பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2015/10/11/india-1948/
-----------------------
-----------------------
அசோகமித்திரனின் ‘இந்தியா 1948‘ (குறு)நாவலில், அமெரிக்காவிற்கு அலுவல் சம்பந்தமாகச் செல்லும், திருமணமான கதைசொல்லி, அங்கு படிக்க வந்திருக்கும் விதவை இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இந்தியாவிற்கு திரும்பும் அவன், இரண்டாம் திருமணம் குறித்து தன் குடும்பத்திற்கு தெரிந்து விடுமோ என்ற பயத்துடனும், தன் செயல் குறித்த குற்ற உணர்வுடனும் இருப்பது என நகரும் கதை, சுதந்திரத்திற்கு முன் அமெரிக்காவிற்குச் சென்று, சுதந்திரம் அடைந்தபின் திரும்பும் கதைசொல்லி காணும் சமூக/ அரசியலின் நுட்பமான மாற்றங்களை பதிவு செய்கிறது. கதைசொல்லியின் கோணத்திலேயே நகரும் கதையில், அவன் வாழ்வில் உள்ள பெண்களின் ஆளுமை (சிறிதளவே விவரிக்கப்பட்டாலும்) கதைசொல்லியை விட அதிகமாக வாசகனை ஈர்க்கிறது. குறிப்பாக, கதைசொல்லியின் தாயார், அவன் முதல் மனைவி பார்வதி, இரண்டாவதாக திருமணம் செய்யும் லட்சுமி மற்றும் அவளின் தாய்.
இளம் வயதில் கணவனை இழந்து, சகோதர்களுடன் வசித்து குழந்தைகளை வளர்த்தவர் கதைசொல்லியின் தாய். அவள் அண்ணன், சந்நியாசம் பெற முடிவு செய்து அதற்கு முன் தன் மகள் பார்வதியை கதைசொல்லிக்கு மணம் செய்ய முடிவு செய்யும்போதும் அவருக்கு அது குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை. மகன் வேலைக்குச் சென்று நல்ல நிலைமைக்கு வந்தவுடன், அவரது தாயின் ஆளுமை உருப்பெறுகிறது- அல்லது, அதுவரை அடக்கி/ மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெளிவருகிறது. இது அவர் ஏதோ, மருமகளை கொடுமை செய்கிறார் அல்லது பகட்டாக வாழ ஆரம்பிக்கிறார் என்ற பொருளில் சொல்லப்படுவதில்லை. மருகளை அவர் நன்றாகவே நடத்துகிறார், ஆனால் தன மருமகளுக்கு அவள் எப்போதும் உறவு பேண விரும்பாத மாமியார் தான், தோழி அல்ல, என்பது நுட்பமாக உணர்த்தப்படுகிறது. தன் இரண்டாவது மகனுக்கு பெண் தேடும்போது, அவர் கொள்ளும் உற்சாகம், மணம் பேசப்படும் பெண்கள் குறித்த சந்தேகங்களை அவ்வப்போது கேட்டுத் தீர்த்துக் கொள்வது என அவர் நடந்து கொள்வது ஏதோ படாடோபத்தின் வெளிப்பாடாக இல்லாமல் முதல் மகனின் திருமணத்தில் எந்த வார்த்தையும்/ கருத்தும் பேச முடியாததை ஈடு செய்யும் ஒன்றாகவே பார்க்கலாம். குடும்பத்தில் இறுதி முடிவு எடுப்பவர் என்ற அளவில், அனைத்தும் இயல்பாகவே அவர் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது
ஐந்து வயதில் திருமணமாகி பத்து வயதில் விதவையான லட்சுமி, சமூகவியல் துறையில்டாக்டரேட் செய்ய அமெரிக்கா சென்று படிக்குமளவிற்கு திடசித்தம் கொண்டவள், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். லட்சுமியை ஒரு ஆபத்திலிருந்து கதைசொல்லி காப்பாற்றி , இக்கட்டான சூழலில் அவளை மணம் முடிக்க வேண்டியுள்ளது போன்றெல்லாம் நாடகீயமாக எதுவும் நடப்பதில்லை. ‘லட்சுமி’ என்பவர் உரையாற்றப் போவதாக உள்ளூர் ஆங்கில பத்திரிகையில் படித்து, அவர் தமிழர் என்று எண்ணி கதைசொல்லி செல்கிறார். அங்கு அவர் ‘லட்சுமி’ அல்ல ‘லக்ஷ்மி’ என்ற குஜராத்திப் பெண் என்று தெரிகிறது (Lakshmi என்றே ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் புரிதலில் நிகழும் குழப்பத்தை அ.மி நுட்பமாகச் சுட்டுகிறார்). அவர்களின் அறிமுகம் இவ்வாறு நிகழ்கிறது.
லட்சுமி அமேரிக்கா வந்த இரு மாதங்களிலேயே எந்தெந்த ஊர்களில் எங்கு சைவ உணவு கிடைக்கும் என்ற பட்டியலைத் தயாரிக்கும் ஒழுங்கு உள்ளவள், படிப்பு முடிந்து இந்தியா வந்தவுடன் இயல்பாக இருக்க முடியாத குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி தொடங்க திட்டம் வைத்திருக்கிறாள். சிறுவயதிலேயே பல அனுபவங்களைப் பெற்று மன முதிர்ச்சி அடைந்த லட்சுமி ஓர் ஆணுடனான நான்காவது சந்திப்பிலேயே, என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ஏன் கேட்க வேண்டும், அவன் திருமணமானவன் என்று தெரிய வந்த பிறகும் தன் முடிவில் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்? கதைசொல்லியிடம் அவள் எதிர்பார்ப்பது என்ன? காமமா, பாதுகாப்பா இல்லை பரிவா?
“நீங்கள் ஒருமுறைகூட என்னை உங்கள் அறைக்குக் கூப்பிடவில்லை. அதுவே எனக்கு உங்கள் மீது நம்பிக்கை தந்தது.” என்று சொல்லும் போது அவள் எதிர்பார்ப்பது சமமான நிலையில் இருக்கும் தோழமையை, அதனால் உருவாகும் அன்பை என்று புரிந்து கொள்ளலாம். லட்சுமியின் முடிவு கதைசொல்லியின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவளை மணமானவனை மயக்கும் குடிகெடுப்பவள் (home-breaker) என்று சொல்ல முடியுமா என்ன?
லட்சுமியின் தாயாரும் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டு விதவையானவர். விதவையான மகளின் எண்ணங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார். உனக்கு அவன் மீது நம்பிக்கை இருந்தால் திருமணம் செய்து கொள் என்று சொல்லுமளவிற்கு மகள் மீது அவருக்கும், அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு லட்சுமிக்கு அவரிடமும் பரஸ்பரம் புரிதல் உள்ளது. தன் மகள் வாழ வேண்டும் என்ற பரிதவிப்பு இருந்தாலும், திருமணம் செய்து கொண்டவனின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் கதைசொல்லி இந்த விஷயத்தை தன் குடும்பத்தினரிடம் சொல்லி விட்டானா என்று கேட்டாலும், அது குறித்து அவர் வற்புறுத்துவதில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
இந்த நான்கு பெண்களில், கதைசொல்லியின் செயலால் மிகவும் பாதிக்கப்படப்போகும் முதல் மனைவியான பார்வதி பற்றி வாசகனுக்கு தெரியவருவது குறைவு தான் என்பது முதல் பார்வையில் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் குற்ற உணர்வால், மனைவியை எதிர்கொள்ளும் துணிவு இல்லாத கதைசொல்லி அவளைக் குறித்து/ அவர்களிடையே உள்ள உறவு குறித்து வாசகனிடம் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். தந்தை தனக்கு தன்னிச்சையாக முடிவு செய்த திருமணத்தைக் குறித்தும், கணவன் குறித்தும் அவள் என்ன நினைக்கிறாள். அவளைக் குறித்தும்/ அவர்களுக்கிடையே பெரிய உரையாடல் என்று ஒன்றும் நடப்பது போலவும் கதைசொல்லி எதுவும் சொல்வதில்லை என்றாலும், அவள், இரண்டாம் திருமணம் செய்தது குறித்து தனக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் மனப்போரட்டம் குறித்து சந்தேகம் கொண்டிருப்பாள் என்றே எண்ணுகிறான். வாயில்லாப் பூச்சி என்று அவளை எண்ண முடியாது, தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுப் பெண்ணை (வேறு மொழி/ ஜாதியாக இருந்தாலும்), கணவனின் தம்பி மணிக்கு மணம் முடிக்கும் ஆசை பார்வதிக்கு உள்ளது, அது சில காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், மணியின் மனைவியுடன் சுமுகமாகவே இருக்கிறாள். தெரிந்தவர் என்று கூறி லட்சுமியின் தாயார் வீட்டிற்கு அவர்களை கதைசொல்லி அழைத்துச் செல்வதும், அவர் இவர்கள் வீட்டிற்கு வருவதும், ஏதோ பிரச்சனை உள்ளது என்று பார்வதியின் உள்ளுணர்வில் கண்டிப்பாக தோன்றி இருக்கும். ஆனாலும் அதைப் பற்றி தானாக எதுவும் விசாரிக்காமல் இருக்கிறாள். உண்மை வெளிவந்தவுடன் அவள் முதலில் வருந்தினாலும், தந்தை சொல்வதைக் கேட்டு சற்றே தெளிவடைகிறாள் (அதே நேரம் கதைசொல்லியின் தாயால் அவன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை).
அடுத்து என்ன செய்வதென்று யாரும் முடிவெடுக்க முடியாமல் உள்ள நிலையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்கிறது. கதைசொல்லியின் குடும்பத்தினர், லட்சுமியையும் அவள் தாயரையும் சந்திக்கின்றனர். கதை இங்கு முடிய அடுத்து என்ன நிகழும்?
நாவலில் ஒரு சம்பவம். கதைசொல்லிக்கு அலுவலகத்திலிருந்து கார் அளிக்கப்படுகிறது. ஆனால் கதைசொல்லி காரில் செல்லாமல், ரயிலில் தான் அலுவலகம் செல்கிறார். ஒரு நாள் அலுவல் முடிந்து வீட்டிற்கு வர, வீடு பூட்டி இருப்பதோடு காரும் இல்லை. பிறகு மணியின் மனைவி ஜானகி கார் ஓட்டிவர, பார்வதியும்/ கதைசொல்லியின் தாயாரும் கடைக்குச் சென்று திரும்பி வருகிறார்கள். உனக்கு கார் ஓட்டத் தெரியுமா, ஓட்டும் ஒரிமம் உள்ளதா என்று சற்றே ஆச்சரியத்தோடு கதைசொல்லி கேட்க, 18 வயதிலேயே கற்றுக்கொண்டதாக சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறாள் ஜானகி.
இந்தக் கதையின் பெண்கள் அனைவரும் இதைப் போலவே, கதைசொல்லியும்/ வாசகனும் அறிந்திராத, சரியான நேரத்தில் வெளிப்படும் ஆளுமைத்திறனும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள். எனவே கதை தீர்வு சொல்லாமல் முடியும் இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தோதான முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள் என்று நம்பலாம். திடசித்தம் படைத்த, கதைசொல்லியின் மேல் அன்பும் கரிசனமும் கொண்ட இத்தனை பெண்கள் அவன் வாழ்வில் இருப்பது அவனுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
பி.கு
அ.மியின் ‘பம்பாய் 1944‘ குறுநாவலின் தொடர்ச்சியாக, இன்னொரு பாத்திரத்தின் பார்வையில் விரியும் நாவலாக ‘இந்தியா 1948‘ஐ பார்க்கலாம். இரண்டையும் தனி நாவல்களாகவும் படிக்கலாம் என்றாலும், ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பதும் ஒன்றை ஒன்று நிரப்ப உதவும்.
No comments:
Post a Comment