Friday, December 24, 2010

முறிமருந்து - செந்தில் குமார்

 செந்தில் குமார் சிறுகதை தொகுப்புக்கள், சௌந்தர்ராஜனின் கதையையும் வாசித்து இருக்கின்றேன். படிக்கும் பொது ஒரு விதமான அமைதி கவிழ்வதை உணர்கிறேன். எப்படி சொல்வது என்றால்,  காலமே மெதுவாக செல்வது மாதிரி உள்ளது அவர்  எழுத்துக்களை படிக்கும் போது (like being in a vaccum), எந்த சலனமும் இல்லாத வெட்ட வெளியில் இருப்பது போன்ற உணர்வு. காலை பத்து-பதினொன்று மணிக்கு இளங்காலை  வெயில்லி வீட்டு வாசலில் உட்கார்ந்து பரபரப்பு அடங்கி ஒரு சில இயக்கங்களே இருக்கும் தெருவை வேடிக்கை பார்ப்பது போன்று. என்னுள் ஏற்படுகின்ற இந்த உணர்வுகள் தான் அவரின் எழுத்துக்களை தொடர்ந்து படிக்க தூண்டுகின்றன. இது முறிமருந்தின் விமர்சனமோ அல்லது அதன் முக்கியத்துவம் குறித்த பதிவோ அல்ல. அதை பற்றிய எனது எண்ணங்கள் ஒரு வாசகனாக, அவ்வளவே.  (biased thoughts If I may say so)

முறிமருந்தில் மிக நுணுக்கமாக மனிதர்களின் மனவோட்டத்தையும் உறவுகளுக்கிடையே இருக்கும் அன்பு, குரோதம் முதலியவற்றை கூறியுள்ளார். எவரையும் கருப்பு வெள்ளையாக காட்டாமல் இயல்பாகவே  இருக்க விட்டுருக்கிறார்.  

குழந்தைகளின் உலகை, அவர்களுக்குள்ளும் இருக்கும் பகை உணர்வை, இயல்பாக ஒருவர் மீது வரும் வெறுப்பு அல்லது அன்பு இவை மிக நன்றாக காட்டப்பட்டுள்ளத.  குழந்தைகளை முழு அப்பாவிகளாக, நன்மையே உருவானவர்களாக காட்டாமல், அவர்களுக்குள்ளும் இருக்கும் பொறாமையை, குரூரத்தை சொல்லிருப்பது  இருப்பது சிறப்பு. குழந்தையும் தெய்வமும்  ஒன்று என்று சொல்லி சொல்லியே, பால்யத்தில் குழந்தைகளால், பிற குழந்தைகள் மீது நடத்தப்படும் மன ரீதியான வன்முறை பற்றி நாம் பேசுவதே இல்லை. (ஒரு சிறுவன் குண்டாகவோ, கருப்பாகவோ இருந்தால், பிற சிறுவர்கள் அவனை கேலி செய்வதை, துன்புறுத்துவதை நாம் அவ்வளவு பார்த்திருப்போம்) . செந்தில் குமாரின் பல கதைகளில் குழந்தைகளின் இந்த இன்னொரு பக்கம் காட்டப்படுகிறது


ஒரு டவுன்/சிறு நகர சித்தரிப்பை மிக துல்லியமாக செந்தில் குமார்  அவரது  அனைத்து 
புனைவுகளில் கொண்டு வருகிறார். இதில் மேலும் சந்தையை ஒரு கதா பாத்திரமாகவே இதில்  மாற்றிவிட்டார். சந்தையில் கடை போட்டிருக்கும் துணை கதாபாத்திரங்களும் (இப்படி சொல்லலாமா?) நன்றாக வார்க்கப்பட்டிருக்கிரார்கள். முக்கியமாக டீ கடை மாணிக்கம், கருப்பு, அவன் தங்கை, ரங்கம்மாள்.  

உணவு தயாரிப்பதை பற்றி விரிவாக படிப்பவருக்கு உண்ணும் எண்ணம் தோன்றும்படி விவரிக்கப்பட்டுள்ளது. நாஞ்சில் நாடனுடைய உணவு பற்றிய விவரணைகள் நினைவுக்கு  வருகின்றன. அவருடையது ஒருவித கொண்டாட்ட அல்லது ஏக்க மனநிலையில் இருக்கும்.இதில் 
ஆரவாரமற்ற தொனியில் கச்சிதமாக கூறப்பட்டுள்ளது (cooking and food as a functional task)

செந்தில் குமார் அவருடை  சிறுகதைகளில் யதார்த்தத்துடன், சில அமானுஷ்ய (இப்படி சொல்வது சரியா என்று தெரியவில்லை) அல்லது நாம் கற்பனை என்று சொல்லக்கூடிய நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியாக ஒரு ரசவாதியைப்போல் ஒன்றோடு ஒன்று கலந்திருப்பார். இந்தக் கதையிலும் ராமசாமி, பார்த்திபன் இருவருக்கும் நடக்கும் நிகழ்வுகள் அவ்வாறே இருந்தாலும் புதினத்தின் முதல் இரண்டு பகுதிகள் முழு யதார்த்தமாகவே உள்ளதால் (சாமியார் ராமசாமியை அழைப்பதை தவிர்த்து) அந்த நிகழ்வுகள் சட்டென்று <span>ஒரு பாய்ச்சல் போல் இருக்கின்றன. இவை இந்த நாவலுக்கு எப்படி பொருந்துகின்றன என எண்ண வைக்கின்றன. இருந்தாலும் உண்மை, கற்பனை ஆகியவற்றை வரையறுக்க முடியாது என்று உணரும் போது அந்த நிகழ்வுகளும் இயல்பாகவே உள்ளன. 


பி.கு 
செந்தில் குமாரின் முந்தையப் படைப்புகளில் எஸ்.ராவின் பாதிப்பு, அவரின் ஆளுமை தூக்கலாக காணப்படும் (நீண்ட வாக்கியங்கள், 'அப்போது அவன் கடந்து சென்று கொண்டிருந்தான்' என்பது போல முடியும் வாக்கியங்கள்). இதில் அந்த அளவு எனக்கு எஸ்.ராவின்  பாதிப்பு தென்படவில்லை. 

 இதை இன்னும் செந்தில் குமார் நீக்கினால், அவர் இன்னும் தனிதுவமிக்கவராவர். 

No comments:

Post a Comment