பெரு தெய்வங்கள், நாட்டார் சாமிகள் பற்றிய புனைவுகள் பொதுவாக இரு விதமாக இருக்கும். ஒன்று ஆசிரியரோ, அல்லது புனைவின் பாத்திரங்களோ அந்த தொன்மங்கள் பற்றிய கதையை சொல்வார்கள். இன்னொன்று அந்த தெய்வங்களே கதையின் பாத்திரமாக இருப்பார்கள். அவையும் சமூக பார்வையோடு ஒரு பகடியாகவே இருக்கும் (மாடன் மோட்சம்). தெய்வங்களை ரத்தமும் சதையும் உள்ள
பாத்திரங்களாக குணசேகரன் உருவாக்கி இருக்கும் சிறுகதை தொகுப்பு தான் பூரணி பொற்கலை. மிகுதியான கதைகள் நாட்டார் தெய்வங்களின் பார்வையில் தான் சொல்லப்பட்டிருக்கின்றன. அய்யனார், அவரின் குதிரை, வீரனார் எல்லா கதைகளிலும் வருகின்றார்கள்.
இதில் வரும் சாமிகளுக்கு திருவிளையாடல் புரிந்து, பக்தர்களோடு விளையாட எல்லாம் நேரம் இல்லை. மக்களுக்கும் அதற்க்கு எல்லாம் நேரம் இல்லை, அவர்களுக்கு பல பிரச்சனை உள்ளன. அதை சரி செய்யவே சாமிகளுக்கு நேரம் போதவில்லை, இதில் எங்கே திருவளையாடல் புரிய. 'பிராது' என்ற முதல் கதையும் இப்படிதான், வேடப்பர் மக்கள் குறை தீர்த்த அசதியால் தூங்கி விடுகிறார், அதனால் ஒரு பெண் கொடுத்திருந்த பிராதை கவனிக்கவில்லை. அதை பார்த்தவுடன் அவர் கொள்ளும் பதை பதிப்பும் பெண்ணின் குறையை தீர்க்க அவர் செயல்படுவதும் தான் கதை. வேடப்பர், ஒருவர் தன் குடும்பத்தில் துன்பம் வந்தால் என்ன பாடு படுவாரோ அதை போல் வருத்தப்படுகின்றார். விதி, கஷ்டப்பட தான் வேண்டும், இது என்னுடைய விளையாட்டு என்று இல்லாமல் துன்பம் என்றவுடம் பாய்ந்து வரும் சாமியை பற்றி படிக்கும் போது
நமக்கும் நெகிழ்வாக தான் உள்ளது. இதே போல் எளிய மக்களின் பிராதுகள், குடியை நிறுத்துவது, பொருள் திருடு போவது போன்றவற்றை இந்த சாமிகள் தான் தீர்த்து வைக்கின்றார்கள்.
இந்த சாமிகளுக்கு பிரச்சனை இல்லையா? இருக்கின்றது. மக்கள் இவர்களை மெதுவாக மறக்கவும் ஆரம்பிக்கின்றார்கள், கோயில் இதத்தை
ஆக்கிரமிப்பும் செய்கின்றார்கள். பாவம், தங்கள் மக்கள் தானே என்று முதலில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் அய்யனார், பிறகு நிலைமை கை மீறி
போன பின் கோபம் கொள்கிறார். அதானால் பயனில்லை. அவர் கனவில் வந்தும், அந்த ஊர் தலைவர், அய்யனாரை அடையாளம் கண்டு கொள்வதில்லை. வெறுத்துப்போய் ஊரை விட்டே சென்று விடுகின்றார். தங்கள் மண்ணை விட்டு செல்லும் போது ஏற்படும் அதே மன துன்பம் தான் சாமிகளுக்கும், மனதை தேற்றிக்கொண்டு செல்கிறார்கள். பின்னர் ஊர் தலைவர், இதை உணர்ந்து கொண்டு அய்யனாரை தேடுகிறார். ஒரு நாள் அய்யனாரை, ஈயம் பூசிக்கொண்டிருப்பதை பார்க்கின்றார். கதை முடிகின்றது. இதை 'மேல்நிலையாக்கத்தால்' சிறு தெய்வ வழிபாடு குறைவதை பற்றியாத கொள்ளலாம், மேலும் மக்கள் தன் சொந்த மண்ணை விட்டு நகரம் நோக்கி நகர்வதைப்பற்றியதாகவும் கொள்ளலாம்.
மக்களுக்காக தான் சாமிகள், அவர்கள் நலம் காக்க தான் என்பது பொதுவான கருத்து. ஆனால் சாமிகளுக்கும் மக்கள் தேவை. இதை 'புழுதி' கதை சொல்கின்றது. ஒரு கிராமத்தை, கோயில் நிலத்தை, அரசாங்கம் எடுத்துக்கொள்ள, மக்கள் அங்கிருந்து செல்கிறார்கள். அய்யனார், வீரனார் போன்றவர்கள் தங்கள் மக்களுடன் செல்கின்றனர். அங்காலம்மாள் மட்டும் தன் மக்கள் தங்களை பற்றி யோசிக்க வில்லை என்று கோபம் கொண்டு அங்கேயே இருந்து விடுகிறாள். காலம் செல்ல, அரசாங்க வேலைகளால், கோயில் முழுவதும் புழுதி, கவனிப்பாற்று பொய் விடுகின்றது. ஒரு நாள்
அங்காலம்மாள் தடுக்கி விழ அவள் கூறும் 'ஏம் மக்க மனுசாளு கூட இருந்தா, எனக்கு இந்த கதி வருமா, எனக்கு இந்த கதி வருமா', சாமிகளுக்கும், மக்களுக்கும் உள்ள உறவை சொல்கின்றது. அடித்தாலும், பிரிந்தாலும் அவர்கள் ஒரே குடும்பம் போல் தான் இருக்கின்றார்கள்.
பொதுவாக சாமிகள், எல்லையில் இருப்பார்கள், ஊரை காவல் காப்பார்கள் என்பதுடன் அவர்கள் இடம் பற்றி நாம் வேறு எதுவும் நினைப்பதில்லை. ஊரை விட்டு இருப்பதை பற்றி, அந்த சாமிகள் என்ன நினைக்கின்றார்கள். 'படையல்' கதையின் இறுதியில் பூரணி சொல்லும் 'எந்த பொறப்புல என்னா பாவம் செய்தோமோ, சனங்களோட சனங்களா, குடுப்பன இல்லாம, இப்படி அநாதி நடுக்காட்ல நாதியத்து கெடக்கறம்', நம்மை அந்த சாமிகளை நம்முடன் இன்னும் நெருக்கமானவர்களாக எண்ண முடிகின்றது. . சாமிகளாக இருப்பத என்ன வரமா, இல்லை ஒரு சாபமா என்றும் எண்ண வைக்கின்றது.
இந்த தொகுதியில் ஒரு மூன்று கதைகள் தவிர்த்து மற்றவை அனைத்தும், இந்த சாமிகளை பற்றியது தான். ஒரு கதை 'ஆணிகளின் கதை', 'வெள்ளருக்கு' தொகுதியில் ஏற்கனவே வந்துள்ளது. வித விதமான இசங்கள், மாய எதார்த்தம் என்று எழுதுவது நடக்கும் போது, யதார்த்த கதை சொல்லியான கண்மணி குணசேகரன், அனாயசமாக இந்த கதைகளை எழுதி உள்ளார். மேலை நாடு இசங்கள் இல்லாமலே, புனைவில் புதிய சாத்தியங்கள் முடியும் என்பதை இந்த தொகுப்பு காட்டுகின்றது.
தமிழினி பதிப்பகம் - இவர்களுடைய புத்தகங்கள் வெளியே சரியாக கிடைப்பதில்லை, இந்த கண்காட்சியில் இந்த தொகுப்பை வாங்கலாம். கூடவே கண்மணி குணசேகரனின் மற்ற படைப்புக்களையும்.
No comments:
Post a Comment