Sunday, April 13, 2014

விழுமியங்களின் வீழ்ச்சியும், அதிகாரத்தின் முடிவும்

பதாகை தளத்தில் வெளிவந்தது http://padhaakai.com/2014/03/16/marquez-and-power/)
-----------------

தென் அமெரிக்காவை ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து மீட்டு ஒரு கட்டத்தில் சர்வ வல்லமையுடன் இருந்த ( ‘The Liberator’ என்றழைக்கப்பட்ட) சீமோன் பொலிவர் (Simon Bolivar), தன் தூக்கம், உணவு, பாதுகாப்பு குறித்து அசட்டையாக இருந்ததை,
“… his disinterest was not lack of awareness or fatalism, but rather the melancholic certainty that he would die in his bed, poor and naked and without the consolation of public gratitude.”
என்று ‘மார்கேஸ்’ (Gabriel Garcia Marquez) தன்னுடைய ‘The General in His Labyrinth’ நாவலில் குறிப்பிடுகிறார். நாவலின் முடிவில் கிட்டத்தட்ட அப்படியே நடக்கவும் செய்கிறது.
வரலாற்றிலும் சர்வாதிகாரிகளின் முடிவு ஒன்று பதவியில் இருக்கும்போது கொல்லப்படுவதாகவோ அல்லது பதவியிலிருந்து அகற்றப்பட்டு அல்லது புகழின் வெளிச்சத்திலிருந்து விலக்கப்பட்டு, தங்கள் இறுதி காலத்தை அநாமதேயமாகக் கழிப்பதாகவோ உள்ளது. வெகு சிலரே இறுதிவரை பதவியையும், அதிகாரத்தையும் தம்மிடம் தக்க வைத்திருந்துள்ளனர்.
‘தென் அமெரிக்கா’, சர்வாதிகாரிகளின் விளைநிலமாக இருந்துள்ளது (அமெரிக்க/ ரஷ்ய பனிப் போரின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் தங்களை ஆதரிப்பவரை பதவியில் இருத்தியும், அவர்கள் தங்களை எதிர்த்தவுடன் வீழ்த்தியும் உள்ளன). எனவே மார்கேஸ் மற்றும் இன்னும் பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் ஆக்கங்கள், அதிகாரத்தைப் பெற/ தக்கச் வைக்க செய்யப்படும் சமரசங்கள், அதிகாரம் மனிதனை எப்படி மாற்றுகிறது, நேரடியாக அதிகாரம் கிடைக்காவிட்டாலும், தன்னை இழிவுபடுத்துக் கொண்டாலும் அதன் நிழலிலாவது இடம் பெற முயற்சிப்பது என இவற்றை குறித்து நிறைய பேசுகின்றன. காபோவின் புனைவுலகில், ‘The General In His Labyrinth’ , ‘The Autumn Of The Patriarch’ இத்தகைய ஆக்கங்கள். முழுதும் இல்லாவிட்டாலும், ‘One Hundred Years Of Solitude’ நாவலில், ‘Colonel Aureliano Buendia’ வரும் பகுதிகள், அதிகாரத்தின் தாக்கத்தைப் பேசுகின்றன.
மூன்று நாவல்களிலுமே, பாத்திரங்களின் இறுதிக் காலம், பழம் பெருமைகள் மட்டுமே உள்ள காலமாக உள்ளது. அவர்கள் பயணத்தை ஆரம்பித்ததின் நோக்கம் , துவக்கத்தில் செய்த சாதனைகள் அனைத்தும் பழங்கனவாய் மாறி, அவர்களைப் பற்றிய கசப்பான உணர்வோடோ அல்லது முடிந்துபோன/ மறக்கப்பட வேண்டிய காலகட்டத்தின் எச்சமாகவோதான் மக்களால் பார்க்கப்படுகிறார்கள். அதிகாரம் எப்போதும் கொண்டாடப்படுதல் அல்லது மறக்கப்படுதல்/ மறக்கடிக்கப்படுதல் என்ற இரட்டை நிலையிலேயே இயங்குகிறது.
முடிவைப் பற்றிப் பேசுவதற்கு முன், அதை வந்தடைவதற்கான பாதையைப் பார்ப்போம். “Men make their own history, but they do not make it as they please; they do not make it under circumstances of their own choosing, but under circumstances existing already, given and transmitted from the past” என்ற கார்ல் மார்க்ஸ் மேற்கோள் உள்ளது. தென் அமெரிக்காவை அடிமைப்படுத்தி, ‘Inquisition’ போன்ற பல அட்டூழியங்களை செய்த ஸ்பானிய சாம்ராஜ்யத்தை ஒழித்து, தன் கண்டத்தை விடுவிக்க பொலிவர் புரட்சியில் ஈடுபடுகிறார். ஆரம்பத்தில் Buendia (One Hundred Years of Solitude),மென்மையானவராக, கவிதை எழுதுபவராக, அரசியலில் ஈடுபாடு இல்லாதவராகத்தான் நமக்கு அறிமுகமாகிறார். அப்போதைய அரசு, தேர்தலில் செய்யும் தகிடுதத்தங்களைக் கண்டு வெறுப்படைந்து அவரும் புரட்சியில் ஈடுபடுகிறார். இருவரையும் அவர்களின் காலகட்டத்தின் சூழலே புரட்சியாளர்களாக உருவாக்குகிறது.
