Monday, March 28, 2016

அசோகமித்திரனின் ‘மாலதி’ – ஒரு குறிப்பு

(பதாகை இதழில் வெளிவந்தது http://padhaakai.com/2016/03/20/malathi/)
-----
தான் பணிபுரியும் மருத்துவ மையத்தில் ஒரு மணி நேரத்திற்குள், அன்று அங்கு வந்துபோனவர்களைப் பற்றிய அட்டவணை பதிவு செய்தல், மாதா மாதம் வர வேண்டிய பணம் பற்றிய கணக்கு எழுதுதல், சிறப்பு மருத்துவர் ஒருவரை மையத்திற்கு வரச் செய்ய ஏற்பாடு செய்தல், மையத்திலிருந்து நோய் குணமாகிச் செல்பவர்களுக்கான ரசீது தயார் செய்தல், பழுதடைந்திருக்கும் குழாயை சரி செய்வது போன்ற தொடர் வேலைகளை முடிக்கும் மாலதி, அசோகமித்திரனின் புனைவு வெளியில் வாசகன் அடிக்கடி சந்திக்கும், இருபதுகளின் மத்தியில்/ இறுதியில் இருக்கும், வேலைக்குச் செல்லும் கீழ் மத்திய வர்க்கப் பெண்களின் மிக முக்கியமான பிரதிநிதி.
மருத்துவமனையின் ஒரு காலை நேரக் காட்சிகளோடு ஆரம்பிக்கும் ‘மாலதி’ நெடுங்கதை/ குறுநாவல், வெறும் புறச்சூழலை உருவாக்கி மட்டுமல்ல. அதன் உடல் /மன அயர்ச்சியை மாலதியோடு வாசகனும் உணரச் செய்வதால்தான், வேலை அனைத்தையும் முடித்து விட்டு கண்ணாடியில் எத்தேச்சையாக ஒரு கணம் தன் முகத்தைப் பார்த்து, பெண்கள் எப்போதுமே கண்ணாடியின் முன்பு தான் நின்றிருக்கிறார்கள் என்று எழுதப்படும் துணுக்குகள் பற்றி “… எவ்வளவு பெண்களுக்கு கண்ணாடியை ஒழுங்காகப் பார்க்கும் வாய்ப்பே கிடையாது என்று இவர்களுக்குத் தெரியுமா… வீட்டில் கூட ஒரு ஓட்டைக் கண்ணாடிதான். அதில் தெரியும் பிம்பம் எல்லாமே அரைகுறை தான்” என்று அவள் எண்ணும்போது, அதில் உள்ள உண்மையை நாம் உணர முடிகிறது.
மருத்துவனை நிகழ்வுகளோடு மாலதிக்கும் அவள் தாய்க்கும் இடையே உள்ள உறவுச் சிக்கல் இன்னொரு இழை. அவள் இல்லாவிட்டால் மருத்துவமனையின் அன்றாட அலுவல்கள் ஸ்தம்பித்து விடும் என்ற அளவிற்கு அத்தனை வேலைகளையும் செய்யும் மாலதியிடம் அது எதுவும் தெரியாத, தெரிந்து கொள்ளும் அக்கறைகூட இல்லாத அவள் தாய் “நீ பண்ணற பெரிய உத்தியோகத்துக்கு சிநேகிதி கல்யாணத்துக்குக் கூட போகக் கூடாது? அப்படி என்ன பெரிசா அந்த டாக்டர் கொட்டிக் கொடுத்துடறார்” என்று அவள் உணர்வுகளைக் காயப்படுத்துகிறார். தன் கணவன் வேலை செய்த இடத்திற்கு மாலதி வேலைக்குச் செல்லவில்லை என்ற கோபம் அவருக்கு. தந்தை அங்கு அனைவரிடமும் கடன் வாங்கியுள்ளதால், அவர்கள் முன்னால் நிற்பதற்குக்கூட கூசுகிறது என்பது மாலதியின் தரப்பு.
அசோகமித்திரனின் புனைவுகளில் நாம் சந்திக்கும் கணவனை இழந்த, ஆனால் மன உறுதியை இழக்காத அம்மாக்களில் ஒருவர் மாலதியின் தாய். கல்யாணத்திற்கு மாலதி செல்லவில்லையென்றால் ‘வயிற்றெரிச்சல்’ காரணமாக வரவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று கூறி, மகளை அழ வைக்கும் அளவிற்கு உளவியல் நுட்பமும், கடுமையும் நிறைந்தவர் போல் முதல் தோற்றத்தில் தெரிகிறார். ஆனால் அவருடைய கோணத்தில், மற்றவர்கள் மனதில் என்ன நினைப்பார்களோ என்பதற்காக ஒரு வேலையை விடுவது முட்டாள்தனமான ஒன்றாக இருக்கக்கூடும். யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் எதை எதையோ எண்ணி நல்ல (அதிக ஊதியம் கொடுக்கக்கூடிய) வேலைக்குச் செல்லாமல், தன் எதிர்காலத்தை மகள் வீணடிக்கிறாளே என்ற ஆதங்கம் கூட இத்தகைய கடுஞ்சொற்களாக வெளிவரலாம்.
மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் மணமானவர், அவருக்கு சுஜனா என்ற பெண்ணுடன் தொடர்பிருக்கிறது. அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டாக்டரை வற்புறுத்துவது மாலதிக்குத் தெரியும். இந்த விஷயம் டாக்டரின் மனைவிக்கும் தெரிந்து, டாக்டர் மிகப் பெரிய நெருக்கடியில் விழப்போகிறார் என்று மாலதி நினைக்கிறாள். அதற்கேற்றார் போல், டாக்டர் மருத்துவமனையில் இல்லாதபோது அவர் மனைவியும், சுஜனாவும் சந்தித்து வாக்குவாதம் செய்ய ஆரம்பிக்க, அந்த இடத்தில் மிகவும் அசௌகரியமான சூழல் உருவாகிறது. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத மாலதி அவமானப்படுத்தப்பட, அவள் வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறாள். (தந்தையின் பணியிடத்திற்கு அவள் செல்ல விரும்பாததற்கான காரணத்தின் உளவியலை புரிந்து கொண்டால், அவளின் இந்த முடிவையும் புரிந்து கொள்ள முடியும்). அதே நேரம் அவள் யதார்த்தத்தையும் ஒரு புறம் உணர்ந்தேயிருக்கிறாள் என்பதால் கிளம்பும்போது, தான் திரும்பவும் வேலைக்கு வர வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் சொல்லியனுப்புமாறு கூறுகிறாள்.
நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்க்கும் தெருக்களும், அதன் வீடுகளும், கடைகளும், அந்த மொத்தச் சூழலும் பிறிதொரு நேரத்தில் பார்க்கப்படும்போது நாம் அதுவரை அவற்றை கண்டிராதது போல் வேறொரு தோற்றம் கொள்ளக்கூடியவை. மாலதி தன் வேலையின் இயல்பால் தினமும் நகரம் உயிர் கொள்ளும் முன்பே மருத்துவனைக்குச் சென்று மாலைதான் திரும்புகிறாள். இன்று வேலையை விட்டுவிட்டதால், நீண்ட நாட்கள் கழித்து 9-10 வாக்கில் தெருக்களில் செல்லும் அவள், புதிதானவை போல் அனைத்தையும் கவனிக்கிறாள். இக்கட்டான சூழலிலும் மாலதி உணரும் இந்தக் காட்சி பேதத்தின் நுட்பம் ஒருபுறமிருக்க, அனைவரும் அந்த நாளை எதிர்கொள்ள தயாராகிச் சென்றுகொண்டிருக்க, அயர்ச்சியுடன் சென்று கொண்டிருக்கும் மாலதிக்கோ அந்த நாள் முடிந்தே விட்ட மாதிரிதான் என்பதில் முரணும் உள்ளது.
வீட்டிற்கு திரும்பும் போது, தான் எந்த பெண்ணிற்கும் எதிரியாகக் கூடாது என்று மாலதி நினைக்கும் அதே நேரம், தன் உறுதி திடமானதா என்பதை ஒரு சிறு பரிசோதனைக்குக்கூட உட்படுத்த முடியாது என்று உணரும் போது வருந்துகிறாள். கதை இங்கு முடிகிறது. பெண்களின் துயரை கனிவுடன் பேசுவது என்ற அளவிலேயே சிறந்த கதையாக இருந்திருக்கக் கூடியதை இன்னொரு கோணத்தில் பார்க்க கதையில் உள்ள ஒரு நிகழ்வு உதவுகிறது.
டாக்டரின் மனைவிக்கும் சுஜனாவுக்கும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்ற, சுஜானா அவளை அடித்து விடுகிறாள். டாக்டர் மனைவி ஸ்தம்பித்து வேறெதுவும் செய்ய முடியாத நிலையில், தன் தோளைத் தொட வரும் மாலதியை நோக்கி “.. நீ வேலை பண்ண வந்திருக்கையா, வசியம் பண்ண வந்திருக்கயா..” என்று கோபப்படுகிறாள். 18வது அட்சக்கோடு நாவலில் ஒரு நிகழ்வு. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று நடக்கும் போராட்டத்தின் போது, சந்திரசேகரனின் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள், வகுப்புக்களுக்குச் செல்லும் அவனைப் போன்றவர்களிடம், வளையல் தந்து கேலி செய்கிறார்கள். அந்த இடத்திலிருந்து ஓடி வந்து விடும் அவன் அவர்களை தொலைவில் இருந்து கவனிக்கும்போது, காரில் வருபவர்களிடமோ, சிரித்துப் பேசிக்கொண்டு வருபவர்களிடமோ அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை என்று தெரிகிறது.
முதல் பார்வையில் இரு நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றையே சுட்டுகின்றன. சந்திரசேகரனின் கல்லூரி பெண்களுக்கு காரில் வருபவர்களை எதிர்கொள்ள திராணி இல்லையென்றால், டாக்டரின் மனைவிக்கு சுஜனாவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடிவதில்லை. இரண்டு நிகழ்வுகளிலும் தாங்கள் எதிர்கொள்ள முடியாதவர்களை தவிர்ப்பவர்கள், தங்களுக்கு கீழே உள்ளவர்கள் என அவர்கள் வரையறுக்கும் எளியவர்கள் மேல் எந்த தயக்கமும் இல்லாமல் வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். நாளை டாக்டர் சுஜனாவையும், மனைவியையும் சமாதானப் படுத்தக் கூடும். அவர் மாலதியை வேலைக்கு வருமாறு அழைத்து அவளும் யதார்த்த நிலையை எண்ணி மீண்டும் செல்லக்கூடும். ஆனால் எந்த காரணமோ, குற்றவுணர்வோ இல்லாமல் தன் மீது எப்போது வேண்டுமானாலும் சுமத்தப்படக்கூடிய இழிவுக்கு அவள் ஒவ்வொரு கணமும் தயாராக இருக்க வேண்டும்.
எளியவர்கள் அன்றாடம் சந்திக்கும் இழிவுகளை பரிவுடன் சுட்டும் இந்த நிகழ்வு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாரைப் பற்றியதாக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான மானுடத்தைத் தொட்டு, அதனுடன் உரையாடுவதால் அசோகமித்திரனின் புனைவு வெளியில் இந்தக் கதை முக்கியமான மைல்கல்லாகிறது.

