Monday, April 4, 2016

இந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள் - இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்/இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/03/27/indira/) ​​
-----------------
பிரபலமான வீணைக் கலைஞர் 'ராமச்சந்திரன்பற்றி  தன் தோழி சரோஜாவிடம்இந்திரா ('இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்') கேட்கப் போக , அவர் யார் என்றே தெரியாதது போல் முதலில் பதில் சொல்லிபிறகு  "எல்லாம் கேட்டிருக்கிறேன். ஒரு வாத்தியம் என்றால் அதனிடம் மரியாதைபக்தி எல்லாம் வேண்டாம்குரங்கை ஆட்டிக் காண்பிப்பது போலவா வீணையை வாசிப்பது" என்று அவரைக் கடுமையாக விமர்சிக்கிறாள் சரோஜா.  இவளால் இப்படி நுட்பமாக விமர்சிக்க முடியுமா என்று நம்ப முடியாமல் அவளை  இந்திரா கூர்ந்து பார்க்க ,  தான் வீணை கற்றுக்கொள்ளும் வாத்தியார் தான் அப்படிச் சொன்னார் என்று உண்மையை தயங்கிய படி சரோஜா சொல்கிறாள்.

நாம் மதிக்கும் ஒருவரின் கருத்தைஅதை புரிந்து கொள்ளாவிட்டாலும்நம்முடையது போலவே சொல்வதின் நுண் சித்திரம் இது.  தன்  ஆசையை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லும் தந்தை"அழுத மூஞ்சி சிரிக்குமாம்,  கழுதைப் பாலைக் குடிக்குமாம்"  என கேலி செய்பவர்களை நீங்கள் எனக்கு தம்பி தங்கைகளே இல்லை என இந்திரா பழிப்பதுதிருவிழாவுக்கு போவது போல் கும்பலாக  கச்சேரி கேட்க கோவிலுக்கு செல்வதுஅங்கு தன் சங்கீதம் பற்றி அதிகம் தெரியாத தாய் கேட்கும் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு   பதில் சொல்வதுசற்று நேரத்தில் வாயைத் திறந்து கொண்டே அவள் தாய் தூங்கி விடுவது என வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்திராவின் ஆசையைப் பற்றிய கதையில் பெரும் பகுதி இத்தகைய சித்தரிப்புக்களால் தான் நிறைந்திருக்கிறது. 

இலக்கில்லாமல் செல்வது போல் தோன்றினாலும் வாசகனே அறியாதவாறு அவனை தான் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வார் அசோகமித்திரன்.  சரோஜாவின் வாத்தியாரைப் பார்த்து விட்டு திரும்பும் இந்திராவைக் கடிந்து கொள்ளும் அவள் தாயிடம் அவள் நடத்தும் உரையாடல் இந்தக் கதையில் அத்தகைய ஒரு இடம்..முதலில் இந்திராவின் விருப்பத்துக்கு ஒப்புக்கொள்பவர்,  வீணை கற்றுக் கொள்ள கட்டணம் 20 ரூபாய்  என்றவுடன்  'இருபது  ரூபாயாஎன்று  ஒரு கணம் மலைக்கிறார். அவர் தாய் கொத்தமல்லிபச்சை மிளகாய் வாங்க  பேரம் பேசுவது போல் இப்போது செய்வதாக இந்திராவுக்கு தோன்றதொடர்ந்து அவர்  உடைந்த மூக்குக் கண்ணாடியை தொடர்ந்து உபயோகிப்பதுமாதக் கடைசியில் பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது நினைவில் வர  இங்கு ஒரு திறப்பு அவளுக்கு கிடைக்கிறது.  நிறைய செலவாகும் என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்போது கற்றுக்கொள்ளப் போவதில்லை என அவளேதாய் வற்புறுத்தியும் உறுதியாக இருக்கிறாள். 

குழந்தைமை மறைந்து இந்திரா முதிர்ச்சி அடையும்  கணம் என்ற அளவில் முடிந்திருக்கக் கூடிய கதையில்,  இந்திராவிற்கும் வாசகருக்கும் இன்னொரு திறப்பை அளிக்கிறார்  அசோகமித்திரன். இரவு தூக்கம் வராமல் படுத்திருக்கும் இந்திராஅம்மா சப்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டிருப்பதை உணர்வதோடு கதை முடிகிறது. தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதனாலாஅல்லது இளமையில் இதே போல் நிறைவேறாமல் போன தன் ஆசையை எண்ணியா அல்லது இரண்டினாலுமாஎதனால் இந்திராவின் தாய் அழுகிறாள் என்பதற்கான பதிலை வாசகனின் யூகத்திற்கே அசோகமித்திரன் விடுகிறார்.

தாய் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா இப்போது மத்திம வயது பெண். ('இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை'). இந்தக் கதையில் அவளின் இள வயது ஆசை நிறைவேறவில்லை என்று தெரிய வருகிறது. தன் மகன் கோபுவை பாட வைக்க அவள் முயலஅவனோ கராத்தே கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். நிறைவேறாத  ஆசைகளை  பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று இந்தக் கதையை   விமர்சிக்கலாம். ஆனால் கதை இந்திரா தன் ஆசையை மகன் மீது திணிப்பதைப் பற்றியல்ல. அவனின் ஆர்வமின்மைக்காக வருத்தப்பட்டாலும்இந்திரா அவனைக் கடிந்து கொள்வதில்லை.

