் சிறுகதைத் தொகுதியில் உள்ள ‘நாக்கு’ சிறுகதை, காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை மனம் பதைக்கும்படிச் சொல்கிறது. இதற்கு மாறாக அதே தொகுதியில் உள்ள, ஏட்டையாவும் ஆத்தியப்பனும் பிரதான பாத்திரங்களாக வரும் மற்ற சில கதைகள், காவல் துறையினரை அவர்களின் பலம்/பலவீனத்தோடு, சட்டப்படி இல்லாத, ஆனால் நடைமுறையில் அவர்களுக்கு இருக்கும் வரம்புகளோடு காட்டுகின்றன (பிரசாதம் கதையின் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு இன்னும் பல கதைகளில் வந்திருந்தால் இது போன்ற இன்னொரு சித்திரம் கிடைத்திருக்கும்).
ஏட்டையாவும் (இவர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை) ஆத்தியப்பனும் ஒரே ஸ்டேஷனில் வேலை செய்பவர்கள். ஏட்டையா வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்று நாம் யூகிக்கலாம். ஒருவருரை ஒருவர் அவ்வப்போது கிண்டல் செய்து சீண்டுவதிலிருந்து அவர்களிடையே உள்ள comfort-level மற்றும் அவர்கள் நண்பர்கள் போல்தான் பழகுகிறார்கள் என்றும் தெரிகிறது. இவர்கள் வரும் கதைகள் பூமணியின் மற்ற கதைகளைப் போலவே கனமான விஷயங்களைப் பேசினாலும், இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல்களில் உள்ள மெல்லிய நகைச்சுவையின் காரணமாக அவரின் மற்ற கதைகளைவிட இவை சற்றே இலகுவான தன்மையோடு உள்ளன.
இவர்கள் வழக்குடன் வருபவர்களையோ, பாதையோர, ரயில்வே கேட்டில் வியாபாரம் செய்பவர்களையோ அதிகார மமதையில் துன்புறுத்துபவர்களோ, அடித்துப் பிடித்து பணம் லஞ்சம் வாங்குபவர்களோ கிடையாது. அதே நேரம் முழுதும் நியாயசீலர்கள் அல்லர். ஐஸ் விற்பவன் பற்றி பேசும்போது, ஆத்தி ‘ருசியாருக்கும்’ என்று சொல்ல, ஏட்டையா “அதான பாத்தென். நம்ம ஆரத்தான் பாக்கிவச்சொம்”, என்கிறார். இது அவர்கள் அவ்வப்போது ‘அன்பளிப்பு’ வாங்கத் தவறாதவர்கள் என்பதை உணர்த்துகிறது.
ஏட்டையா தன் துறைமீதே அதிக நம்பிக்கை இல்லாதவர். தன்னிடம் வரும் பிரச்சினைகளை புகார் எதுவும் பதிவு செய்யாமல், தானே சமரசம் செய்ய இந்தக் கதைகளில் முயல்கிறார். ஒரு இடத்தில் சண்டை போட்டுக் கொண்ட இருவரை ஏன் வீட்டுக்கு அனுப்பினார் என ஆத்தி கேட்க, “போலீஸ் ஸ்டேசனுக்குப் போகச் சொல்றயா, அவங்க பட்டது போதாதுன்னு நம்மகிட்ட வேற மாட்டி சாணி தள்ளனுமா” என்று ஏட்டையா பதில் சொல்கிறார்.
ஏட்டையா முடிந்தவரை நியாயமாக சச்சரவுகளைத் தீர்க்க முயன்றாலும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர். முழு நீதி வேண்டும் என்றெல்லாம் முயலாமல், அந்தச் சூழ்நிலையில் எது நடைமுறை சாத்தியமோ அதை ஒரு சமரசத் தீர்வாக சொல்லி, அதைச் செயல்படுத்த முயல்கிறார். ‘மட்டம்’ கதையில் ஏட்டையாவின் ஊருக்கு பக்கத்து ஊரில், இரு சாதிகளிடயே கோவிலில் கும்பிடுவது பற்றிய தகராறினால் அவர்கள் ஸ்டேஷன் வருகிறார்கள். வழக்கம் போல, வழக்கு பதியாமல் பிரச்சனைக்கு ஒரு சமரச தீர்வை சொல்கிறார். கோவிலில் வழிபட தடுக்கப்படுபவர்களிடம் தங்களுகென்று ஒரு தனி கோவில் கட்டிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார், ஆதிக்க சாதி அதற்கு பண உதவி செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.
நியாயப்படி பார்த்தால் கோவிலில் யாரும் வழிபடலாம் என்பதே சரியான தீர்வாகும். ஏட்டையாவும் குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக/எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அல்லர். பிரச்சனை தீர வேண்டும் என்று மட்டுமே நினைப்பவர். நடைமுறையை நன்குணர்ந்த அவருக்கு (பூமணிக்கு) இதுதான் சரியான தீர்வாகத் தெரிகிறது (கோவில் வழிபாடு என்பது ஆன்மிகம் சம்பந்தமான இடமாக இருந்து ஒரு சாதியின் அந்தஸ்த்தை, கௌரவத்தை நிர்ணயிக்கும் இடமாக எப்படி மாறுகிறது என்பதையும், அதனால் வரும் பிரச்சினைகளையும் மிக விரிவாக பூமணி ‘அஞ்ஞாடி’ நாவலில் விவரிக்கிறார்).
