Monday, October 5, 2015

இரு துப்பறிவாளர்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/09/25/two-detectives/)
------------------
ஷெர்லாக் ஹோம்ஸ் குற்றப்புனைவு இலக்கிய வானில் தோன்றிய முதல் நாவலான ‘A Study in Scarlet’ல், அவருடைய துப்பறியும் ஆற்றலைப் பார்த்து வாட்ஸன், ஹோம்ஸ் போவின் (Poe) அகஸ்ட டுபானை (C. Auguste Dupin) தனக்கு நினைவுபடுத்துவதாகக் கூற, அதற்கு-
‘Sherlock rose and lit his pipe. ‘No doubt you think you are complimenting me in comparing me to Dupin, he observed ‘Now in my opinion, Dupin was a very inferior fellow. That trick of his of breaking in on his friends’ thoughts with an apropos remark after a quarter of an hour’s silence is really very showy and superficial. He had some analytical genius, no doubt; but he was by no means such a phenomenon as Poe appeared to imagine.’
என்று ஹோம்ஸ் பதில் அளிக்கிறார். மூன்று வழக்குகளை மட்டுமே துப்பறியும் டுபான் குறித்து இவ்வாறு ஹோம்ஸ் ஏன் கூறுவதாக ஆர்தர் கானன் டோயல், ஹோம்ஸின் முதல் வருகையிலேயே அமைக்க வேண்டும்?
இதில் பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை என டோயல்,
“Edgar Allan Poe, who, in his carelessly prodigal fashion, threw out the seeds from which so many of our present forms of literature have sprung, was the father of the detective tale, and covered its limits so completely that I fail to see how his followers can find any fresh ground which they can confidently call their own. “
என்று ஒரு கட்டுரையில் சொல்வதின் மூலம் அறியலாம்.
போ இந்த வகை எழுத்தின் முன்னோடி என்பதால் மட்டுமே அவரைக் குறிப்பிடுகிறார் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் முன்னோடி எழுத்தாகவே இருப்பினும் அதைச் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை அந்த முன்னோடி எழுத்தின் தரம்தான் ஏற்படுத்த வேண்டும். இதை “covered its limits so completely” என்று டோயல் சொல்வதின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இதை ‘ஹோம்ஸ்’ என்ற பாத்திரம் ‘டுபான்’ என்ற இன்னொரு பாத்திரத்தின் மீது வைக்கும் விமர்சனத்தின் உள்சென்று தேட வேறொன்றும் இல்லை என்றும் கடந்து செல்லலாம்தான். ஆனால் டுபான்/ ஹோம்ஸ் இருவர் வரும் கதைகளை ஒருசேரப் பார்ப்பது, பெயர் குறிப்பிடப்படாத டுபானின் தோழர்/ வாட்ஸன் கதைசொல்லிகளாக இருப்பது, (குற்றப்புனைவுகளில் இரட்டையர்களின் கூட்டணி -ஒருவர் துப்பறிபவர், இன்னொருவர் உதவியாளர் – என்ற மோஸ்தர் இங்கிருந்தே ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது), காவல்துறை அதிகாரிகள் துப்பறிவாளர்களின் புலனாய்வு முறைகளை அவநம்பிக்கையோடு பார்ப்பது என சட்டென்று தெரியும் ஒற்றுமைகளைத் தவிர வேறு சில திறப்புக்களையும் அளிக்கக்கூடிய விஷயம் இது.
The Murders in the Rue Morgue“ல் கதைசொல்லியும் / டுபானும் ஓர் இரவு, நகர வீதிகளில் வலம் வருகின்றனர். 10-15 நிமிடங்கள் பேசிக்கொள்ளாமல் நடந்த நிலையில், கதைசொல்லி அந்தக் கணம் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததை டுபான் சரியாகக் குறிப்பிடுகிறார். ஹோம்ஸ், வாட்ஸன் இருவரும் அவர்கள் அறையில் அவரவர் வேலையில் ஆழ்ந்திருக்க, திடீரென்று ஹோம்ஸ் வாட்ஸன் நினைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி சரியாக கூறும், வாட்ஸன் வெளியே எங்கேனும் சென்று வந்தபின் அவர் எங்கு சென்றிருந்தார் என்று சரியாக யூகிக்கும், பல நிகழ்வுகளை நாம் ஹோம்ஸ் கதைகளில் காண முடிகிறது.
‘Now, brought to this conclusion in so unequivocal a manner as we are, it is not our part, as reasoners, to reject it on account of apparent impossibilities. It is only left for us to prove that these apparent ‘impossibilities’ are, in reality, not such.’ (“The Murders in the Rue Morgue”)
என்ற டுபானின் கூற்றிற்கும்
‘How often have I said to you that when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth?’ (-The Sign of Four)
என்ற ஹோம்ஸின் கூற்றிற்கும் கருத்தளவில் அதிக வித்தியாசம் கிடையாது இல்லையா?