இந்திராவிற்கு அவள் சகோதரர்களின் நண்பன் சங்கரன்வீணை ராமச்சந்திரன் குறித்த அவன் கருத்துக்கள்பொதுவாகவே அவன் தரப்பை தன்மையாக எடுத்து வைக்கும் அவன் குணம் எல்லாம் இப்போது  நினைவில் வருகின்றன. ஒரு நாள் நீ இல்லாமல் நான் இருக்க முடியாது என்று அவளிடம் சொல்லும் அவன்அடுத்த சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுகிறான். இந்த நினைவலைகளைத் தொடர்ந்து அ.மியின்  புனைவில் அதிகம் காண முடியாதயதார்த்தத்தைக்  கடந்து செல்லும் , பகற்கனவின் சித்தரிப்பில்  சங்கரன் அவள்  வீட்டிற்கு வருகிறான். இந்திரா நரைத்த தலைமுடியுடன் இருக்க அவன் மட்டும் அன்று பார்த்தது போலவே இருப்பதாகச் சுட்டப்படுவதில் உள்ள உளவியல் கவனிக்கத்தக்கது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சங்கரனை மீண்டும் அழைத்து வருமாறு அப்போது வீட்டிற்குள் நுழையும் கோபுவை இந்திரா அனுப்பஅவன் வெளியே யாரும் இல்லை என்கிறான்.
​​
வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இந்திராவின் நிறைவேறாத ஆசை என்று வாசகனுக்குத் தெரியும்.  இந்திராவின் சங்கரன் குறித்த நினைவுகளும்அதைத் தொடரும் பகற்கனவும்  அது ஒன்று மட்டுமே அவளுடைய நிறைவேறாத ஆசை இல்லையோ என்ற உணர்வைத் தருகிறது. அவளில்லாமல்
​​
அவனால் இருக்க முடியாது என்று ஒரு நாள் சங்கரன் சொல்லி விட்டுச் செல்லஇந்திராவிற்கோ தன் மீது அவன் பெரிய சுமையை தூக்கி வைப்பது போல் தோன்றுகிறது.​ அவன் குறித்து அவளுக்கிருக்கும் நேர்மறையான அபிப்ராயத்தை
 சுட்டும் சம்பவங்களை வைத்து,  ​அது மற்றவர்கள் அறிந்து விடக் கூடாது என்ற பயம் கலந்தஅதே நேரம் இனிமையும் கூடிய சுமை தான் என்று யூகிக்க முடியும். 
​ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருவது நின்று விடுகிறது.  
​​
வீணை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவளின் ஆசையைப் போல் அழுத்தமானதாக இதைச் சொல்ல முடியாவிட்டாலும்சங்கரன் குறித்த நினைவுகள்  இத்தனை ஆண்டுகளாக அவள் மனதின் ஒரு மூலையில்  அழியாமல் இருந்தது என்பதை அவள் பகற்கனவு உணர்த்துகிறது. இருவருக்கும் ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால் சம்பந்தம் கூட செய்து கொள்ள முடியாது என்று சங்கரன் ​கூறுவதாக இந்திரா காணும் பகற்கனவில்இன்னும் சில சொல்லப்படாத விஷயங்கள் உள்ளன. 
​வீணை கற்றுக்கொள்ள தனக்கிருந்த ஆசையை அவள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். ஆனால் சங்கரன் குறித்துஅவள் யாரைத் தேடுகிறாள் என்று கோபு கேட்பதற்கு 'சங்கரன்என்று இந்திரா சொல்ல அவன் உதட்டைப் பிதுக்குகிறான். 'அவள் சங்கரன் என்றாலும் சர்தார் சிங் என்றாலும் அவனுக்கு ஒன்று தான்'  என்று அசோகமித்திரன் சொல்லும் போது இந்திராவின் - யாருடனும் பகிர முடியாத - அந்தரங்க சோகம் தெரிகிறது. 

ஒரு வேலை சங்கரனை மணந்திருந்தால் அவள் ஆசைகள் நிறைவேறி இருக்கலாம். சங்கரனுக்கு என்ன ஆனது என்பதையும் இறுதியில் புனைவு எழுத்தாளனுக்கு  அளிக்கும் 'எல்லாம் தெரிந்த கதைசொல்லிஎன்ற சலுகையின் மூலம் வாசகனுக்கு மட்டும் சொல்கிறார் அசோகமித்திரன். ​​அதை இதுவரை அறிந்திராத இந்திரா இனியும் அறிய மாட்டாள். அவள் நினைவுகளில் எப்போதும் இனிமையை நிறைக்கும் இளைஞனாகவே சங்கரன் வலம் வருவான். 

நிறைவேறாத ஆசைகளுடன் நடுத்தர வயதை அடைந்துள்ள இந்திராவின் வாழ்வும் அவள் தாயைப் போல சப்தமில்லாமல் குலுங்கி அழுவதில் - இதே போல் யாருக்கும் வெளிக்காட்டாமல் மனதோடு குமறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற வாழ்க்கைகளோடு - தான் இணைய வேண்டும். 

3 comments:

 1. எனது சமீபத்திய புத்தக வெளியீடான 'ந.பிச்சமூத்தியிலிருந்து எஸ்.ரா.வரை' உங்கள் பார்வையில் பட்டதா தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் படிக்கவில்லை ஸார், கூடிய விரைவில் படித்து விடுவேன்.

   Delete
  2. நீங்கள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும் போதெல்லாம் அந்த புத்தகமும் அதில் நான் அசோகமித்திரனின் 'எலி' கதையைப் பற்றி எழுதியிருப்பதும் நினைவுக்கு வருகிறது. அதனால் கேட்டேன். தங்களுக்கு பதிலுக்கு நன்றி.

   Delete