Thursday, December 30, 2010

செல்லம்மாள் - புதுமைப்பித்தன்


2004 ஆண்டு தசரா விடுமுறையின் போது பு.பி.யின் முழு சிறுகதை தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்தேன். விடுமுறையின் முதல் நாள். காலவரிசைப்படி தொகுக்கப்பட்ட படைப்புக்கள். அவற்றில் தொடர்ச்சியாக இருந்த இரண்டு கதைகளை வாசித்த பிறகு, மேலும் வசிக்க முடியவில்லை. வீட்டில் விட்டு வெளியே சென்று ஒரு அரை மணி நேரம் இலக்கிலாமல் அலைந்தேன், பண்டிகை மனநிலையில் இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தேன். ஒன்றும் செரியாக பதியவில்லை மனதில். வீட்டிருக்கு  வந்தும், தொடர்ந்து படிக்க முடியாத மனநிலை, மனம் ஒரு கொதி நிலையில் இருந்தது. அந்த விடுமுறை முழுவதும் வாசிக்கவே முடியவில்லை. பிறகு அந்த தொகுப்பை முடித்தேன். அந்த இரண்டு சிறுகதைகள், 'காஞ்சனை' மற்றும் 'செல்லம்மாள்'. செல்லம்மாள் பற்றி விமர்சனக்குறிப்பு எதுவும் நான் அதுவரை படித்ததில்லை, (காஞ்சனை பற்றி படித்திருந்தேன்). The story was a sucker punch to my gut and it still is. இந்த ஆறு ஆண்டுகளில் காஞ்சனை மற்றும் பிற சிறு கதைகளை மறு வாசிப்பு செய்திருக்கிறேன். செல்லம்மாள் சிறுகதையை மட்டும் மறுபடியும் வாசிக்க வேண்டும் என்று என்னும் போதெல்லாம் ஒரு விதமான சிலிர்ப்பு ஏற்படும், வாசிக்க மாட்டேன். இந்த வாரம் திடீரென்று மீண்டும் வாசித்து விட்டேன். காலம், முதலில் ஏற்பட்ட உணர்வுகளை முற்றிலும் மாற்றவில்லை. 

செல்லம்மாளின் மரணத்தில் இருந்து கதை ஆரம்பிக்கின்றது. அவளது கணவன் பிரம்மநாயகம் பிள்ளை. இருவரும் சென்னையில் இருந்து ஐநூறு மைல் தொலைவில் இருக்கும் தங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு வந்து வாழ்பவர்கள். (அல்லது வாழ முயற்சித்துக்கொண்டிருப்பவர்கள்). பிள்ளை ஜவுளிக்கடையில் வேலை செய்கிறார். அவர் முதலாளி "ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு ஊதியம் தருகிறார்". அதை வைத்துக்கொண்டுதான் (கஷ்ட) ஜீவனம் செய்ய வேண்டும். செல்லம்மாளுக்கும் உடல் நிலை சரியில்லை. பிள்ளை தான் சில சமயம் சமையல் செய்வதும் கூட, பு.பி.யின் வார்த்தைகளில் 
 சில சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட் பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர்  வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.

செல்லம்மாளுக்கு, தங்கள் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது,  பிள்ளைக்கும், ஆனால் முடிவெடுக்க அவரால் முடியவில்லை, சில பயங்கள் அவருக்கு. செல்லம்மாள் ஒரு நாள், பொங்கலுக்கு ஊருக்கு போக வேண்டும் என்று கூறுகிறாள், கூடவே தீபாவளி பற்றி கூறும் போது தனக்கு என்ன என்று கேட்கிறாள். பிள்ளை, முதாளியிடம் சொல்லி, சில புடைவைகளை எடுத்து வருவதாக கூறுகிறார். அன்று இரவு சில மாதிரி புடைவைகளுடம் வீட்டிற்கு வரும்போது, செல்லம்மாள் மிகவும் முடியாமல் படுத்து இருக்கிறாள். பிள்ளை அவளுக்கு சிச்ருஷை செய்கிறார். படுக்க போகும் போது பொழுது விடிந்து விடுகிறது. ஒரு 'பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு'  வருகிறார். அவர் களிம்பு கொடுத்து செல்கிறார்.

