Monday, October 12, 2015

அசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு”

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/10/04/asokamitran/)
துர்ச்சகுனங்கள் என்று சரளா நம்பும் சில சம்பவங்கள் காலையில் அவள் வீட்டில் நடக்கின்றன. தன் கணவனுடன் வண்டியில் அலுவலகம் செல்லும்போது அவள் அலைபேசியில் பேசவேண்டிய சூழலில், கணவன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து ஒரு கோர விபத்து நிகழ்கிறது. வண்டி ஓட்டும்போது அலைபேசியில் பேசக்கூடாது என்ற செய்தியை எடுத்துக் கொள்ளவேண்டிய கதை மட்டுமா இது? நேரடியான/ விரிவான விவரிப்புக்கள் இல்லாமல், சரளாவின் கணவன் பெயர் ‘ஜான்ஸன்’, தம்பதியர் தனியே வசிக்கிறார்கள், அலுவலகத்திற்கு அவர்கள் தயாராவது என்று நமக்கு அவர்கள் குறித்து அசோகமித்திரன் சொல்லிச் செல்வது, அவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்களா, இரு தரப்பு பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொண்டார்களா, தம்பதியரின் கனவுகள் என்னவாக இருந்திருக்கும் போன்ற கேள்விகளை எழுப்புவதால், சற்று தொலைவில் நடக்கும் விபத்தைப் பார்த்து ஒரு கணம் வருந்தி விட்டு விலகிச் செல்வதைப் போல் இல்லாமல், வாசகனை விபத்திற்கு மிக அருகில் நிறுத்தி சஞ்சலமடையச் செய்கிறது.
இப்படி, ஒன்றைத் தொட்டு ஆரம்பித்து, வேறு பல விஷயங்களைத் தொட்டுச் சென்று ஒரு சரடாக இணைப்பது அமி.யின் புனைவுலகில் புதிதில்லை. 1998ல் வெளிவந்த அ.மியின் ‘புதிய பயிற்சி’ கதையில் கணினி பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக இருக்கும் மகள் அலுவலகத்திலிருந்து திரும்புவதை எதிர்பார்த்து அவர் தந்தை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். மகளின் வரவுக்காக காத்திருக்கும் அந்தப் புள்ளியில் ஆரம்பித்து, சாலைகளின் மோசமான நிலைமை, மகளின் வேலைப்பளு, கணினி யுகம் மலர்வதைப் பற்றிய புரிந்தும்-புரியாததுமாகிய அவருடைய சிந்தனைகள் என்று கதை விரிகிறது. மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற நிலையத்திலேயே பயிற்சியாளராக வேலைக்குச் சேர்வதால்- அவர் மகளே அப்படித்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்- பயிற்சியின் தரம் எப்படி இருக்கும் என்பது போன்ற கூர்மையான அவதானிப்பும் உள்ளது. தன் மகளே தனக்கு போட்டியாளர்களை உற்பத்தி செய்கிறாளே என்ற அவரின் சிந்தனையுடன் கதை முடியும்போது (இத்தனை ஆண்டுகளில் தோன்றிய கணினி நிறுவனங்கள், அங்கு பயிற்சி பெறுபவர்கள்/ பெற்றவர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு இன்று காத்திருக்கும் வேலைவாய்ப்புகளையும் இங்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்) மீண்டும் தந்தையாகி விடுகிறார். இந்தக் கதையை இங்கு குறிப்பிடுவது இதுவும் ‘சகுனம்’ கதை போல் சமகாலத்தில் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்வைத்து ஆரம்பித்து, அதை விரித்துச் செல்கிறது என்பதால். அ.மி எப்போதும் சமூக மாற்றங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், அது குறித்த நுட்பமான அவதானிப்புக்கள் அவரிடம் உள்ளன என்பதும் தெரிகிறது.
இப்படி விரிந்து செல்லும் தன்மையை ‘இரண்டு விரல் தட்டச்சு’ தொகுப்பின் பல கதைகளில் காண்கிறோம். ‘உறுப்பு அறுவடை’, கதைசொல்லியின் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் உரிமையாளனுடன் கதைசொல்லியின் உரையாடலாக ஆரம்பிக்கும் கதை, வெகு தொலைவில் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது, சாலைகளின் மோசமான நிலை, வண்டிகளுக்கு ஏற்படும் விபத்து என்று விரியும்போது இதுவும் இன்றைய சூழல் பற்றிய விமர்சனமா என்று தோன்றலாம். ஆனால் அ.மியின் புனைவுலகு அப்படி ஒரு நேர்க்கோட்டுத் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. வேன் உரிமையாளர் சரவணனின் மனைவியை கதைசொல்லியும் நாமும் சந்திக்கிறோம். குடித்து கல்லீரல் கெட்டுக் கிடக்கும் சரவணன் பற்றி தெரிய வர, அவளுக்கு கதைசொல்லி உதவுகிறார். அந்தப் பெண்மணி கணவனுக்காக படும் இன்னல்களைப் பார்த்து “நான் நினைத்துப் பார்த்தேன். இந்த வியாதி சரவணன் மனைவிக்கு ஏற்பட்டிருந்தால் சரவணன் யாரையாவது உதவிக்குத் தேடித் போவானா” என்று கதைசொல்லி நினைப்பது. அ.மியின் புனைவுலகில் எங்கும் தென்படும் பெண்களின் துயரின் மீதுள்ள கரிசனத்திற்கு ஒரு சான்று.
சிறு பிள்ளைகளைப் பறி கொடுப்பவர்கள், இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவருக்கு மகள்களாகப் பிறந்து, வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு, படிப்பை நிறுத்தி பின் தந்தையின் உறவினர்களால் வீட்டை விட்டு துரத்தப்படும் போது விபரீத முடிவெடுப்பவர்கள் (ஒரு நண்பனைத் தேடி), என்று பல கதைகளின் பாத்திரங்கள் துயரின் நிழலில் தான் உள்ளார்கள். அதே நேரம் இவர்கள் எல்லோரும் விதியே என்று உட்கார்ந்து விடுபவர்களும் அல்ல. கணவனால் கைவிடப்பட்ட பெண் நடத்தும் தட்டச்சு நிறுவனம், அதில் படிக்க வரும் – குடிகார தந்தையினால் பாதிக்கப்பட்ட – இளம் பெண்கள், தங்கள் சூழலைத் தாண்டிச் செல்லும் உந்துதல் உள்ளவர்கள்.
ஏதோ பூஜை என்று கிளம்பிச் சென்ற கணவன் திரும்பி வராமல் போக, ஒரே ஒரு முறை தன் கணவனுடன் பார்த்த கதைசொல்லியிடம் அவனைத் தேடும்படி உதவி கேட்குமளவிற்கு -இந்தப் பெண்மணிக்கும், ‘உறுப்பு அறுவடை’ கதையின் ‘சரவணன்’ மனைவிக்கும் அதிக வித்தியாசம் இல்லை- அவர்களிடம் செயலூக்கம் உண்டு(அகோரத் தபசி).
துயர் நிறைந்த வாழ்வெனும்போது, ஜோசியம்/ ஜோசியர்கள் அவ்வப்போது தலைகாட்டுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. கண்டம் கதையில் ஜோசியம் தெரிந்த (ஆனால் ஜோசியர் அல்ல) ஒருவர் வலிய வந்து தனக்குத் தெரிந்தவர் குழந்தைகளுக்கு ஜோசியம் பார்க்கிறார். “எந்தக் குழந்தைக்கும் கண்டம் இல்லாமல் பார்த்துக்கொள்” என்ற வேண்டுதலுடன் கதை முடியும்போது, அது ஜோசியம்/ அதன் பாதிப்பு இவற்றைப் பற்றிய கதையாக இல்லாமல், மானுட நேசத்தைப் பற்றிய அ.மியின் இன்னொரு கதையாக மாறுகிறது. ‘ஜோதிடம் பற்றி ‘இன்னொரு கர்ணப் பரம்பரைக் கதை’ கதையிலும் ஜோசியம் வருகிறது, கண்டம் உள்ள கணவனை மலைப்பாம்பிடமிருந்து மனைவி காப்பாற்றுகிறார். விதியை மதியால் வெல்லும் இன்னொரு கதை என்று நினைப்பதற்குள், “ஜோதிடர்கள் கிரகங்களையும் ராசிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். எங்கோ தூரத்தில் ஒரு மலைப்பாம்பு இரையைத் தேடித் போய்க் கொண்டிருக்கிறது” என்று கதை முடிவது புன்சிரிப்பை வரவழைப்பதோடு, மலைப்பாம்பு இரையைத் தேடி (தொலைத்து) அலைவது, என்னதான் ஜோசியம்/ பிரார்த்தனை என்றிருந்தாலும், மனிதர்களும் அவரவர் இரையைத் தேடி அலைந்து அதில் வெற்றி/ தோல்வி பெறுவதை நினைவூட்டுகிறது. பள்ளி ஆண்டு விழாவில், பல இரைச்சலுக்கு இடையில் தன் அக்கா பாடியதைப் பற்றி “எங்கள்வரை அது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் யாரும் கேட்க முடியாதபடி ஒரே கூச்சல் குழப்பம்” என்று சொல்வது அ.மியின் தாழ்குரல் நகைச்சுவையுணர்விற்கு இன்னொரு சான்று.
அ.மியின் கதைத் தொகுப்பில் ‘லான்ஸர் பாரக்ஸ்’ இல்லாமலும், அதில் ‘மாடுகள்’ உலா வராமலும் இருந்தால் நிறைவின்மை இருக்குமல்லவா? இதில் இரண்டு கதைகளில் மாடு வருகிறது. மாடு வளர்ப்பு, அது ஓடிப்போவது என ஆரம்பித்து, பாழடைந்த கோட்டையில், அதன் வரலாறு குறித்த கதைசொல்லியின் கற்பனைகளோடு இணையும் ‘கோட்டை’ சிறுகதை, கோட்டையை மீண்டும் ஒரு முறை நன்றாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் “இனிமேல் முடியவே முடியாது என்றிருந்த நீண்ட பட்டியலில் அந்தக் கோட்டையும் சேர்ந்து கொண்டது” என்று கதைசொல்லி சொல்லும் இடத்தில்,ஆயாசமோ, வருத்தமோ இல்லாமல், எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனப்பக்குவமே தெரிவதோடு, சிறு வயது நினைவுகள் என்ற இடத்திலிருந்து தாவி, கதைசொல்லியின் நிராசைகளின் புகலிடமான, அந்தரங்கமான இன்னொரு இடத்திற்குச் செல்கிறது. ‘தோல் பை’ கதையிலும் மாடு/ மாடு வளர்ப்புப் புராணம், ‘சுந்தர்'(!!) என்ற மாடு வருகிறது. மாடுகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல் துயரத்தைத் தருவதைப் பார்க்கிறோம். (தோல் பையைப் பார்த்து “எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் மாடுகள் இப்படித்தான் முடிய வேண்டியிருக்கிறது”, என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார்)
சம்பவம் 1
தனக்கு கடன் கொடுக்கும் சரவணனுடன் கதைசொல்லிக்கு சற்றே கடுமையான உரையாடல் நடக்கிறது (வாடிக்கை). அடுத்த மாதம் சரவணனைப் பார்க்கும் கதைசொல்லி, அவன் மனைவி அவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளதை அறிந்து, ஒரு நாள் விடுமுறை எடுத்து, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வேலூர் சென்று சமாதானம் செய்கிறார்.
சம்பவம் 2
‘இரு நண்பர்கள்’ கதையில், வேலை தேடும் இருவரில் ஒருவர் தான் விண்ணப்பித்துள்ள வேலைக்கு, அது குறித்த நம்பிக்கை இல்லாத தன் நண்பனையும் விண்ணப்பிக்க வலியுறுத்துகிறான். வலியுறுத்துபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. வெகு நாட்கள் கழித்து, தன் நண்பனுக்கு அந்த வேலை கிடைத்தது என்று அறியும் போது அவனுக்கு எவ்வளவு மகிழ்சிகரமான விஷயம். ஆனால், அவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. கூச்சமாக இருந்திருக்குமோ? “அந்த நேரத்தில் இப்படித் தன்னிடம் கூட அந்த நண்பன் கூச்சப்பட்டிருக்கிறானே என்ற எண்ணந்தான் வருத்தமளித்தது”
சம்பவம் 3
தாய் இறந்த செய்தியைத் தெரிவிக்க, நள்ளிரவு தாண்டி தந்தி அலுவலகம் செல்லும் சங்கரன் (தந்தி), அலுவலர்கள் தூக்க கலக்கத்திலும் தனக்கு சில சிறு உதவிகள் செய்வதைப் பார்த்து “நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் கழித்தும் ஒரு தந்திக்காரருக்கு இவ்வளவு அனுதாபம் கொள்ளத் தோன்றுகிறது” என்று நினைக்கிறான்.
முதல் சம்பவத்தில் பண நெருக்கடியில் இருக்கும் கதைசொல்லி, தொழில் முறையில் மட்டுமே தெரிந்தவனுக்காக வலியச் சென்று உதவுகிறார். வெறும் பண பரிவர்த்தனைதான் என்று பார்க்காமல் “அவன் எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கான். அதெல்லாம் எதுக்கு. அந்தக் குழந்தைங்க படிப்பு கெடக்கூடாது” என்கிறார். இரண்டாவது சம்பவத்தில் முதல் நண்பன், வேலை கிடைத்த விஷயம் தனக்கு சொல்லப்படாதது குறித்து துணுக்குற்றாலும், அது குறித்து மொத்தத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். மூன்றாவது சம்பவத்தில் தாயை இழந்த பெரிய துக்கத்திலும், தன் வேலையின் எல்லைகளைத் சற்றேத் தாண்டி உதவி செய்யும் நபரை சங்கரனால் கவனிக்க முடிகிறது.
மூன்று சம்பவங்களிலும் உள்ள ஒற்றுமை சக மனிதரிடம் கரிசனம், மனித நேயம் வெளிப்படும் இடங்கள். இவை வாழ்வை முற்றிலும் வெளிச்சமாக்கும் ஒளி அல்ல, என்றேனும் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை தரும் கீற்றுக்கள் மட்டுமே. தந்தி அலுவலக ஊழியர், தாய் மரணம் இல்லாத இன்னொரு செய்திக்காக சங்கரன் சென்றிருந்தால், நள்ளிரவைத் தாண்டிய அந்த வேளையில் எப்படி நடந்து கொண்டிருப்பார்? ‘வாடிக்கை’ கதையில், மனைவியை சமாதானம் செய்ததற்காக நன்றி சொல்ல வரும் சரவணனிடம், கதைசொல்லி ஐநூறு ருபாய் கடன் கேட்கிறார். ஆம், அவர் அந்த ஐநூறு ரூபாய்க்காக வேலூர் செல்லவில்லைதான், அதற்கு கூலியாக அந்தப் பணத்தைக் கேட்கவும் இல்லைதான், ஆனால் பணமுடைதான் அவர் வாழ்வின் யதார்த்தம் என்பதால், அவர் அப்படிக் கேட்பது தவிர்க்க முடியாததாகிறது.
ஆகாயத் தாமரை நாவலின் நாயகன் ரகுநாதன் ஒரு இக்கட்டில் இருக்கும் போது அவன் சிறு வயது/ கல்லூரித் தோழி மாலதியைச் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கிறான். அவர்களுக்கிடையே உள்ளது நட்பா அல்லது அதைத் தாண்டிய ஈர்ப்பா என்றெல்லாம் அ.மி சொல்வதில்லை. ஆனால் மாலதி ரகுநாதனுக்கு உதவ முயல்கிறாள், தனக்குத் தெரிந்த ஓர் இடத்திற்கு வேலைக்காக அழைத்துச் செல்கிறாள். அது பலனளிப்பதில்லை. நாவலில் ஒரு சில முறை மட்டுமே சந்திக்கும் அவர்கள், மீண்டும் தொடர்பற்று போகிறார்கள், மீண்டும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ நிலைமை சீராகி ரகுநாதன் நல்ல நிலைக்கு வந்துவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறிய சந்திப்பு, அவ்வளவுதான். அவர்களுக்கிடையே இயல்பாக மீண்டும் ஏற்படும் தொடர்பும் அதே போல் இயல்பாகவே முறிகிறது. மாலதியால் உதவ முடியவில்லை. தொடர்பில் இருக்க முடியவில்லை தான், ஆனால் அவள் பொறுப்புள்ள வேலையில் இருக்கிறாள், அதை அப்படியே விட்டுவிட்டு எப்போதும் ரகுநாதனுக்காக அலையவேண்டும் என்று சொல்ல முடியாது, அப்படிச் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. மற்றவர்களுக்காக தன்னையே உருக்கிக் கொள்ளாமல், அதே நேரம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயலும் மாலதியை இந்தத் தொகுப்பில் உள்ள பாத்திரங்களோடு பொறுத்திப் பார்க்கலாம். யார் உதவ முன்வந்தாலும், இறுதியில் நமக்கு நாம்தான் உதவிக் கொண்டாக வேண்டும் என்ற புரிதலும் இதில் உள்ளது.
ஆனால், ஒரு போதும் நம்மை விட்டு நீங்காத துயரங்களை சுமந்தலையும் வாழ்வில், அடுத்த அடி எடுத்து வைத்து பயணத்தைத் தொடரும் ஊக்கத்தை இந்த நம்பிக்கை கீற்றுக்கள்தான் தருகின்றன. அவையே இந்தக் கதைகள் உள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ முழு தொகுப்பையுமே மானுட நேயத்தை எப்போதுமே வலியுறுத்தி வரும் அ.மியின் புனைவுலகின் மற்றுமொரு காத்திரமான பிரதிநிதியாகப் பார்க்கச் செய்கின்றன.

No comments:

Post a Comment