Tuesday, April 12, 2016

அசோகமித்திரனின் 'மணல்'

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/04/03/ashokamitran-2/)
----------
'ஒரு காதல் கதை'  என்ற சிறுகதையில் 'அம்மாக்களின் மனசு தான் எவ்வளவு ஆழம்' என்று சங்கரன் யோசிக்கிறான்.  கணவனை இளம் வயதில்  இழந்து பல இன்னல்களை எதிர்கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலில் உள்ள  அசோகமித்திரன் புனைவுலகின் - வாசகன் அடிக்கடி சந்திக்கும் - அம்மாக்கள் அப்படித்தான் இருக்க முடியும். பல இடர்களுக்கிடையிலும் குடும்பம் குலையாமல் இருப்பதற்கான அச்சாணி அவர்களே. 

'மாறுதல்குறுநாவலில் கணவனின் மறைவுக்குப் பின்வேறு துணை இல்லாமல்மூத்த மகள் வீட்டில் வசிக்க வரும்  'அம்மா' , பள்ளி செல்லும் தனது இரண்டாவது பெண்ணால் மூத்த மகள் குடும்பத்தில் பிரச்சனை வரக் கூடும் எனத் தோன்றியவுடனேயேமீண்டும் தன் வீட்டிற்கே செல்லும் முடிவை எந்தத்  தயக்கமும் இல்லாமல் எடுப்பது ஓர் உதாரணம். இந்த வழமையான சூழலை மாற்றிமனைவி/அம்மா காலமானால்ஒரு குடும்பம் அதை எதிர்கொள்ள  முடியாமல்  எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சிதைகிறது என்பதை 'மணல்குறுநாவலில் காண்கிறோம்.  

பி.யு.ஸி படித்துக்கொண்டிருக்கும்மருத்துவராகும் கனவில் இருக்கும் சரோஜினி கல்லூரியில் இருந்து திரும்பி வருவதில் இருந்து குறுநாவல் ஆரம்பித்துவீட்டிற்கு வந்திருக்கும்அவளுடைய திருமணமான மூத்த சகோதரிஅவளுடன் இரண்டு முறை 'வெறுமனே தானே வந்திருக்கேஎன்று - வேறெதையோ கேட்க எண்ணி -  கேட்கும் சரோஜினியின் அண்ணன் மணிஅவனிடம் திரைப்படத்திற்கு அழைத்துப் போகுமாறு வனஜா கெஞ்சுவது என அன்றாடக் குடும்ப நிகழ்வுகளின் தொகுப்பாக நாவல் விரிகிறது. அதே நேரம்மணி வனஜாவிடம் கேட்கும் கேள்விக்கு பின்னால் பொதிந்திருக்கும் உண்மையான - அவன் கேட்க விரும்பும் - கேள்வியும்திரைப்படத்திற்கு  செல்ல வேண்டுமென்ற வனஜாவின் விழைவு அவள் கணவன் வீட்டின் நிலை குறித்து  சுட்டுவதும் என அவற்றிற்கும் இன்னொரு அர்த்தம் தருகின்றனபெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் தான் எப்போதும் முற்றிலும் சுதந்திரமாக உணர்கிறார்களோ?