 செல்லம்மாள் உடல் நிலை மோசமாகின்றது. ஜனனி கண்டாற்போல் ஏதேதோ அரற்ற ஆரம்பிக்கின்றாள். சிறிது நேரம் நினைவு வருகின்றது, பிறகு மீண்டும் தப்பி விடுகிறது. இன்னொரு வைத்தியனை  கூட்டி வருகிறார் பிள்ளை. அவரும் அவர் பங்குக்கு சில மருந்துகள் குடுத்து, நிலை மோசமாக உள்ளதாக கூறி, ஆஸ்பத்திரிதான் இதற்கு சரி என்று கூறி செல்கிறார். பிறகு செலம்மாள் பால் கேட்க, அது இல்லாமல் பிள்ளை பானகம் தருகிறார். அதை குடிக்கிறோம் போதே செல்லம்மாள் உயிர் பிரிகிறது. உடலுக்கு பிள்ளை பணிவிடைகள் செய்கிறார். முனிசாமி என்ற இன்னொரு கடை ஊழியன் வருகிறான், அவனிடன் தந்தி கொடுக்க சொல்கிறார். கதை முடிகிறது.

பிள்ளை ஒரு  மோன நிலையை அடைந்தவர் போல் வாழ்கிறார். அது ஆழ்ந்து, யோசித்து வந்ததல்ல, வாழ்கையில் அடிபட்டு, அடிபட்டு, அதனால் ஏற்பட்ட ஒரு சம நிலை தான். பு.பி வார்த்தைகளில்
செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.  அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு 
இந்த மனநிலை வர அவர் எந்த அளவுக்கு துன்பத்தை சந்தித்திருக்ககூடும். மனைவி மீது அபாரமான அன்பை செலுத்துகிறார். ஆனால் வார்த்தைகளால் சொல்வது இல்லை (செல்லம்மாளும் தான்)

இன்று தகவல் தொடர்பு மிகவும் எளிமையாகிவிட்டது, கிட்டத்தட்ட பெரும்பாலோனருக்கு கிடைக்ககூடியதாகவும் இருக்கின்றது. ஆனால் எழுபது வருடம் முன்பு சொந்த ஊரிலிருந்து ஐநூறு மைல் தள்ளி கணவன் மனைவி இருவர் மட்டும் வந்து ஒரு நகரத்தில் வாழும் போது அதன் தாக்கம் எப்படி இருந்திருக்கும். யாரும் தெரியாத இடத்தில, இவ்வளவு பிரச்சனைகளுடன் எப்படி இருந்திருப்பார்கள். ஊர் பற்றி பேசுவதுதான் அவர்கள் இருவருக்கும் சிறிது மகிழ்ச்சியை குடுக்ககூடியாதாக இருந்திருக்கின்றது. பிள்ளையாவது பரவாயில்லை, வேலைக்கு செல்லும் போது பேச பழக வாயுப்பு கிடைக்கும். செல்லம்மாள் என்ன செய்திருப்பாள், யாருடன் பேசி பழகி இருப்பாள். அவளுடைய தினப்பொழுது எப்படி கழிந்திருக்கும். எப்போதாவது அவர்கள் ஊருக்கு போயிருப்பார்கள என்று நமக்கு தோன்றுகின்றது. செல்லம்மாள் ஊருக்கு போக வேண்டும் என்றும், அம்மாவிடம் பேசுவது போல் ஜனனியில் அரற்றும் போதும் (அவரது தை காலமாகி விட்டார்) அவரின் ஆசைகள் வெளிவருகின்றன. இதே புலம் பெயர் அவஸ்தையை இன்றும் பலர் அனுபவித்தாலும் எழுபது ஆண்டுகள் முன்பு இன்னும் கொடுமையாக இருந்திருக்கும். இன்றைய நிலையில் இல்லாமல் அந்த நாளின் நிலையை வைத்து இதை பார்க்கவேண்டும். 

இந்த கதையின் உணர்ச்சிக்குவியலை, அதன் தாக்கத்தை என்னால் சொல்லவே முடியாது, நான் மேலே எழுதியுள்ளது குப்பை தான், என்னால் முடியாது. எழுதும் போதே ஏதோ செய்கின்றது. இந்த கதையின் கடைசி பகுதியை பு.பியின் வார்த்தைகளின் மூலம் முடிக்க வேண்டியது தான்.

