Monday, April 25, 2016

புனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/17/ashokamitran-3/)
---------------
நான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்!’ பிறந்தான்.
– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)
கல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.
அ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்? கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.
அதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.
கதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார்? இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.
காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க  பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.
ஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment