Friday, December 24, 2010

கடக்க முடியாத இரவு - காலபைரவன்

'புலிப்பாணி ஜோதிடர்', தொகுப்புக்கு பிறகு நான் வாசித்த காலபைரவனின் அடுத்த சிறுகதை தொகுப்பு 'கடக்க முடியாத இரவு' .  பொதுவாக, 'மாய யதார்த்தம்', போன்ற இசங்களை தமிழில் கொண்டுவரும் போது அவை ஒரே கோட்பாடு ரீதியாக, சில விதிமுறைகளை பின்பற்றுவது போல் தான் உள்ளன. மேலை நாடுகளின் இந்த வகை நாவல்களில் உள்ள இயல்புத்தன்மை இல்லாமல், இந்த இசங்கள் துருத்திக்கொண்டு இருக்கும். ('ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' - தமிழவன்). மார்குவஸ், உம்பேர்டோ இகோ போன்றவர்கள் முதலில் அவர்கள் விரும்பும் முறையில் கதைய எழுதுகிறார்கள், பின்னர் தான் அந்த எழுத்துக்கள் ஒரு குறிப்பிட்ட வகைமையில் அடைக்கப்படுகின்றன. நம்முடைய பண்டைய இலக்கியங்களிலேயே இந்த  'மாய யதார்த்தம்', ,நான்-லீனியர் கதை சொல்லல் முறைகள் இருக்கும் போது, ஒரு சட்டகத்திற்குள் இருப்பது போன்று எழுத வேண்டுமா என்று எண்ணுவதுண்டு. 

காலபைரவன், இதில் மாறுபடுகிறார்.  அவருடைய கதைகளிலும், மாய யதார்த்தம், மெய்மையும் கற்பனையும் கலக்கும் இடங்கள் இருந்தாலும் அவை இயல்பாக கையாளப்படுகின்றன. 
 'ஒரு நாளும் திரும்ப போவதில்லை'  சிறுகதை சிறந்த பகடியாக வந்துள்ளது. 'assembly line product' போல் புத்தகங்கள் பதிப்பகங்களால் வெளியிடுப்படுவதை கூர்மையாக பகடி செய்யப்பட்டுள்ளது . இணையம் பரவியுள்ள இந்த கால கட்டத்தில் புத்தகங்களுக்கான மெனக்கெடல் கூட அதிகம் தேவையில்லாமல், எழுது பொருள் பற்றிய அனுபவமோ, வாசிப்போ இல்லாமலேயே இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து புத்தகத்தை உருவாக்க முடிவதை காலபைரவன் கதையாக வடிவமைத்துள்ளார். (கதையல்ல நிஜம் என்றும் சொல்லலாம்) 
'சால மிகுத்து பெயின்', வேட்டை, இரு வழி பாதை, பட்டித்தெரு, கடக்க முடியாத இரவு ஆகியவற்றில் காமத்தை, உடல் வேட்கையை நன்றாக அவதானித்துள்ளார். கு.ப. ரா, முதல் தி.ஜா, ராஜேந்திர 
சோழன் என நவீன தமிழ் இலக்கியத்தில் காமத்தை, பாலியல் வேட்கையை பலர் கையாண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் காலபைரவனும் வருகிறார்.  நடைமுறை வாழ்க்கையில் மனிதர்களுக்கு ஏற்படும் பாலியல் விழைவுகளை, அதனால் ஏற்படும் மீறல்களை  மொழி சார்ந்த  எந்த பூச்சும் இல்லாமல் இயல்பாக கூறுவதில் இவர் ராஜேந்திர சோழன், சு.வேணுகோபாலன்  வழி என்று சொல்லலாம். இந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், நாம் பார்ப்பவர்கள், ஏன் நாமே என்று கூட சொல்லலாம். ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்கள் சமூகம் சார்ந்த கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள், இது வலிந்த திணிக்கப்படாமல் நடப்பது போல் அமைந்துள்ளது. ( பட்டித்தெரு கதையில் திருமணமான இருவர், பட்டியில் இரவில் சந்திக்க நேர்கிறது, அவர்கள் அதுவரை நெருங்கி பழகியவர்கள் இல்லை, ஆனால் அந்த சந்திப்பு அவர்களின் பாலியல் வேட்கையை வெளிகொணர்ந்து விடுகிறது) 