உயர்ந்த இலட்சியங்களோடு ஆரம்பிக்கப்பட்ட பயணங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி நடப்பதில்லை. நடைமுறைச் சூழ்நிலை வெளிக்கொணரும் மனித பலவீனங்கள், (அல்லது மனித பலவீனங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்நிலைகள்) பாதையை மாற்றி விடுகின்றன. ராஜதந்திரம் (diplomacy) என்னும் பதம் பலவித சமரசங்களுக்கு வழிவகுக்கிறது, அதிலிருந்து அவர்கள் இலட்சியங்களின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. எதிர்தரப்புடன், ஒரு சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் முன் ‘That means, …………….. that all we’re fighting for is power’ என Buendia சொல்கிறார், ஆக, அவர்கள் தங்கள் சமரசங்கள் குறித்து அறிந்தே இருக்கிறார்கள், ஆனால் அதைத் தடுக்க முடியாமலோ/ விரும்பாமலோ உள்ளார்கள். காலத்தை மாற்றப் புறப்பட்டவர்கள், பிறகு அது தங்களை செலுத்தும் திசையில் செல்லத் துவங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் யாரை/ எதற்காக எதிர்த்தார்களோ, அவர்களைப் போலவே/ அவர்கள் செய்ததையே இவர்களும் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ‘Buendia’ ஒரு கட்டத்தில் ரத்த வெறி பிடித்து எதிர்ப்பவர்கள்/ மாற்றுக் கருத்துடையவர்கள் என பலரை கொல்லத் துணிகிறார். இதில் அவர்கள் விழுமியங்களின் வீழ்ச்சி முழுமை அடைகிறது.
‘The Liberator’ என்று ஒரு கண்டத்து மக்களால் அழைக்கப்பட்ட ஒருவர், அவரிடம் இருந்த அதிகாரம் பறி போனபின், காட்சிகள் மாறும் கோலத்தை மென்சோகத்துடன் ‘The General in His Labyrinth’ நாவல் சொல்கிறது. எல்லையற்ற அதிகாரம் கொண்டவராக இருந்த பொலிவர், தன் இறுதிப் பயணத்தின்போது பல ஏளனங்களைச் சந்திக்கிறார், அவர் விடுவித்த நகரங்களில் அவருக்கு எந்த வரவேற்பும் இல்லை, அவர் மீது சாணம் வீசப்படுகிறது. தான் விடுவித்த கண்டம் தன் வாழ்நாளிலேயே பல (புதிய) நாடுகளாக பிளவுபடுவதை பார்க்கும் சோகம் அவருக்கு நேர்கிறது. இந்தப் பிளவுகளுக்கு (பொலிவர் / மற்றவர்களின்) ‘அதிகாரத்தின் ருசி’ ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். (தென் அமெரிக்க வரலாற்றை நன்கறிந்தவர்கள் இது குறித்து இன்னும் விரிவாகச் சொல்ல முடியும். காபோவின் புனைவை வைத்தும், சில இணைய இணைப்புக்கள் மூலமுமே என் கருத்துக்கள் உள்ளன).
காபோவின் இந்தப் பாத்திரங்கள் புனிதர்களோ, அரக்கர்களோ அல்ல. நம்மைப் போல் பல பலவீனங்கள் கொண்டவர்களே. பல ஊழல் புகார்கள், அவர் தென் அமெரிக்க கண்டத்தையே தன் அதிகாரத்திற்குள் கொண்டு வர நினைத்தார் என பொலிவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களாகச் சிலவற்றை காபோ சொல்கிறார். பொலிவர் அந்தக் கண்டத்தை ஒற்றை நாடாகவே பார்த்தார் என்றும் காபோ சொல்கிறார், எனவே பொலிவர் தரப்பிலும் அவர் பார்வையில் நியாயம் இருக்கலாம்.