மணிக்காக பெண் பார்த்து விட்டு சென்ற வீட்டிலிருந்து அப்பெண்ணின் தாயார் வருகிறார். "நாங்க பத்து பவுனுக்கு மட்டுந்தானே நகை போடறோம்னு மனசிலேவைச்சுக்காதேங்க்கோ ... பொண்ணு வேலைக்கு போறவ.. எல்லாமாச் சேந்து நூத்தி தொண்ணூறு வரது ... அப்படியே எங்க கையிலே கொண்டு வந்து கொடுத்திட்டு அதிலேந்துதான் அப்புறம் அவள் செலவுக்கு வாங்கிப்பாள் "
என்று அவள் பேசிக்கொண்டே இருப்பதும் , சரோஜினியின் அம்மா பிடி கொடுக்காமல் பேசுவதும்வெறும் சித்தரிப்பு அல்ல. முடிந்த வரை தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல்கெஞ்சாமல் அதே நேரம் அவர்கள் முடிவை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு தாயின் இயலாமையின் வெளிப்பாடு இந்த உரையாடல். எந்த பதிலும் கிடைக்காமல் அந்த அம்மாள் சென்று விடமணி தன் அம்மாவிடம் இந்தப் பெண்ணிற்கு என்ன குறைச்சல் எனக் கேட்க ".. எனக்கு என்னமோ அந்தப் பொண்ணு இந்தாத்துக்கு சரிபட்டு வருவாள்னு தோணலை. அப்புறம் உன் இஷ்டம்" என்று  கறாராக சொல்கிறார். உண்மையில் அவருக்கு அந்தப் பெண் குறித்து எதிர்மறையான அபிப்ராயம் உள்ளதாஇல்லை தன் மகன் அப்பெண் குறித்து சாதகமாக பேசுகிறான் என்பதால் இப்படி சொல்கிறாரா என்பது யோசிக்கத்தக்கது. இப்படி பதில் ஏதும் சொல்லாமல் பல பெண்களைப் பார்த்து விட்டு, 'இன்னும் மனசுக்கு பிடிச்சது வந்தால் பாக்கறதுஎன்று சொல்வதின்  பின்னணியில்   - ஆண் பிள்ளையைப் பெற்றவள் என்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பான  - ஹோதா தெரிகிறது  என்றால், 'உங்க மனசுக்கு எதைப் பிடிக்கும்ஏன் இந்த பெண்ணுக்கு என்னவாம் என்று மணி சொல்லும் பதிலில்பெற்றோரை மீற முடியாத மணியின் இயலாமையும்அதை வேறு வகையில் கோபமாக வெளிக் கொணரும்  குணமும் புலப்படுகிறது.

சரோஜினியின் அம்மாவின் எதிர்பாராத மரணம்குடும்பத்தின்  சமநிலையை குலைத்து விடுகிறது.  'அக்கறையின்மை' (indifference) இந்தக் குடும்பத்தின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகிறது.  'அம்மாஇழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தவற்றை தொடர்ந்து செய்ய பெரியவர்கள் யாருக்கும் அக்கறையில்லைஅல்லது அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. அம்மா இறந்தவுடன் காரியத்தின் போதேமாலதியின் அக்கா இருவரும் நகை பற்றி பேசுகிறார்கள். பவானி அழுகுரலில் சொன்னாள்  'வளைகாப்புக்கு கட்டாயம் ஒரு ஜோடி கரும்பு வளை  பண்ணிப் போடறேன்னு அம்மா சொல்லிண்டிருந்தாள்' 'கரும்புக் கணு  வளையாஎன்று வனஜா கேட்டாள். பவானி ஒரு விநாடி அசையாமல் இருந்தாள். பிறகு 'ஆம்மாம்கரும்புக் கணு வளைஎன்றாள். அவள் அழவில்லை.  'ஒரு விநாடி அசையாமல்இருந்து பிறகு அவள் பதில் சொல்வதுவாசகனுக்கு உணர்த்துவது  என்னவாக இருக்கக்கூடும்இவர்கள் யாரும் சுயநலமானவர் என கதையில் சுட்டப்படுவதில்லைஇயல்பான தன்னலம் பேணுபவர்களாகவே  அவர்கள்  வார்க்கப்பட்டிருக்கிறார்கள்.  அம்மா இறந்து காரியம் முடிந்தவுடனேயே வனஜா கிளம்பி விடுவது  கணவன் மீதுள்ள அதீத பாசம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அப்பு தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு  வீட்டை விட்டு சென்று விடுகிறான். பெரிய நாடகீயத் தருணங்கள் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் மிக இயல்பான நடக்கின்றன.