ஒரு விநாடி கழித்து, "பசிக்குது; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன்" என்றாள் செல்லம்மாள். "இதோ எடுத்து வாரேன்" என்று உள்ளே ஓடிச் சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத் திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு ஆற்றினார்.  "செல்லம்மா!" என்று மெதுவாகக் கூப்பிட்டார். 
பதில் இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது. 
"செல்லம்மா, பால் தெரைஞ்சு போச்சு; பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு" என்றார். 
"ஆகட்டும்" என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள். 
சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை அசைத்துவிட்டாள். 
"ஏன், வெளக்கை..." - விக்கலுடன் உடல் குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின. 
அதிர்ச்சி ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது. 
பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார். 
உடல்தான் இருந்தது. 
வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன. 
சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில் மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். "இனிமேல் ஆவது ஒன்றுமில்லை" என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார். 
அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது. 
அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார். 
அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப்புக் கேட்டது. 
உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும் பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார். 
உடலை எடுத்து வந்தார். "செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!" என்று எண்ணமிட்டார். 
தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது. 
கீழே உட்காரவைத்து, நின்று தமது முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர் முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால் அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து உடலைத் துவட்டினார். 
மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார். அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது. நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில் குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு வாங்கின சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார். நிறை நாழி வைத்தார். செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார். 
கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது. வெளிவாசலுக்கு வந்து தெருவில் இறங்கி நின்றார்.  ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது. 
வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக் கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு 
ஊசிக் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது. 


பின் குறிப்பு 1: இந்த கதையை, மிக சிறந்து காதல் கதையாக, தங்கள் கொண்டுள்ளது காதல் என்ற உணர்வே அற்ற இரு உள்ளங்களில் கதையாக விமர்சகர்களால் கருதப்படுகின்றது. இது எனக்கும் உவப்பாக தான் உள்ளது. ஆனால் இந்த முறை மறு வசிப்ப செய்த பின்பு எனக்க எழுந்த எண்ணம், இதே கதையை மனைவி கணவனுக்கு இதே மாதிரி பார்த்துக்கொண்டிருந்த மாதிரி எழுதிருந்தால், நாம் எப்படி அதை எடுத்துக்கொள்வோம். சமூக பொது இயல்பின் படி, மனைவி கணவனை பார்த்துக்கொள்வது என்பது கடமையாக கருதப்படுவதால், அந்த கதை இதே அளவுக்கு நம்மை பாதிக்குமா, இல்லை பெண்ணின் சுமைகளை பேசுகின்ற இன்னொரு படைப்பு என்று சென்றுவிடுவோமா? ஒரு ஆண் தன் மனைவிக்கு செய்வதை, மிகப்பெரிய விஷயமாக கருதுவதால் (நம் ஆழ்மனதில்) தான் செல்லம்மாள் இந்த அளவுக்கு பாதித்ததா? தெரியவில்லை. என்னளவில் சிறுகதையின் உச்சங்களில் ஒன்று இது. பு.பி.யை காபி அடித்து கூறுவதானால் 'காதல் காதல் என்று கதைக்கின்றீர்களே, இதனையா காதல்'.

பின் குறிப்பு 2: இந்த கதை செல்லம்மாளின் மரணத்தில் ஆரம்பித்து, அவர்களின் வாழ்கையை சற்று பின்னோக்கி பார்த்து, செல்லம்மாளின் இறுதி சில நாட்களை பின்னோக்கி விவரிக்கிறது. சென்ற/இந்த  வாரம் பத்திரிக்கைகளில், 'மன்மதன் அம்பு' படத்தில் கமல் அவரது கடந்த கால வாழ்கையை, தன் மனைவியின் மரணத்தில் இருந்து ஆரம்பித்து காட்டியருப்பதாக, அது புதுமையாக சிலாகிக்கப்பட்டது. செல்லம்மாள் பிரசுரமானது 1943.
 வேறொன்றும் சொல்வதிற்கில்லை. 

No comments:

Post a Comment