இவர்கள் தங்கள் விழுமியங்களிலிருந்து முற்றிலும் விலகுபவர்களும் அல்லர். தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கும் முன், தன் தற்போதைய உடைமைகளைப் பார்க்கும்போது “We never would have believed, my dear Jose, that so much glory could fit into a shoe”, என்று பொலிவர் சொல்கிறார். சர்வாதிகாரி, கொடுங்கோலன் என்று ஒரு தரப்பால் நாவலில் குறிப்பிடப்படும் ஒருவரின் உடைமைகள் இவ்வளவுதான் எனும்போது அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எப்படி அணுகுவது (எளிமை = புனிதம் என்ற ஒற்றைத்தன்மையை கணக்கில் கொள்ளாவிட்டாலும்)?. இலட்சியங்களின் சீர்கேடு (corruption ) என்பதை அதிகாரத்தைக் கொண்டு பணம், பொருள் கையாடல் என்று மட்டும் இல்லை, அந்த அதிகாரமே, அதன் போதையே சீரழிவாக மாறக்கூடும் (‘Power is the ultimate aphrodisiac’ என்று Henry Kissinger சொன்னதாக ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது அல்லவா?).
‘The Autumn of the Patriarch’ நாவல் அதிகாரத்தோடு எப்போதுமே உடன் வரும் அதிகாரம் குறித்த பாதுகாப்பின்மையையும் (insecurity), மிதமிஞ்சிய கர்வம் (hubris) குறித்தும் பேசுகிறது. நாவலில் வரும் பெயர் குறிப்பிடப்படாத குலத்தலைவன் (Patriarch), தன் பதவியைப் பறிக்க யாரோ சதித் திட்டம் தீட்டுகிறார்கள், அவர்களைத் தடுக்க வேண்டும் என்றே பல நேரம் யோசித்துக் கொண்டிருக்கிறார். தன்னைப் போலவே இருக்கும் ஒருவனை (doppelganger) கண்டுபிடித்து, தனக்கு பதிலாக சில அரசாங்க விழாக்கள்/ கூட்டங்களுக்கு அனுப்புமளவுக்கு, பாதுகாப்பின்மையை உணர்கிறார். தன் அமைச்சரவையை மொத்தமாக அழித்துவிட்டு “…, from now on I’m going to rule alone with no dogs to bark at me” என்று சொல்கிறார். தேதிகளை/ நேரத்தை மாற்றும் அளவிற்கு அவரின் அதிகார போதை செல்கிறது. ஒரு கட்டத்தில் தன் மக்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டு, முதியவர்களின் நினைவுகளைத் தவிர, வேறு யாருமே பார்த்திராதவராக, கிட்டத்தட்ட ஒரு தொன்மமாக உள்ளார். வல்லூறுகள் அவரின் மாளிகையை வட்டமிட ஆரம்பித்தவுடன்தான், அவர் இறந்ததே மற்றவர்களுக்கு தெரிய வருகிறது.
இந்த மூன்று நாவல்களில் நாம் பார்த்தவர்களில் ஒருவர் வரலாற்று நபர் (பொலிவர்), மற்ற இருவர் புனைவுப் பாத்திரங்கள். வேறு கண்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் நாடுகளைப் பொறுத்து இருந்தாலும், அவர்கள் நமக்கு முற்றிலும் அந்நியமானவர்களாகத் தெரிவதில்லை. இவர்களைப் போலவே பிறரை நாமும் (எந்த நாடாக இருந்தாலும்) அறிந்திருக்கிறோம். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மனிதர் என்றில்லாமல், இவர்களின் முன்மாதிரி (prototype) நாம் பார்த்துள்ள/ பார்க்கிற பல தலைவர்களின் கலவை.
அதிகாரம் என்னும் Labyrinthக்குள் உள்ள மினோடர் (Minotaur) என்னும் அரக்கனை அழிக்க, தீசியஸ் (Theseus) போல் அதில் நுழைபவர்களே ஒரு கட்டத்தில், அதிகாரத்திற்கு முற்றிலும் அடிமையாகி மினோடாராக (Minotaur) மாறும் விநோதத்தை நாம் கண்டிருக்கிறோம். ஜனநாயக ஆட்சியோ அல்லது சர்வாதிகார ஆட்சியோ, இதுவே நடக்கிறது, என்ன, அதிகாரத்தின் எல்லை மட்டுமே வேறுபடுகிறது. அப்படி மாறும் தலைவர்கள் அனைவரையுமே இந்தப் பாத்திரங்களில் காணலாம். ‘The General in His Labyrinth’ என்ற தலைப்பும் இவர்களில் பலருக்கும் பொருந்தும்.
“… How will I ever get out of this labyrinth!” என்று பொலிவர் இறுதியில் பெருமூச்சு விடுகிறார். தனங்கள் இலட்சியங்களிலிருந்து முற்றிலும் விலகாமல் உள்ள தலைவர்களிடமிருந்தும் இந்தப் பெருமூச்சு இன்றும் வந்து கொண்டிருக்கலாம்/ வர வேண்டும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment