Saturday, July 11, 2015

Stuart Macbride -குற்றப் புனைவுகளில் அவல நகைச்சுவை – ஸ்டூவர்ட் மெக்ப்ரைட் நாவல்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/06/28/stuart-macbride/)
----------------------
ஸ்டூவர்ட் மெக்ப்ரைட்டின் ‘Flesh House’ நாவலில், மாமிசம் பதனிடும் ஆலையில் யாரோ மனித மாமிசத்தைக் கலந்து விட, ‘Aberdeen’ நகர மக்கள் தங்களை அறியாமல் நரமாமிசம் உண்பவர்களாக மாறி விடுகிறார்கள். இதைச் செய்தது யார் என்று விசாரிக்கும் காவல்துறையினருக்கு தாங்களும் நர மாமிசம் உண்டிருப்போமோ என்ற சந்தேகம் வருகிறது. அப்போது அவர்களில் ஒருவர் “Must’ve been OK though: I’m no’ feeling all Hannibal Lectery “. என்கிறார். மிக மோசமான ஒரு நிகழ்வை, அதன் பாதிப்புகளை நினைத்துப் பார்க்காமல், அதை கேளிக்கையாக மாற்றி வாசகனை அதிர்ச்சியடைய வைக்க ஸ்டூவர்ட் முயல்கிறாரா?
தினம் தினம், பல்வேறு வடிவங்களில் மரணத்தை/ காயங்களைச் சந்திக்கும் காவல்துறையினர் தங்களின் மனநிலை பேதலிக்காமல் இருக்க உபயோகிக்கும் பாதுகாப்பு அரண்தான் இத்தகைய அவல நகைச்சுவை. இப்படி வாழ்வில் நிகழும்/ சந்திக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகளை/ பேரிடர்களை நகைச்சுவையோடு எதிர்கொள்வது ‘gallows humor’ என்று அழைக்கப்படுகிறது. எனவே இதை குற்றப்புனைவுகளில் அதிகம் காண்பதை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இத்தகைய நகைச்சுவையை (இதை நகைச்சுவை என்று முதலில் ஏற்றுக்கொண்டால்) வாசகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே, இத்தகைய படைப்புக்கள், குறிப்பாக ஸ்டூவர்ட்டின் நாவல்கள் அவனுக்கு உவப்பானவையாக இருக்கும், அல்லது இருக்காது.
ரான்கினின் ‘Edinburgh’ போல, இந்த நாவல்களின் களமான ‘Aberdeen’க்கும் ஒரு தனித்துவ (தொடரின் அங்கமாக ஆகக்கூடிய அளவிற்கு) அடையாளம் கிடைக்காவிட்டாலும், எப்போதும் பெய்து கொண்டே இருக்கும் மழை, அதனால் எங்கும் உருவாகும் ஈரப்பதம், பாழடைந்த குடியிருப்புக்கள், மூதாட்டியால் (சிறுதொழிலாக) வழிநடத்தப்படும் போதை மருந்து வியாபாரம் ஒரு புறம் என்றால், பாலியல் தொழிலில் தள்ளப்படும் 13 வயது சிறுமிகள் இன்னொரு புறம், குற்றக் கும்பல்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள், லஞ்சத்தில் திளைக்கும் அரசியல்வாதிகள், இனவெறித் தாக்குதல்கள் என அந்நகரத்தின் சித்திரத்தை உருவாக்குவதில் ஸ்டூவர்ட் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறார்.
மிக கவனத்துடன் பின்னப்பட்ட கதை முடிச்சுகள், போலி துப்புக்கள் இவையெல்லாம் இந்தத் தொடரின் வலுவான அம்சங்கள் கிடையாது. 400-500 பக்கங்களுக்கு குறையாமல் நீளும் இந்த நாவல்களில் ஒரே ஒரு குற்றத்தைப் பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், ஒரே நேரத்தில் 3-4 வழக்குகளை ஸ்டூவர்ட் பின்தொடர்வதை வாசகன் உன்னிப்பாக கவனிக்காவிட்டால், பாத்திரங்களின் பெயர்/ சம்பவக் குறிப்புக்கள் இவற்றில் குழப்பமடைவான்.