 'சால மிகுத்து பெயின்', 'கடக்க முடியாத இரவு'  கதைகளில் , பெண் கதா பாத்திரத்தின் சஞ்சலத்தை, மீற வேண்டும் என்ற விழைவை, ஆனால் மீற முடியாத நிலைமை வெளிப்பட்டுள்ளது. இது ஒரு பக்க மனநிலை என்றால்  இதற்கு மாறாக வேட்டை, பட்டித்தெரு கதைகளில் வரும் கதா பாத்திரங்களுக்கு இவ்வாறான உளச்சிக்கல் இல்லை. பாலியல் மீறல் நடந்தபின் வரும் குற்ற உணர்வும், மாட்டிக்கொள்ளகூடாது என்ற உணர்வே இவற்றில் உள்ளன.  ஒன்றில் கணவனுக்கு விஷயம் தெரிந்த பின் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள், மற்றொன்றில்(பட்டித்தெரு) பெண்ணின் கணவன் தற்கொலை செய்து கொள்கிறான், தன மனைவி பற்றி அறிந்தவுடன் . ஒரே சம்பவத்தின் இரு வேறு எதிர்வினையாக இதை பார்கிறேன். ஒரு செயலின் சாதக, பாதகம், அதனால் வரக்கூடிய அவமானம் என்பது அதை தனி மனிதர்களின் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தான் இருக்கின்றது என்று உணர முடிகிறது. அதிலும் இம்மாதிரியான பாலியல் மீறல்களில், பெண்ணிற்கோ அவளின் கணவனிற்கோ தான் அவமானம் நேர்கிறது , அவர்கள் தான் அதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்,  ஆனால் இதில் சம பங்கு பொறுப்பு உள்ள ஆணுக்கோ அவனுடைய மனைவிக்கோ அந்தளவுக்கு பதிப்பு இல்லை என்று தான் இன்றை சமூகமும் உள்ளது. (ஆம்பளைனா அப்படி தான் இருப்பான் பொம்பள தான் பொருத்துப்போகனும் என்று இன்றும் சொல்லபடுகிறது). 

இரு வழி பாதை கதையில் வரும் , பெண் கதா பாத்திரம் தான் இவர்கள் அனைவரிலும், எந்த சிக்கலும் இல்லாதவளாக இருக்கிறாள். அன்றுதான் சந்தித்த ஒருவனுடன் உறவு கொள்கிறாள், அவன் அவளை தன்னுடம் வர சொல்லும் போது 'கணவன் குதியை விட்டு எப்படி வர முடியும்' என்று சொல்கிறாள். அவளுடைய எண்ணங்கள் திட்டவட்டமாக உள்ளன.  கதையின் முடிவும் மனிதர்களின் மனம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதையே காட்டுகின்றது. என்றாலும் அவள் ஏன் அப்படி செய்தாள், அவள் கணவன் குழந்தைகள் என்னவானார்கள் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 'ஆற்றை கடத்தலில்' ஒரு மிகு புனைப்பு கதை. அந்த கற்பனை உலகுக்கு செல்லும் பகுதிகள் வாசிப்பவனுக்கு ஒரு அதிர்ச்சியை குடுக்கின்றன, சாதாரணமாக விளையாட்டை பற்றிய வர்ணனை நடக்கும் போது,  கதை அந்த கற்பனை உலகிற்கு தாவும் சிறப்பாக வந்துள்ளது. அதற்குப் பிறகு வரும், இன்றைய கல்வி முறை பற்றிய விமர்சனங்கள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை (இதே போல் பலதும் வந்து விட்டதால் இருக்கும்). ஆனால் கதை சொல்லும் உத்தி சிறப்பாக உள்ளது.

'சாரி போகும் கன்னிமார்' கதை, நம் கிராமத்து தொன்மம் ஒன்றை எடுத்து அதன் மேல் கதை நகர்கிறது. ஒரு நம்பிக்கை மனிதனை எப்படி மிரள வைக்கும், நனவையும் கற்பனையையும் எப்படி குழப்பும்  என்று இந்த கதையை வாசிக்கலாம், அல்லது வேண்டுமென்றால் அதை உண்மையாக நடந்ததாக கூட வாசிக்க முடியும். (பேய் என்றால் நம்பிக்கை இல்லை, இருந்தாலும் பேயை நினைத்தால் பயமாக உள்ளது என்ற கூற்றை நினைவு கூறலாம்). கன்னிமார் தொன்மம் அவரின் கதைகளில் அவ்வப்போது வருகின்றன.


'மயானக்கொள்ளை', என்னளவில் தொகுப்பில் பலவீனமான கதை. இருவரில் ஒருவர் இறந்து விடுவார் என்று வாசகனுக்கு முதலிலேயே தெரிந்து விடுவதால் , யார் இறப்பார்கள் என்று மட்டும் தான் தெரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் கதையில் உள்ளது.



புலிப்பாணி ஜோதிடர்' தொகுப்பிலிருந்து மாறுப்பட்ட கதைகள் உள்ளன, இது காலபைரவனின் கதை களங்கள் விரிவாக உள்ளன என்பதை காட்டுகிறது.  மொத்தத்தில் காமம், பாலியல் வேட்கை,  மிகு புனைவு, தொனம், சமகால அரசியல் என்று பல களங்கள் கொண்ட ஒரு நிறைவான சிறுகதை தொகுப்பு

No comments:

Post a Comment