சரோஜினியின் தந்தையோஅன்றாட செயல்களில் கூட  ஈடுபட  முடியாதபடி  முற்றிலும் செயலிழந்து விடுகிறார். சவரம் செய்யாத முகத்துடன் வலம் வரும் அவர்அனைத்திற்கும் சரோஜினியை எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார். மணியின் திருமண பேச்சுக்கள் அனேகமாக நின்று விடுகின்றன. அவனும் எல்லாவற்றிற்கும் சரோஜினியை எதிர்பார்ப்பவனாக மாறி விடுகிறான். துக்கத்தினால் உண்டான செயலின்மை என்று இதைக் குறிப்பிட முடியும். அதே நேரம்சரோஜினியின் தோழி ரேணுகா  'நீ வீட்டோடேயே இருந்திண்டு  வேளா வேளைக்குச்  சமைச்சுப் போட்டிண்டிருக்கயே' 'என மணியைப் பற்றி சொல்வதிலும் உண்மை உள்ளது. சரோஜினி போன்ற அனைத்தையும் ஏற்றுச் செய்பவளை உபயோகித்துக்கொள்ளும்  தன்னலம் என்றும் இதைக் கூறலாம். 'உங்க சின்ன அண்ணாவாவது எவளையோ கல்யாணம் பண்ணிண்டு எங்கேயோ இருக்கான். உன் பெரிய அண்ணாவுக்கு அதுக்குக்கூடத் தைரியம் இல்லைஎன்றும் மணி குறித்து ரேணுகா குறிப்பிடுகிறாள். கதையில் இரு முறை மட்டுமே  வரும் ரேணுகா பேசும் இந்த ஒரு  வரியை வைத்தே - எதிர்பார்ப்பும் மெல்லிய ஏமாற்றமும் தந்தமுளையிலேயே கருகிய  -  அதுவரை வாசகன் அறிந்திராத ஒரு உட்கதையை வாசகனுக்கு அ.மி சொல்லி விடுகிறார்.  மணி குறித்து முன்பே தெரிந்து வைத்திருக்கும் வாசகனுக்குரேணுகாவின் ஏமாற்றம் ஆச்சரியம் அளிப்பதில்லை.

அனைவரை விடவும் மிக அதிகமாக பாதிக்கப்படுவது சரோஜினி தான். அவள் கனவுகள் அனைத்தும் கலைந்து போகின்றன. நல்ல மதிப்பெண் கிடைத்தும்,  அவள் படிப்பை நிறுத்த வேண்டியதாகிறது. குடும்பத்தில் அவள் அம்மாவின் இடத்திற்கு வருகிறாள் அல்லது அதை நோக்கி தள்ளப்படுகிறாள். இப்போது குடும்ப நிர்வாகம் முழுதும் அவளுடையது தான். தினசரி வேலைகளோடுபிரசவத்திற்கு வரும் இரண்டாவது சகோதரியையும் அவள் தான் கவனித்துக் கொள்கிறாள். நீண்ட நாட்களுக்குப் பின் எதிரே வரும் ரேணுகாவை சந்திப்பதை சரோஜினி தவிர்க்க எண்ணுவதும்பிறகு அவளுடன் பேசுகையில் "செகண்ட் க்ரூப் எடுத்துக்கிறவா எல்லாருமே டாக்டராகப் போறோம்னுதான் முதல்லே நினைச்சுண்டிருப்பா"  என்று சொல்வதில் தெரியும் நிராசையும்அப்படி எதுவும் இல்லை என தன்னையே ஏமாற்றிக்கொள்ள முயலும் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் வாசகனை உடையச் செய்கிறது. இந்தச் சிறியப் பெண் மேல்அவள் வயதிற்கு மீறிய பாரத்தைச் சுமத்துவதைக் குறித்தோ , இவ்வளவு திடீர் மாற்றத்தால் அவளுக்கு ஏற்படக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தோ  யாரும் கவலைப்படுவது போல் தெரியவில்லை. ரேணுகா மணி குறித்து சொல்வது சரோஜினியின் குடும்பத்தினர்  அனைவருக்கும் பொருந்தும். இப்போது சமநிலை கொண்டவளாக சரோஜினி தோன்றினாலும்அவள் தன்னையறியாமலேயே பூசிக்கொண்டிருக்கும் 'முதிர்ந்த பெண்என்ற அரிதாரம் எளிதில் கரையக் கூடும் என்ற அச்சம் வாசகனுள் ஏற்படுகிறது. 