Monday, March 21, 2016

நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

(பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2016/03/13/ashokamitran/)
------------
ஒரு ஓவரின் இறுதி இரு பந்துகளில்  அடுத்தடுத்து இருவரை  ஆட்டமிழக்கச் செய்கிறான் ஒரு போலர். இன்னொரு போலர் வீசும் அடுத்த ஓவர் முடித்த பின் 'ஹாட்ரிக்'  செய்யும் சாத்தியத்துடன் முதல்  போலர் மீண்டும் பந்து வீசத் தயாராகிறான். எதிரணிக்கும் அதனுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் உவப்பாக இருக்க முடியாத 'ஹாட்ரிக்கைஅவன் அடையக் கூடாது என்று கதைசொல்லி ஏன்  எண்ணுகிறான்?

மனக்கோணல் பற்றிய இந்தச் சிறிய கதையில் கணிசமானப் பகுதியை அதன் புறச்சூழலைக் கட்டமைப்பதில் செலவிடுகிறார் அசோகமித்திரன். மாலைநேரத்தில் நூலகத்துக்குச் செல்லும் வழியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை கவனிப்பது கதைசொல்லியின் வழக்கம். இப்படி எந்த ஆரவாரமுமற்ற காட்சியோடு ஆரம்பிக்கும் கதையில் ஒரு மாலை அவன் கவனிக்க நேர்வதுதான் இந்த ஆட்டமும்.  'நான் உத்தியோகமின்றி இருந்த பல தருணங்களில் அதுவம் ஒன்றுஎன்று அந்த தினத்தைப்  பற்றி அவன் சொல்லும் ஒரு வரியிலிருந்தேகதைசொல்லி தொடர்ந்து வேலை தேடிக் கொண்டிருப்பவன்\, ஆனால் ஏதோ காரணத்தால் அடிக்கடி வேலையை இழப்பவன் என்று அவன் பின்னணி குறித்து யூகிக்க முடிகிறது (அவனுடைய குணாதிசயம் இதற்கு காரணமாக இருக்கலாம்) . இரண்டு மணி நேரம் தேடி ஒரு நூலை தேர்வு செய்பவன் என்பது அவன் வாசிப்பு குறித்து நாம் யோசிக்கச் செய்கிறது. பள்ளி மைதானத்தைச் சுற்றியுள்ள வேலியில் ஒரு சில இடங்கள் மட்டும் - மாணவர்கள் குறுக்கு வழியில் வெளியேற/ நுழைய - அகலப்படுத்தப்பட்டிருப்பதுகதைசொல்லி பள்ளி நாட்களில் வாயில் வழியாகச் செல்லாமல் சுவர் ஏறிக் குதித்துச் சென்றது குறித்த நினைவுகள் என்றுஅனைவருக்கும் பொதுவான பள்ளி நிகழ்வுகளை மீட்டெடுக்கின்றது. 

இவற்றை தொடர்ந்து ஆட்டக்காரர்களைப் பற்றிய கதைசொல்லியின் அவதானிப்புக்கள் கதையின் மையத்திற்கு அருகில் வாசகனை இட்டுச் செல்கின்றன.  அந்த போலர் அடுத்தடுத்து இரண்டு ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்கிறான். பிறகு அவன் மீண்டும் பந்து வீசத் துவங்கும் முன் அவனும் அணியின் தலைவனும் மற்றவர்களை எந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்று நேரமெடுத்துக் கொண்டு முடிவுசெய்கிறார்கள். ஹாட்ரிக் என்பது அரிய நிகழ்வல்லவா. இப்போது தான் கதைசொல்லி போலரின் தோல்வியை விரும்புகிறான். வாசகன் இப்போது கதையின் மையத்தை அடைந்து விட்டான். 

கதைசொல்லி விரும்பியதைப் போலவே அந்த பந்தில் விக்கெட் விழுவதில்லை. ஆனால் இப்போது கதைசொல்லி போலருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறான். தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்க விரும்பாமல் நூலகத்திற்குச் செல்கிறான். கதைசொல்லி தன் வெறுப்பைக் கடந்து வந்து விட்டானா அல்லது தான் நினைத்தது நடந்து விட்டது என்ற வெற்றி உருவாக்கும் பெருந்தன்மையில்தான்  அவ்வாறு எண்ணுகிறானா என்ற கேள்விகள் எழும் அதே நேரம் கதை அதைப் பற்றியதல்ல என்ற எண்ணமும் ஏற்படுகிறது. கதைசொல்லி தான் சிக்கிய சுழலிலிருந்து தன்னை மீட்டெடுக்கிறான் என்பதாக கதையின் முடிவைப்  நாம் புரிந்து கொண்டாலும்அவனிடம் போலரின் கொண்டாட்டம் (அல்லது பிறிதொன்று)  ஏற்படுத்தும் மனக் கோணலிற்கான உண்மையான காரணம் எளிதில் புலப்படுவதில்லை. 

