Monday, March 7, 2016

இரு திருமணங்கள் -அசோகமித்திரனின் 'கல்யாணம் முடிந்தவுடன்' மற்றும் 'போட்டோ' கதைகள்

பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2016/02/21/asokamithran/
-------
 'சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் சம்பிரமமாக நடத்தும் கல்யாணம்' சசிகலாவுக்கும்,  கிருஷ்ணமூர்த்திக்கும்  இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது ('கல்யாணம் முடிந்தவுடன்') . காதல் திருமணம்தான் என்றாலும் சசிகலாவின் மனதில் அன்று காலை முதலே ஏனோ பல சஞ்சலங்கள். நாள் முழுதும்- பலர் காலில் விழுந்து கொண்டே  இருப்பது,  பந்தியில் சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதில் மற்றவர் எச்சிலை சாப்பிடுவது போன்ற தொடர் சடங்குகள்  அவள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம். 

ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு இதில் எந்த எரிச்சலும்கூச்சமும் இருப்பது போல் தெரியவில்லைஅவன் அனைத்து நிகழ்வுகளிலும் உற்சாகமாக பங்கேற்கிறான். அதுவும்கூட அவளுக்கு சிறிது  எரிச்சலாக இருக்கின்றது. ஆனால்  சசிகலாவின் மனநிலை அவள் பார்வை கோணத்தின் மாற்றமே என அசோகமித்திரன் சுட்டுகிறார்அதை அவளும் அறிந்தே இருக்கிறாள்.  சசியே சொல்வது போல கிருஷ்ணமூர்த்தி எப்போதும் இருப்பது போல்தான் அன்றும் இருக்கின்றான். அவளை எப்போதும் போல் கிள்ளுகிறான். ஆனால் அவளுக்குத்தான் அவன் செய்கை அன்று மட்டும் ஏனோ குறுகச் செய்கிறது.   அவனிடம் பிடித்திருந்த அதே குணங்கள்/ செய்கைகள்  இன்று விகாரமானவையாக அவளுக்குத் தோன்றுகின்றன.  மாலை நேர வரவேற்பின்போது மூர்த்தி ஏதோ சொல்ல அதற்கு சசி பதில் கூறமூர்த்தி தன் நண்பனிடம் 'சாரி சொன்னது போல் இவ கொஞ்சம் சிடுமூஞ்சிதான்டாதன்னைப் பற்றி மூன்றாவது மனிதனிடம் இவன் பேசி இருக்கின்றான் என்று அவள் உச்சகட்ட எரிச்சலும் கோபமும் அடைகிறாள். இறுதியாக கடைசி கட்ட சடங்கிற்கு அவளை அவள் அம்மா அழைக்கும்போது உடைந்து அழத் தொடங்குகிறாள். அத்துடன் இந்த கதை முடிகிறது.

அசோகமித்ரனின் உரைநடை நுட்பங்களை இந்தக் கதையிலும் பார்க்க முடிகிறது. 
 சசியின்  தங்கைதன் அத்தையிடம், கிரிஷ்ணமூர்த்தியுடன் எப்படி பேசுவது,  '..அவர் இப்பத்தானே அத்திம்பேராயிருக்கார்'என்று சொல்லஅத்தை 'என்னடீதுஇப்பத்தான் அத்திம்பேர்நேத்திக்கு அத்திம்பேர்னு..' என்று சொல்கிறார். அன்றாட இயல்பான சம்பாஷனைதான் என்றாலும் இதை அவதானித்து சரியான இடத்தில் புகுத்துவதில் அ.மி.யின் இயல்பான அங்கதம் மட்டுமல்ல  'என்னடி இது' என்று எழுதி இருக்கக்கூடியதை 'என்னடீதுஎன்று சொல்வதாக அமைத்திருப்பதில் , பேச்சு வழக்கில் உருவாகும் ஒலியின் - என்னடீது என்பதில் உள்ள நெடில் ஒலியும் கவனிக்கத்தக்கது -  நுண்சித்திரமும் தெரிகிறது.  சசி கிருஷ்ணமூர்த்தியை நலங்குக்கு அழைக்கச் செல்லும்போது  மூர்த்தியின் சகோதரி , அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து  'கூப்பிடறதே நன்னாயில்லையேஎன்கிறாள். அவ்வளவுதான்.  அவள் ஒன்றும் கடுமையாக சொல்வது போல் தெரியவில்லைமூர்த்தி சசியுடன் கிளம்புவதும்   பெரிய விஷயமாவதில்லை. மனைவி பின்னால் ஓடுகிறாயே, என இன்னொரு சகோதரி கிண்டல் செய்து சிரிக்க , அதில் முதலில் பேசியவளும் சேர்ந்து கொள்கிறாள்.  இருந்தாலும் ஏற்கனவே பல சஞ்சலங்களில் சிக்கியுள்ள சசிக்குதான் புகப் போகும் வீட்டில்/ உறவுகளில்  ஏற்படக்கூடிய சின்ன சின்ன உரசல்களின் ஆரம்பமாகமுதல் சுருக்கம் விழும் இடமாக இது   அக்கணத்தில் தோன்றியிருக்கலாம். அத்தகைய நொய்மையான தருணம் இது.

வாழ்க்கையின் முக்கியமான நாட்களில் ஒன்றான திருமண தினம்அதுவும் காதல் திருமணம்  ஏன் சசிக்கு இப்படி முடிந்தது? இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியாஇல்லை என்று அவளே உணர்கிறாள். சடங்குகள்கூட முழு காரணமாக இருந்திருக்காது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணை மணக்கிறான்அதுவும் அவன் காதலித்தவள்எனவே அவன் வெற்றிக் களிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சசியோ ஒரு குடும்பத்துடன் புதிய உறவை இன்று ஆரம்பிக்கிறாள். அதுவும் காதல் திருமணம் எனும்போது , அதை இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று வாசகனுக்கு தெரியவில்லை என்பதால்திருமணத்திற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன்இரு குடும்பங்களுக்கிடையே   நடந்திருக்கக்கூடிய வாக்குவாதங்கள்,  பரிமாறிக் கொண்டிருக்கக் கூடிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள்  வாசகன் நினைக்கக்கூடும். அப்படி நிகழ்ந்திருந்தால்,  புது உலகத்திற்குள் பயணப்பட இருக்கும் சசிக்கே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய சவால் உள்ளது. அந்த பதட்டமே அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.  இவை எதுவுமே கூட காரணமாக இல்லாமல்ஒரு முக்கியமான, மிகவும் எதிர்பார்த்த  விஷயம்எண்ணியபடியே நடந்தாலும்அது நடந்தவுடன் சூழும் -இதற்காகவா இந்தப் பாடுபிடிவாதம்ஏன் இதைச் செய்தோம்-  என்ற வெறுமைகூட சசியின் திருமண நாளின் இனிமையை குலைத்திருக்கலாம். 

காதல் திருமண நிகழ்வு இப்படி இருக்க, 'போட்டோகதையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமண நிகழ்வில்மணமகன்/ மணப்பெண் இருவரும்  எந்தத் தயக்கமும் இல்லாமல்  இயல்பாகவே இருக்கிறார்கள். மணமகனின் தோழர்கள் தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படமணமகள் எளிதில் சம்மதிக்கிறாள். ("சற்று முன்தான் உடமையாகிவிட்டவனின் முதல் கோரிக்கையை மறுக்க அவளுக்கு மனமில்லை" - இதில் உடமையாகிவிட்டவனின் என்பதில் ஏதேனும் நுட்பத்தை அ.மி வைத்துள்ளாரா என்பதை வாசகன் தான் முடிவு செய்ய வேண்டும்). கதையின் முதல் பகுதிஅவர்கள் புகைப்படம் எடுக்க தயாராவதில் செல்கிறது. மணப்பெண் உடை மாற்றி வரஅப்போது தான் தங்கள் தோற்றத்தைப் பற்றிய உணர்வு வந்து அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்வதுதலைமுடியை கோதி விட்டுக் கொள்வது என தோற்றத்தை மேம்படுத்த முயல்வதை அ.மி சுட்டுகிறார். ஒரு நிகழ்வை அதன் பின்னுள்ள உணர்வுகளோடு துல்லியமாக விவரிக்க இத்தகைய நுண்ணிய செயல்களையும் குறிப்பிடுவது உதவும் அல்லவா?. 

தாமு என்ற நண்பனின் நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்க நினைக்கிறார்கள். அப்புகைப்படத்தில் தாமுவும் இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும்அதை எப்படி செயலாக்குவது என தெரியாமல் இருக்க,  மணமகள் தங்கள் திருமணத்தில் புகைப்படம் எடுத்தவரையே இதையும் எடுக்கச் சொல்லலாம் என்கிறாள். மனைவியின் முதல் யோசனைக்கு செயலிழந்து நிற்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்ற மணமகனும் அவரை புகைப்படம் எடுக்க அழைக்கிறான். மணமகள் சுவாதீனமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கிறாள். அதே நேரம், ".. தன் கணவனின் நண்பர்கள் முன்னால் தான் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டு விட்டோம் என்று தோன்றியிருக்கும்"   என்று ஏன் அ.மி சொல்லவேண்டும்?. அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு  உள்ள வேறுபாட்டைஅதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றேவேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த - பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால்அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா?. புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி  நிற்கும் போது,  மணமகளின் மறுபக்கம் இருப்பவன்  மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்படவேண்டியது (அது இயல்பான செயலே)அதை ஏன் அ.மி  குறிப்பிட வேண்டும்?. 'போட்டோஎன்று பெயரிடப்பட்டுள்ள கதையில்  நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவாஅந்தத் துல்லியத்தை இத்தகைய நுண்ணிய சித்தரிப்புக்கள் சாத்தியமாக்குகின்றன.

ஆனால் இந்தக் கதைபுதுமணத் தம்பதியரைப் பற்றியது அல்ல என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது புரிய வருகிறது. புகைப்படக் கலைஞர் தாமுவின் நிழற்படக் கருவியைக் கொண்டு புகைப்படமெடுக்க முயலதாமு அவர் அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சாதாரண விஷயம்தான்ஆனால் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுகிறது.   புகைப்படக் கலைஞரின் அகம் சீண்டப்பட்டுவிட்டது என்பதை உணரும் தாமு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசினாலும்அச்சூழலில் சூழலில் அதுவரை இல்லாத இயல்பற்ற (awkward) நிலை  உருவாகி விடுவதை  உணர முடிகிறது. வெளிப்படையாகத் தெரிய வரும் பகையைக்   கூட எதிர் கொண்டோ அல்லது சமரசமோ செய்து விடலாம்.  ஆனால் மனக்கோணலின் முதல் கட்டத்தைஅதுவும் ஒரு குழுவாக இருக்கும்போதுஇருவருக்கிடையே திடீரென்று  உருவாகும் சங்கட நிலையை,  எதிர்கொள்வதோகண்டுகொள்ளாதது போல் கடந்து செல்வதோ எளிதான ஒன்றல்ல. இதை அ.மி வெளிப்படையாகச் சொல்லாமல்தாமு சாதாரணமாகப் பேசியபின் புகைப்பட கலைஞர் மனம் கோணுவதை உணர்ந்தவன் போல் அவர் அருகில் செல்வதுபுகைப்பட கலைஞர் நிழற்படக் கருவியை தாமுவிடம் திருப்பிக் கொடுப்பது , அவன் அவருடையக் நிழற்படக் கருவியை (தன்னுடையதுடன் ஒப்பிடுகையில்) உயர்த்திச் சொல்லி அவரை சகஜமாக்க முயல்வதுஅவர் சிரிக்காமல் மீண்டும் நிழற்படக் கருவியை வாங்கிக்கொள்வது  என சில செயல்களின் மூலமாகவே புறச்சூழலில் மட்டுமல்ல பாத்திரங்களின் அகத்திலும் - நாம் உணராமலேயே மாறும் காற்றின் போக்கைப்  போல் -  ஏற்பட்டுள்ள இயல்பற்றத் தன்மையை வாசகனுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார். தாமுவின் நிழற்படக் கருவியில் அனைவர் முகத்திலும் நிழல் விழஇறுதியில் புகைப்பட கலைஞரின் கருவியில் புகைப்படம் எடுப்பதாக முடிவு  செய்யப்படுகிறது. அதற்கான படச் சுருள் வாங்கி வருவதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது. இறுதியில் படம் எடுக்கப்பட்டு அனைவரும் பொம்மை போல் அதில் தெரியகதை முடிகிறது. இங்கு ஏன் முகம் பொம்மை போல் தெரிவதாக சொல்லப்படவேண்டும். புகைப்படக் கலைஞர் சரியாகப் படமெடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கக் கூடும். ஆனால் மிகச் சாதாரண நிகழ்வான புகைப்படம் எடுத்தல் யாரும் எதிர்பாராத விதமாக தர்மசங்கடமான சூழலை உருவாக்கபுகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் முற்றிலும் அழிந்து  அந்தச் சூழலை கடந்து சென்றால் போதும் என்றே அனைவரும் விரும்பியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரின் அகத்திலும் இருந்த இறுக்கம் நிழற்படத்திலும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை. 

சசியின் திருமண நாளின் நினைவுகள் மாறா வடுவாக உருவெடுக்கலாம் என்றாலும்குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராமல்திருமண தினத்தன்று தான் அடைந்திருந்த மனநிலையை அவள் மறந்து விடவே சாத்தியங்கள் அதிகம். எப்போதேனும் அந்நாள் நினைவிற்கு வந்தால்தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்தும் , தன் தேவையற்ற அச்சத்தைக்  குறித்தும்தன்னையே எள்ளி நகையாடி அந்நாளை அவள் கடந்து செல்வாள். அதே போல் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் புதுமணத் தம்பதியர் நினைவிலிருந்து விரைவில் நீங்கலாம். ஆனால் அப்புகைப்படத்தில் தன் நிழற்படக் கருவியை அணைத்தப்படி இருக்கும் தாமுவிற்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சூழலின் மகிழ்சியற்றத் தன்மை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.   முதல் பார்வைக்கு வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே தோற்றமளிக்கும் இந்த இரண்டு  கதைகளிலும் கூட வாசகன் பெற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்களை அசோகமித்திரன் பொதித்துள்ளார்.


2 comments:

  1. பிரமாதமாக அசோக மித்திரனின் எழுத்தின் நுண்தன்மைகளை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இயல்பான நடையில் படிக்க சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டு எனது நூல் ஒன்று
    'ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்னும் தலைப்பில் போன வாரம் வெளிவந்திருக்கிறது. 37 ஆகச்சிறந்த ஒரு நூற்றாண்டு மறக்கமுடியாத 37 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியது. 37 எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர்.

    புத்தகத்தைப் பற்றிய மேலான தகவல்களுக்கு:

    http://jeeveesblog.blogspot.in/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81

    www.sandhyapublications.com

    தங்கள் தகவல்களுக்காக.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸார். உங்கள் நூலைக் குறித்து வைத்துக் கொள்கிறேன்.

      Delete