அவ்வச்சத்தை உண்மையாக்குவது போல்  போட்டோ கடைக்காரன் ஒருவன்,   தன்னைச் 
சந்திக்க பூங்காவிற்கு வருமாறு சரோஜினியிடம் சொல்கிறான். தன் முகத்தில் இன்னும் சிறிது உற்சாகம் இருந்திருந்தால்  கூட அவன் அப்படி செய்திருக்க மாட்டன் என்று தான் சரோஜினிக்கு முதலில் தோன்றுகிறது. அவளுடைய களைத்துப் போனசோர்வான தோற்றமே அவனுக்கு தைரியத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறாள். குடும்பமே கதி என்று ஆன பிறகுஅவளுக்கு தன்னை கவனித்துக் கொள்ள எங்கே நேரம். வீட்டிற்கு திரும்பும் சரோஜினி வழக்கம் போல் அன்றாட வேலைகளைச் செய்கிறாள். ஆனால் எந்தக் காரணமும் இன்றி  வீடு முழுவதையும் அவள் துப்புரவு செய்வது தன் எண்ணங்கள் அலைபாய்வதை தடுக்கவா என்றே அவள் செய்கைகளை வாசகன் கவனித்துக் கொண்டிருக்கிறான். கண்ணாடியில் காணும் முகத்தை 'குழந்தை முகம்என இனி யாரும் சொல்ல முடியாது என அவள் நினைப்பது ஏன் என யூகிக்க முயல்கிறான். சரோஜினியிடம் தென்படும் அமைதிக்கு நேர்மாறாகவாசகன் பதட்டத்தில் இருக்கிறான். வெளியே சென்று வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பும் அவள்தான் அவசரப்படவில்லை என்று சொல்லி கொண்டே நடந்து செல்ல பூங்காவை நெருங்கி விட்டதை உணர்கிறாள். கதை முடிகிறது.    

சரோஜினி எந்த யோசனையும் இல்லாமல் தான் அங்கு வந்தடைந்தாளா அல்லது திட்டமிட்டேவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு சிறு பெண்ணிற்கு வயதுக்கு மீறிய பாரம் அழுத்தும்/ அழுத்தப்படும்போது ஏற்படக்கூடிய ஒரு கொதி நிலை (breaking point)  அல்லது தன்னழிப்பு மனநிலை (self destructive streak) என்றெல்லாம் அவள் செயலைக் குறித்து பேசலாம். இந்த நொய்மையான  தருணத்தை சரோஜினி எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்து விடுவாளாஅல்லது இது அவளது வாழ்வை  திசை மாற்றி விடுமா என்று பதைக்கலாம். ஆனால் இவற்றினூடேஅவள் தாய் மட்டும் இருந்திருந்தால் இவை எதுவும் நடந்திருக்காது என்ற எண்ணமும் மனதில் ஓடியபடியே இருக்கிறது. அவர் உயிருடன் இருந்திருந்தாலும் சரோஜினி மருத்துவம் படிக்க முடியாமல் போயிருக்கக்கூடும். ஆனால் சரோஜினியின் உளச் சிக்கலை கண்டிப்பாக அவர் புரிந்து கொண்டுஅதை திசை திருப்ப வேறேதேனும் வழியைக் கண்டு பிடித்திருப்பார் என்று நிச்சயமாக நம்பலாம்.

எழுத்தாளர்கள் புனைவில் செய்யும் தேர்வுகளின்  பின்னணியும் வாசிப்பின் பாதைகளும் 

அ. மி. தன் சிறுகதை தொகுப்பு ஒன்றின் முன்னுரையில், 'மணல்குறுநாவலை  பூங்காவில் வைத்து எழுதியதாகவும் , கதையின் இப்போதைய முடிவின் இடத்திற்கு வந்த போது,  மழை பெய்ய ஆரம்பித்ததால் அத்துடன் கதையை நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிடுகிறார். இது குறித்து 'அறிவுக்கு பொருந்தாததாகத் தோன்றுகிறதேஎன்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு'எனக்கு இயற்கையின் யாப்பமைதி மீது நம்பிக்கை உண்டு. ..... நம் வாழ்க்கையில் ஏதாவதொரு நேரத்தில் நாம் புற உலகுடன் மிக உயர்ந்தநுண்ணிய வகையில் ஒன்றுபட்டுவிடக்கூடும். அப்படி ஒன்றித்துப் போன காலத்தில் தான் 'மணல்குறுநாவல் மழையால் மிக நேர்த்தியாக முடிவு பெற்றது என்று நான் நினைக்கிறேன்.என்று பதிலளிக்கிறார். எழுத்து தன்னிச்சையாக அடையும் 'யாப்பமைதிபற்றிய இந்த பதிலைவாசகர்கள் புனைவைஅது விட்டுச் செல்லும்/ செல்வதாக அவர்கள் நினைக்கும் இடைவெளிகளை புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சியோடும்  இணைத்துப் பார்க்கலாம்.  ஒரு படைப்பைப் பற்றிய அதை எழுதியவரின் கோணத்தைத் தவிரவும் பல மாறுபட்ட -எழுத்தாளரே சென்றிடாத திசையில் பயணிக்கக் கூடிய - வாசிப்பு இருப்பது இயல்பே. ஆனால் ஒரு எழுத்தாளர் தன் படைப்பின் பின்னணி/பாத்திரங்களின் தேர்வுகள் குறித்து  முழுதும் விளக்கி விட்டால்வாசிப்பில் வாசகனின் பங்கு என்ன?  அதன் பின்பும்  வாசகன் தன்னுடைய அழகியல் (aesthetic sensibility)  சார்ந்து உருவாக்கும்  கற்பனையின் ராஜபாட்டையில் பயணிக்க இயலுமாஅல்லது அவன் அவ்வெழுத்தாளர் வகுக்க நினைத்த பாதையில் செல்லவே உந்தப்படுவானா.  தன் படைப்பைப் குறித்து ஒரு அளவுக்கு மேல் அதன்  எழுத்தாளரை விளக்கச் சொல்லக் கூடாது என்பதன் காரணம் இது தானோ.  'மணலின்முடிவு அமைந்த விதம் குறித்து நமக்குத் தெரிந்தப் பின்சரோஜினி தெரிந்தே பூங்காவை நோக்கிச் சென்றாளாஅல்லது தன்னிச்சையாக சென்றாளாஅடுத்த என்ன நிகழும்  போன்ற கேள்விகளின் இடம் என்ன

பின்குறிப்பு: 
 'சொல்லப்பட்ட கதையும்சொல்லில் வராத கதைகளும்' (http://solvanam.com/?p=30619) கட்டுரையில் உள்ள,  எழுத்தாளரின் நோக்கத்தை மீறும்  வாசக மனப் பயணத்திற்கான இன்னொரு  உதாரணம். 

...இங்கு எழுத்தாளரின் நோக்கம் (authorial intention) பற்றியும்அதை வாசகர் மீறிச் செல்லலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்குச் சரியான பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு நோக்கம் என்ன என்பதை ஒருவர் பிசிறில்லாமல் அறுதியிட்டுக் கூறுவது சாத்தியமாஇங்கு ஒரு பக்கவாட்டுப்பயணம். ‘It Happened in Boston?’ நாவலின் பின்னுரையில் அதன் ஆசிரியர் ரஸ்ஸல் க்ரீனன் (Russell H. Greenan) ஒரு வாசக எதிர்வினை குறித்துச் சொல்வதைப் பார்ப்போம்.


“One woman complimented me on how cleverly I worked the title into the narrative. She had the process backward, however. When I submitted the manuscript I called it Alfred Omega. My editor, Lee Wright, who strove mightily to promote the novel, felt the word “Boston” should be part of the title and suggested borrowing the sentence “Who would believe such things could happen in Boston?” from the text. But Bennet Cerf considered that too long, so we settled on It Happened in Boston?….”

No comments:

Post a Comment