  
வேறெங்கோ சென்றுகொண்டிருக்கும் போது 
தனக்கு நேரடியாக சம்பந்தமில்லாத  ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்த  -  பொதுவாக கிரிக்கெட் என்றில்லாமல் விளையாட்டு  மேல் கதைசொல்லிக்கு பெரிய விருப்பு இல்லாத நிலையில் (புகழ் பெற்ற ஆட்டக்கார்களை தெரிந்து வைத்திருப்பதைத் தவிர) – எளிய ஓடிப் பிடிப்பது தவிர வேறு விளையாட்டு நான் ஆடினதாக ஞாபகம் இல்லை’  என்று அவன்  சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது -   மிகக் குறைவான நேரத்திற்கே என்றாலும்,  முகம் கூட சரியாக பார்க்க முடியாத ஆட்டக்காரனின்  தோல்வியை அவன் விரும்பும் அளவிற்கு அவனுள் வெறுப்பு குடிகொண்டுஅதன் கசப்பினால் அவன் தன்னையே ஏன் சுயவதை  செய்து  கொள்ள வேண்டும். 

'First impression is the best impression' என்று அடிக்கடி சொல்லப்படுவதற்கேற்ப விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்த குறைந்த நேரத்திலேயே அந்த போலரிடம் கதைசொல்லிக்கு - அவன் யாரென்று தெரியாமலேயே - மனவிலக்கு ஏற்பட்டுவிடுகிறது.  முதல் இரு விக்கட்டை வீழ்த்தியவுடன் போலரின்  உற்சாகமான -  மற்ற பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கக்கூடிய  - கொண்டாட்டம் கதைசொல்லிக்கு மட்டும் இவ்வளவு பெரிய அசூயையையும்மன விலக்கத்தையும்  ஏன் உருவாக்க வேண்டும். கதைசொல்லியும் இதை உணர்ந்தே இருக்கிறான். அந்த போலரால் இப்படி சம்பந்தமேயில்லாத ஒருவன் தன் தோல்வியை விரும்புவான் என்று கற்பனைகூட செய்ய முடியாது. 


ஆனால் கதைசொல்லியை  பொறாமைக்காரனாகவோ மற்றவர்கள் மகிழ்ச்சியை தாள முடியாத மனப் பிழற்சி கொண்டவனாகவோ அசோகமித்திரன் சித்தரிப்பதில்லை. தான் சுட்ட விரும்புவதை முன்வைக்க அத்தகைய வழமையான பாத்திர வார்ப்பு  அவருக்குத் தேவைப்படுவதும் இல்லை.  ஒரு சில கணங்கள் மட்டும் தன் அகத்தில் இருள் குடிகொள்ளும்  சராசரி ஆசாமி தான் நம் கதைசொல்லி. அப்படி அவன் இருப்பதாலேயே அவன் கொள்ளும் உணர்வுகள் அதிக கூர்மை கொள்வதோடு,  அவ்வுணர்வுகளுக்கான உந்துதல் புரியாவிட்டாலும்,  நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அணுக்கமாகவும் உணர முடிவதோடுகதைசொல்லி கதையைப் படிக்கும் வாசகர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்ற சுயபரிசோதனையை  செய்யவும் தூண்டுகிறது.  ஏளனத்தைஅகம்பாவத்தை வெளிக்காட்டுபவை என ஒருவரின் புன்சிரிப்பைஉடலசைவை இன்னொருவர் (தவறாக) புரிந்து கொண்டு ,முதாலமவர் மீது  காழ்ப்பு கொண்டு  அதை விருட்சமாக வளர்க்கும் நிகழ்வுகள்  நினைவுக்கு வருகின்றன.

Monday, March 14, 2016

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2016/03/06/asokamitran-2/
----------
அலுவலங்களில் வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்கும் அன்றாட மாலைப் பொழுதில் அசோகமித்திரனின் 'இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்சிறுகதை ஆரம்பிக்கிறது. சிக்னல் விழும்போது "... ஏதாவது ஒரு வரிசை வெறி பிடித்தது போலச் சீறி விரையும். என்று எழுதியிருந்தால் வழக்கமான விவரிப்பாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு "பிரமாண்டமான பஸ்களிலிருந்து சாத்வீகமாகத் தோற்றமளிக்கும் சைக்கிள்கள்வரை  அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின. " என்ற பின்னிணைப்புப் போன்ற வரியை கோர்க்கும்போது - உண்மையில் அனைத்து வாகனங்களும் ஒரே வேகத்தில் செல்வதில்லை எனபதை "...அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின." என்று  வாகனங்களில் குடிகொள்ளும் வெறி வெளிப்படுவதில் உள்ள வேறுபாட்டை - அந்த விவரிப்பு நுட்பம் கொள்கிறது . இத்தகைய சிக்கனமான சித்தரிப்புக்கள் பரபரப்பான அந்தியை உயிர் கொள்ளச் செய்கின்றன.

இந்த பரபரப்பின் ஒரு கண்ணியான சகுந்தலா அலுவலகம் விட்டு வருகிறாள். பேருந்து நிறுத்தம் வரும் அவள் ராஜரத்தினம் அங்கில்லை என்று ஆசுவாசப்படும்  போது அவள் மனமும் ஏதோ பரபரப்பு கொண்டுள்ளது என்பது புரிகிறது. ராஜரத்தினம் அவளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்பவன் ஒன்றும் இல்லை. அவனும் சகுந்தலாவும் காதலர்கள். அப்போது அவனும் அங்கு வர ஒரு 'பொறிமகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஹோட்டலுக்கு சென்று உரையாடுகிறார்கள்.   ராஜரத்தினம் தாங்கள் மணம் புரிவது குறித்து சகுந்தலா தன் வீட்டில் சொல்லிவிட்டாளா எனக் கேட்கசகுந்தலா உடனே பதில் சொல்வதில்லை.  சகுந்தலாவின் அக்காவிற்கு திருமணமாகாத நிலையில் தன்னால் வீட்டில் இது குறித்து பேச முடியாத சூழலை சகுந்தலா சொல்கிறாள்.  இது இவர்களுக்கிடையே ஏற்கனவே நடந்துள்ளஅடிக்கடி நடக்கும் உரையாடலின் நீட்சி தான் என்று நமக்குப் புரிகிறது. சினம் கொள்ளும் ராஜரத்தினம் அடுத்த திங்களன்று முடிவாகச் சொல்ல வேண்டுமென்று கடுமையாச் சொல்லிவிட்டுச் செல்கிறான்.  ஏன் முதலில் ராஜரத்தினம் இல்லாததால் சகுந்தலா ஆசுவாசமடைந்து பின்பு அவனைக் கண்டு 'பொறிமகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பது இப்போது புரிகிறது. 

சகுந்தலா வீட்டிருக்குச் செல்கிறாள். மீண்டும் பின்மாலை/ முன்னிரவு நேரச் சித்தரிப்புகள்அதனூடே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்து கொள்கிறோம்.  30 வயதாகும் சகுந்தலாவின் அக்கா எஸ்.எஸ்.எல்.சியை  தாண்டாதவள்,  வீட்டின் அனைத்து வேலைகளையும் அவள் தான் பார்த்துக்கொள்கிறாள்அவள் ஏற்று நடத்தாத வீட்டுப் பொறுப்பே கிடையாது ஆனால் வேலைக்குச் செல்லாதஅதே நேரம் அதை ஈடு செய்யக் கூடிய பெரிய வசதிகள் இல்லாத குடும்பத்துப்  பெண்ணை மணம் புரிய யாரும் இல்லை. இது அக்காவிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை   "இப்போதும் அவள் குளித்து விட்டு வந்தவுடனே அழகாக இருப்பது போலத்தான்  தெரியும். ஆனால் ஐந்து பத்து நிமிடங்களுக்குள் முகத்தைக் களையிழக்கச் செய்யும் சோர்வும் சலிப்பும் மெல்லிய கோடுகளாகவும் சுருக்கங்களாகவும் வந்து விடும்  " என்று அ.மி  விவரிக்கிறார். இங்கு சோர்வும்சலிப்பும் வயது அதிகமாவதால் மட்டுமல்ல அல்லஒரே விதமாக முடியும் தொடர் பெண் பார்க்கும் படலங்கள் உருவாக்குபவை என்று உணர முடிகிறது. 

 வீட்டிற்கு வரும் சகுந்தலாவிடம்  அவள் அக்கா படுத்திருப்பதாக தலைவலி என அவள் தாய் சொல்கிறார். அவள் மூக்குக்கண்ணாடி அணிய நேரக்கூடும்அதுவும் வரன் தகைய தடையாக இருக்கக்கூடும் என  என சகுந்தலா எண்ணுகிறாள்.  

இப்போது அ.மியின் கதைசொல்லலில் வாசகன் நேரடியாக ஒரு முறை கூடப் பார்க்காதவீட்டில் மட்டுமல்ல கதையிலும்  ஒரு ஓரத்தில் இருக்கும்  சகுந்தலாவின்  அக்கா அவன் மனதில்  விஸ்வரூபமெடுக்கிறார். சகுந்தலாவின் காதலுக்கு இணையாக -அவள் இன்னும் எத்தனை நாள் அக்காவிற்காக தன் திருமணத்தை தள்ளிப்போடுவாள் -  அவள் அக்காவின் எதிர்கால வாழ்கை குறித்தும் அவன் கவலை கொள்ள ஆரம்பிக்கிறான்.  இதற்கடுத்து வாசகனின் கவனம்  இருவரின் பெற்றோர் மீதும்  திருப்புகிறது. தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்விக்க முடியாதது குறித்த குற்றவுணர்வுடன் அவர்கள் குமைந்து கொண்டிருக்கக்கூடும். . அவர்கள்   சகுந்தலாவின் 
அக்காவை மணம் முடிக்க அதிக முயற்சிகள் எடுக்கவில்லையாஅல்லது அவர்களின் இயலாமையே ஒரு தடையாக இருக்கிறதா  என்பதை வாசகனின் யூகத்திற்கே அ.மி விட்டுவிடுகிறார். 

"இன்று ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும்" என்று நினைத்துக் கொண்டே சகுந்தலா படுக்கும் போது கதை முடியஅந்த நினைப்பில் உள்ள நம்பிக்கையின்மையை அவள் மட்டுமல்ல வாசகனும் உணர முடிகிறது. சகுந்தலா மட்டுமல்லஅவள் அக்காபெற்றோர் மற்றும்  ராஜரத்தினம் அனைவருக்கும் - இதையே விழையும் நகரின் எண்ணற்ற மனிதர்கள் போல் - அன்றிரவு உறக்கம் அரிதான ஒன்றாகத் தான் இருக்கும். 

தினமும் நாம் பங்குபெறும் காட்சியில் - சகுந்தலாவும் ராஜரத்தினமும் தாங்கள் சந்திக்கும் முதல் நிமிடத்தில் 'என்ன என்னஎன்று பரஸ்பர கேள்விகள்  முடியும் முன் பேருந்து வந்து விட ராஜரத்தினம் இடம் பிடிக்க ஓடும் வழக்கமான நிகழ்வு போன்ற -

 ஆரம்பித்துஅதில் அரை கணத்திற்கு மேல் கவனம் கொள்ளாமல் நாம் கடந்து செல்லும் எண்ணற்ற - பலதரப்பட்ட இக்கட்டில் இருக்கும் - முகங்களில் ஒன்றின் பிரச்சனையாக விரிந்துஅதனூடாக ஒரு குடும்பத்தின்  சித்திரத்தை உருவாக்கும்மூன்று இழைகள் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ள  இக்கதை எளியவர்களின் அன்றாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அ.மியின் இன்னொரு கவனத்திற்குரிய படைப்பு. 

Monday, March 7, 2016

இரு திருமணங்கள் -அசோகமித்திரனின் 'கல்யாணம் முடிந்தவுடன்' மற்றும் 'போட்டோ' கதைகள்

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2016/02/21/asokamithran/
-------
 'சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் சம்பிரமமாக நடத்தும் கல்யாணம்' சசிகலாவுக்கும்,  கிருஷ்ணமூர்த்திக்கும்  இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது ('கல்யாணம் முடிந்தவுடன்') . காதல் திருமணம்தான் என்றாலும் சசிகலாவின் மனதில் அன்று காலை முதலே ஏனோ பல சஞ்சலங்கள். நாள் முழுதும்- பலர் காலில் விழுந்து கொண்டே  இருப்பது,  பந்தியில் சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதில் மற்றவர் எச்சிலை சாப்பிடுவது போன்ற தொடர் சடங்குகள்  அவள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம். 

ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு இதில் எந்த எரிச்சலும்கூச்சமும் இருப்பது போல் தெரியவில்லைஅவன் அனைத்து நிகழ்வுகளிலும் உற்சாகமாக பங்கேற்கிறான். அதுவும்கூட அவளுக்கு சிறிது  எரிச்சலாக இருக்கின்றது. ஆனால்  சசிகலாவின் மனநிலை அவள் பார்வை கோணத்தின் மாற்றமே என அசோகமித்திரன் சுட்டுகிறார்அதை அவளும் அறிந்தே இருக்கிறாள்.  சசியே சொல்வது போல கிருஷ்ணமூர்த்தி எப்போதும் இருப்பது போல்தான் அன்றும் இருக்கின்றான். அவளை எப்போதும் போல் கிள்ளுகிறான். ஆனால் அவளுக்குத்தான் அவன் செய்கை அன்று மட்டும் ஏனோ குறுகச் செய்கிறது.   அவனிடம் பிடித்திருந்த அதே குணங்கள்/ செய்கைகள்  இன்று விகாரமானவையாக அவளுக்குத் தோன்றுகின்றன.  மாலை நேர வரவேற்பின்போது மூர்த்தி ஏதோ சொல்ல அதற்கு சசி பதில் கூறமூர்த்தி தன் நண்பனிடம் 'சாரி சொன்னது போல் இவ கொஞ்சம் சிடுமூஞ்சிதான்டாதன்னைப் பற்றி மூன்றாவது மனிதனிடம் இவன் பேசி இருக்கின்றான் என்று அவள் உச்சகட்ட எரிச்சலும் கோபமும் அடைகிறாள். இறுதியாக கடைசி கட்ட சடங்கிற்கு அவளை அவள் அம்மா அழைக்கும்போது உடைந்து அழத் தொடங்குகிறாள். அத்துடன் இந்த கதை முடிகிறது.