“The Murders in the Rue Morgue”/ ‘A Study in Scarlet‘ இரண்டின் முடிவையும் பார்ப்போம். இரண்டிலும் குற்றத்திற்கு காரணமானவர், குற்றம் நடந்த இடத்தில் தனக்கு மிக முக்கியமான ஒன்றைத் தொலைத்து விடுகிறார். துப்பறிவாளர் அதைப் பற்றியும் குற்றத்தின் பின்னணி பற்றியும் தெரிந்து கொண்டு துப்பறிந்தபின், குற்றவாளி தொலைத்தது தன்னிடம் உள்ளதாக நாளிதழில் விளம்பரம் செய்கிறார். அதைப் படித்து அங்கு வரும் குற்றவாளி பிடிபடுகிறார்.
இத்தனை ஒற்றுமைகள் இருப்பதால், டோயல் போவை நகல் எடுத்தவர் என்ற ஒற்றைத்தன்மையான விமர்சனத்தை வைக்கலாமா? ‘The Purloined Letter‘/ ‘A Scandal in Bohemia‘ கதைகளில் சில விடைகள் கிடைக்கின்றன. இரண்டு கதைகளின் களமும் ஒன்றுதான். அரச குடும்பத்தில் முக்கியமான ஒருவர் (ஒரு கதையில் ஆண் இன்னொன்றில் பெண்) மட்டுமின்றி, அரசே பெரிதும் பாதிக்கப்படக்கூடிய கடிதம் எதிராளியிடம் சிக்கி விடுகிறது. எதிராளி யார் என்று தெரிந்தாலும், என்ன தேடினாலும் அந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம் துப்பறிவாளர்களிடம் வருகிறார்கள். இதுவரை இரு கதைகளும் கிட்டத்தட்ட ஒரே பாதையில் செல்கின்றன. கடிதத்தைக் கண்டுபிடிக்கும் முறை எப்படி இருக்கிறது?
கடிதத்தை ஒளித்து வைத்தவன் தேடுபவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு, அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வான் என்ற கருத்தின்படி டுபான் செயல்பட்டு கடிதத்தைக் கண்டுபிடிக்கிறார். ”Counter-intuitive‘ என்று டுபானின்/ எதிராளியின் மனவோட்டத்தைச் சொல்லலாம். ஆனால், ஹோம்ஸ் என்ன செய்கிறார்? தனக்கு முக்கியமான ஒன்றைக் காக்க முனையும் மனித மனத்தின் இயல்பான சுபாவத்தின்மீது நம்பிக்கை வைத்து கடிதத்தின் இருப்பிடத்தை இன்னொரு வழியில் கண்டுபிடிக்கிறார். ஒப்பீட்டளவில் எளிமையாக/ நேரடித்தன்மையுடன் இருந்தாலும், தனக்கென தனிப் பாதையை உருவாக்கும் ஹோம்ஸைப் பார்க்கிறோம். “Where does a wise man hide a pebble?” என்று G.K. Chestertonன் ‘The Sign of the Broken Sword‘ (1911ஆம் ஆண்டு வெளிவந்தது) கதையில் வரும் கூற்றையும், அவரின் ‘The Invisible Man‘ கதையையும் இந்த இரு கதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவற்றிலும் ஒத்த கூறுகளைக் காணலாம்.
டுபானை முன்வைத்து மூன்று கதைகளை மட்டுமே எழுதி இருக்கிறார் போ. போவின் கதைகளில் சரடாக ஓடும் இருண்மையின் சாயலை ‘The Murders in the Rue Morgue‘ல் உள்ள குற்றம் நிகழ்ந்த இடம் மற்றும் இறந்தவர்கள் சடலங்கள் பற்றிய முகத்திலறையும் அப்பட்டமான வர்ணனைகளில் காண முடிகிறது. டுபானின் இருள் மீதான ஈர்ப்பைப் பற்றிச் சொல்லும்-
“It was a freak of fancy in my friend (for what else shall I call it?) to be enamored of the Night for her own sake; and into this bizarrerie, as into all his others, I quietly fell; giving myself up to his wild whims with a perfect abandon. The sable divinity would not herself dwell with us always; but we could counterfeit her presence. At the first dawn of the morning we closed all the messy shutters of our old building; lighting a couple of tapers which, strongly perfumed, threw out only the ghastliest and feeblest of rays. By the aid of these we then busied our souls in dreams –reading, writing, or conversing, until warned by the clock of the advent of the true Darkness.”
என்ற பத்தியிலும் இருண்மையின் அம்சம் உள்ளது. இதில் போவின் பிற வகைமைக் கதைகளின் தாக்கத்தைக் காணலாம்.
இதற்கு மாறாக, டுபான் வரும் மூன்றாவது/ இறுதி கதையான ”The Purloined Letter‘ல் இருண்மையான அம்சங்கள் இல்லாததோடு, அது வேறெந்த வகையின் பாதிப்பும் இல்லாத ‘அறிவுசார்’ விளையாட்டாக / துப்பறியும் கதையாக உள்ளது. ஒருவேளை போ டுபானை முன்வைத்து இன்னும் பல கதைகள் எழுதி இருந்தால், நமக்கும் டுபானைப் பற்றிய இன்னும் தெளிவான சித்திரம் கிடைப்பதோடு, ‘macabre‘ அம்சங்கள் இல்லாத ‘தூய’ குற்றப்புனைவுகளும் உருவாகி இருக்கக்கூடும். அதை டோயல் செய்கிறார்.
ஹோம்ஸும் தனிமை விரும்பி, விசித்திர பழக்கவழக்கங்கள் உடையவர்தான், ஆனால் அவற்றில் இருண்மையைக் காண முடியாது, ‘eccentric‘ என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். ஹோம்ஸை வைத்து டோயல் 56 சிறுகதைகளுடன் 4 நாவல்களும் எழுதியதால் அந்தப் பாத்திரத்தை சிற்சில நிகழ்வுகள் மூலம் இன்னும் விரிவாக்க முடிகிறது. வாட்ஸனுக்கு ஆபத்து எனும்போது ஹோம்ஸ் அடையும் பதைபதைப்பைச் சுட்டிவிட்டு சட்டென்று விலகி விடும் இடங்கள் ஓர் உதாரணம். இவை ஹோம்ஸ் என்ற துப்பறியும் இயந்திரத்தின் உள்ளே உள்ள இதயத்தை சுட்டுகின்றன.
The Hound of the Baskervilles‘ நாவல், “The Adventure of the Devil’s Foot”,”The Adventure of the Lion’s Mane” சிறுகதைகளில் அமானுஷ்ய/ bizarre செயல்கள் இருந்தாலும் இவை வாசகனுள் குறுகுறுப்புடன் கூடிய பரபரப்பை உண்டாக்குகின்றனவே தவிர இவற்றை இருண்மை /ஹாரர் அம்சங்கள் கொண்டவை என்று சொல்ல முடியாது. பணம்/ பகை/ பொறாமை இவற்றுக்கான கொலை/ திருட்டு என்று மட்டுமில்லாமல், அரசியல் சார்ந்த பின்னணியிலும் (முக்கிய ஆவணங்கள் திருட்டு போவது) கதைகளை அமைத்து, வகைமைகளின் சாயல் இல்லாத மரபார்ந்த குற்றப்புனைவுகளுக்கு டோயல் வித்திடுகிறார்.
The Murders in the Rue Morgue‘ கதையில் பாரிஸ் நகரின் மாலை/ இரவு நேரக் காட்சிகள் மற்றும் அதன் தெருக்களின் வர்ணனைகள் இருந்தாலும், அந்நகரம் கதைகளிடமிருந்து பிரிக்கமுடியாத அளவிற்கு ஒன்றவில்லை. (இதற்கும் அவர் மூன்று கதைகளே எழுதியது முக்கிய காரணம் என்றாலும், நமக்கு கிடைத்துள்ள கதைகளை வைத்து இந்த முடிவுக்குத்தான் வர முடிகிறது).
மாறாக மூடுபனி படர்ந்த லண்டன் நகரம், அதனூடாக கடகடக்கும் குதிரை வண்டிகளின் சத்தம், மூடுபனியை ஊடுருவ முயன்று சிறிய வெற்றியையே பெறும் தெருவிளக்குகளின் மெல்லிய வெளிச்சம் என பொதுவாகவே புறச்சூழலையும், குறிப்பாக லண்டன் நகரையும் ஒரு பாத்திரமாக ஆக்குவதில் டோயல் வெற்றி பெறுகிறார். ‘The Hound of the Baskervilles‘ல் அமானுஷ்ய சூழலை உருவாக்குவதில் (வாசகனுக்கு உண்மை தெரிவதற்கு முன்னால்) மக்கள் அஞ்சும் பயங்கர மிருகத்திற்கு மட்டுமின்றி, முக்கியப் பாத்திரம் வசிக்கும் ‘Baskerville Hall‘, அதன் அருகில் உள்ள moorன் வெறுமையான பெரும்பரப்பு, அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் இவற்றுக்கும் பங்கு உள்ளது.
டோயல் குற்றப்புனைவுகள் எழுத ஆரம்பித்த காலத்தில் போவின் தாக்கம் அதிகமிருந்தாலும்,
“…On this narrow path the writer must walk, and he sees the footmarks of Poe always in front of him. He is happy if he ever finds the means of breaking away and striking out on some little side-track of his own.”
என்று போவைப் பின்தொடரும் எழுத்தாளர்களின் / துப்பறிபவர்களின் இலக்கு என்று அவர் குறிப்பிடுவதை ஹோம்ஸ் அடைந்து, தனக்கென புதுப்பாதையை வகுத்து, புதிய திசைகளில் பயணித்து, துப்பறிவாளர்களின் பிதாமகராக உள்ளார். அவரைக் கொண்டாடும் நேரத்தில், ‘முன்னத்தி ஏரான” டுபானை தவிர்க்க/ மறக்க முடியாது.

No comments:

Post a Comment