இணைகோடுகளாக நடக்கும் இந்த விசாரணைகளை, இறுதிப் பகுதியில் ஸ்டூவர்ட் சடுதியில் முடித்து விடுகிறார். மூளையில் சட்டென்று ஒரு விளக்கெரிய லோகன் (இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம்), குற்றத்தின் ஆரம்பத்தை புரிந்து கொள்ளும் “deus ex machina” பாணி இடங்கள் இந்தத் தொடரில் நிறைய உண்டு. மூளையில் இத்தகைய மின்னல்கள் மின்னுவது, இன்ஸ்பெக்டர் மோர்ஸிடம் நிகழ்வதுண்டு- அவரின் மேதமை குறித்த நிறைய குறிப்புகள் நாவலில் உள்ளதால் – வாசகனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் லோகன் ஒன்றும் மேதை அல்ல (இவரை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்) என்பதால், இந்த தொடர் நாவல்களின் முடிவுகள் சற்று அதிருப்தியை அளிக்கின்றன.
இப்படி இந்தத் தொடரில் பல இல்லைகள் இருந்தாலும், தலை தெறிக்கும் வேகத்தில் செல்லும் கதைசொல்லல், பட்டாசாக வெடிக்கும் உரையாடல்கள், தனித்துவம் கொண்ட பாத்திரங்கள், தொடர் முழுதும் விரவிக் கிடக்கும் இருண்மை நகைச்சுவை ஆகியவை இந்த ‘இல்லைகளை’ சமன் செய்கின்றன.
23 முறை கத்தியால் குத்தப்பட்டு பிழைத்ததால் Lazarus/Laz என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் ‘லோகன்’ இந்தத் தொடரின் நாயகன். உலக பாரத்தைச் சுமக்கும், உறவுகளில் நாட்டமில்லாத, தன் மேலதிகாரிகளை மதிக்காத காவல்துறை அதிகாரிகளிடமிருந்து இவர் வேறுபட்டவர். விடுமுறை நாட்களிலும் மேலதிகாரிகளால் வேலைக்கு வர வற்பறுத்தப்படுபவராக, அவர்களின் வேலையும் தன் மீது திணிக்கப்பட்டு அதைச் செய்து முடிக்க வேண்டியவராக இருந்தாலும் (ஒரு இடத்தை உளவு பார்க்கும் வேலையின்போது மேலதிகாரிகள் குறட்டை விட, இவர்தான் முழித்திருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது), அதற்காக இன்னொரு புறம் தன் காதலிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியவராக உள்ள லோகன், கொஞ்சம் பிசகினாலும் ‘wimp’ என்ற முத்திரை குத்தப்படக்கூடியவர். அதே நேரம், தன் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் வேலைகளைத் திணிக்கவும் (“perks of rank” என்ற அவர் உயரதிகாரிகள் சொல்லும் தாரக மந்திரத்தை உபயோகித்து ) செய்கிறார். இவருடைய ஒரே இருத்தலியல் சிக்கல், தூங்குவதற்கும், தன் காதலியுடன் செலவிடுவதற்கும் நேரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
எப்போதும் இனிப்பை உண்ணும், பருமனான, மிகக் கோபக்காரரான ‘Insch’, எப்போதும் கலைந்த முடியோடு இருக்கும், அனைவரின் முன்பும் அக்குளைச் சொரிந்து கொள்ளும், பாலியல் இச்சை மிகுந்த, தன் மேலதிகாரியின் மனைவியைக் கவரும் தற்பால் விழைவு கொண்ட ‘ஸ்டீல்’ என மற்றப் பாத்திரங்களும் சுவாரஸ்யமானவர்கள்தான் (40 வயதில் ‘பாலியல் வேட்கையின்’ உச்சத்தில் இருக்கும் தன்னை, தன் துணை திருமணம் என்ற கூட்டிற்குள் அடைக்க முயல்கிறார் என்று வழக்கை விட அதைக் குறித்து அதிகம் கவலை கொள்கிறார் ஸ்டீல்).
இதைப் படிக்கும் போது “Police Academy” போன்ற காவல்துறை வேலைக்கு லாயக்கு இல்லாத கோமாளிகளின் கூடாரம் என்று இந்தக் குழுவைப் பற்றி நினைக்கத் தோன்றும் (“Fuck up squad” என்று இவர்கள் தொடர் முழுதும் மற்றவர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்). ஆம், இவர்கள் வழக்கமான காவல்துறை அதிகாரிகள் அல்லதான், ஆனால் எப்படியோ தாங்கள் செய்ய வேண்டியதை செய்து முடித்து விடுகிறார்கள். பல கவன சிதறல்கள் இருந்தாலும், ஸ்டீல் ஒரு திறமையான குழுத் தலைவர், அவரே களத்தில் இறங்கவும் செய்வார். மற்றவர்கள் மீது (அதாவது பெரும்பாலும் லோகன் மீது) தன் வேலையைத் திணித்தாலும், அவர்களுக்கான அங்கீகாரத்தைத் தரவும் செய்வார். கொஞ்சம் மென்மை, அதைவிட கொஞ்சம் அதிக சோம்பல், வேலைப் பளு பற்றிய முணுமுணுப்பு என்று இருந்தாலும், ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டால், பல்லைக் கடித்துக் கொண்டு அதன் இறுதி வரை செல்லும் பிடிவாதம் என தன் கலவையான குணத்தால் நம்மை வசீகரிக்கிறார் லோகன். இந்த இரு பாத்திரங்களுக்காக மட்டுமேகூடஇந்தத் தொடரை வாசிக்கலாம்.