சிறு வியாபாரிகள், தெரிந்தவர்கள் பிரச்சினையை இப்படி ஓரளவுக்காவது தீர்த்தாலும், அவரை மீறிய தளத்தில் சம்பவங்கள் நடக்கும்போது இதுகூட செய்ய முடியாத கையறு நிலையில் ஏட்டையா இருக்கிறார். ‘குடை’ கதையில், ஏட்டையாவுக்கு தெரிந்த பெண் ஒரு அரசு அலுவலகத்தில் கிளார்க்காக வேலை செய்கிறார். லஞ்சம் எதுவும் வாங்காமல், தன் வேலையைச் சரியாகச் செய்பவர் அவர். லஞ்சம் வாங்கி காரியம் சாதித்துக் கொடுக்கும் ஒரு பியூனை அவர் கண்டிக்க, ஆத்திரத்தில் அலுவலகத்தின் அருகிலேயே அந்தப் பெண்ணை அருவாளால் வெட்ட முயல்கிறான் அவன். இதில் அந்தப் பெண்ணிற்கு அடிபட்டு விடுகிறது. அலுவலக சக ஊழியர்கள் யாரும் உதவ வரவில்லை என்பதோடு, அப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் பற்றி அறியாதவர்கள் போல் இருக்கிறார்கள். இந்நிலையில் ஏட்டையாவால் அந்தப் பியூனை கைதுகூட செய்ய முடிவதில்லை.
‘தகனம்’ கதையில் ஊரில் சாதிக் கலவரம் வெடிக்க, ரோந்துப் பணிக்கு ஏட்டையா செல்கிறார். தான் சிறுமியாகப் பார்த்து, இப்போது மணமுடித்து இருக்கும் பெண்ணைச் சந்திக்கிறார். இறுதியில் அந்தப் பெண் கொல்லப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார். இங்கும் அவருடைய ரோந்துப் பணி என்பது ஒரு கண்துடைப்பாகவே உள்ளது . சமூகப் படிநிலையில் சம அளவிலோ, அல்லது கீழோ இருந்தால் மட்டுமே ஏட்டையாவால் எதாவது செய்ய முடிகிறது, அங்குதான் அவருடைய அதிகாரம் செல்லுபடியாகிறது . இது அவருக்கு மட்டுமல்ல, சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் எனப் படிநிலையில் ஏதோ ஒரு அடுக்கில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
கறீம்பாய் என்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மரணச் செய்தியை அறிந்து, அவர் பற்றிய ஏட்டையாவின் நினைவுகளாக விரியும் ‘நாதி’ சிறுகதை நமக்கு இன்னொரு விதமான அதிகாரி பற்றி சொல்கிறது. கறீம்பாய் கலவையான மனிதர், நிறைய லஞ்சம் வாங்கினாலும், மற்றவர்களுக்கு அதை செலவழித்து விடுபவர். அதிரடியாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடிப்பவர் (ஒரு சமயம் தான் தேடி வந்தவர்களிடமே மாட்டி தீக்காயங்கள் அடைகிறார்). அதே நேரம் தான் தேடும்/ ஏற்கனவே பகையுள்ள ஒருவனைக் கொல்லும் முடிவோடு வந்து, பிறகு தற்காப்புக்காகச் செய்தேன் என்று தப்பித்துக் கொள்பவர். நிறைய லஞ்சம் வாங்கிய, அடாவடியாகத் திரிந்த கறீம்பாயை, குடும்பத்திற்கென்று எதுவும் சேர்க்காமல், கடைசி காலத்தில் பெண் பிள்ளைகள் பீடி கம்பெனி வேலைக்குச் செல்லும் நிலையில் வைத்த, குடும்பத்தை வறுமையில் விட்டுச் சென்ற கறீம்பாயோடு ஒப்பிட முடியுமா? கறீம்பாயின் செய்கைகள் எங்கும் நியாயப்படுத்தப்படவில்லை (தவறென்றும் சொல்லப்படுவதில்லை), ஏட்டையா/ ஆத்தியப்பன் போலல்லாமல் காவல்துறையின் இன்னொரு விதமான பிரதிநிதி அவர்.
காவல்துறை பற்றி இன்று நாம் அறிந்துள்ளதைப் பார்க்கையில், திரைப்பட பிம்பங்களை நிஜ வாழ்க்கையில் எதிர்பார்ப்பதைவிட மனசாட்சிக்கு பயந்த, குறைந்தபட்ச நியாய/ கடமை உணர்வு கொண்ட, அதே நேரம் யதார்த்தத்தை மீறிச் செல்லும் துணிவு இல்லாத, தனக்கு பாதிப்பில்லாமல் முடிந்த அளவு நன்மை செய்ய வேண்டும் என்றெண்ணும் ஏட்டையா போன்ற காவல்துறை அதிகாரிகள் இருந்தால்கூட போதும் என்றுதான் தோன்றும். என்ன செய்ய, இதுவும் ஒரு சமரசம்தான்.

No comments:

Post a Comment