(பதாகை இதழில் வெளிவந்தது http://padhaakai.com/2016/03/20/malathi/)
-----
-----
தான் பணிபுரியும் மருத்துவ மையத்தில் ஒரு மணி நேரத்திற்குள், அன்று அங்கு வந்துபோனவர்களைப் பற்றிய அட்டவணை பதிவு செய்தல், மாதா மாதம் வர வேண்டிய பணம் பற்றிய கணக்கு எழுதுதல், சிறப்பு மருத்துவர் ஒருவரை மையத்திற்கு வரச் செய்ய ஏற்பாடு செய்தல், மையத்திலிருந்து நோய் குணமாகிச் செல்பவர்களுக்கான ரசீது தயார் செய்தல், பழுதடைந்திருக்கும் குழாயை சரி செய்வது போன்ற தொடர் வேலைகளை முடிக்கும் மாலதி, அசோகமித்திரனின் புனைவு வெளியில் வாசகன் அடிக்கடி சந்திக்கும், இருபதுகளின் மத்தியில்/ இறுதியில் இருக்கும், வேலைக்குச் செல்லும் கீழ் மத்திய வர்க்கப் பெண்களின் மிக முக்கியமான பிரதிநிதி.
மருத்துவமனையின் ஒரு காலை நேரக் காட்சிகளோடு ஆரம்பிக்கும் ‘மாலதி’ நெடுங்கதை/ குறுநாவல், வெறும் புறச்சூழலை உருவாக்கி மட்டுமல்ல. அதன் உடல் /மன அயர்ச்சியை மாலதியோடு வாசகனும் உணரச் செய்வதால்தான், வேலை அனைத்தையும் முடித்து விட்டு கண்ணாடியில் எத்தேச்சையாக ஒரு கணம் தன் முகத்தைப் பார்த்து, பெண்கள் எப்போதுமே கண்ணாடியின் முன்பு தான் நின்றிருக்கிறார்கள் என்று எழுதப்படும் துணுக்குகள் பற்றி “… எவ்வளவு பெண்களுக்கு கண்ணாடியை ஒழுங்காகப் பார்க்கும் வாய்ப்பே கிடையாது என்று இவர்களுக்குத் தெரியுமா… வீட்டில் கூட ஒரு ஓட்டைக் கண்ணாடிதான். அதில் தெரியும் பிம்பம் எல்லாமே அரைகுறை தான்” என்று அவள் எண்ணும்போது, அதில் உள்ள உண்மையை நாம் உணர முடிகிறது.
மருத்துவனை நிகழ்வுகளோடு மாலதிக்கும் அவள் தாய்க்கும் இடையே உள்ள உறவுச் சிக்கல் இன்னொரு இழை. அவள் இல்லாவிட்டால் மருத்துவமனையின் அன்றாட அலுவல்கள் ஸ்தம்பித்து விடும் என்ற அளவிற்கு அத்தனை வேலைகளையும் செய்யும் மாலதியிடம் அது எதுவும் தெரியாத, தெரிந்து கொள்ளும் அக்கறைகூட இல்லாத அவள் தாய் “நீ பண்ணற பெரிய உத்தியோகத்துக்கு சிநேகிதி கல்யாணத்துக்குக் கூட போகக் கூடாது? அப்படி என்ன பெரிசா அந்த டாக்டர் கொட்டிக் கொடுத்துடறார்” என்று அவள் உணர்வுகளைக் காயப்படுத்துகிறார். தன் கணவன் வேலை செய்த இடத்திற்கு மாலதி வேலைக்குச் செல்லவில்லை என்ற கோபம் அவருக்கு. தந்தை அங்கு அனைவரிடமும் கடன் வாங்கியுள்ளதால், அவர்கள் முன்னால் நிற்பதற்குக்கூட கூசுகிறது என்பது மாலதியின் தரப்பு.
அசோகமித்திரனின் புனைவுகளில் நாம் சந்திக்கும் கணவனை இழந்த, ஆனால் மன உறுதியை இழக்காத அம்மாக்களில் ஒருவர் மாலதியின் தாய். கல்யாணத்திற்கு மாலதி செல்லவில்லையென்றால் ‘வயிற்றெரிச்சல்’ காரணமாக வரவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று கூறி, மகளை அழ வைக்கும் அளவிற்கு உளவியல் நுட்பமும், கடுமையும் நிறைந்தவர் போல் முதல் தோற்றத்தில் தெரிகிறார். ஆனால் அவருடைய கோணத்தில், மற்றவர்கள் மனதில் என்ன நினைப்பார்களோ என்பதற்காக ஒரு வேலையை விடுவது முட்டாள்தனமான ஒன்றாக இருக்கக்கூடும். யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் எதை எதையோ எண்ணி நல்ல (அதிக ஊதியம் கொடுக்கக்கூடிய) வேலைக்குச் செல்லாமல், தன் எதிர்காலத்தை மகள் வீணடிக்கிறாளே என்ற ஆதங்கம் கூட இத்தகைய கடுஞ்சொற்களாக வெளிவரலாம்.
மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் மணமானவர், அவருக்கு சுஜனா என்ற பெண்ணுடன் தொடர்பிருக்கிறது. அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டாக்டரை வற்புறுத்துவது மாலதிக்குத் தெரியும். இந்த விஷயம் டாக்டரின் மனைவிக்கும் தெரிந்து, டாக்டர் மிகப் பெரிய நெருக்கடியில் விழப்போகிறார் என்று மாலதி நினைக்கிறாள். அதற்கேற்றார் போல், டாக்டர் மருத்துவமனையில் இல்லாதபோது அவர் மனைவியும், சுஜனாவும் சந்தித்து வாக்குவாதம் செய்ய ஆரம்பிக்க, அந்த இடத்தில் மிகவும் அசௌகரியமான சூழல் உருவாகிறது. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத மாலதி அவமானப்படுத்தப்பட, அவள் வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறாள். (தந்தையின் பணியிடத்திற்கு அவள் செல்ல விரும்பாததற்கான காரணத்தின் உளவியலை புரிந்து கொண்டால், அவளின் இந்த முடிவையும் புரிந்து கொள்ள முடியும்). அதே நேரம் அவள் யதார்த்தத்தையும் ஒரு புறம் உணர்ந்தேயிருக்கிறாள் என்பதால் கிளம்பும்போது, தான் திரும்பவும் வேலைக்கு வர வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் சொல்லியனுப்புமாறு கூறுகிறாள்.
நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்க்கும் தெருக்களும், அதன் வீடுகளும், கடைகளும், அந்த மொத்தச் சூழலும் பிறிதொரு நேரத்தில் பார்க்கப்படும்போது நாம் அதுவரை அவற்றை கண்டிராதது போல் வேறொரு தோற்றம் கொள்ளக்கூடியவை. மாலதி தன் வேலையின் இயல்பால் தினமும் நகரம் உயிர் கொள்ளும் முன்பே மருத்துவனைக்குச் சென்று மாலைதான் திரும்புகிறாள். இன்று வேலையை விட்டுவிட்டதால், நீண்ட நாட்கள் கழித்து 9-10 வாக்கில் தெருக்களில் செல்லும் அவள், புதிதானவை போல் அனைத்தையும் கவனிக்கிறாள். இக்கட்டான சூழலிலும் மாலதி உணரும் இந்தக் காட்சி பேதத்தின் நுட்பம் ஒருபுறமிருக்க, அனைவரும் அந்த நாளை எதிர்கொள்ள தயாராகிச் சென்றுகொண்டிருக்க, அயர்ச்சியுடன் சென்று கொண்டிருக்கும் மாலதிக்கோ அந்த நாள் முடிந்தே விட்ட மாதிரிதான் என்பதில் முரணும் உள்ளது.
வீட்டிற்கு திரும்பும் போது, தான் எந்த பெண்ணிற்கும் எதிரியாகக் கூடாது என்று மாலதி நினைக்கும் அதே நேரம், தன் உறுதி திடமானதா என்பதை ஒரு சிறு பரிசோதனைக்குக்கூட உட்படுத்த முடியாது என்று உணரும் போது வருந்துகிறாள். கதை இங்கு முடிகிறது. பெண்களின் துயரை கனிவுடன் பேசுவது என்ற அளவிலேயே சிறந்த கதையாக இருந்திருக்கக் கூடியதை இன்னொரு கோணத்தில் பார்க்க கதையில் உள்ள ஒரு நிகழ்வு உதவுகிறது.
டாக்டரின் மனைவிக்கும் சுஜனாவுக்கும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்ற, சுஜானா அவளை அடித்து விடுகிறாள். டாக்டர் மனைவி ஸ்தம்பித்து வேறெதுவும் செய்ய முடியாத நிலையில், தன் தோளைத் தொட வரும் மாலதியை நோக்கி “.. நீ வேலை பண்ண வந்திருக்கையா, வசியம் பண்ண வந்திருக்கயா..” என்று கோபப்படுகிறாள். 18வது அட்சக்கோடு நாவலில் ஒரு நிகழ்வு. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று நடக்கும் போராட்டத்தின் போது, சந்திரசேகரனின் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள், வகுப்புக்களுக்குச் செல்லும் அவனைப் போன்றவர்களிடம், வளையல் தந்து கேலி செய்கிறார்கள். அந்த இடத்திலிருந்து ஓடி வந்து விடும் அவன் அவர்களை தொலைவில் இருந்து கவனிக்கும்போது, காரில் வருபவர்களிடமோ, சிரித்துப் பேசிக்கொண்டு வருபவர்களிடமோ அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை என்று தெரிகிறது.
முதல் பார்வையில் இரு நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றையே சுட்டுகின்றன. சந்திரசேகரனின் கல்லூரி பெண்களுக்கு காரில் வருபவர்களை எதிர்கொள்ள திராணி இல்லையென்றால், டாக்டரின் மனைவிக்கு சுஜனாவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடிவதில்லை. இரண்டு நிகழ்வுகளிலும் தாங்கள் எதிர்கொள்ள முடியாதவர்களை தவிர்ப்பவர்கள், தங்களுக்கு கீழே உள்ளவர்கள் என அவர்கள் வரையறுக்கும் எளியவர்கள் மேல் எந்த தயக்கமும் இல்லாமல் வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். நாளை டாக்டர் சுஜனாவையும், மனைவியையும் சமாதானப் படுத்தக் கூடும். அவர் மாலதியை வேலைக்கு வருமாறு அழைத்து அவளும் யதார்த்த நிலையை எண்ணி மீண்டும் செல்லக்கூடும். ஆனால் எந்த காரணமோ, குற்றவுணர்வோ இல்லாமல் தன் மீது எப்போது வேண்டுமானாலும் சுமத்தப்படக்கூடிய இழிவுக்கு அவள் ஒவ்வொரு கணமும் தயாராக இருக்க வேண்டும்.
எளியவர்கள் அன்றாடம் சந்திக்கும் இழிவுகளை பரிவுடன் சுட்டும் இந்த நிகழ்வு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாரைப் பற்றியதாக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான மானுடத்தைத் தொட்டு, அதனுடன் உரையாடுவதால் அசோகமித்திரனின் புனைவு வெளியில் இந்தக் கதை முக்கியமான மைல்கல்லாகிறது.
No comments:
Post a Comment