எது வாசகனை எளிதில் வசப்படுத்த/ தக்கவைக்க வசதியாக இருக்குமோ, அவன் எதை எதிர்பார்ப்பானோ அதையே எப்போதும் ஸ்டூவர்ட் செய்வதில்லை. இந்தத் தொடரின் போக்கை மாற்றி, அதன் சமநிலையைக் குலைத்து, அதனால் வாசகனை விலகச் செய்யக்கூடிய பல ரிஸ்க்கான முடிவுகளை எடுப்பதற்கு அவர் அஞ்சுவதில்லை. எனவே, இவர் இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம் அல்லது இவர் இந்த குறிப்பிட்ட நாவலில் முக்கிய பாத்திரம், எனவே இவர்களுக்கு இறுதியில் ஒன்றும் ஆகாது என்று வாசகன் நிம்மதியாக இருக்க முடியாது. யாரை எப்போது எந்த பேரிடர் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அவன் கற்பனை செய்திராத கொடூர நிகழ்வுகளை வாசகன்/ பாத்திரங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஸ்டூவர்ட்டின் உரைநடையில்/ உரையாடல்களில் உள்ள அவல நகைச்சுவையில் மற்றொரு குற்றப்புனைவு எழுத்தாளர் ‘R. D. Wingfield’ன் பாதிப்பைக் காண முடிகிறது. ஆனால் இந்த நகைச்சுவை, அதற்கு காரணமான வன்முறை எதுவும் ‘gratuitous’ஆக இல்லை என்பதோடு குற்றத்தின் மூர்க்கத்தையோ/ பாதிக்கப்பட்டவர்களின் துயரையோ மலினப்படுதுவதில்லை. ‘Broken Skin’, என்ற நாவலில் லோகன் ஒரு சிறுவனிடம் தர்ம அடி வாங்குகிறார். (ரீபஸ் இப்படி ஒரு சிறுவனிடம் அடி வாங்குவதை கற்பனை செய்ய முடிகிறதா?). ஒரு ஆண் சிறுவனிடம் எதிர்பாராமல் தோற்பது முதலில் சிரிப்பை வரவழைத்தாலும், அவ்வளவு மூர்க்கம் அந்தச் சிறுவனிடம் எப்படி உருவானது என்ற கேள்வி சிரிப்பை மட்டுப்படுத்தும். சில மாதங்கள் முன்பு வரை, மற்றவர்களைப் போல இருந்த அந்த சிறுவன் ஏன் இப்படி வன்முறையாளனாக மாறினான்
என்று தெரிய வரும்போது, அந்தச் சிரிப்பு முற்றிலும் உறைந்து விடும்.
ரான்கின் போன்ற மற்ற ஸ்காட்லாந்து நாட்டு குற்றப்புனைவு முன்னோடிகள் வளர்த்தெடுத்த “Tartan Noir”ஐ அப்படியே பின் தொடராமல், அதன் சில கூறுகளை மட்டும் எடுத்து – ஆக்ரோஷம் X இருண்மை X அவற்றின் களிப்பு – என்ற விசித்திர நடனமாடும் தனித்துவ பாணியை உருவாக்கியுள்ள ஸ்டூவர்ட் அதன் காரணமாக, அவரது குற்றப் புனைவுகளின் போதாமைகளைத் தாண்டி குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராகிறார்.
இதுவரை 12 நாவல்கள் உள்ள இந்தத் தொடரின் சமீபத்திய நாவல்களில் கொஞ்சம் “contemplative”ஆக உள்ள ஸ்டூவர்ட்டை/ லோகனை பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் வரவேற்புக்குரியது. அதே நேரம், அவருடைய பிரத்யேகப் பாணி சற்று நீர்த்துப் போக ஆரம்பித்துள்ளது என்ற உணர்வு தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை. எனவே, இவரைப் புதிதாக படிக்க நினைப்பவர்கள் இந்தத் தொடரின் முதல் 6-7 நாவல்களை தேர்வு செய்யலாம். ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் அவர் உங்களுக்கான எழுத்தாளரா எனபதை கட்டுரையின் முதல் பத்திக்கான உங்கள் எதிர்வினைதான் முடிவு செய்ய வேண்டும்

No comments:

Post a Comment