அசோகமித்ரனின் உரைநடை நுட்பங்களை இந்தக் கதையிலும் பார்க்க முடிகிறது. 
 சசியின்  தங்கைதன் அத்தையிடம், கிரிஷ்ணமூர்த்தியுடன் எப்படி பேசுவது,  '..அவர் இப்பத்தானே அத்திம்பேராயிருக்கார்'என்று சொல்லஅத்தை 'என்னடீதுஇப்பத்தான் அத்திம்பேர்நேத்திக்கு அத்திம்பேர்னு..' என்று சொல்கிறார். அன்றாட இயல்பான சம்பாஷனைதான் என்றாலும் இதை அவதானித்து சரியான இடத்தில் புகுத்துவதில் அ.மி.யின் இயல்பான அங்கதம் மட்டுமல்ல  'என்னடி இது' என்று எழுதி இருக்கக்கூடியதை 'என்னடீதுஎன்று சொல்வதாக அமைத்திருப்பதில் , பேச்சு வழக்கில் உருவாகும் ஒலியின் - என்னடீது என்பதில் உள்ள நெடில் ஒலியும் கவனிக்கத்தக்கது -  நுண்சித்திரமும் தெரிகிறது.  சசி கிருஷ்ணமூர்த்தியை நலங்குக்கு அழைக்கச் செல்லும்போது  மூர்த்தியின் சகோதரி , அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து  'கூப்பிடறதே நன்னாயில்லையேஎன்கிறாள். அவ்வளவுதான்.  அவள் ஒன்றும் கடுமையாக சொல்வது போல் தெரியவில்லைமூர்த்தி சசியுடன் கிளம்புவதும்   பெரிய விஷயமாவதில்லை. மனைவி பின்னால் ஓடுகிறாயே, என இன்னொரு சகோதரி கிண்டல் செய்து சிரிக்க , அதில் முதலில் பேசியவளும் சேர்ந்து கொள்கிறாள்.  இருந்தாலும் ஏற்கனவே பல சஞ்சலங்களில் சிக்கியுள்ள சசிக்குதான் புகப் போகும் வீட்டில்/ உறவுகளில்  ஏற்படக்கூடிய சின்ன சின்ன உரசல்களின் ஆரம்பமாகமுதல் சுருக்கம் விழும் இடமாக இது   அக்கணத்தில் தோன்றியிருக்கலாம். அத்தகைய நொய்மையான தருணம் இது.

வாழ்க்கையின் முக்கியமான நாட்களில் ஒன்றான திருமண தினம்அதுவும் காதல் திருமணம்  ஏன் சசிக்கு இப்படி முடிந்தது? இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியாஇல்லை என்று அவளே உணர்கிறாள். சடங்குகள்கூட முழு காரணமாக இருந்திருக்காது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணை மணக்கிறான்அதுவும் அவன் காதலித்தவள்எனவே அவன் வெற்றிக் களிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சசியோ ஒரு குடும்பத்துடன் புதிய உறவை இன்று ஆரம்பிக்கிறாள். அதுவும் காதல் திருமணம் எனும்போது , அதை இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று வாசகனுக்கு தெரியவில்லை என்பதால்திருமணத்திற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன்இரு குடும்பங்களுக்கிடையே   நடந்திருக்கக்கூடிய வாக்குவாதங்கள்,  பரிமாறிக் கொண்டிருக்கக் கூடிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள்  வாசகன் நினைக்கக்கூடும். அப்படி நிகழ்ந்திருந்தால்,  புது உலகத்திற்குள் பயணப்பட இருக்கும் சசிக்கே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய சவால் உள்ளது. அந்த பதட்டமே அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.  இவை எதுவுமே கூட காரணமாக இல்லாமல்ஒரு முக்கியமான, மிகவும் எதிர்பார்த்த  விஷயம்எண்ணியபடியே நடந்தாலும்அது நடந்தவுடன் சூழும் -இதற்காகவா இந்தப் பாடுபிடிவாதம்ஏன் இதைச் செய்தோம்-  என்ற வெறுமைகூட சசியின் திருமண நாளின் இனிமையை குலைத்திருக்கலாம். 

காதல் திருமண நிகழ்வு இப்படி இருக்க, 'போட்டோகதையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமண நிகழ்வில்மணமகன்/ மணப்பெண் இருவரும்  எந்தத் தயக்கமும் இல்லாமல்  இயல்பாகவே இருக்கிறார்கள். மணமகனின் தோழர்கள் தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படமணமகள் எளிதில் சம்மதிக்கிறாள். ("சற்று முன்தான் உடமையாகிவிட்டவனின் முதல் கோரிக்கையை மறுக்க அவளுக்கு மனமில்லை" - இதில் உடமையாகிவிட்டவனின் என்பதில் ஏதேனும் நுட்பத்தை அ.மி வைத்துள்ளாரா என்பதை வாசகன் தான் முடிவு செய்ய வேண்டும்). கதையின் முதல் பகுதிஅவர்கள் புகைப்படம் எடுக்க தயாராவதில் செல்கிறது. மணப்பெண் உடை மாற்றி வரஅப்போது தான் தங்கள் தோற்றத்தைப் பற்றிய உணர்வு வந்து அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்வதுதலைமுடியை கோதி விட்டுக் கொள்வது என தோற்றத்தை மேம்படுத்த முயல்வதை அ.மி சுட்டுகிறார். ஒரு நிகழ்வை அதன் பின்னுள்ள உணர்வுகளோடு துல்லியமாக விவரிக்க இத்தகைய நுண்ணிய செயல்களையும் குறிப்பிடுவது உதவும் அல்லவா?. 

தாமு என்ற நண்பனின் நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்க நினைக்கிறார்கள். அப்புகைப்படத்தில் தாமுவும் இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும்அதை எப்படி செயலாக்குவது என தெரியாமல் இருக்க,  மணமகள் தங்கள் திருமணத்தில் புகைப்படம் எடுத்தவரையே இதையும் எடுக்கச் சொல்லலாம் என்கிறாள். மனைவியின் முதல் யோசனைக்கு செயலிழந்து நிற்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்ற மணமகனும் அவரை புகைப்படம் எடுக்க அழைக்கிறான். மணமகள் சுவாதீனமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கிறாள். அதே நேரம், ".. தன் கணவனின் நண்பர்கள் முன்னால் தான் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டு விட்டோம் என்று தோன்றியிருக்கும்"   என்று ஏன் அ.மி சொல்லவேண்டும்?. அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு  உள்ள வேறுபாட்டைஅதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றேவேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த - பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால்அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா?. புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி  நிற்கும் போது,  மணமகளின் மறுபக்கம் இருப்பவன்  மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்படவேண்டியது (அது இயல்பான செயலே)அதை ஏன் அ.மி  குறிப்பிட வேண்டும்?. 'போட்டோஎன்று பெயரிடப்பட்டுள்ள கதையில்  நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவாஅந்தத் துல்லியத்தை இத்தகைய நுண்ணிய சித்தரிப்புக்கள் சாத்தியமாக்குகின்றன.

ஆனால் இந்தக் கதைபுதுமணத் தம்பதியரைப் பற்றியது அல்ல என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது புரிய வருகிறது. புகைப்படக் கலைஞர் தாமுவின் நிழற்படக் கருவியைக் கொண்டு புகைப்படமெடுக்க முயலதாமு அவர் அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சாதாரண விஷயம்தான்ஆனால் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுகிறது.   புகைப்படக் கலைஞரின் அகம் சீண்டப்பட்டுவிட்டது என்பதை உணரும் தாமு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசினாலும்அச்சூழலில் சூழலில் அதுவரை இல்லாத இயல்பற்ற (awkward) நிலை  உருவாகி விடுவதை  உணர முடிகிறது. வெளிப்படையாகத் தெரிய வரும் பகையைக்   கூட எதிர் கொண்டோ அல்லது சமரசமோ செய்து விடலாம்.  ஆனால் மனக்கோணலின் முதல் கட்டத்தைஅதுவும் ஒரு குழுவாக இருக்கும்போதுஇருவருக்கிடையே திடீரென்று  உருவாகும் சங்கட நிலையை,  எதிர்கொள்வதோகண்டுகொள்ளாதது போல் கடந்து செல்வதோ எளிதான ஒன்றல்ல. இதை அ.மி வெளிப்படையாகச் சொல்லாமல்தாமு சாதாரணமாகப் பேசியபின் புகைப்பட கலைஞர் மனம் கோணுவதை உணர்ந்தவன் போல் அவர் அருகில் செல்வதுபுகைப்பட கலைஞர் நிழற்படக் கருவியை தாமுவிடம் திருப்பிக் கொடுப்பது , அவன் அவருடையக் நிழற்படக் கருவியை (தன்னுடையதுடன் ஒப்பிடுகையில்) உயர்த்திச் சொல்லி அவரை சகஜமாக்க முயல்வதுஅவர் சிரிக்காமல் மீண்டும் நிழற்படக் கருவியை வாங்கிக்கொள்வது  என சில செயல்களின் மூலமாகவே புறச்சூழலில் மட்டுமல்ல பாத்திரங்களின் அகத்திலும் - நாம் உணராமலேயே மாறும் காற்றின் போக்கைப்  போல் -  ஏற்பட்டுள்ள இயல்பற்றத் தன்மையை வாசகனுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார். தாமுவின் நிழற்படக் கருவியில் அனைவர் முகத்திலும் நிழல் விழஇறுதியில் புகைப்பட கலைஞரின் கருவியில் புகைப்படம் எடுப்பதாக முடிவு  செய்யப்படுகிறது. அதற்கான படச் சுருள் வாங்கி வருவதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது. இறுதியில் படம் எடுக்கப்பட்டு அனைவரும் பொம்மை போல் அதில் தெரியகதை முடிகிறது. இங்கு ஏன் முகம் பொம்மை போல் தெரிவதாக சொல்லப்படவேண்டும். புகைப்படக் கலைஞர் சரியாகப் படமெடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கக் கூடும். ஆனால் மிகச் சாதாரண நிகழ்வான புகைப்படம் எடுத்தல் யாரும் எதிர்பாராத விதமாக தர்மசங்கடமான சூழலை உருவாக்கபுகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் முற்றிலும் அழிந்து  அந்தச் சூழலை கடந்து சென்றால் போதும் என்றே அனைவரும் விரும்பியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரின் அகத்திலும் இருந்த இறுக்கம் நிழற்படத்திலும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை. 

சசியின் திருமண நாளின் நினைவுகள் மாறா வடுவாக உருவெடுக்கலாம் என்றாலும்குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராமல்திருமண தினத்தன்று தான் அடைந்திருந்த மனநிலையை அவள் மறந்து விடவே சாத்தியங்கள் அதிகம். எப்போதேனும் அந்நாள் நினைவிற்கு வந்தால்தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்தும் , தன் தேவையற்ற அச்சத்தைக்  குறித்தும்தன்னையே எள்ளி நகையாடி அந்நாளை அவள் கடந்து செல்வாள். அதே போல் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் புதுமணத் தம்பதியர் நினைவிலிருந்து விரைவில் நீங்கலாம். ஆனால் அப்புகைப்படத்தில் தன் நிழற்படக் கருவியை அணைத்தப்படி இருக்கும் தாமுவிற்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சூழலின் மகிழ்சியற்றத் தன்மை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.   முதல் பார்வைக்கு வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே தோற்றமளிக்கும் இந்த இரண்டு  கதைகளிலும் கூட வாசகன் பெற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்களை அசோகமித்திரன் பொதித்துள்ளார்.