பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/24/teju-cole/)
------------
------------
And there, behind it, marched so long a
file
Of people, I would never have believed
That death could have undone so many souls.
என்ற 'இன்ஃபெர்னோவின்' (Inferno) வரிகளை 'Every day is for the thief' கதைசொல்லி ஒரு திருமண நிகழ்வின்போது நினைவு கூர்கிறார். பல்லாண்டுகளுக்குப்
பின் தன் தாய் நாடான நைஜீரியாவிற்கு திரும்பியிருக்கும் அவர் அணிவகுத்துச்
செல்லும் வரிசையில் காண்பது, இறந்தவர்களை
மட்டுமல்ல, உயிரோடிருந்தும் அவர் நினைவுகளிலிருந்து
விலகியவர்களையும்தான். தன் கடந்த காலத்தினூடாக ஒரு பயணமும், தன் நாட்டின்
நிகழ்காலத்தினூடாக இன்னொரு பயணமுமாக அவர் விவரிக்கும் - எந்தத்
வெளிப்படையான தொடர்பும் இல்லாத 27 அத்தியாயங்கள் கொண்ட - இந்தச் சிறு நூல் 'குறுநாவல்' என்று
வகைப்படுத்தப்பட்டாலும், நினைவுக் குறிப்புகளாகவும் பார்க்கப்படும் சாத்தியம் உண்டு . இந்த விதத்தில் அசோகமித்திரனின் 'ஒற்றனை' ஒத்திருப்பதோடு, அந்நூல் வாசகனுள்
உருவாக்கும் உணர்வையும், எழுப்பும் கேள்வியையும் இங்கும் எழுப்புகிறது. ஒற்றன் எத்தேச்சையாக தோன்றினான்
என்று அ.மி சொல்வதற்கு நேர் மாறாக, "I’m
very interested in fictional forms that challenge our idea of what fiction
is," .... "I think a lot of people will read Every Day Is for the
Thief and feel that it’s nonfiction, but that confusion is
intentional," என்று இந்நூல்
குறித்த ஒரு பேட்டியில் கோல் சொல்கிறார்.
சந்தையில்
குழந்தையைத் திருட முயன்றதாகக் கூறி, டயரொன்றினுள் திணிக்கப்பட்டு காவல்துறை
அதிகாரிகளின் கண்முன் எரித்துக் கொல்லப்படும் 11 வயது சிறுவன், திருட வருவதற்கு சில நாட்களுக்கு முன்
அவ்வீட்டின் நாய்களை விஷம் வைத்து கொல்பவர்கள் (உண்மையில் அது திருட்டு
நிகழப்போவதற்கான சமிக்ஞையாக புரிந்து கொள்ளப்படுவது நகைமுரண்தான்), தாங்கள்
நுழைந்த முதல் வீட்டிலிருந்து ஒருவனை அழைத்துக்
கொண்டு, அவன் மூலம் அடுத்த வீட்டிலுள்ளவரை கதவைத்
திறக்கச் செய்து அங்கும் கொள்ளையடித்து, பிறகு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு
செல்வதும் - அதிகாரத்திற்கு பயந்த காலம் கடந்து போய் சக குடிமகனையே யார் என்ன
செய்வார்கள் என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையின் - மிகைப்படுத்தப்பட்ட உண்மையின் கோர புனைவாக
தோன்றும் அதே நேரத்தில், உண்மையில் 11 வயது சிறுவன் எந்த தயக்கமும் இல்லாமல் பல
பேர் முன இப்படிக் கொல்லப்படக் கூடுமோ என்ற பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய ஒரு
குழு மனப்பான்மையின் தீர்ப்பை Lagos நகரை பின்புலமாக வைத்து புனையப்பட்டுள்ள பென்
ஒக்ரியின் (Ben Okri) 'Stars of the new
Curfew' தொகுப்பில்
உள்ள 'When the lights return' கதையிலும் காண முடிகிறது. இரு நூல்களிலும்
நைஜீரியாவின் நிகழ்கால அவலத்தை காண முடிகிறது என்றாலும், ஒக்ரியின் தொகுப்பைப் போல
-கொடுங்கனவுகளால் நிறைக்கப்பட்ட, உண்மையின் சாயல் கொண்ட - புனைவுலகமாக 'Every day is for the thief'யும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
முதல்
பார்வையில், கோபம்/ ஆற்றாமை தவிர்த்த வேறு எந்த உணர்வெழுச்சியும் இல்லாத, அன்றாட நைஜீரிய
நாட்களின் துல்லியமான -நூலில் அவர் இணைத்துள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களை ஒத்த - சித்திரத்தை நூலெங்கும் அவர் அளிப்பதன்
மூலம் புனைவின் சாயலை முடிந்தளவுக்கு குறைப்பது முதல்
காரணம். 'ஒற்றனின்' காணக்கூடிய புனைவின் அம்சத்தைவிட இதில் குறைவாகவே பார்க்க முடிகிறது என்றே
சொல்லலாம். பேருந்தில் பயணிக்கும் கோல், 'Michael Odjante'ன் நூல் ஒன்றை வாசித்தபடி அதில் ஏறும் பெண்ணின்
முகத்தைப் பார்க்க முடியாமல் போனாலும், அந்தப் புள்ளியிலிருந்து, அவள்
இப்புத்தகத்தை எங்கு வாங்கி இருக்கக்கூடும், நைஜீரியர்களின் வாசிப்புப் பழக்கங்கள் (அல்லது
பழக்கமின்மை) குறித்த சிந்தனைகளுக்குச் செல்கிறார். தன்னையொத்த ரசனை கொண்ட ஒருவரைக்
கண்டவுடன் ஏற்படும் இயல்பான ஆர்வத்தில், அவளிடம் பேசுவதற்கான விஷயங்களை, தன்னுள்ளேயே (monologue) பேசிக்கொள்கிறார். 3 பக்கங்களில், நிதானமான நடையை கொண்ட இந்த
அத்தியாயம், ஒரு சந்திப்பைப் பற்றிய அனுபவக் குறிப்பாக வாசிக்கப்படவே அதிகம்
வாய்ப்புள்ளது.
அருங்காட்சியகத்திற்குச்
செல்பவர், அது அரிய கலைப்பொருட்களின் சேகரிப்பாக இல்லாமல், ஏனோ தானோ என்று அரசின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டிருப்பதையும், அதன் நீட்சியாக வேலை
செய்பவர்களின் அசிரத்தையையும் பதிவு செய்கிறார். அங்கு அவர் கண்டதாக குறிப்பிடும் ஒரு சில விஷயங்கள்
புனைவாக, சற்றே மிகைப்படுத்தப்பட்டவையாக - அங்கு வேலை செய்யும் பெண் கோல்லை கண்டு
கொள்ளாமல் ஸ்தோத்திர துதியை சொல்லியபடி இருக்கிறார் - இருக்கக்கூடும், ஆனால் அவர்
அத்தியாயம் முழுதும் சுட்டும், எந்த கலைப்பிரக்ஞையும் இல்லாத ஒரு சூழல், அதற்கு அபுனைவின் தொனியையே தருகிறது. "Why is history uncontested here? There is no sight of the
dispute over words, that battle over versions of stories that marks the
creative inner life of a society. Where are the contradictory
voices?" என்று வேறொரு
இடத்தில் கோல் கேள்வி எழுப்புவதை புனைவின் குரலாக
அல்லாமல், நிஜத்தின் ஆற்றாமை நிறைந்த குரலாகவே கேட்க
முடிகிறது.
உணர்வுபூர்வமாக
அனைத்திலிருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் விலகியே இருக்கும், ஆனால்
எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் அவதானிப்புக்கள்
எனும் தொனி நூலில் விரவி இருப்பதும் அதற்கு நாட்குறிப்பின் சாயலைத் தருகிறது. விலகியே
இருத்தல் என்பதின் நீட்சியாக, நம்பிக்கையின், ஆசுவாசத்தின் சுவடே இல்லாத எதிர்மறை நோக்கு
மட்டுமே இந்நூலில் உள்ளது, முதலாம் உலக நாடுகளில் பல்லாண்டுகள் வசித்து
தாய் நாடு திரும்புபவர்களிடம் காணக்கூடிய அதே சலிப்பைத்தான் கோலும்
வெளிப்படுத்துகிறார் - அமெரிக்காவில் இருந்து புறப்பட நைஜீரிய தூதரகத்தை
அணுகும்போது லஞ்சத்தை எதிர்கொண்டு கோல் துணுக்குறுவதை அமெரிக்காவில் லஞ்சமே
இல்லையா என்ற கேள்வியோடு எதிர்கொள்ள முடியும்- என்ற மேலெழுந்தவாரியான விமர்சனம்
உருவாகுவதும் சாத்தியமே. இந்த விமர்சனம் காத்திரமானதா என்பது ஒருபுறம்
இருக்க, வாசகன் மேலோட்டமாக உணரக்கூடிய இத்தகைய கசப்பும்கூட,- புனைவு
அளிக்கக்கூடிய முப்பரிமாணச் சித்திரம், பன்முகப் பார்வைகள் - இவை இல்லாத, எதிர்மறை
அனுபவங்களின் தொகுப்பாகவே நூலை முன்னிறுத்தக் கூடும்.
வெளிப்படையாகச்
சொல்ல முடியாத ஏதோ ஒரு பிணக்கு/ காயம் காரணமாகவே
அவர் நாட்டை நீங்கினார் என்பதைச் சுட்டும் சில இடங்கள் நூலில் உள்ளன என்பதால் அவர்
வெளியாளாக அனைத்தையும் கவனிப்பது போல் வாசகனுக்குத்
தோன்றுவது கோலின் மனநிலை சார்ந்து இயல்பான ஒன்றே. அதே போல் "The house of course is unchanged. Memory and the
intervening years many of which I have spent in cramped English flats and
American apartments, limitations I have endured like a prince in exile.
Now, in the cool interior of this great house in Africa, proper size is
restored." போன்ற வரிகளில் உள்ள
வலியையும், அவர் தன்னெஞ்சிலிருந்து நைஜீரியாவை
முற்றிலும் அகற்றவில்லை, அகற்றவும் முடியாது என்பதையும் உணர முடியும்.
நூலின்
அபுனைவு தோற்றத்திற்கு அங்கங்கு இணைக்கப்பட்டுள்ள கருப்பு வெள்ளை
புகைப்படங்களும் வலு சேர்க்கின்றன. இந்தப்
புகைப்படத்தில்
இருப்பவர் தான் 'Michael
Odjante'ஐ
படித்துக்கொண்டிருந்தவராகவோ, கலங்கிய
இந்தப் புகைப்படம், புகைமூட்டமாக
உள்ள கோலின் கடந்த காலத்தையும், துலக்கமாக
விளங்கிக்கொள்ள முடியாத நைஜீரியாவின் நிகழ் காலத்தையும் சுட்டுவதாகவும் இருக்கலாம்.
அவ்வப்போது இடையிடும் இத்தகைய புகைப்படங்களை உணர/ புரிந்து கொள்வதற்காக, வாசிப்பை சில
கணங்கள் நிறுத்தி விடுகிறோம். கோல் சொல்வது போல் 'புனைவு' என்றால் என்ன
என்பது குறித்த நம் கருத்தாக்கங்களுக்கு சவால் விடுபவையாக இவை உள்ளன.
புகைப்பட
உத்தியில் மட்டுமின்றி, திடீர் பயணம், அதனூடான அனுபவங்கள், அதன் விளைவான சுயபரிசோதனை
செய்யும் தன்னுரைகள் (introspective monologue) போன்றவற்றால் உருவாகும், புனைவா/அபுனைவா
என பிரித்தறிய இயலாத நூலின் இறுதி வடிவம், என கோலின் எழுத்தின் கட்டமைப்பிலும், நடையிலும் சீபால்ட்டின் (Sebald) தாக்கத்தை காண
முடிகிறது, சீபால்ட் தன்னை பாதித்தவர்களில் ஒருவர் என்று கோலும் சொல்கிறார். குறிப்பாக கோலின் முதல்
நூலான 'Open City'ல் இந்த தாக்கத்தை இன்னும்
அதிகமாக உணர முடிகிறது. கோலின் எழுத்தே சீபால்ட்டின் தழுவல் எனவும் சில
விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கட்டுரை இந்நூலின் வகைமை குறித்த சாத்தியக்கூறுகளையே
மையமாகக் கொண்டுள்ளதால் இந்நூல் பற்றிய விரிவான பார்வையையும் (உண்மையில் அவர் நூல்
முழுதும் எதிர்மறை உணர்வோடு , கசப்பை சுமந்தலைபவரா, நூல் ஒற்றைத்தன்மை
கொண்டதா போன்ற கேள்விகள்), சீபால்ட்/ கோல்
இடையேயான ஒப்புமை/ வேற்றுமையையும் பிறிதொரு
கட்டுரையில் பார்க்கலாம்.
மனச்
சோர்வடையச் செய்யும் பெரும்பாலான அனுபவங்களுக்கிடையில், இசை/நாடகத்திற்காக இயங்கும் ஒரு தனியார் சங்கம்(பணக்காரர்களே சேரக்கூடியதாக
அச்சங்கம் இருப்பதில் உள்ள முரணை கோல் உணர்ந்தாலும், இப்படியேனும் கலைக்கு வடிகாலாக ஒரு இடமாவது
உள்ளதே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார்), இசைத்தட்டுக்களை நேரடியாக விற்பனை
செய்யாமல் அவற்றை பிரதி எடுத்து விற்கும் கடைக்கு மாற்றாக, சட்டபூர்வமாக இசைத்தட்டுக்களை, இலக்கிய நூல்களை விற்பனை செய்யும், இசைக் கலைஞர்களை
ஊக்குவிக்கும் கடை போன்ற ஒரு சில விஷயங்களைப் பார்க்கும் போது "The most convincing signs of life
I see in Nigeria connected to the practice of the arts" என்று நூலின் ஒரு அத்தியாயத்தில் கோல்
உணர்கிறார். அதையே இறுதியில் இந்த நூல் குறித்து நாமும் உணர முடிகிறது. எரிமலையென
கொதித்துருகிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புறச் சித்திரத்தோடு, எரிகுழம்பென
அனைத்தையும் எரித்துக்கொண்டிருக்கும் சமூக பொருளாதாரச் சூழலுடனேயான பயணங்களின்
மூலம் உருவாகும் அகச் சித்திரத்தையும் உயிர்ப்புடன் தீட்டியுள்ள கோலின் கலை
புனைவா/அபுனைவா என்ற கேள்வியை ஒரு கட்டத்தில் தேவையற்றதாக்கி (moot point) விடுவதோடு, புத்தாயிரத்தின்
புதுக்குரல்களில் குறிப்பிடத்தக்கவராக அவரை முன்னிறுத்துகிறது.
No comments:
Post a Comment